“கடவுள் இந்தப் பிரபஞ்சத்தப் படைக்கும்போது இந்த பூமியில ஒரு மண்துகள்கூட இல்லை. நீங்க இப்ப உக்காந்துட்டு இருக்குற இடம் வளமான ஒரு பூமியாக இருந்துச்சு. பசுமையான விவசாய நிலமா இருந்துச்சு. அதைக் காட்டு நிலம்’ன்னு சொன்னாங்க. ‘நீ செய்யிற ஒவ்வொரு பாவத்துக்கும் பூமியில ஒரு துகள் மணல் வந்து விழும்’னு கடவுள் சொன்னார். அப்போ மனுசன் நினைச்சானாம். ‘ஒரு துகள் மணலால என்னை என்ன செய்ய முடியும்’ன்னு. அதனால அவன் பாவம் பண்ண ஆரம்பிச்சான். ஒவ்வொரு மணல் துகளா பூமி மேல வந்து விழ ஆரம்பிச்சது. ஆனா இப்போ, கடவுள் படைச்ச பசுமையான நிலமெல்லாம் வறண்ட பாலைவனமா மாறிருச்சு. அதனாலதான் நாம எப்பவும் பாவம் மட்டும் செய்யவே கூடாது. கடவுள் எல்லாத்தையும் பாப்பாரு. திருடக் கூடாது. பொய் சொல்லக் கூடாது. தப்பு செய்யவே கூடாது. தப்பாவும் யோசிக்கக் கூடாது. புரிஞ்சதா?”

ஒரு இந்திப் பேராசிரியர் இந்தக் கதையைச் சிறுவர்களுக்குச் சொல்கிறார். அவர் பேராசிரியராக வேலை செய்தாலும், வார இறுதி விடுமுறையில், இராஜஸ்தானின் ஏதாவது ஒரு கிராமத்திற்குச் சென்று அங்குள்ள ஏழைக் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கிறார். அவர் அமைதியானவர்; கதைகள் சொல்வதில் வல்லவர். இராஜஸ்தான் பாலைநிலப் பின்னணியில் மேற்கண்ட கதையை அவர் சொல்லும்போது, நமக்கேகூட அவர் பேச்சில் ஒரு லயிப்பு வந்துவிடுகிறது. ஆனால், அவன்தான் ஒரு Serial Killer! இவன்தான் கொலைகாரன் என்று கதையின் தொடக்கத்திலேயே சொன்ன பிறகும், எட்டு எபிசோட்டையும் சலிக்காமல் பார்க்க வைக்கிறார்கள். அவ்வளவு அழகான திரைக்கதை!

ஸோயா அக்தரும், ரீமா காக்டியும் இணைந்து கதை, திரைக்கதை, இயக்கம் செய்து Dahaad வெப் சீரிஸை உருவாக்கியிருக்கிறார்கள். இவர்கள் உருவாக்கத்தில் வெளிவந்த Made in Heaven, Lust Stories பற்றி ஏற்கெனவே உயிர்மையில் எழுதியிருக்கிறேன். இந்தி சினிமாவில் மாற்றுச் சிந்தனையோடு இயங்கக்கூடியவர் ஸோயா அக்தர். தங்கள் படைப்பில் பாலியல் சுதந்திரம் உள்பட எல்லாச் சுதந்திரங்களையும் கலாப்பூர்வமாகப் பேசக்கூடியவர்கள். பிரபல இந்திப் பாடகர் ஜாவித் அக்தரின் மகள்தான் ஸோயா அக்தர் என்பது கூடுதல் தகவல்.

குறிப்பிட்ட pattern-இல், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கொலைகளைக் செய்பவர்களை Serial Killer என்கிறார்கள். சீரியல் கில்லர்களுக்கான உளவியலைப் பற்றித் தெரிந்துகொண்டால்தான், ஸோயா அக்தரும் ரீமா காக்டியும் அதை எந்தளவு வித்தியாசமாகத் தங்கள் படைப்பில் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது தெரியும்.

இதுவரை தெரியவந்துள்ள தொடர் கொலைகளில்.  இளம்பெண்களைப் பின்தொடர்ந்து, வன்புணர்வுச் சித்திரவதைகள் செய்து, கழுத்தை நெரித்துக் கொன்ற சீரியல் கில்லர்கள்தான் மிக அதிகம். பெண் குழந்தைகள், கன்னிகள், திருமணம் ஆனவர்கள், விபச்சாரிகள், வயதானவர்கள் எனப் பலவிதமான பெண்ணினத்தினர் தொடர்கொலையாளர்களுக்கு இரையாகியுள்ளனர். கொலை செய்தபின்பு அவர்களின் உள்ளாடைகளை எடுத்துச் சென்றுவிடும் Psychopath-கள் மிக அதிகம்.

