சந்திப்பு : சோ. விஜய குமார் , புகைப்படங்கள்: ஆனந்த் குமார்
உங்கள் இலக்கியப் பயணம் குறித்துக் கூற முடியுமா?
பக்தனாகவும் ஆன்மிகவாதியாகவும் முயற்சி செய்து யோகியாகவும் முயற்சி செய்த பிறகுதான் இலக்கியத்துக்கு வந்தேன். நான் இலக்கியத்திற்கு வந்தபோது, ஒரு நதி தனது பாதையில் அனைத்தையும் ஒன்றாகக் கொண்டுவருவது போன்றவற்றின் எச்சங்கள் என்னிடம் இருந்தன. ஒரு உடலைப் பார்த்தால் பட்டினி கிடக்கும் மனிதர்கள்தான் நினைவுக்கு வருகிறார்கள். மறுபுறம் சந்தை நினைவுக்கு வருகிறது. நான் படித்த பௌத்தம் மற்றும் தாந்த்ரீகத்தை நினைவூட்டுகிறது. உடல் எனக்குப் பல விஷயங்களைக் குறிக்கிறது. நான் ஒரு உடலை அப்படித்தான் பார்க்கிறேன். நான் கவிதையையும் அப்படித்தான் பார்க்கிறேன்.இந்தப் பல்வேறு விஷயங்களின் கூட்டுத்தொகைதான் என் கவிதைகளை மற்ற கவிஞர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது என்று நான் நம்புகிறேன்.
தத்துவமும் கவிதையும் உங்களுக்கு என்னவாக இருக்கின்றன?
நான் ஒரு ஃபிராங்கண்ஸ்டைனைப் போல. அடிப்படையில் நான் ஒரு முழுமையான கவிஞர் என்று சொல்ல முடியாது. நான் பன்முகத்தன்மை கொண்டவனாக கவிதை எழுதுகிறேன். உண்மையில் நான் கவிஞனாகவோ எழுத்தாளனாகவோ ஆக விரும்பவில்லை. நான் இந்த வாழ்க்கையை ஒரு தத்துவவாதியாக வாழ விரும்பினேன். சாக்ரடீஸ் போல. பொருள் பொதிந்த ஒரு வாழ்க்கையாக. அர்த்தத்தைத் தவிர வேறு எதையும் தேட வேண்டாத வாழ்க்கையை.ஆனால் வாழ்வு அதற்கு என்னை அனுமதிக்கவில்லை. அற்பமானவை, சிறியவை என்று என் வாழ்வின் முற்பகுதியில் ஒதுக்கி வைத்தவற்றையெல்லாம் என் வாழ்வின் பிற்பகுதியில் தேடிய லையும் கட்டாயத்துக்கு உள்ளானேன்.
தத்துவத்தைப் பயில்வது என்பது சாவது எப்படி என்று தெரிந்து கொள்வது என்று மான்டெய்னின் கூற்று ஒன்று உண்டு. கவிதையைப் பயில்வது வாழ்வது எப்படி என்று தெரிந்து கொள்வது என்று நான் நினைக்கிறேன். கவிதை செத்துக் கொண்டே இருக்கும் ஒன்றை உயிர்ப்புடன் வைத்திருக்க கடைசி வரை முயல்கிறது. பல நேரங்களில் செத்த பிறகும்.
ஒரு கவிஞனாக, ஒரு புனைகதை ஆசிரியராக உங்கள் வாழ்க்கைப் பார்வையையும் இலக்கிய அணுகுமுறையையும் உருவாக்கிய உங்கள் முதன்மையான ஆசிரியர்கள் யார்?
என் மொழியிலும் என் பார்வையில் விவிலியத்தின் தாக்கம் எப்போதும் உண்டு.
பின்னர் விவிலியத்தில் இருந்து நான் விலகினேன். அதை முழுவதுமாக மறுத்துப் பேசுகிற நீட்சேவைத் தீவிரமாக வாசித்தேன். கவிதையில் எமிலி டிக்கின்சன் போன்றோரை வாசித்தேன். தமிழில் கவிதையில் என்னை பாதித்தவர் என்று பார்த்தால் கலாப்ரியாவைத்தான் சொல்ல வேண்டும். நான் வண்ணதாசன் போன்று எழுத முயற்சித்து இருக்கிறேன். கணையாழியில் வந்து கொண்டு இருந்த கவிதைகள் எனக்கு ஒரு காலத்தில் பிடித்திருந்தன. எஸ்.வைத்தீஸ்வரன் கவிதைகள்; அந்தக் கவிதைகளின் மென் கவித்துவம் எனக்குப் பிடித்திருந்தது. ஞானக்கூத்தன் கவிதைகளின் பகடி எனக்கு பிடித்திருந்தது. சமகாலத்தில் மனுஷ்ய புத்திரனின் கவிதைகள்.ஆனால் என்னுடைய கவிதைகளை எழுத வரும் பொழுது என் வாழ்வை இவர்களின் கவிதைகள் பிரதிபலிக்கவில்லை என்று கண்டு கொண்டேன். என் வாழ்வு பதற்றமும் அலைச்சலும் எந்நேரமும் காலடியில் இருந்து நிலம்புரண்டு போய்விடக் கூடிய அச்சமும் நிரம்பியது. சில நேரங்களில் இவர்கள் கவிதை வடிவங்களை எனது உணர்வுகளுக்கு நேராக வரும்போது பயன்படுத்தி இருக்கிறேன்.
கதைகளில் எனக்கு ஜெயமோகனின் தாக்கம் இருந்தது. ஆனால் ஜெயமோகனின் கதைகளில் நம்பிக்கை வாதம் இருக்கும். ஒரு இந்திய தத்துவத்தின் நீட்சி இருக்கும். நான் ஒரு ஹைபிரிட் என்பதால் அவரது கதைக்களங்களை எடுத்துக்கொண்டு அதை நான் தலைகீழாக்கி விட்டேன். என்னுடைய ஆரம்ப கட்டக் கதைகளான பூ, மூப்பு போன்றவற்றில் சீரான பார்வை எனக்கு இருக்காது. என்னுடையது சித்தர் பாடல்கள் போல தவளை போல குதித்துக் குதித்துச் செல்லும் தன்மை உடையது.அவருடையது ஒரு ஒழுங்கமைவு கொண்ட பார்வை. எல்லாம் ஓரிடத்தில் குவியும் அத்வைதப் பார்வை.என்னுடையது சிதறலான பார்வை. நான் நிறைய ஆங்கில நூல்களையே வாசித்து வந்துள்ளேன். ஓ ஹென்றி கதை சொல்லல் முறை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆஸ்கார் வைல்ட் அவர்களுடைய கசந்த நகைச்சுவை. சாமர்செட் மகாமின் பாத்திர தலைகீழாக்கங்கள் (Invertion of characters) எனக்கு மிகவும் பிடிக்கும். கிரகாம் கிரீன் கதைகளில் வருவது போன்ற நம்பிக்கை இழப்பும் அதை மீளப் பெறுதலும் கொண்ட கதாபாத்திரங்களை நான் படைத்திருக்கிறேன்.புதுமைப்பித்தன் கதைகளில் வரும் இயல்பான கசப்பு உண்டு. புதுமைப்பித்தன் போன்ற வாழ்வு அமைந்து விடக்கூடாது என்று நான் மிகவும் பயப்படுகிறேன். அவர் எனக்கு எப்போதும் ஒரு டார்க் ஃபேண்டஸியாக இருக்கிறார். எழுத வரும்போது புதுமைப்பித்தன்போல கசப்பு நிரம்பிய கதைகளை எழுதக்கூடாது என்று நினைத்தேன். தி ஜானகிராமன் தான் என்னுடைய ஆதர்சமாக இருந்தார். அவர் எழுதிய கும்பகோணத்தைச் சுற்றிய நிலப்பரப்புதான் என்னுடைய கனவு நிலமாக இருந்தது.ஆனால் நாம் எதைச் செய்யக்கூடாது என நினைக்கிறோமோ சில சமயம் நாம் அவற்றை நம்மையறியாமலேயே செய்து விடுவோம். எழுத வந்த பிறகு பஷீரின் மொழியை நான் தத்தெடுத்துக் கொண்டேன். ஆஸ்கார் வைல்ட் கலை என்பது ஒரு தோரணையை எடுத்துக் கொள்வது என்று சொல்கிறார். Pose. வாழ்வு குறித்து ஒரு பஷீரியத் தோரணைதான் இன்று என்னை செலுத்துகிறது அல்லது இதுவரை என்னைக் காப்பாற்றி வந்திருக்கிறது என்று சொல்லலாம்.
ஊர்கள், ஊர் சார்ந்த பண்பாடுகள் குறித்து தொடர்ந்து ஒரு எள்ளல் தொனியில் எழுதி வந்திருக்கிறீர்கள். இருபத்தியோராம் நூற்றாண்டில் ஒரு தனிமனிதனுக்கென தனிப்பட்ட குணாதிசயங்கள் ஏதாவது இருக்கிறதா என்று தெரியாத காலத்தில் ஊர்களுக்கென பொதுப்பண்பாடுகளுக்கென எதுவும் இருக்கிறதா?
நம்முடைய ஊர் பற்று ஜாதியப் பற்றுக்கு மதப் பபற்றுக்கு எவ்விதத்திலும் குறைந்ததல்ல. குறைந்த மடத்தனம் உடையதல்ல. வாழ்வுக்கு, நவீன சிந்தனைக்கு தமிழர்களின், இந்தியர்களின் பங்கு என்ன என்று பார்த்தால் மிகக்குறைவு. நவீன வாழ்வுக்கு எந்தப் பங்கையும் தமிழர்களும் இந்தியர்களும் செய்யவில்லை. ஆகவே அவர்கள் பழமையான ஒரு பெருமித உணர்வைக் கைக்கொள்ள வேண்டி உள்ளது. ஒப்பிட மிகக் குறைந்த அளவே உள்ள உலகெங்கும் சிதறடிக்கப்பட்ட யூதர்கள் நவீன சிந்தனைக்கு மிகப்பெரிய பங்கு அளித்திருக்கிறார்கள். இன்று அவர்கள் பாலஸ்தீய இனத்திற்குச் செய்யும் கொடுமைக்காக மிகவும் வன்மையாக கண்டிக்கப்படுகிறார்கள். ஆனால் அவ்வாறு கண்டிக்கப்படுகின்றபொழுது யூதர்கள் அறிவுலகத்திற்கு அளித்த சொற்களால்,கருத்துக்களாலேயே கண்டிக்கப்படுவது கவனிக்கத்தக்கது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் தமிழர்களின், இந்தியர்களின் நிலையே இப்படி இருக்கும் பொழுது ஊர் பெருமிதம் கொள்வது ஒரு கேலி செய்யப்பட வேண்டிய விஷயமாகவே எனக்குத் தோன்றுகிறது. ஆங்கிலத்தில் இதை provincialism என்று சொல்கிறார்கள். இது ஒரு விதமான குறுகிய மனப்பான்மை. குறுக்கும் மனப்பான்மை. இது அதீதமாக செய்யப்படும்போதுதான் நான் இதைக் கேலி செய்கிறேன்
நாம் நவீனத்துவத்திற்கும் நவீன வாழ்க்கைக்கும் எதையும் அளிக்கவில்லை. ஏதேனும் கொஞ்சமாவது அளிக்கின்ற இலக்கியவாதிகளையும் பொருட்படுத்துவதில்லை. அவர்களைத் தெரிந்து கொள்வதே இல்லை. இவர்கள் ஊர்ப் பாசம் கொள்வது எதைப் பற்றியெல்லாம் என்று பாருங்கள். சினிமா தியேட்டர்கள்,ஹோட்டல்கள், பெரும்பாலும் தின்னும் விஷயம் பற்றிதான் இருக்கும். அவ்வாறு உண்ணும் பருகும் விஷயங்களும் இங்கே அவ்வளவு தரம் ஒன்றும் இல்லை. பிறகு நாம் எதைப் பற்றிப் பெருமிதம் கொள்கிறோம்?
