1

பாமினியைப் பற்றி நான் முதன்முதலாகக் கேள்விப்பட்டது, ராமமூர்த்தி மாமாவிடமிருந்து. அந்தப் பெண்மணியைப் பற்றி வெளிவந்து, காணாமல் போன புத்தகத்தின் பெயரையும்தான். ‘ஒளிர்ந்து மறைந்த விண்கல்’. ஐம்பதுகளின் கடைசியில் வெளி
வந்த நூலாக இருக்க வேண்டும்; அந்த நாளிலேயே இத்தனை நவீனமான தலைப்பா என்று இப்போது ஆச்சரியம் எழுகிறது…

ராமமூர்த்தி மாமா, திண்டுக்கல் நாகல் நகரில், பாக்கியம் அத்தை வீட்டுக்கு அருகில் குடியிருந்தவர். என் தாய்வழிப் பாட்டி ஹைதராபாதில் காலமானதையொட்டி, ஒட்டுமொத்தக் குடும்பமும் அங்கே சென்று இரண்டு வாரங்கள் தங்கியது. கால் பரீட்சையில் இன்னும் இரண்டு தேர்வுகள் பாக்கி இருந்தது எனக்கு. அத்தை வீட்டில் விட்டுவிட்டுப் போனார்கள். அது ஒரு முடுக்குச் சந்து. நாங்கள் குடியிருந்த சேலாங்கேணி குறுக்குத்தெரு போன்று ஓரளவு சுத்தமான, மத்தியதரவாசிகளைக் கொண்ட தலம் அல்ல. விவரிப்பதற்காகச் சொல்கிறேன் – மதிப்பீடு என்று நினைத்து யாரும் சண்டைக்கு வந்துவிட வேண்டாம்.

பின்னாட்களில், அலுவலகப் பயிற்சியையொட்டி நான் பங்கேற்ற வகுப்பில், கோவர்த்தன ராவ் என்ற பயிற்சியாளர், Synchronicity என்ற வகுப்பு எடுத்தார். அன்று முழுக்க ராமமூர்த்தி மாமாவும், பாமினியும், நாகல் நகர் சுப்பையா சந்தும், அங்குள்ள கழிவறையும் எனக்குள் நிரம்பி மூச்சுத் திணறினேன். வேறு ஏதோ யுகத்தில், இப்போதே நடப்பதுபோல விநோதமான கிளர்ச்சியையும் பரபரப்பையும் உணர்ந்தேன்.

வலதுபுறம் நிரந்தரமாகத் தொய்ந்தும், இடதுபுறம் உயர்ந்தும் தெரியும் முறுக்கு மீசை, தொண்டை கட்டிய காக்கைபோலக் குரல், உரையாற்றும்போது கைகளை வைத்துக்கொள்ளும் விதம், வகுப்பு மேடையில் இங்குமங்கும் நடக்கும்போது லேசாக விந்துவது என்று ராமமூர்த்தி மாமாவின் தத்ரூப நகல்போல ராவ் இருந்தார் என்பது மட்டுமல்ல காரணம் – அவர் நிகழ்த்திய உரையின் சாராம்சமும்தான்.

தனிப்பட்ட முறையில் நான் படும் அவஸ்தை புரியாமல், பேசிக்கொண்டே போனார். அனிச்சையாக நானும் குறிப்
பெடுத்துக்கொண்டிருந்தேன். பாமினியின் பாடும் குரல் ஒரு காதிலும், கோவர்த்தன ராவின் உரை மற்றதிலும் என ஒரே
சமயத்தில் ஒலித்த விசித்திரத்தை என்னாலேயே நம்ப முடிய வில்லை. ஒருவித பீதி எழும்பியது – எனக்குத்தான் ஏதோ ஆகிவிட்டதோ என்று. அன்று எடுத்த குறிப்புகளில், மூன்று உலகங்கள் பற்றிப் பேசுகிறார் ராவ். முதலாவது, நடப்பு உலகம். புலன்களால் அறிய இயல்வது. நிகழும்போதே புலப்படுவது. இரண்டாவது, சூட்சும உலகம். அதன் நிகழ்வுகளின் அழுத்தமும் பலாபலன்களும் முழுக்க நடந்து முடிந்தபின்னர்தான் தெரியவரும். நடக்கும்போது, நிகழ்வதை வேடிக்கை பார்க்க மட்டுமே முடியும்; அவற்றின்மீது நமக்கு ஒரு கட்டுப்பாடும் இருக்காது.

மூன்றாவது, நுண் உலகம். இதைப் பற்றி ராவ் என்ன சொன்னார் என்று எனக்கு நினைவில்லை. குறிப்பிலும், ‘நுண் உலகம்’ என்ற ஒற்றைச் சொற்றொடர் மட்டும்தான் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், புலன் எல்லைகளுக்கு வெளியிலிருந்து என் அனுபவத்துக்குள் எதையெதையோ அனுப்பிவைக்கும் பிராந்தியம் அது – என்று இப்போது அர்த்தம் கொள்கிறது மனம்.

கோவர்த்தன ராவ் முத்தாய்ப்பாகச் சொன்ன வாக்கியத்தை அடிக்கோடிட்டு எழுதிவைத்திருக்கிறேன்:

மானுடப் பிரக்ஞை எந்த நேரத்தில் எந்த உலகத்தை அனுபவம் கொள்ளும் என்பதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், ஒரே சமயத்தில் மூன்று உலகங்களிலும் இருக்கத்தான் செய்கிறோம். மூன்றும் ஒன்றுக்கொன்று விரோதமானவை என்று அவசரமாகப் புரிந்துகொள்ள வேண்டாம்! ஒன்றைச் சார்ந்தே மற்றொன்று இருப்பதற்கான புறச் சான்றுகளும் பதிவாகியுள்ளன!!

மீண்டும் ராமமூர்த்தி மாமாவிடம் வந்துவிடுகிறேன். பாக்கியம் அத்தை வசித்த சுப்பையா சந்து வறியவர்கள் நிரம்பியது என்றேனா. அத்தையே, ஓலைக்குடிசை ஒண்டுக் குடித்தனத்தில்தான் வசித்தாள். வருடம் 1970. சுமார் பத்து வயது எனக்கு. அக்கம்பக்கம் முழுக்க பராரிக் குடும்பங்கள். ரயில் நிலையத்தில் கூலியாட்களாக இருந்த ஓரிருவர், பேகம்பூர் தோல் தொழிலகங்களில் வேலை பார்த்தவர்கள், பூட்டுக் கம்பெனித் தொழிலாளி, கடைகடையாய் ஏறி சாம்பிராணி போடுகிறவர், சாணை பிடிக்கிறவர் – என்கிற மாதிரி.

அரசு மருத்துவமனையில் கடைநிலை ஊழியராய் இருந்தார் ராமமூர்த்தி மாமா. இரவு டூட்டி முடிந்து காலையில் எங்கள் வீட்டைத் தாண்டிச் செல்லும்போது மருந்துநெடி ஆளைத்தூக்கும். அத்தை கணவர் வாழை மண்டியில் கணக்கெழுதினார். அவ்வப்போது சிறுமலைப்பழங்கள் நாலைந்து கொண்டுவருவார். அந்தக் குடும்பத்தின் ஒரே செழுமை அது. மண்டி விடுமுறை நாட்களில், இவரும் ராமமூர்த்தி மாமாவும் சேர்ந்து சாராயம் குடிப்பார்களாம் – அத்தை சாதாரணமாய்ச் சொல்வாள்.

