அம்பலவாணன் என்னும் பெயர் தமிழ் மொழியின் தொடர் செயல்பாடுகளின் வழிவழி வந்தமைகிறது. குஞ்சிதபாதம், ரத்தினசபாபாதி, நடராஜன் போன்ற பெயர்களும் அவ்வாறே சைவ மொழி இயக்க முன்னெடுப்பில் வந்து அமைந்ததாகக் கருதப்படுகிறது. இந்தப் பெயர் வழி தொடர்ச்சியை ஆய்ந்து பின்னோக்கிச் சென்றால் ஆறாம் நூற்றாண்டுகளின் துவக்கத்தில் சைவ சமய குரவர்கள் என்றும் தற்காலத்தில் நால்வர் எனவும் அழைக்கப்படும் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் பாடல்களின் வழியே நமக்குச் சான்று கிடைக்கப் பெறுகிறது. தற்கால உதாரணங்களில் தனித்தமிழ் இயக்கம் முன்னெடுக்கப்பட்ட பிறகு தமிழ் மொழியில் வழங்கப்பெறும் பெயர்கள் முற்றிலும் மாறுபட்டு அமைகிறது. குறிப்பாக, திராவிட இயக்க முன்னெடுப்புகளில் அன்பழகன், மதியழகன், கலைச்செல்வி, தேன்மொழி, மணிமொழி என்றெல்லாம் பெயர்கள் புழங்கி வருகின்றன. இக்காலகட்டத்தில் கடவுள் பெயர்கள் என வரையறுக்கப்பட்ட பெயர்களுக்கு மாற்றாக இயற்கை அல்லது தொன்ம கதாபாத்திரங்களின் பெயர்களை குழந்தைகளுக்குச் சூட்டுவது சமூக வழக்கமாக மாறி வந்திருக்கிறது. இவ்வழக்கில் அம்பலவாணன் தன் மகளுக்கு வெண்ணிலா எனப் பெயர் சூட்டுகிறார்.
வந்தவாசி பல பெயர்களால் அழைக்கப்பட்டிருந்தாலும், முதல் இரண்டாம் நூற்றாண்டுகளில் பௌத்த சமண குரவர்களால் கொண்டாடப்பட்ட பிரதேசமென அதன் எச்சங்கள் வழியே அறிகிறோம். 63 என்கிற சமண தீர்த்தங்கரர்களின் எண்ணிக்கையையே பிற்காலத்தில் வந்த சேக்கிழார் எடுத்துக் கையாண்டதாக மெய்ப்பிக்கப்படாத ஒரு கூற்றும் உண்டு. பிற்காலங்களில் மொழி வழி நின்றும் மத செயல்பாடுகளில் இருந்தும் வழிபாடு, கலாச்சாரம், கலை, அரசியல் சார்ந்து முன்னெடுக்கப்பட்ட வழியே மக்கள் தங்களைத் தகவமைத்துக் கொண்டதின் போக்கில் வைணவமும் சைவமும் தங்கிப் போனது. அவ்வையார், காக்கைப்பாடினியார், காரைக்கால் அம்மையார், ஆண்டாள் நாச்சியார் என பெண்பாற் புலவர்கள் தற்காலம் வரை பல உதாரணங்களைச் சொல்லிச் செல்லலாம்.
தற்காலம் என்பதை கலை மறுமலர்ச்சிக் காலத்திற்கு அடுத்து வந்த, முதலாம், இரண்டாம் உலகப் போர்களுக்குப் பின்பான தொழிற்புரட்சிக்குப் பின்பு நவீனம் தாண்டிய காலத்தைக் குறிக்கலாம். தமிழ் செம்மொழியாக்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்குப்பின், வந்தவாசியைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர், எழுத்தாளர் அ.வெண்ணிலா ஒரு கற்பனை கலந்த யதார்த்த வரலாற்றுப் பின்புலம் கொண்ட புதினத்துடன் வந்திருக்கிறார். கங்காபுரம் நாவல் சோழ ஆட்சியின் பின்புலத்தில் பெரிதும் பேசப்படாத அக மனவெளியை ஆய்ந்து ஆதாரங்களுடன் எழுதிச் சென்றிருக்கிறது.
