75 ஆண்டுகளைக் கடந்து பவளவிழா கொண்டாடும் திராவிட முன்னேற்றக் கழகம் அரசியல் தளத்தில் என்ன சாதித்தது என்றால் ஒரு நீண்ட பட்டியலே போடலாம். சுயமரியாதை திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம், தமிழ்நாடு பெயர் சூட்டல், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம், பெண்களுக்கு சொத்துரிமை, உள்ளாட்சிப் பதவிகளிலும் அரசு வேலைவாய்ப்பிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு, அருந்ததியர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள் இட ஒதுக்கீடு என்று அரசியல் தளத்தில் பல சாதனைகளைச் செய்திருக்கிறது தி.மு.க. ஒப்பீட்டளவில் திராவிடக் கட்சி என்று கருதப்படும் அ.தி.மு.க., திராவிட முன்னேற்றக்கழகத்தைவிட அதிக ஆண்டுகள் ஆட்சி புரிந்தாலும் தமிழ்நாட்டில் சமூகநீதி சாதனைகளை நிகழ்த்தியது தி.மு.க.வே. மேலும் கல்வி, மருத்துவம், சாலைகள், பாலங்கள் என்று தமிழ்நாட்டின் உள்கட்டமைப்புகளை உருவாக்கியதில் தி.மு.க.வுக்கே அதிகப்பங்கு உண்டு.
இன்று தி.மு.க.வின் அரசியல் செயற்பாடுகள் தமிழ்நாட்டைத் தாண்டி தேசியளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகின்றன. ஏற்கனவே மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் துணைநின்றது, மாநில முதல்வர்களுக்குத் தேசியக்கொடியேற்றும் உரிமை பெற்றது, தமிழுக்கு செம்மொழித் தகுதி என்று கலைஞர் காலத்திலேயே தி.மு.க. தேசிய அரசியலைப் பயன்படுத்திப் பல சாதனைகளைச் செய்தது. இன்று மு.க.ஸ்டாலின் காலத்தில் தி.மு.க.வின் கருத்தியல் முக்கியத்துவம் உணரப்படும் பரப்பு அதிகரித்திருக்கிறது. மொழியுரிமை, மாநில உரிமைகள் ஆகியவற்றைத் தி.மு.க. முன்னெடுத்த காலத்தில் அது குறுகிய நோக்கம் கொண்ட பிரிவினவாத இயக்கமாகச் சித்திரிக்கப்பட்டது. ஆனால் இன்று தி.மு.க.வின் மொழியுரிமை, மாநில உரிமைகள் குறித்த அரசியல் பல மாநிலங்களிலும் முன்னெடுக்கப்படுகிறது. பெரியார் காலத்தில் இருந்து திராவிட இயக்கத்தின் உயிர்நாடியாக இருக்கக்கூடிய இட ஒதுக்கீடு குறித்த புரிதலும் தேவையும் இன்று இந்திய அரசியலின் பேசுபொருளாகியுள்ளது. இந்தியளவில் சமூகநீதிக்கான கூட்டமைப்பைத் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தி.மு.க.வின் அரசியல் பங்களிப்புகளையும் சமகாலப்பொருத்தப்பாடுகளையும் பேசும் அதேநேரம் அதன் பண்பாட்டுப் பங்களிப்புகள் குறித்தும் பேச வேண்டும். ஏனெனில் திராவிட முன்னேற்றக் கழகம் என்பது வெறுமனே அரசியல் இயக்கம் மட்டுமல்ல, அது பண்பாட்டு இயக்கமும்கூட.