கிட்டத்தட்ட பத்து வீடுகளுக்கு ஒரே கழிவறை. உலர் கழிவறை. காலையில் ஏழு மணி சுமாருக்கு நகராட்சி ஊழியையான தெலுங்குப் பெண்மணி வந்து சாம்பல் பரத்திய முறத்தில் அள்ளிய கழிவைத் துருப்பிடித்த தகரவாளியில் சேகரித்து, குடித்தனக்காரர்கள் முறை வைத்துக்கொண்டு நிரப்பும் தொட்டித் தண்ணீரால் தரையைக் கழுவிவிட்டுப் போவாள். சுத்தப்படுத்திய பிறகு முதல் ஆளாகப் பயன்படுத்த வேண்டிய குடும்பம் எது என்பதற்கும் முறை உண்டு – அன்றன்றைக்குத் தண்ணீர் ஊற்றுகிறவர்கள்தான்.

ஆனால், நான் சொல்லவந்தது என் இளமைக் காலத்தைப் பற்றி அல்ல. நடைமுறைபோலவே தென்பட்டு, புதைந்துபோய்விட்ட ஒரு காலகட்டத்தைப் பற்றியும் அல்ல. நிச்சயமாக, கழிவறைகளைப் பற்றியும் அல்ல. காலைக் கடன் கழிக்கச் சென்று அமரும்போதெல்லாம் திகட்டத் திகட்ட ஒலித்த ஒரு குரலைப் பற்றி. ஐந்தாவது வகுப்புக் கால்பரீட்சை விடுமுறையின் ரம்மியமான பொழுதுகள் சிலவற்றை வடிவமைத்துத் தந்த, முகம் தெரியாத தேவதையைப் பற்றி.

பாடகியின் குரலையோ, பெயரையோ அங்கே வருமுன் நான் கேள்வியே பட்டதில்லை. அவருடைய குரலில் ராமமூர்த்தி மாமா சொக்கிக் கிடந்தது ஏன் என்று புரியவில்லை. மாமா ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு மாதிரி நடந்துகொண்டது ஏன் என்பதும் தெரியாது. பின்னாட்களில் அந்தக் குரலைப் பற்றி, அதைச் சூழ்ந்திருக்கும் புதிர் பற்றி, அது புதைந்துபோன ஆழத்தைப் பற்றி, அத்தனை ஆழத்திலிருந்தும் பிடிவாதமாகத் தன் துளிரைக் காட்டியபடியே இருக்கும் மர்மம் பற்றி இவ்வளவெல்லாம் எழுதுவேன் என்பதோ, தெரியவே தெரியாது…

ராமமூர்த்தி மாமாவின் வீடு கழிவறையை ஒட்டி இருந்தது. இந்தப் பக்கம் பார்த்த ஜன்னல் மட்டும் கிடையாது. சந்தின் ஒரே மாடிவீடு. மாடிப்போர்ஷனில் குடியிருந்தது அவர் குடும்பம். ஆனாலும், பொதுக் கழிவறைக்குத்தான் வந்தாக வேண்டும். இத்தனைக்கும், கிராமஃபோன் வைத்துக்கொள்ளுமளவு வசதியானவர்கள். குடிசைக்குள் அரிக்கேன் விளக்கில் பாடம் படித்து வளர்ந்த நாட்களில், விபரம் புரியாமல், ‘நமக்கே நமக்கென்று ரேடியோ வாங்க வேண்டும்’ என்று அடம் பிடித்து தன் அப்பாவிடம் பெல்ட்டால் குமார் அடிவாங்கியதும், மகன் வாங்கிய அடிக்கு அத்தை உட்கார்ந்து குமுறி அழுததும் நேற்றுதான் நடந்த மாதிரி இருக்கிறது.

ராமமூர்த்தி மாமா திரையிசையின் மகா ரசிகர். ‘சும்மா, வில்லால் பஞ்சு வெட்டுகிற மாதிரி டொய்ங் டொய்ங் கென்று ஓசையெழுப்பிக்கொண்டிருந்தால் எவன் கேட்பான்? பாட ஆரம்பித்தோமா, மூன்றாவது விநாடி வானத்தில் எழும்பினோமா, மூன்று அல்லது மூன்றரை நிமிஷம் கிறங்கிப் பறந்துவிட்டுத் தரையிறங்கினோமா என்று இருப்பதுதான் சங்கீதம்’ என்ற அழுத்தமான அபிப்பிராயம் உள்ளவர். ‘இதெல்லாம் அந்த வயதில் உனக்கெப்படித் தெரிந்தது’ என்று யாராவது கெட்டிக்காரத்தனமாகக் கேட்கலாம்; ஒட்டுத்திண்ணையில் உட்கார்ந்து சாராயம் குடிக்கிறவர்கள் ரகசியமாகவா பேசுவார்கள்! இதைச் சொன்ன நாளில்தான் அந்தப் புத்தகத்தின் பெயரையும் சொன்னார் மாமா. அதிலும், ராமமூர்த்தி மாமாவின் குரலை, சுப்பையா சந்தின் அடையாளம் என்று கேலியாய்ச் சொல்வார்கள். பிரதான தெருவரை கேட்கும் வலு கொண்டது.

மாமா தமது கோட்பாட்டை நிறுவிக்காட்டும் விதமாக ஓர் இசைத்தட்டு   வைத்திருந்தார். ‘கைம்பெண்ணின் காதல்’ என்ற
தலைப்புடன் 1953-இல் படப்பிடிப்பும் பாடல் பதிவும் நடந்து, வெளிவராமலே போன படத்தில் இடம்பெற்ற பாடல்கள் கொண்டது. பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு பாடல்கள். இந்தத் தகவலேகூட, அந்த நாளில் தெரிந்தது அல்ல.

அதை விடுங்கள், மேற்படி இசைத்தட்டை, ஒரு நாளுக்கு ஒரு டஜன் தடவைக்குக் குறையாமல் கேட்பார் மாமா. அதாவது, நானறிய. அவர் கேட்ட ஆவேசத்தைப் பார்த்தபோது, நான் தேர்வெழுதச் சென்றிருந்த நேரங்களிலும் அதையே திருப்பித் திருப்பிக் கேட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. அப்படியானால், எண்ணிக்கை முப்பதைத் தாண்டிவிடக் கூடும். இதற்கும் ஒருவித நிரூபணம் இருக்கத்தான் செய்கிறது – விடுமுறை நாட்கள். கிராமஃபோன் ஊசி எத்தனை தடவை வாங்கினாரோ; இசைத்தட்டையே எத்தனை வாங்கினாரோ!