520 பக்கங்களைக் கொண்ட புதினம் மேற்சொன்ன அனைத்து வகைமைகளையும் குறுக்குவெட்டாகக் கேள்வி கேட்கிறது. தன்போக்கில் இயல்பாய், மனவெளியின் சொற்களாய் கட்டமைத்தப் புதினத்திற்கு தென்னிந்திய நிலப்பரப்பில் இன்றும் தொக்கி நிற்கும் வரலாற்றுச் சான்றுகள் ஆதாரமாய்க் காட்டப்படுகின்றன. வீரமா தேவி, ராஜேந்திரன், ராஜராஜன், சர்வசிவ பண்டிதர், மூவேந்த வேளான், சின்ன குந்தவை, பரவை நங்கை, வானவன் மாதேவி போன்ற கதாபாத்திரங்கள் நமக்குத் தொன்மங்களில் இருந்து கிடைக்கப் பெற்றப் பெயர்களின் அடுக்குமுறை. நாவலை வாசிக்க நமக்கு வரலாறு தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு கதையை எழுதுவதற்கு நாவலாசிரியருக்கு ஒரு சொல் கிடைத்தால் போதும் என்கிற நம்பிக்கையை அ.வெண்ணிலாவும் பெற்றிருக்கிறார். அப்படியான பெயர்ச் சொல்தான் ராஜேந்திரன். நாவலாசிரியர் புதிதாக ஒரு செய்தியை சொல்வதற்காகவோ, வரலாற்றை மீட்டெடுப்பதற்காகவோ இந்த நாவலை எழுதிச் செல்லவில்லை. இளமைக் காலம் தொட்டு, தொடர் செயல்பாடுகளின் வழி கலை வாழ்வை முன்னெடுத்த ஆசிரியர் தன்னுடைய மனவெளியை மொழியில் கையாண்டு பார்த்திருக்கிறார்.
தமிழின் தொன்மையான கதையாடல்களாகப் பார்க்கப்படும் விக்ரமாதித்தியன் கதை போலவோ, பஞ்சதந்திரக் கதைகளைப் போலவோ, பெரிய எழுத்துக் கதைகளைப் போலவோ இந்த நாவல் நீதிபோதனை செய்யவில்லை. நாவலை ஒரு வாசகனாக வாசிக்க எனக்கு மிகுந்த உற்சாகம் தந்தது. ஒவ்வொரு அத்தியாயமும் புதிது புதிதான காட்சிகளை என்னுள்ளே விரித்துச் சென்றன.
கங்காபுரம் ராஜராஜ சோழனுக்குப் பிறகு, ஆட்சிக்கு வந்த ராஜேந்திர சோழனின் அகவெளிப் பயணம் என்று குறுக்கிப் பார்க்க முடியவில்லை. தமிழ் நிலப்பரப்பில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை என்பது விவசாயம் சார்ந்த வேளாண் இனக் குழுக்களிடம் தொன்றுதொட்டு வந்த கலாச்சார முறைமைதான். அவ்வாறான கூட்டுக் குடும்பச் செயல்பாடுகளில் எழும் மன எழுச்சியின் பிரதிபலிப்பை இந்நாவலின் இரண்டாம் படிநிலையில் காண முடிகிறது. அதுவே இந்நாவலைத் தற்கால நாவல் என வகைப்படுத்த எனக்குச் சான்றாக அமைகிறது.
பெருங்கற்காலம், கற்காலம், உலோகக் காலம் தொட்டு இந்நாவலாசிரியர் வாழும் வந்தவாசிப் பிரதேசத்தில் கிடைக்கப் பெற்ற தொன்மச் சான்றுகளுள் ஒன்றான கீழ்வாளை குகை ஓவியங்களில் கூட்டுக் குழு இயக்கச் செயல்பாட்டு ஓவியங்களைக் காண முடியும். ஒன்று, வேளாண் குழுக்கள். மற்றொன்று வேட்டை குழுக்கள். இதில் ஆசிரியரின் வாழ்வியல் சூழல் வேளாண் மனநிலையை கொண்டு அமையப் பெற்றதால், வேளாண் கலை, கலாச்சார வாழ்வியலை சார்ந்து நாவலாசிரியர், கங்காபுரத்தை எழுதிச் சென்றிருக்கிறார். கங்காபுரம், வேளாண் இனக்குழுவின் கூட்டுக் கலாச்சார முறைமையை உயர்த்திப் பிடித்து அதன் அகமன வாழ்வியலைப் பேச முனைகிறது.
