சந்திப்பு : செல்வி, சோ. விஜயகுமார்
உங்களுடைய முதல் நாவலான ‘கோவேறு கழுதைகள்’ வெளிவந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. அந்த நாவல் இன்றும் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. நாவல் வெளிவந்தபோது சர்ச்சைகள் உண்டாயிற்று இல்லையா?
1994இல் வெளிவந்த நாவல் 2024லிலும் படிக்கப்படுவதும் பேசப்படுவதும் நல்ல விஷயம்தான். சில படைப்புகள் தனக்கான வாழ்காலத்தைத் தானே உருவாக்கிக்கொள்ளும், யாருடைய சிபாரிசுமின்றி. நம்முடைய எழுத்தாளர்களில் பலரும் தன்னுடைய சாதிப் பெருமைகளைக் கொண்டாடுகிறவர்கள். பிற சாதியினர்மீது வன்மத்தைக் கக்குவதற்குத் தயங்காதவர்கள். ஒரு சாதி எழுத்தாளர்கள் கொண்டாடினார்கள் என்பதற்காக மற்றொரு சாதி எழுத்தாளர்கள் திட்டினார்கள். எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் என்று அடையாளப்படுத்தப்படக்கூடிய நபர்கள்கூடச் சாதியற்றவர்களாக இல்லை. ஒரு எழுத்தாளரைப் பார்க்கும்போதே சாதி அடையாளத்தோடுதான் பார்க்கிறீர்கள், ஒரு படைப்பைப் படிக்கும்போது சாதி உணர்வோடுதான் படிக்கிறீர்கள். இந்த உணர்வுகள் மேலோங்கி இருந்ததால்தான் ‘கோவேறு கழுதை’ நாவலுக்குச் சர்ச்சைகள் உருவாயின.
1994இல் வெளிவந்த ‘கோவேறு கழுதைகள்’ நாவலுக்குப் பிறகு ஏழு நாவல்கள், எட்டுச் சிறுகதைத் தொகுப்புகள் எழுதிவிட்டீர்கள். இந்த 30 ஆண்டுகால எழுத்து வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள், அதாவது எழுதுவதில், படைப்புக்கான கருவைத் தேர்ந்தெடுப்பதில், உள்ளடக்கத்தில், வடிவத்தில், மொழியில் நீங்கள் செய்த மாற்றங்கள், புதுமைகள் என்ன?
கதை எழுத ஆரம்பிப்பது மட்டும்தான் என் வேலை. பிறகு, கதை தானே தன்னை எழுதிக்கொள்ளும், அப்படி எழுதிக்கொள்ளும் கதையில் நான் குறுக்கிடுவதில்லை. என்னுடைய பதினெட்டு, பத்தொன்பது வயதில் 70-75 வயது கொண்ட ‘கோவேறு கழுதைகள்’ நாவலின் கதாநாயகி ஆரோக்கியத்தின் மனதிலிருந்து, வாழ்விலிருந்து எழுதினேன். எனக்கு ஐம்பது வயது நடக்கும்போது ‘இப்போது உயிரோடிருக்கிறேன்’ நாவலின் மையப் பாத்திரமான 14 வயதே முடிந்த தமிழரசனின் மனநிலையிலிருந்து எழுதினேன். ஒருவிதத்தில் எனக்கு நானே ஏற்படுத்திக்கொண்ட சவால். முப்பதாண்டுகள் கடந்துவிட்ட பிறகும் இப்போதும் ஒவ்வொரு சிறுகதையும் நாவலும் எனக்குப் பரீட்சை எழுதுவதைப் போன்றுதான் இருக்கிறது. அனுபவங்களின் மூலமாகத்தான் மேலான படைப்பைத் தர முடியும்.
நான் கேட்க வந்தது, வழக்கமாக எழுத்து வழக்கில் எழுதிக்கொண்டிருந்த நீங்கள் சட்டென்று 2015இல் வெளிவந்த ‘எங் கதெ’ நாவலையும், 2024இல் வெளிவந்த ‘நெஞ்சறுப்பு’ நாவலையும் பேச்சு வழக்கில் எழுதியதற்கான காரணம் என்ன என்பதுதான்.
மனதின் தவிப்புகளை, தத்தளிப்புகளை எழுத்து வழக்கில் எழுதும்போது ஏற்படுகிற தாக்கத்தைவிட, பேச்சு வழக்கில் எழுதும்போது ஏற்படுகிற தாக்கம் அதிகம். எழுத்து வழக்கில் எழுதும்போது எழுத்தாளனுக்கான சுதந்திரம் குறைவு. பேச்சு வழக்கில் எழுதும்போது எழுத்தாளனுக்கான சுதந்திரம் கூடுதல். மனதின் வலிகளைப் பேசுவதற்கு ஏற்ற மொழி பேச்சு வழக்குதான். ‘எங் கதெ’ நாவலும், ‘நெஞ்சறுப்பு’ நாவலும் என்னை இப்படித்தான் எழுத வேண்டும் என்று கேட்டது. நான் நாவல் சொன்னபடியே செயல்பட்டேன்.
‘எங் கதெ’, ‘நெஞ்சறுப்பு’ இரண்டு நாவல்களையும் எழுத்து வழக்கில் எழுதியிருந்தால் இப்போது இந்த இரண்டு நாவல்களுக்கும் கிடைத்திருக்கும் வரவேற்பு கிடைத்திருக்குமா?
தெரியாது. ஒரு எழுத்தாளன் தனக்குத்தானே சில சோதனை முயற்சிகளை மேற்கொள்ள விரும்புவான். அப்படி நான் விரும்பி ஏற்ற முயற்சிதான் முழு நாவலையும் பேச்சு வழக்கிலேயே எழுதுவது என்பது. முயற்சி முக்கியம், முயற்சியில் வெற்றி தோல்வி முக்கியமல்ல. பிறகு, நீங்கள் சொன்ன ‘வரவேற்பு’ என்ற சொல் எனக்கு எரிச்சலைத் தருகிறது. சினிமா நடிகைகளின் பெயர்களில் விற்கப்படும் சேலைகளுக்குக் கிடைக்கும் வரவேற்பு, கவனம் என் நாவல்களுக்குக் கிடைக்க வேண்டியதில்லை.
‘எங் கதெ’, ‘நெஞ்சறுப்பு’ நாவல்களைப் பேச்சு வழக்கில் எழுத முயன்றதுபோல் சிறுகதைகளில் வேறு ஏதாவது புது மாதிரியான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறீர்களா?
புது முயற்சி என்று சொல்லலாமா என்று தெரியவில்லை. எனக்கு அதிகமான சவால்களைத் தந்த கதைகள் என்று ‘திருநீறு சாமி’, ‘சாம்பன் கதை’, ‘தண்டகாரண்யத்தில் சீதை’ ஆகியவற்றைச் சொல்லலாம். ‘திருநீறு சாமி’ சித்தர்களுடைய வாழ்வைப் பேசுவது. ‘சாம்பன் கதை’ கிருஷ்ணனுக்கும் சாம்பவதிக்கும் பிறந்த சாம்பன் பற்றிய புராணக் கதை. ‘தண்டகாரண்யத்தில் சீதை’ வால்மீகி ராமாயணத்தில் வரக்கூடிய நான்கு வரிகளை எடுத்துக்கொண்டு விரிவாக்கி எழுதப்பட்டது. ‘திருநீறு சாமி’ கதைக்காகச் சித்தர்களைப் பற்றி நிறைய படிக்க வேண்டியிருந்தது. அதே மாதிரி ‘சாம்பன் கதை’, ‘தண்டகாரண்யத்தில் சீதை’ கதைகளுக்காக ‘சாம்பபுராணம்’, ‘ராமாயணம்’ ஆகியவற்றைப் படிக்க வேண்டியிருந்தது. இது புது அனுபவமாக இருந்தது. இந்த மூன்று கதைகளில் இடம்பெறும் தகவல்களைச் சரிபார்க்கவே காலம் பிடித்தது. நல்ல பயிற்சியாக இருந்தது. என்னிடம் அதிகம் வேலை வாங்கிய கதைகள். எனக்கான மூன்று சிறந்த ஆசிரியர்கள். ‘ஈசனருள்’ சிறுகதை ஒரு பாடகியைப் பற்றியது. அந்தக் கதைக்காக நான் இசை பற்றிய புத்தகங்களைப் படித்தேன்.
உங்களுடைய நாவல்களில், சிறுகதைகளில் நீங்கள் எதிர்பார்த்த கவனம் கிடைக்காத படைப்புகள் என்று எதைச் சொல்வீர்கள்? ‘கோவேறு கழுதைகள்’ நாவலைவிடவும், ‘எங் கதெ’, ‘நெஞ்சறுப்பு’ நாவல்களைவிடவும் அதிகம் பேசப்பட்டிருக்க வேண்டியது ‘செடல்’ நாவல்தான்.
சில படைப்புகள் உடனடியாகப் பேசுபொருளாகும். சில படைப்புகளுக்குக் காலம் தேவைப்படும். ஒவ்வொரு வாசகருக்கும் ஒரு கருத்து இருக்கும். ஒவ்வொரு வாசகருக்கும் பிடித்தமான படைப்பு என்று இருக்கும். உங்களுக்கு ‘செடல்’ பிடித்திருக்கிறது. வாசகக் கவனம் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே நான் எழுதுவதில்லை. எழுதுவது மட்டும்தான் என்னுடைய வேலை. படிப்பதும் படிக்காமலிருப்பதும் வாசகர்களுடைய பொறுப்பு. ஏற்பதும் நிராகரிப்பதும்கூட.
‘எங் கதெ’ நாவலில் வரும் கமலா, ‘நெஞ்சறுப்பு’ நாவலில் வரும் சசிகலா இருவரையும் ஆண்மையப் பார்வையிலிருந்து எழுதியிருக்கிறீர்கள் என்றும் சொல்லப்படுகிறதே?
மற்றவர்கள் அப்படிச் சொல்கிறார்களா? நீங்கள் சொல்கிறீர்களா?‘ஆண்மைய, பெண்மையப் பார்வை, அழகியல், தேடல், அ-புனைவு, பிரக்ஞை, நுண்ணுணர்வு, சூட்சுமம், நவீனம், பின்நவீனத்துவம், விளிம்புநிலை’ தொனி, பாணி, படிமம், கற்பனாவாதம், மானுடத் திரள், செவ்வியல் தன்மை, படைப்பின் சூட்சமம், போதாமை, மரபின் நீட்சி, அமானுஷ்யம், பெண்ணுடல், தொன்மம், மெய்யியல், படைப்பின் புதிர், இருண்மை, பண்பாட்டு நகர்வுகள், சூனியவாதம், தீவிர இலக்கியம், தீவிர இலக்கிய வாசகர், தீவிர இலக்கியச் சூழல் போன்ற பல பெரிய வார்த்தைகளைப் பேசி, நீங்களும் குழம்பி என்னையும் குழப்பக் கூடாது. நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் உங்களை மேதையாகக் காட்டாது. இரண்டு நாவல்களிலும் கதை சொல்பவர் ஆணாக இருப்பதால், அவர் தன் தரப்பு நியாயங்களை மட்டுமே சொல்லியிருக்கிறார் என்பது குற்றச்சாட்டு. ‘எங் கதெ’ நாவலில் கதை சொல்பவர் அம்பலவாணன், அவர் தன்னுடைய கதையைவிட கமலாவின் கதையைத்தான் அதிகமாகச் சொல்லியிருக்கிறார். ‘நெஞ்சறுப்பு’ நாவலில் கதையைச் சொல்பவர் ஸ்ரீரங்கபெருமாள். அவர் தன்னைப் பற்றி சொல்வதைவிட சசிகலாவைப் பற்றித்தான் அதிகம் சொல்லியிருக்கிறார். இது நாவல்களை முழுமையாகப் படித்தவர்களுக்குத் தெரியும்.
அடிப்படையில் நீங்கள் யதார்த்தவாதக் கதைசொல்லி. திராவிட இயக்கச் சிந்தனையாளர். அப்படி இருக்கும்போது ‘சாம்பன் கதை’, ‘தண்டகாரண்யத்தில் சீதை’, ‘திருநீறு சாமி’ ஆகிய கதைகளை எழுதுகையில் உங்களுக்கு நெருடலாக இல்லையா?