அன்றைய நினைவுகளிலிருந்து மீட்டெடுத்து பாமினியின் குரலை வெகுகாலம் கேட்டுவந்திருந்தேன். மிகமிக விநோதமாக, கோவர்த்தன ராவின் உரையைக் கேட்ட தினத்தோடு, எனக்குள் அந்தக் குரல் ஒலிப்பது அறுதியாய் நின்றுவிட்டது!

ஆனால், அதற்கு மிகச் சரியாக ஆறு மாதம் கழித்து, முடிவெட்டிக்கொள்ளப் போன இடத்தில், பழைய தேதி தினத்தாளின் வாராந்திர இணைப்பு கிடந்தது. அதில் பாமினி பற்றி ஒரு கட்டுரை. ‘அலமாரியிலிருந்து’ என்ற தலைப்பில், பழைய கட்டுரையொன்றின் சில பகுதிகளைக் கோத்து அளித்திருந்தார்கள். நாற்பதுகளின் கடைசியில் பிரசுரமான கட்டுரை அது. சலூன்காரரிடம் கேட்டு மேற்சொன்ன இதழை வாங்கிக் கொண்டுவந்து பத்திரப்படுத்தினேன். கட்டுரையின் ஒரு பகுதி:

மேற்கத்தியப் வாய்ப்பாட்டு சம்பிரதாயம் அறிந்தவர்கள், இரண்டு பாணிகள் பற்றியும் அறிந்திருக்கலாம். ஒன்று, vibrato. சங்கீதப் பிராப்தி இல்லாதவர்களுக்கு விளக்கவேண்டுமானால், கடும் குளிர்ஜுரத்தால் நடுங்குகிற மாதிரி குரலை அதிர வைத்துப் பாடுவது. அந்த வகை நடுக்கத்தை, சீராக எல்லா ஸ்தாயியிலும் ஏற்றிக்காட்டுவது அத்தனை சாமான்யமல்ல.

இன்னொரு பாணி, falsetto. கள்ளக்குரலில் பாடுவது என்று லகுவாக விளக்கம் அளிக்கிற, ஜதையைப் பறிகொடுத்த நரியின் துக்க ஊளைபோல அல்லவா இருக்கிறது என்று சந்தேகம் கேட்ட மூடர்களை நேரிலேயே சந்தித்திருக்கிறேன். அந்த ஜாப்தா இப்போது அவசியமில்லை. தவிர, டொங்கு டொக்கு என்று தபலா, மிருதங்கம் அல்லது டோலக் மற்றும் ஜால்ரா வாத்தியங்களோடு பாட்டுக் கேட்டுப் பழகிய மரக் காதுகளின் பிரச்சினை அது.

நமது நாயகி பாமினியின் விசேஷம் மேற்சொன்ன இரண்டு அம்சங்கள் மட்டுமில்லை.

போலந்து தேசத்தில் கி.பி. நாலாம் நூற்றாண்டில் புழங்கிய இன்னும் இரண்டு தினுசுகள் பற்றி இந்தக் கட்டுரையாளர் கேள்விப்பட்டதுண்டு. ஒன்று, stiletto. கேட்பவரின் அடிவயிற்றில் சன்னமாய்க் கீறி நுழைந்து, குபுகுபுவெனக் குடல்வரை நீளும் பிச்சுவா மாதிரியான பாடும் முறை. அதாவது, நீங்கள் ஆனந்தமாகக் கேட்டுக்கொண்டிருப்பீர்கள் – குத்திய இடத்தில் குருதி பெருகுவது அறியாமல். நீங்களே அறியாதபடி, உங்கள் சதைக்குள் ஊடுருவி, துயரம் நிரப்பும் பாணி அது. துக்கம் தாள முடியாமல், சங்கீத சபையிலேயே மூச்சடைத்து விழுந்து மரித்த ரசிகர்கள் பற்றியும் தகவல்கள் இருக்கின்றன.

அடுத்தது, torpedo. இரண்டாம் உலகப்போரைத் தெரிந்த வர்களுக்கு, இந்த பாணி அந்நியமாய் இருப்பதற்கில்லை. அடிவயிற்றில் சொருகின கத்தி, அங்கேயே கரகரவெனச் சுழன்று உங்கள் உள்ளுறுப்புகளை, குறிப்பாக குடல் சுருளை, மண்வெட்டியால் வாரிவாரி வெளித்தட்டுவது போன்றது இது. உவமானத்தை நேரடி அர்த்தத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. களகளவென வழியும் கண்ணீராகவோ, நிறுத்தமுடியாத விதிர்ப்பாகவோ ரூபம் மாறிப் பொழியும் உங்கள் குடல்.

மேற்சொன்ன நான்கு வகைகளிலுமே வித்தகி என்பதால்தான், பாமினியை தமிழ் ஸினிமாவுலகம் சங்கீதப் பிரியர்களுக்கு வழங்கிய மாபெரும் வரம் என்கிறேன்…

வாசிக்கும்போதே எனக்குள் குழப்பம் மண்டியது. கட்டுரையாளர் விவரிக்கும் வகைமுறைகள் போலந்தில் நிஜமாகவே இருந்தனவா, இவர் கேலியாக உருவாக்கியவையா, பழங்காலத்தில் நிஜமாகப் புழங்கியவை என்றால் தற்காலத்தில் காணாமல் போனதேன்… அல்லது மேற்கண்ட கட்டுரையே பாமினியைக் கிண்டல் செய்வதற்காக தமிழ்க் கட்டுரையாளர் உருவாக்கிய கேலிச் சித்திரமா. ஒரிஜினல் கட்டுரை வெளியான இதழ்வேறு, நகைச்சுவைக் கட்டுரைகளுக்கு, அதிலும் சங்கீத விஷயத்தில் நையாண்டிக்கப் பேர்போன இதழ்… யார் கண்டது, பாமினி இரண்டு பாடல்களோடு நிறுத்திக்கொண்டதற்கு இந்தக் கட்டுரையேகூட காரணச் சனியனாய் இருக்குமோ என்னவோ என்று நினைத்தேன்…

கட்டுரையில் இன்னும் கொஞ்சம் இருக்கிறது. ஆனால், அந்தப் பகுதி பாமினியைப் பற்றியது அல்ல. தமிழ்க் கட்டுரை
யாளர் வாசித்த, ஆனால், நமக்கு வாசிக்கக் கிடைக்காத இன்னொரு கட்டுரை மீதான அறச்சீற்றம். பாமினியின் பாடும் திறன் பற்றிப் பேசிய மேற்சொன்ன பகுதி பகடி என்று எனக்குப் பட்டதற்கு முதன்மையான காரணம், பின்வரும் பத்திகள்தாம்:

அந்த வியாசத்தை வாசித்து முடித்தவுடன், ஞானமே இல்லாத பிறவியாய்ப் பிறந்து, வெறுமனே சங்கீதம் கேட்கும் பரமார்த்த சிஷ்யனாய் இத்தனை வருஷங்களை வீணடித்துவிட்டோமே என்று அவமானம் பொங்கியது எனக்குள். ஆனால், இந்த உணர்வு சிறுகச் சிறுகஆக்ரோஷமாய் மாறும் என்று கொஞ்சமும் அனுமானித்திருக்கவில்லை. அதுதான் குறிப்பிட வேண்டிய சங்கதி. எனது வயிற்றெரிச்சல் இதுதான்: எனக்கே பிடித்த ஒரு பாடகியைப் பற்றிய வியாசம், வாசித்து முடிக்கும்போது, அந்தப் பெண்மணிமீதே எனக்குப் பெரும் எரிச்சல் ஊறும் விதமாக முடிந்ததே என்பது…

