சோமு தன்னை முகர்ந்து பார்த்துக் கொண்டாள்.
வாழைப்பூவின் துவர்ப்பு வாசனை தன்னிடமிருந்தா வருகிறது? கட்டிலில் புரண்டு படுத்து மெதுவாக எழுந்தாள். திரவியம் கட்டிலின் மறு பாதியில் ஒருச்சாய்ந்து படுத்திருந்தார். ஒவ்வொரு விமானப் பயணம் முடிந்து வீடு திரும்பும் நாட்களிலும் அவர் இப்படி அயர்ந்தும் சீக்கிரமாகவும் உறங்கிவிடுவது வழக்கமானது தான்.
கல்யாணம் ஆன சமயத்தில் எல்லாம் நெஞ்சில் இரண்டு கைகளையும் வைத்து நேராகப் படுத்திருப்பார். தூக்கத்தில் கூட அசையவோ புரளவோ மாட்டார். பார்க்க சோமுவுக்கு ஆச்சர்யமாக இருக்கும். அப்போதைய ஒரு ரயில் பயணத்தில் தூக்கம் விலகி விழிப்பு வந்து ,எதிர் கீழ்ப் படுக்கையில் இருந்து திரும்பிப் படுத்து திரவியத்தையே பார்த்தபோது அவருடைய முகத்தில் அவ்வளவு அமைதி.. அப்பர் குளம் பெரியம்மை வீட்டுக் கிணற்றடியில் பக்கக் கன்றாக வளர்ந்து நிற்கும் வாழையின் அசையா முழு இலை கொண்டிருந்த அமைதி..
ரயில் ஏதோ ஒரு அகண்ட நதியின் மேல் ஓடிக்கொண்டு இருந்தது.. சோமு எழுந்து நின்று மற்ற படுக்கைப் பயணிகள் உறங்கியபடி இருக்க, கைகளை நெஞ்சில் கட்டியபடி பார்த்துக் கொண்டே நின்றாள். ‘புத்தர் மாதிரி’ என்று தோன்றியது. புத்தர் மாதிரி என்று தோன்றிய பிறகு முத்தமிட வேண்டும் என்றும் அப்படியே பக்கத்தில் படுத்து அணைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றலாமா? சோமுவுக்கு ஆனால் அப்படித்தான் இருந்தது. உடல் முழுதும் ஒரு வேகமான கொடி போலக் கிளர்ச்சி பரவி, கையின் பத்து விரல்களின் நகக் கண்கள் வரை முட்டி நின்றது.
சோமுவுக்கு இந்தப் படுக்கையறை தண்டவாளங்களின் மேல் ஓடும் ஒரு ரயில் பெட்டி போல அதிர்ந்தும் அசைந்தும் நகர்வதாகப் பட்டது. அசைவின் ஆரம்ப உணர்வு பழகி அசைவற்றதாகி விட்ட நிலையில் , தன்னுடைய தளர்வாடையின் ஏதோ ஒரு மடிப்புக்குள் இருந்தே அந்த வாசனை கசிந்து பெருகியிருக்க வேண்டும் என்று சோமு நினைத்தாள்.
பாப்புராஜ் இந்த வாசனையைத் துவர்ப்பு என்று சொல்லவில்லை. வாழைப்பூ வாசனை என்று சொன்னான். அப்படி அவன் சொன்ன சமயத்தில் சோமுவின் மேல் தளர்வாடையும் கிடையாது ஒன்றும் கிடையாது. அவள் மட்டும் தான் வியர்த்துப் போய் இருந்தாள். அப்படி அவன் சொன்னது எல்லாம் ஒரு முப்பது வருஷத்துக்கு முன்னால் இருக்கும். இப்போது பாப்புராஜ் எங்கே இருக்கிறான் என்று கூட சோமுவுக்குத் தெரியாது.
தூத்துக்குடியில் இருந்து நோய்டா போனான். மும்பைக்கு வந்தான். துபாயில் இருந்தான். மனைவியும் அவனும் பிரிந்துவிட்டார்கள். அவனுடைய மகள், அவளுடைய சித்தி வீட்டில் இருந்து எம்.பி. பி. எஸ். படிக்க,. இப்போது அவன் மட்டும் சென்னையில் தனியாக இருக்கிறான். ஏதோ சினிமா முயற்சியில் கூட.. இவ்வளவும் எப்படி எப்படியோ தெரிய வந்தாலும் ஒன்றும் தெரியாது என்றே சோமுவுக்குப் படும்.
