ஐ.பி.எல்லை இந்தியாவின் தற்போதைய மிகச்சிறந்த பொழுதுபோக்கு வடிவம் என்றே சொல்ல வேண்டும். 50-60 கோடி பேர் வரைக்கும் வருடாவருடம் பார்க்கிறார்கள். ஐ.பி.எல் மட்டுமல்ல, உலகம் முழுக்க நடக்கும் தனியார் ஐ.பி.எல் தொடர்களே சர்வதேச டி20-இன் போக்குகளைத் தீர்மானிக்கின்றன – கடந்த டி20 உலகக்கோப்பையில் முதல் பத்து ஓவர்களில் அடித்தாடிய அணிகளின் வெற்றி சாத்தியம் அதிகமாகியது. இப்போக்குகள் 130-150ஐயே ஒரு மோசமான ஸ்டிரைக் ரேட்டாகக் கருத வைக்கின்றன. பவுண்டரிகளை விட சிக்ஸர்களே வெற்றியைத் தீர்மானிக்கும் எனக் காட்டுகின்றன. இவை தனியார் டி20 போட்டிகளில் இருந்தே சர்வதேசப் போட்டிகளுக்குச் சென்றன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலோ (ஐ.ஸி.ஸி) கடந்த டி20 உலகக்கோப்பையின் போது பந்து வீச்சாளர்களுக்கு விக்கெட் எடுக்கும் வாய்ப்புகள் கொண்ட ஆடுதளங்களை லீக் போட்டிகளில் அளித்தன. ஆனால் அதே ஐ.ஸி.ஸிதான் உலகக்கோப்பை அரை-இறுதி, இறுதிப் போட்டிகளில் ஐ.பி.எல் பாணி ஆடுதளங்களை அளிக்கும் அழுத்ததிற்குப் பணிந்தது. ஆகையால் பொழுதுபோக்காகவும் 2026இல் சர்வதேசப் போட்டிகளின் புதிய போக்குகளின் பரிசோதனைச் சாலையாகவும் ஐ.பி.எல் முக்கியமான போட்டித்தொடர்.
புதிய போக்குகள்
இவ்வருடம் நாம் ஐ.பி.எல்லில் மேற்சொன்ன அதிரடிப் போக்கின் தொடர்ச்சியைக் காண்கிறோம் – தரமான ஆடுதளமென்றால் 200 என்பது ஒரு இலக்காக சுலபமாகிவிட்டது. 220ஓ சுமாரான இலக்கு. 260-270ஐக் கூட ஒரு அணி இன்று விரட்டிச் செல்லும் துணிச்சலைக் காட்டுகிறது (சன் ரைசர்ஸ் அணிதான் இந்த அதிரடி ஆட்ட பாணியை ஐ.பி.எல்லில் துவக்கி வைத்தார்கள் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.). அதேநேரம் இந்த முயற்சிகள் தன்னியக்கமாக நடப்பதில்லை. பல்வேறு தடைகளும் எதிர்பாராமைகளும் அபாயகரமான முயற்சிகளின்போது பெருகுகின்றன. இது கிரிக்கெட்டில் ஒரு பார்முலா ஒன் / குத்துச்சண்டை போட்டியில் உள்ள திகைப்பை ஏற்படுத்துகிறது. பொறுமையான நிதானமான ரசிக்கத்தக்க கிரிக்கெட் போட்டியில் நாம் நம்மையே அதிகம் புரிந்துகொள்கிறோம். அது ஒரு ஆழமான அனுபவம். ஆனால் இவ்வகையான போட்டிகளில் நாம் சராசரி வாழ்க்கையில் அனுபவிக்க இயலாத ஒன்றை எதிர்கொள்கிறோம் – வேகம், அபாயங்கள், அச்சம், நிம்மதி, மீண்டும் பதற்றம், அதிரடி என்று. ஐ.பி.எல் இந்த அனுபவத்தை மேலும் மேலும் தீவிரமாக்குகிறது. அதற்காகத்தான் மட்டையாளர்கள் தம் ஸ்டிரைக் ரேட்டை அதிகரிக்க தொடர்ச்சியாக தம்மைப் புத்துருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள்; புதிய புதிய ஷாட்களைச் சேர்த்துக்கொள்கிறார்கள். இதனாலே ஐ.பி.எல் எப்போதும் போல ஒரு கொண்டாட்ட வெளியாக இந்த ஆண்டும் இருந்து வருகிறது. சில போட்டிகளை இறுதி ஓவர் வரைக்கும் என்ன நடக்குமோ எனும் பதபதைப்புடன் பார்த்திருக்க முடிகிறது.