இல்லை. நான் பின்பற்றுகிற கொள்கைக்கும் நான் சார்ந்திருக்கிற கட்சிக்கும் என்னுடைய சிறுகதைகளில், நாவல்களில் வரக்கூடிய கதாபாத்திரங்களுக்கும் என்ன சம்பந்தம்? என்னுடைய சிறுகதைகளிலும் நாவல்களிலும் வரும் கதாபாத்திரங்களின் இயல்பில், வாழ்வில், மொழியில், பண்பாட்டில், சிந்தனையில், நடவடிக்கையில் நான் ஒருபோதும் குறுக்கிட்டதில்லை. நான் என்னுடைய இயல்பில் இருக்கிறேன். என்னுடைய கதாபாத்திரங்கள் அவர்களுடைய இயல்பில் இருக்கிறார்கள். இந்த மூன்று கதைகளும் பக்தியைப் பற்றிப் பேசவில்லை. பக்தியைக் கேள்விக்குட்படுத்துகின்றன. அதே மாதிரி ‘பிராது மனு’ கதையும் பக்தியைக் கேள்வி கேட்கிற கதைதான். இந்த இடத்தில் நான் ஒன்றைக் குறிப்பிட்டுச்சொல்ல விரும்புவது, சிறுகதைகளாக இருந்தாலும் சரி, நாவல்களாக இருந்தாலும் சரி, நான் உருவாக்கும் கதாபாத்திரங்களின் மீது அனுதாப உணர்வோ, இரக்க உணர்வோ, பச்சாதாப உணர்வோ ஏற்பட வேண்டும் என்ற விருப்பத்தின் பெயரில் இதுவரை நான் ஒரு வார்த்தையை, ஒரு வாக்கியத்தைக்கூட எழுதியதில்லை. அப்படி என்னையும் மீறி எழுதியிருந்தால் — அது நான் என்னுடைய கதாபாத்திரங்களுக்குச் செய்த துரோகமாகும்.
நீங்கள் இதுவரை எழுதியிருக்கிற நாவல்களுக்கும் சிறுகதைகளுக்கும் கரு எப்படி உங்களுக்குக் கிடைத்தது?
நான் வாழ்ந்ததிலிருந்து, கேட்டதிலிருந்து, பார்த்ததிலிருந்து, படித்ததிலிருந்து உருவானவைதான்.
நான் படித்த பத்திரிகைகளும் புத்தகங்களுமே பல சிறுகதைகள் உருவாகக் காரணமாக இருந்திருக்கின்றன. சேலத்தில் பிணம் எரிக்கும் பெண் பற்றிய குறிப்பு ஆனந்த விகடனில் வந்தது. அதைப் படித்த பிறகுதான் நான் ‘மயானத்தில் பயமில்லை’ சிறுகதையை எழுதினேன். ‘விருதுநகர் மாவட்ட சித்தர்கள்’ என்ற நூலைப் படித்த பிறகுதான் ‘திருநீறு சாமி’ சிறுகதையை எழுதினேன். ‘மரணத்தின் கதை’ (The Death Script) – அசுவதோஷ் பரத்வாஜ் (மொழியாக்கம்: அரவிந்தன்) என்ற நூலைப் படித்த பிறகு ‘தண்டகாரண்யத்தில் சீதை’ கதையை எழுதினேன். விருத்தாசலத்திற்கு அருகில் இருக்கும் காணாது கண்டான் என்ற கிராமத்தின் பெயர் ரொம்பவும் வித்தியாசமாக இருக்கிறதே என்று விசாரித்த பிறகுதான் ‘சாம்பன் கதை’யை எழுதினேன். சில தொலைபேசி உரையாடல்களும் எனக்குப் பல கதைகளைத் தந்திருக்கின்றன.
பேராசிரியர் அ. ராமசாமியுடன் ஒருநாள் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போது உருவான கதைகள்தான் ‘உயிர் நாடி I’, ‘உயிர்நாடி II’. கவிஞர் சக்திஜோதியுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போது மனதில் உருவான கதைகள்தான் ‘தலைக்கடன்’, ‘பணியாரக்காரம்மா’. திருநெல்வேலியைச் சேர்ந்த உதவிப் பேராசிரியை Dr. A.S. பிரேமாவிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போது உருவான கதைகள்தான் ‘ஆண்டவரின் கிருபை’, ‘மனமுறிவு’. ஒரு நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி வாழ்வரசி சுப்ரமணியத்துடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போது உருவான கதைகள்தான் ‘ஆலடி பஸ்’, ‘கொலைச் சேவல்’, ‘தாலிமேல சத்தியம்’. மலேசியாவிலிருந்து வந்த பெண்ணை விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலுக்கு அழைத்துக்கொண்டுபோனபோது உருவான கதைதான் ‘பிராது மனு’. அண்ணன் தங்கம் தென்னரசு அவர்களின் தாயார் மரணத்திற்காகச் சென்றிருந்தபோது உருவானதுதான் ‘கட்சிக்காரப் பிணம்’ சிறுகதை. உதவிப் பேராசிரியை Dr. மஜிதா பர்வினுடன் பேசும்போது அவர் சொன்ன தகவலை வைத்து எழுதிய கதைதான் ‘காதல்’.
விருத்தாசலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு ஜெயலலிதா வந்தபோது வெயிலில் மயங்கிவிழுந்து செத்தவர்கள் பற்றியதுதான் ‘வாழ்க வாழ்க’ நாவல். எழுத்தாளர் அ. வெண்ணிலாவுடன் பேசிக்கொண்டிருக்கும்போது மனதில் உருவான கதைதான் ‘ரவ நேரம்’. என் மனைவி தன்னுடைய ஊரில் நடந்த ஆணவக் கொலையைப் பற்றிச் சொன்னார். அதுதான் ‘சத்தியக்கட்டு’ என்ற சிறுகதை. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். பாம்பு எப்போது கடிக்கும் என்று தெரியாததுபோலவே நாவலுக்கான, சிறுகதைக்கான கரு எப்போது மனதில் தோன்றும் என்றும் சொல்ல முடியாது.
சிறுகதை, நாவல் எழுதிக்கொண்டிருக்கும்போது அது குறித்து நண்பர்களுடன் பேசுவீர்களா? அவர்கள் சொல்கிற கருத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்களா?
‘எங் கதெ’ நாவல் எழுதிக்கொண்டிருக்கும்போது மதுரை என். ரமணியுடன் ஒவ்வொரு இரவும் பேசுவேன். அன்று எழுதிய புதிய chapterஐ போனிலேயே படித்துக்காட்டுவேன். படித்துக் காட்டியதைப் பற்றி அவர் கருத்து சொல்வார். அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே என் மனதில் புதிய வார்த்தைகள் தோன்றிவிடும். எழுதியிருக்கும் chapterலிருந்து சில வரிகளை எடுக்க வேண்டும் என்றும் தோன்றிவிடும். உண்மையைச் சொன்னால் நான் இதுவரை எழுதியிருக்கிற சிறுகதைகளும் நாவல்களும் நான் மட்டுமே எழுதியதில்லை. க்ரியா ராமக்ரிஷ்ணன், பிரசன்னா, கி. ஆஷா, என். சிவராமன், காலச்சுவடு அரவிந்தன், திலகவதி ஐ.பி.எஸ்., என்னுடைய கதைகளை டைப் செய்த புகழ் அரசி, கதையில் அது சரியில்லை, இது சரியில்லை என்று சொல்லி என்னிடம் சண்டை வாங்கும் என் மனைவி ச.புஷ்பவல்லி என்று என்னுடைய நண்பர்களும் சேர்ந்து எழுதியதுதான்.
சிலரோடு பேசியதனால் என்னுடைய சிறுகதைகளில், நாவல்களில் பல மாற்றங்கள் நடந்திருக்கின்றன. ‘இப்போது உயிரோடிருக்கிறேன்’ நாவலை எழுதி அச்சுக்கு அனுப்பும் நிலையில் தற்செயலாக மனுஷ்ய புத்திரனுடன் பேசிக்கொண்டிருந்தபோது, வீல் சேரில் வாழும் மனிதர்களைப் பற்றிய பேச்சு வந்தது. அந்தப் பேச்சு ‘இப்போது உயிரோடிருக்கிறேன்’ நாவலின் கடைசி வரியை மாற்றி எழுத வைத்தது. அந்த வரி இதுதான்.-
“நான் உட்கார்ந்துகொண்டிருந்த சக்கர நாற்காலியின் சக்கரங்கள் உருள்கிற சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. அந்தச் சத்தம் இப்போதைக்கு ஓயாது போலிருக்கிறது.”
உங்களுடைய படைப்புகளைத் திரும்பத் திரும்பத் திருத்தி, மாற்றி எழுதுவதாக நீங்களே பல பேட்டிகளில் கூறியிருக்கிறீர்கள். அவ்வாறு செய்வதால் படைப்பின் வீரியம், அழகு குறைந்துவிடாதா?
திருத்தி, மாற்றி எழுதாத எழுத்தாளர் என்று உலகில் ஒரு எழுத்தாளரை உங்களால் காட்ட முடியுமா? முதல்முறை எழுதிய பிரதியை அப்படியே அச்சுக்கு அனுப்பிய எழுத்தாளர் என்று ஒருவரைக் காட்டுங்கள். ஒரு கதைக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசிக்கும்போதே எடிட்டிங் வந்துவிடுகிறது. ஜூலை 2024 உயிர்மை இதழில் ‘தண்டகாரண்யத்தில் சீதை’ சிறுகதையை எழுதினேன். அந்தக் கதையை எழுத எனக்கு எட்டு மாதங்கள் பிடித்தது. வெளியிடலாம் என்று முடிவுசெய்துவிட்டேன். வெளியிடுவதற்கு முன்பு மதுரை என். சிவராமனிடம் படிக்கக்கொடுத்தேன். கதையைப் படித்த சிவராமன் ‘கதையில் எழுத்தாளர் அதிகமாகப் பேசியிருக்கிறார்’ என்று சொன்னார். அந்த ஒரு வார்த்தைக்காக 23 பக்கக் கதையை 10 பக்கமாக மாற்றினேன். இரண்டு பிரதிகளையும் தருகிறேன், எது சரி என்று நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள். எது மேலானது என்பது எனக்குத் தெரியும். அதே நேரத்தில், நான் நினைத்தது மட்டுமே மேலானது அல்ல என்பதும் எனக்குத் தெரியும். எழுதுவது சுலபம், எழுதியவற்றில் எந்தச் சொல், வாக்கியம், தகவல் பொருத்தமற்றது என்பதைக் கண்டுபிடித்து நீக்குவது கடினமான வேலை. ‘செப்பம் செய்வது’, ‘செழுமைப்படுத்துதல்’ என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுதான் எடிட்டிங். படைப்பைத் தூய்மைப்படுத்தும் பணி என்றுகூடச் சொல்லலாம். காகிதத்தில், கம்ப்யூட்டரில் ஒரு கதை எழுதுகிறீர்கள் என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள். காகிதத்தில், கம்ப்யூட்டரில் எழுதுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட கதையை மனம்தான் முதலில் எழுதுகிறது. மனதில் பலமுறை எழுதிஎழுதிப் பார்த்த பிறகுதான் காகிதத்தில், கம்ப்யூட்டரில் எழுதுகிறோம். திரும்பத்திரும்ப மனம் கதையை எழுதுகிறது என்றால் அப்போதே எடிட்டிங் ஆரம்பித்துவிடுகிறது. மனதால் எழுதப்படும் கதைகள்தான் எல்லாமும்.
பொதுவாக உங்களுடைய நாவல்களிலும் சரி, சிறுகதைகளிலும் சரி நவீன வாழ்க்கை மாறுதல்களுக்கு எதிராக இருப்பதுபோல் தோன்றுகிறது. தொழில்நுட்பத்திற்கு எதிரான மனநிலையும் வெளிப்படுகிறது. காலமாற்றத்தை உங்களுடைய மனம் ஏற்க மறுக்கிறதா?
நான் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் காலமாற்றம் நிற்காது. நான் விரும்பாததால், ஏற்க மறுப்பதால் தொழில்நுட்ப வளர்ச்சி நிற்காது என்பதை அறியாத அளவிற்கு நான் மூடன் அல்ல. என்னுடைய சிறுகதைகளையும் நாவல்களையும் சரியாகப் படிக்காமல் கேட்கப்படுகிற கேள்வி இது. பழையது – புனிதமானது, புதியது – இழிவானது என்பதல்ல. உணவு, உடை, பேச்சு, மொழி, வாழ்க்கைமுறை, உறவுமுறை எப்படிக் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே வருகின்றன என்பதைக் கண்டுபிடித்து எழுதுவதுதான் எழுத்தாளனின் வேலை. அதை நான் இதுவரை சரியாகச் செய்திருப்பதாகவே கருதுகிறேன். உலகமயமாக்கத்தால் தமிழ்நாட்டு அளவில் ஏற்பட்ட கலாச்சார நெகிழ்வு பற்றி, ‘வேலை’, ‘ஆஃபர்’, ‘பிணத்துக்குச் சொந்தக்காரி’ போன்ற சிறுகதைகளை எழுதியிருக்கிறேன். ஊடகங்கள், தொலைக்காட்சிகள் சமூகத்தில் ஏற்படுத்தும் வன்முறைகள் பற்றி, ‘மணலூரின் கதை’, ‘பிழைப்பு’ ஆகிய சிறுகதைகளை எழுதியிருக்கிறேன். ‘நெஞ்சறுப்பு’ நாவலிலும் எழுதியிருக்கிறேன்.
தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் நீங்கள் எழுதிய ‘பெத்தவன்’ கதைக்குத் தனித்த இடம் உண்டு. அந்தக் கதையை எழுதுவதற்கு எந்த விஷயம் தூண்டுதலாக இருந்தது?
‘பெத்தவன்’ நெடுங்கதை சார்ந்து பல நேர்காணல்களில் பதில் சொல்லிவிட்டதால் இப்போது அது பற்றி நான் விரிவாகப் பேச விரும்பவில்லை. கதை வெளியான இரண்டாவது மாதத்தில் இளவரசன் – திவ்யா பிரச்சினை பூதாகாரமாக வெடித்ததால் ‘பெத்தவன்’ கதை அரசியல்ரீதியாகக் கூடுதல் கவனம் பெற்றது. ‘பெத்தவன்’ கதைக்கு முன்பாக, ஆணவப் படுகொலை சார்ந்து, ‘சத்தியக்கட்டு’ என்ற கதையை எழுதியிருக்கிறேன். ‘பெத்தவன்’ கதைக்குப் பின்னால், சாதிய வன்மம் எப்படியெல்லாம் வெளிப்படுகிறது என்பதைச் சொல்ல ‘போலீஸ்’, ‘சாவு சோறு’, ‘நன்மாறன் கோட்டைக் கதை’ ஆகிய சிறுகதைகளையும் எழுதியிருக்கிறேன்.
நீங்கள் திராவிட இயக்க அரசியலை ஏற்றுக்கொண்டவர். திராவிட இயக்க எழுத்தாளர் என்ற அடையாளத்தை மறைக்காதவர். பழைய திராவிட இயக்க எழுத்தாளர்களுடைய எழுத்துக்கும் உங்களுடைய எழுத்துக்கும் பெரிய வேறுபாட்டை உணர்கிறேன். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?
என்ன வேறுபாட்டை உணர்ந்தீர்கள்? அப்படி நான் உணரவில்லை. கதையில் நேரடியாக அரசியலை எழுதியவர்கள் அவர்கள். மொழியில் பெரிய மாற்றத்தை உண்டாக்கியவர்கள். அவர்கள் உருவாக்கிய, கட்டமைத்த மொழியில்தான் இன்றைய எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். நானும் எழுதிக்கொண்டிருக்கிறேன். பழையது ஒருநாளும் புதியதாக மாறாது. புதியது படிப்படியாகப் பழையதாக மாறும்.
தமிழ் மொழியில் நவீனத்துவ எழுத்தாளர்கள் என்றால் அது திராவிட இயக்க எழுத்தாளர்கள்தான். திராவிட இயக்க எழுத்தாளர்கள் எழுதவருவதற்கு முன்பு தமிழ் உரைநடை, எழுத்து வழக்கு, கதைக்களம், கதாபாத்திரங்களின் சித்தரிப்பு, அவர்கள் பயன்படுத்திய மொழி எப்படியிருந்தன என்பதை அறிய வேண்டும். 2000க்குப் பிறகு எழுதவந்தவர்கள்தான் நவீனத்துவ எழுத்தாளர்கள் என்பது முழுப் பொய். திராவிட இயக்க எழுத்தாளர்களின் எழுத்துகளைப் படிக்காமலேயே தாங்கள்தான் நவீன, நவீனத்துவ எழுத்தாளர்கள் என்று பெருமை பேசுவது தவறு. திராவிட இயக்க எழுத்தாளர்களின் எழுத்துகள் இல்லாமல் நவீன இலக்கியம் என்பது தமிழில் இல்லை. ‘பெண் ஏன் அடிமையானாள்’ நூலை எழுதிய பெரியார் திராவிட இயக்க எழுத்தாளர்தானே? அண்ணா எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்’ நாடகத்திற்கு இணையாக நவீன எழுத்தாளர்களால் வேறு ஒரு நாடகத்தை எழுதிக்காட்ட முடியுமா? பாரதிதாசன் யார்?
உங்களுடைய நாவல்களும் சிறுகதைகளும் நடைமுறை வாழ்க்கையைப் பேசும் யதார்த்த வகையைச் சார்ந்தவையே. வரலாறு, சயின்ஸ் பிக்ஷன், க்ரைம், திரில்லர், ஈவில் வகையான கதைகளை நீங்கள் ஏன் எழுதுவதில்லை? கோணங்கி மாதிரி மாறுபட்ட மொழியில், கதைசொல்லல் முறையை நீங்கள் ஏன் மேற்கொள்ளவில்லை?
நீங்கள் சொல்கிற வகையிலான கதைகளை நான் இதுவரை எழுதியதில்லை. அவற்றை எழுதுவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். சவாலான படைப்புகள் முன்னுதாரணங்களாக இல்லாததால் பழக்கப்பட்ட பாதையிலேயே நடக்க வேண்டியிருக்கிறது. பழக்கம் அரிதான பண்பு என்று நான் கருதவில்லை. பிறர் மாதிரி ஒருநாளும் எழுத மாட்டேன். எனக்கான மொழியில், எனக்கான கதையைத்தான் நான் எழுதுவேன். புளியம் பழத்தில் கசப்பைத் தேடாதீர்கள். வேப்பம் பழத்தில் புளிப்பைத் தேடாதீர்கள்.
மேற்கத்திய நாடுகளிலெல்லாம் நாவல்களைத் திரைப்படங்களாக எடுக்கிறார்கள். ஆனால் இந்தியாவில், தமிழ்நாட்டில் நாவல்களை, சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் எடுப்பதில்லையே ஏன்?
தமிழ்நாட்டில் திரைப்படத் தயாரிப்பாளர்கள், ‘ஒன் லைனில் கதையைச் சொல்லுங்க’ என்று கேட்பவர்களாக இருக்கிறார்கள். தயாரிப்பாளரின் மனநிலைக்கேற்ப திரைப்பட இயக்குநர்களும் செயல்படுகிறார்கள். பத்திருபது நாவல்களைப் படித்த தயாரிப்பாளர் என்று ஒருவரைக்கூடக் காட்ட முடியாது. இயக்குநர்களும் நிறைய படிக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. நாவல், சிறுகதை சார்ந்த புத்தகம் படிப்பது என்பது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாறும்போது, நீங்கள் விரும்புவது தமிழ்நாட்டில் நடக்கலாம். தேர்வுக்காகப் படிப்பதைத்தான் நாம் படிப்பு, கல்வி என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். நாவல், சிறுகதை படிப்பது வீண் வேலை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
உங்களுடைய நாவல்களில், சிறுகதைகளில் திரைப்படமாக எடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா? யாராவது கேட்டிருக்கிறார்களா?
‘பெத்தவன்’ கதையைத் திரைப்படமாக, குறும்படமாக எடுப்பதற்குக் குறைந்தது இருபது, முப்பது பேருக்கு மேல் வந்தார்கள். ‘முந்திரிக்காடு’ என்ற பெயரில் மு. களஞ்சியம் எடுத்தார். படம் ரிலீஸ் ஆவதற்கே சிரமமாகிவிட்டது. அது அவர் செய்த அரசியல். பெயருக்கு ரிலீஸ் செய்தார்கள். ‘ஆகாசத்தின் உத்தரவு’ சிறுகதை குறும்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. ‘செல்லாத பணம்’ நாவலை வெற்றிமாறன் திரைப்படமாக எடுப்பதற்குப் பேசினார். ‘எங் கதெ’ நாவலைப் படமாக எடுப்பதற்காக மீரா கதிரவன் ஒப்பந்தம் போட்டார். பிறகு ஆளையே காணவில்லை. ‘எங் கதெ’ நாவலைப் படம் எடுப்பதற்காக இப்போது ஒருவர் முயன்றுகொண்டிருக்கிறார்.
தமிழ் சினிமாக்கள் பற்றி உங்களுடைய அபிப்பிராயம் என்ன?
1997க்குப் பிறகு நான் தியேட்டருக்கே சென்றதில்லை. எந்த ஒரு தமிழ் சினிமாவும் என்னை தியேட்டருக்கு வா என்று கூப்பிடவே இல்லை. அதற்குக் காரணம் தமிழ் சினிமா வேறாகவும், நடைமுறை தமிழ்ச் சமூகம் வேறாகவும் இருப்பதுதான். கதாநாயகனும் கதாநாயகியும் இருபது முப்பது பேருடன் சேர்ந்து கூட்டாகக் காதல் பாட்டு பாடுவது என்றைக்குமே நம்முடைய வாழ்வில் சாத்தியப்படாது. அப்புறம் ஒரே ஆள் இருபது முப்பது பேரை அடித்து வீழ்த்துவது, கெட்ட வார்த்தைகளைப் பேசி, உருவத்தைக் கேலி செய்து பேசுவதுதான் தமிழ் சினிமாவின் நகைச்சுவை. தமிழ் சினிமாவில் காட்டப்படும் ஒரு காட்சிகூட என்னுடைய வாழ்க்கையில் மட்டுமல்ல, தமிழ்ச் சமூக வாழ்க்கையிலும் சாத்தியப்படாத, நடக்காத ஒன்று. தமிழ் சினிமா தயாரிப்பாளருக்குப் பணம் சம்பாதிப்பதற்கான வழி. நடிகர்களுக்கு (நடிகைகளுக்கு அல்ல), அரசியலுக்கு, அதிகாரத்திற்கு வருவதற்கான வழியாகத்தான் தமிழ் சினிமா இருக்கிறது. எவ்வளவுதான் குறைசொன்னாலும் தமிழ் சினிமாவில் இடம்பெற்றுள்ள பாடல்களைத்தான் விரும்பிக்கேட்கிறேன். மறுக்க முடியாது. தமிழ் சினிமாப் பாடல்கள் ஒரு விதத்தில் தமிழ்ச் சமூகத்தை ஆறுதல் படுத்திக்கொண்டிருக்கின்றன.
ஒரு நாவலை, சிறுகதையை எழுதுவதற்கு முன்பாகக் கதையை இப்படித்தான் எழுத வேண்டும், கதாபாத்திரங்கள் இவர் இவர் என்று தீர்மானித்திருப்பீர்கள். ஆனால், கதையை எழுத ஆரம்பித்த பிறகு புதிதாகக் கதாபாத்திரங்கள் உருவாகி, கதையின் போக்கை மாற்றியிருக்கிறார்களா?
நிறைய அப்படி நடந்திருக்கிறது. புதுக் கதாபாத்திரங்கள் வரும், ஏற்கனவே திட்டமிட்டிருந்த கதாபாத்திரங்கள் தானாகவே வெளியேறிவிடும். ‘பெத்தவன்’ கதையை மூன்று, நான்கு முறை கையால் எழுதி, தட்டச்சு செய்யக் கொடுத்தேன். தட்டச்சு செய்துகொடுத்த பெண்ணின் கால்களைப் பார்த்தேன். அப்போது உருவான கதாபாத்திரம்தான் ‘பெத்தவன்’ கதையில் வரும் பாக்கியத்தின் தங்கை செல்வராணி. போலியோ பாதிப்பால் இரண்டு கால்களும் சூம்பிப்போன பெண். கதைக்குள் செல்வராணி வராமல்போயிருந்தால் கதை வலுப்பெற்றிருக்காது, முழுமை பெற்றிருக்காது.
‘கோவேறு கழுதைகள்’ நாவலில் ஆரம்பித்து ‘செல்லாத பணம்’, ‘எங் கதெ’ நாவல்கள்வரை பத்து நூல்களுக்கு மேல் உங்களுடைய படைப்புகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. உங்களுடைய கதைகளில் வரக்கூடியவர்கள் எளிய, உழைக்கும் கிராமத்து மனிதர்கள். அவர்களை நீங்கள் ரத்தமும் சதையுமாக எழுதியிருப்பீர்கள். அந்த உணர்வு ஆங்கில மொழியாக்கத்தில் வந்திருக்கிறதா?
