சந்திப்பு : ஜீவா.எஸ்.ஜெ
தொடர்ந்து மண் சார்ந்த படங்களாக இயக்கி வருகின்றீர்கள். இரண்டு படங்களுமே உங்களுக்கு நிறைய விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்று தந்துள்ளன. இந்த இரண்டு படத்தின் கதைகளும் உங்கள் வாழ்வின் ஏதேனும் ஒரு பகுதியா அல்லது உருவாக்கப்பட்டவையா?
கூழாங்கல் என் வாழ்வில் நேரடியாக தொடர்புடைய ஒரு அனுபவம். கொட்டுக்காளி நான் சிறுவயதில் இருந்து கேட்டு வளர்ந்த கதைகளில், அவற்றின் உண்மை நிலை என்ன என்பதை நான் கண்டறிய முற்பட்டபோது உருவான கரு. சுருக்கமாக சொல்வதென்றால் கூழாங்கல் என் வாழ்வின் நேரடி அனுபவம். கொட்டுக்காளி நான் பார்த்த அனுபவம்.
தமிழ் திரைச்சூழலில் பெரும்பாலும் வணிக திரைப்படங்களே அதிகம் கவனம் பெறுகின்றன. அந்நிலையில் எதார்த்த சினிமாவை எடுக்கும் நம்பிக்கை உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது?
ஒரு திரைப்படத்திற்கு செலவிட்ட தொகையை விட அதிகமாக நமக்கு லாபத்தை தருவதுதான் வணிக சினிமா என்றால் எனது இரண்டு படங்களுமே வெற்றி பெற்ற வணிக சினிமாக்கள்தான். பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்படுவதன்மூலம் திரைப்படத்திற்கான தொகை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். மேலும் ஒரு படத்தைத் தயாரிப்பதற்கான செலவு, அதை எவ்வாறு மக்களிடம் கொண்டு சேர்க்கப் போகிறோம் என்பதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் எந்த ஒரு படத்தையும் நாம் உருவாக்குகிறோம். கொட்டுக்காளி கூழாங்கல்லை விட வணிக ரீதியாக நல்ல லாபத்தைக் கொடுத்திருக்கிறது.
கூழாங்கல் படத்தின் வெற்றிதான் நடிகர் சிவகார்த்திகேயன் உங்களுடைய அடுத்த படத்தைத் தயாரித்ததற்கான காரணம். அவ்வாறு ஒரு பெரும் நடிகர் தயாரிக்கும்போதும் பொழுதுபோக்கு சினிமாவை எடுக்காமல் எதார்த்த சினிமாவையே மீண்டும் எடுத்ததன் காரணம் என்ன?
கூழாங்கல் வெற்றி பெறவில்லை என்றால் ஒருவேளை பொழுதுபோக்கு சினிமாவை யோசித்து இருப்பேன். அப்போதும் தயக்கத்தோடு யோசித்துதான் இருப்பேன். கூழாங்கல் எனக்குக் கொடுத்த நம்பிக்கை பெரிது. பலதரப்பட்ட மக்கள் கூழாங்கல் திரைப்படத்தை பார்த்துவிட்டு தொலைபேசியிலும் நேரிலும் சமூக ஊடகங்களிலும் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்கள். சொந்த ஆதாயங்களுக்காக நான் ஒரு பொழுதுபோக்குப் படத்தை எடுத்திருந்தால் அண்ணன் சூரியும் அண்ணன் சிவகார்த்திகேயனும் அழைத்து இப்படி ஒரு படம் செய்யலாம் எனக் கூறி இருக்க மாட்டார்கள். கொட்டுக்காளி போன்ற ஒரு படத்தை இப்பொழுது இல்லாவிடில் எப்பொழுதும் எடுக்க முடியாது என்பதால் துணிந்து எடுத்தேன். வர்த்தக ரீதியாகவும் கொட்டுக்காளி எனக்கு நிறைவை தந்துள்ளது.
அப்படி ஒரு வாய்ப்பு வந்ததனால் உருவாக்கிய திரைக்கதை தான் கொட்டுக்காளியா?
கூழாங்கல் படம் முடித்த பிறகு நான் கொட்டுக் காளியின் கதையை எழுத ஆரம்பித்து விட்டேன். அண்ணன் சிவகார்த்திகேயன் கேட்டபோது என்னிடம் கதை தயாராக இருந்தது. அதை நான் அவரிடம் சொன்னேன். அவருக்கும் கதை பிடித்திருந்ததால் அடுத்தடுத்த கட்டங்களுக்கு திரைப்படம் தன்னால் நகர்ந்தது.
கூழாங்கல் படத்தை தயாரித்த அதே நிறுவனம்தான் ஜமா என்னும் இன்னொரு எதார்த்த சினிமாவை தயாரித்திருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?