எங்கள் ஊர் புத்தகங்களை அதிகம் வாசிக்கிற ஊர் என்று எந்த ஊரைப்பற்றியாவது பெருமை அடித்துக் கொள்ள முடியுமா? எழுத்தாளர்கள் அதிகம் தோன்றிய ஊர்களில் கூட புத்தக்க் கண்காட்சிகள் ஈயாடுகின்றன. கேரளத்தில் ஒருவர் இவ்வாறு பெருமை கொள்ள முடியும். இது பஷீரின் ஊர் இது பொட்டே காற்றின் ஊர். இது ஓ.வி.விஜயனின் ஊர் இது எம்.டி.வாசுதேவனின் ஊர் என்று சொல்கிறவர்களை நான் பார்த்திருக்கிறேன். இங்கு திருநெல்வேலியென்றால் ஒருவருக்கு அல்வாதான் நினைவுக்கு வருகிறது. கும்பகோணம் என்றால் காபிதான் நினைவுக்கு வருகிறது. ஏன் ஒருவருக்கு திருநெல்வேலி என்றால் புதுமைப்பித்தனும் கும்பகோணம் என்றால் தி.ஜானகிராமனும் நினைவுக்கு வருவதில்லை? கொங்கு பகுதி என்றால் என்.ஆர்.சண்முகசுந்தரத்தின் நாகம்மாள் நாவல் நினைவு வருவதில்லை? அன்னபூர்ணா மசால் தோசைதான் நினைவுக்கு வருகிறது?
தொண்ணூறுகள் வரைக்குமான நவீன கவிதையில் பல்வேறு போக்குகள் இருந்தாலும், அவற்றிற்கிடையே சில பொதுப்பண்புகளும் இருந்தன. முக்கியமாக பூடகத்தன்மை, சொற்சிக்கனம், இறுக்கமான மொழி, நெகிழ்வற்றதன்மை போன்றவற்றைச் சொல்லலாம். தொண்ணூறுகளுக்குப் பிறகு இந்தப்போக்கில் பெரும் மாற்றம் நடந்திருப்பதாகத் தோன்றுகிறது. கவிதையின் கான்வாஸ் பெரிதாகிவிட்டதாகவும், கவிதையின் பாடுபொருள்கள் எண்ணற்றதாகிவிட்டதாகவும் தோன்றுகிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
நவீன தமிழ்க் கவிதைகளில் எந்தப் போக்கு ஏற்பட்டாலும் அவை மேற்கத்திய போக்குகளின் நிழலாகத்தான் இருந்திருக்கிறது. ஊடகத் தன்மை, செறிவு, சொற்சிக்கனம், சொல்லும் பாணி போன்ற தளங்களில் மட்டுமல்லாது சொல்லும் விஷயங்களே கூட அங்கு நடமாடிய நிஜங்களின் நிழல்கள்தான் நாம்.இங்கு தொடர்ந்து சிறு பத்திரிகைகளில் கவிதைகள் வெளியான ஒரு காலகட்டத்தில் யாருடைய கவிதைகள் மேற்கிலிருந்து இங்கே மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன என்பதைக் கூர்ந்து கவனித்தால் அவ்வாறு மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகளின் சாயல் பின்னால் வந்த தமிழ்க் கவிதைகளில் இருப்பதை நாம் காணலாம். இது உனக்கு அதிர்ச்சியாகக்கூட இருக்கலாம். ஆனால் நவீன தமிழ்க் கவிதையில் நடந்த எந்தப் பெரு மாற்றமும் இங்கு சுயமாக உருவானதே அல்ல.
மேற்கத்திய கவிதைகளில் உதிரித்தன்மை நமக்குப் பெரும்பாலும் ஒட்டுவதில்லை. ஆனால் இந்தியக் கவிதைகள் குறிப்பாகச் சீன மற்றும் ஜப்பானியக் கவிதைகள் நெருக்கமாக இருப்பதன் காரணம் என்ன?
மேற்கத்திய படையெடுப்புகள் ராணுவப் பொருளாதாரம் மட்டுமல்லாது கலாச்சார ஊடுருவலாலும் கூடத்தான். ஜப்பானியர்களும் சீனர்களும் பெரிதாக அவர்களை அவர்களது கலாச்சாரத்தில் ஊடுருவ விடவில்லை. அவர்கள் அளித்த அறிவியல் வசதிகளை மட்டும் பிடித்துக் கொண்டு கலாச்சாரத்தில் தங்களது கற்றையைத் தொடர்ந்து பிடித்து வந்தார்கள். அவர்களுக்குள் பிரிவு இருப்பதாய் தோன்றினாலும் அவர்கள் ஒரே இனக் குழுவைச் சார்ந்த நாட்டவர்கள். நம்முடையது ஒரு ஹைபிரிட் நிலம். இங்கே ஒன்றுக்கொன்று முரண்படும் பல்வேறு பிரிவுகள் உள்ளன. பல நேரங்களில் இந்த சச்சரவுகள் நமக்கு ஒரு ஆழ்ந்த அமைதியின்மையை அளிக்கின்றன. ஆகவே சீன, ஜப்பானியக் கவிதைகள் தென்படுகின்ற ஒருமையை நேசிக்கிறோம்.
இங்கே நாம் குடும்பத்தை விட்டு வெளியேறினாலும் சமூகத்தை விட்டு வெளியேறாதவர்களாகவே இருக்கிறோம். எனில் நமது கவிதைகளில் இருக்கும் உதிரித் தன்மை என்பது இயல்பாகத் தோன்றுவதுதானா அல்லது அது மொழியின் மீதான பாவனையா?
மேற்கில் உள்ளவர்கள் நிறைய பயணம் செய்பவர்கள். புதிதாகக் கண்டுபிடிப்பவர்கள். சுருக்கமாக எக்ஸ்ப்ளோர்கள்.நமது நிலப்பரப்பில் வெளியுலகை அச்சமூட்டும் ஒரு இடமாகவே பார்த்தோம். ஒப்பிட்டுளவிலும் மேற்கத்தியர்களை விட நாம் நமது வீட்டில் பாதுகாப்பாக இருந்துகொள்ள ஒரு சூழல் இருக்கிறது. நாம் பெரும்பாலும் வெளியேபோக விரும்புவதில்லை. அப்படியே வெளியே போனாலும் நாம் அடைய விரும்புவது இன்னொரு வீட்டைத்தான். நமக்கு வெளி உலகம் அச்சமூட்டக்கூடியதாகவும் வீடு பாதுகாப்பானதாகவும் எப்போதும் இருந்து வந்திருக்கிறது. ஆனால் மேற்கத்தியர்களுக்கு வீடு அப்போதும் வலுவான கட்டமைப்பாக இல்லை. இப்போதும் இல்லை. நாம் எவ்வளவு சிதறினாலும் அதை சேர்த்து சேர்த்து வைக்க ஒரு கண்ணி இருக்கிறதா என்பதைப் பார்ப்போம்.
எனில் குடும்ப அமைப்பில் இருக்கும் ஒருவன் உதிரி மனப்பான்மை பற்றி எழுதுவது என்பது பாவனையா?
ஒரு தேசாந்திரியாக இருப்பதற்கு உடல் பலம் அதிகம் தேவை. போலவே ஆன்ம பலம் உடைய ஒருவனால்தான் துறவியாக முடியும். கவிஞர்கள் தோற்றுப் போன துறவிகள். அவர்கள் உதிரியாய் இருக்க விரும்பித்தான் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். இந்திய சமூகம் உதிரிகளைக் கருணையோடு பார்க்காது. அது தன்னால் இயன்ற அளவிற்கு அவர்களைப் பழிவாங்கும். இங்கு சாமியாராக மாறுபவன்கூட கடைசியில் ஒரு அமைப்பாகவே மாறுகிறான். இந்தியா உதிரிகளை அனுமதிக்காது. கவிஞர்கள் உதிரித் தன்மையை எழுதுவது பாவனை என்பதை விட அவர்களது நிறைவேறாத கனவுகளை எழுதுகிறார்கள் என்று சொல்லலாம்.
நவீன கவிதைக்குள் சிற்றிதழ்கள் வழியாக நடந்த ஒரு இறுக்கமான கட்டமைப்பிலிருந்து அதன் புறநடையாளர்களாக விக்ரமாதித்யனும், கலாப்ரியாவும் தோன்றுகின்றனர். மேற்கத்திய படிமவியல் கவிதை இயக்கத்தின் தாக்கத்தினால் உருவான நவீன கவிதை மரபிலிருந்து இவர்கள் மேற்கொண்ட பாதையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
கலாப்ரியாவின் கவிதைகளில் மேற்கத்திய தாக்கமும் அதே நேரத்தில் வேர்களைக் கைவிட முடியாத மனநிலையும் வெளிப்படுவதுண்டு. விக்கிரமாதித்தன் ஆரம்பகட்ட சில கவிதைகளைத் தவிர்த்து அவர் இந்த அன்னியமாதலுக்கு ஆட்படவில்லை என்றே கருதுகிறேன்.
விக்ரமாதித்தனின் துயரம் என்பது அன்று வறுமையில் இருந்த பாணர்களின் அதே துயரம் தான்.
இலக்கியத்தில் இருக்கும் ஒருவன் ஏன் ஏதேனும் ஒரு வாதையோடு இருக்க வேண்டும் என சமூகம் எதிர்பார்க்கிறது. எனில் விக்ரமாதித்தன் கொண்டாடப்படுவதற்கு அவரது வாழ்வியல் நிலைமையும் ஒரு காரணமா?
இது ஒரு நல்ல கேள்விதான். பாணர்கள் ஒவ்வொரு இடமாகச் சென்று பாடிப் பரிசல் பெற்று வாழ்ந்தவர்கள்தானே. உதாரணமாகப் பாரதி எட்டயபுரம் ஜமீன்தாரிடம் உதவி வேண்டி எழுதிய சீட்டுக் கவிகளைப் படித்தால் துயரமாக இருக்கும்.
இந்த சமூகத்தின் மனப்போக்கு அப்படித்தான் இருக்க வேண்டும் என்று இல்லை. ஆனால் எதார்த்தத்தில் அப்படித்தான் இருக்கிறது. சமகாலத்தில் சாருவும் ஜெயமோகனும் அதை மாற்றத்தான் முயன்று கொண்டிருக்கிறார்கள்.
சமகாலத்தில் ஒரு முழு நேர எழுத்தாளனாக இருப்பதன் சாத்தியங்கள் என்னவாக இருக்கின்றன?