பெண்களிலும் விபச்சாரம் செய்பவர்கள்தான் மிக அதிகமாகக் கொலைசெய்யப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக, பச்சிளம் குழந்தைகள், சிறுவர்கள், தனி வீடுகளில் வாழும் முதியோர், அண்டைவீட்டில் வசிப்போர், சாலையோரம் தங்கும் பணியாளர், அடுக்குமாடி வாட்ச்மேன்கள், ஆண்பால் ஈர்ப்பாளர்கள் ஆகியோர் சீரியல் கில்லர்களுக்கு இரையாகியுள்ளனர்.

திருட்டுக்காகக் கொலைசெய்தல், உடல்பாகங்களுக்காகக் கொலைசெய்தல், dating அழைத்துச் சென்று கொலைசெய்தல், பொறாமையால் கொலைசெய்தல், பாலியல் வெறியில் கொலைசெய்தல், புலம்பெயர்ந்து வந்தவர்களைக் கொலைசெய்தல், மாற்று மதத்தினரைக் கொலைசெய்தல் எனப் பட்டியலிட்டால் அடியாழத்தில் இந்தக் கொலைகளுக்கெல்லாம் ஒரே காரணம் இருப்பதைக் கண்டறிய முடியும். அதன் பெயர் வெறுப்பு (Hatred).

சீரியல் கில்லர்கள் யாரும் நீதிபதிகளைக் குறிவைத்துக் கொல்வதில்லை; காவல்துறையினரைக் குறிவைத்துக் கொல்வதில்லை; அதிகாரம் படைத்த யாரையும் கொலை செய்யவில்லை. இந்தியாவில் இஸ்லாமியர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பெண்கள், புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்கள், எதிர்ப்பு காட்டமுடியாத குழந்தைகள் என இவர்கள்தான் இரையாகிறார்கள். ஜாதி, மதங்களின்மூலம் மனிதர்களிடம் புகுத்தப்படும் வெறுப்புணர்வுதான் பெரும்பாலான சீரியல் கில்லர்களை உருவாக்குகிறது.

சீரியல் கில்லர்கள் கொலைசெய்யும் முறையிலும் பலவகை உள்ளன. கழுத்தை நெரித்துக் கொல்லுதல். கோடரியால் வெட்டிக் கொல்லுதல், கத்தியால் குத்திக் கொல்லுதல், சுத்தியலால் அடித்து முகத்தைச் சிதைத்துக் கொல்லுதல் போன்ற வன்முறையான முறைகள் பல. விஷத்தைக் கொடுத்துக்கொல்லுதல் மிதவாத வன்முறை!

கத்தியோ, கோடரியோ, துப்பாக்கியோ, கயிறோ மிக எளிதில் கிடைத்துவிடும். ஆனால், சயனைட் போன்ற விஷம் எளிதில் கிடைத்துவிடாது. விஷ மருந்தைக் கொடுத்துக் கொன்றவர்களில் முதல் இடத்தில் இருப்பவர்கள் நர்ஸ்கள். அவர்களுடைய பராமரிப்பில் இருந்த நோயாளிகளை அமைதியான முறையில் வழியனுப்பி வைத்திருக்கிறார்கள். ஒருவரைக் கொடூரமாகக் கொல்லும் பலமற்றவர்கள் மிதமான வன்முறையான விஷத்தைக் கையில் எடுக்கிறார்கள்.

இந்தியாவில் சயனைட் மோகன், சயனைட் மல்லிகா என்று இரண்டு சீரியல் கில்லர்கள் இருந்திருக்கின்றனர். இரண்டு பேருமே கர்நாடகாவில்தான் இருந்துள்ளனர். இவர்களில் சயனைட் மல்லிகா என்னும் கே.டி,கெம்பம்மா என்பவள், ஒரு சாமியார் போலக் குறிசொல்லிக்கொண்டு, கோயிலுக்கு வரும் பெண்களிடம் பூசை செய்வதாகக் கூறி, அவர்களுக்கு சயனைட் கலந்த தண்ணீரைக் கொடுத்துக் கொலை செய்திருக்கிறாள்.

சயனைட் மோகன் (மோகன் குமார்) என்பவன் மங்களூரில் விளையாட்டு ஆசிரியராக இருந்தவன். அந்தப் பணியிலிருந்து விலகிச் சென்ற பிறகு, ஏறத்தாழ 20 பெண்களை அனுபவித்துவிட்டு, சயனைட் கொடுத்துக் கொலைசெய்திருக்கிறான். இவனுடைய கதையை ஆதாரமாகக் கொண்டுதான் Dahaad வெப் சீரிஸை எடுத்திருக்கிறார்கள்.

