எப்போதும் IMDb டாப் ரேங்க்கில் இருக்கும் ஒரு வெப் சீரிஸ் என்றால் அது Stranger Things. இந்த வெப் சீரிஸைப் பார்த்துவிட வேண்டும் என்று முயற்சி செய்வேன். முதல் மூன்று எபிசோட் முடிவதற்குள் ஏதாவது ஒரு வேலை வந்து என்னை இழுத்துச் சென்றுவிடும். இந்த நவம்பர் விடுமுறையில் எப்படியாவது பார்த்தே முடித்துவிடவேண்டும் என நினைத்து, அந்த லட்சியத்தை அடைந்துவிட்டேன்.
முதல் சீஸன் 2016, இரண்டாவது சீஸன் 2017, மூன்றாவது சீஸன் 2019, நான்காவது சீஸன் 2022 ஆகிய வருடங்களில் வந்திருக்கின்றன. பசி நேரத்தில் சூடான கோதுமை பரோட்டாவும் கோழிக்கறியும் கிடைத்தால் எப்படி இருக்கும் அப்படி இருந்தது முதல் சீஸன். Action, comedy, drama, suspense கலந்த அற்புதமான Sci-fi commercial thriller.
முதல் சீஸன் அளவிற்கு இரண்டாவது சீஸன் அமையவில்லை என்றாலும் அந்த மசாலா நன்றாகத்தான் இருந்தது. மூன்றாவது சீஸனை, “Childish Sunday afternoon movie” என்றும், நான்காவது சீஸனை, “Full of clichés and sketchy” என்றும் சில ரசிகர்கள் விமர்சித்துள்ளனர். முதல் சீஸனில் உருவாக்கிய படைப்புலகத்தை நான்காவது சீஸன் வரும்போது தவறவிட்டிருந்தார்கள்தான். என்றாலும், நான்கு சீஸனையும் உட்கார்ந்து பார்க்க வைத்துவிட்டார்கள். வருகிற 2025இல் இதன் ஐந்தாவது சீஸன் வரப்போகிறது. உலகெங்குமுள்ள கோடான கோடி ரசிகர்கள் இதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
அறிவியலும், மனித உணர்வுகளும், த்ரில்லரும், அமெரிக்காவைக் காக்கத் துடிக்கும் தேசப்பற்றும் கலந்த ஒரு திரைப்படத்தை ஸ்பீல்பெர்க் வகையறா மெலோ ட்ராமா என்பார்கள். இந்த வெப் சீரிஸை உருவாக்கிய மேட் டஃபர் மற்றும் ரோஸ் டஃபர் சகோதர்கள் ஸ்பீல்பெர்க் வகையறா மெலோ ட்ராமாவை மட்டும் தழுவி எடுக்கவில்லை, அவர் 1985இல் எடுத்த The Goonies என்ற படத்தையும் சுட்டு இந்தத் தொடரை எடுத்திருக்கிறார்கள்.
The Quatermass Experiment என்ற Sci-fi thriller தொலைக்காட்சித் தொடர், இங்கிலாந்தில் 1953ஆம் ஆண்டு வெளிவந்து பெரும்புகழ் பெற்றிருக்கிறது. மூன்று பேர் விண்வெளி ஆய்வுக்காகப் போகிறார்கள். திரும்பும்போது ஒருவர் விடுபட்டுவிடுகிறார். அவருக்குள் ஏலியன் உட்புகுந்து மான்ஸ்டர் ஆகிறார். அவரால் உலகமே அழியவிருக்கிறது. அந்த மான்ஸ்டரை அழித்து உலகத்தை எப்படிக் காப்பாற்றினார்கள் என்பதுதான் தொலைக்காட்சித் தொடரின் கதை.
The Quatermass Experiment என்ற தொடரின் எல்லா விசயங்களையும் Stranger Things உள்வாங்கியிருக்கிறது. எனவே, இந்த வெப் சீரிஸை, “Goonie meets Quatermass experiments” என்று ஒரு வாசகர் குறிப்பிட்டிருந்தார். ரசிகர்களுக்குத்தான் எவ்வளவு ஞானம்!
ஸ்பீல்பெர்க் பானியைக் கைக்கொண்டிருந்தாலும், அவருடைய கதையையே காப்பியடித்திருந்தாலும், வேறொரு தொடரை உள்வாங்கியிருந்தாலும் அகில உலகில் அதிபயங்கர ஹிட்டடித்த வெப் சீரிஸ் என்றால் அது Stranger Things-தான். இந்தத் தொடரைப் பற்றி நிறைய பேசவேண்டியிருக்கிறது. அதற்கு முன்னதாக அதன் கதையைப் பார்த்துவிடலாம்.
அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் உள்ள ஹாக்கின்ஸ் (புனைவு) நகரத்தில் நவம்பர் 6, 1983ஆம் ஆண்டு கதை தொடங்குகிறது. அமெரிக்காவின் எரிசக்தித் துறையின்கீழ் இயங்குகிறது Hawkins National Laboratory என்ற அறிவியல் ஆய்வுக்கூடம். இங்கு வெளி உலகுக்குத் தெரியாத ரகசியமான பல ஆய்வுகளையும் செய்து வருகிறார்கள்.
ஒரு நாள் ஹாக்கின்ஸ் நேசனல் லேபரட்டரியில் அலாரம் அடிக்கிறது. விளக்குகள் எல்லாம் அணைந்து அணைந்து எரிகின்றன. ஒரு டாக்டர் பயத்தோடு ஓடிச் சென்று லிஃப்டில் ஏறுகிறார். அவரை ஏதோ ஒன்று பின்தொடர்வதுபோலத் தெரிகிறது. லிஃப்டிற்குள் தலை உயர்த்திப் பார்க்கிறார். அவரை அலேக்காகத் தூக்கிச் சென்றுவிடுகிறது.
மைக், வில், லூகஸ், ஜஸ்டின் என்ற நான்கு சிறுவர்களும் இணைபிரியாத நண்பர்கள். அன்று இரவு, மைக் வீட்டில் நான்கு பேரும் சேர்ந்து, Dungeons and Dragons என்ற விளையாட்டை விளையாடுகிறார்கள். இந்த விளையாட்டில் Demogorgon என்பது ஒரு மான்ஸ்டர். அதை எதிர்த்து நிற்பவன் வில். அவனிடம் நண்பர்கள் பாதுகாப்பான fire ball-ஐப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். ஆனால், வில் தோல்வியடைகிறான்.
இரவில் கிளம்பும்போது வில், “Dice- இல் 7 விழுந்தது, Demogorgon என்னைப் பிடித்துவிடும்” என்று மைக்கிடம் சொல்லிவிட்டுச் செல்கிறான். வில், லூகஸ், ஜஸ்டின் மூன்று பேரும் சைக்கிளில் அவரவர் வீட்டிற்குக் செல்கிறார்கள். போகும்போது Hawkins National Laboratory இருக்கும் பகுதியின் தடைசெய்யப்பட்ட சாலை வழியே வில் செல்கிறான். அவனுடைய சைக்கிளில் உள்ள டைனமோவின் விளக்கு அணைந்து அணைந்து எரிகிறது. ஏதோ ஒன்றைப் பார்த்து மிரள்கிறான்.
பயத்தில் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு, குறுக்கு வழியில் வீட்டிற்கு வருகிறான். வீட்டைத் திறந்து, “அம்மா அம்மா” எனக் கத்திக்கொண்டு வருகிறான். ஜன்னல் வழியாகப் பார்க்கிறான். அது அவனைத் துரத்தி வருவது தெரிகிறது. வீட்டிற்குப் பின் உள்ள garage-க்குச் செல்கிறான். அங்கு அந்த உருவத்தைத் தாக்க துப்பாக்கியைத் தூக்குகிறான். விளக்குகள் எல்லாம் அதிபயங்கரமாக ஒளிர்ந்து அணைகின்றன. கண நேரத்தில் வில் காணாமல் போகிறான்.
மறுநாள் ஹாக்கின்ஸ் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட செய்தி தொலைக்காட்சியில் சொல்லப்படுகிறது. வில் என்பவனுடைய அம்மா ஜாய்ஸ் மைக் வீட்டிற்கு போன் செய்து கேட்கிறாள். அவன் முந்தைய நாள் இரவே கிளம்பி வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். ‘யாருக்கும் சொல்லாமல் பள்ளிக்கூடத்திற்குப் போய்விட்டான் போல’ என்று நினைக்கிறாள். ஆனால், பள்ளிக்கூடத்திற்கும் அவன் போகவில்லை என்பது தெரிகிறது.
