ஷேக் ஹசீனா இரும்புக் கரம் கொண்ட சர்வாதிகாரியாக பதினைந்து ஆண்டுகளாக வங்க தேசத்தை ஆண்டு வந்தார். மோடி அரசு ஷேக் ஹசீனாவை உற்ற துணைவராகக் கருதியிருந்தது. வழக்கமாக அரசுகள், ஒரு நாட்டின் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டுடனும் உறவு வைத்திருக்கும். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நாடுகளுக்கு இடையேயான உறவுகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இந்த நிலையை அரசுகள் எடுக்கின்றன. அதே போல ஏதாவது ஒரு கட்சியை வெளிப்படையாக ஆதரிப்பது அந்த நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகக் கருதப்படும்.
ஆனால் மோடி தலைமையில் இந்துத்துவவாதிகள் ஆட்சிக்கு வந்ததும் சுற்றிலுமுள்ள நாடுகளில் தங்களுக்கு ஏற்ற ஆட்சியாளர்களை உட்கார வைப்பது, அமெரிக்கா போன்ற எட்ட முடியாத நாடுகளிலும் டிரம்ப் போன்றவர்களை ஆதரிப்பது என்ற நிலை எடுத்தனர். அதே போல தமிழகத் தேர்தலில் கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது பற்றி மோடி அபத்தமாகப் பேசி இலங்கை அரசுடனான உறவுகளில் சங்கடமான நிலையை ஏற்படுத்தினார்.
வங்க தேச ஆட்சிக் கவிழ்ப்பை அடுத்து இந்துத்துவ ஊடகங்கள் அமெரிக்காமீதும் சி.ஐ.ஏ. மீதும் கடும் வெறுப்பை உமிழ்ந்து வருகின்றன. இந்துத்துவவாதிகள் பங்களாதேஷில் ஜமாதே இஸ்லாமி எனப்படும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஆட்சிக்கு வந்து விடுவார்கள். அவர்கள் இந்தியாவுக்கு எதிரான நிலை கொண்டவர்கள் என்கிறார்கள். வழக்கமாக இந்துத்துவவாதிகள் அமெரிக்காவுக்கு எதிராக இப்படிப் பேச மாட்டார்கள். வங்க தேச ஆட்சிக் கவிழ்ப்பானது பலவிதங்களில் வங்கதேசத்தின் அவாமி லீக் கட்சியை ஒத்த பி.ஜே.பி.க்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. பிரதமரின் உக்ரேன் பயணமும் மேற்குலகை சமாதானப்படுத்தும் முயற்சியாகத்தான் ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. இது குறித்துப் பின்பு விரிவாகப் பார்ப்போம்.
ஷேக் ஹசீனா தான் பதவிக்கு வந்ததிலிருந்து உலகமயத்தைத் தீவிரமாகச் செயல்படுத்தினார். அமெரிக்கா மற்றும் மேற்குலகுக்கான ஆடை உற்பத்தியில் பங்களாதேஷ் முக்கிய இடம் வகித்தது. இந்தியாவிலிருந்தும், சீனாவிலிருந்தும் ஏராளமான முதலாளித்துவ குழுமங்கள் வங்கதேசத்தில் முதலீடுகள் செய்தன (வங்கதேச முஸ்லீம்கள் இந்தியாவில் ஊடுருவல் செய்கிறார்கள் என்ற பீதியைக் கிளப்பிக் கொண்டே இந்திய முதலாளிகள் கும்பல் கும்பலாக வங்கதேசம் சென்றனர் என்பது ஒரு பெரிய வேடிக்கை). உலகமயமும், பொருளாதார சீர்திருத்தங்களும் தீவிரமடைய அடைய ஷேக் ஹசீனா நீதித்துறையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இப்போது அவர் பதவி விலகியதும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தப்பியோட முயன்று கைது செய்யப்பட்டுள்ளார். எல்லா ஜனநாயக நிறுவனங்களையும் பலவீனப்படுத்தினார். RAB rapit action battalion என்ற சிறப்புப் போலீஸ் படையைக் கொண்டு பல்வேறு உரி்மைகளுக்கான போராட்டங்களை மூர்க்கமாக அடக்கினார். தனது உறவினர்கள், வேண்டியவர்களைக் கொண்டு எல்லாப் பதவிகளையும் நிரப்பினார். இப்போது உள்ள ராணுவ தலைமைத் தளபதி கூட ஷேக் ஹசீனாவின் உறவினர்தான். எதிர்க்கட்சிகள் கடுமையாக அடக்கி ஒடுக்கப்பட்டன.
இவையெல்லாம் பதினைந்து ஆண்டுகளாக நடந்து வந்தபோதும் அவர் மேற்கத்திய நாடுகள் விரும்பிய பொருளாதார வளர்ச்சியைச் சாதித்த வரை ஜனநாயகத்தின் காவலராகக் கருதப்பட்டார். மேற்குலகின் போஸ்டர் சைல்டு அதாவது முன்னுதாரணமாக அமெரிக்க, ஐரோப்பிய இதழ்களால் பிரச்சாரம் செய்யப்பட்டார். வங்கதேசம் உலகமயத்தின் வெற்றிக்கதை என்று கட்டுரைகள் எழுதப்பட்டன.