கவிஞர் ஜோசப் பிராட்ஸ்கியை சோவியத் கமிசனர்கள் செய்த புகழ்பெற்ற விசாரணை பற்றி படித்திருப்பீர்கள்தானே. அவர்கள் கவிதை செய்வது ஒரு வேலை என்று ஒத்துக் கொள்ளவில்லை. அது அரசியலுக்கு ஒரு உப வேலை என்றே நினைத்தார்கள். இங்கும் இன்றும் அதே நிலைதான். சோவியத் யூனியனை விடவும் மோசமான ஒரு கலாச்சார சீரழிவு இங்கு நிகழ்ந்திருக்கிறது. அவர்களுக்காக ஒரு சமூக வேலைத் திட்டம் இருந்தது. அந்த வேலை திட்டத்திற்குள் பொருந்திப் போகும்படி கவிஞர்களை எழுத்தாளர்களை நிர்பந்தித்தார்கள். இங்கு நடந்திருப்பது, நடந்துகொண்டிருப்பது ஒரு சீரழிவு. ஒரு பட்டிமன்றப் பேச்சாளரைப் பார்த்து நீ என்ன வேலை செய்கிறாய் என்று கேட்காத சமுதாயம் ஒரு எழுத்தாளனைப் பார்த்து அந்தக் கேள்வி கேட்கிறது.
ஒரு பட்டிமன்றப் பேச்சாளன் சமூகத்தை சந்தோஷப்படுத்துகிறான், ஒரு நடிகன் திரையில் அதையே செய்கிறான். உண்மையில் கவிஞன் இந்த சமூகத்திற்கு என்னதான் செய்கிறான் என இந்த சமூகம் கேள்வி எழுப்புகிறது. எழுத்தாளர்களுக்கும் விதூசகர்களுக்கும் இங்கு வித்தியாசம் தெரிவதில்லை. அவர்கள் தங்களைக் குஷிப் படுத்த வேண்டும் என்று அரசியல்வாதிகளில் இருந்து பொதுமக்கள் வரைக்கும் எதிர்பார்க்கிறார்கள். பத்திரிகைகளில் கூட ஒருவர் என்ன எழுதி இருக்கிறார் என்பதை விட எவ்வளவு வரிகள் எழுதி இருக்கிறார் என்பதன் அடிப்படையில்தான் சன்மானம் வழங்கப்படுகிறது. அது எவ்வளவு பெரிய எழுத்தாளராக இருந்தாலும் சரிதான்.சமூகத்தில் மரண காரியங்களுக்கு சடங்குகளைச் செய்யும் புரோகிதனுக்கு இருக்கும் மரியாதைகூட கவிஞனுக்குக் கிடையாது. கவிஞர்கள் மோட்டிவேஷனல் ஸ்பீக்கர்களாக இருக்க வேண்டும் என சமூகம் எதிர்பார்க்கிறது. சமூகத்தைப் பொறுத்தவரை கவிஞன் என்பவன் வேலை செய்யாதவன் அல்லது பிறர் வேலையைக் கெடுப்பவன்.
கவிதைகள் குறித்த எந்த விவாதமும் நடைபெறாத ஒரு சூழலில் புதிதாக எழுத வரும் கவிஞர்கள் தங்கள் மொழியையும், வெளிப்பாட்டு முறைமையையும் எவ்வாறு சோதித்துக்கொள்வது? ஒரு கவிஞனுக்கு வழிகாட்டும் விளக்குகள்தான் எவை?
இதற்கு திறனாய்வாளர்கள் அதிகம் இருக்க வேண்டும். இது கல்வியாளர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி. தமிழில் அப்படி ஒரு துறை உருவாகி வரவில்லை. என்ன நடக்கிறது என்றால் கவிஞர்கள் சின்னஞ்சிறிய அரங்குகளில் அல்லது சந்திப்புகளில் இலக்கியச் சண்டைகள் மூலமாகத்தான் தங்களது வரையறையை உருவாக்குகிறார்கள். இதில் நிறைய தற்சார்புகளுக்கான வாய்ப்புகள் உண்டு. ஒரு கவிஞர் கவிதைகளை விமர்சிக்கும்போது ஒரு பக்க மனநிலையை விமர்சிப்பார் அல்லது உரையாடுவார். ஒரு காலத்தில் ஸ்கூல் ஆஃப் தாட்ஸ் இருந்தது. இப்பொழுது அப்படி ஏதும் இல்லை என்றே தோன்றுகிறது. முன்பு சிற்றிதழ்களில் வெளியான கவிதைகளில் ஒரு வகைமை இருந்த மாதிரி இருந்தது. சித்தாந்த ரீதியாகப் பார்த்தால் தமிழில் அனைவருமே தற்போது இடதுசாரி கவிஞர்கள்தான். வலதுசாரி கவிஞர்கள் என யாராவது உண்டா?
உங்கள் கூற்றுப்படி எனக்குத் தெரிந்து தமிழில் நல்ல இடதுசாரி கவிஞர் மு. சுயம்புலிங்கம்தான். ஆனால் இடதுசாரிய இயக்கங்கள் குறிப்பிடும் கவிஞர்கள் பட்டியலில் அவர் இல்லை. உணர்வு ரீதியாக அன்றாடங்களின் வலியை சாமானியர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் கவிதைகளின் இடம் என்ன?
இவர்கள் அன்றாடம் அன்றாடத்தோடு அடித்துச் செல்லப்பட்டு விடும் என்ற நம்புகிறார்கள். போலவே கவிதை என்பது காலாகாலத்திற்குமானது அது ஒரு தரிசனத்தை தர வேண்டியது என எதிர்பார்க்கிறார்கள். சுயம்புலிங்கம் மட்டுமல்ல மனுஷ்ய புத்திரன் கவிதைகளைக்கூட அவர்கள் என்ன இவர் அனைத்தையும் கவிதை ஆக்குகிறார் என விமர்சிக்க தெரியாமல் விமர்சிக்கிறார்கள். அன்றாடத்தின் கவிதைகளை எழுதுகிறார். அன்றாடம் நாளை மாறிவிடும் என்கிறார்கள். நல்ல கவிதையில் அன்றாடமும் வரும், எதிர்காலமும் வரும். ஜெயலலிதா குறித்து அரசி என அவர் எழுதிய கவிதையைத் தற்பொழுது சமகாலத்தில் ஷேக் ஹசீனா அவர்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம். ஏனெனில் வரலாற்றிற்கென ஒரு பேட்டர்ன் இருக்கிறது. வரலாற்றில் புதிதாக நிகழ்வது எதுவுமே இல்லை.
இன்று அன்றாடம் எனப்படுவது கூட 2000 வருடத்திற்கு முன்பான ரோம சாம்ராஜ்யத்தின் நிகழ்வுகளோடு ஒரு ஒப்புமை கொண்டிருக்கும். புறச்சூழல்களும் அடையாளங்களும் மாறி இருக்கலாம். ஆனால் அகமும் மனித குணங்களும் என்றும் மாறாதவை. அன்றாடம் என்று வரும்போது அதில் தத்துவம் வரலாறு அனைத்தும் வந்துவிடும். சுயம்புலிங்கம், மனுஷ்ய புத்திரன்மீது விமர்சனத்தை வைப்பவர்கள் அதை சரியாக வைக்கத் தெரியாமல் வைக்கிறார்கள். ஒரு கவிஞனிடம் எதை எழுத வேண்டும், எதை எழுதக்கூடாது என சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அவன் எழுதியது சரியாக வரவில்லை என்று வேண்டுமானால் விமர்சிக்க உரிமை உண்டு.
வெவ்வேறு பாடு பொருள்களை எடுத்து வெவ்வேறு கவிதைகள் எழுதும் கவிஞர்கள் ஒருபுறம், ஒரே பாடுபொருளைத் தொடர்ந்து வெவ்வேறு கவிதைகள் எழுதும் தேவதேவன் போன்ற கவிஞர் மறுபுறம். இவற்றை எப்படிப் புரிந்து கொள்வது?
தேவதேவன் குறித்து இங்கு ஒரு தொன்மம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அந்த துன்பத்தை உருவாக்கியதில் ஜெயமோகனுக்கு பெரும் பங்கு உண்டு. தேவதேவன் மரங்களைத் தாண்டியும் பல்வேறு கவிதைகளை எழுதி இருக்கிறார். தேவதச்சன் போல சிதறுண்ட நிலைகளை தேவதேவனும் எழுதி இருக்கிறார். நான் ஒரு விஷயத்தை உண்மை என்று நம்பும் முன்பே அதை உண்மையல்ல என்று நம்ப வைக்கும் மற்றொரு சம்பவமும் என் வாழ்வில் நடக்கிறது. என்னால் ஒரே விஷயத்தை தொடர்ந்து நம்ப முடியாது. புறவுலகம் இன்று வேகமாக மாறிவரும் சூழலில் ஒருவனுக்கு ஒரே படிமமாக அல்லது ஒரே சூழலாக வாழ்க்கை இருக்கிறது என்றால் அதை நான் பாவனை என்றே கூறுவேன். இல்லையெனில் அதை ஒரு பாதுகாப்பு கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள். வெவ்வேறு அனுபவங்களுக்கு அவர்கள் தன்னைத் திறந்து வைக்க தயாராக இல்லை. திறந்திருக்கும் காயம் ஆறாது என்பது போல திறந்து இருக்கும் மனம் தொடர்ந்து ரணப்படும். இரண்டு மூன்று தொகுப்புகளுக்குப் பிறகு அல்லது 40, 50 வயதுக்குப் பிறகு கவிஞர்கள் தங்களை மூடிக் கொள்கிறார்கள் என்பது தமிழில் ஒரு சரியான குற்றச்சாட்டுதான்.
நவீன தமிழ் இலக்கிய வரலாற்றை எடுத்துக்கொண்டால், ஒவ்வொரு பத்தாண்டிலும் தனித்த மாபெரும் ஆளுமைகளாக சிலர் உருவாகி நிலைபெற்றதைப் பார்க்க முடிகிறது. கடந்த கால் நூற்றாண்டு காலமாக இருபத்தியோராம் நூற்றாண்டில் அப்படி ஒரு நிகழ்வு நவீன தமிழ் இலக்கியத்தில் நிகழ்ந்திருக்கிறதா?
ஆட்டம் இன்னும் முடியவில்லை. தேரோட்டம் இன்னும் முடியவில்லை.முடியும்போது தான் யார், என்ன நிலையில் சென்று அடைந்தார்கள் என்பதைச் சொல்ல முடியும். புதுமைப்பித்தன்,பாரதியார் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அங்கீகரிக்கப்பட்டார்களா? அவர்களது படைப்புகளையும் அவர்களையும் நிறுவ பின் நாட்களில்தான் ஆட்கள் வந்தார்கள். காலத்தின் கையில் எனச் சொல்வது மிகவும் கை வழக்காக இருக்கிறது இருக்கிறது. சரித்திரத்தின் கையில் என்று நாம் மாற்றிச் சொல்லிக் கொள்ளலாம். நமக்குப் பின்னால் வரும் நாட்களில் வருகிறவர்கள் நம்மை விட திறன் வாய்ந்தவர்களாக இருந்தால் நாம் நிச்சயம் மறக்கப்பட்டு விடுவோம். ஆனால் அதற்காக நாம் அந்தப் பதற்றத்தோடேயே எழுதிக் கொண்டிருக்க முடியாது
கவிஞர், சிறுகதை ஆசிரியர் இந்த இரண்டு பரிமாணங்களும் உங்களுக்கு எத்தகைய வேறுபட்ட உணர்வுகளைக் கொடுக்கின்றன?