வந்திருக்கும் என்றுதான் நம்புகிறேன். நான் நேரடியாகப் படித்துப்பார்ப்பதில்லை. நண்பர்களிடம் கொடுத்துதான் சரிபார்ப்பேன். அவர்கள் சரிபார்த்த பிறகு ஒப்புதல் அளிப்பேன். இதுவரை மொழியாக்கம் செய்த நூல்களில் மோசமானது என்று எதுவும் வரவில்லை என்றே நினைக்கிறேன். ‘இதுதான் சிறந்த மொழிபெயர்ப்பு நூல்’ என்று சொல்வதும், ‘இவர்தான் சிறந்த மொழிபெயர்ப்பாளர்’ என்று அடையாளப்படுத்துவதும் கடினம். தற்போது தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவர்கள் பெரும்பாலும் பிராமணர்கள்தான். முற்றிலுமாக வேறுபட்ட கலாச்சாரத்தை மொழிபெயர்ப்பது சாத்தியமா? பெரியப்பா, சித்தப்பா, மாமா என்று தமிழில் உறவுமுறைக்கான சொற்கள் இருக்கின்றன. ஆனால், ஆங்கிலத்தில் மூன்றுக்கும் சேர்த்து, ‘uncle’ என்ற ஒரு வார்த்தைதான் இருக்கிறது.
தீபாவளி மலர், பொங்கல் மலர் தயாரிக்கிறோம், அதற்கு நீங்கள் ஒரு கதை தர வேண்டும் என்று யாராவது கேட்டிருக்கிறார்களா? அப்படிக் கேட்டதற்காக எழுதிய சிறுகதை எது?
பத்திரிகையாளர்கள் கேட்டார்கள் என்பதற்காக நான் இதுவரை ஒரு கதையைக்கூட எழுதியதில்லை. ஒரு வாரத்தில், இரண்டு வாரத்தில் வேண்டும் என்று சொல்வதோடு இத்தனை வார்த்தைகளில் வேண்டும் என்றும் கேட்பார்கள். அப்படிக் கேட்கும்போதெல்லாம் எனக்கு எரிச்சலாக இருக்கும். என்னால் ஒரு வார, இரண்டு வாரக் கெடுவில், அதுவும் இவ்வளவு வார்த்தைகளுக்குள் என்ற கட்டுப்பாட்டோடு எழுத முடியாது. எழுதவும் வராது. ஒரு கதைக்கான கரு, என்னை எழுது, என்னை எழுது என்று கட்டாயப்படுத்தித் துன்புறுத்தினாலே ஒழிய நானாக எதையும் எழுதியதில்லை.
பல எழுத்தாளர்கள் அப்படி எழுதவும் செய்கிறார்கள்தானே?
குறிப்பிட்ட கால எல்லைக்குள், குறிப்பிட்ட வார்த்தைகளின் எண்ணிக்கைக்குள் எழுதுகிற திறமை என்னிடம் இல்லை. அப்படிப்பட்ட திறமை என்னிடம் இல்லை என்பதற்காக எனக்கு எந்த வருத்தமுமில்லை, வெட்கமுமில்லை. பணத்திற்காக நான் எழுத்துகளை விற்பதில்லை. மற்றவர்கள் அப்படியிருந்தால் நான் அதற்குப் பொறுப்பல்ல.
சமூக வலைதளங்களில் எழுதப்படும் எழுத்துகள் குறித்து உங்களுடைய பார்வை என்ன?
எழுதிய மறுநொடியே வெளியிட்டுவிட வேண்டும் என்ற மனோபாவத்தைச் சமூக வலைதளம் வளர்த்திருக்கிறது. பத்திரிகைகளை நம்பியிருக்க வேண்டியதில்லை. ஒரு மாதம், இரண்டு மாதம் காத்திருக்க வேண்டியதில்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. எழுத்தாளர்களுக்குப் பொறுமை போய்விட்டது. அன்றாடச் செய்திகள் வேறு, சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் வேறு. தகவல்களின் உலகத்தில் இருக்கிறோம். தகவல்களைத் தருபவர்களாகவும் இருக்கிறோம். இன்றைய முகநூல் பதிவு மறுநாள் செத்துவிடும். செத்துப்போகிற விஷயங்களை எழுதுபவன் எழுத்தாளன் அல்ல. நம்முடைய எழுத்தாளர்கள் ஒரு விஷயத்தை எழுதும்போது முழுமையாக ஆராய்ந்து ஸ்டெடி செய்து எழுதுகிறார்கள் என்று சொல்ல முடியாது. ‘டச்’ மட்டுமே செய்கிறார்கள்.
காலம்கடந்து நிற்பதற்கு எப்படி எழுத வேண்டும்?
பக்க அளவில், ஒரு வார, இரு வாரக் கால அவகாசத்தில் எழுதப்படுபவை காலம்கடந்து நிற்காது. கூத்தாடி சிலம்பம் படை வெட்டுக்கு உதவாது.
2000இலிருந்து 2024வரை தமிழில் எழுதப்பட்ட நாவல்களில், சிறுகதைகளில் காலம்கடந்து நிற்கும் படைப்புகள் என்று பட்டியலிட முடியுமா?
முடியாது. அதைக் காலம்தான் தீர்மானிக்கும். காலம்தான் சார்பற்ற, சமரசமற்ற நீதிபதி. அந்த நீதிபதி நம் கண்ணுக்குத் தெரிய மாட்டார். தெரிய வேண்டிய தேவையுமில்லை.
அண்மைக் காலத்தில் யூடியூப்பில் கதையைப் படிப்பது, கதையைச் சொல்வது, விமர்சனம் செய்வது என்று பலரும் கிட்டத்தட்ட தொழில் மாதிரி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இது குறித்து உங்களுடைய பார்வை என்ன?
நல்ல விஷயம் என்றுதான் நினைக்கிறேன். அதன் மூலம் பல நூல்கள் வாங்கப்படவும் படிக்கப்படவும் சாத்தியம் உண்டு. யூடியூப்பில் படிக்கப்படுகிற, சொல்லப்படுகிற முழுக் கதையையும் சிறுகதையையும் முழு நாவலையும் கேட்பார்கள் என்று நான் நம்பவில்லை. ஒரு நிமிடம், இரு நிமிடம்தான் எந்த வீடியோவாக இருந்தாலும் நாம் பார்க்கிறோம். அதற்குமேல் நமக்குப் பொறுமை இருப்பதில்லை. விமர்சனம் என்ற பெயரில், நூல் அறிமுகம் என்ற பெயரில் வருகிற வீடியோக்கள் ‘மோசம்’ என்று சொல்வதற்கில்லை. Dr. மஜிதா பர்வின் என்னுடைய ‘எங் கதெ’ நாவலை முழுதாகப் படித்திருந்தார். அதே மாதிரி, இன்னொரு யூடியூப் சேனலிலும் ‘எங் கதெ’ நாவலை முழுதாகப் படித்திருந்ததைக் கேட்டேன். ஒருசிலருக்குப் புத்தகமாகப் படிப்பதுதான் பிடிக்கும். ஒரு சிலருக்குக் கதைகேட்பது பிடிக்கும். Dr. A.S. பிரேமா தன்னுடைய யூடியூப் சேனலில் என்னுடைய தமிழ் நூல்கள், ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள் எல்லாவற்றையுமே அறிமுகம் செய்திருக்கிறார்.
யூடியூப்பில் மட்டுமல்ல. ‘கதை கேட்கலாம் வாங்க’, ‘பெருங்கதையாடல்’ என்ற தலைப்புகளில் பவா செல்லதுரை ஒரு நாவலைப் பற்றி முழுமையாகப் பேசுகிறார். அவருடைய பேச்சைக் கேட்டுவிட்டுப் பலரும் சம்பந்தப்பட்ட நாவலை, சிறுகதைகளை வாங்கவும் படிக்கவும் செய்கிறார்கள். பவா செல்லதுரையும், யூடியூப்பில் கதை சொல்கிறவர்களும், நூல் அறிமுகம் செய்கிறவர்களும் ஒரு நூலைச் சமூகத்திற்கு அறிமுகம் செய்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. கதை சொல்பவர்கள் எல்லாக் காலத்திலும் இருந்திருக்கிறார்கள். மகாபாரதம், ராமாயணம் கதைசொல்லிகளால்தான் இந்தியா முழுவதும் பரவின. நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இப்போது கதை சொல்கிறார்கள், அறிமுகம் செய்கிறார்கள் என்ற அளவில் வரவேற்கப்பட வேண்டியதுதான். இலக்கிய அரசியல் செய்யாமல் இருந்தால் சரி. இது விளம்பர உலகம். தன்முனைப்புக்கான காலம் என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன். இலக்கியம் பற்றிப் பேசுவதும் இப்போது தொழில்தான், வியாபாரம்தான்.
யூடியூப் பற்றிச் சொன்னதால் கேட்கிறேன். இப்போது யார் வேண்டுமானாலும் யூடியூப் சேனல் ஆரம்பித்து எதை வேண்டுமானாலும் பேசலாம், எப்படி வேண்டுமானாலும் பேசலாம், அதன் மூலம் பணம், புகழ் சம்பாதிக்கலாம் என்றாகிவிட்டன. யூடியூபர்கள் என்ற பெயரும் பிரபலமாகிவிட்டது இல்லையா?
ஆமாம். யூடியூபர்களும் தொலைக்காட்சிக்கார்ரகளும், சமூகம் எப்போதும் பதற்றத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். சிறிய, எளிய விஷயத்தைக்கூட ஒரு நாளோடு ஒரு மணி நேரத்தோடு முடிந்துபோகிற விஷயத்தைக்கூட, எக்காலத்திலும் அழியாத செய்தியாக, விஷயமாக மாற்றிவிடுகிறார்கள். அவர்கள் பேசுவது கருத்துச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம். பிறருடைய சுதந்திரம் பற்றி யோசிப்பதில்லை. கவலைப்படுவதுமில்லை. சமூகத்தின் மீது அவர்களுக்கு மட்டும்தான் அக்கறை இருப்பதுபோல செய்கிற பாவனை இருக்கிறதே, கொடூரம். தனிமனித அந்தரங்கத்தைக்கூடப் பணமாக மாற்றுகிறார்கள். ஊடகம், சமூக ஊடகம் செய்கிற வன்முறைகளைப் பற்றிப் பெரிய நாவலே எழுதலாம். சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் எல்லாம் இதுபற்றிப் பேசுவதில்லை, எழுதுவதில்லை. சரி, தவறு, உண்மை, பொய், நிரபராதியா, குற்றவாளியா – எதுவும் அவர்களுக்கு முக்கியமில்லை. பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்காக எல்லாவற்றையும் செய்தியாக்கிப் பரபரப்பாக்கிவிடுகிறார்கள். ஜி டி.வி.யில் ஒளிபரப்பப்படும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியைப் பற்றி என்ன சொல்ல? லட்சுமி ராமகிருஷ்ணனின் பேச்சையும் தீர்ப்பையும் பார்த்தால், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தோற்றுப்போவார். ஜி டி.வி.யில் மட்டுமல்ல, பல டி.வி.களிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. ஊடகக்காரர்கள் எல்லாம் நீதிபதிகளாகிவிட்டார்கள்.
ஊடகங்கள் சமூக வன்முறையை வளர்க்கின்றன என்று சொல்கிற நீங்கள் அது குறித்து ஏதாவது எழுதியிருக்கிறீர்களா?
பத்திரிகையாளர்களை மையப்படுத்தி, அவர்கள் பயன்படுத்துகிற ‘பேக்கேஜ்’ என்ற வார்த்தையை மையப்படுத்தி ‘பிழைப்பு’ என்ற சிறுகதையை எழுதியிருக்கிறேன். தொலைக்காட்சி நிறுவனங்கள் உருவாக்கும் நிகழ்ச்சிகள் பற்றி ‘மணலூரின் கதை’ என்ற சிறுகதையை எழுதியிருக்கிறேன். ‘நெஞ்சறுப்பு’ நாவலிலும் ஊடக வன்முறை பற்றியும், இன்று குடிசைத் தொழில் மாதிரி ஆகிவிட்ட யூடியூப்கள் பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறேன்.
திரைப்படங்கள் பார்க்கிற வழக்கம் இருக்கிறதா? நெட்ஃபிளிக்ஸில், அமேசானில் வெளியாகிய படங்களை, தொடர்களைப் பார்க்கிற வழக்கம் உண்டா?
நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைமில் இதுவரை ஒரு சினிமாகூட, தொடர்கூடப் பார்த்ததில்லை. 1997-க்குப் பிறகு நான் இன்றுவரை தியேட்டருக்கே சென்றதில்லை. தொலைக்காட்சியில் வருகிற படங்களைப் பார்ப்பதோடு சரி. பல திரைப்படங்கள் எந்த லாஜிக்குக்கும் கட்டுப்படுவதில்லை. லாஜிக் இருந்தால்தானே மேஜிக்கும்கூட எடுபடும். நிறைய தமிழ் நாவல்களும் சிறுகதைகளும்கூட அப்படித்தான் இருக்கின்றன. உண்மையைச் சொன்னால் இலக்கிய உலகில் என்னை முட்டாளாகச் சித்தரிப்பார்கள்.
அமேசான் பிரைம், நெட்ப்ளிக்ஸில் வரக்கூடிய சினிமாக்களை, தொடர்களைப் பார்ப்பதன் மூலம் கதையைத் தேர்ந்தெடுப்பதில், சொல்லும் முறையில் மொழியைக் கையாளும் விதத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறதுதானே?
நிச்சயமாக இருக்கிறது. ஒவ்வொரு விஷயமும் நமக்குப் பாடம்தான். ஒரு விஷயத்தை அணுகும் முறை, வெளிப்படுத்தும் விதம், காட்சிகள், இசை, வசனங்கள் எல்லாமும் முக்கியம்தான். எப்போதும் யாரிடமிருந்தும் கற்றுக்கொள்வதற்கு நான் தயாராகவே இருக்கிறேன். கற்றுக்கொள்வதுதானே படிப்பு என்பது. திரை அழகியல் என்று ஒன்று இருக்கத்தானே செய்கிறது? எனக்கு என்ன பிரச்சினை என்றால் அச்சில் வரக்கூடிய பத்திரிகைகளையும் புத்தகங்களையுமே படிக்க நேரம் போதவில்லை என்பதுதான்.
அண்மையில் தமிழில் வரக்கூடிய நாவல்களை, சிறுகதைகளைப் படிக்கிறீர்களா? எப்படி இருக்கிறது?
படிக்காமல் எப்படி இருக்க முடியும்? விளம்பரங்களைக்கூட நான் படிக்கிறேன். என்னால் எவ்வளவு படிக்க முடியுமோ, அவ்வளவையும் படிக்கிறேன். நான் ஒரு சிறுகதையை, நாவலை, கவிதையைப் படிப்பது, கதைக்காக அல்ல. சொற்களுக்காக, வாக்கியச் சேர்க்கை எப்படி அமைந்திருக்கிறது என்பதற்காக. மொழிக்காகத்தான் படிக்கிறேன். உலகிலேயே என்னை அதிகமாக மகிழ்விப்பது வார்த்தைகள்தான், வாக்கியங்கள்தான், அது சுட்டி நிற்கும் பொருள்தான். வார்த்தைகளின் கூட்டுச்சேர்க்கைதானே கதையைக் கட்டமைக்கிறது. வார்த்தைகளால் உருவாக்கப்பட்ட வாழ்க்கைமுறை. நிஜமான மனிதர்கள் இறந்துவிடுவார்கள். அழியாத கதையை எழுதிய எழுத்தாளனும் இறந்துவிடுவான். ஆனால், வார்த்தைகளால் உருவாக்கப்பட்ட மனிதர்களும் வாழ்க்கைமுறையும் மாறுவதுமில்லை. அழிவதுமில்லை. வார்த்தைகளில் என்ன இருக்கிறது என்று என்னிடம் கேட்டால் வார்த்தைகளில்தான் எல்லாம் இருக்கிறது என்று நான் சொல்வேன். இந்த நேரத்தில், ‘குடியிருப்பவர்கள் வெளியேறிய பிறகு வீடுகள் இறந்துவிடுகின்றன’ என்று மஹ்முத் தர்விஷ் எழுதிய வரி நினைவுக்கு வருகிறது.
ஒரு சிறுகதையை, நாவலை எழுதும்போது குறிப்பிட்ட வாசகர்களை மனதில் வைத்துக்கொண்டு எழுதுவீர்களா?
வாசகர்களுக்காகத்தான் எல்லா எழுத்தாளர்களுமே எழுதுகிறார்கள். என்னுடைய ரசனைக்காக எழுதுகிறேன் என்று சொன்னால் அது முழுப் பொய். திட்டமிட்டுக் குறிப்பிட்ட வாசகர்களை மனதில் வைத்துக்கொண்டு எழுதுகிறார்களா என்பது எனக்குத் தெரியாது. நான் அப்படி எழுதுவதில்லை. குறிப்பிட்ட வாசகர்களை மனதில் வைத்துக்கொண்டு எழுதுவது நல்ல எழுத்துமுறையும் அல்ல. மற்றவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக எழுதப்படுவது இலக்கியமுமல்ல.
நீங்கள் இதுவரை எழுதியிருக்கிற சிறுகதைகளில், நாவல்களில் உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த விஷயங்கள் பதிவாகியிருக்கின்றனவா?
நான் வாழும் வாழ்க்கையும் நான் வாழும் சமூக வாழ்க்கையும் அதன் மனிதர்களும்தான் என்னுடைய சிறுகதைகள், நாவல்கள். பிரித்துப்பார்க்க முடியாது. நான் என்னுடைய தன்வரலாற்றுக் கதையை எழுதியிருந்தால் எல்லாம் நேரடியாகத் தெரியும். சிறுகதைகளில், நாவல்களில் என்னுடைய தனிப்பட்ட விஷயங்கள் இடம்பெறும்போது அச்சம்பவங்கள், கதாபாத்திரங்களின் வாழ்க்கையோடு பொருந்திப்போய்விடும். கண்டுபிடிப்பது சிரமம். நான் பிறந்து வளர்ந்த ஊரின் மண், அந்த மண்ணின் மீது பெய்த மழை, அடித்த வெயில், வீசிய காற்று, நான், மற்றவர்கள் இருக்கிறோம். கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
சிறுகதை, நாவல், கட்டுரை என்று எழுதியிருக்கிறீர்கள். ஒன்றிரண்டு கவிதைகள்கூட எழுதியிருக்கிறீர்கள், படித்திருக்கிறேன். நாடகம் எழுதியது மாதிரி தெரியவில்லை. முயன்றுபார்ப்பீர்களா?
டி. ராஜேந்திரும் கே. பாக்யராஜும்தான் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், பாடல், இசை, நடிப்பு, தயாரிப்பு என்று டைட்டில் கார்டில் போடுவார்கள். நான் அந்த மாதிரி இல்லை. கலையின் எல்லா வடிவங்களையும் பயன்படுத்துகிற ஆற்றல் என்னிடம் இல்லை. நாடகம் யாராவது எழுதட்டுமே. எல்லாத் துறையிலும் தேர்ந்த விற்பன்னரா நான்? நாவல், சிறுகதை, கவிதை எழுதுவதற்குப் புதியதாக நிறைய பேர் வந்திருக்கிறார்கள். நாடகம் எழுதுவதற்கு ஆளே இல்லை என்ற நிலைமைதான் இருக்கிறது. ‘வெளி’ ரெங்கராஜன் மட்டும்தான் நாடகம் குறித்துத் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். பிரசன்னா ராமசாமி நாடகம் போட்டுக்கொண்டிருக்கிறார். பிரளயனும் போடுகிறார். அ. ராமசாமி நாடகக் கலை குறித்து அவ்வப்போது பேசிக்கொண்டிருக்கிறார். தமிழ் இலக்கியச் சூழலில் நாடகக் கலை குறித்த பேச்சு பெரிய அளவில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஓவியம் குறித்த பேச்சும் குறைவாகத்தான் இருக்கிறது. சினிமா நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் குறித்த பேச்சு தமிழ்ச் சமூகத்தில் அதிகமாக இருக்கிறது. தமிழ்ச் சமூகமே சினிமா சார்ந்த சமூகமோ என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ‘கேரள மக்கள் தங்களுக்கான அரசியல் தலைவர்களைத் திரையில் தேடுவதில்லை’ என்று நடிகர் மம்முட்டி சொன்னது நினைவுக்கு வருகிறது.
உங்களுக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர்கள் என்று யாரையெல்லாம் குறிப்பிடுவீர்கள்; பிடித்தமான நாவல், கவிதைத் தொகுப்பு, சிறுகதை என்று எவற்றையெல்லாம் குறிப்பிடுவீர்கள்?
தமிழ் மொழியில் எழுதுகிற எல்லா எழுத்தாளர்களையுமே எனக்குப் பிடிக்கும். வேண்டாதவர்கள் என்று எவருமில்லை. அன்பைச் சொல்லித்தருகிற இலக்கியப் படைப்புகள் எப்படிப் பிடிக்காமல் போகும்? அன்பைப் பற்றி எழுதுகிறவர்களை எப்படிப் பிடிக்காமல்போகும்?
அன்பைச் சொல்லித்தருகிறது இலக்கியம் என்று சொன்னதால் கேட்கிறேன் – அது மட்டும்தான் இலக்கியம் எழுதப்படுவதன் நோக்கமா?
வேறென்ன இருக்கிறது? மனித வாழ்வின் அதிசயத்தையும் மனித மனத்தின் விசித்திரத்தையும் இதுவரை முழுமையாக யாரும் எழுதவில்லை. அந்த முயற்சியில்தான் உலகிலுள்ள எல்லா எழுத்தாளர்களுமே முயன்றுகொண்டிருக்கிறார்கள். வெறுப்பவரையும் நேசிக்கக் கற்றுத்தருவதுதானே இலக்கியம். என்னளவில் நானும் அந்த முயற்சியில்தான் இருக்கிறேன். எழுதுவதன் மூலம் நான் வாழ்வையும் சமூகத்தையும் புரிந்துகொள்ள முயல்கிறேன்.
முன்பெல்லாம் நூல் மதிப்புரை எழுதுவீர்கள். இப்போது எழுதுவதில்லை. தமிழ் இலக்கியப் பரப்பில் நூல் திறனாய்வுகள், மதிப்பீடுகள் எப்படி இருக்கின்றன?
ஒரு புத்தகம் பிடித்துப்போய் தானாக விமர்சனம் எழுதுவது வேறு, நண்பர் கேட்கிறார் என்பதற்காக எழுதுவது வேறு, நூல் வெளியீட்டு விழாவில் வாழ்த்துரை பேசுவது வேறு. தமிழ்நாட்டில் நூல் விமர்சனம் எழுதுகிறவர்களுக்கு அரசியல் இருக்கிறது. அந்த அரசியல், நிஜமான அரசியல்வாதிகள் செய்கிற அரசியலைவிட மோசமானது. விமர்சகர்கள், பேட்டி காண்பவர்கள், M.Phil., Ph.D., ஆய்வுசெய்கிறவர்கள் எல்லோருமே ஒரு நாவலுக்குள், சிறுகதைக்குள் என்ன இருக்கிறது என்பதைப் பற்றிப் பேசாமல் தங்களுக்கு என்ன தெரியுமோ அதை எழுதி, அதுதான் விமர்சனம், திறனாய்வு என்கிறார்கள்.
ஒரு நாவலைப் படிக்கும்போது, அதன் மையம், வடிவம், மொழி, கதாபாத்திரங்கள், அதன் குணநலன்கள், சமூகப் பொருத்தம் பற்றிப் பேசாமல், பிற படைப்புகளோடு ஒப்பிடாமல், மேல் கீழ் என்று தரம் பிரிக்காமல், நாவல் எழுதியவனின் சாதியை வைத்து அல்லது அவன் சார்ந்திருக்கிற அரசியலை வைத்து மட்டுமே அதிகமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தலித்திய நாவல், பெண்ணிய நாவல், மார்க்சிய நாவல், சமூக நாவல், பின்நவீனத்துவ நாவல் என்று தலைப்பை ஏற்படுத்திக்கொண்டு, தலைப்பைப் பற்றி மட்டுமே பேசுவதுதான் தமிழ்நாட்டில் விமர்சனமாக, திறனாய்வாக இருக்கிறது. ஒப்புநோக்குகிற, ஒப்புமை செய்கிற வழக்கம் நம்முடைய விமர்சகர்களிடம் இல்லை. ரசனை உணர்வு என்பதைச் சுத்தமாக அறியாதவர்களாக இருக்கிறார்கள். உண்மையைச் சொன்னால் கோபப்படுவார்கள்.