தி எகானமிஸ்ட் இதழ் ஷேக் ஹசீனாவை ஆசியாவின் இரும்புப் பெண்மணி என்று புகழ்ந்தது. ஃபோர்ப்ஸ் மற்றும் டைம் ஏடுகள் ஹசீனா உலகில் மிகவும் வலிமை வாய்ந்தவர்களில் ஒருவர் என்றன.
ஆனால் உணமை வேறுவிதமாகவிருந்தது. புள்ளி விவரங்கள் பொய்யாகத் தயாரிக்கப்பட்டவை என்பது கொஞ்சம் கொஞ்சமாக வெளியானது. அடையப்பட்ட முன்னேற்றமும் 10 சதவீத பணக்காரர்களுக்கே பலன் அளித்தது. டாக்காவில் பெரும் அடுக்குமாடிக் கட்டங்கள் வளர்ந்தன. சேரிகளும் மிகப் பிரம்மாண்டமாக வளர்ந்து பெருகின. தங்கள் கிராமங்களில் பிழைக்க வழியில்லாத வங்கதேச மக்கள் மத்தியக் கிழக்கு, ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாகச் செல்வது பன்மடங்கு அதிகரித்தது.
இந்த நிலை வந்ததும் அமெரிக்காவும் மேற்குலகும் ஷேக் ஹசீனா அரசின்மீது அதிருப்தி கொண்டிருப்பது வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க அரசானது RAB போலீஸ் படையை மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டி தடை செய்தது. இந்தப் படையானது பலரை சட்டவிரோதமாகக் கொலை செய்ததாகக் கூறியது. மேலும் மேலும் பல்வேறு விதங்களில் ஷேக் ஹசீனா அரசுக்கு நெருக்குதல்கள் கொடுக்கப்பட்டன. அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஷேக் ஹசீனா அரசானது தேர்தலுக்கு முன்பு பல்லாயிரம் எதிர்க்கட்சியினரை சிறையில் அடைத்தது என்று விமர்சித்தனர். செப்டம்பர் 2023 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா வங்கதேச அதிகாரிகளுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது. இதில் ஒரு வேடிக்கை என்னவெனில் இந்தப் படை உருவானதில் இருந்து அதற்குப் பயிற்சியும் ஆதரவும் அளித்து வளர்த்தது அமெரிக்காவும் பிரிட்டனும்தான் என்கிறது On Bangladesh and Democracy- America;s Approach is undermined by history – தி டிப்ளமேட் இதழ்.
2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் நடந்த ஜனநாயகத்துக்கான மாநாட்டிற்கு வங்கதேசம் அழைக்கப்படவில்லை. அங்கே ஜனநாயகம் இல்லை என்று கூறப்பட்டது. ஆனால் இந்த மாநாட்டுக்கு ஜனநாயகத்துக்கு சம்பந்தமே இல்லாத பாகிஸ்தான் அழைக்கப்பட்டது.
2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் எதிர்க்கட்சியான வங்கதேச தேசியக் கட்சி போட்டியிடாமல் புறக்கணித்தது. அப்போது அமெரிக்கா மென்மையான ஒரு கண்டனத்தை வெளியிட்டு விட்டு ஷேக் ஹசீனா அரசுடன் எல்லாவித்திலும் ஒத்துழைத்தது. பின்பு 2018 தேர்தலிலும் இதுவே நடந்தது.
அதே நேரம் வங்கதேசத்துடனான அமெரிக்கப் பொருளாதார உறவானது மேலும் மேலும் வளர்ச்சி பெற்றது. அமெரிக்காவே வங்கதேசத்தில் மிக அதிக அளவு முதலீடு செய்துள்ள நாடாகும். (இங்கே அடிக்கடி கூறப்படுவது போல சீனா அல்ல). USAID -ன் மிகப்பெரிய திட்டங்கள் வங்கதேசத்திலேயே செயல்படுத்தப்பட்டன என்கிறது தெ டிப்ளமெட் இதழ். ( On Bangladesh and Democracy- America;s Approach is undermined by history).