கவிஞனாக மாறுவது எனது ஆளுமையின் பலவீனமாகவே கருதுகிறேன். எனது கதைகளில் தத்துவவாதியாக இருக்கிறேன். கதைகளில் கற்பனையை நான் அடிக்கடி அனுமதிப்பதில்லை. கதையின் வரையறைகள் பெரும்பாலும் உண்மையாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கவிதையில் நாம் எதையாவது கனவு காணலாம். கவிதையில் எங்காவது அமர்ந்து சற்று இளைப்பாறலாம். கதையில் ஒரு பாலைவனத்தில் நடப்பது போல இறக்கும் வரை சென்று கொண்டே இருக்க வேண்டும். அங்கே இளைப்பாற முடியாது. சாகும் வரை நடந்து கொண்டே இருந்தால் ஒருவேளை வாழ்வதற்கான வாய்ப்பு கிடைக்கலாம். கவிதையில் ஒரு கானல் நீருக்கும் ஒரு கற்பனையான சொர்க்கத்திற்கும் இடம் உண்டு. நான் கவிதையையும் கதையையும் இப்படித்தான் பார்க்கிறேன். கதை என்பது ஒரு தூங்காதவனின் பகல். 24 மணி நேரமும் விழித்திருப்பவனின் பகல். கதையில் நான் கண் இமை வெட்டப்பட்ட பிரயாணி. சூரிய வெளிச்சத்தால் குருடானால்தான் அவனுக்கு உறக்கம்.
இருண்ட வழிகளில் செல்லும்போது ஒருவர் தனக்குத்தானே பாடிக் கொள்வது போலவோ அதிதீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் ஒரு குழந்தை வலியில் தனக்கு தானே முனங்கிக் கொண்டு தன்னைத்தானே தடவிக் கொள்வது போலவோதான் எழுதுகிறேன்.
கவிதை குறித்து நானெழுதிய கவிதை ஒன்று உண்டு:
நான் பெரும்பாலும்
ஒரு கவிதை எழுதுவதைத் தவிர்ப்பதற்கு
என்னெல்லாம் செய்யமுடியுமோ
அதையெல்லாம் செய்கிறேன்.
ஆனால் கவிஞர்களின் நெற்றியில்
ஒரு அழிக்க முடியாத டாட்டூ உள்ளது.
ஒரு குடிகாரன் எவ்வளவு முயன்றாலும்
குட்டைக்குள் விழுவதைத் தவிர்க்க முடியாதது போல்
ஒரு கவிஞன் கவிதைக்குள் விழுந்துவிடுகிறான்.
நேற்று சாலையில்
பேருந்துக்குக் காத்திருந்த ஒருவன் தலைமேல்
மரத்திலிருந்து உதிர்ந்து
ஒரு பூ விழுவதைப் பார்த்தேன்
அவன் அது என்ன விதமான ஆசீர்வாதம் என்று
பார்க்காமலே தட்டிவிட்டான்.
அவ்வாறு ஒரு பெண் செய்யும் வாய்ப்பு குறைவு.
ஒரு குழந்தை செய்யும் வாய்ப்பு மிகக்குறைவு.
ஒரு கவிஞனால்
அவ்வாறு செய்யவேமுடியாது.
அது அவனது விதி. ஒரு லைஃப் போட் போல. அது இல்லாவிடில் அவன் மூழ்கி விடுவான். உடைந்த கப்பலில் இருந்து விழுந்த ஒருவன் நீச்சல் தெரியாதபோது வாழ்வதற்காகப் பற்றிக்கொள்ளும் கட்டைபோல எனக்கு இந்தக் கவிதை, எழுத்து. இந்தக் கட்டை அசிங்கமாக இருக்கிறது என்று அவனால் உதறி விட முடியாது. எழுத்தாளர் எல்லோருக்கும் அப்படி ஒரு நிர்ப்பந்தம் உண்டு. அவனால் ஒருபோதும் எழுத்தை உதற முடியாது. எப்படி ஒரு வரலாற்று எழுத்தாளரால் அநீதியை எழுதாமல் இருக்க முடியாதோ அதுபோல ஒரு கவிஞனால் துயரினை எழுதாமல் இருக்க முடியாது. எல்லா துயரங்களுமே யாரோ யாருக்கோ இழைக்கின்ற அநீதிதான். துயர் எப்போதும் என்னோடு இருக்கிறது. அதைத்தான் எழுதுகிறேன். ஒரு படைப்பாளி தன்னோடு எது இருக்கிறதோ அதைத்தான் எப்போதும் எழுதுவான். ஒரு புனைகதை ஆசிரியரால் தன்னிலிருந்து விலகி இருந்து வேறு ஒன்று எழுத முடியும். ஒரு எழுத்தாளன் தன் திறமையால் தனக்கு நேராத ஒன்றை உணர்ச்சியோடு எழுத முடியும் என்றால் அது அவனது திறமைதான். என்னைப் பொறுத்தவரை அதுதான் வணிக எழுத்து. சுயம் இல்லாத எந்த எழுத்தும் வணிக எழுத்துதான்.
ஒரு கவிஞன் ஏன் மற்ற எந்தப் படைப்பாளியிடமிருந்தும் வேறுபடுகிறான்?
ஜோசப் கேம்பலினின் ஒரு புத்தகம் உண்டு. The heroe’s journey. அதில் அவர் ஒரு கருத்தை முன்வைத்தார். எல்லா மனிதர்களின் வாழ்க்கையையும் ஒரு காவியம் போல அல்லது ஒரு திரைக்கதைபோல நாம் பார்க்க முடியும். அவ்வாறு பார்க்க முடிந்தால் நாம் அவற்றில் சில பொதுவான கூறுகளை அடையாளம் கண்டுகொள்ளலாம். ஒரு மனிதனை அவன் வாழ்க்கையின் நாயகன் என்று எடுத்துக் கொண்டால் அவன் ஏதோ ஒரு இக்கட்டின் காரணமாகத்தான் பிறந்த இடத்தை விட்டு வெளியேறி புற உலகுக்குள் செல்கிறான். அங்கே அவன் பல்வேறு விதமான பிரச்சினைகளை, மனிதர்களை சந்திக்கிறான். தேவதைகளை, பிசாசுகளை, சூனியக்காரிகளை, மந்திரவாதிகளை, நண்பர்களை, எதிரிகளை, ஆசான்களை, போலி ஆசான்களை இவர்களை எல்லாம் சந்திக்கிறான். இது அவனது தனிப்பட்ட தேடல் ஆகும். இந்தப் பயணத்தில் அவன் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் ஒரு தருணம் உண்டு. அதிலிருந்து மீண்டு அவன் தேடிப்போன ஒன்றை அது அன்பாக இருக்கலாம், வாழ்க்கையின் அர்த்தமாக இருக்கலாம், சுயமரியாதையாக இருக்கலாம், சுய அடையாளமாக இருக்கலாம். அதை அடைந்து மீண்டும் தன்னுடைய ஊருக்குத் திரும்புகிறானா என்பதுதான் பெரும்பாலான நபர்களின் வாழ்க்கைக் கதையாக இருக்கிறது. இது அவரது தியரி.
நீங்கள் பல நாவல்களை, காவியங்களை, வெற்றி பெற்ற பல திரைப்படங்களை இந்தப் பார்வை கொண்டு பார்த்தால் இப்படி ஒரு வரைபடம் எல்லார் வாழ்க்கையிலும் இருப்பதைக் கண்டு கொள்ளலாம்.
கவிஞர்களின் வாழ்வு குறித்த வரைபடம் முற்றிலும் வேறு விதமானது. ஒரு நகரத்தைப் பற்றி எல்லோரும் ஒப்புக்கொள்கிற ஒரு மேப் இருக்கும். ஆனால் கவிஞனின் மேப் வேறு விதமாக இருக்கும். கவிதை அறியாதவர்கள் கவிஞனது வரைபடத்தைப் பயன்படுத்த தொடங்கும்போது பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகிறார்கள். அவர்களை அது எங்கும் இட்டுச் செல்வதில்லை அல்லது தவறான இடங்களுக்கு இட்டுச் செல்கிறது என்று புகார் செய்கிறார்கள். அவர்கள் சொல்வதைத் தவறு என்று சொல்ல முடியாது. நீங்கள் கவிஞனின் மேப்பை பயன்படுத்த வேண்டுமானால் அந்த மேப்பிற்குள் நீங்கள் சென்று விட வேண்டும். வெளியில் இருந்து கொண்டு அந்த மேப்பை நீங்கள் பயன்படுத்த முடியாது.
உங்கள் கவிதைகளின் வரைபடத்தை சற்றே விளக்க முடியுமா?
கவிஞன் என்பவன் தன் குழியைத்தானே தோண்டிக் கொள்பவன் அல்லது தோண்ட வைக்கப்படுகிறவன். எனவே அவனது கவிதைகள் சீற்றமாகத்தான் இருக்கும். புனைகதை எழுதும்போது இதிலிருந்து சற்றே விலகிப் போகலாம். கதைகளும் நாவல்களும் புறவயமானவை. அதில் ஒரு பரந்துபட்ட தன்மை உண்டு. நான் இவ்வாறு சொல்வதில் என்னமோ கவிதைகள் விடலைத்தனமானதாகவும் அதன் முதிர்ந்த நிலைதான் சிறுகதையும் நாவலும் என்பதும் போல் இருக்கிறது. நான் அப்படிச் சொல்ல வரவில்லை.
ஒரு கவிஞன் சீக்கிரமே செத்துப் போவான். ஆனால் அவன் கவிதைகள் செத்துப் போகாது. ஒரு கவிஞன் மிக அந்தரங்கமாக உணர்ந்த ஒன்றை மட்டுமே சொல்கிறான்.
கவிதையைக் குறித்துப் பேசுவது எப்போதும் எனக்கு ஒரு தயக்கத்தை அளித்திருக்கிறது. நான் இந்த உடலுடன் இவ்வளவு காலம் வாழ்ந்திருக்கிறேன். ஆனாலும் இந்த உடலைப் பற்றி நான் முற்றிலும் சரியான அறிவைக் கொண்டிருக்கிறேன் என்று சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. என்னை விட என் மருத்துவர் என் உடலைப் பற்றிக் கூடுதலாக சில விஷயங்களைத் தெரிந்து இருக்கிறார். ஆனால் அவ்வாறு அவர் தெரிந்து கொண்டிருப்பதால் அது அவர் உடல் அல்ல. நான் எழுதும் கவிதைகளைப் பற்றிய என்னுடைய புரிதல் இந்த அளவில்தான் இருக்கிறது. ஒரு கவிஞன் தன்னுடைய கவிதையைப் பற்றிக் கொண்டிருக்கிற அறிவைவிட கவிதை கவிஞன் பற்றி மேலும் அதிகளவான அறிவைக் கொண்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.அது அவனது பிளட் டெஸ்ட் மட்டுமல்ல. இது ஒரு பழைய கருத்துதான். அரிஸ்டாட்டில் சொன்னது. கவிதை ஒரு வெறியாட்டு. அது எங்கிருந்தோ வந்து இந்த உடலை, இந்த மனதை ஆட்கொண்டுவிட்டுச் சென்று விடுகிறது. ஆனால் அதற்கு ஒரு சரியான உடல் வேண்டும் மனம் வேண்டும். ஞாபக சேகரம் வேண்டும். மொழிக் கிடங்கு வேண்டும்.உணர்வு தூண்டுதல் வேண்டும். இவையெல்லாம் சரியான சேர்க்கையில் நிகழும் பொழுது அது ஒரு வேதிவினை போல் தானே நிகழ்கிறது. கவிதை ஒரு மனிதனின் உச்சபட்ச சாத்தியத்தை உணர்த்துவது.இது வில்லியம் ஃபாக்னர் சொல்வது. இரண்டு கூற்றிலுமே உண்மை உள்ளது.
உங்கள் கவிதையின் வரைபடத்தைப் பின்பற்றி எல்லோராலும் பாதையைக் கண்டடைய முடியுமா?