ஒரு சங்கீத விதூஷியை ஒருவருக்குப் பிடித்திருக்கிறது; ரொம்ப அந்தரங்கமாகவே பிடித்திருக்கிறது என்றால், அதை யார் ஆட்சேபிக்க முடியும். அவர் சம்பந்தமாகத் தமக்குள் ததும்பும் ஆராதனையை வியாசமாகத் தொடுக்கிறார் என்பதிலும் நமக்கு என்ன ஆட்சேபனை. நாம் முன்பு கேட்டிராத சாரீரமாக இருக்கலாம்; வியாசமுமே, பிரத்தியேகமான எதையும் கண்டு வழங்காத நாராசமாக இருக்கலாம்; அங்குமிங்கும் கேட்ட சமாசாரங்களை, நிரூபணமேயில்லாத பரபரப்பை, திரட்டிக் கொடுத்த பாசாங்காகக்கூட இருக்கட்டுமே…

தமக்குப் பட்சமானவற்றை எழுதுவது விமர்சனகர்த்தாவின் உரிமை; பிரசுரம் செய்வது பத்திராதிபர் உரிமை. அவரவர் லட்சியம் அவரவருக்கு. மாசாமாசம் ஏழெட்டுப் பக்கங்கள் தாமாக நிரம்புவது எப்பேர்ப்பட்ட ஆசுவாசம்…! இது பற்றியெல்லாம் புகார் ஏதுமில்லாமல் வாசிப்பது அந்தந்தப் பத்திரிகையின் வாசகர்களுடைய உரிமை. நாம் தலையிட ஒன்றுமே இல்லை. ஜனநாயகம் என்பது மகோன்னதமான சங்கதி; ராஜரீகத்துக்கு மாத்திரமே அது செல்லுபடியாகும் என்று யாராவது சொல்லக் கூடுமா என்ன?!

ஆனால்,  ராமசுந்தரத்தின் வியாசம், ‘குமாரி. பாமினி மட்டும் தொடர்ந்து பாடியிருந்தால், மதறாஸ் மாகாண சங்கீத உலகத்தின் எம்.எஸ். சுப்புலட்சுமிகளும் தட்சிண சினிமாவின் ஜிக்கிகளும் புதிதாய் வந்திருக்கும் பி.சுசீலாக்களும் இருக்குமிடம் தெரியாமல் ஓடியிருப்பார்கள்’ என்று கடைசிவரியில் எடுத்துரைப்பதுதான் பிரச்சினை.

மேற்படிப் பாடகிகளின் அபிமானிகளுக்கு ரத்தக் கொதிப்பு கூடத்தானே செய்யும்? ‘ஜெயித்தவர்களெல்லாம் துரோகிகள்’ என்ற அபிப்பிராயம் தோல்வி கண்டவருக்கு இருந்தால் நியாயம். வேடிக்கை பார்ப்பவருக்கு ஏனய்யா இருக்கவேண்டும் என்று கேட்கமாட்டார்களா? நல்லவேளை, இந்த வரிசையில் மதி டி.கே.பட்டம்மாளின் பெயர் இல்லை. ஆடிமாதக் கொடையில் காவடி எடுத்துப் போகிற ஸ்த்ரீகளுக்கு மாரியம்மன்மீது உள்ள பக்திக்குச் சமானமாக, மதி பட்டம்மாள்மீது விசுவாசம் கொண்டவர்கள் உண்டே. உம்முடையது தங்கக் கலயம் என்பதற்காக மற்றவர்களைத் தாழ்த்தினீரானால், இல்லை ஐயா, நீர் வைத்திருப்பது முனிசிபாலிட்டிக் குப்பைவாளிதான் என்று அவர்களது அபிமானிகள் கிளம்ப மாட்டார்களா…

எனக்கே, மேற்படி வியாசம் வழங்கிய அதிர்ச்சியிலிருந்து விடுபடவும், மறுபடியும் சங்கீதம் கேட்க முனையவும் சுமார் ஒருவாரம் பிடித்தது என்றால் பாருங்களேன்… அந்த நாள் பத்திரிகைக் கட்டுரைகளுக்கு ஓர் எடுத்துக்காட்டு என்பதோடு, இரண்டே பாடல்களுடன் நிறுத்திக்கொண்ட பாடகிக்கு எப்படிப் பட்ட வரவேற்பு இருந்திருக்கிறது என்பதையும் மேற்சொன்ன கட்டுரை காட்டியது. யாரோ இரண்டுபேர் தமக்குள் இருந்த முன்விரோதத்தைத் தீர்த்துக்கொள்ளக்கூட இந்த அம்மாளைப் பயன்படுத்தியிருக்கலாம். ராமசுந்தரத்தின் கருத்துக்குப் பதிலடி கொடுப்பதற்காக, பாமினியைப் பற்றி இழிவான வாக்கியத்தை எழுதியவரை மன்னிக்க முடியுமா? அந்த அம்மாளின் மனம் எவ்வளவு புண்பட்டிருக்கும்? இந்த ஒரு காரணம் போதாதா, மனம் குன்றி, ஒருவர் வெளியேறுவதற்கு?

எனக்குமே ஒரு வாரம் நமட்டிக்கொண்டிருந்தது அந்த உதாரணம். ஆனால், வேறுவிதமான காரணங்களும் இருந் திருக்க முடியும் என்பது தெரிய இன்னும் காத்திருக்க வேண்டியிருந்தது.

 

2

அந்தரங்கமான, நேர்மையான, சுயநலமற்ற ஆசை ஒன்று நமக்குள் இருக்குமானால், அதை நிறைவேற்றி வைக்க ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும் ஓயாமல் ஒழியாமல் வேலைபார்க்கும்…

என்று கோவர்த்தன ராவ் தமது உரையில் குறிப்பிட்டதாகக் குறிப்பெடுத்து வைத்திருக்கி றேன்.

அப்படியெல்லாம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. தற்செயலாக நிறைவேறுகிறவற்றை, பிரபஞ்சம் வழங்கிய சலுகை என்று கொள்ளவேண்டுமா என்ன! நான் ஆசையே
படாமல் என் மடிமேல் வந்து விழும் கனிகளை எந்தக் கணக்கில் வைப்பது!! அப்புறம், ஆசைபற்றிய அந்த முன்
னொட்டுகளில்தான் எத்தனை நிபந்தனைகள்! அதையெல்லாம் யார், எதை வைத்து, நிர்ணயம் செய்வது?