பெரியாரிடமிருந்து தி.மு.க. வேறுபடும் புள்ளிகளில் ஒன்று அது வெகுஜன அரசியல் இயக்கம் என்பது. அவரது மொழியிலேயே சொல்லவேண்டும் என்றால் பெரியார் ‘வெகுமக்கள் உண்டு என்பதை இல்லை என்றும் வேண்டும் என்பதை வேண்டாம் என்றும் நல்லது என்பதைக் கெட்டது என்றும்’ சொல்லக்கூடியவர், தன்னை ஓர் ‘அழிவுவேலைக்காரன்’ என்று அறிவித்துக்கொண்ட அனார்க்கிஸ்ட். சாதி, மதம், கடவுள், காதல், திருமணம், குடும்பம், குழந்தைப்பேறு, மொழிப்பற்று, தேசியம் என எல்லாவற்றின் புனித மதிப்பீடுகளைக் கேள்விக்குட்படுத்தியவர். ‘’மதமே வேண்டாம் என்கிறீர்களே, அதற்குப் பதிலாக என்ன வைப்பது?’’ என்று கேட்கப்பட்டபோது, “நடுவீட்டில் மலம் நாறுகிறது என்கிறேன். எடுத்துவிட்டு எதை வைப்பது என்று ஏன் கேட்கிறீர்கள்?” என்றார் பெரியார். பெரியார் என்னும் தீவிரச் சிந்தனையாளரின் உயரத்துக்கு வருவதற்குப் பொதுச்சமூகத்திற்குப் பல நூற்றாண்டுகள் ஆகும். பெரியார் என்னும் தீவிர சிந்தனையாளருக்கும் வெகுமக்கள் பண்பாட்டுக்கும் இருந்த இடைவெளியை நிரப்பியது திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியமான செயற்பாடு எனலாம்.
கடவுள், மதத்தின் இடத்தில் மொழியுணர்வை முன்வைத்தது தி.மு.க. உலகத்திலேயே மொழியைக் காக்க தீக்குளிப்பு நடந்தது தமிழ்நாட்டில்தான். மொழியுணர்வை முன்வைத்தே சாதி, மதம் கடந்த பொது அடையாளத்தைத் தி.மு.க. உருவாக்கியது. தி.மு.க. தமிழ் இலக்கியங்களை உயர்த்திப்பிடித்தபோதும் அது வைதீகம் சார்ந்த பக்தி இலக்கியங்களை முன்நிறுத்தவில்லை. கம்பராமாயணமும் பெரியபுராணமும் தமிழர்களை இழிவுசெய்பவை, அடிமைப்படுத்துபவை என்று ‘தீ பரவட்டும்’ இயக்கம் நடத்தியவர் அண்ணா. பக்தி இலக்கியங்களுக்கு மாற்றாகத் திருக்குறள், சிலப்பதிகாரம் என்னும் சமண இலக்கியங்களைத் தமிழர்களிடம் பரவலாகக் கொண்டுசென்றது தி.மு.க. இன்று தமிழர்களுக்கு கம்பராமாயண, பெரியபுராணப் பாடல்வரிகள் பெரிதாகத் தெரியாது. ஆனால் ஒன்றிரண்டு குறள்களாவது அனைவருக்கும் தெரியும். குறளோவியம் எழுதிய கலைஞர் சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்ட பூம்புகார் திரைப்படைப்புக்கு வசனம் எழுதினார். ‘மந்திரிகுமாரி’ திரைப்படத்தில் ‘குண்டலகேசி’ என்னும் பௌத்த இலக்கியத்தின் அடிப்படையில் ஒரு கிளைக்கதையை உருவாக்கினார். பழந்தமிழ் இலக்கியங்களைத் தி.மு.க. தொடர்ந்து முன்வைத்தபோதும் அதை நவீனச்சிந்தனைகளுடன் இணைக்கத் தவறவில்லை.
’தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை’ என்னும் திருக்குறளை ஆணாதிக்கக் குறள் என்று விமர்சித்தவர் பெரியார். பாரதிதாசனோ இதை வேறுவிதமாக அர்த்தப்படுத்த முயன்றார். கொடைவள்ளலான தலைவன், அவனுக்குத் துணைநிற்கும் தலைவி என்னும் கதைப்பாடலை எழுதிய பாரதிதாசன், தலைவனிடம் உதவி கேட்டு நின்ற வறியவர்களுக்கு ‘கொடைமழை பொழிக’ என்று தலைவி சொன்னதும் ‘பெய்யெனப் பெய்தது மழை’ என்று அர்த்தப்படுத்தினார். ஆனால் கலைஞரோ பாரதிதாசனைத் தாண்டிய நவீனச்சிந்தனையைத் தன் திருக்குறள் உரையில் முன்வைத்தார்.
‘கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்’ என்று உரை எழுதினார் கலைஞர். இத்தகைய நவீனச்சிந்தனை கலைஞரிடம் இருந்ததால்தான் வள்ளுவர் கோட்டத்தையும் பூம்புகாரையும் கட்டியெழுப்பிய கலைஞர் டைடல் பார்க்கையும் உருவாக்கினார்.
