கடைசியாக –

கடைசியாக  —

 

நூற்றாண்டுகள்,

பட்டுப்போன மரமாகவும்

மலையாகவும் நிற்கின்றன

சிறுசிறு கற்கள்மேல்

பரவிநிற்கும்

வெயிலின் திரைக்குப் பின்னால்

அமுதம்

டொக்

டொக் என்று

விஷம்ஆனபடி

சொட்டுகிறது

சொட்டுகளின் ஓசையை

அம்மாவின்  காலடி ஓசை

எனக்

கேட்டு ஒரு சிறு குழந்தை

தவழ்ந்து தவழ்ந்து

வருகிறது

காற்றில் பறந்து வந்த இரு கைகள்

குழந்தையை அள்ளி அணைக்கின்றன

பிறகு

செந்தூக்காகத்

தூக்கிஎறிகின்றன

அப்போது

ஒரு  தத்துவவாதியும்

ஒரு கவிஞனும்

குழந்தையைப் பிடிக்க

ஓடுகிறார்கள்

மழை பெய்யத் தொடங்குகிறது

…………

 

மணற்குன்றின் கனவுகள் –

ஐம்பதாண்டுகளுக்கு மேல்

பழைய வீடு ஒன்று

மணல்குவியலாய்

சாலையோரத்தில் கிடக்கிறது

 

அதன்

நாலாபக்கங்களிலும்

உடைந்த ஜன்னல்களும்

பாதிப்பாதி கதவுகளும்

ஒரு  அரிவாள்மனையும்

சில போட்டோக்களும்

அரைகுறையாய்த் தெரிகின்றன

 

செங்கல்லும் காரையும்

இடையிடையிட்ட  மணல்குன்றில்

சிரிப்பொலி ஏதுமில்லை

அழுகைகளோ  கலவிஓசையோ

மழலைஒலிகளோ எதுவுமில்லை

அப்படி ஒரு அமைதி

ஆளற்ற அமைதி

 

உறக்கத்தில் இருக்கும் மணற்குன்றே !

உன்னை இறைஞ்சுகிறேன்

கெஞ்சுகிறேன்

இன்னும் ஒருமுறை

கனவு காணேன்

…………….

கல் –

 

தெப்பக்குளத்தின் படிக்கட்டில்

அமர்ந்திருந்தான்

கரும்பச்சைநிற நீர்

விட்டேற்றியாய்

வேறு எங்கோ

பார்த்துக் கொண்டிருந்தது

அவன் தலையில்

யார்யாரோ போட்ட கல்

ரத்தம் காய்ந்து

அவனைப் சுற்றிக் கிடந்தது

” நான் ஏன் நல்லவனாய் இருக்கவேண்டும்” என்றபடி

ஒரு கல்லை எடுத்து

எறிந்தான்

காத்திருக்கிறான் பதிலுக்கு

கற்கள் நீரைநோக்கிப்

போய்க்கொண்டிருக்கின்றன

…………………..

எடை –

குழந்தையை

தோளில் தூக்குகையில்

அது

எடையோடும்

எடையில்லாமலும் இருக்கிறது

 

காதலர்க்கு

கலவிவேளையில்

அவர் மேனிகள்

எடையோடும்

எடையில்லாமலும் இருக்கிறது

 

மயானத்திற்கு,

இறந்துபோனவரை த்

தூக்கிச் செல்கையில் அவர்

எடையோடும்

எடையில்லாமலும் இருக்கிறார்

 

சூரியனைச் சுற்றும் புவியிலல்ல

காலண்டரைச் சுற்றும் பூமியில்

அரசு அலுவலக வரிசையில்

ஆவணங்களையும்

அடையாள அட்டையையும்

ஏந்தியபடி  தாள்மனிதனாக  நிற்கிறேன்

அவை

எடையில்லாமலும்

எடைகளோடும் இருக்கிறன

எண்ணிக்கையற்ற

எடைகளோடு

………………

கவிதை-

நான எழுதிய கவிதையை

பல இடங்களில்

பாரத்திருக்கிறேன்

எழுதி முடித்ததும் தாளில்

பிறகு ப்ரிண்ட்அவுட்டில்

புத்தகத்தில்

விமர்சனங்களில்

கூட்டங்களில் யாராவது

மேற்கோளாய் கூறுகையில்

அப்போதெல்லாம் அது

ஒரு நாவல்பழம் போல் இருண்டிரூந்தது

காலத்தின் தூசி படந்திருந்தது

கலவியின் மூடிய விழிகளைப் போல்

மௌனித்திருந்தது

வெட்கமுற்றிருந்தது

காட்டுச் செடியின்

மலர்களை

பால்கனிச்செடியில்

உதிரவிட்டிருந்தது

பேசிக்கொள்ளாத இருவர்

சாலையில் ஒருவரையொருவர் பார்த்தபடி

கடப்பதைப்போல்

நானும் கவிதையும்

ஒருவரைஒருவர்  கடந்துசெல்கிறோம்

தொலைவில் பச்சையாயும்

உயரத்தில் நீலமாயும்

பள்ளத்தில் கருமையாகவும்

தெரியும் விலங்கொன்றும்

எங்களைக் கடக்கிறது