பாப்புராஜ் எழுதும் கதைகளைப் படிப்பது, அதன் ஊடாக அவன் இருக்கிற இடத்தைத் தெரிவது எப்படி பாப்புராஜைத் தெரிவது ஆகும்? அவன் சொன்ன வாழைப் பூ வாசனை இத்தனை காலமும் கூடவே வருவது போல் இருந்தது. சற்று முன்பு அவள் கண்ட சொப்பனம் வரை அந்தத் துவர்ப்பு அவளுக்குள் இருந்து சுரக்கிறது.
கட்டிலில் இருந்து எழுந்த சோமு, இந்தப் படுக்கையறையோடு இருந்த கழிப்பறைக்குப் போகாமல் இன்னொரு புறத்தில் இருந்த பெரிய படுக்கையறைக்குப் போய், அதன் கழிப்பறையில் நின்றாள். அது சற்றுப் பெரியது. வாஷ் பேசின், முகம் பார்க்கும் கண்ணாடி எல்லாம் உடையது. சோமு நீள் வட்டக் கண்ணாடியில் தன்னைப் பார்த்தபடி சிகையை ஒதுக்கிவிட்டாள். . குனிந்து மார்புகளின் தொய்வில் ,தோள்ப் பட்டைகளுக்கு அருகில் எல்லாம் ஆழமாக நாசி விரித்துச் சுவாசித்தாள்.
அந்தச் சொப்பனத்தில் ஒரு செவலைப் பசு சதா நிறுத்தாமல் வாலைச் சுழற்றிக் கொண்டு அதன் எல்லையை மாயமாக வரைந்து காட்டுகிறது. வெண்மையாகத் தணிந்த அடிவயிற்றில் புடைத்து நெளியும் நரம்புகள் பால் மடுப் பக்கமாகப் போகின்றன. அப்புறம் எங்கு போனதெனத் தெரியவில்லை. இளஞ்சிவப்புக் காம்புகளில் சுரப்புக் காலத்தின் அழகு, ஈற்று நிற்பதற்கு முந்திய கடைசிக் கன்றுக் குட்டியின் எச்சில் நுரைப்பால் எழுதப்பட்டுக் காய்ந்திருந்தது.
தொள தொளவென்று கழுத்துத் தசை ஒரு திரைச் சீலை போல மடிந்து தொங்கக் குனிந்து சாப்பிடுகிறது. அதன் முன்னே அம்பாரம் போல வாழைப் பூவின் மடல்கள் கருநீலமாக, கருஞ்சிவப்பாக,, செவ்வல்லி நிறத்தில், தந்த மஞ்சளாக எல்லாம் சுருண்டும் சாம்பல் பூத்தும் மினுங்கியும் குவிந்து கிடக்கின்றன.
வாய் கொள்ளாமல் பசு வாழைப் பூ மடல்களைக் கடித்து உண்கிறது. கழுத்தை அண்ணாந்து உயர்த்திக் கொண்டு சவைக்கிறது. லேசாகக் கொம்பைச் சிலுப்புகிறது. கழுத்தில் மணி எதுவும் இல்லை. ஆனால் மணியின் சின்னக் கிணுங்கல் அதற்குக் கேட்டிருப்பது அதன் கண்களில் மினுங்குகிறது.. சாறும் எச்சிலும் தொண்டையில் இறங்க. அப்படியே சொக்கிப் போய்க் கண் செருகி நிற்கிறது. மொத்த உடலிலும் ஒரு சிலிர்ப்பு. நின்ற வாக்கில் விலாப்பக்கம் சிறகு முளைத்துக் காணாமல் போய் மறுபடியும் சிறகுதிர்த்துத் தரைக்கு வந்து இறங்குகிறது. இப்போது தான் கையோடு உரித்த வாழைப்பூ மடல்களை யாரோ சொரிகிறார்கள். புதிதாகப் பசி உண்டாகி, அது மீண்டும் குனிகிறது.
