தனிமையின் யானைக்குட்டிகள்

நான் யானைக்குட்டிகளோடு வாழ்கிறேன்
என் யானைக்குட்டிகள் ஒருபோதும் வளருவதில்லை
சின்னஞ்சிறு கண்களைச் சிமிட்டியபடி அவை
எங்கேயும் எனைக் கண்காணித்துக்கொண்டேயிருக்கின்றன
துன்ப நேரங்களில் அவற்றின் வீங்கிய வயிற்றில் குறுகிக்கொள்வது அத்தனை இதமாக இருக்கும்
நேரங்கழித்து வீடு வரும்போது
என் யானைக்குட்டிகள் எனக்கான
தேநீரைத் தயாராக வைத்திருக்கும்
வலி தலையிலோ வயிற்றிலோ
என் யானைக்குட்டிகளின் விரல்கள்
அத்தனை ஆதூரமானது
மழை பெய்யும் போதெல்லாம்
நான் யானைக்குட்டிகளோடு விளையாடுவேன்
எங்களுக்குப் பசிக்கும் போதெல்லாம் நாங்கள்
மேகங்களை உண்டு களிப்போம்
உறக்கமும் காமமுமாக எங்கள் இரவுகள்
தனிமையில் நீண்டிருக்கும்
நீங்கள் நம்ப வேண்டாம்
நான் யானைக்குட்டிகளோடுத்தான் வாழ்கிறேன்
உங்கள் கண்களுக்குப் புலப்படாத வரை
என் யானைக்குட்டிகள் சுதந்திரமானவை
◊◊

காமத்தின் சிற்றெறும்புகள்

ஊஞ்சலில் ஊறும் சிறு எறும்பின்
கால் தடங்களாய் நொடியில் நொறுங்கிச் சரிகிறது மனம்
கைப்பேசியில் நேசங்களின் ஆதூரக்குரல்களைத்
தேடித்தேடிச்சலித்த கண்கள் கலங்கியிருப்பதை
புழுதி தெறிக்கும் இந்த மாநகரப் பூங்காவில்
யாரும் கண்டிட முடியாது
கடைசியாக வந்த உன் மிஸ்ட் காலைத் தேடுகிறேன்
நான் பிரிந்து வந்த கால் தடங்கள் இல்லை
எனக்காகப் பூத்த டியூலிப் மலரை
உன் டிஸ்ப்ளேயிலிருந்து எப்போதோ அகற்றியிருப்பாய்
பிரத்யேகமாக என் குரலில் உனை அழைக்கும்
ரிங் டோன்கள் கூட மாறியிருக்கலாம்
ஓயாமல் நாம் எடுத்துக்கொண்ட செல்ஃபிக்களும்
இந்நேரம் சிதைந்து போயிருக்கும்
நான் ஊஞ்சலில் ஊறும் சிற்றெறும்புகளைத் தான் காண்கிறேன்
நம் தனிமைகளின் மீதூர்ந்த காமத்தைப் போல
எளிதாக நசுக்கி வீசிவிட முடியவில்லை.

vaishnavim90@gmail.com