நான் சுள்ளிக்காடு பாலச்சந்திரனின் ஒரு பேட்டியைப் பார்த்தேன். அதில் நான் எல்லாருக்குமான கவி இல்லை என்று சொல்கிறார். எல்லாருக்குமான கவியாக நான் இருக்கக் கூடாது என்பதில் நான் தெளிவாக இருந்தேன் என்றும் அவர் சொல்கிறார். மேலும் அவர் சொல்வது, நான் கவிதையை மேம்படுத்தவோ அல்லது மொழியை மேம்படுத்தவோ கவிதை எழுதவில்லை என்று சொல்கிறார். எனக்கு இதில் பரிபூரண உடன்பாடு உண்டு. நான் எனது உணர்வுகளை வெளிப்படுத்த கவிதை எழுதுகிறேன். அதை வெளிப்படுத்த வேறு வழி இருந்தால் அதை நான் செய்திருப்பேன். எனக்கு கவிதையைத் தவிர என் உணர்வுகளை வெளிப்படுத்த வேறு வழி தெரியவில்லை. வேறு உபாயம் என்னிடம் இல்லை. நான் இந்த விஷயத்தில் மிகவும் சுயநலம் மிகுந்தவனாகவே இருக்கிறேன். என்னால் தமிழ்க் கவிதைக்கோ தமிழ் இலக்கியத்திற்கோ எந்தப் பயனும் இல்லை என்றால் எனக்கு அது பற்றி எந்தக் கவலையும் இல்லை. காலம்தான் மிகுந்த துக்ககரமான விஷயம் என்று ஜே. கிருஷ்ணமூர்த்தியின் ஒரு கூற்று உண்டு. என் காலத்தைக் கவிதைகள் மூலம் கழிக்கின்றேன். கவிதைகள் மூலம் கடக்கின்றேன். அது பிறருக்குத் தன் அனுபவம் ஆகாததும் ஆவதும் என் பிரச்சனை அல்ல.
ஒரு எழுத்தாளனுக்கு ஒருமுறை தனது சுயத்தை இழப்பது போதுமானதாக இருக்கிறது. ஆனால் ஒரு கவிஞனுக்குப் பல்வேறு முறை தனது சுயத்தை அழித்துக் கொள்ள நேர்கிறது. அப்படித்தானா?
ஆமாம். ஜோசப் கேம்பல் தியரி ஒன்று பற்றி சொன்னேன் அல்லவா. அவர் அதில் சொல்வதுபடி எல்லா நாயகர்களுக்கும் மொத்தத்தையும் இழக்கும் ஒரு இருண்டநிலை வரும். பிறகு அதிலிருந்து மீண்டு எழுவார்கள். நமது வாழ்க்கையும் பெரும்பாலும் நம் அடையாளத்தை நிலை நிறுத்திக் கொள்ளவும் எதனிடமோ தொடர்ந்து போராடி வெற்றி பெறவும் நம்மை நிர்பந்திக்கிறது. இவ்வாறு போராடி மீண்டு வந்தவர்களின் கதைதான் தெரியும். இந்தப் போராட்டத்தில் தோற்றவர்கள் அனாதைகளாக கல்லறைகளில் அடைந்து கொண்டவர்கள். அவர்களது வலியை மறக்கத்தான் நமது மனம் விரும்புகிறது. இந்த உலகம் விரும்புகிறது. கொஞ்சம் வரலாறை உற்றுப் பார்த்தால் சமீபத்திய முள்ளிவாய்க்கால், இஸ்ரேல் போர் நடக்கும்போதுகூட நாம் அனைத்தையும் மறந்துதானே வாழ்கிறோம். வரலாறு வலியை மறக்கத்தான் விரும்புகிறது. புறவுலகு என்று இல்லை. நாமும் நமது வலிகளை மறக்கத்தான் விரும்புகிறோம். இன்னொருவரின் துயரையும் அதேபோல மறக்கிறோம். கவிஞனுடைய வேலை இந்த வலியை நினைவூட்டுவது. வலி என்பது அநீதி. இந்த அநீதி யாரும் மறக்கக்கூடாது. பார்ட் என்பவன் பழங்காலத்தில் அரசர்களின் வெற்றிகளை பாடுபவன். கவிஞன் என்பவன் சாமானியர்களின் வலிகளைப் பாடுபவன். காவியங்களில் கூட அதிநாயகர்கள் இறுதியில் தோல்வியைத்தான் தழுவுகிறார்கள். அவர்கள் அடைந்திருப்பது பெரிய அதிருப்தியைத்தான். நமது வாழ்வில் நாம் கதாபாத்திரங்கள். ஆனால் நாயகர்களாக இருக்க நிர்ப்பந்திக்கப்படுபவர்கள். என் வலியின் மூலமாகப் பிறரது வலியை நினைவூட்டுவது நீதி என்று நினைக்கிறேன். சமூகத்தில் ஒரு கவிஞனுக்கு அல்லது கலைஞனுக்கு இருக்க வேண்டிய முக்கியமான பண்பாகவும் இதைத்தான் கருதுகிறேன்.
தங்கள் சொந்த ஊரை விட்டு ஏதோ ஒரு துயரின் காரணமாகவோ அவமானத்தின் காரணமாக வெளியே போன எல்லாரும் வெற்றியோடு திரும்பி வந்து விடுவதில்லை.
நான் என்னுடைய கதைகளில் இப்படித் தூர வழிகளில் தொலைந்து போனவர்களைப் பற்றி தான் அதிகம் எழுதுகிறேன். இவர்கள் எங்கு புதைந்து போனார்கள் என்றுகூட தெரியாத அளவுக்கு உலகத்தின் மறதியில் புதைந்து போனவர்கள்.
நீங்கள் கவிதையைத் தேடிப்போகும்போதெல்லாம் அது உங்களை தவறாமல் சந்திக்கிறதா?
கவிதையைத் தேடிப்போவது பற்றி எனக்கு சில கருத்துக்கள் உண்டு. கவிதையைத் தேடிப் போகும்போது எனக்குக் கவிதைகள் கிடைத்ததே இல்லை. அவசரமாக அலுவலகத்திற்கு சென்றுகொண்டிருக்கும்பொழுது, நெருங்கிய ஒருவரின் இறப்பிற்குச் சென்று கொண்டிருக்கும்போது, ஒரு காதலை முறித்துக்கொண்டு வீடு திரும்பி கொண்டிருக்கும்போது, மருத்துவமனையில் நோய் அறிக்கைக்காக காத்துக்கொண்டிருக்கும்பொழுது இது மாதிரி நெருக்கடியான சமயங்களில்தான் எனக்கு கவிதை தோன்றி இருக்கிறது. ஒருவர் எனக்கு மரண தண்டனை விதித்துக் கொண்டிருக்கும்போது எனக்குக் கவிதை தோன்றுகிறது. பல நேரங்களில் அது ஒரு கவனச் சிதறலாகவே இருக்கிறது. கவனச் சிதறல் மூலமாகவே வருகிறது. பல நேரங்களில் நான் அதை அவசரமாக்க் கீழே இறக்கி வைத்து விட்டு வேறு எதையோ செய்ய வேண்டி இருக்கிறது. கவிதைக்கான சூழல் என்பது எனக்கு இப்படித்தான். முற்றிலும் கவிதைக்கு எதிரான ஒரு சூழலில் இருக்கும்போதுதான் என்னுடைய கவிதைகள் என்னை வந்து அடைகின்றன. அதே சமயம் கவிதைக்கான ஒரு நல்லதொரு சூழல் அமைய வேண்டும் என்று நான் ஏங்கி இருக்கிறேன். பெரும்பாலும் வாய்த்ததில்லை. எப்போதாவது வாய்க்கும். அப்போதெல்லாம் நான் உறங்கிதான் இருக்கிறேன். ஒரு கவிதை எழுதுவதை தவிர்க்க நான் என்னெல்லாமோ செய்கிறேன் என்று தொடங்குகிற கவிதையில் நான் இதைத்தான் சொல்லி இருக்கிறேன். தவிர்க்க முடியாத மூர்க்கத்துடன்தான் கவிதைகள் ஒரு கவிஞனை அணுகுகின்றன. அதன் அணுகுமுறையில் ஒரு ஜனநாயகம் இருக்காது. கவிஞன் அதை எழுதியாக வேண்டும். இல்லாவிட்டால் இறந்து விட வேண்டும்.
பல்வேறு இடங்களில் உங்களது இசை ரசனையைப் பகிர்ந்து வந்துள்ளீர்கள். இசைக்கும் கவிதைக்குமான ஒற்றுமைகளை விளக்க முடியுமா?
கலைகளில் பூரண கலையாகச் சொல்லப்படுவது இசைதான். இவ்வாறு சொன்னவர் புகழ்பெற்ற கலை இலக்கிய விமர்சகரான Walter pater.அதுதான் ஒரே நேரத்தில் உடலுக்கும் மூளைக்கும் புலன்களுக்கும் உணர்வுகளைக் கடத்துகிறது.. இலக்கியத்தில் இசைக்குப் பக்கத்தில் இருப்பது கவிதைதான் என நினைக்கிறேன். நரம்பு ஊசிபோல கவிதை இருக்க வேண்டும். எந்தத் தடையும் இன்றி நேரடியாக உணர்வுகளைச் சென்றடைய வேண்டும். எனக்கு இசைக்க வரவில்லை. எனக்கு இன்னொரு தேர்வு வழங்கப்படுமானால் நான் கவிஞனாய் இருப்பதை விட இசைக்கலைஞனாக இருக்கவே விரும்புவேன்.
உங்கள் கவிதைகளிலும் கதைகளிலும் விவிலியப் படிமங்களும் வரிகளும் அடிக்கடி வருகின்றன. உங்களது கவிதைத் தொகுப்பு ஒன்றினைக்கூட விவிலியத்திற்கு சமர்ப்பணம் செய்திருந்தீர்கள். உங்களுக்கு விவிலியம் என்னவாக இருக்கிறது?
நான் நான் சிறுவயதில் படித்ததெல்லாம் கிறிஸ்தவ பள்ளியில் தான். விவிலியத்தை முன்பிருந்து பின்பாக, பின்னிலிருந்து முன்பாக பலமுறை வாசித்திருக்கிறேன்.
விவிலியத்தில் ஒரு காட்சி வருகிறது. ஆபிரகாம் நீண்ட நாள் தவமிருந்து வேண்டி பெற்ற மகனை கடவுள் ஒரு நாள் திடீரென்று தனக்குப் பலியிடச் சொல்கிறார். ஆபிரகாம் மறுக்கவில்லை. அவர் தனது மகன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு மலை மேல் பலி கொடுக்கச் செல்கிறான். அவனை பலிபீடத்தில் வைத்து கூரிய வாளால் வெட்டும் கடைசிக் கணத்தில் கடவுள் தோன்றி பலியை நிறுத்தி விடுகிறார். இந்த சம்பவம் பற்றி பல்வேறு வழிகளில் விவாதிக்கப்பட்டு இருக்கின்றது. தத்துவவாதி காண்ட் இவ்வாறு பலியிடச் சொல்லும் கடவுள் கடவுள் போலவே தோன்றினாலும் கடவுள் அல்ல என்கிற தெளிவு ஒருவருக்கு இருக்க வேண்டும் என்கிறார். ஆனால் கிர்க்காடு அதுதான் ஆபிரகாமின் விசுவாசத்திற்கான உரைகல் என்று சொல்கிறார். ஆபிரகாமுக்கு ஏன் தன் மகனை பலியிடச் சொன்னது கடவுள் இல்லை ஒரு தீய சக்தி என்ற சந்தேகம் எழவில்லை? ஏனெனில் அவன் உள்ளூர அறிந்திருந்தான். கடவுள் எப்படியாவது கடைசி நிமிடத்திற்குள் காப்பாற்றி விடுவார் என்று என்று சொல்கிறார். இங்கே அவனுக்கு நிகழ்ந்தது ஒரு தாவல். தர்க்கத்திலிருந்து நம்பிக்கைக்கான ஒரு தாவல். இந்தத் தாவல் அவரிடம் நிகழ்கிறதா என்பதுதான் கடவுள் அவனுக்கு வைத்த பரீட்சை. கவிஞன் ஒவ்வொரு கவிதை எழுதும் போதும் இந்தப் பரீட்சைக்கு தன்னை ஒப்பு கொடுக்கிறான். இந்த தாவலை நிகழ்த்தாதவன் கவிஞன் இல்லை. இந்தத் தாவலை நிகழ்த்த முடியாதவன் கவிஞன் இல்லை. அதே சமயம் அவனால் இந்த தாவலை தர்க்கபூர்வமாக முற்றிலும் விளக்கிக் கொண்டிருக்கவும் முடியாது.