எனவே அமெரிக்கா ஜனநாயகத்தைக் காக்க வேண்டும் என்றதற்குப் பின்னணியில் உலகமயம் தொடர்பான அமெரிக்காவின் அனுபவம் உள்ளது. பொருளாதார சீர்திருத்தங்களும் உலகமயமும் ஒரு நாட்டை நாசமாக்கும்போது ஆட்சி மாற்றம் மக்கள் கோபத்துக்கு நல்ல வடிகாலாக இருக்கும். ராணுவப் புரட்சியோ, சோஷலிச, இஸ்லாமியப் புரட்சியோ ஏற்படாமல் தடுக்க எதிர்க்கட்சிகள் உதவும், ஆளும் கட்சி அல்லது எதிர்க்கட்சி ஆகியவை மாறி மாறி ஆட்சிக்கு வந்தால் மற்றவற்றுக்கு இடமில்லையல்லவா? எதிர்க்கட்சிகள் முடக்கப்பட்டால் மேற்சொன்ன வேறு வெடிப்புகள் நிகழ்ந்துவிட வாய்ப்புள்ளது என்பதை அமெரிக்கா அறிந்திருந்தது. ஆனால் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி எதிர்க்கட்சிகளுடன் ஒத்துப்போக அடியோடு மறுத்தது. அமெரிக்கா எதிர்பார்த்த அரசியல் இடத்தை அவர்களுக்கு வழங்க மறுத்தது.
எனவே பிரச்சினை ஜனநாயகம் அல்ல. பொருளாதார சீர்திருத்தங்களால் வங்கதேசம் படு பாதாளத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை அமெரிக்கா அறிந்திருந்தது. ஒரு ஆட்சி மாற்றம் வரவிருக்கும் எழுச்சியை சில ஆண்டுகளுக்குத் தள்ளிப்போடும் என்ற முடிவுக்கு அமெரிக்கா வந்து விட்டது போலிருந்தது. இதை இந்தியாவும் சீனாவும் நன்றாக உணர்ந்திருந்தன. சீனா ஷேக் ஹசீனா அரசுக்கு முன்பு வாக்களித்திருந்த கடனைத் தர மறுத்தது. ஷேக் ஹசீனா சீனா பயணத்தின்போது தனக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்று பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு திரும்பினார்.
ஆட்சிக்கவிழ்ப்புக்கு ஒரு வருடம் முன்பிருந்தே இந்திய அதிகாரிகள் தொடர்ந்து அமெரிக்க அதிகாரிகளைச் சந்தித்து வங்க தேசத்துக்கு எதிரான போக்கைக் கைவிடுபடி வற்புறுத்தி வந்தனர். எதிர்க்கட்சியினர் ஆட்சிக்கு வந்தால் பி.என்.பி. எனப்படும் வங்க தேச தேசியக் கட்சியும், இஸ்லாமிஸ்ட் கட்சிகளும் ஆட்சிக்கு வந்துவிடும். வங்க தேசம் இந்தியாவுக்கு எதிரான இஸ்லாமிய பயங்கரவாதத்தின் தளமாகிவிடும் என்று அவர்கள் வாதாடினர். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் ஆகியோர் அமெரிக்காவில் இந்தியாவின் ஷேக் ஹசீனா ஆதரவு கோரிக்கையை முன்வைத்தனர்.
“அமெரிக்காவைப் பொறுத்தவரை இது ஜனநாயகம் பற்றியது. ஆனால் எங்களுக்கு அதாவது இந்தியாவுக்கு இது வாழ்வா சாவா பிரச்சினை. இது குறித்து அமெரிக்க அதிகாரிகளிடம் நிறையப் பேசினோம். இதில் நமக்கு ஒத்த கருத்து இல்லாவிட்டால் இந்தியாவை அமெரிக்கா நண்பன் என்று கருதுவதாக எடுத்துக் கொள்ள முடியாது” என்று ஒரு பெயர் குறிப்பிடாத அதிகாரி கூறியதாக the daily star “India pressed US to go easy on Hasina என்ற கட்டுரையில் கூறுகிறது.
இந்தியா கடந்த பத்து ஆண்டுகளில் ஷேக் ஹசீனா அரசுடன் மிகவும் நெருக்கமாகி மற்ற வங்க தேசக் கட்சிகளைப் பகைத்துக் கொண்டு விட்டது. இலங்கையிலும் மாலத்தீவிலும் இந்தியா அந்த நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் நாடாக மோடி ஆட்சியில் பெயர் பெற்று விட்டது. அமெரிக்கா இந்தியாவை சீனாவுக்கு எதிரான முக்கியமான பங்காளியாகக் கருதியபோதும் இந்தியாவின் இந்த பிம்பம் தங்களுக்கு சிக்கலாகி வருவதை அமெரிக்க ஆட்சியாளர்களின் ஒரு பிரிவினர் உணர்ந்திருந்தனர். இந்தியாவின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ற வகையில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை வகுப்பது பெரிய தவறாகிவிடும் என்று ஜான் டானிலோவிக்ஸ் என்ற ஓய்வு பெற்ற ராஜதந்திரி கருத்து தெரிவித்தார்
ஜனவரியில் நடந்த தேர்தலில் வங்க தேச எதிர்க்கட்சிகள் போட்டியிடவில்லை. இந்த ஒருதலைப்பட்சமான தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொண்டது. இதை உடனடியாக இந்தியா அங்கீகரித்தது.