பசுவின் மொத்த உடலும் அருவமாகிவிட்டது. கடைவாயும் பல்வரிசையும் சுழலும் நாக்கு மட்டுமே. இரண்டு கடைவாயிலும் கருநீல அமுதம் திரள்கிறது. திரண்ட அமுதத்துக்கு வாசனை கிடையாது. இது திரளும் நேரத்து அமுதம்.
துவர்ப்பு வாசனை காற்றில் ஒரு பாடல் போலப் பரவுகிறது. அது உண்டாக்கிய துவர்ப்பு வாசனையை அதுவே ருசிப்பதாக, நாக்கு நுனியை இரண்டு நாசித் துளையிலும் சுழற்றி நுழைத்துத் துளாவுகிறது. அந்த துளாவலின் ஈரத்தில் தான் சோமு விழித்துக் கொண்டாள். அவளுடைய கை அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தது. மார்புச் சதையைப் பொத்திய கை வெதுவெதுத்திருந்தது
சோமு முதலில் முகத்தைக் கழுவிக் கொண்டாள். அவளையே கழுவிக் கொள்ளத் தோன்றி அதையும் செய்தாள். படுக்கை அறைக்கு வந்து நின்று திரவியம் தூங்குவதைப் பார்த்தாள். எதையாவது அவருக்குச் செய்ய வேண்டும் என்று இருந்தது. ஓரளவு குலையாமலே இருந்த போர்வையை அவர் கால் பக்கம் சரி செய்தாள். அவளுடைய பிரத்தியேக உபயோகத்திற்கு வைத்திருக்கும் தலையணையை அவருடைய பக்கவாட்டில் அணைவாக வைத்தாள். சுவர்க் கடிகாரத்தில் மணி 11.10 ஆகியிருந்தது. பதினொன்று பத்துக்கு உள்ளேயே அப்படி ஒரு சொப்பனம். அப்படி ஒரு விழிப்பு.
படுக்கையறைக் கதவை மூடும் வரை சரியாக இருந்த மனம், அந்த அறையை விட்டு வெளியே வந்து நடு ஹால் தாண்டி முன் அறைக்குப் போவதற்குள் என்னவோ ஆகியிருந்தது. சொப்பனத்திலிருந்து ஒரு பிசின் போல் வடிந்து தன் மேல் அப்பியிருக்கிற அந்தத் துவர்ப்பு வாசனையை உரித்து எறிந்துவிட முடிந்தால் எவ்வளவு நல்லது. சோமு அப்படி நினைத்தாள்..
குமிழி போல ஏதோ ஒன்று அவள் முன் திரண்டு கொண்டு வந்தது. அவள் எப்போதும் உட்கார்கிற அவளுக்குப் பிடித்தமான மூலையில் இருந்த அகன்ற மெத்தென்ற இருக்கையில் அமர்ந்தாள். எப்படியும் தானாகக் குமிழ்ந்தது தானாக உடையும் எனக் காத்திருந்தாள். எல்லாக் குமிழ்களும் உடைவதற்கு முன்னால் ஏன் இப்படி அழகாக இருக்கின்றன? தன் கண்ணாடிக் கூடாரங்களில் ஏன் வானவில் நிறங்களை உருகி வழிய விடுகின்றன? குமிழிக்குக் கதவுண்டா? அது திறந்திருக்கிறதா, மூடியிருக்கிறதா? சோமு இப்போது இருப்பது குமிழிக்கு உள்ளா, வெளியிலா?
சோமு வாசல் கதவுகளைத் திறந்து வெளியே வந்தாள். வெளிவாசல் இரும்புக் கதவைத் திறப்பதற்குப் படி இறங்கினாள். தெருவோரம் நிற்கிற பெருங்கொன்றை மரத்தின் நிழல் தரையில் அசைந்தது. நேற்றா, நாளையா பௌர்ணமி? ஏன் இன்றாக இருக்கும் எனத் தனக்குத் தோன்றவில்லை? சிரிப்புடன் சோமுவுக்குக் கேள்வி உண்டாயிற்று..