கவிதை, புனைகதை இரண்டிலும் செயல்படுகிறீர்கள். இந்த இரண்டின் அடிப்படைக் கட்டமைப்பும் முற்றிலும் வேறுவேறானவை. மொழி, உணர்வுத்தளம் இவை இரண்டும் சார்ந்து நீங்கள் உங்களை எந்தெந்த விதங்களில் இடம்மாற்றிக் கொள்கிறீர்கள்?
எனக்குக் கவிதைக்கான அங்கீகாரங்கள்தான் நிறைய கிடைத்துள்ளன. நான் ஆசைப்பட்டது ஒரு புனைகதை ஆசிரியராகத்தான். ஒரு புனை கதை என்பது ஒரு உலகத்தை உருவாக்குவது. கவிதை என்பது மறைந்திருக்கும் உலகத்தை வெளிப்படுத்துவது.
எழுதுவது என்பது எனக்கு மாயாஜாலம்தான். கதைகளில் நான் மாயாஜாலத்தை வெளிப்படுத்துகிறேன். கவிதையில் நான் மாயாஜாலத்தை நிகழ்த்துகிறேன்.
கதாபாத்திரங்களின் தலைகீழ் தன்மைபோல உங்களது கூற்றும் தலைகீழாக உள்ளது. உங்களது கதைகளில் நீங்கள் சொன்னதுபோல மாயாஜாலம் வெளிப்படவில்லை. உங்கள் கதைகளில் உருவாக்கிய கனவுகளை விட உங்கள் கவிதைகளில் கனவுகளுக்கு நிறைய இடம் இருப்பதாகத் தோன்றுகிறதே?
என்னுடைய கதைகளில் நேரிடைத் தன்மையும் எதார்த்த வாதமும் இருப்பதாக நான் உணர்ந்ததால்தான் நான் குறுங்கதைகள் எழுதத் தொடங்கினேன். எனது குறுங்கதைகளில் நிறைய கனவுகளுக்கு இடம் என்று நினைக்கிறேன். மீட்பு போன்ற கதைகளின் முடிவுகள்கூட எதார்த்தமானதல்ல, கனவுலகத்தைச் சார்ந்ததுதான். புதுமைப்பித்தனின் காஞ்சனை, கபாடபுரம் கதைகள்போல எனது கதைகளின் கனவுகளும் எதார்த்தத்தை விட துயரமானவையாக இருக்கின்றன. சுருக்கமாக சொல்வதென்றால் எனது கதைகளின் கனவுகள் டார்க் மேஜிக் வகையைச் சார்த்தவை.
ஒரு படைப்பிற்கான முதல் தூண்டுதல் உருவாகிறபோதே அது கதை அல்லது கவிதை என்கிற வடிவத்தில்தான் தோற்றம் கொள்கிறதா அல்லது அதை எப்படிக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவு செய்கிறீர்களா?
கவிதைக்கும் கதைக்கும் என எனக்கு அந்தக் குழப்பம் நிகழ்ந்ததே இல்லை. ஆனால் குறுங்கதைகளுக்கும் கவிதைகளுக்கும் இடையே அந்த குழப்பங்கள் இருந்தன. என்னுடைய ஆரம்ப கட்டக் கவிதைகள் சிலவற்றைக் கதையாக எழுதி இருக்கலாமே என நண்பர்கள் கூறி இருக்கிறார்கள். கவிதையில் உணர்வு தூக்கலாக இருக்கிறது. கதையில் விவரனை தூக்கலாக இருக்கிறது. கவிதை எப்பொழுதுமே உணர்வின் வாகனம்தான். கவிதையை அறிவு சார்ந்து இடையில் உள்ளோர் ஒரு மூளைப் பலகாரமாக செய்துவிட்டார்கள். வடிவத்தைத் தாண்டி எதன் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்து அது கதை, கவிதை என நான் முடிவு செய்கிறேன்.
உளவியல், தத்துவம் ஆகியவை சார்ந்த வாசிப்புகள் உங்கள் இலக்கிய படைப்புகளை உருவாக்குவதில் எங்ஙனம் உதவியுள்ளன? உலக இலக்கியத்தின் எந்த வகைமாதிரிகள் உங்கள் படைப்பு மனதை ஆட்கொண்டிருக்கின்றன?
டால்ஸ்டாயின் ஆன்மீக நாவல்களையே நான் தத்துவம் மற்றும் உளவியல் என்ற வரிசையில்தான் வைப்பேன். டால்ஸ்டாயினுடையது தத்துவ நாவல் என்றால் தஸ்தாயெவ்ஸ்கியினுடையது உளவியல் நாவல் என்று கூறுவேன். இந்தக் கோணங்கள் இல்லாது நான் குறைவாகத்தான் வாசித்திருக்கிறேன். அறிவியல் புனைவுகள் வரலாற்றுப் புனைவுகளும் வாசித்திருக்கிறேன். ஆனால் என்னைப்பொறுத்தவரை உளவியலும் தத்துவமுமே தனி மனிதனுக்கு மிகவும் அவசியமானவை. இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று, தனி மனிதன் இந்த சமூகத்தை எதிர்கொள்ளக்கூடிய பதட்டம். ஆங்கிலத்தில் நிறைய நூல்கள் உள்ளன .Dummies Guide to computer, (Dummies Guide to psycology) என்று ஒன்றுமே தெரியாத ஒருவனுக்கு ஒரு துறையை அறிமுகம் செய்வது. என்னைப் பொறுத்தவரை இலக்கியம்தான் மனிதனுக்கு வாழ்வை அறிமுகம் செய்கிறது.
நான் மிகச் சிறிய வயதிலேயே கண்டு கொண்டேன். எனக்கு எப்படி வாழ்வது என்று சுத்தமாக தெரியவில்லை. எப்படி வாழ்வது என்று எனக்குச் சொல்லிக் கொடுப்பவர்களும் இல்லை. நான் எனது வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் பயத்துடனும் பதற்றத்துடனும்தான் வாழ்ந்திருக்கிறேன். ஆகவே இலக்கியத்தை தத்துவத்தை வரலாற்றை ஆன்மீகத்தை எல்லாவற்றையும் வாழ்வது எப்படி என்று சொல்லிக்கொடுக்கும் கையேடுகளாகத்தான் பார்த்தேன். பல கையேடுகள் மோசமாக எழுதப்பட்டவை. ஒருவரை மோசமாக வழிநடத்திச் சென்று விடக் கூடியவை. அப்படி அவை காட்டிய வழியில் வழி தவறி வெகுதூரம் சென்றதும் உண்டு. இருந்தாலும் அவற்றைத் தவிர என் கையில் வேறு வழிகாட்டிகள் இல்லை.
புத்தகங்கள் எனக்கு ஒரு காலகட்டத்தில் இந்தப் பூமியில் நான் அறியாத இடங்களுக்குச் செல்ல வரைபடங்கள் போல் இருந்தன. இப்போது இந்த பூமியில் இருந்து எப்படித் தப்பிப்பது என்பதற்கான வரைபடங்கள் போல் இருக்கின்றன.
கவிதை உரைநடையை நோக்கி பெரிதும் நகர்ந்ததுமட்டுமல்லாமல் கவிதைக்குள் கதைகளை, கதாப்பாத்திரங்களை, ஏன் ஒரு “நாவலின் மினியேச்சரைக்கூட கவிஞர்கள் எழுதுகிறார்கள். நீங்களும் எழுதுகிறீர்கள். சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்ப ராமாயணம் உள்ளிட்ட தமிழின் மாபெரும் கவிதைச் சாதனைகள் எல்லாமே கதை சொல்லும் காப்பிய மரபினால் ஆனவைதான். ஏன் உலகெங்கிலும்கூட மரபார்ந்த இலக்கியங்களில் இந்தப் போக்கு இருக்கின்றன. நாட்டார் மரபிலும் அது இருக்கின்றது. அப்படியானால் அவற்றோடு நவீன கவிதையில் சொல்லப்படும் கதைகளையும் சொல்லலாமா அல்லது இது முற்றிலும் வேறொன்றா?
காப்பியங்களில் கவிதையின் முக்கியமான வேலை சித்தரிப்புகள். கவிதைகளில் உணர்ச்சியே பிரதானம். சமயங்களில் கவிதைகளில் கதைகளின் உணர்ச்சிக்குத் துணை புரிகின்றன. நம் அகம் பேச்சை விட பாடலுக்கு மிக எளிதாக திறந்து கொள்கிறது.இவைதான் இவற்றுக்கான வித்தியாசம். இங்கு கதையில் வருகிற கவிதை என்பது உணர்ச்சியை சொல்ல ஒரு கருவிதான்.
ஒரு படைப்பாளியின் மொழியை அவனது படைப்பூக்கங்களைத் தீர்மானிப்பதில் உடல், உடல் சார்ந்த வாதைகள் ஆகியவற்றின் இடம் என்ன? உடல்களின் வாதைகள் வழியேதான் மனித மனதின் முகாந்திரங்கள் உருவாகின்றனவா? உடல்கள் அடையும் துயரங்கள் எவ்வாறு ஒருவனது தத்துவ நோக்கினையும், கலைநோக்கினையும் தீர்மானிக்கின்றது?
நிச்சயமாக அவற்றுக்கு இடம் உண்டு. புதுமைப்பித்தனின் காச நோயையும் கு. அழகிரி சாமியின் காச நோயையும் டி.எச். லாரன்சின் காச நோயையும் மாப்பசானின் சிபிலிசையும் அவர்களது புனைவுகளில் இருந்து பிரித்தெடுக்க முடியுமா? ஒரு கலைஞனின் ஒரே விதமான வாதைதான் அவனது உடல் நோயாகவும் அவனது படைப்பாகவும் வெளிப்படுகின்றது. ஒரு கவிஞனின் உடல் அடையும் மகிழ்ச்சியும் துக்கமும்தான் அவனது கவிதைகளிலும் வெளிப்படுகிறது. ஒரு கதாசிரியன்கூட தன் உடலை விலக்கி எழுத முடியும். ஒரு கவிஞனால் அவ்வாறு எழுதவே முடியாது. அது தவறு இல்லை. அவனது போதாமைகளை, அவனது துயரங்களை அவன் வெளிப்படுத்தத்தான் வேண்டும். இதை ஏன் வெளிப்படுத்தவேண்டும் என்று கேட்பவன் முட்டாள். அவன் வாழ்வைப் பற்றி அறியாதவன். இதை வெளிப்படுத்துவதால் படைப்பு குறைப்பட்டு விடுகிறது என்று சொல்பவன் கலையைப் பற்றியும் வாழ்வைப் பற்றியும் அறியாதவன் என்று தான் சொல்வேன்.