‘பாலுங்கிறது பேரு, தேவர்ங்கிறது எங்கே வாங்கின பட்டம்?’ என்பது ‘வேதம் புதிது’ திரைப்படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற வசனம். இந்த வசனம் இடம்பெற்ற காட்சியிலேயே அடிப்படை முரணிருக்கிறது. ‘தேவர்ங்கிறது எங்கே வாங்கின பட்டம்?’ என்ற கேள்வியை எழுப்புவது ஒரு பார்ப்பனச் சிறுவன். அந்தப் பார்ப்பனச் சிறுவன் அணிந்திருக்கும் பூணூலும் எந்தப் பல்கலைக்கழகத்திலும் வாங்கிய பட்டமில்லை. இது ஒருபுறமிருக்கட்டும். சாதிப்பெயருக்கும் மேலாக, படித்து வாங்கும் பட்டத்தை முன்னிறுத்தும் நவீனச்சிந்தனை எங்கிருந்து உருவானது? 1929 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டில் தமிழர்கள் தங்கள் சாதிப்பெயர்களை நீக்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியவர் பெரியார். பிறகு அது ஒரு பண்பாட்டுச்செயற்பாடாக மாறி, இன்று இந்தியத்துணைக்கண்டத்தில் ‘சாதிப்பின்னொட்டு இல்லாத ஒரு தனித்த நிலமாக’த் தமிழ்நாடு விளங்குகிறது. கல்வி மறுக்கப்பட்ட பார்ப்பனரல்லாத சமூகத்திலிருந்து வந்த திராவிட இயக்கத் தலைவர்களான அண்ணா, நெடுஞ்செழியன், அன்பழகன் போன்றோர் தாங்கள் வசனம் எழுதிய திரைப்படங்களின் டைட்டில்களிலும் தங்கள் புத்தகங்களிலும் ‘சி.என்.அண்ணாத்துரை எம்.ஏ’ என்பது போன்ற பட்டங்களைப் போடத்தொடங்கினர். சாதிப்பெயர்களின் இடத்தில் தாங்கள் படித்து வாங்கிய பட்டங்களை முன்வைத்தது திராவிட இயக்கம். இத்தகைய செயற்பாடுகளில் இருந்துதான் ‘தேவர்ங்கிறது எங்கே வாங்கிய பட்டம்?’ என்ற கேள்வி எழுகிறது.
’தோளில் துண்டு அணியக்கூடாது’ என்ற சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவே தோள்களில் துண்டு அணியும் பழக்கத்தைத் திராவிட இயக்கம் உருவாக்கியது. இந்த துண்டு அணியும் பழக்கத்தைத் தனக்கே உரிய சாதிய வக்கிர மனநிலையுடன் ‘தங்கப்பதக்கம்’ திரைப்படத்தில் எள்ளி நகையாடினார் ‘துகளக்’ சோ. தாங்கள் துண்டு அணிந்தது மட்டுமல்லாமல் சாதி, மத வித்தியாசம் பாராது மற்றவர்களுக்கும் பொன்னாடை அணிவிப்பதை மரபாக மாற்றியது திராவிட இயக்கம். ஒரு ஊரில் எல்லாச்சாதிகளையும் சேர்ந்த கழக நிர்வாகிகளின் பெயர்களைச் சொல்லி விளிப்பதும் திராவிட இயக்க மேடை உருவாக்கிய மரபு. மாநாடுகளில் படத்திறப்பு விழாக்களை நடத்தியது திராவிட இயக்கம். இன்றும் டெல்டா மாவட்டங்களில் மத நம்பிக்கையுள்ளவர்கள் வீடுகளிலும் இறந்த 16ஆம் நாளான நீத்தார் நினைவு நாளில் படத்திறப்பு விழாக்கள் நடத்துவது மரபாக இருக்கிறது.
