சினிமா உலகில், பிரம்மாண்டத்தால் ஜொலிக்கும் திரைப்படங்களுக்கு மத்தியில் கதைகளில் இருக்கும் யதார்த்தங்களின் மூலம் அவர்களின் உலகிற்கு நம்மை அழைத்துச்செல்கின்ற, மனித உறவுகளின் சாராம்சத்தை பார்வையாளரின் இதயத்தில் முத்திரை பதிக்கும் விதத்தில் அதன் பிரம்மாண்டத்தை கதைகளின் ஆழத்தில் சத்தமில்லாமல் பதிவு செய்கின்ற திரைப்படங்களும் இன்னொரு பக்கம் ஜொலித்துக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சுவிட்சர்லாந்தில் இருந்து தனது கறுப்புப் பணத்தை மாற்றுத் திறனாளிகள் உதவியுடன் கடத்த முயற்சிக்கும் ஒருவனின் கதையைச் சொல்கிறது ”தி கோல்ட்பிஷ்” திரைப்படம்.

ஆலிவர் ஓவர்ராத் (டாம் ஷில்லிங்) ஆடம்பரமான வாழ்க்கையும், வேலை வேலை என்று முழு நேரமும் அதையே தன் வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டு உறவுகள் மீது பெரிதும் பிடித்தம் இல்லாத ஒரு வெற்றிகரமான வங்கியாளர் மற்றும் மார்க்கெட்டிங் மேலாளர். பணத்தின் மீது கொண்ட தீராத மோகத்தால் சுவிஸ் வங்கி கணக்கில் பல லட்சம் யூரோக்களை பதுக்கி வைக்கத்துவங்குகிறான். ஒரு நாள், தனது வருமான வரிக்கான காலக்கெடு முடியும் கடைசி நாளில் பூர்த்தி செய்வதற்கான அவசரத்தில் வேகமாகச் செல்லும்போது எதிர்பாராத விதமாக மிக மோசமான கார் விபத்து நிகழ்கிறது. இதன் விளைவாக, அவன் இடுப்பிற்கு கீழான உடல் பாகங்கள் முடங்கிப்போகிறது. மேலும், இது போன்ற நோயாளிகளுக்கு மறுவாழ்வு தரும் மருத்துவமனையில் தனது நாட்களை கழிக்க வேண்டிய சூழலில் சிக்கிக்கொள்கிறான்.

விபத்தின் மூலம் ஏற்பட்ட இந்த நோய் உடலில் மட்டுமின்றி மனதளவிலும் அவனை நடுங்க வைக்கிறது. ஏனெனில் தற்போதைய உடல்நிலையின் கடுமையான யதார்த்தத்தையும், அது அவரது வாழ்க்கையில் திணிக்கக்கூடிய சாத்தியமான வரம்புகளையும் எதிர்கொள்ளத்துவங்குகிறான். பிரிந்து போன காதலியை அத்தனை எளிதில் ஏற்க மறுக்கும் நம் மனதைப்போல, விரக்தியிலும் மறுப்பிலும் அவன் மனது தனது உடல்நிலையை ஏற்க மறுக்கிறது. இருந்தாலும் ஒரு போர்ட்ஃபோலியோ மேலாளராக சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே கணினியில்  தனது வேலையைத் தொடர்கிறான். ஆனாலும், அவன் இருக்கும் அறையில் இணையத்திற்கான நெட்வொர்க் சரியாக கிடைக்காததால் பக்கத்து அறைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

அங்கே, இவனைப்போல பல மாற்றுத் திறனாளிகளை கவனித்துக்கொண்டிருக்கும் லாராவை (ஜெல்லா ஹாஸ்) சந்திக்கிறான். அவள் மூலம் கண்பார்வையற்ற மக்தா, ஆட்டிச மன நிலையிலுள்ள ரெயின்மேன், மிச்சி மற்றும் டவுன் குறைபாடுள்ள ஃப்ரான்ஸியை சந்திக்கிறான். அவர்கள் தங்களை “தங்க மீன்கள்” என்று அழைத்துக் கொள்கிறார்கள்.