ஹசீனாவுக்கு எதிராகப் பெரும் போராட்டம் வெடித்ததும், ஊரடங்கு உத்தரவை உடைத்து மக்கள் திரண்டு ஹசீனாவின் வீட்டை நோக்கிச் செல்லத் தொடங்கியதும் இந்தியா தான் தவறான குதிரையை ஆதரித்து விட்டதை உணர்ந்தது.
வங்க தேச அரசைக் கவிழ்ப்பதா வேண்டாமா என்பது குறித்து அமெரிக்க அரசில் இரண்டுவிதமான கருத்து இருந்தது என்று ‘தி டெய்லி ஸ்டார்’ இதழ் கூறுகிறது. அமெரிக்காவின் அப்போதையை வங்க தேசத் தூதுவர் பீட்டர் ஹாசும் வேறு பல தூதரக அதிகாரிகளும் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடுமையான நிலை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க அரசை வற்புறுத்தி வந்தனர்.
அமெரிக்க அரசின் இன்னொரு பிரிவு ஹசீனாவை மேலும் அந்நியப்படுத்துவதால் அடையப்போவது எதுவுமில்லை என்று கருதியது. அதே நேரம் இந்தியா, மற்ற மேற்குலகு நாடுகளையும் பி.என்.பி ஆட்சிக்கு வந்தால் வங்கதேசம் இன்னொரு ஆப்கானிஸ்தான் ஆகும் என்று எச்சரித்தது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, பி.என்.பி ஆட்சியில் இருந்தபோது, இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் தாக்குதல்கள் நடத்த பாக்கிஸ்தான் உளவுத்துறை உதவியுடன் தீவிரவாதிகள் வங்கதேசத்தில் உள்ள முகாம்களில் பயிற்சி பெற்றனர் என்று இந்தியா கூறியது. இதனால்தான் இந்தியா 15 ஆண்டுகளாகப் பிடிவாதமாக ஷேக் ஹசீனாவை ஆட்சியில் வைத்திருந்தது என்றது அமெரிக்கா.
எதிர்க்கட்சியான பி.என்.பி. தலைவர்கள் இந்திய அதிகாரிகளைச் சந்தித்து உறவுகளைப் பலப்படுத்த முயல்வதாகவும், இந்துக்களின் பாதுகாப்புக்கு உறுதியளிப்பதாகவும் தெரிவித்தனர். அதே நேரம் இந்தியா ஷேக் ஹசீனாவை ஆதரிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கோரினர். வங்கதேச அரசியலில் ஒரே ஒருவரை மட்டும் ஆதரிப்பது முட்டாள்தனமானது என்றும் அவர்கள் கூறினர்.
இந்தியா மிக நீண்டகாலம் ஒரு எதேச்சதிகாரியை ஆதரித்து வந்ததற்குக் காரணங்கள் என்னமோ சரியாக இருந்தாலும் வங்கதேச மக்களின் விருப்பத்தையும் கள நிலவரத்தையும் புரிந்து கொள்வதில் பெரிய தோல்வியடைந்தது என்று சில அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் வங்கதேசத்தில் இந்திய எதிர்ப்புணர்வு பெரிய அளவுக்கு அதிகரித்து வந்தது. அதே நேரம் ஷேக் ஹசீனா நாட்டை உறுதியான கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக இந்தியா நினைத்து இருந்தது. அமெரிக்கா தன்னை மீறி வங்க தேச ஆட்சியைக் கவிழ்க்காது என்றும் உறுதியாக நம்பியிருந்தது.
இந்நிலையில் 2024 ஜனவரி மாதத்தில் வங்கதேசத்தில் தேர்தல்கள் நடந்தன. பெரும்பாலான எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையிலிருந்தனர். பலர் தலைமறைவாக இருந்தனர். இதனால் இந்தத் தேர்தலையும் எதிர்க்கட்சியான வங்க தேச தேசியக் கட்சி புறக்கணித்தது. எதிர்த்து யாரும் போட்டியிடாத நிலையில் ஷேக் ஹசீனா வென்று ஆட்சியமைத்ததும் இந்தியாவும் சீனாவும் உடனடியாக அவரை வரவேற்று வாழ்த்தினர். வங்கதேசத் தேர்தலுக்குப் பிறகு இந்தியப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அறைகூவல் விடுத்தன.
ஆனால் அமெரிக்கா எதிர்பார்த்திருந்த வெடிப்பு வேறு இடத்திலிருந்து வந்தது.
வங்கதேசத்தில் 56 சதவீத இடஒதுக்கீடு அமலில் இருந்தது. சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் முப்பது சதவீத இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. இப்போது இந்த ஒதுக்கீட்டை ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினரே கைப்பற்றி வந்தனர். மீதி 26 சதவீத இடஒதுக்கீடு பெண்களுக்கும், சிறுபான்மையினருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் வழங்கப் பட்டுவந்தது.