என்று சக ஊழியனும், மேற்படி வகுப்பில் எனக்கு அடுத்த இருக்கையில் இருந்தவனுமான தியோடர் அன்று சாயங்காலமே சொல்லிச் சிரித்ததையும்தான்…

ஆனால், நான் ராவின் பக்கத்தில் நிற்கத்தான் விரும்புவேன். இல்லாவிட்டால், மிகமிக யதேச்சையாக வாசிக்கக் கிடைத்த ஏதேதோ சந்தர்ப்பங்களில், பாமினி பற்றி மேற்கொண்டு தகவல்கள் கிடைத்திருக்குமா…

இணையம் பரவலான காலகட்டத்தில், ஒவ்வொரு தளத்துக்காகச் சென்று, இசைத்தொகுப்புகளைத் தேடித்தேடித் ‘தரவிற’க்கும் வியாதி தொற்றியது என்னை. (டவுன்லோட் என்பதை அப்படித்தான் தமிழ்ப்படுத்துகிறார்கள்!). அதாவது, இலவசமாய்க் கிடைப்பவற்றை. தினசரி அதிகாலையில், கடமை தவறாமல் ஒவ்வொரு தளமாகப் போய் ஏமாறுவேன். பின்னே, தினசரியுமா ஏற்றி அனுப்புவார்கள்?! சோர்ந்தபிறகு, எந்தத் தளத்தையாவது திறந்து வாசிக்கத் தொடங்குவேன்…

நாள்தோறும் திறந்து பார்க்கவும் நியமம் தப்பாமல் ஏமாறவும், புதிதாக ஒரு தளம் கிடைத்தது. ‘yaaro.in’ என்பது தளத்தின் பெயர். அதில் எழுதுபவரின் பெயர் ‘யாரோ’. புனைபெயராகத்தான் இருக்கும் என்று பட்டது. பின்னே, பெற்றவர்களா இப்படிப் பெயர் சூட்டுவார்கள்.

இசைத்தளங்கள் மாதிரித்தான். ‘யாரோ’வும் தினசரி வலையேற்றுவதில்லை. எதிர்பாராத நாளில் இடி மாதிரி வந்திறங்கும் ஒரு கட்டுரை. அவசர அவசரமாய்ப் படிக்க வேண்டும் என்ற ஆவலும், அடடா படிக்கப் போகிறோமே என்ற பீதியும் ஒரே நேரத்தில் என் மனத்தினுள் இயங்க முடியும் என்று யாராவது சொல்லியிருந்தால் நம்பியேயிருக்க மாட்டேன். இப்போது நடைமுறை ஆகியிருந்தது.

ஆனாலும், கட்டுரை வெளியாகும் நாளில், அனிச்சையாகப் படித்துவிடுவேன். எழுதுகிறவர் ஒரே நபர்தானா என்பதிலும் சந்தேகம் இருந்தது. ஏனென்றால், நான் பார்க்க, ஐந்தாறு கட்டுரைகள் வந்தன. அவற்றை ஒரே நபர் எழுதியிருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.

ஆனால், ஒரு நபர் ஒரே நபராக எப்போதும் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லையே. இயற்பியலையே எடுத்துக்கொள்ளுங்கள், ஒரே சுயம், விவாத வசதிக்காகத் தன்னைப் பலவாகப் பிரித்துக்கொண்டு பரஸ்பரம் உராய்ந்துகொள்கிறது; இயற்பியல் என்ற மாபெரும் தேடல்முறையின் ஒற்றைச் சுயம்தானே அது? புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் கோட்பாடுகளின்கீழ் தனிநபர்களின் பெயர் இருந்தாலும், வரவு வைக்கப்படுவது என்னவோ, இயற்பியல் என்ற பொதுதளத்தின் கணக்கில்தானே.

உதாரணமாக, இரண்டே நபர்கள் நிலாவில் இறங்கிய சமாசாரத்தை, மனித குலமே அங்கே போய் இறங்கி திருவிழாக்களும் தீர்த்தவாரிகளும் நிகழ்த்திவிட்டது போல உலகெங்கும் உற்சாகம் கரைபுரண்டு ஓடவில்லை? பல்வேறு பாடகர்களாகவும் கருவியிசைஞர்களாகவும் சிதறிக்கிடக்கும் தோற்றத்தில் ஒரே இசைமரபு ஓங்கி ஒலிக்கவில்லை? இன்னும் ஏகப்பட்ட உதாரணங்கள் கைவசம் உண்டு; அனைத்தையும் சொன்னால், அவற்றை மட்டும்தான் சொல்ல முடியும் என்பதால், இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

இப்போது குறிப்பிட முற்பட்டது, ‘யாரோ’ தளத்தில் கிடைத்த ஒரு கட்டுரை பற்றி. இப்படிப் போனது அது…

…ரயில்கள் சம்பந்தமாக எனக்கு எப்போதுமே ஒருவித நெகிழ்ச்சி உண்டு. கிளம்பிச் சென்று மறையும் ரயிலைப் பார்க்கும்போதெல்லாம், ஏனோ, எனக்குள் ஒரு குமிழ் உடைகிற மாதிரி உணர்வேன். ஆமாம், போகும் ரயில் ஒவ்வொன்றும், என் கண்ணீர்த்துளி ஒன்றையும் சுமந்துகொண்டு செல்கிறது என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்.

நான் பிறந்த கிராமத்தில் என் வீட்டின் பின்புறம் ஒரு மலை இருந்தது. சரியாகச் சொன்னால், குன்று.

ஒருநாள் அந்திப் பொழுது. நாவல்களிலும், திரைப்படங்களிலும், கனவுகளிலும் மட்டுமே காணக் கிடைக்கும் பொன்னிற ஒளி. அதற்கு உபரிப் பளபளப்பு சேர்க்கும் மெல்லிய தூறல். மலையைப் பார்த்தபடி மொட்டை மாடியில் நின்றிருந்தேன். தொலைவில் ரயில் வரும் ஒலி கேட்டது. அதன் வீறலான குரலில் இனம்புரியாத துயரம் நிரம்பியிருந்தது. விறுவிறுவென்று படியிறங்கிப் போனேன்.

ஓசை நெருங்க நெருங்க என் கால்கள் வேகம் பிடித்தன. ஓடத் தொடங்கினேன். நான் ஓடும்போது, எனக்குள் சிந்தனையும் முடிவற்று ஓடிக்கொண்டேயிருந்தது. எனது ஓட்டத்தையும், என் சிந்தனையின் ஓட்டத்தையும் புதிரானதொரு மாயத் தளம் வேடிக்கை பார்க்கிறது என்ற எண்ணம் உதித்தது… அதன் வால்போல, விசித்திரமான ஆசையொன்றும் முளைத்தது.

இந்த முறை ரயில் என்னைக் கடந்து போகும்போது, ஒரு ஜன்னலில் தெரியும் ஒரு முகத்துக்காவது கையாட்டி விடை கொடுக்க வேண்டும் என்று எனக்குள் முடிவெடுத்துக்கொண்டேன். இதோ, ரயில் வண்டியின் முகம் தெரிகிறது. பிரிவின் ஆற்றாமையை எனக்குள் நிரப்ப வரும் அரக்கன்போல வேகமாக வருகிறது.

