இந்தச் சந்திப்பில் நீ செய்ய வேண்டியது

உன்னை
நான் அணைத்துக் கொள்ளும் பொழுது
பதறி விலகாதிரு
கோவில் படிக்கட்டுகளில்
அமர்ந்தெழும் நொடிகளுக்கு
என் அணுக்களும் உன் அணுக்களும்
அருகருகே அமர்ந்திருக்கட்டும்
எதையும் எடுத்துக்கொள்ளாமல்
எதையும் விட்டுச் செல்லாமல்
நான் இறங்கி நடக்கையில்
திரும்பிப் பார்க்க மாட்டேனெனினும்
புன்னகை குறையாது இரு
அவ்வளவு ஒன்றும் அகண்டதில்லை
இந்த வெளி
••

ஒரு குழந்தை, ஒரு பூனை மற்றும்
மூன்று வீட்டுச் செடிகளாலான உலகம்

நான் நினைக்கிறேன்
நாம் இணை பிரபஞ்ச வாசிகள்
நம் உலகங்கள்
அருகருகே மிதக்கையில்
நான் உங்கள் நிலைக்கண்ணாடிகளில்
பிரதிபலிக்கிறேன்
மாம்பழங்கள் கனிந்திருக்கும்
உங்கள் தோட்டங்களுக்கு
என் பிள்ளை விளையாட வருகிறான்
உங்கள் மீன் தொட்டிகளின்
கொழுத்த மீனொன்று
என் பூனைக்கு உணவாகிறது
சுழற்சியின் விதிகள் மாறும் பொழுது
உங்கள் கண்ணாடிகளிலிருந்து
நாங்கள் காணாமல் போகிறோம்
••

The you I am with,
when I am with you

எது எதுவாகவோ
இருந்த ஒரு கனவு
நீ வந்ததும் தெளிகிறது
எல்லாம் சரியாக இருக்கிறது
நீ பதட்டமின்றி இருக்கிறாய்
நாம் சிரிக்கிறோம்
பின்னர்
புன்னகைக்கிறோம்
ஒருவரை ஒருவர்
பார்த்துக் கொண்டிருக்கிறோம்
இயல்பாகப் பற்றிக்கொண்ட
கரங்களை
அதற்கான நேரம் வந்ததும்
இயல்பாக
விடுவித்துக் கொள்கிறோம்
நீ எழுந்து போகிறாய்
கனவு
தன் குழப்பங்களுக்குத் திரும்புகிறது

mtharangini@gmail.com