இதற்கு எதிராகப் போராட்டம் நடந்து வந்ததால் ஷேக் ஹசீனா 2018 ஆம் ஆண்டு அனைத்து இடஒதுக்கீட்டையும் ரத்து செய்வதாக அறிவித்தார். அது 2020 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் அமலுக்கு வந்தது. 2024 ஆம் ஆண்டு ஜுன் 5 ஆம் தேதி வங்க தேச உயர்நீதிமன்றம் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது செல்லாது என்று தீர்ப்பளித்தது.
இது மாணவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. நாடு படுமோசமான வீழ்ச்சியில் இருந்தது. நாற்பது சதவீதம் என்ற அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வந்தது. படித்தவர்களுக்கு இந்த இட ஒதுக்கீட்டால் அரசு வேலைகள் கிடைப்பதும் கேள்விக்குறியானது.
ஜூலை 1 ஆம் தேதி ஆறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பல்லாயிரம் மாணவர்கள் இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கினர். ஜூலை ஏழாம் தேதி பந்த் நடத்தினர்.
ஜூலை 10 ஆம் தேதி டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் ஊர்வலம் நடத்தியபோது போலீஸ் தடுத்து நிறுத்தியது. டாக்கா ஸ்தம்பித்துப் போனது. ஷேக் ஹசீனா இந்தப் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் துரோகிகளான ரசாக்கர்களின் குழந்தைகள் என்றார். ரசாக்கர்கள் வங்கதேச விடுதலைப் போராட்டத்தின் போது பாகிஸ்தான் ராணுவத்துடன் ஒத்துழைத்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளாவார்கள்.
ஜூலை 15 ஆம் தேதியிலிருந்து ஆளும் கட்சியான அவாமி லீக்கின் மாணவரணி சாத்ரா லீக் போராடும் மாணவர்கள்மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது.
ஜூலை 16 ஆம் தேதி போராட்டம் வன்முறையாக மாறியது. துப்பாக்கி சூடுகள் நடந்தன. இணையம் முடக்கப்பட்டது. ஜூலை 21 அன்று உச்சநீதிமன்றம் இடஒதுக்கீட்டை 30 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைத்தது. இதன் பின்பு அமைதி திரும்புவது போலத் தெரிந்தது.
ஆனால் அவாமி லீக் அரசு தொடர்ந்து போராட்டத் தலைவர்களைக் கைது செய்து சிறையிலடைத்துக் கொண்டே இருந்தது. கைது செய்யப்பட்ட மாணவர் தலைவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர். எனவே சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும், ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று கோரி போராட்டம் தொடர்ந்தது.
ஆகஸ்ட் 4 ஆம் தேடி முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் இக்பால் கரிம் புயான் அரசை, ராணுவத்தை விலக்கிக் கொள்ளும்படி கூறியதோடு சென்ற மாத கொலைகளுக்குக் கண்டனமும் தெரிவித்தார். ராணுவ தளபதி வக்கார் உஸ் ஸமனும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். மாணவர்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி டாக்கா நோக்கி நீண்ட பயணம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்தனர்.
ஷேக் ஹசீனா இப்போதும் ராணுவமும், போலீசும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்து விடும் என்று கருதியிருந்தார். அதற்கான வாய்ப்புகளும் இருந்தன. ஆட்சியைக் கவிழ்க்கும் அளவுக்கு மாணவர் போராட்டம் வலிமை கொண்டதாக இல்லை. ஆனால் ஷேக் ஹசீனாவுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக படைகள் மாயமாக மறைந்து விட்டன.
ஆகஸ்ட் 5 தேதி ஊர்வலம் அதிபர் மாளிகையை நெருங்கியதும் ராணுவத் தளபதி, “பிரதமர் ஹசீனா 45 நிமிடத்தில் பதவி விலக வேண்டும் இல்லாவிட்டால் ஊர்வலம் அதிபர் மாளிகைக்கு வந்து சேர்ந்துவிடும்” என்று அறிவித்தார். ஹசீனா ஒரு உரை நிகழ்த்த விரும்பினார். ஆனால் அதற்கு நேரம் இல்லாததால் ராணுவ ஹெலிகாப்டரில் ஏறித் தப்பிச் சென்றார்.
விரைவில் அமெரிக்கா இடைக்கால அரசை ஆதரிக்கிறோம் என்று கூறியது. இலங்கையில் நடந்தது அப்படியே வங்கதேசத்திலும் நடந்தது. இலங்கையில் போராட்டக்காரர்கள் ஜனாதிபதியின் மாளிகையைத் தாக்கிச் சூறையாடினர். வங்க தேசத்திலும் இதுவே நடந்தது. பெரும் மக்கள் எழுச்சிக்குப் பிறகு ஷேக் ஹசீனா தப்பியோடியதும் இந்தியா தனது நிலையை மாற்றிக் கொண்டு தாங்கள் வங்க தேசத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தது.