ஸோயா அக்தர் – ரீமா காக்டி இந்தக் கதையை இராஜஸ்தானில் நடப்பதாகக் காட்டியிருக்கிறார்கள். அவர்களுடைய நோக்கம் ஒரு சீரியல் கில்லரின் கதையைச் சொல்வதில்லை. மாறாக, வெறுப்புணர்வு ஒரு மண்ணில் எப்படி உருவாக்கப்படுகிறது என்பதைச் சொல்வதுதான். இந்தக் கதையில், இராஜஸ்தானின் ஒரு பள்ளிக் கூடத்தில்,

“ஜாதிக் கட்டமைப்புன்றது, இந்த சமூகத்தில ஓவ்வொருத்தரும் என்ன நிலையில இருக்காங்க’ன்றத வகுத்துச் சொல்லுது. பிராமணர்கள்தான் ஜாதியில் உயர்ந்தவர்கள். பிராமணர்கள்தான் கல்வியில் உயர்ந்தவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் மதபோதகர்களாகவும், ஆசிரியர்களாகவும், தலைவர்களாகவும் இருக்கிறார்கள். சூத்திரர்கள் தாழ்ந்த ஜாதியினர். பரம்பரை பரம்பரையாக அவர்கள் கூலி வேலை செய்கிறார்கள்” என்று ஓர் ஆசிரியர் மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கிறார். ஜாதி மதங்களை ஏற்றுக்கொண்ட ஒரு சநாதன பூமியில், சீரியல் கில்லர் எப்படி இருப்பான் எனக் காட்டியிருக்கிறார்கள்.  முதலில் Dahaad என்ற கதையைப் பார்த்துவிடலாம்.

இராஜஸ்தான் மாநிலத்தின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள மண்டாவாவில் கதை நடக்கிறது. அந்த ஊரில் உயர் ஜாதி  இந்துப் பெண்ணை, இஸ்லாமிய இளைஞன் ஒருவன் காதலிக்கிறான். அவனைக் கைது செய்யும்படி போலிஸ் ஸ்டேசன் முன்பு போராட்டம் நடத்துகிறார்கள். அதே ஊரில் கிருஷ்ணா சந்தால் என்ற தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த பெண் கடந்த இரண்டு மாதங்களாகக் காணவில்லை என அவளுடைய அண்ணன் புகார் கொடுக்கிறான்.

அவன் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவன் என்பதால் அவனுடைய புகாரைப் போலிஸார் எடுத்துக்கொள்ள மறுக்கிறார்கள். தவிர, வீட்டைவிட்டுச் செல்லும்போது, “நான் விரும்பும் நபரோடு திருமணம் செய்து வாழப் போகிறேன்” என்று ஒரு கடிதத்தையும் எழுதி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறாள். “காணாமல் போனவர்களைத்தான் தேடமுடியும். காதலித்து, கடிதம் எழுதி வைத்துவிட்டு, ஓடிப்போனவளைத் தேடமுடியாது” எனப் போலிஸார் சொல்லிவிடுகின்றனர்.

உயர்ஜாதி இந்துப் பெண்ணைக் காதலித்த இஸ்லாமிய இளைஞனின் முகத்தில் கரியைப் பூசி, அடித்து இழுத்து வந்து, போலிஸ் ஸ்டேசனில் ஒப்படைக்கிறார்கள். கிருஷ்ணாவின் அண்ணனுக்கு மனத்தில் ஓர் எண்ணம் தோன்றுகிறது. ”என்னுடைய தங்கையையும் இஸ்லாமிய இளைஞன் ஒருவன் காதலித்து ஏமாற்றிவிட்டான். என்னுடைய புகாரை யாரும் எடுத்துக்கொள்ள மறுக்கிறார்கள்” என உயர்ஜாதி தாக்கூர்களிடம் ஒப்பு வைக்கிறான்.

உயர்ஜாதியினர் மிரட்டலுக்குப் பணிந்து, கிருஷ்ணா சந்தால் வழக்கை எடுத்துக்கொள்கிறார்கள். அவளைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு போலிஸ் இன்ஸ்பெக்டர் Anjali Bhati-யிடம் (சோனாக்ஷி சின்ஹா) ஒப்படைக்கப்படுகிறது. அஞ்சலியும் தாழ்ந்த ஜாதியில் பிறந்தவள்தான். தினந்தோறும் அவமானத்தைச் சந்தித்துக்கொண்டு இருந்தாலும், துணிச்சலாக எல்லோரையும் எதிர்த்துக் கர்ஜிக்கிறாள். Dahaad என்றால் கர்ஜனை என்று பொருள்.

கிருஷ்ணாவுக்கு வயது 28 இருக்கும். நாற்பதாயிரமும் நகைகளும் எடுத்துச் சென்றிருக்கிறாள். அவளுடைய காதலனை யாரும் பார்த்ததில்லை. கிருஷ்ணாவின் அம்மாவுக்கு அவள் ஓடிப்போனதில் எந்தக் கவலையும் இல்லை. “நான் என்ன புதையலா வச்சிருக்கேன், வரதட்சணை குடுத்து கல்யாணம் பண்றதுக்கு” என்கிறாள்.

