மாற்றுப் பாதையில் செல்லவும்

———————————————————-

உன் அற்பங்களில் இருந்து என்னை விடுவித்து விடு
உன் தண்டனைகளில் இருந்து எனக்கு  விலக்கு தந்துவிடு
உன் பாதையில்
கரடு முரடான கற்களும் முட்களும் நிரம்பிக் கிடப்பதான
என் முறைப்பாடு குறித்து
கிஞ்சித்தும் அக்கறையற்ற
உன் பதில்
‘அவை எல்லாமே அன்புதான்’

அன்பின் பாதை
இத்தனை இரக்கமற்றதா
கருணையின் தடயங்கள்
இல்லாத பாதை
என்ன பாதை

வழியெங்கும் மூர்க்கத்தின் வெயில்
என் பாதங்களின் குருதி கண்டும்
தணியவில்லை உனக்கு

பயணம் தொடங்கியபோதான
பட்டுக்கம்பள விரிப்புகள் இல்லை
நறுமணம் வீசும் மலர்ச்செடிகள்
இருமருங்கிலும் இல்லை
இவை இல்லாமல் போனபின்னும்
என்னுடன் பின்னிக்கொண்ட
உன் கைகள்
இப்போதில்லை

இப்பாதை

எங்கு முடியுமென அறிவேன்

நான் காத்திருப்பது
மீண்டும் உன் கரம் பற்றுவதற்கல்ல
இப்பாதையிலிருந்து விலக ஏதுவாய்
ஒரு கிளைப் பாதைக்காகவே

***********************

அன்னை வயல்

—————————–

அந்த முகாமில்
ஏழெட்டுக் குழந்தைகள்.
விவரம் தெரிந்தவை நான்கைந்து

ஏனைய குழந்தைகள்
தாய்ப்பாலுக்காய்
ஏங்கி அழுகின்றன
செய்வதறியாது திகைக்கின்றனர் முகாம்வாசிகள்

இப்பிரபஞ்சத்தையே ஆட்டுவிக்கும் கண்ணீர் அப்பிள்ளைகளுடையது

அக்குழந்தைகள் தேடும் முலைக்காம்புகளோ
பூமிக்கடியில் புதையுண்டு கிடக்கின்றன

மண்மூடி மரித்துவிட்ட

தாய்மார்களின் மார்பிலும்
பால்கட்டச் செய்கின்றது

பிஞ்சுகளின் சிற்றோலம்

பிள்ளைகளின் பசி தீர்க்க
வக்கற்ற வானம்
மழையைக் கொட்டித் தீர்க்கிறது

தன் கண்ணீரென
இதோ

இதோ
மின்னலொளியில்
பள்ளிவாசல் பக்கமிருந்து
மழைநீரில் கால்கள் தெறிக்க
ஓடி வருகிறாள் ஒருத்தி

விழிநீர் பெருகியோட
ஒரு குழந்தையை வாரியணைத்து
இடது மார்பிலும்
பிறிதொரு குழந்தையை
வலது மார்பிலும்
பொருத்துகிறாள்
சட்டென்று நிற்கின்றன அழுகுரல்கள்.

பாலூட்டும் அத்தாயின்
முலைக்காம்புகளில் இருந்து
பாலுடன் இணைந்து

வெளிவருகின்றன வெள்ளைப் புறாக்களும்

அவை
அக்குழந்தைகளின் தாய்மார்கள் புதையுண்ட நிலத்தில் சென்றமர்ந்து

பின் பறந்து செல்கின்றன

புறாக்கள் அமர்ந்த

நிலத்தின் மேற்பரப்பில்

பால் கசிவதாக
இரவுக் காவலன்
மனம் கசிகிறான்

(வயநாடு நிலச்சரிவில் தாயை இழந்த குழந்தைகளுக்குப் பாலூட்டிய தாய்க்கு…)