கங்காபுரம் சைவ மதத்தின் எழுச்சிமிக்க காலமான பத்தாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தையும் பதினொன்றாம் நூற்றாண்டின் துவக்கக் காலத்தையும் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. கண்கொண்டு பார்க்கும் சான்றாக, தற்காலத்தில் தஞ்சை பெரிய கோயில் அமைந்திருக்கிறது. அதன் பிரதிபலிப்பாக கங்கை கொண்ட சோழபுரத்தை சொல்லலாம். இவ்வகைமையைத் தொடர் செயல்பாடுகள், கூட்டுக் குழு மேலாண்மை போன்றவற்றிற்குச் சான்றாக எடுத்துக் கொள்கிறேன். மராட்டியர், நாயக்கர், ஐரோப்பியர் எனப் பலரும் தஞ்சைப் பிரதேசத்தை ஆட்சி செய்து வந்த நாட்களில், கட்டடக் கலைக்குப் பெரும் சான்றாக இருக்கும் தஞ்சை பெரிய கோயில் பல மாற்றங்களை எதிர்கொண்டாலும், அதன் அடிப்படையும் தத்துவமும் மாற்றியமைக்கப்படாதது போலவே, இன்றைய மக்களின் வாழ்வியலும் கலாச்சாரமும் காலத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டிருந்தாலும் அதன் அடிப்படை மாறவில்லை என்ற புள்ளியில் இருந்து இந்நாவலின் கதையாடலை நாம் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்.
சைவ திருக்கோயில்கள், வழிபாட்டு முறை, திருவிழா, விக்ரகம் என இன்று பாவனையாகப் பின்பற்றப்பட்டு வரும் மரபின் தொடர்ச்சி, நம்முடைய பார்வைக்கு அவை வாழ்வுக்கு வெளியே நிகழும் நிகழ்த்துக் கலையாகத் தோன்றுகிறது. இவைகளைப் பத்து நூற்றாண்டுகளுக்குப் பின்னோக்கி நகர்த்தினால் அன்றைய மக்களின் வாழ்வோடு நேரடியான தொடர்பைக் கொண்டிருந்ததற்கான ஆதாரத்தோடு இந்நாவல் நமக்குச் சில செய்திகளைச் சொல்கிறது. வேளாண் உற்பத்தி, நீதி, நிர்வாகம், அரசியல் அமைப்பு முறை போன்ற செய்திகள்தாம் அவை. இச்செய்திகளைச் சொல்வதின்மூலம், நாவலாசிரியர் எள்முனையளவும் தற்கால வாழ்வியலைக் கேலி பேசவோ, நம்பிக்கையற்றுப் போகவோ செய்யவில்லை. சமகால முன்னெடுப்புகளை பிற்போக்குத்தனமான வாதங்களுக்கு வலுசேர்ப்பதாகவும் செய்துவிடவில்லை. மாறாக, முற்காலத்தின் கட்டமைப்புகளின் ஜனநாயகத்தன்மையை ஆய்ந்து அதன் கலாப்பூர்வமான செயல்பாட்டில் நடத்தப்பட்ட நிர்வாக முறைமையை எடுத்துக்காட்டி, தற்கால அறிவியல்பூர்வமான உலகத்தின் நியாயங்களை நடத்திச் செல்வதற்கான பாதையைக் கண்டறிய முற்பட்டிருக்கிறார். நாவலில் வரும் பெரும்பாலான உரையாடல்கள் சமகால மொழியில் எழுதப்பட்டிருப்பது நாவலாசிரியருக்கு மக்கள் கலைப்போக்குகளின் மீது இருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது.
