ஃபேஸ்புக்கில் நவீன கவிதை

யாருடனோ இருப்பதற்காக
யாருடனும் இல்லாமலிருக்கவில்லை
யாருடனும் இருக்காதிருக்கத்தான்
யாருடனும் இல்லாமலிருக்கிறேன்
என்னுடனும்
என்ற கவிதையை எழுதிக்கொண்டே
ஃபேஸ்புக்கில் போட்டபோது
வந்த பின்னூட்டங்கள்
கௌரி: நானும்தாங்க யாருடனும் இல்லை
softiesoftie: <3 <3 <3
சுதா மணிமாறன்: நலமாக இருக்கிறீர்களா? சிங்கப்பூரில்தானே
பரமானந்தம்: நகுலன் ஏற்கெனவே எழுதியிருக்கிறார். அதோட தலைப்பு கூட இப்படித்தான் வரும்.
Nilachoru: காலையில் எழுந்தவுடன் உணர்ச்சிவசப்பட வைத்துவிட்ட கவிதை.
கலாரசிகன்: என்னுடனும் என்பது உங்களுக்குக் கவிதை தெரிந்தாலும் தமிழ் தெரியாததைக் காட்டுகிறது. என்னோடும் என்றுதான் எழுத வேண்டும்.
triendietrendie: அருமை!!!!!
மருகாதவன்: புரிஞ்ச மாரி இருக்கு, புரியாத மாரியும் இருக்கு. நோட்ஸ் ப்ளீஸ்
Rashir: யாருக்கும் தான் யார் இருக்காங்க? உலகம்னா அப்படித்தான் இருக்கும்.
கவிஞர் No. 1: உங்களோடதான் கவியுலகமே இருக்கே. செத்துப்போன கவிஞர்கள்லாம் இருக்காங்க. நீங்கதான் தமிழின் சிறந்த கவிஞர்னு நாளைக்கு சேலம், அடுத்த நாள் ஆத்தூர் கூட்டத்தில பேசப்போறேன்.
நேரக் காதலன்: அடுத்த தொகுப்பு எப்போது?
Thigil Thigil: வாழ்த்துகள்!
சுடலைமுத்து: வாழ்த்துகள் மேம்!
வளரும் கவிஞர் No. 2: உள்குத்து மாதிரி இருக்கு. அவரையானு தெரியல. இன்பாக்ஸைப் பாருங்க.
Jaggukani: Best wishes!
Manisha Organics: ஆர்கானிக் முட்டை, மாம்பழம், பருப்பு வகைகள் வாங்க: 8373373973, 9338362636, 3 ஆதிகேசவா தெரு, West Saidapet.
♦♦

நள்ளிரவில் ஃப்ரெஞ்சு ஃப்ரை கொறிப்பவள்

கவிஞர்களுக்கும் பூனைகளுக்கும்
நள்ளிரவில் பசிக்கலாம்
பெண்களுக்கு
நள்ளிரவில் பசிக்கக்கூடாது
ஆனால் சிங்கப்பூரில் இரவு கிடையாது
12.46
மொபில் செயலியில்
ஃப்ரெஞ்சு ஃப்ரை ஆர்டர் செய்கிறாள்
எப்போது வரும்?
நேரத்தைப் பார்க்கிறாள்
வரைபடத்தைப் பார்க்கிறாள்
பெயரைப் பார்க்கிறாள்
ஏன் பெண்கள் டெலிவரி வேலைக்கு வருவதில்லை?
ஆனால் சிங்கப்பூரில் பயம் கிடையாது
பைக் கிளம்பிவிட்டது.
1.01
வாசற்கதவுக்கு நேராக
மேஜையிலிருந்த
ஒயின் பாட்டில்களை
வேகமாக அகற்றுகிறாள்
நள்ளிரவில் ஆர்டர் செய்திருக்கக் கூடாது
பெல் அடிக்கிறது
1.34
நள்ளிரவில் ஆர்டர் செய்திருக்கக் கூடாது
பாதிக் கதவைத் திறக்கிறாள்
வாங்கிக்கொள்கிறாள்
“ப்ரோ, சாப்பாடு வந்துவிட்டது”
வீட்டுக்குள் வேறொரு திசையைப்
பார்த்துச் சொல்கிறாள்
சில்லறையை
அவசரமாக வாங்கிக்கொள்கிறாள்
நள்ளிரவில் ஆர்டர் செய்திருக்கக் கூடாது
கதவை அடைக்கிறாள்
இல்லாத சகோதரனுக்கு
ஸ்தோத்திரம் சொல்லிவிட்டுத்
தின்னும்போது
ஃப்ரெஞ்சு ஃப்ரை
அவள் ஆன்மாவையும்
சேர்த்து ரட்சிக்கிறது
♦♦

பதினோராவது தாட்சண்யம்

சிங்கப்பூரில்
அவளது கிரெடிட் கார்ட் வேலை செய்யவில்லை
புதிய வங்கி அட்டை கிடைக்கவில்லை
சம்பளம் போடவில்லை
ஹேண்ட்பேக்கில்
கடைசியாக இருந்த ஐந்து டாலருக்கு
வாங்க முடிந்தது
ஒரு பால் கேன் இரண்டு ஆரஞ்சு
“ஆஃபரைப் பார்க்கவில்லையா?”
பில் போடும் சீனாக்காரி
அக்கறையாகக் கேட்டாள்
“இரண்டு ஆரஞ்சுக்கு ஒரு ஆரஞ்சு இலவசம்”
ஓடிப் போய் எடுத்தாள்
அது அவளை ஏந்திக்கொண்டது
இனிய வேறொரு உலகமாக
அதன் பத்து சுளைகளும்
பத்து தாட்சண்யங்கள்
அவளையும் ஆரஞ்சையும் பார்த்துப்
பல்தெரிய சிரித்தாள் சீனாக்காரி
பதினோராவது தாட்சண்யம்
இந்நாளுக்கு ரொம்ப அதிகம்

sperundevi@gmail.com