என்ஜின் என்னைத் தாண்டியபோது அந்த அதிர்ச்சியை உணர்ந்தேன். ஆமாம், வந்தது கூட்ஸ் ரயில். என்ன செய்ய, வாழ்க்கை அப்படித்தான் இருக்கிறது. என்றாலும், ஒரு ஆறுதல்; கடைசிப்பெட்டி இழுபட்டபோது, பச்சைக் கொடியுடனும், பாழ் நோக்கிய பார்வையுடனும் நின்ற வெள்ளுடை அலுவலர் என்னைப் பார்த்துப்  புன்னகை புரிந்ததுபோல இருந்தது.

ரயில் சென்ற தடத்தில் கிடந்த கருங்கல் ஒன்றை எடுத்துப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன். அதன் கனம் என்னைப் பாதாளம் நோக்கி இழுத்துச் சென்றது.

அமெரிக்காவில், என் வீட்டின் எழுதுமேசையில், கம்ப்யூட்டர் அருகே, மர்மப் புன்னகையுடன் அந்தச் சிறு கல் உட்கார்ந்திருக்கிறது, சுமார் நாற்பது வருடமாக. என்னைவிட்டுப் போகவேயில்லை. நானும் என் முன்னிலையிலிருந்து அதை அகற்ற முயன்றதேயில்லை.

‘மறைதலின் துயரம்’ என்று தலைப்பிட்டிருந்த கட்டுரையைப் படித்தவுடன் எனக்குள் ஒரு செயலின்மையை உணர்ந்தேன். அதிலும், அந்தக் கடைசி வரி! மொத்தக் கட்டுரையும் பால்ய நாள் பற்றிய நினைவேக்கம் என்றால், அந்த ரயில்பாதைக் கல் ஒரு குறியீடாக மாறிவிடுகிறதல்லவா. எந்த ஞாபகத்தையாவது மெனக்கெட்டு அகற்றி, பொட்டலம் மடித்துவந்த தாள்போலக் கசக்கி, குப்பைக்கூடைக்குள் போட முடியுமா? சன்னமான துயர ரேகை ஓடுவதைத் தவிர, மேற்சொன்ன விஷயத்தில் அகற்ற வேண்டியதாக எந்த ஓர் அம்சமுமே பிடிபடவில்லையே?

இந்தக் குழப்பமெல்லாம் கிடக்கட்டும், தன்னளவில், இந்தக் கட்டுரை சொல்லவரும் செய்திதான் என்ன என்று கண்டுபிடிக்க சில நிமிடங்கள் போராடினேன். ஆனால், அதற்குள், என் பார்வை தன்னிச்சையாக இணையதளத்தின் பக்கவாட்டில் மேயத் தொடங்கியது.

பழைய கட்டுரைகளின் மாதவாரி, ஆண்டுவாரிப் பட்டியல் இருந்தது. ‘பாமினி’ (1) என்ற சொல்லை முதன்முதலாகக் கவனித்தேன். உடனடியாய் அதைச் சொடுக்கினேன். நான் யூகித்தது சரியேதான். முன் பின் குறிப்புகள் ஏதுமின்றி, இரண்டே இரண்டு பாடல்கள் மட்டும் முழுமையாய் இருந்தன. இரண்டுமே ’கைம்பெண்ணின் காதல்’ படத்தில் இடம்பெற்றவை; இயற்றியவர் சஞ்சார கவி; இசையமைப்பு எஸ்.வி.வெங்கடராமன் என்ற தகவல்கள் மட்டும் அடைப்புக்குறிக்குள் இருந்தன. மேற்படி இசையமைப்பாளரைக் கேள்விப்பட்டிருந்தேன் – ‘மீரா’ உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களில் பணியாற்றியவர். சஞ்சார கவியின் பெயர் புதிது.

புருஷ சிரேஷ்டரே – என்

புண்ய மூர்த்தியே

என்று ஆரம்பிக்கும் ஆபோகி ராகப் பாடலை, தமிழ்ப் பாடல் என்று சத்தியம் செய்தாலும் இந்தத் தலைமுறை நம்பாது. அங்கங்கே தமிழ்ச் சொற்கள் விரவிய, சமஸ்கிருதப் பாடலேதான் அது.. இரண்டாவது பாடலில் பேராச்சரியம் இருந்தது! ஆமாம், முழுக்கத் தமிழில் எழுதப்பட்டது அது!!

மறந்து சென்ற மன்னவனே – என்னைக்

கவர்ந்து சென்றதும் ஏனோ?

இது சஹானாவில் அமைந்த, ஏக்கம் ததும்பும் மெட்டு. இரண்டு பாடல்களுமே என் பால்யத்தின் தொலைவிலிருந்து தத்ரூபமாக எனக்குள் ஒலித்தன. இத்தனை காலமும் உறங்கிக் கிடந்த மெட்டுகளுக்கு மீண்டும் உயிர் முளைத்ததை என்னால் நம்பவே முடியவில்லை. அந்தக் கணத்தில், நான் திண்டுக்கல் நாகல்நகர் சுப்பையா சந்தில், என் பத்தாவது வயதில் இருப்பதான பிரமை தட்டியதையும்தான்.

பாடல்களுக்குக் கீழே, அடர் எழுத்துக்களில் இன்னொரு குறிப்பும் இருந்தது. ‘‘ஒளிர்ந்து மறைந்த விண்கல்” என்ற நூலிலிருந்து எடுத்தவை என்றது. ராமமூர்த்தி மாமாவின் நரைத்த மீசை என் கண்முன் ஆடியது…

பாமினி(2) என்றும் ஒன்று இருந்தது. சொடுக்கினேன். இது வேறொரு பாமினி. சுல்தான்களின் ஆட்சிக்குள் இருந்த தக்காணப் பகுதி பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் கொண்ட சிறு கட்டுரை.

 

3

பெண்களுக்கான பிரத்தியேகப் பத்திரிகைகளின் எண் ணிக்கை சடாரென்று அதிகரித்த நாட்கள். ‘மாதர் திலகம்’ இதழின் ஆராதகி என் மனைவி. மாதம் தவறாமல் வாங்கு வாள். வழக்கமாக, அந்தப் பத்திரிகையைப் பொருட்படுத்த மாட்டேன்; சமையல் குறிப்புகள், பூத்தையல் நுட்பங்கள், கோல வகைகள், அழகுக் குறிப்புகள் என்று எந்தப் பக்கம் பார்த்தாலும் பெண்போலவே தெரியும் பத்திரிகை.

எதுவுமே செய்யப் பிடிக்காமல் இருந்த ஒரு நாளில், டீப்பாயில் கிடந்த சமீபத்திய இதழை அனிச்சையாக எடுத்துப் புரட்டினேன். ‘பாடலின் பௌதிக வடிவே நாட்டியம்’ என்ற தலைப்பு ஈர்த்தது.