தற்கால கலைப்போக்குகள் எளிய சொற்களைக் கொண்ட உரையாடலை சாத்தியப்படுத்தி, இரண்டாம் மூன்றாம் வாசிப்பில் அதன் கலைத்தன்மையைக் கண்டுணர்வதாக இருப்பதுவே. கங்காபுரம் அதைச் செய்திருப்பதாக நான் நம்புகிறேன். கங்காபுரத்தின் மூன்று புள்ளிகள் என்பன வீரமா தேவி, ராஜேந்திரன், ராஜராஜன் எனக் கொண்டால், இப்புள்ளிகள் ஒருங்கமைந்திருப்பது அடிப்படையில் மக்கள் நலனே. பாதுகாப்பு, பொருளாதாரம், நீதி இம்மூன்றும் பிரதானமானவை. இக்கதாபாத்திரங்கள் முன்னெடுத்த மூன்று முழக்கங்களாக இவைகளைச் சொல்லலாம். இவற்றை நிறைவேற்ற கையாண்ட வழியென சைவ மதக் கோட்பாட்டை சொல்லலாம். கட்டிடம், வெளி, ஓசை ஆகியன முக்கியப் பங்காற்றுபவை. ஓசை இந்நாவலின் முதல் அத்தியாயத்திலேயே கேட்கத் துவங்கிவிடுகிறது. ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஓர் ஒழுங்கமைவு அல்லது சுவரம் பிரிக்கப்பட்டிருப்பதை என்னால் உணர முடிகிறது. ஒவ்வொரு மனநிலைக்கும் நம்மை உடனுக்குடன் மாற்றம் பெறச் செய்யத்தக்க ஓசை, இவ்வத்தியாயங்களில் கேட்கிறது. தொடர் வாசிப்பில் இந்நாவல் வரலாற்றை முன்னிறுத்து வதைவிட வாசகனை உள்ளி ழுத்து பல்வேறு கோணங்களில் அவனுடைய அனுபவங்களை நினைவூட்டிச் செல்வது வாசகன் தன்னை இந்நாவலில் கரைத்துக் கொள்வதற்கு வழிவகுக்கிறது.
தற்கால அரசியல் போக்குகளைக் கிண்டலடிப்பதாகவும் இந்நாவல் அமைந்திருப்பதாக நினைத்துக் கொள்வதற்கும் இடமிருக்கிறது. குறிப்பாக ராஜேந்திரனைத் தற்கால அரசியலில் பேசப்படும் வாரிசு அரசியலின் முன்னோடி நாயகனாக உருவகப்படுத்திக் கொள்ளவும் முடியும். இவ்வாறு பல சாத்தியங்களை இந்நாவல் தன்னுள்ளே பொதித்து வைத்திருக்கிறது. நாவலாசிரியரின் வாழ்வு, அறுபதாண்டுகளுக்கு முன்பு முன்னெடுக்கப்பட்ட திராவிட சித்தாந்த அடிப்படையில் அமைந்திருப்பதால் இந்நாவலின் அநேகப் பகுதிகளை நாம் திராவிட அரசியல் போக்குகளைக் கொண்டு, புரிந்து கொள்வதைத் தவிர்க்க முடியவில்லை. நாவலின் கதாபாத்திரங்களுக்கான பெயர்கள் நீக்கப்பட்டு விட்டால், சரித்திர சட்டகத்துக்குள்ளிருந்து வெளிவந்த பின்நவீனத்துவ நாவலாக மாறும் தன்மையும் பெற்றிருக்கிறது. உதாரணத்திற்கு, ராஜராஜ சோழ பெருந்தச்சன் என்ற பெயரை அம்பலவாணன் என்று மாற்றினால் என்ன தொனிக்குமோ, அதுபோல் தனித்தமிழ் இயக்கத்தில் அன்பழகன் என்று மாற்றினால் என்ன தொனிக்கும் அல்லது இன்றைய ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து வந்த கிரிக்கெட் வீர்ர் தோனியின் பெயரைச் சூட்டினால் இந்தக் கதை என்னென்ன மாற்றங்களைப் பெரும் என்ற நுட்பத்தில்தான் இந்நாவலின் வெற்றி அடங்கியிருக்கிறது.