தெருவில் இறங்கி இரண்டு பக்கமும் பார்த்தாள். தெரு ஒரு உறைந்த தடாகம் போலக் கிடந்தது. அது இதற்கு முன்பு வெளியே வந்து நின்ற ஒன்றிரண்டு தடவைகளிலும் நதியாக நகர்ந்தோடியதே இல்லை.. இப்படித்தான் அசையாத தண்ணீர்த் தகடு . நிலவின் மூட்டம். யாரோ சித்திரம் வரைந்து கொண்டு இருந்தவர் டீ குடிக்க எழுந்து போயிருப்பது போலிருந்தது. ஒரு கீரிப்பிள்ளை இந்த வரிசையில் இருந்து எதிர் வரிசைக்கு குறுக்காகப் போயிருந்தால், அல்லது தெருக்கடைசியின் வலது மூன்றாவது கம்பத்தில் இருந்து கல் வெட்டாங்குழி வரை ஒரு கிழட்டு நாய் லொங்கு லொங்கென்று ஓடிப் போயிருந்தால் அந்தச் சித்திரம் அவர் டீ குடித்துவிட்டு வருவதற்கு முன்பே தானாகப் பூர்த்தி ஆகியிருக்கும்…
எல்லாம் அதனதன் அளவில் பூர்த்தியாக இருப்பதாகவும் தான் தான் இப்படி வந்து நின்று அதற்கு வேண்டாத இடைஞ்சல் செய்வதாகவும் அவளைப் போலவே ஒருத்தியை நிழலில் உண்டாக்கிக் கொண்டு சோமு அவளுடன் பேச ஆரம்பித்தாள்.
‘ உனக்குப் பத்துத் தலையே ஜாஸ்தி. அதுக்குப் பதினோராவது தலை ஒண்ணு வேணும்னு வரைஞ்சு பார்ப்பே. அஞ்சு விரல் இருக்கிற கையில ஆறவது விரலை ஒட்ட வைப்பே. அந்தப் பக்கம் ஒண்ணு இந்தப் பக்கமொண்ணுன்னு ரெண்டு இருக்கிறது காணாதுன்னு நடு நெஞ்சில மூணாவதா ஒண்ணை முளைக்க வைப்பே.. சாமியோ சாத்தாவோ, மனுஷனோ மிருகமோ உனக்கு சித்திரம் போதாது. அதிலேயும் ஒரு விசித்திரம் வேணும் இந்த நிலாவைப் பார்த்தியா. அது பெருசா வட்டமா இருந்தால் தான் என்ன? அதை யாரு இப்படி கையால ஓரத்தில லேசா அழிச்சுவிட்டது. ? உனக்குத் தெரியுமா? அப்படி அழிச்ச கையில ஒட்டிக்கிட்டுப் போன நிலா இன்னும் பத்துப் பதினஞ்சு நாளுல அவனுக்கே தெரியாம அவன் கையில முழுசா ஆயிரும்’
சோமு வீட்டு வாசலை விட்டுச் சற்றுத் தூரம் நகர்ந்து, அப்போதும் பெருங்கொன்றை மர உச்சிக் கிளை நிலாவை மறைத்ததால் அதை விட்டும் விலகி அவள் தெருவும் அந்தக் குறுக்குத் தெருவும் சந்திக்கிற இடத்தில் நின்று பார்க்க ஆரம்பித்திருந்தாள். நிலாவையே பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும் என்று நினைத்தவளுக்கு நிலா மறைந்து திறந்த வானம் மட்டும் விசாலமாகக் கிடைத்தது.
இது மலை அரளி மரம் பூக்கும் காலமா? இவள் வந்து நிற்கிற குறுக்குத் தெருவின் முதல் வீட்டிலும் சற்றுத் தள்ளி, ’இங்கு பியானோ கற்றுத் தரப்படும்’ என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ள பலகை தொங்கும் நான்காவது வீட்டிலும் மலை அரளி அவ்வளவு பூத்திருந்தது. அந்த பியானோ கற்றுத் தரப்படும் வீட்டில், அந்த மலை அரளி மரம் வீட்டுக்குள் இருந்து தெருப்பக்கம் சாய்ந்திருக்க வசதியாக, சுற்றுச் சுவரில் அதற்கான இடத்தை விட்டுக் கட்டியிருப்பார்கள்.