அமெரிக்காவில் வசிக்கும் நடனமணி, பாகா என்ற பாக்கியலட்சுமியின் நேர்காணல் அது. அறிமுகக் குறிப்பு, ‘இவர் பழையதலைமுறைப் பாடகி பாமினியின் பெண்வழிப் பேத்தியும் ஆவார்’ என்று முடிந்தது. அதுதான் ஆகிவிட்டாரே, அப்புறம் ஏன் எதிர்கால ஒட்டு என்று தானாய் உதித்த கேலியைப் புறமொதுக்கிவிட்டு, பேட்டியை வாசிக்கத் தொடங்கினேன்…

ஒரு நீண்ட பத்தி என்னைக் கவர்ந்தது. அதை அப்படியே தருகிறேன்:

அன்று காலை குளிக்கப் போவதற்குமுன் ஒரு ரசிகரின் மின்னஞ்சலைப் பார்க்கக் கிடைத்தது. ஜப்பானிய எரிமலைகள் உமிழும் தீக்குழம்பில் உள்ள கனிமங்கள் மற்றும் கரிமங்களில் உறைந்திருக்கும் காலம் பற்றிய ஆராய்ச்சியில் பல்லாண்டு காலமாக ஈடுபட்டிருப்பவர். கிரேக்க இதிகாசங்களில் வரும் ஃபீனிக்ஸ் பறவையின் இனம் முழுக்க அழிந்துவிட்டதா அல்லது உலகெங்கும் உள்ள எரிமலைச் சாம்பல் குவியல்களில் அதன் தடயங்களோ, எஞ்சியிருக்கும் வாரிசுகளின் உயிர்மூலங்களோ புதைந்திருக்க வாய்ப்புகள் உண்டா என்ற ஆராய்ச்சியே தமது தனிப்பட்ட ஆர்வம் என்றும்; அதற்கான நேரடி வசதிவாய்ப்புகள் இன்னும் பேறாத நிலையில், தமது வருங்காலக் கண்டுபிடிப்பு தொடர்பான அனுமானங்களை மட்டுமே தற்போது எழுதி வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

என்னுடைய நடன அசைவுகள் சிலவற்றில் உடனடியாகத் தென்படும் புராதன அம்சங்கள் தம்மை ஈர்த்ததாகவும், தமது ஆராய்ச்சிப் பணியின்போது வெவ்வேறு நிலப்பரப்புகளில் காணக் கிடைத்த ஆழ்படிமங்கள் மற்றும் தொல்படிவங்களின் சாயல் உள்ள முத்திரைகள் பற்றி நேரில் விவாதிக்க விரும்புவதாகவும், சந்திக்க நேரம் ஒதுக்க முடியுமா என்றும் கேட்டிருந்தார். புதிய ரசிகர் எவராவது வந்து சேரும்போதெல்லாம் என் பாட்டியின் ஞாபகம் தவிர்க்க முடியாமல் எழுந்துவிடும் எனக்குள். என் சொந்தப் பாட்டியின் சொந்தத் தமக்கை. உண்மையில், அவருடைய மானசீக இருப்புதான் எனக்கான உந்துதல். தேவதாசி குலத்தில் தோன்றிய அன்னைக்கு மகளாகப் பிறந்ததால் தமக்குள்ளிருந்து இயல்பாகப் பீறிய கலைமேன்மையை, பாதியிலேயே நிறுத்திக்கொள்ள நேர்ந்த அபாக்கியவதி அவர். உடன்பிறந்த தங்கைக்கு வாய்க்காத கலைமனம் வாய்க்கப் பெற்றவர்.

பிரசித்தி பெற்ற வக்கீல், பெரும் செல்வந்தர், ராஜாங்கப் பதவிகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளவர், உயர்சாதிக்காரர், வீடு தேடி வந்து கேட்கிறாரே என்று சம்மதித்திருக்கிறார் என் கொள்ளுப் பாட்டி. மூன்றாவது தாரமாகத்தான். ஆனால், திருமணத்துக்குப் பிறகு அதிர்ச்சி காத்திருந்தது. இனி, தமது மனைவி மேடையேறக்கூடாது என்று தடைவிதித்துவிட்டாராம் வக்கீல்.

முன்பே பதிவாகியிருந்த இரண்டு பாடல்களோடு சங்கீத ஊற்று தூர்ந்துவிட்டது. இதில் இன்றுவரை தீராத வலியாக இருக்கும் இரண்டு அம்சங்களையும் சொல்ல வேண்டும்:
ஒன்று, மணமான நாலே மாதங்களில் வக்கீலய்யா அகால மரணமடைந்தது. மற்றொன்று, மூன்றாம் தாரமாக வாழ்க்கைப்பட்டிருந்தாலும், கைம்பெண் கோலத்தையும் தவவாழ்வையும் தனிமையையும் தயங்காமல் போர்த்திக் கொண்டார் என் பிரிய, அசட்டுப் பாட்டி. மேடையேறவும், பின்னணி பாடவும் தேடிவந்த வாய்ப்புகளை தீரமாக மறுத்து
விடுவாராம்…

அவரது அழுத்தமான நினைவுகளோடு குளிக்கப் போனேன்.

எங்கள் இல்லக் குளியலறையில், ஜன்னல்களுக்கு மாத்திரம் துல்லியமான கண்ணாடிக் கதவுகள் அமைத்திருக்கிறேன். பாட்டியின் ஞாபகார்த்தமாகத்தான். இயற்கையையொட்டிய வாழ் முறையை விட்டு மனிதகுலம் நீங்கியதே அதன் தற்போதைய அவலங்கள், பிணிகள் அனைத்துக்கும் காரணம் என்பதை எடுத்துரைக்காத தத்துவவாதியை நீங்கள் எந்த தேசத்தின் எந்த மொழிப்பிராந்தியத்திலும் பார்த்துவிடுவதற்கில்லை – அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் மேற்கொள்ளும் அத்தனைவிதமான சதிகளையும் மீறியே தத்துவம் தன் தொடர்ச்சியை இழக்காது எஞ்சியிருக்கிறது.

ஆக, குளிக்கும்போதுகூட இயற்கையைவிட்டு விலகியிருக்காத நிலைமை வேண்டியே துல்லியமான கண்ணாடிகள். வடிவங்கள் ஏதும் கீறப்படாத, சாம்பற்பூச்சு உள்ளிட்ட வர்ணம் எதையும் ஏற்காத கண்ணாடிகள் என்பதாலேயே துல்லியமானவை என்று குறிப்பிட்டேன். அவற்றின்வழி தெரியும் ஆகாயம் வெற்றுச் சதுரமல்ல; இயற்கை என்னும் பேருண்மையை, நீள அகல விளிம்புகள் அற்ற ஆழமெனப் பரந்திருக்கும் பெருநிலையை, அதன் தீராக் கருணையின் முதுகொட்டி இருக்கும் ஆறாக் குரூரத்தை, சதா நினைவூட்டியபடியே இருக்கும் மாபெரும் விகாசம் என்று ஒவ்வொரு முறையும் தோன்றும்..