போலிஸார் கிருஷ்ணாவின் மொபைல் ஃபோன் அழைப்புகளைச் சோதிக்கிறார்கள். ஜாவீத் லோஹர் என்பவனின் மொபைல் ஃபோனிலிருந்து கிருஷ்ணாவுக்கு அழைப்புகள் வந்திருக்கின்றன. இஸ்லாமியன்’தான் கடத்தியிருக்கிறான் என்பதைத் தெரிந்தவுடன், உயர்ஜாதியினர் அவனை அடித்து, இரயில்வே தண்டவாளத்தில் கட்டிப்போட்டு, செல்ஃபியும் எடுத்துக்கொள்கிறார்கள்.

ரயில் வந்து ஜாவீத்மீது ஏறுவதற்குள் அஞ்சலி அவனைக் காப்பாற்றுகிறாள். அவனிடம், “கிருஷ்ணா எங்கே?” எனக் கேட்கிறாள். ”எனக்குத் தெரியாது, என்னுடைய தங்கை ஃபாத்திமாவும் ஆறுமாதமாகக் காணவில்லை. அவளுடைய ஃபோனில் இருந்துதான் பேசியிருக்க வேண்டும்” என்கிறான். கிருஷ்ணாவோடு, இப்போது ஃபாத்திமாவையும் தேடுகிறார்கள். அவளிடம் கிரண் பர்வா என்ற பெண்ணின் போனிலிருந்து அழைப்புகள் வந்திருக்கின்றன. அவளுக்கு சாஜ்ஜன் என்பவளிடமிருந்து, சாஜ்ஜனுக்கு மீனா குமாரியிடமிருந்து… இப்படியாக முதல் கட்டமாகப் பதினாறு பெண்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

கடத்தப்பட்ட அனைவரும் ஒரு pattern-னுக்குள் வருகிறார்கள். தாழ்ந்த ஜாதிப் பெண்கள். வயது 25 முதல் 35 வயது வரை. அடையாளம் தெரியாத ஒருவனோடு இரவில் மணிக்கணிக்கில் பேசியிருக்கிறார்கள். கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டைவிட்டுப் போயிருக்கிறார்கள். ”யாரோ ஒருவன் மிகத் தெளிவாக, குறிவைத்து, ஏழ்மையான குடும்பத்துப் பெண்களாக அதுவும் கீழ்ஜாதிப் பெண்களாகப் பார்த்துக் கடத்தியிருக்கிறான்” என்பதை அஞ்சலி கண்டுபிடிக்கிறாள்.

“யாருன்னே தெரியாத ஒருத்தனோட இத்தனை பொண்ணுங்க எப்பிடி ஓடிப் போயிருக்க முடியும்” எனக் கேட்கிறார் உயரதிகாரி. அஞ்சலியே தாழ்ந்த சமூகத்தில் பிறந்து வளர்ந்தவள் என்பதால் அவளுக்கு இதற்கான விடை தெரிகிறது. உயரதிகாரியிடம்,

“கல்யாணம் பண்ண வேண்டிய கட்டாயம் சார். அவங்க குடும்பத்துல வரதட்சணை குடுக்க முடியாது. ‘வயசாயிட்டே போகுது’ன்னு அவங்களக் குத்திக் காட்டிப் பேசுறது. அதனால யாராவது ஒருத்தர் கொஞ்சம் அன்பு காட்டுனதும்; வரதட்சணை வேண்டாம்’னு சொன்னதும்; நல்ல வாழ்க்கை தர்றேன்’னு சொன்னதும் எந்தப் பொண்ணுக்குத்தான் வேணாம்’னு சொல்ல மனசு வரும். அப்புறம் பொண்ணு ஓடிப் போனதும் குடும்பத்துக்கு ஒரு பாரம் குறஞ்ச மாதிரி இருக்கு” என்று சொல்கிறாள்.

கிருஷ்ணா கடத்தப்பட்டு இரண்டு மாதங்கள் கழித்துப் பிணமாகக் கிடைக்கிறாள். ”சயனைட் சாப்பிட்டு இறந்திருக்கிறாள். கல்யாண உடையில் இருக்கிறாள். பாத்ரூம் உள்ளே கதவு பூட்டப்பட்டிருக்கிறது.  சயனைட் அவளுக்கு எப்படிக் கிடைத்தது?” என யோசிக்கிறாள் அஞ்சலி.