சோமுவுக்கு அந்த அரளியின் காட்டமான வாசனை பிடிக்கும். இதுவே மற்றொரு நாளாக இருந்திருந்தால் சோமு அதுவரை நடந்து போய்க் கூட அந்த வாசனையால் தன்னை நிரப்பி இருந்திருப்பாள். இன்று அதற்கு இடமில்லை. சொப்பனத்தின் வாழைப்பூ வாசனை, கழுத்துவரை நிரம்பும் படியான குவளையில் அவளுக்குள் ஊற்றப்பட்டு இருக்கிறது.
குறுக்குத் தெருவில் இருந்து படு வேகமாக வந்த சைக்கிள் வௌவால் வளையமாக அவளைச் சுற்றிக்கொண்டு கல் வெட்டாங்குழிவரை போய் அதே வேகத்தில் மறுபடி அவளுக்கு முன்னால் திரும்பி ,மறுபடியும் வந்த இடத்துக்குள் செருகிக் கொண்டது. சைக்கிளை ஓட்டுகிறவன் நிலாவினால் தொந்தரவு செய்யப்பட்டவனாக இருக்க வேண்டும்..அவனுடைய சைக்கிள் சக்கரங்களில் அவனுடைய நிலா உருண்டுகொண்டு இருக்கிறது
சோமு அந்தப் பையனைப் பார்த்திருக்கிறாள். கை, கால் எல்லாம் பதினான்கு பதினைந்து வயதுப் பையனாக இருக்கும். முகத்திற்கு முப்பது நாற்பது வயது போலத் தெரியும். அதுவும் பச்சைக் களிமண் உடம்பின் மேல் சுடுமண்ணில் செய்த முகத்தை ஒட்டிவைத்தால் எப்படி இருக்குமோ அப்படி. தன் முகத்தைப் பற்றி அந்தப் பையனே ஒரு தீர்மானத்திற்கு வந்திருக்கலாம்.
பகல் வெளிச்சம் தெரிகிற நேரத்தில் அவன் சைக்கிள் ஓட்டுவதை இந்தத் தெருவில் யாரும் பார்த்திருக்க முடியாது. இருட்டின பிறகு அதுவும் தெரு விளக்குகள் எரியும் போதுதான், அவனே அவனுக்கு எதிரான் ஒரு யுத்தத்தில் அம்பு விடுவது போல வேக வேகமாக சைக்கிளை மிதிப்பான். வேகத்தைக் கூட்டுவதற்காக, சைக்கிள் சீட்டில் உட்காராமல், நின்றுகொண்டே அழுத்தி அழுத்தி மிதித்து, ஒரு புள்ளியில் கூட நிலைத்து நிற்காதபடி அடுத்த புள்ளிக்கு அந்தச் சைக்கிளும் அவனும் பாய்ந்து மறைந்துவிடுவதுண்டு.
சைக்கிளை விடுவதற்குத் தரையில் அவன் கண்ணுக்குத் தெரியாத ஒரு வளையம் வரைந்து வைத்திருக்கிறான். அந்த வளையத்தில் ஒரு மாயத்தை அவன் உண்டாக்கியிருந்தான். எல்லா மாயமும் ஒரு கட்டத்தில் தனக்குள் சிக்க வைக்கும். தன் வலையிலிருந்து தப்பிக்க விடாது. சகல திசைகளிலும் ஒரு மரணக் கிணறு சர்க்கஸ் போல அந்த சைக்கிளில் நெடுக்கு வாக்கில் தலை குப்புறக் கூடப் போவான். எப்படி விழாமல் மேல் விதானத்தில் இருந்து கீழே இறங்குகிறான்?
சோமுவுக்கு அவன் மேல் ஒரு கவனம் உண்டு. ஒரு மழைக்காலத்தில் இரண்டு பாட்டம் பெய்து முடித்து ஓய்ந்து குளிர்ந்திருந்த ஒரு இரவு. தெரு விளக்கு வெளிச்சத்தில் படை படையாக ஈசல்கள் பறக்கும் ஒரு வினோதக் காட்சி. வழக்கத்தை விடவும் அதிக நேரம், ஓட்ட வேண்டும், நிறுத்தவே கூடாது என அவன் முடிவெடுத்தவனாகச் சைக்கிளில் சுற்றிக்கொண்டே இருந்ததைப் பார்த்திருக்கிறாள்.