போராட்டக்காரர்களான மாணவர்களின் கோரிக்கைப்படி வங்க தேசத்தின் ஒரே ஒரு நோபல் பரிசு பெற்றவரான முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. மோடி, யூனுசுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
அமெரிக்கா தனது ஆதரவாளரான முகமது யூனுசைத் தற்காலிக அதிபராக ஆட்சியில் அமர்த்தியதும் வங்க தேச மக்கள் தங்கள் நாட்டின் எதிர்காலத்தை தாங்களே தீர்மானித்துக் கொள்வார்கள் என்று கூறியது.
The Jaipur Dialogues என்ற சங்கிகளுக்கு ஆதரவான இணைய இதழில் CIA Backed Nobel Laureate Muhammad Yunus To Lead Bangladesh’s Army Backed Interim Government என்ற கட்டுரையை பி.எஸ்.நாகார்ஜுன் என்பவர் எழுதியுள்ளார். அதில் ஹிலாரி கிளிண்டன் பவுண்டேஷனுக்கு மிகப் பெரிய அளவுக்கு நிதியளித்தவர்களில் முகமது யூனுசும் ஒருவர் என்று கூறியுள்ளார். யூனுஸ் அமெரிக்காவின் இரண்டு உயர்ந்த பதக்கங்களைப் பெற்றுள்ளார். எனவே அவருக்கு அமெரிக்காவின் ஆதரவு உள்ளது என்பது தெளிவானது. இவர் கிராமின் வங்கி என்று ஒரு வங்கி நடத்தி ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சினார் என்று ஷேக் ஹசீனா குற்றம் சாட்டினார். இதை ஏழைகளின் வங்கி என்று கூறியே அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த வங்கியின் வட்டி விகிதம் மிகவும் அதிகம் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவின் NED–National endowment for democracy என்ற அமைப்புதான் உலகில் அமெரிக்கா நடத்தி வரும் வண்ணப் புரட்சிகளுக்கும், ஆட்சி மாற்றங்களுக்கும் நிதி அளித்து வரும் அமைப்பாகும். இந்த அமைப்பு நெட்ரா நியூஸ் என்ற வங்க தேச இணைய தளத்துக்கு நிதி வழங்கியது. மாணவர் போராட்டத்துக்கு முதலிலிருந்தே ஆதரவாக இருந்தது இந்த நெட்ரா நியூஸ் என்ற இணையதளமாகும். இது, தான் அமெரிக்காவிடமிருந்து நிதி பெற்றதை தனது தளத்திலேயே வெளியிட்டுள்ளது. இந்த இணைய தளம் சமூக வலைத்தளங்களில் போராட்டத்துக்கு ஆதரவாகப் பெரிய பிரச்சாரத்தை முன்னெடுத்தது. போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே அமெரிக்க அரசு போராட்டம் நடத்துவதற்கு மக்களுக்கு உள்ள உரிமை மதிக்கப்பட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டது. இதன் மூலம் போராட்டத்துக்குத் தனது ஆதரவைத் தெளிவாகக் காட்டிக் கொண்டது.
அதே போல பல்வேறு வளரும் நாடுகளின் ராணுவ அதிகாரிகள் அமெரிக்காவில் பயிற்சி பெற்றவர்கள். பல்வேறு சலுகைகள் இவர்களுக்கு அமெரிக்காவில் உண்டு. கூட்டு ராணுவப் பயிற்சிகள் மூலம் இவர்களுடன் அமெரிக்கா நெருக்கமான உறவைப் பேணி வருகிறது. வண்ணப் புரட்சிகள் நடக்கும் எல்லா நாடுகளிலும் அரசப் படைகள் காணாமல் போய்விடும் அல்லது போராட்டக்காரர்களுடன் இணைந்து கொள்ளும். அதுவே வங்க தேசத்திலும் நடந்தது. மக்களின் உண்மையான கோபம் அமெரிக்க ஆதரவு வண்ணப் புரட்சியாக வளர்த்தெடுக்கப்பட்டது.
இந்திய அரசு இடைக்கால வங்கதேச அரசுக்கு வாழ்த்துக் கூறினாலும் பல்வேறு இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இது சி.ஐ.ஏ. நடத்திய புரட்சி என்று குற்றம் சாட்டி வந்தனர். அதற்கு ஆதாரமாக மேற் சொன்ன யூனுசின் தொடர்புகளையும், போராட்டத்தின் முன்னிலை வகித்த BRAC பல்கலைக்கழகம் பில் கேட்ஸ் மற்றும் USAID நிதியுதவி பெறுகிறது என்பதை எடுத்துக் காட்டி அங்கே அவாமி லீக்குக்கு எதிரான மனநிலை கொண்ட மாணவர்கள் உருவாக்கப்படுகின்றனர் என்று கூறினர். மாணவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள முகமது யூனுசைப் பதவியில் அமர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தது அவர்களது அமெரிக்க ஆதரவு மனப்போக்கைக் காட்டுகிறது என்கின்றனர் இந்த இந்துத்துவவாதிகள். இது எந்த அளவுக்கு உண்மை என்று கூற முடியாது என்றாலும் வங்கப் புரட்சிக்கு எதிரான இந்துத்துவவாதிகளின் மனநிலையை இந்த குற்றச்சாட்டுகள் தெளிவாகக் காட்டுகின்றன.