ஜாய்ஸ் போலீஸ் ஸ்டேசனில் கம்ப்ளைண்ட் செய்கிறாள். “இது ஹாக்கின்ஸ். இங்கு நாற்பது வருடங்களில் எந்த கிரைமும் நடக்கவில்லை. உன்னுடைய மகனுக்கு ஒன்றும் ஆகியிருக்காது. உன் கணவன் ஹானி வீட்டில் கேட்டுப் பார்” என்று காவல் உயர் அதிகாரி ஹாப்பர் சொல்கிறார் (Hawkins Police Chief)
அன்று இரவு ஜாய்ஸுக்கு ஒரு போன் வருகிறது. மிகவும் கரகரத்த மிருகத்தின் சத்தமும் அவற்றிற்கிடையில் வில் பேசுவதும் கேட்கிறது. ஜாய்ஸ் அவனிடம் “வில் நீ எங்க இருக்க” எனப் பதற்றத்தோடு கேட்கிறாள். அதற்குள் போன் வயர் எரிந்து அழைப்பு துண்டிக்கப்படுகிறது. நகரத்தின் எல்லா போன் பேச்சுகளையும் ஹான்கின்ஸ் லேபரட்டரியில் ஒட்டுக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
ஹாக்கின்ஸ் லேபரட்டரியில் ஒரு இடம் பயங்கர சேதாரமாகியிருக்கிறது. ஓர் அழுகிய பாதை திறந்திருப்பதுபோல பூமியில் ஓர் ஓட்டை விழுந்திருக்கிறது. அதற்குள் சென்ற ஒருவனை உள்ளே இருக்கும் ஏதோ ஒன்று தின்றுவிடுகிறது. மேற்கொண்டு அந்த இடத்திலிருந்து யாரும் வந்துவிடக் கூடாது என நினைத்து அந்த இடத்தை அடைக்கிறார்கள்.
ஹாக்கின்ஸ் லேபரட்டரியில் சிறுமிகளைத் தேர்ந்தெடுத்து paranormal, supernatural ஆகியவற்றைப் பற்றி ரகசியமாக ஆய்வு செய்கிறார்கள். அந்த லேபரட்டரியிலிருந்து ஒரு சிறுமி தப்பித்து வெளியே வருகிறாள். அவளுக்குத் தலையில் முடி இல்லை. நோயாளிகள் அணிவதுபோன்ற மெல்லிதான கவுன் ஒன்றை அணிந்திருக்கிறாள்.
அருகில் உள்ள ஓர் உணவகத்தில் அந்தச் சிறுமி உணவைத் திருடித் தின்கிறாள். அவளை உணவகத்தின் உரிமையாளர் பென்னி பார்த்துவிடுகிறான். அவளைப் பிடித்து “நீ யார்” என்கிறான். அவளுக்குப் பேசவரவில்லை. அவள் கைகளைப் பார்க்கிறான். அதில் 011 என்று எழுதியிருக்கிறது. உணவைச் சாப்பிடும்போது ஒரு ஃபேன் ஓடிக்கொண்டிருக்கிறது. அதைத் தன்னுடைய பார்வையாலேயே கட்டுப்படுத்தி (psychic power) நிறுத்துகிறாள்.
பென்னி சமூக சேவை இயக்கத்திற்கு போன் செய்து, அந்த சிறுமியைப் பற்றிச் சொல்கிறான். அவன் பேசுவதை ஹாக்கின்ஸ் லேபரட்டரியில் இருப்பவர்களும் ஒட்டுக்கேட்கிறார்கள். அந்த இரவில், மைக், லூகாஸ், டஸ்டின் மூவரும் வில் தொலைந்துபோனதாகச் சொல்லப்படும் காட்டுப்பகுதியில் அவனைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
கானி என்ற ஒரு பெண் சமூக சேவை இயக்கத்திலிருந்து வந்திருப்பதாக பென்னியிடம் சொல்கிறாள். அந்தச் சிறுமியைப் பற்றி விசாரிக்கிறாள். அவள்மீது சந்தேகம் கொண்ட பென்னி ஏதோ கேள்வி கேட்கிறான். கானி அவனைச் சுட்டுக்கொள்கிறாள். இரண்டு பாதுகாவலர்கள் அந்த சிறுமியைப் பிடிக்கப் போகிறார்கள். அந்தச் சிறுமி தன்னுடைய psychic power-ரால் பாதுகாவலர்களைக் கொன்றுவிட்டு, காட்டுப் பகுதிக்குள் தப்பி ஓடுகிறாள். காட்டுப் பகுதியில் வில்லைத் தேடிக்கொண்டிருக்கும் மைக், லூகாஸ், டஸ்டின் ஆகியோர் சிறுமியைச் சந்திக்கிறார்கள்.