திடீரென்று ஒரு நாள், சுவிஸ் அதிகாரிகளால் பணத்தை இழந்த தன் நண்பர் ஒருவர் மூலம் சுவிஸ் வங்கியில் வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதை அறிந்துகொள்ளும் ஆலிவர், அதிகாரிகள் பறிமுதல் செய்வதற்கு முன்பே சுவிட்ஸ்லாந்து சென்று தனது கருப்புப் பணத்தை மீட்க முடிவு செய்கிறார். பார்வையற்ற மக்தா ஷாப்பிங் மாலில் பியரை திருடிக்கொண்டு வெளியே போகும் போது அலாரம் அடிக்க யாரும் சந்தேகிக்காமல் விட்டுவிட்டதை ஏற்கனவே ஒரு முறை கவனித்திருந்த ஆலிவர், அந்த ஐடியாவை வைத்தே ஊனமுற்றவர்களுக்கான வாகனத்தில் பணத்தை கொண்டு வந்தால் யாரும் சந்தேகிக்க மாட்டார்கள் என்ற திட்டத்தில், தன்னையும் குழுவில் உள்ள மற்ற நோயாளிகளையும் சுவிட்சர்லாந்திற்கு ஒரு பயணத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புவதாக லாராவிடம் கூறி அவளை சம்மதிக்க வைக்கிறான். ஊனமுற்றோருக்கான ஒட்டக சிகிச்சையில் ஆர்வமாக இருப்பது போல் நடித்து முழு பயணத்திற்கும் பணம் செலுத்த “தாராளமாக” முன்வருகிறான். சரோஜா படத்தில் நண்பர்கள் செல்வது போன்ற ஒரு வேனில் துவங்குகிறது அவர்கள் பயணமும் கதையின் அடுத்த கட்டமும்.

ஆலிவருக்கும், இந்த சாத்தியமில்லாத ”தங்கமீன்கள்” குழுவிற்கும் இடையில் உருவாகும் பிணைப்புதான் படத்தின் இதயம். தன்னைப் பற்றியும் தன் பணத்தைப் பற்றியும் மட்டுமே கவலைப்படும் திமிர் பிடித்த சுயநலவாதியான வங்கி அதிகாரியிலிருந்து இருந்து பச்சாத்தாபம் மற்றும் இரக்கம் கொண்ட, வாழ்க்கையின் எளிய மகிழ்ச்சிகளின் மதிப்பைக் கற்றுக் கொள்ளும் ஒருவராக மாறுகிறான். ஊனமுற்றவர்களை பெரிதும் மதிக்காத அல்லது புரிந்துகொள்ளாதவன், அவர்களுடன் அதிக நேரம் செலவிடத் துவங்கும்போது படிப்படியாக தனது அணுகுமுறையையும் கண்ணோட்டத்தையும் மாற்றுகிறான். அவனுக்குள் நிகழும் ஒவ்வொரு மாற்றமும் படம் பார்க்கும் பார்வையாளருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்வது தான் இந்தப்படத்தின் மிகப்பெரிய வெற்றி.

ஆலிவர் ”தங்கமீன்கள்” குழுவுடன் தனது சாலை பயணத்தைத் தொடங்கும் போது, ஆரம்பத்தில் அவர்களை தனது திட்டத்தை செயல்படுத்துவதற்கான கருவிகளாக மட்டுமே பார்த்தவன், பயணம் விரிவடையும்போது அவர்களின் உண்மையான அரவணைப்பு, அவர்களுடனான நகைப்புத் தருணங்கள் வழியே நாற்காலிக்குள் முடங்கிய தன்னை மீட்டுக்கொள்வதற்கான வழியை கண்டுபிடிக்கிறான். இத்தனை நாட்கள் மடிக்கணினியும் மானிட்டரும் என கிடந்தவன், இந்த பயணத்தின் வழியே உலகின் அழகை ரசிக்கவும், மற்றவர்களுடன் ஆழமான மட்டத்தில் இணையவும், தனது கடந்தகால தவறுகளை எதிர்கொள்ளவும் கற்றுக்கொள்கிறான்.