நோய்களிலே உளவியல் நோய்கள், சமூகத்தினால் ஏற்படும் நோய்கள் என பல உண்டு. கலாச்சார மாற்றத்தினால்தான் இப்பொழுது பெரும்பாலானோருக்கு சர்க்கரை வியாதி வருகிறது,ரத்தக் கொதிப்பு வருகிறது. எந்த ஒரு நோயின் தாக்கத்திற்கும் சமூகத்தின் பங்கு உண்டு. ஒருவன் உடல் வாதையின்றி இருக்க வேண்டும் என்பது லட்சியமும் அல்ல. உடல் வாதையோடு இருப்பது தவறும் அல்ல.
உங்கள் கதைகளில் இடையறாத ஒரு கசப்பும், வாழ்வின் வீழ்ச்சியும் பெரும் நகைப்பாக வெளிப்படுகின்றது. ஆன்மீகம், தத்துவம், இலக்கியம் என எல்லாவற்றின்மீதும் ஒருவர் அடையக்கூடிய நம்பிக்கை இழப்பின் அடையாளமாக இதைக்கொள்ளலாமா?
நான் எழுதும் எந்தத் துயரமும் அரூபமான துயரம் அல்ல. என் வாழ்வின் ஒரு நாள் என்பது ஒன்று நான் யாருக்காவது சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறேன் அல்லது யாராலோ சிகிச்சை அளிக்கப்படுகிறவனாக இருக்கிறேன். சுருக்கமாக நான் யாரையோ பார்த்துக் கொள்கிறேன் அல்லது யாராவது என்னைப் பார்த்துக் கொள்கிறார்கள். அவ்வளவுதான். என்னுடைய துயருக்கு தூலமான ஒரு இடம் இருக்கிறது. உடலில் எந்த பாகத்தில் வலிக்கிறது என்று துல்லியமாக என்னால் சொல்ல முடியும். எழுதி எழுதிப் படித்துப் படித்து நான் அடைந்தது இந்த வேதனையைக் கூர்மையாக சொல்லும் வித்தையைத்தான்.
நம்பிக்கையின்மை குறித்து இன்னும் விளக்கி கூற முடியுமா?
நம்பிக்கையின்மை முதன் முதலில் நான்தான் எழுதினேனா? சித்தர் பாடல்கள் தொடங்கி புத்தரின் தத்துவம் தொடங்கி இயேசுநாதர் வரை ஏன் ராமாயணத்தின் முடிவு வரை அனைத்துமே நம்பிக்கையின்மையின் கையறு நிலையின் வெளிப்பாடுகள் தான். அனைவருமே துக்கத்தை மாற்ற முடியாது என்றுதான் கூறி சென்று இருக்கிறார்கள். சிந்தனைவாதிகளில் கார்ல் மார்க்ஸ் ஏன் முக்கியம் என்றால் அவர்தான் முதன்முதலாக துக்கத்தை மாற்றி அமைக்க முடியும் எனக் கூறுகிறார். என்னைப் பொறுத்தவரை சிறந்த நம்பிக்கைவாதி கார்ல் மார்க்ஸ்தான். ஆரம்பத்திலே எனக்கு கார்ல் மார்க்ஸ் அறிமுகமாகி இருந்தால் ஒருவேளை நான் நம்பிக்கையின் கவிதைகளை எழுதி இருக்கக்கூடும். ஆனாலுமே கம்யூனிசத்தின் வீழ்ச்சியைப் பார்க்கும்போது எப்படியும் நான் நம்பிக்கையின்மைக்குத் திரும்பி இருப்பேன் எனத் தோன்றுகிறது.
யாரையாவது பார்த்துக் கொள்வது அல்லது யாராலாவது பார்த்துக் கொள்ளப்படுவது என்று கூறினீர்கள். கடந்த காலங்களை விட சமகாலத்தில் யாராவது நம்மை பார்த்துக் கொள்ள மாட்டார்களா என்பது பலரின் அந்தரங்க ஆசையாக இருக்கிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால் பொறுப்பு என்பது நமக்கு அழுத்தமாக மாறி இருக்கிறதா?
வேறு எந்த காலகட்டத்தை விடவும் பிறருக்காகவும் நமக்காகவும் பொறுப்பேற்றுக் கொள்வது இந்தக் காலகட்டத்தில்தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சமூகப் பொறுப்பு, சூழல் பொறுப்பு, கலாச்சாரப் பொறுப்பு ,வரலாற்றுப் பொறுப்பு என எந்தக் காலகட்டத்தை விடவும் இப்பொழுதுதான் நமக்கு பொறுப்புகள் அதிகமாக இருக்கின்றன. இதற்கு முன் இருந்தவர்கள் பொறுப்பில்லாமல் இருந்த அனைத்திற்கும் சேர்ந்து நாம் பொறுப்பேற்க வேண்டி இருக்கிறது.
எனில் வேறு வழியின்றி நாம் பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறோமா? வாய்ப்பு இருந்தால் நாம் தப்பிச் செல்வோம்தானா?
புத்தரே ஒரு தப்பித்தல்வாதிதான். புத்தர் அவர் வாழ்வில் ஒரு மரணத்தைத்தான் பார்த்தார். நாம் அன்றாடம் எத்தனையோ நபர்களின் மரணத்தைப் பார்க்கிறோம். அந்தத் துயரையும் கடந்து வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம். புத்தரை விட நாம் ஒன்றும் தப்பித்தல்வாதி கிடையாது. நாம் வாழ்வோடு போராடிக் கொண்டிருக்கிறோம். நோயை,முதுமையை,மரணத்தை வெல்ல தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறோம்.
உடல்கள் வழியாகவே உங்கள் கதைகளில் உதாரணமாக தீட்டு, நாகப்படம் போன்றவற்றில் உறவு சார்ந்த மீறல்கள், குற்ற உணர்வுகள் ஒரு சதுரங்கத்தின் காய்கள்போல செயல்படுகின்றன. உடல்தான் மனிதர்களைத் தீர்மானிக்கும் அடித்தளமா?
நான் ஒரு கவிதை எழுதி இருப்பேன். இந்த உடல் யார் யாருக்கு சொந்தமாக இருக்கிறது என. தீட்டு கதையில் வரும் அந்தப் பெண்ணின் உடல் அவளுக்கு சொந்தமானதல்ல. ஆனால் அந்த உடலை வைத்து தான் அவள் பிழைக்க வேண்டும். நாகப் படம் கதை கிரேக்க சிந்தனையின் சாயலில் எழுதப்பட்டது. நம்மூரில் நிர்வாணம் ஆபாசமான ஒன்றாக இன்று கருதப்படும் சூழலில் கிரேக்கத்தில் நடுவீதியில் நிர்வாண சிலைகளை வைப்பார்கள். நம் உடலைத் துன்பத்திற்கு பழக்குவதுபோல இன்பத்திற்கு நாம் பழக்குவதே இல்லை. துன்பம் மிகுந்த உடல்களின் பார்வையாளராகவே நாம் இருக்க விரும்புகிறோம். நாம் இருக்கிறோம் நான் இருக்கிறேன். நாம் இந்த துயர் நோக்கிக் கூரும் மனநிலையை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன்.அதைத்தான் அந்தக் கதையில் சொல்லி இருப்பேன்.
உங்களது கதைகளில் இலக்கிய குறிப்புகள்( Literary reference) நிறையவே வருகின்றன. ஒரு கதையை யோசிக்கும்போது இயல்பாக அப்படித்தான் தோன்றுகிறதா அல்லது வேறு ஏதேனும் காரணம் கருதி அவற்றைக் கதைகளில் வைக்கிறீர்களா?
எனது கதையில் வரும் நாவல்களும் சிறுகதைகளும் ஒரு கதாபாத்திரமாகவே வருகின்றன. என் கதைகளில் குறிப்பிடப்படும் நாவல்களை நீங்கள் வாசித்து இருந்தால் என் கதையில் அவை நிகழ்த்தும் மாயாஜாலங்கள் உங்களுக்குப் புரியும். நான் படித்த புத்தகங்களை நான் எழுதும் கதைகளுக்குள் வைப்பது எனக்கு விருப்பமான ஒன்றாகவே எப்போதும் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நான் படித்த புத்தகங்களைக் கூற வேண்டும் என்பதற்காகவே சில கதைகளை நான் எழுதியது உண்டு.
உங்கள் கவிதைகளில் வாழ்வின் அபூர்வ கணங்களும், நுட்பமான மலர்ச்சிகளும் சில சமயம் ஒரு நச்சுப்பல் தீண்டினாற்போன்ற அதிர்ச்சியின் கணங்களும்கூட இருக்கின்றன. ஆனால் உங்கள் கதைகள் எப்போதும் வாழ்வின் இருண்மையான பக்கங்களை நோக்கி செல்கின்றன. மனமுடையக்கூடியதாகவும், அச்சமூட்டக்கூடியதாகவும் இருக்கின்றன. அங்கு ஏன் ஒளி பொருந்திய கணங்கள் குறைவாக இருக்கின்றன. இக்கதைகள் வழியே நீங்கள் காட்ட விரும்புகிற உலகம் என்ன?
ஒளி,நம்பிக்கை இவையெல்லாம் எதிர்காலத்திற்குரியது. வாய்ப்பு இருந்தால் சொர்க்கத்திற்குப் போவேன் என்பது போல. நமது உயிரியல் இயல்பு எதிர்காலத்தை நம்பிக்கையோடு பார்க்கிறது. அதை இயன்ற அளவுக்கு தள்ளித் தள்ளிப் போடுகிறது. கடவுள் ஏன் சொர்க்கத்தில் நாம் பார்க்க முடியாத இடத்தில் இருக்கிறார் என்றால் இதனால்தான். இவ்வாறு சொல்கிறார் A C Grayling. சமகாலத்தில் புகழ்பெற்ற ஒரு தத்துவவாதி. உண்மையில் நம் கையில் இருப்பது நிகழ்காலம் மட்டும்தான். நிகழ்காலம் எப்படி இருக்கிறது? எனது கதைகளில் ஒளி இல்லாது இருப்பதற்கு அதுதான் காரணம். சென்னையில் ஒரு நாள் குற்றால சாரல் போல நாள் மாறும்போது புறவயச்சூழல்கள் அந்த ஒளியைத் தற்காலிகமாக கொண்டு வருகின்றன. அரிதாக தியானத்தில் சில நேரம் நான் தன்னிலையில் இருந்து விடுபடும்போதும் இசை கேட்கும்போதும் ஒளியின் தருணங்களை உணர்ந்து இருக்கிறேன். இவ்வாறு ஒளியை ஒளியின் சாயைகளை மட்டும் பார்க்கிறவனாக இருந்து விடவேண்டும் என்று எனக்கும் ஆசை உண்டு. ஆனால் அந்த ஒளி கடவுள்போல வானத்தின் ஆழங்களுக்குள் கண்ணுக்குத் தெரியாமல்தான் இருக்கிறது.