இது முதல் சீஸனின் முதல் எபிஸோட்டின் கதை. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அறிமுகமும், அதை வளர்த்தெடுத்துச் செல்லும் காட்சிகளும் அவ்வளவு அழகாக இருக்கும். குறிப்பாக, மிருகத்தையோ அல்லது பேய், பிசாசு போன்றவற்றையோ காட்டாமல் சஸ்பென்ஸையும் திகிலையும் கொடுக்கும் காட்சிகள் பிரமாதமாக இருந்தன. முதல் எபிசோட்டில் நம்மை இழுத்து உட்கார வைக்கும் கதை முதல் சீஸன் முடியும்வரை கட்டுண்டு கிடக்க வைக்கும்.
ஜாய்ஸ் வில்லின் மூச்சுக்காற்றை போன் வழியே கேட்பாள். ஒவ்வொரு முறை அவள் வில்லோடு பேச முயற்சி செய்யும்போதும் போன் பழுதாகும். தன் வீட்டில் எரியும் விளக்குகள், சீரியல் பல்புகள் வழியே வில்லோடு ஜாய்ஸ் பேசும் காட்சிகள் உணர்வுபூர்வமாக இருக்கும். அதன்மூலம் வில் உயிரோடு இருக்கிறான்; ஆபத்தில் இருக்கிறான் என்பதைத் தெரிந்துகொள்வாள். ஆனால், எங்கு இருக்கிறான் என்பதைத் தெரிந்துகொள்ளமுடியாது. இதற்கிடையே பார்பரா என்ற பெண்ணும் வில்லைப் போலவே காணாமல் போகிறாள்.
மைக் வீட்டின் கீழ்தளத்தில் அந்த சிறுமியைப் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். அவளுடைய கையில் 011 என்று எழுதியிருப்பதால், அவளுக்கு Eleven என்று பெயர் வைத்துச் சுருக்கமாக, El என்று அழைப்பார்கள். அவளை யார் துரத்துகிறார்கள் என்று கேட்பார்கள். அவள் அவர்களை Bad என்பாள்.
எல் (Eleven – El) தன்னுடைய psychic power மூலம் ஒலி அலைகளைப் பயன்படுத்தி வில் இருக்கும் இடத்தைப் பற்றிச் சொல்கிறாள்.“அந்த இடத்தை எங்களுக்குக் காட்டமுடியுமா?” என்று கேட்கிறார்கள். எல் அவர்களை அழைத்துச் செல்கிறாள். அந்த இடம் சிறுவர்களை ஆச்சர்யப்படுத்துகிறது. ஏனென்றால் அது வில்லினுடைய வீடு. “வில்லின் வீட்டில் அவன் ஏன் மறைந்திருக்கப் போகிறான்” எனக் கேட்கும்போது அவள் வில் மறைந்திருக்கும் இடத்தை, “Upside down” எனச் சொல்கிறாள்.
எல்லுக்குச் சரிவரப் பேசத் தெரியாது என்பதால், அவள் விளையாட்டுப் பலகையின் அடிபாகத்தைத் காட்டி “Upside down” என்கிறாள். Upside down என்பதைப் பற்றிச் சிறுவர்கள் அவர்களுடைய அறிவியல் ஆசிரியர் ஸ்காட் என்பவரிடம் கேட்கிறார்கள். அவர் அதனை எளிமையாகப் புரிய வைக்கிறார்.
“ஒரு கயிற்றில் செல்லும் மனிதன் முன்னால் போகலாம். பின்னால் போகலாம். ஆனால் அடியில் போகமுடியாது. அதுவே ஒரு பூச்சியால் முன்னால், பின்னால் மட்டுமல்ல அடியிலும் போகமுடியும்” என்கிறார். அதாவது பூமியின் தலைகீழான பகுதிதான் Upside down. “அங்கு போக முடியுமா?” என்று சிறுவர்கள் கேட்கிறார்கள். “Upside down என்பது ஒரு தியரிதான். Time and Space-இல் ஓர் ஓட்டை விழுந்தால் அங்கு போகமுடியும். ஏற்கனவே ஓட்டை விழுந்திருந்தாலும் அதைத் தெரிந்துகொள்ள முடியும். அப்போது gravity-இல் மாற்றம் வரும். காந்த சக்தியில் பிரச்சனை வரும்” என்கிறார் ஆசிரியர்.