இத்திரைப்படத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று இயலாமையை சித்தரிப்பது. பெரும்பாலும் ஊனமுற்ற கதாபாத்திரங்களுடன் தொடர்புடைய க்ளிஷேக்கள் மற்றும் ஸ்டீரியோடைப்புகளை நாடுவதற்குப் பதிலாக, இந்த படம் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்களின் நுணுக்கமான மற்றும் நம்பகமான பிரதிநிதித்துவத்தை முன்வைக்கிறது. அவர்களுக்கான வடிவமைக்கப்படாத உலகில் திடீரெனத் தங்களைக் காணும் தனிநபர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் ஆலிவர் எனும் கதாப்பாத்திரம் மூலம் இத்திரைப்படம் விளக்குகிறது.

படத்தில் நகைச்சுவை சேர்க்கப்பட்டிருப்பது பொழுதுபோக்கிற்கு மட்டுமின்றி துன்பங்களுக்கு மத்தியிலும் மகிழ்ச்சியையும் சிரிப்பையும் கண்டுபிடிக்கும் கதாப்பாத்திரங்களின் திறனைக் காட்டுவதுடன் கதாப்பாத்திரங்கள் மீதான நம்பகத்தன்மையையும் சேர்க்கிறது. வரி ஏய்ப்பு, இயலாமை மற்றும் சமூக உள்ளடக்கம் போன்ற தீவிரமான தலைப்புகளை நகைச்சுவை மற்றும் உணர்திறனுடன் கையாளும் ஒரு நகைச்சுவை படமாக ஏனைய நகைச்சுவைப்படங்களிடமிருந்து இத்திரைப்படம் தனித்து நிற்கிறது. மாற்றுத் திறனாளிகள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் பாரபட்சங்களைக் காட்டுவதில் இருந்து இந்த படம் தயங்கவில்லை. (ஒரு காபி ஷாப்பில் நகர்த்த முடியாத நாற்காலிகளால், சாப்பிட முடியாமல் தவிக்கும் ஆலிவரின் காட்சி ஒரு உதாரணம்) ஆனால் அவர்களின் பன்முகத்தன்மையையும் தனித்துவத்தையும் கொண்டாடுகிறது. படம் அவர்களை பாதிக்கப்பட்டவர்களாகவோ அல்லது ஹீரோக்களாகவோ சித்தரிக்கவில்லை. மாறாக தங்கள் சொந்த கனவுகள், ஆசைகள் மற்றும் ஆளுமைகளைக் கொண்ட சிக்கலான மற்றும் குறைபாடுள்ள மனிதர்களாக அவர்களின் யதார்தத்தை சித்தரிக்கிறது.

இயல்பாகவே, ஊனமுற்றோரின் தேவைகளைப் பற்றி சிரிக்க அனுமதிக்கப்படுகிறதா என்ற விவாதம் உள்ளது. இப்படத்தின் இயக்குனர் ஒரு நேர்காணலில், “ஊனமுற்றவர்கள் தங்கள் ஊனத்தின் மூலம் வரையறுக்கப்படுவதை என்றுமே விரும்புவதில்லை. இது அவர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே. அவர்களும் மற்றவர்களைப் போலவே சாதாரணமாக ஏற்றுக்கொள்ளப்படுவதையே விரும்புகிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

இப்படத்தின் திரைக்கதை ஒரு பயணம் தொடர்பான திரைப்படத்தின் உன்னதமான கட்டமைப்பைப் பின்பற்றுகிறது, அதன் முக்கிய கதாபாத்திரங்கள் வழியே தங்களுக்குள்ளான ஒரு பயணத்தைத் தொடங்குகிறார்கள். கண் தெரியாத மக்தா வண்டி ஓட்ட காவல் துறையிடம் சிக்கும் த்ரில்லர், நண்பனை துரத்தும் பரபரப்பு, அவர்களுக்குள் கலாய்த்துக்கொள்ளும் நகைச்சுவை, ஆலிவருக்கும் லாராவுக்குமான காதல் என பல்வேறு வகையான கூறுகளும் திரைக்கதையில் கலக்கிறது. தன்னை சமாதானப்படுத்த வரும் ஆலிவரை ஏற்றுக்கொள்ளாத  லாரா அவன் நீண்ட தூரம் சென்றதும் அவனருகில் வந்து ”நீ தக்காளி கெட்சப்பை மறந்துவிட்டாய்” என்று கலாய்ப்பது என காதலும் நகைச்சுவையுமாக படத்தின் இறுதிக்காட்சி வரை இந்த கலவை பின்தொடர்கிறது. இத்திரைப்படம் ஜேர்மானிய மொழியில் தயாரிக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் ஜெர்மானிய நடிகர்களைக் கொண்டிருந்தாலும், அதன் கருப்பொருள் உலகளாவியவை. இத்திரைப்படம் கலாச்சார எல்லைகளைக் கடந்து, உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுடன் தொடர்புடையதாக அமைகிறது.