மட்டையாளர்கள் தம் இலக்கை அடைவதை அபாயகரமாக்கும் புதிய உத்திகள் பந்து வீச்சாளர்களிடம் இருந்து தேவை. உ.தா., அஷ்வின் ஒரு காணொளியில் ஐ.பி.எல்லில் பயன்படுத்தப்படும் பந்துகளின் கனத்தை பந்து உற்பத்தியாளர்கள் அதிகரித்துவிட்டமையால் சிக்ஸர்கள் வேகமாகப் போகின்றன என்று (பந்தைப் பிரித்து விளக்கிக்) காட்டினார். பந்தின் கனத்தைக் குறைத்தும், எல்லைக் கோட்டை அகலமாக்கியும், சிக்ஸர்களின் தொலைவுக்கு ஏற்ப ரன்களை அதிகரித்தும், வேகப்பந்து வீச்சாளர்கள் ஓவருக்கு குறைந்தது 3 பீமர்கள் (இடுப்புக்கு மேல் அதிகவேக புல்டாஸ்கள்) போடுவதையும், மட்டையாளர்கள் பாதுகாப்புக் குறைவான ஹெல்மெட்டுகளுடனும், விலா பாதுகாப்பு போன்ற உபகரணங்கள் இல்லாமல் ஆடுவதையும் பரிசீலித்துப் பார்க்கலாம். கிரிக்கெட்டின் முக்கியமான போதாமை அது ஒரு தொடாத விளையாட்டு (non-contact sport) என்பது. இங்கிலாந்தில் கிராமத்து மக்களிடம் ஆரம்பித்து கனவான்களால் வளர்த்தெடுக்கப்பட்டதால் ஆக இருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் தொடுவிளையாட்டின் சில போக்குகளை அது வரித்துக்கொள்ளும் அவசியம் வரலாம் (தலையையும் கழுத்தையும் நோக்கி வரும் வேகப்பந்துகளை ஹெல்மெட் இல்லாமல் ரிச்சர்ட்ஸ் ஆடியதைப் பார்க்க இப்போதும் மயிர்க்கூச்சிடுகிறது.)
அணிகளின் உருமாற்றம்
கீழ்வரும் பாயிண்ட்ஸ் அட்ட வணையைப் பாருங்கள்.
பஞ்சாப்:
நான் இதை எழுதும்போது பஞ்சாப் அணியே நான்கு வெற்றிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. 266 எனும் இலக்கைத் துணிச்சலாக விரட்டிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய மட்டையாட்ட வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயரைத் தவிர பெரிய நட்சத்திரங்கள் இல்லை. அவர்கள் நட்சத்திர மதிப்புக்குப் பதில் ஒவ்வொரு இடத்திற்கும் பொருத்தமான ஸ்டிரைக் ரேட்டும் ஆட்டநிலையும் கொண்ட மட்டையாளர்களை ஏலத்தில் சரியாக எடுத்திருக்கிறார்கள். அந்த வீரர்களும் நல்ல ஆட்டநிலையில் இப்போதும் இருக்கிறார்கள். அடுத்து பந்து வீச்சிலும் யான்சனும் அர்ஷதீப்புமே நட்சத்திரங்கள். சஹாலும் வைஷாக்கும் தத்தம் பணிகளைச் சிறப்பாகச் செய்கிறார்கள். ஷ்ரேயாஸ் வழக்கம்போல தான் வந்துள்ள புதிய அணிக்கு தன்னம்பிக்கையையும் நிதானமும் கொடுத்துள்ளார். எந்த நிலையையும் கூலாக அணுகுகிற ‘தோனி-தன்மை’ அவரிடம் உண்டு. அடுத்தது, ஆர்.ஸி.பி – பந்து வீச்சைப் பலப்படுத்தி கடந்த ஆண்டு ஐ.பி.எல்லை வென்றார்கள். இந்த ஆண்டும் சிறப்பாக ஆரம்பித்திருக்கிறார்கள். மத்திய வரிசையிலும் பந்து வீச்சிலும் சில பிரச்சினைகள் உண்டென்றாலும் அவர்கள் இறுதிப் போட்டிக்குள் நிலைகொண்டு விடுவார்கள்.