என் வீட்டுக் குளியலறையில் ஜன்னலே இல்லை; நீராடும்போது ஆகாயத்தை தரிசிக்கும் பாக்கியமும் எனக்கில்லை. எனில், நான் இயற்கையைவிட்டு விலகியிருக்கிறேன் என்று அர்த்தமா என்ன! குளிக்கப் பயனாகும் தண்ணீர் இயற்கையின் மூலகங்களில் ஒன்று இல்லையா! என்று சக நடனமணியான சிநேகிதி கேட்டாள். ‘ஐயங்களையும் அறிவிலிகளையும் ஒரே தட்டில் நிறுத்துப் பார்க்கும் மேற்கத்தியத் தத்துவ மரபு போன்றது அல்ல இந்திய மரபு’ என்று பதில் சொன்னேன். உறவு முறிந்ததுதான் மிச்சம்.

உண்மையில் இந்திய சமூகம் மூடர்களுக்குக் கொடுத்திருக்கும் இடம் மேற்கத்திய மரபு அறிவுஜீவிகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்துக்கு நிகரானது. இந்திய மொழிகள் பலவற்றிலும் வாசிக்கக் கிடைக்கும் உறுதியான சான்றுகள் பலவற்றையும் பரிசீலித்தே இதைச் சொல்கிறேன். பிமலேந்து சட்டோபாத்தியாயாவின் ‘துயரம் என் இயல்பல்ல’ என்ற நாவலை வாசிக்குமாறு, ‘மாதர் திலகம்’ வாசகியருக்குப் பரிந்துரைக்கிறேன். ஆற்றொழுக்கு போன்ற நடையில் எழுதப்பட்ட இந்திய ஆங்கில நாவல் அது.

 பிமலேந்து இருவேறு தருணங்களில் சொல்கிறார்:

குழாயில் கொட்டுவது என்று நிர்ப்பந்திக்கப்படும்போதே, தண்ணீர் தன் இயற்கைநிலையிலிருந்து வழுவிவிடுகிறது…

கட்டுப்படுத்தப்பட்ட தண்ணீர் என்பது மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரமே. இதே பொருள்படும் தெலுங்குச் சொலவடை ஒன்றும் இருப்பதை, பெருமைக்குரிய என் பாட்டி சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

பாட்டி தன் கைப்பட எழுதி, பல நூறு பக்கங்களுக்கு நீளும் தேதியற்ற நாட்குறிப்பு என்வசம் இருக்கிறது. உரிய விதத்தில் மொழிபெயர்க்க ஏற்பாடுகள் நடக்கின்றன. அடுத்த ஆண்டு இறுதியில், தெலுங்கு, ஆங்கிலப் பதிப்புகளோடு, முதன் முறையாகத் தமிழிலும் வெளியிடத் திட்டம்…

பாட்டியின் எழுத்துக்கு எடுத்துக்காட்டாக, ஒரேயொரு சிறு பத்தியை இங்கே தருகிறேன்:

ஜன்னல்வழி தெரியும் தோட்டத்தைப் பார்ப்பதில் அலாதி இன்பம் எனக்கு. தாவரங்களும் பறவைகளும் புழு பூச்சிகளும் மட்டும் நிரம்பிய உலகத்தில் வசிக்கக் கிடைத்தவள் மாதிரிக் கிளர்ச்சி கொள்வேன். கண்ணாடித் தடுப்புக்கு மறுபுறம் உயிரோட்டத்துடன் திகழும் அந்த உலகத்தில் ஓசையே இல்லாதிருப்பது என் தனிமைக்கு இனிமை சேர்க்கும்.

ஜன்னல் காட்சி இன்று வேறொரு பாடம் புகட்டியது, அதிர்ந்தேன். கண்ணாடியின் மறுபக்கம் வயிறொட்டிப் படிந்திருந்தது ஒரு பல்லி. ‘பெண்கள் குளிக்குமிடத்தில் உனக்கென்ன வேலை’ என்று செல்லமாய்க் கடிந்தபடி, கண்ணாடியில் ஒட்டித் தெரிந்த வெளுத்த அடிவயிற்றை ஊன்றிக் கவனித்தேன்.

இன்னுமொரு தடவை அதிர்ந்தேன். ஆம், கடுகு பருமனுக்கு ஏழெட்டு முட்டைகள். அட, அவளும் பெண்ணேதான்! பெருமௌனத்தில் உறைந்து காத்திருந்த முட்டைகள், உயிர்பெருகும் விந்தையை எடுத்துரைத்ததுபோல உணர்ந்தேன்.

ஆமாம், யாரும் ஆணையிடாமலே தன்னைத்தானே பெருக்கிக்கொள்ளும் சூத்திரம் உயிர்க்குலம் முழுமைக்கும் சொந்தமானது. கடைசிவரை திறக்காமலே இருந்துவிட்ட என் அடிவயிறை ஒருமுறை தடவிப் பார்த்துக்கொண்டேன்…

உலகெங்கிலும் கலைஞர்களையும் கவிஞர்களையும் ஈர்த்த மிகப் பெரும் படிமம் அல்லவா பல்லி! உண்மையில், இந்த ஜீவராசிக்குச் சீனம் போன்ற புராதன மரபுகளில் வழங்கப்பட்டிருக்கும் இடம் மிகத் தனித்துவமானது என்றே சொல்லலாம். பல்லியின் பனியடர்கால மூதாதையான டிராகனை இந்த இடத்தில் நினைவுகூரலாம்…

மூலத்தில் எப்படியோ, பத்திரிகைக்காக மொழிபெயர்த்தவரின் சொல்லாட்சியும், சரளமும் என்னை மிகமிகக் கவர்ந்தன. உண்மையில், மேற்படிப் பத்தியை வாசித்த மாத்திரத்தில், ராமமூர்த்தி மாமாவின் வீட்டுச்சுவரையொட்டிப் பல்லிபோல நின்றிருந்து நான் கேட்ட பாட்டுகள் இரண்டும் மீண்டுமொருதடவை எனக்குள் ஒலித்தன.

 

4

வெகுகாலம் கழித்து இஸ்மாயில் வந்திருந்தான். பத்மினியும் அவனும் கண்ணீர் மல்கப் பரஸ்பரம் உரையாடி, பலகாரம் காபி உபசாரங்களும் முடிந்த பிறகு, முன்னமே எழுதிவைத்திருந்ததை வாசிக்கக் கொடுத்தேன்.

இடையிலே வந்த சில சங்கதிகள் சுவாரசியமா இருந்துச்சு. குறிப்பா, அந்த இயற்பியல் சமாசாரம்.

‘அட, இவனே பாராட்டுகிறானே’ என்று வியந்து முடிக்கவில்லை – இயல்பு மாறாமல் அடுத்த வாக்கியம் உதிர்த்தான்:

‘இதெ ஒரு கதைன்னுதானே பத்திரிகைக்கு அனுப்புவே? இப்போல்லாம் இணைய இதழ்கள்லெ வர்ற கதைகள் மாதிரியே இருக்கு… அவங்கதான் கைக்குக் கிடைச்சதையெல்லாம் அப்லோட் பண்ணிர்றாங்களே!’

என்று சொல்லிவிட்டு, authorial intervention பற்றி உரையாற்ற ஆரம்பித்தான். வழக்கம் போல, அவனது வாக்கியங்கள் என் தலைக்குமேல் குறுக்குமறுக்காகப் பாய்ந்து பாய்ந்து பறந்தன.

writeryuvan@gmail.com