ஒன்றிய பாஜக அரசு  மூன்றாவது முறையாகப் பதவியேற்று, முதல் 100  நாட்களில் தங்கள் அரசுக்கு ஏற்பட்ட தோல்விகளை மறைப்பதற்கும் அண்டை நாடுகள் மற்றும்  சர்வதேச அரங்கில் ஏற்பட்ட பின்னடைவுகளை மடைமாற்றம் செய்வதற்கும் அறிவிக்கப்பட்டுள்ள  ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை குறித்த அறிக்கை அதன்  சாதக பாதகங்களைக் குறித்து சூடான விவாதங்களைப் கிளப்பி இருக்கிறது.   இந்தியா சுதந்திரம் அடைந்த உடன், அரசியல் அமைப்பு நிர்ணய சபையில் எந்த விதமான அரசியல் நிர்வாக முறை நம்முடைய நாட்டுக்கு ஏற்றதாக இருக்கும் என்று  விவாதித்ததில், அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள, சுயமாகச் சட்டம் இயற்றிக்கொள்ளும் அளவுக்கு அதிக அதிகாரம் உள்ள அதிபர் முறை நமக்குத் தேவையில்லை என்றும் இந்தியா பன்முகத்தன்மை உள்ள நாடு என்பதால் பிரிட்டனில் கடைப்பிடிக்கப்படும் நாடாளுமன்ற ஜனநாயக முறைதான் (வெஸ்ட்மின்ஸ்டர்) நமக்கு ஏற்றது என்று இறுதிசெய்யப்பட்டது. அந்த ஜனநாயக மாண்பின் அடிப்படையில்தான் 1952 லிருந்து தேர்தல்கள் நடைபெற்று வந்தன.ஆனால் அதற்கு நேர்மாறான ஓரே நாடு ஒரே தேர்தல் நடை முறை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை குறித்து முதன்முதலில் 1983-இல், தேர்தல் ஆணையமே ஒன்றிய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது. அதன் பிறகு, நீதி அரசர் B.P. ஜீவன் ரெட்டி அவர்கள் தலைமையிலான சட்ட கமிஷன் 1999-இல், ஒரே தேர்தல் நடைமுறையை மிக வலுவாக வலியுறுத்தி இருந்தது. ஏறத்தாழ 16 ஆண்டுகளுக்குப் பிறகு 2015-இல் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் E.M. சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் அமைந்த பாராளுமன்ற நிலைக்குழு, தேர்தல் செலவுகள் குறைப்பதற்கும், வளர்ச்சி பணிகள் பாதிப்படையக்கூடாததற்கும்,அதிகமான அரசு அலுவலர்கள் பயன்பாட்டைக் குறைப்பதற்கும் பரிந்துரை செய்தன. ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின் பேரில்   2018-இல், நீதியரசர் B.S. சவுகான் தலைமை‌யிலான சட்டக் கமிஷன் இத்திட்டத்தை வலியுறுத்தி அறிக்கையை சமர்ப்பித்தது.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை 1983 மற்றும் 1999-ஆம் ஆண்டுகளில் பரிந்துரைக்கப்பட்ட போதிலும், ஜனநாயகவாதிகளான அன்றைய பிரதமர்கள் முறையே, திருமதி. இந்திரா காந்தி மற்றும் திரு. வாஜ்பாய் அவர்கள் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சமீபத்திய சுதந்திர தின உரையில், 15.8.2023-அன்று பிரதமர். நரேந்திர மோடி இந்த நடைமுறை குறித்து குறிப்பிட்டு இருந்தார். அதைத் தொடர்ந்து, பாஜக பரிவாரங்களும் அதையே தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. அதன் விளைவாகத்தான் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் தலைமையில் 2.9.2023-அன்று அமைக்கப்பட்ட 10 பேர் கொண்ட உயர்மட்டக்குழு, ஏறத்தாழ 191 நாட்களாக சட்ட வல்லுனர்கள், தேர்தல் நிபுணர்கள், அரசியல் இயக்கங்கள் என பலதரப்பட்ட குழுக்களுடன் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டு பொதுமக்களின்  கருத்துருக்களையும் கேட்டறிந்து தங்கள் ஆய்வுகளின் முடிவாக 18,625 பக்கங்கள் கொண்ட அறிக்கையை 14.3.2024-அன்று ஜனாதிபதி மாண்புமிகு. திரௌபதி முர்மு அவர்களிடம் சமர்ப்பித்தது. இந்த 10 பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்ட உடனேயே திரு. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இந்தக் குழுவில் இருந்து ராஜினாமா செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கான காரணம் மர்மமானது.