நான் எழுதியிருந்த ஒரு புத்தக மதிப்புரையைப் படித்துவிட்டு ‘செத்துப்போகிற புத்தகங்களுக்கு எதற்காக மதிப்புரை எழுதுகிறீர்கள்?’ என்று மதுரை என். சிவராமன் கேட்டார். அதிலிருந்து புத்தக விமர்சனமோ, மதிப்புரையோ எழுதுவதில்லை. ஒருநாள் மனுஷ்ய புத்திரனுடன் பேசிக்கொண்டிருக்கும்போது என். சிவராமன் சொன்னதைச் சொன்னேன். அதற்கு அவர், ‘இது என்னங்க கொடூரமா இருக்கு? செத்துப்போனவனுக்காகப் போயி ஒரு மால போடுறதில்லியா?’ என்று கேட்டார். அன்று நான் அந்த ஒரு வார்த்தையை மட்டுமே யோசித்துக்கொண்டிருந்தேன். பிணத்தின் மீது எதற்காக மாலையைப் போடுகிறோம்?
ஒரு எழுத்தாளராக, இலக்கியப் படைப்பின் மூலம் வரலாற்றில், சமூகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும் என்று நினைக்கிறீர்களா?
சத்தியமாக இல்லை. அப்படி நினைத்தால் நான் பெரிய முட்டாள் என்று அர்த்தம். காற்றழுத்தமானியும் வானிலை அறிக்கையைப் படிப்பவரும் வானிலையை மாற்றிவிட முடியுமா? அரசியல் அதிகாரத்தால் மட்டும்தான் முடியும்.
அரசியலுக்குப் போகிற எண்ணம் இருக்கிறதா?
நான் அரசியலில் இல்லை என்று யார் சொன்னது? நான் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக எழுத்தாளருக்கான அரசியலில் இருக்கிறேன். கட்சி சார்ந்த அரசியலிலும் இருக்கிறேன்.
நான் கேட்டது தேர்தல் அரசியலுக்குப் போவீர்களா என்ற அர்த்தத்தில்?
சத்தியமாகப் போக மாட்டேன். தமிழ்நாட்டில் இருக்கிற அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு மட்டும்தான் முடிவு எடுக்கிற, எதையும் தீர்மானிக்கிற அதிகாரம் இருக்கிறது. தலைவருக்கு அடுத்த நிலையிலிருந்து கிளைக்கழகச் செயலாளர்வரை யாருக்கும் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரமுமில்லை, சுதந்திரமுமில்லை. என்னால் சுதந்திரமற்ற வாழ்க்கையை ஒரு கணம்கூட வாழ முடியாது. அரசியல் அதிகாரப் பதவிகள் செத்துப்போகும். எழுத்தாளன் என்ற பதவி ஒருநாளும் சாகாது. அதனால், நான் எழுத்தாளனாக மட்டுமே வாழவும் சாகவும் விரும்புகிறேன். அரசியல் அதிகாரம் என்பது செத்துப்போகக் கூடியது. எழுத்து அதிகாரம் அப்படியானதல்ல. நான் அரசியலில் இருக்கலாம், ஆனால் அதிகாரத்திற்கு அருகில் இல்லை. வெகுதொலைவில் இருக்கிறேன். அல்லல் பட்டதுதானே அரசியல் வாழ்க்கை.
நீங்கள் நேரடியாக அரசியல் தொடர்பில், செயல்பாட்டில் இருப்பவர். அதனால், உங்களுடைய எழுத்து வாழ்க்கை லாபமா, நஷ்டமா?
நேரடியாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் நேரம்தான் பிரச்சினை. பிறகு, மனநிலையில் ஏற்படும் மாற்றம். இது நஷ்டமென்றால் ‘கட்சிக்காரன்’, ‘நம்பாளு’, ‘பிழைப்பு’, ‘கட்சிக்காரப் பிணம்’ போன்ற சிறுகதைகளையும், ‘வாழ்க வாழ்க’ நாவலையும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் மட்டுமே எழுத முடிந்தது. இங்கே குறிப்பிட்ட சிறுகதைகளிலும் நாவலிலும்தான் அரசியல் இருக்கிறது. மற்ற கதைகளில், நாவல்களில் அரசியல் இல்லை என்று அர்த்தமல்ல. எழுத்தாளர்கள் பலரும் தமிழ்நாட்டின் அரசியல் விஷயங்களை நேரடியாக எழுதுவதற்கு அச்சப்படுகிறார்கள். எனக்கு அச்சமில்லை. அச்சப்படுகிறவன் எழுத்தாளனுமல்ல.
உங்களுடைய சிறுகதைகளை, நாவல்களைப் படிக்கிறபோது மனம் கனத்துவிடும். ரொம்பவும் சீரியஸாக இருக்கும். ஆனால், உங்களோடு நேரில் பேசும்போது ரொம்பவும் சாதாரணமாகவும் இயல்பாகவும் இருக்கிறீர்கள். கெட்ட வார்த்தைகளைச் சரளமாகப் பயன்படுத்துகிற ஆளாகவும் இருக்கிறீர்கள். இது எப்படி?
கதை எழுதுகிற ஆள் வேறு, இப்போது உங்களுடன் பேசிக்கொண்டிருக்கிற ஆள் வேறு. எப்போதும் எதுக்காக சீரியஸா இருக்க வேண்டும்? “மழையுமில்லை, வெயிலுமில்லை ஆனால் ஒரு ஆள் குடையைப் பிடித்துக்கொண்டு போகிறான் என்றோ, “தலைக்கு மேலே ஆகாயம், காலுக்குக் கீழே பூமி, உனக்கும் எனக்குமிடையில் காற்று” என்று புரியாததுபோல, குழப்புவதுபோல பேசிக்கொண்டிருக்க வேண்டுமா? அப்படிப் பேசிக்கொண்டிருந்தால்தான் நவீன எழுத்தாளரா? சாதாரணமா இருப்போம். கெட்ட வார்த்தைகளை அதிகமாகப் பேசுகிறேனா? இருந்துவிட்டுப் போகட்டும். வார்த்தையில் எது நல்ல வார்த்தை, எது கெட்ட வார்த்தை. எல்லாம் மனதின் கற்பனைதான். எழுத்தாளனுக்கு எல்லா வார்த்தையுமே பிடித்தமானதுதான்.
1980-90களில் ரஷ்ய இலக்கியம் அதிகமாகப் படிக்கப்பட்டது. நீங்களும் படித்திருப்பீர்கள். அதன் தாக்கம் உங்களுடைய எழுத்துகளில் இருக்கிறதா?
ரஷ்ய நாவல்களைப் படிக்கும்போது, விடியல், புரட்சி, சோசலிசம், புரட்சிப் பாதை என்று கனவுகள் நிறைந்த காலமாக இருந்தது. கசப்பாக மாறிய இனிப்பு, பசியை அறியாத செல்போன் இதுதான் இன்றைய தலைமுறை. மார்க்சியத்தைக் காப்பதற்கான துறவிகள் போதிய அளவுக்கு நம்மிடம் இல்லை, இருக்கின்ற துறவிகளுக்கும் வயதாகிக்கொண்டிருக்கிறது. நாம் உலகமயமாக்கலின் களிப்பில் இருக்கிறோம். ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமான இலக்கியம் பேசப்படும். படிக்கவும் விவாதிக்கவும் படும். அதன் தாக்கத்தால் சிலர் எழுதவும் கூடும். ரஷ்யா, பிரெஞ்சு, ஜெர்மனி, ஆப்பிரிக்கா, அமெரிக்க இலக்கியத்தைப் படித்தாலும், நான் வாழும் வாழ்க்கையையும் சமூகத்தையும்தான் எழுதுவேன். பிறருடைய சாயலின்றி, பாதிப்பின்றி. எனக்கான எழுத்தைத்தான் நான் இதுவரை எழுதியிருக்கிறேன்.
நீங்கள் எழுத விரும்பி எழுதாமல் விட்ட, எழுதிப் பாதியில் நிறுத்திய சிறுகதைகள், நாவல்கள், கதைகள் என்று எதாவது இருக்கின்றனவா?
பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் குறிப்பிட்ட காலம்வரை ஊராட்சி மன்றத் தேர்தலை ஏன் நடத்த முடியாமல்போனது என்பது பற்றி எழுதியிருக்க வேண்டும். ஆனால், எழுதவில்லை. உத்தபுரம் மதில் அகற்றப்படுவதற்கு எதிராக நடந்த போராட்டம் பற்றி எழுதியிருக்க வேண்டும். எழுதவில்லை. திண்ணியத்தில் மனித மலத்தை மனிதர் வாயில் திணித்தது பற்றி எழுதியிருக்க வேண்டும். மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் போராட்டத்தின்போது தாமிரபரணி ஆற்றில் கொல்லப்பட்டவர்கள் பற்றி எழுதியிருக்க வேண்டும், பணமதிப்பிழப்பின்போது ஏ.டி.எம். மிஷினை நோக்கி வரிசையில் நின்று மயங்கிவிழுந்து செத்தவர்கள் பற்றி எழுதியிருக்க வேண்டும். பொறுப்பற்ற நிர்வாகத்தால் சென்னை வெள்ளத்தில் மிதந்ததை எழுதியிருக்க வேண்டும். நான்கு ஐந்து மணி நேரக் கால அவகாசமே தந்து லாக்டவுன் அறிவித்து இந்தியாவைத் தெருவில் நடக்கவிட்ட, விளக்கேற்றினால் கொரோனா போய்விடும் என்று சொல்லி விளக்கேற்றவைத்த மோடியின் நடவடிக்கைகள் பற்றி எழுதியிருக்க வேண்டும். கடந்த ஆண்டு நடந்த மதுரை ஜல்லிக்கட்டில் 21 காளைகளை அடக்கிய தமிழரசனை, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதற்காக அவமானப்படுத்திய சமூக உளவியலை எழுதியிருக்க வேண்டும். எழுதவில்லை. சுனாமி பற்றி, கடலூர் மாவட்டத்தை அதிகமாகத் தாக்கிய தானே புயல், வர்தா புயல் பற்றியும் நான் எதுவும் எழுதவில்லை. அண்மையில் கேரள மாநிலம் வயநாட்டில் நடந்த தேசியப் பேரிடர் பற்றி எழுதுவேனா என்பதும் தெரியாது. அந்தந்த நேரத்துக்கு வருத்தப்பட்டுவிட்டு மறந்துபோகிறவன் எழுத்தாளனா? இப்படி எழுத விரும்பி எழுதாமல் விட்ட கதைகள் நிறைய இருக்கின்றன. எழுத வேண்டும் என்ற ஆசை இப்போதும் இருக்கிறது. என் கண் முன்னால் நான் வாழும் காலத்தில் நடக்கும் சமூகக் கொடூரங்களைப் பற்றி எழுதாமல் Fantacy, Romantic கவிதைகளையும் சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதுவது சரியா? கற்பனைகளையும் பழைய நினைவுகளையும் புனிதப்படுத்தி ‘உன்னத இலக்கியம், நவீன இலக்கியம்’ என்று எழுதிக்கொண்டிருப்பது சரியா? இப்படியான கேள்விகள் எனக்குள் நிறைய இருக்கின்றன. சமூகத்தில் நடக்கும் கொடூரங்கள் என்னைப் பாதிக்கவில்லை என்றால் நான் என்ன விதமான எழுத்தாளன்? சமூகக் கொடூரங்களுக்காகக் கோபப்படாதவன் எழுத்தாளனா என்ற கேள்வி எனக்குள் தொடர்ந்து இருக்கிறது.
மற்ற எழுத்தாளர்கள் எழுதியிருப்பார்கள்தானே? மனுஷ்ய புத்திரன்கூடச் சென்னை வெள்ள பாதிப்பு, புயல் பாதிப்பு பற்றித் தனித்தனியான கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.
ஆமாம், எழுதியிருக்கிறார். நானும் படித்திருக்கிறேன். நான் எழுதவில்லை என்பதுதான் எனக்குக் குற்றவுணர்வாக இருக்கிறது என்று சொன்னேன். மற்றவர்களைப் பற்றி நான் பேசவில்லை. எழுதவில்லை என்று குறையும் சொல்லவில்லை. காலம் முடிந்துவிடவில்லை. எழுத முடியுமா என்று பார்க்கலாம்.
தமிழ்நாட்டை உலுக்கிய பல விஷயங்கள் பற்றி எழுத முடியவில்லை என்று சொன்னீர்கள். உலகத்தையே அச்சுறுத்திய, முடக்கிய கொரோனா பற்றி ஏதாவது எழுதியிருக்கிறீர்களா? எழுதுவதற்குத் திட்டம் வைத்திருக்கிறீர்களா?