இதற்கிடையில் போலீஸ் உயரதிகாரி ஹாப்பர் ஹாக்கின்ஸ் லேபரட்டரியில் நாட்டுக்குப் புறம்பான பல்வேறு ஆய்வுகள் நடப்பதைக் கண்டறிகிறார். டாக்டர் பிரன்னர்தான் இதுபோன்ற ஆய்வுகளைச் செய்கிறார். அவர் மனிதர்களை வைத்து MK ultra என்ற project செய்வதையும், டெர்ரி என்ற பெண்ணிடமிருந்து வலுக்கட்டாயமாகக் குழந்தையைப் பிடுங்கிக்கொண்டு போய் இதுபோன்ற பரிசோதனையில் ஈடுபடுத்தியிருக்கிறார் என்பதையும் கண்டறிகிறார்.
டாக்டர் பிரன்னர் எல் என்ற சிறுமியைத் தேடி மைக் வீட்டிற்கு வருகிறார். அதற்குள் சிறுவர்கள் எல்லாம் அங்கிருந்து தப்பித்து ஓடிவிடுகிறார்கள். அவளை அழைத்துச் சென்று ஹாக்கின்ஸ் மிடில் ஸ்கூலில் பத்திரப்படுத்துகிறார்கள்.
அங்கு ஜாய்ஸ் வருகிறாள். எல்லிடம் தன்னுடைய பையனைக் கண்டறிய முடியுமா என்று கேட்கிறாள். அவளுடைய சக்தியை அதிகரிக்க பாத் டப்பில் தண்ணீரை நிரப்பி, அதில் எழுநூறு கிலோ உப்பைக் கொட்டி, மிதக்கவிடுகிறாள். எல் தன்னுடைய psychic power மூலம் upside down-க்குள் போகிறாள். அங்கு பார்பராவை முதலில் பார்க்கிறாள். அவள் பாம்புபோன்ற கருநிற tentacles வாயில் நுழைக்கப்பட்டு இறந்துகிடக்கிறாள். வில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறான்.
Upside down-க்குள் ஜாய்ஸும் ஹாப்பரும் போகிறார்கள். வில்லை மீட்கிறார்கள். அதே நேரத்தில் Upside down-இல் இருந்து வந்த கொடூர உருவத்தைக் கொண்ட Demogorgon பள்ளிக்குள் வருகிறது. எல் அந்த உருவத்தோடு போராடி, தன்னுடைய முழு பலத்தையும் கொடுத்து Demogorgon அழிக்கிறாள். இந்தப் போராட்டத்தில் Demogorgon அழிந்து போகிறது. எல்லும் காணாமல் போகிறாள்.
முதல் சீஸன் தொடக்கம், போராட்டம், உச்சம் எல்லாம் மிகச் சிறப்பாக இருக்கும். முதல் சீஸன் முடிவில் டாக்டர் பிரன்னரை Demogorgon தின்றுவிடுகிறது. Demogorgon அழிந்துவிடுகிறது. அதை அழிக்கும் போராட்டத்தில் எல்லும் காணாமல் போகிறாள். கதைப்படி இந்த மூன்று பேரும் அடுத்து வரக்கூடாதுதான். ஆனால், அடுத்தடுத்து நான்கு சீஸனிலும் வருகிறார்கள்!
சீஸன் இரண்டு கதை அக்டோபர் 28, 1984 இல் தொடங்குகிறது. லெவன் போலவே 008 என்ற பெண்ணிடமிருந்து கதை தொடங்குகிறது. அவள் பெயர் காளி. பார்ப்பதற்கு இந்திய பெண் போலவே இருக்கிறாள். அவளிடம் ஒரு சக்தி இருக்கிறது. தன்னை எதிர்ப்பவர்களை மாயாஜாலம் செய்து பாலம் இடிவது போலவும், சுவர் எழும்புவதுபோலவும் காட்டி அந்த இடத்தைவிட்டு மறைந்துவிடுவாள். பிரன்னர் இருந்த ஹாக்கின்ஸ் லேபரட்டரியில் இப்போது டாக்டர் ஓவன்ஸ் இருக்கிறார். மேக்ஸ், பில்லி என்ற புதிய நபர்கள் ஹாக்கின்ஸ் வருகிறார்கள். முர்ரே என்ற பத்திரிகையாளர் ஹாக்கின்ஸில் ரஷ்யர்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது என்கிறார். பாப் என்ற ஒருவர் ஜாய்ஸின் நண்பராக வருகிறார். இவர்கள் எல்லாம் இந்த சீஸனின் புதிய கதாபாத்திரங்களாக அறிமுகமாகிறார்கள்.