ராஜஸ்தான்: ராஜஸ்தான் அணியிடம் அபாரமான பந்துவீச்சும் அதிரடியான இளைஞர்களும் (எப்போதும் போல) உள்ளனர். ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி துவக்க மட்டையாட்டமும் ஜுரலின் ஆட்டநிலையும் அவர்களுடைய வலிமை. சின்னச்சின்ன பலவீனங்கள் கொண்ட வீரர்களை ஆதரித்து அவர்களை மேம்படுத்த உதவி மேலெடுத்து சரியாக ஆட வைத்துத் தம் ஆயுதமாக்குவது ராஜஸ்தான் நிர்வாகத்தின் தனிச்சிறப்பு. இந்த ஆண்டு அவர்கள் ஜூரலையும் ஜெய்ஸ்வாலையும் ஆற்றுப்படுத்தி அதிரடியாக ஆட வைத்திருக்கிறார்கள். சூர்யவன்ஷியின் மட்டையாட்டத்திலும் முதிர்ச்சி தோன்றத் தொடங்கியுள்ளது. ரயான் பராக்கின் தலைமை பலருக்கும் அதிருப்தியைத் தந்துள்ளது. முக்கிய காரணம் அவர் அணி உரிமையாளரின் குடும்பத்தைச் சேர்ந்தவர், ஒரு வீரராக எந்தச் சிறப்பும் அற்றவர் (திறமையுண்டு என்றாலும் கூட) என்பது. ஒரு மட்டையாளராக அவரது சரிவு அவரது அணியை நிச்சயமாக பாதிக்கிறது. அதனாலே அவர்களைப் பார்க்கையில் இறுதிப் போட்டிக்கு வரும் எனும் நம்பிக்கை ஏற்படவில்லை. ‘கரகாட்டக்காரனில்’ வரும் கோவை சரளா பாத்திரம் போலவே இருக்கிறார்கள்.
சன் ரைசர்ஸும் கொல்கொத்தாவும்: நான்காவது இடத்தில் இருக்கும் சன் ரைசர்ஸ் அணியும் இப்படித்தான் முழுமையாக நிலைகொள்ளாமல் இருக்கிறார்கள். அண்மையில் (டிசம்பர் 2025) நடந்த மினி ஏலத்தின்போது சில அணிகள் வீரர்களைக் கொடுத்து வாங்கினார்கள். அதனால் ஏற்பட்ட நிலைமாற்றங்கள் சன் ரைசர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸும் கொல்கொத்தா, லக்னவ் போன்ற அணிகளை வெகுவாக பாதித்தன. குறிப்பாக கொல்கொத்தா அணி பத்திரானாவை வாங்குவதற்காக 18 கோடியை விட்டது அவர்களால் தேவையான மட்டையாளர்களையோ வீச்சாளர்களையோ வாங்க முடியாத நிலையை ஏற்படுத்தியது. ரஹேனேவைத் தலைவராக்கியதும், அணியில் அதிகப்படியான துவக்க மட்டையாளர்களை எடுத்ததும்கூட அவர்களைப் பின்னுக்குத் தள்ளியது.
சென்னை: ஆரம்பகட்டச் சரிவுகளுக்குப் பின்னர் சென்னை அணி சாம்ஸன், சர்பராஸ் கான், (அண்மையில் காயமுற்று விலகிய) ஆயுஷ் மாத்ரே, டெவால்ட் பிரிவிஸ் ஆகியோரின் ஓட்டங்களையும், ஓவர்ட்டன், கம்போஜ், நூர் அஹமது, அகில் ஹுசேனின் ஆட்டநிலை முன்னேற்றத்தையும் கொண்டு மீண்டு வருகிறது. இப்போது 5வது இடத்தில் இருந்தாலும் வரக்கூடிய போட்டிகளில் முன்னேறி அவர்கள் நான்காவது இடத்தைக் குறிவைப்பார்கள் என்பது என் கணிப்பு. சென்னையைப் பொறுத்தவரையில் இன்னொரு விசயம் கவனிக்கத்தக்கது: அவர்கள் கார்த்திக் ஷர்மா, பிரசாந்த் வீர் எனும் இரு வீரர்களுக்காக 14.2 கோடிகளைச் செலவழித்ததும், தோனியின் உடற்தகுதின்மையும் பெருங்குழப்பத்தை ஏற்படுத்தியது. எதிர்காலத்தை மனத்தில் வைத்து இந்த இருவரையும் (தோனி, ஜடேஜாவின் இடங்களில்) அவர்கள் எடுத்ததாகப் புரிந்துகொண்டாலும் இவ்வளவு பெரிய தொகைக்கு அவர்கள் பொருத்தம் அல்லர். கொஞ்சம் பொறுத்திருந்தால் சென்னைக்கு வரும் ஆண்டுகளில் இவர்களை விட ஸ்டிரைக் ரேட்டும் அனுபவமும் கொண்ட இளம் வீரர்களே கிடைத்திருக்கக் கூடும். அல்லது இந்த வீரர்களையே அடுத்த மினி ஏலத்தில் விட்டுவிட்டு பின்னர் குறைந்த விலைக்கு (ஒரு கோடிக்குள்) வாங்க முடியும். இந்த ஆண்டு பிளே ஆப் நிலையை அடைவதை இலக்காக்கி அடுத்தடுத்த ஆண்டுகளில் அணியை நிலைப்படுத்திவிட்டு கோப்பையை அவர்கள் அடிக்க முயல வேண்டும்.