பொன் நகரம் என்னும் கதையில் புதுமைப்பித்தன் இவ்வாறு கதையை முடித்து இருப்பார். “இதாண்டா உங்க பொன் நகரம் ” என்று. நான் என் கதைகளில் காட்ட விரும்புவதும் அதைத்தான். இவ்வளவுதான் இந்த வாழ்க்கை இதற்கு ஏன் இவ்வளவு அடித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் நான் காட்ட விரும்புகிறேன். இந்த வாழ்க்கையில் கொஞ்சம் கருணையோடு இருக்கலாம். சொல்லப்போனால் என் கதைகளில் ஒளி இல்லாமல் இல்லை. அது இன்மையின் (Absence )மூலமாக ஒன்றை உணர வைப்பது. என் கதைகளில் ஒளி இல்லாவிட்டாலும் இப்பொழுது ஒளியைப் பற்றி கேட்டீர்கள் அல்லவா. அதுதான் அந்த எழுத்தின் பணி. ஒன்றின் இழப்பை உணர வைப்பது.
கடற்கொள்ளையர்கள்போல இருட்டிலே இருந்து இருந்து இருட்டிற்குப் பழகிக் கொள்வது என இதைக் கொள்ளலாமா?
அது உண்மைதான். இருட்டில் இருந்தால்தானே ஒளியை உருவாக்க முடியும். All is well with the world என்று தான் நம் ஒவ்வொருவரும் இந்த பூமியில் பிறந்து வருகிறோம். ஆனால் Nothing is well in this world என்று தெரியவரும்போது ஏற்படும் அதிர்ச்சியானது அதன் பிறகு புறவுலகில் அன்றாடம் தொடர்ந்து ஏற்படுகிறது. நான் மரணிக்கும் வரை எனது அதிர்ச்சிகள் மாறாது. என்னை அமைதிப்படுத்தும் அல்லது நிதானமாக்கும் சூழலே இன்றி அடுத்தடுத்த அதிர்ச்சிகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. அதைத்தான் கதைகளில் எழுதுகிறேன். வாசிப்பவர்களுக்கும் அதே அதிர்ச்சியைத்தான் கடத்துகிறேன்.
நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போராட்டங்கள் அல்லது மயக்கங்கள் உங்கள் கவிதை மற்றும் கதையின் கதாபாத்திரங்களில் எவ்வாறு பிரதிபலிக்கின்றன?
ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல விவிலியத்தில் கடவுள்-சாத்தான், நன்மை-தீமை ஆகியவை தெளிவாகப் பிரித்து வரையறுக்கப்பட்டு இருக்கின்றன. நம்முடைய ராமாயணமும் அதே போன்றதுதான். அதே நேரத்தில் மகாபாரதத்தில் தர்மத்தைப் பற்றி எப்போதும் பேசிய கிருஷ்ணன் அதர்மம் போன்று தோன்றக்கூடிய சில காரியங்களைச் செய்கிறான். அதர்மத்தின் பக்கம் இருக்கும் துரியோதனனும் கர்ணனும் சில அறச் செயல்களையும். செய்கிறார்கள். மகாபாரதம் காட்டும் இந்த Shades of grey தான் நம்முடைய நீண்ட வாழ்விலும் படர்கிறது. ஒரு வட்டத்தில் தீமையாக இருப்பது இன்னொரு வட்டத்தில் நன்மையாக இருக்கிறது.
நவீன வாழ்வு Shades of Grey ஆகத்தான் இருக்கிறது. நவீன இலக்கியம் அதைத்தான் பேசுகிறது. நன்மை-தீமையைப் பேச மத நூல்களும் காவியங்களும் போதும். நவீன இலக்கியங்களில் அறம் இல்லை, ஒழுக்கம் இல்லை என்று சொன்னபோது சுந்தர ராமசாமி இப்படிச் சொன்னார். “அப்படியல்ல நீங்கள் சொல்வது போல் எல்லாம் இந்த உலகம் இல்லையே. அதை சொல்வது தான் நவீன இலக்கியத்தின் வேலை” என்று.
சமீபத்தில் வாரணாசிக்கு சென்று வந்தீர்கள். அதன் பிறகு வாரணாசி குறித்து எழுதிய அத்தனை கவிதைகளுமே அவ்வளவு பிரமாதமாக இருந்தன. உங்களுக்கு வாரணாசி என்னவாக இருக்கிறது?
இந்த உலகத்தின் சிறிய மினியேச்சர்(Miniature) உருவம்தான் வாரணாசி. சிட்டி ஆஃப் லைஃப்(City of life) என்று கல்கத்தாவைக் கூறுவார்கள். சிட்டி ஆஃப் டார்க் லைஃப்( City of Dark life) வாரணாசி. எங்கு அதிகமான இருள் இருக்கிறதோ அங்குதான் அதிகமான தீபங்கள் தேவைப்படுகின்றன. போலவே எங்கு அதிகமாக தீபங்கள் இருக்கிறதோ அங்கு அதிகமாக இருள் இருக்கிறது என்பதும் குறிப்பால் உணர்த்தப்படுகிறது. வாரணாசியில் பிணத்தைக் கொண்டாடி மரியாதையோடு புதைப்பது, பிணத்தை தின்பது ,பிணத்தோடு புணர்வது அது எதையும் சட்டை செய்யாமல் தன் போக்கில் இருப்பது என வாழ்வில் அதிமேன்மைகளை, அதிகீழ்மைகளை ஒரே நாளில் அங்கு தரிசிக்கலாம். எல்லா நகரங்களும் வாழ்வில் உருவகங்கள்தான். ஆனால் வாரணாசி அதை நேரடியாகச் சொல்லித் தருகிறது என்று நினைக்கிறேன்.
ஆன்மா என்பதை நீங்கள் எவ்வாறு பௌதிகமாக நிறுவ விரும்புகிறீர்கள்?
தத்துவ ரீதியில் ஆன்மா என்பது தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கும் இருப்பு. நான் ஆன்மா இருக்கிறது என்ற நம்புகிறேன். அது ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டிருப்பது என்றும் நம்புகிறேன். நாம் அனைத்தையும் தொகுத்து ஒரே விஷயமாகப் பார்க்கப் பழகி விட்டோம். நமது ஆன்மா என்பது பலவிதமான சுயங்களின் கூட்டுத்தொகை.
உங்கள் கதைகளில் சற்றே கருணையோடு அல்லது சிறுசிறு உதவிகளைச் செய்யும் ஒரு கதாபாத்திரமாவது பெரும்பாலும் எல்லா கதைகளிலும் உண்டு. அக்கதாபாத்திரங்கள் அவ்வாறு உதவி செய்யும்போது அந்த கதாபாத்திரத்தைக் கட்டி பிடித்து முத்தம் தரத் தோன்றுகிறது என திரும்பத் திரும்ப எழுதியிருக்கிறீர்கள். அப்படி உங்களை உண்மையாக பாதித்த நபர் வாழ்க்கையில் உண்டா அல்லது அந்த வெளிப்பாடு எதனால்?
நான் கைவிடப்படுதலுக்கும் துரோகத்திற்கும் பழகி விட்டேன். இவற்றிற்கு மாறாக யாரேனும் சிறிது கருணையோடு வரும்போதுதான் நான் குழம்பிப் போகிறேன் பதட்டம் அடைகிறேன். எதிர்பாராத இடங்களில் நமக்குத் தீமை நிகழ்வது போல எதிர்பாராத இடங்களில் நன்மை நிகழும் போதும் நாம் அதிர்ச்சிதான் அடைகிறோம் இல்லையா?
இந்த உலகம் இப்படித்தான் என பயந்து இருக்கும்போது யாரேனும் ஒரு சிறு மிட்டாய் போல கருணையைத் தருகிறார்கள். நன்றாக கவனித்துப் பார்த்தால் நம்மிடம் பரிவு காட்டுகிறவர்கள் காட்டுபவர்கள் மிகப்பெரிய துயரில்தான் இருப்பார்கள். இந்த வாழ்க்கையில் துயரங்கள் எவ்வளவு பிறழ்வானதோ அதேபோல அந்த துயர நேரத்தில் நம் மீது காட்டப்படும் கருணையும் விசித்திரமானது. உலகத்தில் நம்மீது கருணை காட்டுபவர்கள் கடவுள் தன்மையை அடைகிறார்கள். அந்த நெகிழ்ச்சியில் அவரைக் கட்டிப்பிடித்துக் கொள்ளத்தானே தோன்றும்.
எல்லா கவிதைகளிலுமே உங்களை கடவுள் கைவிடுபவராக இருக்கிறார். ஆனாலும்கூட நீங்கள் ஏன் எந்தக் கவிதையிலும் கடவுளைக் கைவிடவில்லை?
இது தத்துவக் கேள்வி என்பதை விட உணர்வுபூர்வமான கேள்வியாக இருக்கிறது. ஒரு கணினி வல்லுனரின் கூற்று இருக்கிறது. இந்த உலகம் என்பது கடவுள் சரியாக வடிவமைக்காத ப்ரோக்ராம். ஆனால் அந்த ப்ரோக்ராமின் வழிதான் செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவ்வப்போது விபத்துக்கள் நிகழ்கின்றன. எனக்கு அப்படி ஒரு பார்வை உண்டு. என்னைப் பொறுத்தவரை கடவுள் என்பவர் ஏழு நாட்களில் உலகை உருவாக்க முயன்று தோற்றுப்போன ஒரு நபர். கடவுள் என்று இல்லை, அப்பா மகன் என்று எடுத்துக் கொடுத்தால் கூட, தன் பிள்ளையின் வாழ்வு மோசமாக சென்று கொண்டிருந்தாலும் பார்த்துக் கொண்டிருக்க முடியுமே தவிர அவரால் ஏதும் செய்ய இயலாது. ப்ரோகிராமிலேயே அப்பா இருக்கிறார். ஒன்று அப்பாவை கோபமாக எதிர்க்கலாம் அல்லது நேசிக்கலாம் எப்படிக் கைவிட முடியும். ஒரு அப்பாவால் குழந்தையைக் கைவிட முடியும் ஒரு குழந்தையால் அப்பாவைக் கைவிட முடியாது.
மரணம் குறித்தான உங்கள் பார்வைகள் கவிதையில் வேறொன்றாகவும் கதைகளில் வேறொன்றாகவும் இருக்கின்றன. அது ஏன்?
கதைகளில் மரணம் குறித்து உரையாடுகிறேன். கவிதைகளில் மரணத்தை உணர்வு பூர்வமாக அணுகுகிறேன்.
எல்லா மரணங்களுமே உயிர் இழப்புதான். எனினும் குழந்தையின் மரணம் ஏன் கவிஞனுக்கு எப்போதும் மிகுந்த தொந்தரவு ஊட்டக்கூடிய ஒன்றாக இருக்கிறது?
குழந்தை என்பது களங்கமின்மையின் உருவகம். அந்தக் களங்கமின்மையின் அழிவு தான் இந்த வாழ்வில் நம்பிக்கை இழப்புக்கு முதல் காரணம். அது ஒரு கவிஞனுக்கு எப்பொழுதும் அதிர்ச்சி ஊட்டக்கூடிய ஒன்றுதான். அது அதிர்ச்சி அளிக்கக்கூடாது என்றால் அவன் தத்துவவாதியாக இருக்க வேண்டும் அல்லது நடைமுறைவாதியாக இருக்க வேண்டும். இது இப்படித்தான் நிகழ்வு என மனதை வார்த்துக் கொள்ள வேண்டும். கவிஞன் எப்போதும் ஒரு நடைமுறைவாதியாகவோ தத்துவவாதியாகவோ மாற முடியாது. அப்படி இருப்பதால்தான் அவன் கவிதை எழுதுகிறான். ஒரு குழந்தையின் மரணத்திற்கு அதிர்ச்சி அடையாவிடில் அவன் கவிஞன் கிடையாது.