வில்லுக்கு Upside down-இல் இருந்த நினைவு இன்னும் இருக்கிறது. அவ்வப்போது அவனுடைய கண்களுக்கு வானத்தில் ஒரு ராட்சச உருவம் வருகிறது. எல் இன்னும் சாகவில்லை. அவளை ஹாப்பர் தன் வீட்டில் பாதுகாப்பாக மறைத்து வைத்திருக்கிறார். ஹாக்கின்ஸில் இருக்கும் வயல்களில் பூசணி எல்லாம் அழுகிப் போனதாக ஒரு கேஸ் வருவதில் கதை தொடங்குகிறது. மருந்து வைத்ததால்தான் பூசணி எல்லாம் அழுகிவிட்டதாக, விவசாயிகள் எல்லாம் ஒருவர் மற்றவர்மீது புகார் அளித்துச் சண்டை செய்கிறார்கள்.
டஸ்டினுக்கு தவளை போன்ற வித்தியாசமான ஒரு விலங்கு கிடைக்கிறது. அதற்கு டார்ட்டில் என்று பெயர் வைக்கிறான். அதைத் தன் வீட்டில் பாதுகாப்பாக வைக்கிறான். பள்ளியில் தன் நண்பர்களிடம் காட்டலாம் எனக் கொண்டுபோகிறான். அவர்களிடமிருந்து தப்பித்த டார்ட் பள்ளிக்கூடத்தில் எங்கேயோ மறைந்துகொள்கிறது.
டார்ட் Upside downஇல் இருந்து வந்த ஒரு விலங்கு (Demogorgon) அதைக் கொல்ல வேண்டும் என்று துரத்துகிறார்கள். மற்றவர்களின் பார்வையிலிருந்து மறைத்து எடுத்துக் கொண்டுவந்து வீட்டில் ஒரு கண்ணாடிப் பெட்டியில் வைக்கிறான் டஸ்டின்.
வில்லை ஹாக்கின்ஸ் லேபரட்டரியில் வைத்துப் பரிசோதிக்கிறார்கள். டஸ்டின் வீட்டில் வைத்திருந்த டார்ட் பெரிதாகி, அவனுடைய வீட்டுப் பூனையை அடித்துக்கொன்று சாப்பிட்டுவிட்டுத் தப்பி விடுகிறது. தப்பித்த அந்த டார்ட் மண்ணைக் குடைந்து மிகப் பெரிய பாதாளத்தை உருவாக்குகிறது.
டார்ட் போன்ற ஏராளமான Demogorgons ஒன்று சேர்ந்துதான் ஹாக்கின்ஸை நாசம் செய்கின்றன. அதனால்தான் ஹாகின்ஸ் பூசணிகள் எல்லாம் அழுகிப் போயின என்பதைக் கண்டறிகிறார்கள். வில் தன் கற்பனையில் ஓடும் விசயங்களை எல்லாம் ஓவியமாக வரைகிறான். அது ஹாக்கின்ஸ் லேபரட்டரியில் முடிகிறது. எல்லா நாச வேலைகளுக்கும் காரணம் அந்த லேபரட்டரிதான். அவர்கள் upside down-னைத் திறந்துவிட்டதால்தான் இவ்வளவு அழிவுகளும் என ஹாப்பர் சொல்கிறார்.
மிகப் பெரிய மான்ஸ்டரை வில் துணையோடு கண்டுபிடித்து அழித்துவிடலாம் என நினைக்கிறார்கள். ஆனால் மான்ஸ்டருடைய பகடைக்காயே வில்தான். அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் என்பதை வில் மூலமாகவே அந்த மான்ஸ்டர் தெரிந்துகொள்கிறான். அதீதமான வெப்பத்தில் வில்லை வைப்பதன் மூலமும், பாதாளத்தில் நெருப்பு வைப்பதன் மூலமும், upside down gateஐ அடைப்பதன் மூலமும் மான்ஸடரைக் கொன்று வில் உடம்பிலிருந்து வெளியேற்றுகிறார்கள்.
மூன்றாவது ஜூலை4,1985 இல் தொடங்குகிறது. ஹாக்கின்ஸுக்குள் புகுந்திருக்கும் ரஷ்யர்கள் ஸ்டார் கோர்ட் மால் என்ற ஒரு வணிக வளாகத்தைக் கட்டுகிறார்கள். அதன் அடிப்பகுதியில் மிகப் பெரிய லேபரட்டரியை இயக்குகிறார்கள். Upside down-ஐ திறந்து டெமோடார்கன்களை அமெரிக்காவிற்குள் புகுத்தி அமெரிக்காவை அழிப்பதுதான் அவர்கள் திட்டம். இதற்கிடையே Mind Flayer என்ற மான்ஸ்டர் ஒன்று பில்லியின் உடலுக்குள் புகுந்து ஹாக்கின்ஸ் மக்களில் பலரைக் கொன்று, தனக்கான பலத்தைப் பெருக்கி ஹாக்கின்ஸை அழிக்கிறது. எல் மற்றும் அவளுடைய நண்பர்கள் எல்லோரும் இணைந்து எப்படி அமெரிக்காவைக் காப்பாற்றினார்கள் என்பது மூன்றாவது சீஸன்.