சோடியம் வேப்பர் வெளிச்சத்தில் கலைந்து மினுங்கும் ஈசல் சிறகுகளின் பழுப்பு விளிம்பில் இருட்டு கிழிந்து சிதறி விழுகிறது. அந்தப் பையன் சைக்கிள் ஓட்டும் வேகத்தில் அந்தக் கிழிசல்கள் தரையில் அதன் பின்னால் சிறிது தூரம் நகர்கின்றன. மிகுந்த துக்கத்தை உண்டு பண்ணுவதாகவும் தாங்கவே முடியாததாகவும் இருந்த அந்தக் காட்சியை சோமு தடை செய்து நிறுத்த விரும்பினாள்.
இரண்டு மூன்று சுற்றுகள் அவன் போக்கில் அவனைப் போகவிட்டு, அவனின் வேகம், அவன் திரும்புகிற இடம் எல்லாவற்றையும் அவதானித்துவிட்டு, அவனே எதிர்பாராத ஒரு வேளையில் சோமு, அடுத்த சுற்றில வரும் போது அவனுடைய சைக்கிளை மறித்துக்கொண்டு நின்றாள்.. அவ்வளவு வேகத்திலும் அவன் சோமுவையும் தள்ளிவிடாமல், சைக்கிளும் சாயாமல் பிரேக்கைப் பிடித்துச் சரசரவென்று டயர் மண்ணில் கோடிழுக்கக் கால்களை ஊன்றி நின்றான். ஹேண்டில் பார் வளைவுகளை இறுகப் பற்றியிருந்த சோமுவின் கைகளைத் தட்டிவிட்டுவிட்டு அதே வேகத்தில் மறுபடி சைக்கிளை மிதித்துச் சென்றான்..
அதை விட இன்னொன்று நடந்தது தான் முக்கியம். மறுபடியும் அதே வளையத்தில் வந்தவன் இன்னும் ஒரு போக்குவரத்துப் போலீஸ் போல நடுவில் ஆச்சரியம் விலகாமல் நின்று கொண்டிருந்த சோமுவின் பின்பக்கத்தில் குனிந்து அகல விரிந்த கையால் அறைந்துவிட்டுப் போனான்..
அதற்குப் பின், இப்படி இரவுகளில் எப்போதாவது அவன் சைக்கிள் ஓட்டும் போது சோமு தனியாகவோ திரவியத்தோடோ வரும் போது சற்றே சைக்கிளின் வேகத்தைக் குறைத்து அவளைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போக ஆரம்பித்திருந்தான். பாப்புராஜைப் போலவோ திரவியத்தைப் போலவோ அல்லாத அந்தச் சிரிப்பை சோமு விரும்பக் கூடச் செய்தாள். இத்தனாவது சுற்றில் இன்ன இடத்தைத் தாண்டும் போது அவன் மறுபடியும் தன்னுடைய பின் பக்கத்தைத் தட்டிச் செல்வான் என்று சோமு எதிர்பார்த்ததும் உண்டு. அது நிகழ சோமு தன்னைத் தயாராகவே வைத்திருந்திருக்கிறாள்.
இன்றைக்கு அவன் ஒரு கொண்டாட்டத்தில் இருப்பது போல சோமுவுக்குத் தெரிந்தது. எப்போதும் நல்ல ஆடைகள் அணிகிறவன்தான். இன்றைக்கு சற்றுக் கூடுதல். நல்ல அடர் மஞ்சளில் மணிக்கட்டு வரை மூடுகிற, கழுத்து வளையமுள்ள, உயர் தரத்தில் அவனுடைய உடை இருந்தது. ஒரு கால்பந்து அதன் தோல் சதுரங்களின் பளபளப்புடன் முன் பக்கத்திலும் முதுகிலும் பதிக்கப் பட்டு குறுக்கில் ஏதோ வாசகம் எழுதப் பட்டிருந்தது. சைக்கிளின் வேகத்தில் சோமுவால் அதை வாசிக்க முடியவில்லை.