இராஜஸ்தான் முழுக்க இப்படி அடையாளம் தெரியாமல் இறந்தவர்களின் பட்டியலைத் திரட்டுகிறார்கள் மொத்தம் 27 பெண்கள். எல்லோருமே முதல் நாள் செக்ஸ் வைத்திருக்கிறார்கள். மறுநாள் பாத்ரூம் கதவை உள்பக்கம் அடைத்து சயனைட் சாப்பிட்டு இறந்திருக்கிறார்கள். ஏன் இப்படிச் செய்தார்கள் என யோசிக்கிறார்கள்.

ஒரு நாள் ஆனந்த் ஸ்வர்னாகர் என்ற இந்திப் பேராசிரியரின் மகன், அவர் வைத்திருக்கும் ஏராளமான ஃபோனிலிருந்து ஒரு ஃபோனை எடுக்கிறான். அதைப் பள்ளிக்கூடத்திற்கு எடுத்துச் செல்கிறான். அந்தச் சிறுவனின் பள்ளிக்கூட நண்பர்கள் அந்த ஃபோனைப் பயன்படுத்துகிறார்கள். அந்த ஃபோன் இறந்துபோன ஒரு பெண்ணுடையது. இதைக் கண்டுபிடித்த போலிஸார் ஆனந்தைச் சந்தேக வளையத்திற்குள் கொண்டு வருகிறார்கள்.

ஆனந்தை விசாரிக்கிறார்கள். அவன் அமைதியானவன். எந்தச் சூழலையும் மிக எளிதாகக் கையாளக்கூடியவன். உணர்சிவசப்படாமல் அந்த ஃபோன் கீழே கிடந்தது என்கிறான். தான் எடுத்த இடத்தையும், நாளையும் சொல்கிறான். துளிகூட அவன்மீது சந்தேகம் வராமல் பார்த்துக்கொள்கிறான். அவன் நடிப்பை அஞ்சலி மட்டுமே நம்ப மறுக்கிறாள்.  மற்றவர்கள் எல்லாம் நம்பிவிடுகிறார்கள். அதனால் வெளியில் வந்துவிடுகிறான்.

எல்லோரும் நடந்த கொலைகள் அனைத்தையும் தற்கொலைகளாக மட்டுமே பார்க்கிறார்கள். ”பொண்ணுங்கள ஆசை வார்த்தை சொல்லி ஏமாத்துன பின்னால அவங்க அவமானம் தாங்காம செத்துட்டாங்க” என்று அவசரமாக ஒரு முடிவுக்கு வருகிறார்கள். அஞ்சலி மட்டும், “இது தொடர்கொலை மட்டுமில்லை. இந்தக் கொலைகளுக்குப் பின்னால் ஜாதியும் இருக்கிறது” என்பதை வலியுறுத்துகிறாள்.

உயரதிகாரியிடம், “ஜாதிக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்கு. இதுல யாராச்சும் மேல் ஜாதிப் பொண்ணுங்க இருக்காங்களா? எந்த ஜாதிப் பொண்ணுங்களுக்கு மதிப்பு இருக்கு’ன்னு அந்தப் பொறம்போக்குக்குத் தெரிஞ்சுருக்கு. நியாயத் தராசு மேல் ஜாதிக்காரங்களுக்குத்தான் சாதகமாக இருக்கு. எங்களமாதிரி பொண்ணுங்க எங்கள நாங்கதான் பாத்துக்கணும். இல்லை’ன்னா இப்படி ஃபோட்டோவா board’ல்லதான் தொங்கணும்” என்கிறாள் அஞ்சலி.

ஆனந்த் ஒரு classical psychopath. இயல்பான வாழ்க்கைதான் வாழ்கிறான். கல்யாணம் ஆனவன்தான். குழந்தையும் இருக்கிறது. ஆசிரியர் என்ற போர்வையில், ஏழைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதாகச் சொல்லி, இராஜஸ்தான் முழுக்கச் சுற்றியிருக்கிறான். போலிஸ் முன்னால் அவன் நின்றால்கூட அவன்தான் கொலைகாரன் என்று யாராலும் யூகிக்க முடியாது.

அவன் நகைசெய்து விற்கும் குடும்பத்தில் பிறந்தவன். அதனால், சயனைட் அவன் கைகளுக்கு மிக எளிதாகக் கிடைத்திருக்கிறது. பெண்கள் கஷ்டப்பட வேண்டும் என்று நினைக்கிறான். ஆனால் அதைப் பார்க்கும் தைரியம் இல்லாதவன். ஒரு passive aggressive type person. இப்படியாக அஞ்சலி ஆனந்தைப் பற்றிய எல்லாவற்றையும் கண்டுபிடிக்கும்போது அவன் இராஜஸ்தானிலிருந்து தப்பித்து ஓடிவிடுகிறான்.

