வாழை திரைப்படம் வெளிவரப் போகிறது எனும் போதே சோஷியல் மீடியாவில் கொண்டாட்டம் ஆரம்பமாகிவிட்டது. ஒரு பக்கம் வன்ம பதிவுகளும் இன்னொரு பக்கம் கொண்டாட்ட பதிவுகளோடு நீ திட்டுறியா எனக்கு அதாண்டா வேணும் என்று பதில் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் ஜாதி ஒழிக்க போராடும் சோஷியல் மீடியா புரட்சியாளர்கள்.
மாரி செல்வராஜின் முதல் படமான பரியேறும் பெருமாள் எனக்கு மிகவும் பிடித்தமான படம். அதில் சொல்லப் பட்ட பல விஷயங்கள் நிஜத்திற்கு நெருக்கமாக இருந்தது மட்டுமில்லாமல் சரியான கேள்வியோடு படம் முடிந்தது. ஆனால் அவரது அடுத்த இரண்டு திரைப்படங்கள் எனக்கு அவ்வளவாக ஏன் அப்படி சொல்லுகிறேன் என்றால் முழுவதும் ஃபேக்கான திரைக்கதை,,நடிப்பு, கருத்து திணிப்புடன் இருந்தது. அது அவரது கேரியருக்கு தேவையானதாய் இருந்திருக்கலாம் ஆனால் அது அந்த திரைப்படத்திற்கு தேவையில்லை என்பது என் கருத்து. ஆனாலும் அவரின் முதல் படம் மூலம் கிடைத்த எதிர்பார்ப்பு இன்றயை வாழை வரைக்கும் இருக்கத்தான் செய்தது. குறிப்பாய் சோஷியல் மீடியாவில் வரும் போஸ்டுகளால் அல்ல அதன் டிரைலர் கொடுத்த எதிர்பார்ப்பால். அந்த எதிர்பார்ப்பை வாழை பூர்த்தி செய்ததா? என்று என்னிடம் கேட்டீர்களானால் ஆம் என்றே சொல்வேன்.
வாழை மாரியின் சிறு வயது கதை என்று அறிவிப்போடு படம் ஆரம்பிக்கிறது. சிவனைந்தன் மாடு காணாப் போக்கிவிட்டு தேடி அலைவதிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. அன்றாடம் காய்ச்சி கம்யூனிஸ்ட் குடும்பம். தகப்பனில்லாத குடும்பத்தை அம்மா ஒற்றையாளாய் மகளையும், மகனையும் வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கும் குடும்பம். வாழையை சுமந்து அதில் கிடைக்கும் பணத்தில் கஷ்ட ஜீவனம். பள்ளியில் படிக்கும் மகன் பேரில் கூட அட்வான்ஸ் வாங்கிக் லீவு நாட்களில் வாழையை தூக்க சொல்லும் வறுமை குடும்பத்தில் இருக்கும் கடைக்குட்டி சிவனைந்தனுக்கு பதின்பருவம் ஆரம்பம். அதற்கே உரிய தகிடு தத்தங்களுடனான ஆசைகளுடன் இருக்கிறவன். தீவிர ரஜினி ரசிகன். கூட இருக்கும் நெருங்கிய நண்பன் கமல் ரசிகன். இவர்களிடையே வரும் காட்சிகள் செம்ம காமெடி மட்டுமில்லாமல் பல நாஸ்டால்ஜிக் எமோஷன்களை கிளப்பிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
ஏதோ ஒரு காரணத்தால் ஸ்கூல் டீச்சரை பிடித்துப் போகும் வயசு. டீச்சருக்காக எந்த அடிபிடி வேலைகளையும் செய்ய தயாராக இருக்கும் வயசு. சிவனைந்ததுக்கு அந்த டீச்சரை பிடித்துப் போனதில் ஆச்சர்யமில்லை. செம்ம க்யூட்டான டீச்சர் பையன் ரிலேஷன்ஷிப். கொஞ்சமே கொஞ்சம் அழுத்தி காட்சிப் படுத்தியிருந்தாலும் ஆபாசமாய் போய்விடக்கூடிய காட்சிகளை மிக அநாயசமாய் கையாண்டிருந்தார் இயக்குனர். எனக்கு என் ரேவதி டீச்சரை நியாபகத்திற்கு கொண்டு வந்த காட்சிகள். குறிப்பாய் டீச்சரிடம் “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க” என்று சொன்னதும் டீச்சர் “ஏன் முன்ன நான் அழகா இல்லையா? “என்று சிரித்தபடி கேட்க, அதற்கு சிவனைந்தன் “முன்ன என் அம்மா மாதிரி அழகா இருந்தீங்க. இப்ப என் அக்கா மாதிரி அழகா இருக்கீங்க” என்று சொல்லுமிடம் அட்டகாசம்.