ஒரு மஞ்சள் சிறகுள்ள பெரிய பறவை சோமுவின் முகத்தில் சிறகடிப்பின் காற்று வீசி, அவளைத் தாண்டித் தாண்டிப் பறந்தது. காற்று கிழிந்து, அப்படிக் கிழிந்த காற்றை உடனுக்குடன் காற்றே தைத்துக்கொண்டது. சோமு அவன் முதுகில் பதிக்கப்பட்டிருக்கும் கால்பந்து உருண்டு கீழே விழுந்து தன் பக்கம் வர விரும்பினாள். மைதானத்தின் நடுவில் இருந்து அவளுடைய விசையுடனான ஒரே உதைப்பில் அது கோல் போஸ்ட்டின் வலையில் மோதி, ஒரு படலம் போல வலை தொய்ந்தாடுவதைக் கற்பனை செய்தாள். இந்தத் தெருவின் தூக்கத்தில் சோமு ஒரு கனவு போலக் காணப்படுகிறாளோ?
அந்தப் பையனின் முகத்தில் இன்று அதிகம் சிரிப்பு இருந்தது. சோமுவின் பக்கத்தில் வரும் போது எல்லாம் அந்தச் சிரிப்பு கூடுதல் மெழுகு திரிகளை அவன் முகத்தில் ஏற்றி வெளிச்சம் உண்டாக்கி இருந்தது.. வெளிச்சத்திற்கு ஏதும் சூடு உண்டா? சூட்டில் இளகியது போல அவனுடைய முகத்தில் ஒரு ஈரப் பசை வந்திருந்தது.
அவன் அந்த மலை அரளி சாய்ந்திருக்கும் வீட்டுப் பக்கம் வரும் போது , ஏற்கனவே நின்று கொண்டு மிதிக்கும் அவனுடைய உடலை மேலும் செங்குத்தாக்கியபடி, கையை உயர்த்தி அதன் இலைகளைக் தொட்டான். சோமு தன்னைப் பார்த்துக்கொண்டு நிற்கிறாள் என்று அவனுக்குத் தெரிந்திருந்தது. தன் கொண்டாட்டத்தை அவளுக்குக் காட்டுவது போல அடுத்த சுற்றிலும் அவள் பார்க்க. அந்த மலை அரளிக் கிளையை எம்பித் தொட்டுவிட்டு மிக நெருக்கமாக சைக்கிளைச் சோமு பக்கம் உரசுவது போல வந்து சிரித்துவிட்டுப் போனான். அந்தச் சிரிப்பு ஒரு பரிசுப்பொருளாக அவனால் அவளிடம் கொடுக்கப் பட்டிருக்கிறது. சோமு அதன் அருவத்தை வருடிக்கொண்டு நின்றாள்.
இதற்கு அடுத்த முறை அவள் மேல் குறிவைத்து எறியப்பட்டு, இரண்டு மூன்று இலைகளும் காம்புமாக சோமுவின் மேல் விழுந்தது. சோமுவுக்கு மலை அரளியின் நரம்புகள் புடைத்த இலைகள் பிடிக்கும். ஒடிபட்ட காம்பில் இருந்து பால் கசிந்து கொண்டு இருந்தது. மிக அடர்த்தியான, மிக வெண்மையான, சொட்டாது மடிந்து தொங்கும் சொட்டு.
சோமு அந்த இலைகளைத் தன்னோடு நெஞ்சுக்கும் நடு வயிற்றுக்கும் நடுவில் வைத்துக் கொண்டாள். ஒருவேளை இந்தத் தளர்வாடை மட்டும் இல்லாவிட்டால், அந்தச் சொட்டு அவளுடைய உந்திச் சுழியில் விழக் கூடும். அப்படி விழ சோமுவுக்குச் சம்மதம்.
வீட்டை விட்டு வெளியே தெருவில் வந்த போது அவளைச் சுற்றி இருந்த துவர்ப்பின் கடல் உள்வாங்கி இருந்தது. அவள் கருத்த ஈரப் பாறைகள் முளைத்த, பாதங்கள் புதையும் மணல் படுகையில் நின்றாள். கரையில் அவள் இதுவரை பொறுக்கியிருந்த விதம் விதமான சிப்பிகளுக்கு உள்ளே இருந்தும் பிசுபிசுக்கும் உயிரிகள் அவள் பாதங்களில் இருந்து மேல் நோக்கி ஊர்ந்து கொண்டிருந்தன. எங்கே போய்ச் சேரவேண்டும் என்று அவற்றின் நகர்வுகளுக்கு இருந்த திசைகளின் தீர்மானத்தில் அவளுக்குக் கூச்சம் உண்டாயிற்று.. சோமு தன்னைப் பொத்திக்கொள்ள வேண்டியது இருந்தது.