இப்படத்தின் முக்கிய அம்சங்களின் முன்னணியில் பின்னணி இசை இருக்கிறது. ஸ்பீக்கர் அருகில் அலைபேசியை வைத்தால் வரும் கரகர சப்தத்தை வைத்து துவங்கும் ”தங்கமீன்கள்” குழுவினருக்கான ராக் வகையிலான இசை, பயணம் மேற்கொள்ளும் போது உற்சாகமாக துவங்கும் இசை, ஒட்டக சிகிச்சை நடக்கும் இடத்தில் நகைக்கச்செய்யும் இசை, பணத்தை எடுக்க லாக்கர் அறைக்குள் நுழையும் போது ஒலிக்கும் பிரம்மாண்ட இசை,  பணத்தை எடுத்துக்கொண்டு ஓடும் நண்பணை நாற்காலியால் துரத்தும் ஆலிவரின் வேகத்துடன் பயணிக்கும் இசை என பல்வேறு பரிணாமங்களில் காட்சியின் இறுக்கத்திற்கு இசை உதவுகிறது.

இப்படத்தின் இன்னொரு முக்கிய அம்சம் ஒலிவடிவமைப்பு மற்றும் ஒலிக்கலவை. ஒலிகளுக்கான ஆழம் மற்றும் திசை உணர்வை உருவாக்குதலில் அவை முக்கிய பங்காற்றியிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஆலிவர் கார் விபத்திற்குள்ளாகும் போது, கார் எஞ்சினின் சப்தம், டயர்கள் அலறல், உலோகங்கள் உடைதல் மற்றும் கண்ணாடி நொறுங்குதல் ஆகியவற்றின் ஒலி இடமிருந்து வலமாக ஸ்பீக்கரில் நகர்த்தப்பட்டு அந்த தாக்கத்தின் உணர்வை உருவாக்குகின்றன. மேலும், நாற்காலியை வண்டிக்குள் ஏற்றும் லிஃப்டை வைத்து ஆலிவரின் நண்பன் விளையாடும் காட்சியில் அந்த எஞ்சினின் ஒலியை வைத்து அந்தக்காட்சியின் நகைச்சுவை வடிவமைக்கப்பட்டிருக்கும். அதை விட முக்கியமாக இன்னொரு காட்சியில், மொத்த பணத்தையும் வைத்திருக்கும் தொலைந்து போன மிச்சியை தேடும் போது பணத்தைப்பற்றி எதுவும் அறியாத மிச்சி உயரமான ராட்டினத்தில் ஏறிக்கொள்ள, அத்தனை உயரத்திலிருந்து மொத்த பணமும் தரையில் கொட்டும் காட்சியை எந்த ஒரு இசையுமின்றி வெற்றிடத்திற்கான ஓசையுடன் பார்வையாளர்களை அந்த அதிர்ச்சியை உணர வைக்கும் வண்ணம் உருவாக்கியிருப்பார்.

மத்தியாஸ் ஷெல்லென்பெர்க்கின் ஒளிப்பதிவு பிராங்க்பர்ட்டின் நகர்ப்புற நிலப்பரப்பு மற்றும் அமைதியான கிராமப்புறம் இரண்டின் அழகையும் படம்பிடித்து, ஐரோப்பிய நிலப்பரப்புகளின் அழகைப் படம்பிடித்து, கதாபாத்திரங்களின் பயணத்தை அற்புதமான காட்சிகளுடன் இணைக்கிறது.