அம்மா தன் பிள்ளையை ஏன் இத்தனை இக்கட்டிலும் அன்பை, கோபத்தோடு காட்டுகிறாள் என்று விளக்கிச் சொல்லுமிடம் யதார்த்தம். 2 ரூபாய் கூலி அதிகம் கேட்டதினால் கொடுத்துவிட்டு அதை வேறு ஒரு வழியில் திருப்பி எடுக்கும் அதிகார முதலாளிவர்கத்தின் சிந்தனை. அதை போராடியாவது பெற்றே தீர வேண்டிய இடத்தில் இருக்கும் கலையரசன் கேரக்டர். கலையரசனுக்கும் சிவனைந்ததின் அக்காவிற்குமிடையே ஆன காதல் ஆங்காங்கே கையில் சிவந்த மருதாணி போல க்யூட்டாக இருந்தாலும் தனியாய் இக்கதைக்கு எந்தவிதமான எமோஷனையும் கூட்டவில்லை. கதையின் க்ளைமேக்ஸில் இவை இன்னும் கொஞ்சம் அழுத்தத்தை கொடுக்கும் என்றெண்ணி இயக்குனர் இதை வைத்திருக்கலாம் அல்லது கொஞ்சம் படத்தின் நீளத்தை அதிகப்படுத்த ஒரு காதல் சுவாரஸ்யம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்திருக்கலாம். எப்படியும் அது ஒர்க்கவுட் ஆகவில்லை என்பது வருத்தமே.
தொடந்து பல திரைபட பிரபலங்கள் துக்கம் தொண்டையடைக்க, அழுதும், கட்டிப் பிடித்து மெளனித்தும் படம் தங்களுக்கு கொடுத்த தாக்கத்தை விடியோவாக வெளிப்படுத்தியிருந்ததை சோஷியல் மீடியாவில் பாராட்டுக்களாகவும், கிண்டலாகவும் மீம்ஸுகளும், கருத்துக்களும் குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் வேளையில் ”எனக்கு எல்லாம் அழுகையே வரலை” என்று ஒரு கூட்டம் கெத்துக் காட்டிக் கொண்டிருந்தது. நான் கூட படம் பார்க்கும் போது அழவில்லை. அழுகை வரவில்லை. ஆனால் மனதிற்கு ஒர் அழுத்தம் ஏற்படாமல் இல்லை. அந்த க்ளைமேக்ஸ் இப்படித்தான் வரும் என்று காட்சி ரீதியாய் சிவனைந்தனின் பசி பற்றி லேசாய் ஆரம்பிக்கும் போதே இதை வைத்துத்தான் மக்களை நெக்குருக வைக்கப் போகிறார் இயக்குனர் என்று தீர்மானித்திருந்தேன். அதை அப்படியே செய்திருந்தது அவரது நான் லீனியர் கட் மிகவும் அவருக்கு உதவியிருக்கிறது. அந்த கட் அவர் எதிர்பார்த்த எமோஷனை வெகு ஜனங்கள் மட்டுமல்லாமல் க்ரியெட்டர்கள் அழவைத்தது ஒன்றும் ஆச்சர்யமில்லை. ரெண்டு தரப்புமே உணர்வெழுச்சி வெடிகுண்டுகள்.