அவனும் அவன் சைக்கிளும் எங்கிருந்து அப்படி அவள் முன் ,வெளிச்சமான ஒரு வாள் வீச்சுப் போல் மின்வெட்டினார்கள்? எல்லாவற்றையும் அதன் அதன் இயல்பில் இரு என்று யார் உத்தரவிட்டார்கள்.? நிலா வெளிச்சம் மிருதுவாகி இருந்தது. பெருங்கொன்றை இலைகள் ஒரு சாமர அசைவில் தணிந்து உயர்ந்தது. தெருவில் அந்தத் தடாகம் மீண்டும் உறைந்து தகடிட்டது. சோமு தன் சிகையை ஒதுக்கிவிட்டுக் கொண்டாள்.
சைக்கிளில் இருந்து அவன் இறங்கவில்லை. கால்களை இருபக்கமும் ஊன்றிக் கொண்டு சோமுவின் மிக அருகில் நின்றான். சிரிப்பு அவன் உதட்டோரங்களில் புள்ளியாக மட்டும் இருந்தது. பதின்வயதுக் கண்களின் மினுமினுப்பு பாதரசம் உருட்டியது. ஒரு துளி கூடத் தவிப்பில் சிந்தவில்லை. அந்த முகத்தில் எல்லாம் நிரம்பியிருந்தது.
சோமுவின் கையில் இரண்டு மூன்று மலை அரளிப் பூக்களைக் கொடுத்தான். எதையோ ஒப்படைத்தது போல கவனமாகவும் பத்திரமாகவும் அதை அவன் செய்தான். அவை வெள்ளையாக இருந்தன. உள்வட்டத்தில் மஞ்சள் பூச்சு இருந்தது. வெள்ளையில் கால் வைத்து இறங்கி மஞ்சளின் ஊடாகப் போனால் வேறெங்கோ சென்றுவிடுவதற்குரிய படிக்கட்டுகளைக் காம்பு வைத்திருந்தது.
அப்படி அவன் கொடுத்த அந்தக் கணத்திற்குப் பின் எந்தக் கணமும் அங்கு நிகழ்வதற்கு இல்லை என்பது போல அவன் சைக்கிளை மிதித்துக் கொண்டு சென்றான். சைக்கிளின் இருக்கையில் மிக வசதியாகத் தன்னை வைத்தபடி, நிதானமாக முன்னகர ஆரம்பித்தான்.
சோமு அந்த மலையரளிப் பூக்களைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். எல்லாப் பூக்களும் தன்னை எவ்வளவு முடியுமோ அவ்வளவு முழுமையாக மலர்த்தியிருந்தன. இரண்டு கைகளையும் விரித்த போது, ஒரு பூ தன் ஒரு இதழ் நுனியில் இருந்து அடுத்த இதழ் நுனிக்குத் தன்னை நகர்த்தி லேசாகப் புரண்டு படுத்தது. அப்படி அது புரண்டதும் எல்லா மலை அரளியும் ஒரே மலை அரளிப் பூவாகிவிட்டது.
சோமு தன் முகத்தை ஓரளவு குனிந்து, கைகளை அந்தப் பூக்களுடன் ஓரளவு உயர்த்தி, இரண்டுக்கும் இடையில் இந்த நிலா வெளிச்சம், இந்தத் தெரு, திறந்து கிடக்கும் அவள் வீடு எல்லாம் தெரிகிற மாதிரி அப்படியே நின்றாள்.
இப்போது அவளிடமிருந்து புதிதாக வேறொரு வாசனை எதுவும் வருமா? வந்தால் அது எப்படி இருக்கும்?
மீண்டும் சோமுவுக்குத் தன்னை முகர்ந்து பார்க்கவேண்டும் என்று தோன்றிற்று.
வண்ணதாசன்