இப்படத்திற்கு உயிரூட்டும் இன்னொரு முக்கியக்காரணிகள் ”தங்கமீன்கள்” குழுவினர். நடிகர்கள் படத்தின் நகைச்சுவை மற்றும் நாடக அம்சங்களையும் மிகத்திறம்பட கையாளுகிறார்கள். ஏனெனில் அவர்கள் நகைச்சுவையை அதிதீவிரமாகவோ அல்லது உணர்ச்சியற்றவர்களாக இல்லாமல் இரண்டிற்குமிடையேயான தராசில்  சமநிலைப்படுத்துகிறார்கள். மிச்சி எப்போதும் போல தன்னிடமிருக்கும் ஒரு குட்டி டப்பாவில் இருக்கும் புகைப்படங்களை பார்த்துக்கொண்டிருக்க, பணத்தை மிச்சியின் உடலில் கட்டும் அவசரத்தில் ஆலிவர் பிடுங்கி வீசிய போது மிச்சி கண்ணில் தெரியும் கோபம் சொல்கிறது அவர்கள் இயலாமையின் மீது செலுத்தப்படும் ஆதிக்கத்தின் யதார்த்தம். ஆனால் பணத்தின் அத்தனை பித்துப்பிடித்த ஆலிவர், மொத்த பணமும் காற்றில் பறக்கும் போது அதிலிருந்து ஒரு தாளைக்கூட எடுத்துக்கொள்ளாமலும், மிச்சி மீது துளி கோபமும் இல்லாமலும் மிச்சியை புன்னகையுடன் பார்ப்பார். அதே புன்னகையுடன் முன்பு பிடுங்கி வீசிய டப்பாவை படத்தின் இறுதியில் மீண்டும் அவரிடமே கண்ணடித்தபடி கொடுக்கிறான். அதைப்பார்த்த மகிழ்ச்சியில் ஆலிவரை தனது உலகத்திற்குள் ஏற்றுக்கொண்டதை  தானும் கண்ணடிப்பதன் மூலம் தெரியப்படுத்துவார் மிச்சி. நட்பின் சக்தியையும், அதன் வழியே மனிதர்களுக்கிடையேயான வேறுபாடுகளை கடக்க முடியும் என்பதையும் இந்தப் படம் ஒரு சாட்சி.

1986 ஆம் ஆண்டில் தெஹ்ரானில் பிறந்து ஆறு வயதாக இருந்தபோது ஜெர்மனிக்கு குடிபெயர்ந்த அலிரெசா கோலஃப்ஷான் இப்படத்தின் இயக்குனர். தொலைக்காட்சி மற்றும் பிலிம் மியூனிக் பல்கலைக்கழகத்தில் திரைப்பட இயக்கம் பயின்ற இவர் ”டை கோல்ட்ஃபிஷ்” திரைப்படம் மூலம் அறிமுகமாவதற்கு முன்பு பல குறும்படங்களை இயக்கியிருக்கிறார். இறப்பதற்கு முன்பு ஊனமுற்றிருந்த அவரது சொந்த தந்தையை அடிப்படையாகக் கொண்டும், சிறுவயதில் நாடகக் குழுவில் ஊனமுற்றவர்களுடன் பணியாற்றிய தனது தனிப்பட்ட அனுபவத்தையும் கொண்டு அவர்களின் மனிதாபிமானத்தையும், நகைச்சுவையையும் உணர்ச்சிவசப்படாமல் ஒரு இயல்பான நகைச்சுவையுடன் படம் இயக்கும் முயற்சியில் இறங்கினார்.

நாம் இழந்தவற்றை மீட்பதற்கும், நம் வாழ்க்கையில் நேர்மறையான செயல்களை செய்வதனால் நிகழாமல் போகும் மாற்றமும் எந்த வகையிலும் தாமதமாகாது என்பதை உணர்த்தும் இத்திரைப்படம், 2018 ஆம் ஆண்டில் சிறந்த ஜெர்மன் திரைக்கதை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. நம்மைப்பற்றிய பின்னணி அல்லது உடல்திறன்களைப் பொருட்படுத்தாமல், நம் இயல்பின் திறன் கொண்டு நாம் அனைவரும் அன்பால் அறியப்பட வேண்டும் என்பதையும், எத்தனை குறைகளிருப்பினநாம் அனைவரும் நமது சொந்த வாழ்வில் ’தங்க மீன்கள்’ என்பதையும் நினைவூட்டும் திரைப்படம் இது.