அழியாத கோலங்களுக்கு பிறகு பால்ய கால இன்பாச்சுவேஷனையும், அக்கால வாழ்வையும், குறிப்பாய் அரசு பள்ளி மாணவர்களின் வாழ்கையை விவரித்த விதத்தையும் மிகவும் ரசித்தேன். அதே போல சந்தோஷ் நாராயணின் பின்னணியிசையும் படம் முடிந்து வரும் பாதவத்தி பாடல் க்ளைமேக்ஸ் கொடுத்த பாதிப்போடு அப்பாடல் நம்மை எழவிட முடியாமல் உரைந்து போக வைத்துவிடுகிறது என்பதை மறுக்கவே முடியாது.
இவையெல்லாமே சோஷியல் மீடியாவில் விமர்சிக்கப்படுகிறது. கிண்டலடிக்கப்படுகிறது. என்னங்கடா எனக்கு ஏதுவுமே ஆகலை. சும்மா அதையே சீன் போடுறீங்க என்று கூட ஒரு கூட்டம் கத்திக் கொண்டிருக்கிறது. இன்னொரு வியாபாரக்கூட்டம் யூட்டியூப் கூட்டம் கலைஞர்கள் அழுததை, பார்வையாளர்கள் அழுததை திரும்பத் திரும்ப பார்க்குமிடமெல்லாம் ப்ரோமோட் செய்கிறது. அது மேலும் பல பார்வையாளர்களை தியேட்டர் பக்கம் அழைத்து சொல்கிறது. படம் மிகப் பெரிய வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல இத்தனை கூச்சல் குழப்பம் தேவையாய்த்தான் இருக்கிறது. இத்தனை கூச்சல் போட்டால் தான் மக்கள் திரையரங்கை நோக்கி படம் பார்க்க வைக்க முடிகிறது. இவை பல சமயங்களில் அப்படங்களுக்கு எதிர்மறையாய் போய் விடுவதும் உண்டு. அதற்கு உதாரணம் சமீபத்திய இந்தியன்2 மற்றும் கொட்டுக்காளி படங்களைச் சொல்லலாம். இத்தனை விமர்சனங்களையும் தாண்டி ஒரு படம் மக்களை ப்ரோமோட் செய்யப்பட்ட எமோஷன்கள் என்று குற்றம் கூறினாலும் அதை திரையரங்கில் சென்று பார்க்கும் போது அதே எமோஷன் பார்வையாளர்களுக்கு திருப்தியை கொடுக்காமல் போயிருந்தால் மேலே சொன்ன இரண்டு படங்களுக்கு நடந்தவை தான் இப்படத்திற்கும் நடந்திருக்கும். அது நடக்காத போதே படம் ஜெயித்து விடுகிறது.
சரி தலைப்பிற்கு வருமோம். தமிழ் சினிமாவின் உச்சமா வாழை? என்று கேட்டீர்கள் என்றால் மீண்டும் ஆம் என்றே சொல்வேன். படத்தில் குறைகளே இல்லையா? என்று கேட்டீர்களானால் நிச்சயம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அப்படி குறையே இல்லாத ஒரு படம் வெளியாகிவிட்டது என்றால் அதுதானே உலகின் கடைசி சினிமாவாக இருக்க முடியும்?. ஒரு சினிமாவாய் என்னுள் ஒர் வாழ்வனுபவத்தை, அவர்களுடய வலியை, துக்கத்தை, யதார்த்தத்தை, நல்ல சினிமா அனுபவத்தை என்னுள் கடத்திய படம் வாழை. என்னைப் பொறுத்த வரை இவ்வாண்டில் வந்த வரப் போகிற தமிழ் திரைப்படங்களுள் வாழை ஒரு சிறந்த படமே.