கொரோனா நோய்த்தொற்று பரவலால் உலகமே முடங்கி, முடக்கப்பட்டுக்கிடந்தது. தாய்க்குக் குழந்தை எதிரியாக, மனைவிக்குக் கணவன் எதிரியாக, விலகி, ஒதுங்கி வாழ்ந்த காலத்தை உலகம் மறந்துவிட்டது. அதிசயமான நிகழ்வு, மனித மறதியை ஒருவிதத்தில் போற்றலாம் என்றுதான் தோன்றுகிறது. கொரோனா கொடூரங்கள் பற்றி ‘கவர்மண்ட் பிணம்’ என்ற சிறுகதையை ஏற்கனவே எழுதியிருக்கிறேன். ‘Government Corpse’ என்ற பெயரில் ஆங்கிலத்திலும் வெளியாகியிருக்கிறது. ‘உப்பு வண்டிக்காரன்’ என்ற நாவல் எழுதியிருக்கிறேன். விரைவில் வெளிவரும்.
‘உப்பு வண்டிக்காரன்’ என்ற தலைப்பே நன்றாக இருக்கிறது. நாவல் பற்றிச் சொல்ல முடியுமா?
தனிமனித வாழ்வில், குடும்ப, சமூக வாழ்வில் கொரோனா ஏற்படுத்திய கொடூரங்களை, தாக்கங்களைத்தான் நாவல் விவரிக்கிறது. நாவல் வெளிவந்த பிறகு மற்றதைப் பேசலாம்.
நாவல் எழுதத் திட்டமிட்டுச் சிறுகதையாக மாற்றி எழுதியிருக்கிறீர்களா? அதே மாதிரி, சிறுகதையாக எழுதத் திட்டமிட்டு நாவலாக மாற்றி எழுதியிருக்கிறீர்களா?
எழுதியிருக்கிறேன். ‘வாழ்க வாழ்க’ நாவலை முதலில் சிறுகதையாகத்தான் எழுதினேன். பிறகு, அது நாவலாக மாறிவிட்டது. அதே மாதிரி ‘எங் கதெ’, ‘நெஞ்சறுப்பு’ நாவல்களும் முதலில் சிறுகதைகளாக எழுதத்தான் திட்டமிட்டிருந்தேன். நாவல்களாக அவை மாறிவிட்டன. ‘சாம்பன் கதை’ நெடுங்கதையும், ‘தண்டகாரண்யத்தில் சீதை’ கதையும் நான் நாவல்களாகவே எழுதத் திட்டமிட்டிருந்தேன். சிறுகதைகளாகத்தான் எழுத முடிந்தது. இது எப்படி நடக்கிறது என்பதை விளக்கிச்சொல்வது சிரமம். சில கதைகளின் கரு என்னை இன்னும் எழுது, இன்னும் எழுது என்று கேட்கும். சில கரு என்னை இதோடு விட்டுவிடு என்று கேட்கும். கதைக்கான கருவின் குரலை எழுத்தாளன் கேட்க வேண்டும்.
ஒரு நேர்காணலில் ‘கோவேறு கழுதைகள்’ நாவலின் கதாநாயகி ஆரோக்கியமும், ‘செடல்’ நாவலின் கதாநாயகி செடலும் என்னுடைய ஊரைச் சேர்ந்தவர்கள்தான் என்று சொல்லியிருந்தீர்கள். அவர்களை இப்போதும் பார்க்கிறீர்களா? நாவலாக எழுதிய பிறகு அவர்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?
‘எழுத்தாளன் கைவிட்ட கதாபாத்திரங்களும், கதாபாத்திரங்கள் கைவிட்ட எழுத்தாளனும்’ என்றுதான் சொல்லலாம். புரிகிறதா?
இல்ல சார். கொஞ்சம் தெளிவா, புரியுற மாதிரி சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்.
‘கோவேறு கழுதைகள்’ நாவல் எழுதும்போது – ஆரோக்கியமாக, சவுரியாக, பீட்டராக, மேரியாக இருந்தேன். ‘ஆறுமுகம்’ நாவல் எழுதும்போது – தனபாக்கியமாக, சின்னப் பொண்ணாக, ஆறுமுகமாக இருந்தேன், வாழ்ந்தேன். ‘இப்போது உயிரோடிருக்கிறேன்’ நாவலை எழுதும்போது தமிழரசனாக, அருணாச்சலமாக; ‘செல்லாத பணம்’ எழுதும்போது ரேவதியாக, அமராவதியாக, முருகனாக இருந்தேன். ‘வாழ்க வாழ்க’ எழுதும்போது வெங்கடேசப் பெருமாளாக, சொர்ணமாக இருந்தேன். ‘எங் கதெ’ எழுதும்போது கமலாவாக, அம்பலவாணனாக; ‘நெஞ்சறுப்பு’ எழுதும்போது சசிகலாவாக, ஸ்ரீரங்கப்பெருமாளாக இருந்தேன். வாழ்ந்தேன். நாவல்கள் மட்டுமல்ல, ‘ஈசனருள்’ எழுதும்போது ‘கலியம்மாவாக, சந்திரோதயமாக; ‘ஆண்டவரின் கிருபை’ எழுதும்போது, பிரேமாவாக; ‘காதல்’ எழுதும்போது காந்திமதியாக இருந்தேன், வாழ்ந்தேன். இப்படிப் பல பேருடன் இருந்தேன். வாழ்ந்தேன். இப்போது என்னுடன் யாருமில்லை. நானும் யாருடனுமில்லை.
ஒரு சொல்லாக, வார்த்தையாக, வாக்கியமாக, காட்சியாக, நினைவாக எனக்குள் வந்த கதாபாத்திரங்கள் ‘என்னை, எங்களை எழுது’ என்று கேட்டார்கள். நானும் எழுதினேன். எழுதி முடித்ததும், அவர்களும் என்னைவிட்டுப் போய்விட்டார்கள். நானும் என் உயிராக நினைத்து எழுதிய மனிதர்களை விட்டு விலகி வந்துவிட்டேன். கைவிடப்பட்ட மனிதர்களாகிவிட்டோம்.
நிஜமான மனிதர்களைவிடக் கதையில் வரும் கதாபாத்திரங்கள்தான் உங்களுக்குப் பிரதானமானவர்களாக இருக்கிறார்கள் இல்லையா?
ஆமாம். ‘செடல்’ நாவலை எழுதி முடிப்பதற்கு எனக்கு ஏழாண்டுகள் பிடித்தது. அந்த ஏழாண்டுகளும் செடல்தான் என்னைச் சிரிக்க வைத்தாள். அழ வைத்தாள். சிந்திக்க வைத்தாள். கவலைப்பட வைத்தாள். ஏங்கவும் காத்திருக்கவும் வைத்தாள். ‘கோவேறு கழுதைகள்’ நாவலின் ஆரோக்கியம் ஒன்பது ஆண்டுகள் என்னுடன் இருந்தாள். ‘எங் கதெ’ நாவலின் கமலா இரண்டாண்டுகள் என்னுடன் இருந்தாள். கமலாவின் கதையை எழுதும்போது என்னளவில் சந்தோஷமாக இருந்த ஆள் உலகில் வேறு ஒருவர் இருந்திருக்க மாட்டார். அதே மாதிரி என்னளவில் ஒரு ஆள் உலகில் துக்கமாகவும் இருந்திருக்க மாட்டார். ‘செல்லாத பணம்’ நாவலை எழுதும்போதும் சரி, எழுதி முடித்து திரும்பப் படிக்கிறபோதும் சரி நான் அழாமல் இருந்தில்லை. ‘இப்போது உயிரோடிருக்கிறேன்’, ‘செல்லாத பணம்’ நாவல்களின் மூலம் நான் சொல்ல விரும்பியது அறிவியலின் தோல்வியைத்தான். ‘வாழ்க வாழ்க’ நாவல் எழுதும்போது நான் சிரித்தேன். நான் எழுதிய சிறுகதைகளிலேயே ‘ஆகாசத்தின் உத்தரவு’ என்ற கதைதான் என்னை அதிகம் சிரிக்க வைத்தது. கடைசியாக எழுதிய ‘தண்டகாரண்யத்தில் சீதை’ சிறுகதை அச்சுக்குப் போனதுமே சீதை என்னை விட்டு ஓடிவிட்டாள். எட்டு மாதங்கள் என்னுடன் இருந்தாள். அவசரப்பட்டு அச்சுக்கு அனுப்பிவிட்டேன் என்ற வருத்தம் எனக்குள் இருக்கிறது. இன்று என்னுடன் யாருமே இல்லை. நான் உருவாக்கிய, எனக்குள்ளிருந்து உருவான எனக்கான, தங்களுடைய ரகசியங்களை என்னிடம் சொன்னவர்கள், என்னுடைய ரகசியங்களை அறிந்தவர்கள், இன்று என்னுடன் இல்லை.
‘மனமுறிவு’ என்ற ஒரு சிறுகதை, அதில் வரக்கூடிய அசோக் ‘எனக்கு sperm counting குறைவாக இருக்கிறது. sperm counting பெருக்குவதற்காக, மனைவியும் நர்சும் கதவுக்கு வெளியே நின்றுகொண்டிருக்க, இருட்டறையில் நின்றுகொண்டு நான் எத்தனை முறை ‘மாதிரி’ கொடுத்திருக்கிறேன் தெரியுமா?’ என்னிடம் கேட்டான். இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் என்னுடைய கதாபாத்திரங்கள் தங்களுடைய ரகசியங்கள் எல்லாவற்றையும் என்னிடம் கொட்டித்தீர்த்திருக்கிறார்கள் என்பதற்காகத்தான்.
புதிய சிறுகதையை, நாவலை எழுத ஆரம்பித்ததும், உங்களைச் சிரிக்க வைக்க, அழ வைக்க, யோசிக்க வைக்க, கவலைப்பட வைக்க மனிதர்கள் வந்துவிடுவார்கள் இல்லையா?
வரணுமே. அது எளிதல்ல. வரலாம், வராமலும் போய்விடலாம். எதுவும் நிச்சயமில்லை. காத்திருப்பதைத் தவிர வேறு வழி? புதிய உறவுகள் உருவாவதும் பிறகு அவர்கள் என்னைக் கைவிடுவதும், நான் அவர்களைக் கைவிடுவதுமாக நடந்துகொண்டிருக்கிறது. நான் கைவிட்டாலும், அவர்கள் எழுத்தில் உயிருடன்தான் இருக்கிறார்கள் அவர்களுக்கான வாழ்க்கையோடு. என்னிடம் சொன்னதுபோலவே தங்களுடைய வாழ்க்கையை ஒவ்வொரு வாசகரிடமும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள், வார்த்தைகளுக்குள் வாழும் மனிதர்கள்.
நவீனத் தமிழ் எழுத்தாளர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர், நவீனத் தமிழ் இலக்கியத்தில் தனக்கென தனித்த அடையாளத்தை உருவாக்கிக்கொண்டவர், நிகழ்கால எழுத்தாளர்களில் தவிர்க்க முடியாத ஆளுமை என்ற விதத்தில் கேட்கிறேன், இன்றைக்குத் தமிழ் இலக்கியச் சூழல் எப்படி இருக்கிறது?
உங்களுடைய கேள்வி மாதிரிதான் தெளிவில்லாமல் குழப்பமாக இருக்கிறது.
என்ன சார் சொல்றீங்க? என்னுடைய கேள்வி குழப்பமாகவா இருக்கிறது?