வங்க தேசத்தில் இந்தியா ஏராளமாக முதலீடு செய்துள்ளது. ஏராளமான இந்திய முதலாளிகள் வங்கதேசம் சென்று தொழில் நிறுவனங்களும், வணிக நிறுவனங்களும் நடத்தி வருகின்றனர். இந்தியாவும் சீனாவும் ஏராளமான கட்டுமானப் பணிகள் செய்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் வங்க தேச அரசு கவிழ்க்கப்பட்டிருப்பது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும். புதிதாக உருவான அரசு இந்தியாவிடமும் சீனாவிடமும் நட்புறவுடன் இருக்க விரும்புவதாகக் கூறியுள்ளது. ஆனால் எல்லாவற்றையும் புதிதாகத் தொடங்க வேண்டும்.
இந்த நேரத்தில் வங்க தேச ஆட்சி ஏன் கவிழ்க்கப்பட்டது என்பது பற்றி அலெக்சண்டர் மெர்கூரியஸ் என்பவர் ஒரு புதிய கருத்தை முன்வைக்கிறார். இது இந்துத்துவவாதிகளின் அதீத கோபத்துக்கான காரணத்தை ஓரளவு தெளிவுபடுத்துகிறது. வங்கதேச ஆட்சிக்கவிழ்ப்பு என்பது அமெரிக்கா இந்தியாவுக்கு விட்ட எச்சரிக்கை என்கிறார் அலெக்சாண்டர். அதன் காரணமாகவே இந்திய அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தொடர்ந்து அமெரிக்கா சென்று இந்த ஆட்சிக் கவிழ்ப்பைத் தவிர்க்க வேண்டும் என்று முயன்றார்கள் என்கிறார் அவர்.
உக்ரேன் போரின் போது இந்தியா உறுதியாகத் தங்கள் பக்கம் நிற்கும் என்று அமெரிக்கா எதிர்பார்த்தது. ஆனால் தன் மீது விதிக்கப்பட்ட தடைகளால் ரஷ்யா தான் ஏற்றுமதி செய்யும் பெட்ரோலுக்கு விலைக் குறைப்பு செய்தது. இந்திய முதலாளிகள் அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ரஷ்யாவுடன் வணிகத் தொடர்புகள் வைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வை இந்தியா, ரஷ்யா, இரான், பிரேசில், எகிப்து, எத்தியோபியா, சீனா, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள பிரிக்ஸ் நாடுகள் அமைப்புடன் இந்தியா நெருக்கமாவதற்கான அறிகுறியாக அமெரிக்கா பார்க்கிறது என்கிறார் அலெக்சாண்டர். பிரிக்ஸின் அடிப்படை நோக்கமே ஒற்றை மைய உலகைத் தவிர்ப்பதுதான் என்று சீனாவின் ஜின்பிங் வெளிப்படையாகவே கூறியுள்ளார். இந்த நாடுகள் தங்களுக்குள் பிரிக்ஸ் வங்கி என்ற வங்கியை உருவாக்கி தங்கள் நாடுகளின் பொருளாதார சிக்கல்களை ஓரளவு தாங்களே எதிர்கொள்ள முயல்கின்றன. இந்தப் பொருளாதரக் கூட்டு தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.
இதன் காரணமாக இந்த நாடுகள் ரஷ்யா, ஈரான் தவிர்த்து மற்ற நாடுகள் மேற்கத்திய நாடுகளிடமிருந்து விலகிச் சென்று விட்டதாகப் பொருள் இல்லை. இந்த நாடுகள் குறிப்பாக இந்தியாவும் பிரேசிலும் OCED ( Organisation for economic co operation and development) என்ற மேற்கத்திய நாடுகள் உருவாக்கியுள்ள அமைப்புடனும் நெருக்கமாகவுள்ளன. எனவே பிரிக்ஸ் போன்ற அமைப்புகள் உருவாக்கப்படுவது அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள் ஒரேயடியாக இந்தியா போன்ற வளரும் நாடுகளை மிதித்துத் துவைத்து விடாமல் தவிர்க்கவும், வணிகத்தில் தங்களுக்கு அதிக பங்கு பெறவுமாகும். இவ்வாறு கூட்டுக்கள் அமைப்பது தனது மேலாதிக்கத்துக்கு சவால் என்று அமெரிக்கா கருதி வருகிறது.