நான்காவது சீஸன் மார்ச் மாதம் 1986இல் தொடங்குகிறது. இந்த சீஸனில் வேக்னா என்ற ஒரு அரக்க உருவம் வருகிறது. வில் தன்னுடைய எல்லா சக்தியையும் இழந்திருக்கிறாள். அவளுக்கு மீண்டும் அவளுடைய சக்தியைக் கிடைக்கச் செய்து வேக்னாவோடு மோதவிடுகிறார்கள். இந்த மோதலில் வேக்னா முழுமையாகத் தோற்கவில்லை. வேக்னா ஹாக்கின்ஸை மிகப் பெரிய அழிவுக்கு உள்ளாக்கிவிட்டுப் போயிருக்கிறான். மீண்டும் அவனோடு மோதும் ஐந்தாவது சீஸன் வரும் 2025-இல் வரும்.
முதல் சீஸன் எடுக்கும்போது நான்காவது சீஸன் எடுப்போம் எனத் திட்டமிட்டிருக்க மாட்டார்கள். ஒவ்வொரு சீஸன் முடிந்ததும் அடுத்த சீஸனுக்கான கதையைப் பற்றி யோசித்திருக்கிறார்கள் என்பது நன்றாகத் தெரிகிறது. முதல் சீஸனில் ஹாக்கின்ஸ் லேபரட்டரிமீதும் அதன் ஆய்வுகள் மீதும் கடுமையான விமர்சனத்தை வைப்பவர்கள், இரண்டாவது சீஸனில் காரணமே இல்லாமல் காளியைக் காட்டுகிறார்கள். மூன்றாவது சீஸனில் மைண்ட் ஃபிளேயர் என்கிறார்கள். நான்காவது சீஸனில் வேக்னா என்கிறார்கள். இதற்கிடையே ரஷ்யர்களை அநியாயத்திற்கு வம்பிக்கிழுத்திருக்கிறார்கள்.
திரைக்கதையில் ஒரே pattern இருப்பதும், ஆங்காங்கே குழந்தைத்தனம் மிதமிஞ்சி இருப்பதும் மூன்றாவது சீஸனையும், நான்காவது சீஸனையும் பார்க்கும்போது அயர்ச்சியை உண்டுபண்ணிவிடுகின்றன. என்றபோதும் எல்லா சீஸனிலும் நம்மைக் கட்டுண்டு வைக்கும் ஏதோ ஒன்றை வைத்திருப்பதால்தான் இந்த வெப் சீரிஸ் உலகெங்கும் ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருக்கிறது என்று நினைக்கிறேன்.
முதல் சீஸனில் 1983 அமெரிக்க வாழ்வியல் களம் அழகாக பதிவாகியிருக்கும். அமெரிக்கா மனிதர்களை வைத்து செய்யும் ஆய்வுகள்மீது கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். திரைக்கதை மிகச் சிறப்பாக இருக்கும். எல் ஒவ்வொரு முறையும் Upside down போய்வரும் காட்சிகளும், நான்காவது சீஸனில் வரும் வேக்னாவை முதல் எபிசோடோடு இணைக்கும் காட்சிகளும், சாதாரண காட்சிகளைக்கூட உணர்வுரீதியாக மாற்றும் இடங்களிலும் அவர்களின் எடிட்டிங் தொழில்நுட்பம் நம்மைக் மலைக்க வைக்கும். இசை இந்த வெப் சீரிஸின் மிகப் பெரிய பலம்.
இந்த வெப் சீரிஸின் காமெடியும் வெற்றிக்கு முக்கியமான காரணம். , அதிலும் வில் என்பவன் இறந்துவிட்டான் என்று நினைத்து அவனுக்கான இறுதி மரியாதை செய்வார்கள். ஆனால், அவன் இறக்கவில்லை என்பது டஸ்டினுக்கும் அவன் நண்பர்களுக்கும் தெரியும். டஸ்டின் சொல்வான், “வில் கிடைச்சிட்டான்’னா அவன்கிட்ட சொல்வேன், உன்னோட funeral-க்கு அழகான பொண்ணு ஒருத்தி வந்திருந்தாடான்னு” என்பதுபோன்ற நகைச்சுவை நான்கு சீஸனிலும் இருக்கும்.