இப்போது அடையாளம் தெரியாதவாறு தன் தோற்றத்தை மாற்றிக்கொண்டு, கோவாவில் இருக்கும் ஒரு பள்ளியில் இந்தி ஆசிரியராக இருக்கிறான்.

“கடவுள் இந்தப் பிரபஞ்சத்தப் படைக்கிறப்போ கடல்’ல்ல இருந்த தண்ணீர் இனிப்பா இருந்துச்சு. யாருக்கும் குடிக்கிற தண்ணிக்குக் தட்டுப்பாடே கிடையாது. தாகத்தைத் தணிக்கிறதவிட தண்ணியோட அளவு அதிகம். அப்புறம் கடவுள் மனுசங்ககிட்ட, ‘நீ செய்யிற ஒவ்வொரு பாவத்துக்கும் ஒரு துகள் உப்பு கடலுக்குள் வந்து விழும்’ன்னு சொன்னார். அப்ப மனுஷன் நினைச்சான்… ‘ஒரு துகள் உப்பால என்ன மாறப் போதுகுது’ன்னு. அதனால பாவம் பண்ண ஆரம்பிச்சான். ஒவ்வொரு துகளா கடலுக்குள் உப்பு வந்து விழ ஆரம்பிச்சது.  சீக்கிரமே கடல்நீர் முழுக்க உப்பாயிருச்சு. கடவுள் படைச்ச இனிப்பான நீர் குடிக்க முடியாத அளவுக்கு மாறிருச்சு. அதனாலதான் மனுசங்க யாருமே எந்தப் பாவமும் செய்யக்கூடாது. கடவுள் எல்லாத்தையும் பார்த்துட்டு இருப்பாரு. திருடக் கூடாது. பொய் சொல்லக் கூடாது. தப்பு செய்யக் கூடாது. தப்பா யோசிக்கக் கூடாது” என்று மாணவர்களுக்குக் கதை சொல்லிக்கொண்டிருக்கிறான்.  அவனை அஞ்சலி கைது செய்தாளா இல்லையா? என்பதுதான் கதை.

வெப் சீரிஸில் சோனாக்‌ஷி சின்ஹாவும், விஜய் வர்மாவும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். சிறந்த நடிப்புக்காக இருவரும் விருதுகளும் வாங்கி இருக்கிறார்கள். ஸோயா அக்தரின் மேட் இன் ஹெவனில் கதையும் துணைக் கதைகளும் வெவ்வேறு தளங்களில் பயணித்து முடியும்போது பொருத்தமாக முடியும். ஆனால், இந்த வெப் சீரிஸில் மேட் இன் ஹெவனைப் போலத் துணைக் கதைகள் முதன்மைக் கதையோடு பொருத்தமாக இணையவில்லை என்பது குறைதான்.

ஒரே பொருத்தமான கதை என்றால், அது ஷோனாக்ஷி சின்ஹாவின் அம்மாவாக வரும் கதாப்பாத்திரத்தைச் சொல்லலாம். அவர் கதையின் தொடக்கத்திலிருந்து அஞ்சலியைத் திருமணம் செய்ய வற்புறுத்திக்கொண்டே இருக்கிறார். அஞ்சலிக்கு அதில் துளியும் விருப்பம் இல்லை என்றாலும், வற்புறுத்திக்கொண்டே இருக்கிறார். கடைசியாக அஞ்சலி, தொடர் கொலைகள் செய்யப்பட்ட பெண்களின் ஃபோட்டோக்களை அம்மாவின் முன் பரப்பி,

“இதுல ஒரு பொண்ணுகூட உயிரோட இல்லை. எல்லாரும் கொல்லப்பட்டிருக்காங்க. ஏன் தெரியுமா? அவங்கள கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி வற்புறுத்திக்கிட்டு இருந்திருக்காங்க. தங்களோட பொண்ணுங்க வாழ்க்கையில ஆம்பளை துணை இல்லை’ன்னா எதிர்காலமே இல்லை’ன்னு நினைச்சாங்க.  ஒவ்வொரு நாளும் இந்தப் பொண்ணுங்களோட வாழ்க்கைய நரகமாக்கிட்டே இருந்திருக்காங்க. அந்தப் பொண்ணுங்க மனசுல பயத்தை உருவாக்கி, நீ கல்யாணம் பண்ணிக்கல்ல’ன்னா அந்த வானம் இடிஞ்சு உன் தலையில விழுந்திரும்’ன்னு சொல்லியிருக்காங்க. அதனால ஒருத்தன் ஆசையா பேசுனதும், நமக்காகத்தான் இவன் வந்திருக்கானோ’ன்னு நம்பி, அவனோடயே ஓடிப் போயிட்டாங்க. அவனும் ரொம்ப ஈசியா கொன்னுட்டான். இப்ப இவங்க சாவுக்கு யாரு காரணம்? அவன்மேல நாம ஈஸியா பழியத் தூக்கிப் போட்டுர்லாம். அந்தப் பொண்ணுங்க வீட்ல இருக்குறவங்க எல்லாம் அமைதியா வாழ்ந்திட்டிருப்பாங்க’ல்ல” என அஞ்சலி சொல்லும் இடம் மிகச் சிறப்பாக இருக்கும்.