வெகுஜனப் பண்பாட்டில் இடையீடு செய்து தி.மு.க. உருவாக்கிய மாற்றங்கள் இந்திய அளவில் வேறெங்கும் நிகழாதவை. தேவதாசி ஒழிப்புமுறைக்காகப் பெரிதும் செயல்பட்டது பெரியாரிக்கம். தேவதாசி சமூகத்தைச் சேர்ந்த பெண்களை சுயமரியாதை இயக்க இளைஞர்கள் திருமணம் செய்வதை ஒரு பண்பாட்டுச்செயல்பாடாகவே மேற்கொண்டனர், காமராசர் ஆட்சிக்காலத்தில் மதிய உணவுத்திட்டம், முதியோர் கல்வி, ஓராசிரியர் பள்ளி ஆகியவற்றை உருவாக்கிய நெ.து.சுந்தர வடிவேலு ஒரு பெரியாரிஸ்ட். அவர் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தது ஒரு தேவதாசி சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை. பெண் வீட்டார் சார்பாக நெ.து.சுந்தர வடிவேலுவிடம் பேசிய பெரியார் ‘’திருமணத்தில் தாலி கட்ட வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். சுந்தர வடிவேலுவுக்கோ அதிர்ச்சி. ‘’நீங்கள்தானே தாலி பெண்ணடிமைச்சின்னம் என்று எங்களுக்குக் கற்பித்தீர்கள்” என்று தாலி கட்ட மறுத்தார் அவர். திருமண உறவும் தாலியும் மறுக்கப்பட்ட பொட்டுக்கட்டப்பட்ட வாழ்க்கை கொண்ட சமூகப்பின்னணியில் இருந்து வந்த ஒரு பெண்ணின் ஆசை என்கிற அளவிலேயே தன் கொள்கையின் தீவிரத்தைத் தளர்த்திக்கொண்டு அப்படியொரு வேண்டுகோளை வைத்தார் பெரியார். கலைஞர் இன்னும் ஒருபடி மேலே போய், தேவதாசி முறையை எதிர்த்துப் போராடிய மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயரைத் திருமண நிதியுதவித் திட்டத்துக்குச் சூட்டினார். இதை எதிர்ப்பண்பாடு என்றே அழைக்கலாம்.
‘’தொல்காப்பியத்தில் உயர்திணைக்கான இலக்கணத்தில் மக்கள், தேவர், நரகர் என்று குறிப்பிடப்படுவது ஏன்? இது மொழியிலேயே பேதம் கற்பிக்கும் முயற்சிதானே? விபச்சாரி என்ற வார்த்தைக்கு ஏன் ஆண்பால் இல்லை?’ என்ற கேள்விகளை எழுப்பி மொழியை அதிகாரநீக்கம் செய்ய முயன்றவர் பெரியார். அதன் தொடர்ச்சியாக மாற்றுத்திறனாளிகள் என்னும் சொல்லை உருவாக்கியது, திருநங்கைகள் என்னும் சொல்லுக்கு அரசேற்பு அளித்து நலவாரியம் அமைத்தது என்று கலைஞர் செயல்பட்டார். கலைஞருக்குப் பிறகு இன்றைய தி.மு.க. தலைவரும் தமிழ்நாட்டு முதல்வருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க. இளைஞரணிச்செயலாளரும் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் போன்ற விளிம்புநிலைச் சமூகங்களின் நலன்களில் அக்கறை காட்டுகின்றனர். திருநங்கைகள் உரிமை பாதுகாப்பு சட்டம், நரிக்குறவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது ஆகியவற்றுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வெற்றியும் பெற்றவர் தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா. இந்திய அளவிலேயே இப்படி விளிம்புநிலைச் சமூகங்களுடன் உறவு ஏற்படுத்தி அவர்களின் உரிமைகளுக்காகச் செயற்படும் இயக்கம் தி.மு.க. தவிர வேறில்லை.
தமிழ்நாட்டு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபிறகு அவரது அரசு பண்பாட்டுச்செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபாடு காட்டிவருகிறது. சென்னையில் மட்டும் நடந்துவந்த புத்தகக் காட்சியைத் தமிழ்நாடு முழுவதும் பரவலாக நடத்துவது, இலக்கியத் திருவிழாக்கள், வகுப்பறைகளில் உலக சினிமாக்களைத் திரையிடுவது, கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றை நடத்துவது என்று தொடர்கின்றன. கி.ராஜநாராயணன், தொ.பரமசிவன் என்ற இரு முக்கியமான எழுத்தாளர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு, உயரிய விருதுகள் பெறும் எழுத்தாளர்களுக்கு வீடு வழங்குவது என்று தன் பண்பாட்டுச் செயற்பாடுகளைத் தொடர்கிறது.
துண்டு அணிவது, பொன்னாடை அணிவிப்பது போன்றவற்றின் முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அதை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தி, பொன்னாடைகள், சால்வைகளுக்குப் பதிலாகப் புத்தகங்கள் வழங்குவது என்னும் பண்பாட்டுச் செயற்பாட்டைப் பரவலாக்கியிருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவளவிழாவையொட்டி அது தமிழர்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்து இன்னும் பல புதிய ஆய்வுகள் வெளியாக வேண்டும்.