அப்படித்தான் நிகழ வேண்டும். கூழாங்கல், கொட்டுக்காளி, ஜமா, இது போன்ற எதார்த்த திரைப்படங்கள் தொடர்ந்து வெளிவர வெளிவரத்தான் அவற்றின் வெற்றிகள்தான் மேலும் பல எதார்த்த சினிமாக்களை எடுக்கத் தூண்டும். இத்தகைய தொடர்ச்சியான படங்களின் வெளியீடுகளின் மூலம்தான் மக்களின் ரசனையில் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். எதார்த்த சினிமாவிற்கும் வர்த்தகம் உண்டு என அப்போதுதான் தெரியப்படுத்த முடியும். ஜமாவும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது மிகவும் நல்ல விஷயம்.
உங்களது இரண்டு படங்களின் முடிவுகளுமே ஒரு சிறுகதையைப்போல பார்வையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப ஓபன் எண்டிங்காக (Open ending) இருக்கின்றன. இது சில பார்வையாளர்களுக்கு புரியாமல் போகிறது. இதனை எப்படிப் பார்க்கிறீர்கள்?
திரைப்படத்தைப் பார்த்து அனைவருமே நடிகர்களின் நடிப்பு முதற்கொண்டு காட்சி அமைப்பு முதற்கொண்டு பின்னணி இசை முதற்கொண்டு நன்றாக இருக்கிறது என்றும் முடிவு மட்டும் தெளிவில்லாமல் எங்களை யோசிக்க வைக்கிறது என்றும் கூறினார்கள். யோசிக்க வைக்கிறார் என பாராட்டியவர்களும் உண்டு. அதற்காக என்னிடம் கோபப்பட்டவர்களும் உண்டு. என் படம் சமூகத்தில் ஒரு உரையாடலை உருவாக்க வேண்டும் என்று காரணத்தோடுதான் முடிவுகளை இப்படி வைக்கிறேன்.
உங்களது திரை மொழியில் எதார்த்தமான காட்சி மொழி வெகு அழகாகக் கைகூடி வருகிறது. உங்களது இரண்டு படங்களிலுமே விலங்குகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றை எவ்வாறு காட்சிப்படுத்தினீர்கள்? உங்களுக்கு அது கடினமாக இருந்ததா?
அது எனக்கு எளிதாகதான் இருக்கிறது. நடிகர்களைப்போலவே விலங்குகளையும் திரை மொழிக்கு நாங்கள் பழக்குகிறோம். ஒவ்வொரு விலங்கிற்கும் அதற்கே உண்டான பிரத்தியேக குணங்கள் உண்டு. நாம் செய்ய வேண்டியதெல்லாம் அந்த விலங்கு அந்த நிலத்தையும் மனிதர்களையும் சுருக்கமாக மொத்த சூழலையும் பழக எடுத்துக் கொள்ளும் நேரத்தை முழுமையாக தருவதுதான்.
கொட்டுக்காளி திரைப்படம் துவங்குவதற்கு முன்னரே லைவ் லைட்டிங் மற்றும் லைவ் ரெக்கார்டிங்கில் பதிவு செய்ய வேண்டும் என்ற திட்டம் இருந்திருக்கும். ஆனால் படப்பிடிப்பின்போது அதன் மூலம் ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டீர்களா?
கூழாங்கல்லில் ஏற்கனவே அனுபவம் இருந்ததால் கொட்டுக்காளியில் அது சார்ந்த எந்த சிக்கலும் இல்லை. சொல்லப்போனால் அதை நாங்கள் சிரமமாகவே பார்க்கவில்லை.
இரண்டு படங்களிலுமே ஒரு சிறுவன் கதாபாத்திரம் வருகிறது. கூழாங்கல்லில் வரும் சிறுவன் தன் சூழலைப் பழகிக் கொள்கிற ஒருவனாகவும் அதே சமயத்தில் கொட்டுக்காளியில் வரும் சிறுவன் நிகழ்வுகளின் பார்வையாளனாகவும் மட்டுமே இருக்கிறான். அது குறித்து கூற முடியுமா?
கூழாங்கல்லில் வரும் சிறுவன் கதைக்கு தொடர்புடையவன். சிறு வயது முதலே தனது அன்னைக்கு நடந்த கொடுமையை பார்த்துப் பார்த்து வளர்ந்தவன். கொட்டுக்காளியில் வரும் சிறுவன் வெளியூரிலிருந்து வந்தவன். அவன் அங்கிருக்கும் சூழலை வெறுமனே பார்க்கும் ஒரு சிறுவன்.
இரண்டு திரைப்படங்களுமே எதார்த்த கதை சொல்லல் முறையில் எடுக்கப்பட்டு வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளன. இதன்பிறகு பொழுதுபோக்கு அம்சம் சார்ந்த திரைப்படங்களை எடுக்க வாய்ப்புள்ளதா அல்லது எதார்த்த சினிமாவையே தொடர்வீர்களா?
நிச்சயம் விலக மாட்டேன். அடுத்த தலைமுறை இயக்குனர்களும் எதார்த்த சினிமா எடுக்க ஆரம்பிக்கும்போது நான் தனியாக உணரவோ இந்த பாதையை விட்டு விலகவோ தேவை இருக்காது.