நவீனத் தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் நான்தான் என்றால், குறிப்பிட முடியாத எழுத்தாளர்கள் யார்? தனக்கென தனித்த அடையாளமில்லாத எழுத்தாளர்கள் யார்? மிகவும் முக்கியமில்லாத எழுத்தாளுமைகள் யார்யார் என்று சொல்லுங்கள்? இந்த அடைமொழி வார்த்தைகள் எல்லா எழுத்தாளர்களுக்குமே பயன்படுத்தப்படுகிறது. இந்த வார்த்தைகளைக் கேட்கும்போது கூச்சமாக இருக்கிறது. நீங்கள் சொன்ன வார்த்தைகளுக்குப் பொருத்தமானவர் யார், பொருத்தமில்லாதவர் யார் என்று சொல்வதில் நமக்குத் தயக்கம் இருக்கிறது. நம்மிடம் கறார் தன்மை கிடையாது. புகழ்கிற, கூல் பண்ணுகிற தன்மை மட்டுமே நம்மிடம் இருக்கிறது. ஒரு எழுத்தாளரை மேடையில் அறிமுகப்படுத்துகிறபோதும், நூல் விமர்சனம் எழுதுகிறபோதும், தகுதியான, தகுதியற்ற எழுத்தாளர்களுக்கும் ஒரே வார்த்தைகளைத்தான் பயன்படுத்துகிறோம். நேர்காணல் செய்பவர்களும் ‘ரெடிமேடாகச் சில கேள்விகளை வைத்திருக்கிறார்கள். அதைத் தாண்டி அவர்கள் கேட்பதில்லை. அதற்குக் காரணம் நேர்காணல் செய்யப்போகிறவர் சம்பந்தப்பட்ட எழுத்தாளனின் படைப்புகளை முழுமையாகப் படித்துவிட்டுச் செல்வதில்லை. உங்களுடைய நாவலில், சிறுகதையில், கவிதையில் இந்தக் குறைபாடுகள் இருக்கின்றன, நம்பகத்தன்மை இல்லை, வடிவம், மொழி, கட்டமைப்பு புதுமையாக இல்லை, உங்களுடைய படைப்பு பலவீனமாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டி ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கிறதா? மீறிக் கேட்டாலும் நம்முடைய எழுத்தாளர்கள் முகம் சுளிக்காமல் பதில் சொல்லியிருக்கிறார்களா? மீறிச் சொன்னாலும் என்னுடைய நாவலில், சிறுகதையில், கவிதையில் நூற்றுக்கணக்கான தங்கச் சுரங்கத்தை வைத்திருக்கிறேன். வாசிப்பு அனுபவம் உங்களுக்குப் போதவில்லை. அதனால் நான் படைப்பிற்குள் வைத்திருக்கிறத் தங்கச் சுரங்கங்களை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றுதான் சொல்லியிருப்பார்கள்.
மௌனி, சிறுகதையின் திருமூலர் என்று சொல்லப்படுகிறது. அது உண்மை இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது. இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற ஒரு கேள்வி எழுந்திருக்கிறதா? நீங்கள் எழுதிய சிறுகதைகளும் நாவல்களும் கரிசல் நிலத்தை மட்டுமே பேசுகிறது. பாண்டிச்சேரிக்கு வந்து இருபது முப்பதாண்டுகளாகிவிட்டது. பாண்டிச்சேரியின் நிலம், காற்று, மழை, வெயில், மனிதர்கள் பற்றி எத்தனை கதைகள் எழுதியிருக்கிறீர்கள் என்று கி. ராஜநாராயணனிடம் யாராவது கேட்டிருப்பார்களா அல்லது நகரம் சார்ந்து, நகர வாழ்க்கை சார்ந்து எத்தனை கதைகள் எழுதியிருக்கிறீர்கள் என்று யாராவது கேட்டிருக்கிறார்களா?
தி. ஜானகிராமனுடைய ‘மோக முள்’, ‘அம்மா வந்தாள்’ ஆகிய நாவல்கள் பேசப்பட்ட அளவிற்கு, அவருடைய ‘செம்பருத்தி’ ஏன் பேசப்படவில்லை என்று கேட்ட, யோசித்த ஒரு பத்திரிகையாளர் உண்டா? இப்படித்தான் இருக்கிறது இன்றைய தமிழ் இலக்கியச் சூழல். அதே நேரத்தில் தமிழில் எதுவுமே இல்லை. எல்லாம் ஆங்கிலத்தில்தான் இருக்கிறது என்று நான் சொல்லவும் மாட்டேன்.
ஆன்மீகம், மறுபிறப்பு, ஜோசியத்தின் மீதெல்லாம் உங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் உங்களுடைய கதாபாத்திரங்களுக்கு நிறைய இருக்கிறதே?
என்னுடைய கதாபாத்திரங்களுக்கு இருந்தால் அதைத் தடுக்கவோ, மறுக்கவோ மாட்டேன். இதை ஏற்கனவே சொல்லிவிட்டேன். கிளி ஜோசியக்காரன், ராசி பலன், நாடி ஜோதிடம் சொல்கிறவர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகளை எல்லாம், உங்கள் மொழியில் சொன்னால் “நவீனத் தமிழ் எழுத்தாளர்களில், தடம் பதித்த, தவிர்க்க முடியாத, தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கிக்கொண்ட எழுத்தாளரிடம்” கேட்கக் கூடாது.
ஆன்மீகம் பற்றி எழுதக் கூடாது என்று இருக்கிறதா?
இல்லை. சமூகத்தில் ஆன்மீகம் என்னவாக இருக்கிறது என்று கேள்வி கேட்கவே நான் எழுதுகிறேன். ஆன்மீகத்தைப் பரப்புவதற்காக அல்ல. கோவிலுக்குப் போவதும், சாமி என்று வைக்கப்பட்டிருக்கும் சிலையை வணங்குவதும்தான் ஆன்மீகம் என்றால் அந்த ஆன்மீகம், கடவுள் எனக்கு வேண்டாம். இதுவரை தமிழ் இலக்கியத்தில் எழுதப்படாத ஒரு சொல்லைப் புதிதாகக் கண்டுபிடித்து எழுதிவிட்டால் அந்தச் சொல்தான் எனக்கான கடவுள்.
கோவில்களைப் பற்றி, அதன் கட்டடக்கலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தமிழ்நாட்டில் இருக்கிற எல்லாக் கோவில்களுமே சாதியைப் பாதுகாக்கிற, பின்பற்ற வைக்கிற இடங்களாக இருக்கின்றன. சமூகத்தில் குறிப்பிட்ட இனத்தை ஒதுக்கிவைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட இடமாக, அடையாளமாகத்தான் கோவில்கள் இருந்து வந்திருக்கிறது. இதுதான் நம் culture என்பது. எத்தனை நூறு ஆண்டுகள்? ஒதுக்கி வைப்பதற்கும், ஒதுக்கி வைத்து அவமானப்படுத்துவதற்குமான குறியீடுகள்தானே கோயில்களும் சாமிகளும்.
‘கோயில்களும், சாமிகளும், சாதிகளும்’ என்ற தலைப்பில் விரிவாகப் பேச வேண்டும். நமது கோயில்களும், தெய்வங்களும் நீதியின் பாதைக்கு எதிரானவை. என்னால் ஒருபோதும் கடவுளின் மகிமைகளைப் பற்றி, தேவதைகளின் அழகு பற்றி எழுத முடியாது. ராஜாக்களும் மகாராஜாக்களும் கட்டிய கோயில்களைப் பார்க்கும்போதெல்லாம், கட்டடக் கலையின் அதிசயமாகத் தோன்றாமல் இழி செய்வதற்கு, விலக்கி வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட அடையாளங்களாகவும் குறியீடுகளாவும்தான் தோன்றும்.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாமென்று கொண்டுவரப்பட்ட சட்டம் எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, எவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகு நிறைவேறியது.
உங்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். கேரளாவில் வைக்கம் என்ற இடத்தில் பெரியார் நடத்தின போராட்டம் கோயிலில் நுழைவதற்கான போராட்டம் அல்ல. கோவிலைச் சுற்றியிருந்த நான்கு தெருவில் நடப்பதற்கு அனுமதிக்கான போரட்டம்தான் அது. போராட்டத்தின் முடிவில் மூன்று தெருவில் நடப்பதற்கு மட்டுமே அனுமதி கிடைத்தது. முதலில் “கோயிலைச் சுற்றி இருக்கிற இடத்தில் நடப்பதற்கு அனுமதி கேட்டுப் போராடுவோம். பிறகு கோயிலுக்குள் நுழைவதற்கு அனுமதி கேட்போம்” என்று சொல்லித்தான் பெரியார் போராடினார்.
நவீனத் தமிழ் படைப்பிலக்கிய மொழி எப்படி இருக்கிறது?
இன்று நாம் பேசுகிற, படிக்கிற, எழுதுகிற மொழி சங்ககால புலவர்களில் ஆரம்பித்து இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பேசிய, படித்த, எழுதிய மொழி. அந்த மொழி இன்று இருக்கிற எழுத்தாளர்களிடம், மக்களிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் அடுத்த தலைமுறையினருக்கு எப்படி மொழியைக் கையளிக்கப்போகிறார்கள் என்பதைப் பொறுத்தே பதில் சொல்ல முடியும்.
பெண்ணியம், பெண் உடல் அரசியல், பெண்ணிய இலக்கியம் பற்றி உங்களுடைய பார்வை என்ன? உங்களுடைய நாவல்களிலும், சிறுகதைகளிலும் பெண் பாத்திரங்கள்தான் நிறைந்திருப்பார்கள். இல்லையா?
பெண்களுக்குச் சந்தோஷம், வாழ்க்கை என்பது ஆண்கள்தான். அதே மாதிரி ஆண்களுக்குச் சந்தோஷம் வாழ்க்கை என்பது பெண்கள்தான். இதுதான் என்னுடைய பார்வை. 1962இல் வெளிவந்த ‘பாசம்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கண்ணதாசன் எழுதிய ‘ஜல்ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி’ என்ற பாடலைக் கேளுங்கள். பாடலின் கடைசி வரிகள் இப்படி இருக்கும்.
“இன்றே அவனைக் கைது செய்வேன்
என்றும் சிறையில் வைத்திருப்பேன்
விளக்கம் சொல்லவும் முடியாது.
விடுதலை என்பதும் கிடையாது.”
நான் பெண். பெண் மட்டுமே. மனைவி அல்ல, தாயல்ல என்று சொல்கிறவர்களுக்கு என்னிடம் பதிலில்லை. நம்மோடு சண்டை போடுவதற்கு, கோபித்துக்கொள்வதற்கு, உரிமை கொண்டாடுவதற்கு, நமக்காகக் காத்திருப்பதற்கு, நம்மைக் காக்க வைப்பதற்கு, நமக்காகக் கவலைப்படுவதற்கு, இன்னும் ஆளைக் காணவில்லையே திட்டுவதற்கு, சேர்ந்து சிரிப்பதற்கு, சேர்ந்து அழுவதற்கு ஒரு ஆள் வேண்டும்.
தற்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?
ஒருவர் கடலை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறார். மற்றொருவர் கடலிலிருந்து கரையை நோக்கி வந்துகொண்டிருக்கிறார். இருவரில் யாரைக் கதையாக எழுதுவது என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். அடுத்த கதையை எப்போது, எப்படி எழுதப்போகிறேன் என்பதைச் சொல்வதற்கான வார்த்தைகள் இப்போது என்னிடம் இல்லை. எழுதப்படாமல்போகவும் வாய்ப்பிருக்கிறது.
உலகத்திலேயே மிகவும் சிக்கலானது, பயங்கரமானது, சாகசம் நிறைந்தது என்று எதைச் சொல்வீர்கள்?
உயிரோடிருப்பதைத்தான்.
உங்களுடைய வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள் என்று ஏதாவது இருக்கின்றனவா?
நான் பிறந்தது, நான் இறக்கப்போகிற நேரம் இரண்டுமே எனக்குத் தெரியாமல் நடப்பவை. இந்த இரண்டு தருணங்கள்தான் என் வாழ்வில் முக்கியமானவை.
ஒரு எழுத்தாளராக, சக எழுத்தாளர்களுக்கும் இளம் எழுத்தாளர்களுக்கும் எந்த விஷயத்தைப் பின்பற்ற வேண்டும் என்று நீங்கள் சொல்வீர்கள்?
நிறைய படிக்க வேண்டும், நிறைய மனிதர்களோடு பேச வேண்டும். அப்போதுதான் சொற்கள் பஞ்சம் வராது. உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஒளிமிகுந்த கண் கொண்டு பாருங்கள். நிகழ்காலச் சமூக இன்னல்களை எழுதுங்கள். எளிமையாக, உண்மையாக, சமரசமின்றி எழுதுங்கள். எழுதும்போது சாதியை, மதத்தை மறந்துவிடுங்கள். எழுத்தில் உங்களை முன்னிறுத்தாதீர்கள். உங்களுடைய சிறுகதைக்கு, நாவலுக்கு நீங்களே விளக்கம் சொல்லாதீர்கள். ஆகிருதிகள் என்று சொல்லிக்கொண்டு ஆதாயம் தேடாதீர்கள். படிப்பதிலும் எழுதுவதிலும் கஞ்சனாக இருக்காதீர்கள். “I was born for writing” என்ற எண்ணம் எப்போதும் இருக்க வேண்டும். ஒரு எழுத்தாளனின் மரணம் – கடவுளின் மரணம் போன்றது என்பதை உணர வேண்டும்.