குஜராத்தும் மும்பையும்
ஹர்த்திக் பாண்டியாவை மும்பை அணி நிர்வாகம் தன் அணிக்குத் தலைவராக்குவதற்காக குஜராத்திடம் வெளியேறி வரவைத்தது இந்த இரண்டு அணிகளுக்கும் பெரிய சரிவை ஏற்படுத்தியது. ஒரு பக்கம், ஹர்த்திக்கால் மும்பையின் நிர்வாகம், பயிற்சியாளர்கள், அணியை வைத்துக்கொண்டு பெரிய வெற்றிகளைத் தர இயலவில்லை. அவரது மட்டையாட்டத்திலும் உடற்தகுதியிலும் ஏற்பட்ட நிலைகுலைவுகளும் மும்பை அணியில் ஏற்கனவே தலைவர் தகுதி கொண்டவர்கள் இருந்ததும் உதவவில்லை. இன்னொரு பக்கம், ஹர்த்திக்கை இழந்துவிட்டு குஜராத் அடுத்து ஒரு பெரிய தவற்றைப் பண்ணியது – ஷுப்மன் கில்லைத் தலைவராக எடுத்தது. கில் ஒரு டி20 வீரராக (ஸ்டிரைக் ரேட்டைப் பொறுத்து) நிலைப்பெறவில்லை, தலைவராகவும் அனுபவம் போதவில்லை. கூடவே, அடுத்தடுத்த ஏலங்களில் சில வீரர்களை இழந்ததும் அவர்களுடைய ஆட்டம் மிலிட்டரி ஓட்டலில் இருந்து ஆள் எடுத்து சாம்பார் இட்லி செய்ய வைத்தது போலாகியது. இந்த ஆண்டும் குஜராத் 7வது இடத்தில் இருந்தாலும் அவரகள் ஆடுவதைப் பார்க்க 10வது அணி இடத்தைப் போலத்தான் இருக்கிறது.
மும்பையின் பெரிய பலவீனம் வயதாகி வரும் நட்சத்திரங்கள். அவர்களுக்கு ஒரு நல்ல அணித்தலைவரும் வியூகங்கள் வகுப்பதற்கு சிறப்பான நவீனமான பயிற்சியாளரும் வேண்டும். அடுத்து இளம் வீரர்களை அடையாளம் கண்டு வாய்ப்பு கொடுத்துப் புத்துருவாக்கம் செய்ய வேண்டும். இப்போதைக்கு அவர்களைப் பார்க்க இளம் பெண்கள் நடமாடும் தெருவில் வரிசையாக நிற்கும் குல்பி கடைக்காரர்களைப் போலுள்ளார்கள்.
கடைசியாக லக் நவ் அணி. அவர்கள் செய்த முதல் தவறு ரிஷப் பண்டைத் தலைவராக்கியதும், மிகப்பெரிய தொகைக்கு அவரை எடுத்ததும்தான். அத்தவற்றில் இருந்து அவர்கள் இன்னும் மீளவில்லை. பண்ட் ஒரு டி20 வீரராகவும் தலைவராகவும் கில்லைவிட படுமோசமானவர். அவரளவுக்குக் குழப்பமான சொதப்பலான தலைவர் ஐ.பி.எல் வரலாற்றிலேயே யாரும் கண்டிருக்க மாட்டார்கள். அவர்மீது இவ்வளவு பெரிய தொகையைக் கட்டியதும் அவர்களுடைய அணி தலையில் பெரிய கல்லைச் சுமந்துகொண்ட கடலில் குதித்த நீச்சல் வீரரைப் போலாகியது. மத்திய வரிசை, துவக்க மட்டையாட்ட வீரர்கள் சரியாக அமையவில்லை. பண்ட் டி20-இல் மட்டையாடுவது பார்க்க தென்னமரம் ஏறுபவரை விண்வெளிக் கலத்தில் ஏற்றிவிட்டதைப் போலுள்ளது. இன்னும் எப்படி டி20-இல் ஆட வேண்டும் என முடிவெடுக்கவில்லை. இந்த அணியை ஒட்டுமொத்தமாகப் பார்க்க டொனால்ட் டிரம்ப் இரானிடம் பேரம் பேசிகொண்டே அடிவாங்கிக்கொண்டே தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் உதார்விடுவதைப் போலப் பரிதாமாக உள்ளது. எல்லா ஐ.பி.எல்லில் அவர்கள் முன்னிலையிலும் இல்லை பின்னிலையிலும் இல்லை. அவர்கள் எங்குமே இல்லை.
ஆர். அபிலாஷ்
abilashchandran70@gmail.com
