பிளக் பிடுங்கப்பட்ட ரோபோபோல
வலிப்பு வரும்போதெல்லாம்
நிலத்தில் வீழ்வாள் அம்மா
அம்மாவின் நிழல் என்றாவது விழ வேண்டும்
மெத்தைகளால் ஆன நிலத்தின்மீது
*
அம்மாவிற்குப் பிடிவாதம் அதிகம்
செல்லக் கோபங்கள் அதிகம்
குழந்தையைப் போலவே அடம் பிடிப்பாள்
குழந்தையைப் போலவே அடிப்பாள்
சப்தமாக வாயில் கோரையொழுக அழுவாள்
அவள் உடலில் ஒரு புறம்
அவளது பால்யத்தை விட்டு வெளிவரவில்லை
அவளது மூளையிலும்
*
இயல்பான கண்களுக்கு
சற்றே மாறுகண்
இயல்பான கைகளுக்குக்
கொஞ்சம் எட்ட முடியாத உயரத்தில்
அம்மாவின் ஒரு கை
இயல்பான கால்களுக்குக்
கொஞ்சம் எட்ட முடியாத தூரத்தில்
ஒரு கால்
இயல்பான மூளைக்கு நிகராக
வளராத பிடிவாதம் அவளின் மூளை
அம்மா அவளது இடதுபுறத்தால் கைவிடப்பட்டாள்
தன் வலது புறத்தால் வளர்ந்து வந்தாள்
*
சூம்பிய வயிறு
பலூன்போல வீங்கியபோது
யாருக்குமே நம்பிக்கையில்லை
நான் இறந்து பிறப்பேன் அல்லது
பிறந்தவுடன் இறப்பேனென
அனைவரும் நினைத்தார்கள்
நான் பிறக்கும்போது
தான் இறந்துவிடுவோமோ என
அம்மா பயந்தாள்
நான் பிறந்தேன்
அவள் கருப்பையின் இடதுபுறத்திலிருந்து
*
அம்மா பிறந்தது முதலே
பாவாடை சட்டைதான்
திருமணமானது முதல்
நைட்டிதான்
அம்மாவின் பழைய ஆடைகளை
வேறுவேறு தேவைகளுக்காகக்
கிழித்து எடுத்துக்கொள்வோம்
கிழிந்த பாவாடைகள்
வீட்டின் கால்மிதி துணியாகின
லேசான ரவிக்கைகள்
சமையலறை கரித் துணிகளாயின
காபிப்கறை படிந்த
பழைய நைட்டிதான்
என் தலையணை உறை
அரிசி மூட்டைகளுக்கும்
தோட்டத்துச் கொடிகளுக்கும்
அவள் பாவாடை நாடாதான் கயிறு
அவள் வாசனையே அறியாத
ரேசன் புடவைகள்தான்
தானியக் கிடங்கு
*
அம்மாவின் புடவை வாசனையென்றால்
என்னவென்றே தெரியாது
பாதி கயிறாலான தூளியில்
என்னைத் தாங்கியதெல்லாம்
அம்மாவின் நைட்டிதான்
*
உத்தரத்தில் முடிபோட்டுக்கிடக்கும்
நைட்டி தூளியை அவ்வப்போது
ஊஞ்சலாக்கி விளையாடுவோம்
சிறுமியாகவும் அம்மாவாகவும்
மாறிமாறி ஆடிக்கொண்டிருப்பாள் அம்மா
வாழ்வுக்கும் மரணத்திற்குமாய்
இன்னும் ஆடிக்கொண்டேயிருக்கிறது தூளி
*
தெரு தாண்டாத அம்மா
குலதெய்வக் கோயிலுக்கு
குடும்பத்தில் கல்யாணத்திற்கு
வலிப்பு அதிகம் வரும் நாட்களில்
மருத்துவமனைக்கு என
வெளியூருக்குப் போகும் நாட்களில் மட்டும்
சந்தோசமாய் இருப்பாள்
ஆண்டுக்கு நான்குமுறை அந்த நாட்களில்தான்
அவளுக்குப் புடவை கட்டிவிடுவோம்
ஜவ்வு மிட்டாய் கழியிலிருக்கும் பொம்மை
கழியிலிருந்து கீழிறங்கி நடந்தால்
அம்மாபோலவேதான் நடக்கும்
தாங்கித் தாங்கி