இந்தியாவின் மீது அமெரிக்கா கோபம் கொண்டிருப்பதால்தான் இந்தியாவின் வலியுறுத்தலை மீறி அமெரிக்கா வங்கதேசத்தின் ஆட்சியைக் கவிழ்த்தது. இதே போல இந்தியாவிலும் ஒரு வண்ணப்புரட்சி நடத்த அமெரிக்கா முயலக்கூடும் என்று பிஜேபி அரசு அஞ்சுகிறது. எனவே பிரதமர் மோடி உக்ரேன் சென்று தான் ரஷ்யாவுக்கு எதிராகக் போரிட்டு வரும் நாடுகளுடன் நெருக்கமாக இருப்பதாகக் காட்டிக் கொண்டுள்ளார். இந்தியாவில் வண்ணப்புரட்சி நடத்துவது சாத்தியமில்லை. அதே நேரம் காஷ்மீர், வேறு பல உள்நாட்டுப் பிரச்சினைகளைக் கொண்டு இந்திய அரசுக்குத் தீராத தலைவேதனையைக் கொடுத்துவிட முடியும் என்பது அலெக்சாண்டரின் பார்வையாகும்.
எனவே இந்தியா இரண்டு விதமான தந்திரங்களிலும் ஈடுபடுகிறது. ஒன்று அமெரிக்காவுடன் நெருக்கமாக முயல்கிறது. வேறு நண்பர்களையும் தேடிக் கொள்ள முயல்கிறது என்கிறார் அலெக்சாண்டர்.
வங்க தேசத்தின் இடைக்கால பிரதமரான முகமது யூனுஸ் தங்கள் நாட்டில் சூரிய ஒளித்தகடுகள் செய்யும் தொழிற்சாலைகளை அமைக்கும்படி சீனாவுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவுடனும் நெருக்கமாக இருப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. அடுத்து கலீதா ஜியா தலைமையிலான அரசு அமையும். ஆட்சிக்கவிழ்ப்பில் முக்கிய பங்கு வகித்த ராணுவம் தனது பிடியை விட்டுக் கொடுக்காது. திரைமறைவில் ஆட்சியதிகாரத்தில் செல்வாக்கு செலுத்தும். மற்றபடி மாணவர் புரட்சி இப்போதைக்கு திசை திருப்பப்பட்டு விட்டது. மக்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இல்லாத நிலை உருவாகிவிட்டது. முதலீடுகளுக்கும், பெரும் நிறுவனங்களின் சொத்துக்களுக்கும் ஆபத்து இல்லை.
போராட்டம் தீவிரமடைந்தபோது ஷேக் ஹசீனா இது இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் போராட்டம் என்று கூறி மேற்குலகில் தனக்கு சாதகமான நிலை ஏற்படுத்த முயன்றார். அது முடியவில்லை என்றதும் அமெரிக்கா செயிண்ட் மார்டின் தீவை கடற்படைத் தளம் அமைக்க கேட்டது என்று கூறினார். ஷேக் ஹசீனா அமெரிக்க எதிர்ப்பாளர் அல்ல. அன்னிய மூலதன எதிர்ப்பு தேசிய முதலாளியும் இல்லை. அமெரிக்காவின் உற்ற நண்பராக இருந்து அவர்கள் சொன்ன பொருளாதார சீர்திருத்தங்கள் அனைத்தையும் செய்தவர். இப்போது அதே அமெரிக்கா தனது ஆட்சியைக் கவிழ்த்து விட்ட நிலையில் தன்னை ஏகாதிபத்திய ஆதரவாளராகக் காட்டிக் கொள்ள முயல்கிறார். இது எதுவுமே வங்க தேசத்தில் பொருட்படுத்தப்படவில்லை. தவிர ஹசீனாவின் மகனே ஹசீனா அவ்வாறு கூறவில்லை என்று கூறிவிட்டார். எனவே இப்போதைக்கு ஹசீனா வங்கதேச அரசியலில் இல்லை.
வங்கதேசத்தின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2025 ஆம் ஆண்டு 24.8 பில்லியன் டாலரிலிருந்து 19 பில்லியன் டாலராகக் குறையும் என்று ஐ எம் எஃப் கூறியுள்ளது. இது பெரிய வீழ்ச்சி என்றும் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். இதைத் தவிர்க்க புது அரசு ஐ.எம்.எஃப். உடன் உடன்படிக்கைக்கு வர வேண்டும். அதற்கு ஐ.எம்.எஃப். விதிக்கும் கடுமையான நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். இதுவும் இலங்கையில் நடந்த அதே விஷயம்.
எனவே இறுதி வெற்றி அமெரிக்காவே அடைந்துள்ளது. ஆட்சி நடத்தியதும் அமெரிக்கா, கிளர்ச்சியைத் தூண்டியதும் அமெரிக்கா, திரும்பவும் ஆட்சியைப் பிடித்ததும் அமெரிக்கா என்பதே உண்மை.
அமெரிக்காவை நம்பித் தன்னை விஸ்வகுரு என்று கூறிக் கொண்டு உள்நாட்டில் அசைக்க முடியாத சக்தியாகக் கருதிக் கொண்டிருந்த சங்கிகள் நடந்த நிகழ்வுகள் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல், மேற்குலகின் நம்பிக்கையைப் பெறுவதற்காக உக்ரேன், இஸ்ரேல் என்று ஆதரவு கொடுக்க அலைமோதிக் கொண்டிருக்கிறார்கள்.