ஸ்பீல்பெர்க் வகையறா மெலோ ட்ராமா என்று சொல்கிறார்கள் இல்லையா? அது ஒருவகையான திரைக்கதை திட்டமிடல்தான். திரைக்கதையைச் சில வகைமைகளின்கீழ் பிரித்து, கன கச்சிதமான காட்சிகளின் வழியாக ஒட்டவைக்கத் தெரிந்திருக்க வேண்டும். இந்த வெப் சீரிஸை வைத்தே உதாரணம் சொல்கிறேன்.
முதல் வகை: போலீஸ் உயர் அதிகாரி ஹாப்பர், ஜாய்ஸ், முர்ரே, பாப் என நாற்பதுகளில் இருக்கும் கதாப்பாத்திரங்கள். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு திருமணம் நடந்து அது அற்ப ஆயுளில் முடிந்திருக்கும். மீண்டும் இந்தப் பாத்திரங்களுக்குள் முட்டல், மோதல், ஈர்ப்பு, காதல், கம்பானியன்ஷிப் எல்லாம் வரும் போகும்!
இரண்டாவது வகை: நான்ஸி, ஸ்டீவ் ஹாரிங்டன், ஜோனாதன், பில்லி போன்ற இளைஞர்களின் கூட்டம். இவர்களின் நெருக்கம், முத்தம், உடலுறவு, மோதல், பிரிதல், பிரிவுக்குப்பின் சேருதல், சேராமல் விலகிப் போதல் இவை எல்லாம்..
மூன்றாவது வகை: மைக், லூகாஸ், டஸ்டின், வில், மேக்ஸ், எல் போன்ற விடலைப் பருவத்து நபர்களின் பேச்சு, காமடி, காதல், ஈர்ப்பு, சண்டை, கோபம் ஆகியவை.
இவர்களுக்குள் நடக்கும் நாடகங்களை ஒரு பெரிய கதையின்கீழ் சரியாகப் பொருத்துகிறார்கள். மக்களை ஈர்க்கும் கமர்சியலுக்கான திரைக்கதை அமைப்பு இதுதான். இது சரியாகக் கைவரப்பெற்றால் எத்தனை சீஸன்கூட எடுக்கலாம். ஸ்பீல்பெர்க் இதற்கான ராஜபாட்டையைப் போட்டுவைத்திருக்கிறார். மிக ஜாக்கிரதையாக நடந்தால் இந்த ஃபார்முலாவைப் பயன்படுத்தித் தமிழில்கூட ஹிட் வெப் தொடர்களைத் தயாரிக்க முடியும்.
இந்தி வெப் சீரியல்களில் பாகிஸ்தானை வம்புக்கு இழுப்பதுபோல் அமெரிக்கத் தொடர்களில் ரஷ்யாவை வம்புக்கு இழுக்கிறார்கள். இந்தத் தொடரில் ஒரு கறுப்பின சிறுமி, “கம்யூனிசத்தை ஒரு தியரியா என்னால ஏத்துக்க முடியாது” என்பாள். இன்னொரு இடத்தில், ஒரு வணிக வளாகத்திற்குக்கீழ் ரஷ்யர்கள் மிகப் பெரிய சுரங்கப் பாதை அமைத்திருப்பார்கள். “ஹாக்கின்ஸில் வந்து ரஷ்யர்கள் எப்படி இவ்வளவு பெரிய சுரங்கப்பாதை அமைத்தார்கள்” என்று ஒருவன் கேட்பான் அதற்கு அவள், “காம்ரேட்களுக்கு எல்லாம் சம்பளம் தரவேண்டியதில்லை இல்லையா? அதனால் அவர்களை வைத்து செலவில்லாமல் சுரங்கத்தைத் தோண்டிவிட்டார்கள்” என்பாள்.
வெப் சீரிஸின் வில்லனே ரஷ்யாதான். ஆனால் அதற்கான லாஜிக்கோ தேவையோ கொஞ்சம்கூட இருக்காது. கொஞ்சம் அறிவியல், கொஞ்சம்கூடப் பொருந்தாத கற்பனைகள், சஸ்பென்ஸ், த்ரில்லர் எல்லாம் சுவையாகச் சொல்லத்தெரிந்தால் போதும், மக்கள் அந்தத் தொடரைக் கொண்டாட ஆரம்பித்துவிடுகிறார்கள். யாரைப் பற்றிக் குறைசொன்னால் அவர்களுக்கு என்ன கவலை!