வெப் சீரிஸில் முற்போக்கான பல விஷங்களைச் சுட்டிக்காட்டியிருப்பார்கள். யாரைப் பார்த்தாலும் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் வடநாட்டுக் கலாச்சாரத்தை எதிர்த்து, “யார் கால்’ல்லயும் விழக் கூடாது’ன்னு எங்கப்பா சொல்லியிருக்காரு” என்பாள் அஞ்சலி. கடவுளை வணங்கமாட்டாள். Meghwal என்ற தாழ்த்தப்பட்ட ஜாதியில்தான் அவள் பிறந்திருப்பாள். தன்னுடைய மகள் தன்னைப் போலவே அவமானப்படக்கூடாது என நினைத்து அவளுடைய அப்பா அவளுக்கு Bhati என்ற surname (ஜாதிப் பெயர்) வைத்திருப்பார். கதையின் இறுதியில் அஞ்சலி Bhati என்ற ஜாதிப் பெயரை மாற்றிவிட்டு, தன் சொந்த ஜாதியான Meghwal என வைத்துக்கொள்வாள்.

ஸோயா அக்தர் என்னதான் புத்திசாலி என்றாலும், அவர் இந்தியாவின் வித்திய மலைக்குத் தெற்குப் பக்கம் என்ன புரட்சி நடந்திருக்கிறது என்பதைத் தெரியாதவராகவே இருக்கிறார். தமிழ்நாட்டில் பெரியார் என்ற ஒருவர் தோன்றி பெயர்களுக்குப் பின்னால் இருக்கும் ஜாதிப் பெயரை நீக்கியதோடு, ஜாதிப் பெயரை வெளிப்படையாகக் கேட்பதை அவமானமாக மாற்றியுள்ளார். இதுபோன்ற வரலாறு அவருக்குத் தெரிந்திருந்தால், அஞ்சலியின் surname-ஐ நீக்கி முழுச் சுதந்திரமான பெண்ணாக மாற்றியிருப்பார்!

எனக்கு இந்தக் கதையில் மிகவும் பிடித்தவர் விஜய் வர்மா. நான் அவர் நடித்த ஏராளமான வெப் சீரிஸைப் பார்த்துவிட்டேன். ஒவ்வொன்றிலும் அவருடைய நடிப்பு அபாரமாக இருந்திருக்கிறது. இந்த வெப் சீரிஸில் அமைதியான சீரியல் கில்லராக அவர் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

Dahaad வெப் சீரிஸில் எனக்குப் பிடித்த காட்சியைப் பகிர்ந்துகொண்டு நிறைவு செய்கிறேன். பேராசிரியர் ஆனந்த் ஸ்வர்னாகர் (விஜய் வர்மா),

“நீ ஒரு பிரார்த்தனை போன்றவள்!

நான் ஒரு பல்ப்! நீ ஒரு ட்யூப் லைட்!

நீ சுடர்விட்டு எரியும்போது நான் ஒளிமங்கி விடுகிறேன்!

மிக எளிமையானது என் சுயம்

சிறப்பாகச் சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை!

நீயோ ஒப்பீடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவள்!

உலகமே உனக்கு நண்பர்கள்

எனக்கோ நண்பர்கள் என்று என்று யாரும் இல்லை!

நான் பல்ப்! நீயோ டியூப் லைட்!

வோல்டேஜ் குறைவால் நீ ஒளிர மாட்டாய்

அப்போது மட்டும் நான் மிதமாக ஒளிர்ந்து நிற்பேன்!

இருந்தாலும், என்னை யாரும் பார்க்க விரும்பமாட்டார்கள்!

உன்னையோ எல்லோரும் வேண்டி நிற்பார்கள்!

அளவில் நான் சிறியவன் குள்ளமானவன்!

நீயோ பெரியவள் வசீகரமானவள்!

நான் பல்ப்!  நீ டியூப் லைட்!”