இந்த ஒரே தேர்தல் நடைமுறை குறித்து, ஜனநாயகவாதிகள் பெரும் கவலை கொண்டுள்ளனர். ஏனெனில், இந்த முறையைக் கொணர்வதன் மூலம் டெல்லி நோக்கியே அரசியல் கவனம் குவியும். யார் பிரதமர் என்பதில்தான் குறியாக இருப்பார்கள். மெல்ல மெல்ல அதிபர் தேர்தலைப் போல மாறிப் போகலாம் என்று கவலை தெரிவிக்கின்றனர்.ஆனால் அதை எதிர்பார்த்துதான் பாஜக இத்திட்டத்தை நிறைவேற்ற பார்க்கிறது. ஒரே சமயத்தில் தேர்தல் நடக்கும்பொழுது, ‘ஒன்றியத்தில் யார் பிரதமராக வரவேண்டும்?’ என்பதைக் குறித்து பத்திரிகைகளும், ஊடகங்களும் தங்கள் விவாதங்களை முன்னெடுப்பார்கள். இதனால் மாநில உரிமைகள் மற்றும் மாநில தலைமை குறித்த விவாதங்கள் பின்னுக்கு தள்ளப்படும். மாநில உரிமைகள் ஒதுக்கித் தள்ளப்படும் நிலையில், உள்ளாட்சியின் வார்டு பிரச்சனைகள் கண்டு கொள்ளப்படாமல், உள்ளாட்சி அமைப்புகள் சிதைவுறும் சூழல் உருவாகும். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் IDFC என்ற அமைப்பு கடந்த கால தேர்தல்களை ஆய்வு செய்ததில், ஓரே நேரத்தில் இரண்டு தேர்தல்களையும் நடத்தினால் 77 சதவீத வாக்காளர்கள் இரண்டிலும் ஒரே கட்சிக்கு வாக்களிக்கிறார்கள். அதுவே 6 மாத இடைவெளியில் தேர்தல் நடந்தால் 62 சதவீதமாக குறைந்துள்ளது என்பதைத் தெளிவுபடுத்தி உள்ளனர்.எனவே ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது மக்களின் சிந்தனையை மடை மாற்றி நேர்மையற்ற தேர்தல் முடிவுகளைத் தந்துவிடும் அபாயம் உண்டு. இது மட்டுமல்லாமல் கூட்டாட்சித் தத்துவத்தை சிதைத்து விடும் அபாயமும் உண்டு. எவ்வாறெனில் அரசியலமைப்பு சட்டரீதியாக,  ஏழாவது அட்டவணையில் உள்ள மாநிலங்கள் பட்டியலில் மாநில சட்டப்பேரவை தேர்தல் அரசியல் வருகிறது. மாநில சட்டப்பேரவையை முன்கூட்டியே கலைக்கும் உரிமை மாநில அரசுக்கு உண்டு. அந்த உரிமையை இந்த திட்டம் மாநிலத்திடம் இருந்து பறித்து விடும். இது அரசியல் அமைப்பின் கட்டமைப்பையே சிதைத்து விடும்.  ஏற்கனவே 24.4.1973-இல், கேசவானந்த பாரதி வழக்கில்,  ‘அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை மாற்றும் எந்த சட்டத் திருத்தத்தையும் செய்யக்கூடாது’ என்று அறுதியிட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பதால், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது. இது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த மூத்த வழக்கறிஞரும் அரசியல் சாசன நிபுணருமான சஞ்சய் ஹெக்டே,”இதை அமல்படுத்த அரசு, பல அரசியலமைப்பு திருத்தங்களைச் செய்ய வேண்டும். அதன் கூட்டணிக் கட்சிகள் இதை ஆதரிக்குமா இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மாற்றி அமைக்கும் ஒன்றாக இருப்பதால், இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டாலும் உச்ச நீதிமன்றப் பரிசீலனைக்காக செல்லும்” என்று கூறியுள்ளது கூடுதல் கவனம் பெறுகிறது…

மேலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த 15-க்கும் மேற்பட்ட சட்ட  திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, மக்களவை பதவிக் காலம் 83(2), மக்களவையைக் கலைக்க 85(2), சட்டப்பேரவை பதவிக் காலம் 172(1), சட்டப்பேரவையை கலைக்க  174(2), மாநில அரசுகளைக் குடியரசு தலைவர் கலைக்க 356, வாக்காளர் அட்டவணை 325, உள்ளாட்சி அமைப்பு 324 போன்ற பிரிவுகளில் சட்டத்திருத்தங்களை இந்த அறிக்கை முன்மொழிகிறது. அதற்கு ஏதுவாக குறைந்தது 2 சட்டப்பிரிவுகள் அரசியலமைப்பில் திருத்தப்பட வேண்டும். இந்த சட்டப்பிரிவுகள் திருத்தப்படுவதற்கு, நாடாளுமன்ற மக்களவையிலும் மாநிலங்களவையிலும்  2/3 பங்கு பெரும்பான்மை வேண்டும். ஆனால் பாஜகவிற்கு கூட்டணியோடு மக்களவையில், அதிகபட்சம் 292 உறுப்பினர்களும், மாநிலங்களவையில், 112 உறுப்பினர்களும் உள்ளனர். ஆனால், இச்சட்டத்திருத்தம் நிறைவேறுவதற்கு, மக்களவையில் 362 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 168 உறுப்பினர்களும் வேண்டும். இந்த சூழ்நிலையில் 2/3 பங்கு உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என்று சொன்னால், ஒன்றில் மாற்றுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை பாஜக விலைக்கு வாங்க வேண்டும் அல்லது பல உறுப்பினர்களை சபையை விட்டு விலக்கி வைக்க வேண்டும். இரண்டுமே ஜனநாயகப் படுகொலைதான். அதை செய்து ஜனநாயகத்தைக் காப்பது என்பது, ‘கண்ணை விற்று சித்திரம் வாங்கிய’ விசித்திரக் கதையாகத்தான் இருக்கும்.

தங்கள் பரிந்துரைகளுக்கு வலுசேர்க்கும் விதமாக உயர் மட்டக்குழு சமர்ப்பித்த அறிக்கையில், ஜெர்மனி, தென் ஆப்பிரிக்கா, பெல்ஜியம் , ஸ்வீடன் மற்றும் இந்தோனேசியா   போன்ற ஒரே தேர்தல் நடக்கும் ஐந்தாறு நாடுகளைச் சுட்டிக் காட்டி இருக்கிறது. அந்த நாடுகள் எதுவும் 10 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்டதல்ல. ஆனால், இந்தியா ஏறத்தாழ 140 கோடி மக்களைக் கொண்ட நாடு. அது வடக்கே ஜம்மு காஷ்மீர் துவங்கி தெற்கில் கன்னியாகுமரி வரைக்கும், மேற்கில் குஜராத் முதல் கிழக்கே நாகாலாந்து, மணிப்பூர் வரையில் பரந்து விரிந்த இந்திய தேசம் பல்வேறு தட்பவெப்ப நிலைகள் கொண்ட ஒரு மாபெரும் நிலப்பரப்பாகும். இதில், சில மாநிலங்களில் சில மாதங்கள் மழைக்காலமாகவும், வேறு சில மாநிலங்களில், வேறு சில மாதங்களில், பனிஉறை காலமாகவும், சில மாநிலங்களில் அதிகபட்ச வெயில் காலம் என்று இயற்கையிலேயே ஒரே சீதோஷ்ண நிலை இந்தியா முழுக்க ஒத்திசைவில் இருப்பதில்லை. அத்துடன் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு காலங்களில் பண்பாட்டுக் கலாசாரத் திருவிழாக்கள், மத பண்டிகைகள்  நடைபெறுகின்றன.

அப்படி இருக்கும்போது, ஒரே நேரத்தில் இந்தியா முழுக்க தேர்தல் நடத்துவது இயற்கையாகவே இயலாத காரியம்.

இந்த தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது என்பது செலவைக் குறைக்கிற ஒரு உத்தியாக பாஜக பிரச்சாரத்தை மேற்கொள்கிறது. ஆனால், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இந்தியா முழுக்க பாராளுமன்றத் தேர்தலில் நடத்தி முடிக்க 1086 கோடிதான் செலவாகிறது. இந்தியாவின் ஓராண்டு பட்ஜெட் 48,20,512 கோடி. ஏறத்தாழ 5 ஆண்டுகளில், 240 லட்சம் கோடி. பட்ஜெட்டில் அதிகபட்சம் 2000 கோடி ரூபாய் தேர்தலுக்காக செலவிடுவது என்பது ஒரு பொருட்டல்ல. செலவைக் குறைப்பது என்று பாஜக சொல்லுவது உண்மையுமல்ல. அதோடு,  இந்தியா முழுவதும் 4126 சட்டமன்ற உறுப்பினர்கள். தேர்தலில் ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு 1 கோடி ரூபாய் தேர்தல் ஆணையத்திற்கு செலவாகலாம் என்று கணக்கிடப் பட்டுள்ளது. அப்படிப் பார்த்தால், தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். தேர்தல் செலவு 234 கோடி. தமிழகத்தின் ஓராண்டு பட்ஜெட் 3.5 லட்சம் கோடி. 5 ஆண்டுகளுக்கு ஏறத்தாழ 17.5 லட்சம் கோடி. இந்தத் தொகையில் 234 கோடி என்பது ஒரு பொருட்டாக்க் கருத வேண்டிய ஒரு தொகை அல்ல. எனவே தேர்தல் செலவு என்பது பல நாடுகளோடு ஒப்பிடும்பொழுது நமது நாட்டில் குறைந்த அளவாகவே உள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் தேர்தல் செலவு குறித்த கேள்விக்குப் பதிலளித்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்  “உலகிலேயே குறைவான செலவில் இந்தியாவில்தான் தேர்தல்கள் நடைபெறுகிறன. இந்தியாவின் தேர்தல்களில் ஒரு வாக்காளருக்கு சுமார் ஒரு அமெரிக்க டாலர் (இன்றைய நிலவரப்படி சுமார் 84 ரூபாய்) செலவிடப்படுகிறது,தேர்தல் செலவுகள் பற்றிய தரவுகள் கிடைக்கப்பெறும் நாடுகளில் பார்த்தால் கென்யாவில் இந்தச் செலவு ஒரு வாக்காளருக்கு 25 டாலராக உள்ளது. இது உலகிலேயே மிகவும் அதிக செலவு செய்யப்படும் பொதுத் தேர்தல்களில் அடங்கும். இது மட்டுமல்லாமல்    இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒன்றின் விலை சுமார் 17 ஆயிரம் ரூபாய் மற்றும் VVPAT இன் விலையும் ஏறக்குறைய இதே போலதான் இருக்கிறது. இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்திற்காக சுமார் 15 லட்சம் புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPATகளை வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம் என்றும்   தெரிவித்துள்ள கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது .

மேலும் ஓரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பவர்கள் முதல் நான்கு தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடந்தது என்று வாதிடுகின்றனர்.. ஆனால் இந்தியாவில் 1957, 1962 மற்றும் 1967-ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்றம் மற்றும் பல மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடைபெற்றன.இருப்பினும், 1955-ஆம் ஆண்டு ஆந்திரத்திலும், (பின்னர் ஆந்திரப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது). 1960 மற்றும்  65-ஆம் ஆண்டு கேரளாவிலும், 1961 இல் ஒடிஷாவிலும் தனித்தனியாகத் தேர்தல்கள் நடத்தப்பட்டன என்பதைத் தேர்தல் ஆணையம் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரே நாடு ஒரே தேர்தல் சம்பந்தமாக கருத்துக்கள் தெரிவிக்க 62 கட்சிகளை இக்குழு கேட்டுக் கொண்டதில்  47 அரசியல் கட்சிகள் தங்கள் பதிலை அனுப்பியிருந்தன. 32 கட்சிகள் ஆதரவாகவும்,  அதற்கு மாறாக இது ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது என்று அதில் 15 கட்சிகள் தெரிவித்துள்ளன. மீதமுள்ள 15 கட்சிகள் பதிலே அனுப்பவில்லை என்பதில் இருந்தே பொறுப்பற்ற கட்சிகளிடமும் இக்குழு கருத்து கேட்டுள்ளதும் அதில் உள்ள அரசியலும்  நாம் புரிந்து கொள்ளக்கூடியதுதான்…

மேலும் இக்குழுவின் பரிந்துரைகளில் ஒருவேளை பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஒரு மாநிலத்தில் எந்தக் கட்சிக்குமோ கூட்டணிக்கோ பெரும்பான்மை வலு கிடைக்காவிட்டால் என்னாவது? தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் தோற்கடிக்கப்பட்டால் எப்படி அடுத்துச் செயல்படுவது? ஏதோ காரணத்துக்காக ஒரு முதல்வர் பதவி விலகிய பிறகு அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுக்க முடியாமல் முட்டுக்கட்டை நிலைமை ஏற்பட்டால் என்னாவது? என்ற முக்கியமான கேள்விக்கு இக்குழுவின் அறிக்கையில், அப்படியொரு சூழல் ஏற்பட்டால், அந்தச் சட்டமன்றத்தின் எஞ்சிய பதவிக் காலம் ஐந்தாண்டுகளாகவே இருந்தாலும் – அடுத்த சில மாதங்களாகவே இருந்தாலும், குறிப்பிட்ட நாளில் பதவிக் காலம் முடியும் வகையில் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும்! என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ஒன்றியத்தில் ஒரு அரசு அமைய இயலாத சூழல் வந்தால் அது குறித்து வலுவான தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை …

மேற்கண்ட கூற்றுகளின் அடிப்படையில் பார்த்தால்  கூட்டாட்சித் தத்துவத்துக்கும் நாடாளுமன்ற ஜனநாயக முறைகளுக்கும் பொருந்தாத ஒரு கருத்தைப் பரிந்துரைக்கத்தான் ராம்நாத் கோவிந்த் குழு நியமிக்கப்பட்டது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல மிகத் தெளிவாகப் புரிகிறது.