என்ற பால்கிருஷ்ணா கார்க் என்பவர் எழுதிய கவிதையை வகுப்பில் வாசிப்பார்.  அவருடைய வாசிப்பை எல்லோரும் விரும்பிக் கேட்டுக்கொண்டிருப்பார்கள்.  மாணவிகளிடம் இந்தக் கவிதைக்கான அர்த்தத்தைக் கேட்பார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் புரிந்து பொருள் சொல்வார்கள். அவர்களில், இரண்டாவது பெஞ்சில் முதல் இருக்கையில் உட்கார்ந்திருக்கும் சுரேகா என்ற மாணவி எழுந்து விளக்கம் கொடுப்பாள். அந்த விளக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். சுரேகாவைப் பாராட்டுவார்

தொடர்ந்து மாணவிகளுக்குச் சில இலக்கியப் பயிற்சி கொடுப்பார். அதையும் சுரேகா என்ற மாணவி மிகச் சிறப்பாக எழுதிக்கொடுப்பாள். மீண்டும் சுரேகா பாராட்டை வாங்குவாள்.  சுரேகாவிடம், “உன் இலக்கியத்தைப் பற்றிய என்னுடைய விமர்சனத்தைக் கடைசியாக எழுதியிருக்கிறேன் பார்!” என்பார். கடைசிப் பக்கத்தைத் திருப்பினால், ஓர் அழகான ரோஜா பரிசாக இருக்கும். அதைப் பார்த்து சுரேகா நெகிழ்ந்துவிடுவாள்.

சுரேகாவுக்குப் பேராசிரியர் ஆனந்த் மீது காதல் வரும். அவருக்காக இரவெல்லாம் யோசித்து ஒரு காதல் கடிதம் எழுதுவாள். ஆனந்த் ஒரு சீரியல் கில்லர். பெண்களைத் தேடிப் போய்க் காதலித்துக் கொல்பவன். இப்போது, அவன்மீது கொண்ட காதலால், அவனைத் தேடி ஓர் அழகிய இளம்பெண் வருகிறாள். அவளை என்ன செய்யப் போகிறானோ என நாம் நினைக்கும்போது, ஆனந்த் மறுபடியும் ஒரு கவிதையை வாசிக்கிறான்:

ஆன்மா வரும்!

ஒரு புத்தகத்திலிருந்து காதல் கடிதத்தை எடுத்துச் செல்லும்!

பசியோடு மலைமேல் இருக்கும் கழுகு

துளிகூட மிச்சம் வைக்காமல்

காதல் கடிதத்தைக்

கொத்தி கொத்தி தின்றுவிடும்!

திருடன் வந்தால்

காதல் கடிதத்தை மட்டும்தான் திருடுவான்!

சூதாடி

காதல் கடிதத்தைத்தான் பணயம் வைப்பான்!

முனிவர்கள் வருவார்கள்

காதல் கடிதத்தைத்தான் பிச்சையாகக் கேட்பார்கள்!

பெய்யும் மழை

காதல் கடிதத்தை மட்டும்தான் நனைக்கும்!

எரியும் தீ

காதல் கடிதத்தை மட்டும்தான் சுட்டுப் பொசுக்கும்!

சுதந்திரம்

காதல் கடிதத்திற்குத்தான் மறுக்கப்படும்!

பாம்பு வரும்

காதல் கடிதத்தைத்தான் கொட்டி விஷமேற்றும்!

பூச்சிகள் வரும்

காதல் கடித்தை நக்கிச் சுவை பார்க்கும்!

கறையான்கள்

காதல் கடிதத்தை மட்டும்தான் அரிக்கும்!

பிரளயம் வரும்போது

சப்த ரிஷிகளும், மத்ஸ்யமும், மனுவும்

வேதங்களைத்தான் காப்பாற்றுவார்கள்…

காதல் கடிதத்தை யாரும் காப்பாற்ற மாட்டார்கள்!

சிலர் ரோமாபுரியைக் காப்பாற்றுவார்கள்!

சிலர் மெதினாவைக் காப்பாற்றுவார்கள்!

சிலர் வெள்ளியைக் காப்பாற்றுவார்கள்!

சிலர் தங்கத்தைக் காப்பாற்றுவார்கள்!

நான் மட்டும் தனியே

உன் காதல் கடிதத்தை

எப்படிக் காப்பாற்றுவேன்?

திரைப் பின்னணியில் இந்தக் கவிதையை ஆனந்த் வாசிக்கும்போது, இடைப்பட்ட காட்சியில், மிகப் பெரிய விசாரணை நடக்கும். அந்த விசாரணை அறையில், ஆனந்த் இருப்பான்; பெற்றோர் இருப்பார்கள்; பேராசிரியர்கள் இருப்பார்கள். கல்லூரி முதல்வர் கையில் சுரேகா ஆனந்திற்கு எழுதிய காதல் கடிதம் இருக்கும். சுரேகா அழுதுகொண்டிருப்பாள்.

கவிதை முடியும்போது, காட்சியில், இரண்டாவது பெஞ்சில் முதல் இருக்கை காலியாக இருக்கும். அங்கே சுரேகா இருக்க மாட்டாள்! ஒரு சீரியல் கில்லரால் சயனைட் கொடுக்காமலும் பெண்ணைக் கொலைசெய்யமுடியும்!

drsankardass@gmail.com