இந்நாவலின் கதாபாத்திரத்தில் பெண்பாலாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் வீரமா தேவியை, ஆண்பாலான ராஜேந்திரனாக மாற்றி வாசித்துப் பார்த்தேன். ராஜேந்திரன் பெண்தன்மை மிகுந்த ஆண்பாலாகவும், வீரமா தேவி ஆண்தன்மை மிகுந்த பெண்பாலாகவும் காணக்கிடைத்தார்கள். நாவல் முழுவதும் இருவரின் செயல்பாடுகளும் மொழியும் ஒன்றேதான். மக்கள் நலன் கொள்கை வழி என்பது மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுத்த பாத்திரப் படைப்புகள் இவை இரண்டும். கண்ணாடியின் பிரதிபலிப்பு இடவலமாக மாற்றிக் காண்பிப்பதைத் தாண்டி, வேறு எந்த ஓர் உருமாற்றத்தையும் தந்துவிடுவதில்லை. போலவே ராஜேந்திரனும் வீரமா தேவியும் இந்நாவலில் உருமாற்றம் கொண்ட ஒற்றைப் பிரதிபலிப்புகள்தான். ஒவ்வொரு கதாபாத்திரமும் கதையை நகர்த்துவதைத் தாண்டி, நம் கண்முன்னே காணும் வாழ்வை நினைவூட்டி செல்வதுதான் இந்நாவலின் பலம்.
ராஜேந்திர சோழனின் மக்கள் நலன் சார்ந்த சிந்தனையை நாவலாசிரியர் தலைநகர் மாற்றம் பற்றிய ராஜேந்திரனின் பிரகடனத்தில் இருந்து இப்படி சொல்கிறார். பக்.337; “காஞ்சிபுரத்தில் நாம் வலிமையாக இருந்தால் எதிரிகள் நம்மை நெருங்கவே அஞ்சுவார்கள். மக்களின் நலன் கருதி நான் காஞ்சிபுரத்தையும் தலைநகராகத் தேர்வு செய்யவில்லை.” இங்கு மக்கள் நலன் என்பதை ராஜேந்திரன் சொல்வதாக ஆசிரியர் எழுதுகிறார். பக்.338; “கட்டாந்தரையைத்தான் நான் தேர்வு செய்துள்ளேன். புகழின் உச்சியில் இருக்கும் ஓரிடத்திற்கு, நாம் புகழை உண்டாக்கினால், அந்த நகரத்திற்குக் கூடுதல் பெருமை, அவ்வளவுதான்” என்று சொல்லிவிட்டு ஏறக்குறைய பாலைவனமாகக் காணப்படும் சோழ ஆட்சிப் பிரதேசத்தில் நடுநாயகமாக விளங்கும் ஒரு பகுதியை செழுமைப்படுத்தி, மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதையே மக்கள் நலன் என ராஜேந்திரன் நினைப்பதாகச் சொல்லும் இடம்தான் இந்நாவலின் மையப்புள்ளி. ராஜேந்திரனின் இந்த எண்ண ஓட்டம், கதையில் சோழ கங்கத்தை வெட்டுவதற்கு வரும் மூதாட்டி சொல்லும் முழக்கத்தில் இருந்தே அந்தக் காலகட்டத்தின் மக்களின் எண்ண ஓட்டம், ஒத்துழைப்பு வழியே ராஜேந்திரன் முன்னெடுத்த செயல்பாட்டின் நியாயத்தை உணர்த்துகிறது. நாவல் புதிய தலைநகர் நிர்மாணத்தை பேசுவதுபோல, ஆட்சியாளனின் அரசாட்சியை முன்னெடுக்கையில் தற்கால ஆட்சியாளர்களின் சிந்தனையைக் கேள்விக்கு உட்படுத்துகிறது. இந்தியாவின் தலைநகரம் பலமுறை மாற்றியமைக்கப்பட்டு இருந்தாலும், உதாரணத்திற்கு அவுரங்காபாத், புதுடெல்லி, மால்டா, கொல்கத்தா, மும்பை என பலவும் மாற்றத்திற்கு உட்பட்டு இருந்தாலும் வியாபார நிமித்தமாகவோ, பாதுகாப்புக்காகவோ, போக்குவரத்துக்காகவோ மாற்றம் பெற்று வந்திருப்பதே அன்றி, இதுபோல மக்கள் நலன் என்ற சிந்தனையை ராஜேந்திரனுக்குப் பிறகான ஆட்சியாளர்கள் பெற்று இருந்ததற்கான சான்றுகள் நம்மிடமில்லை, திருச்சிராப்பள்ளியை தமிழகத்தின் தலைநகராக மாற்ற முனைந்த செய்தியைத் தவிர. இந்நாவலின் பெயரான கங்காபுரம் இப்படியான சிந்தனையை வலியுறுத்துவதற்காகவே வைக்கப்பட்டுள்ளது என எனக்குத் தோன்றுகிறது.
ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில், நீதிக்கட்சி உருவாக்கம் பெற்ற பிறகு இருந்த சிந்தனைப் போக்கில் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் வலுப்பெறுகிறது. நாத்திகம் பேசுபவர்கள் பரவலாகக் காணப்பட்ட காலத்தில் திராவிட இயக்கச் சிந்தனை வலுப்பெற்று ஆட்சிக்கு வருகிறது. இக்காலகட்டத்தில் கடவுள் மறுப்பு என்பது பெரும் தாக்கத்தை விதைத்தது. கடந்த இரு பத்தாண்டுகளில் மீண்டும் சமயம் சார்ந்த கருத்துக்கள் வலுப்பெற்று மொழி பிரதானமாக்கப்பட்டு கலை வழி வாழ்தல், மொழி வழி வாழ்தல் என உருமாற்றம் அடைந்து கொண்டிருக்கும் நேரத்தில் கங்காபுரம் அதற்கான ஆதாரங்களை சைவ சமய வழி நின்று ஆய்ந்து செல்வதை வாசிப்பில் உணர முடிகிறது.
கங்காபுரம் நாவல் சமத்துவம் பேச முற்படும் பொழுதுகளில் சமத்துவம் நிலவிய ஆட்சியை மேற்கோள் காட்டுகிறது. இதில் கோவில் நிர்வாகத்தைச் சொல்லும் அத்தியாயங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. ஆட்சியாளர்களை மக்களும், ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் இடைப்பட்ட பணியாளர்களும் கேள்வி கேட்க முடியும் என்பதை இந்நாவல் விவரிக்கும் பாங்கு, தற்கால அரசியல் சூழலில் மக்கள் பிரதிநிதிகளை, மக்கள் கேள்வி கேட்க உந்துதலைத் தருவதாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும் வழக்கு, மரபு, சட்டம், நீதி ஆகியவற்றை எடுத்துரைத்து இடித்துரைக்கும் பாங்காக எடுத்துச் சென்றிருப்பது இந்நாவலின் தன்மையை அல்லது கட்டமைவை மக்கள் நலன், வேளாண் இனக்குழு போன்ற தத்துவ அடிப்படையில் பெரிதும் நம்பிக்கை வைத்திருப்பதாகத் தெரிகிறது.
பரவை நங்கை மதுராந்தகனின் அணுக்கி ஆவாள். தான் சேர்த்த செல்வத்தின் பகுதியை அல்லது முழுமையையும் மக்களின் இடர் களையும் பொருட்டு சர்வமான்யமாக கொடுக்கும் பண்பைக் கொண்டிருந்தாள் என்றால், மதுராந்தக தேவரின் ஆட்சியாண்டுகளில் மக்களும் அவ்வாறான பண்பினைக் கொண்டிருந்தார்கள் எனக் கொள்ளலாம். சான்றாக பக்.110, 111இல் தேர்க்காலில் சிக்கி உயிர்நீத்த குடும்பங்களுக்கு பரவை நங்கை செய்த தானம் குறிப்பிடும்படியான சான்றாகும். இப்படி நங்கை துவங்கி வீரமா தேவி, குந்தவை, கன்னர தேவி என அனைத்து பெண் கதாபாத்திரங்களும் மக்கள் நலனில் அக்கறை கொண்டு முழுநேர ஊழியம் புரிந்ததற்கான சான்றுகளை இந்நாவல் விவரிக்கிறது. இந்நாவல் பெரிதும் முன்னிறுத்துவது குடிகளின் மேன்மையையே. வேளாண் இனக்குழுவின் கலாச்சாரத்தையே தூக்கிப் பிடிக்கிறது.
இரண்ய கர்ப்பம் நுழையும் லோக மாதேவியின் ஒப்புதல் வாக்குமூலத்தில் பெரிய முரண்பாட்டை நாம் பார்க்கிறோம். வாரிசு அல்லது அரசியல் ஆட்சியதிகாரம் என்ற புள்ளியின் அகவெளி அகங்காரம் தலைதூக்க, லோக மாதேவியின் போக்கு மதுராந்தக தேவனுக்கு எதிராய் இருந்ததாக உருவகம் கொண்டு, மன்னிப்புக் கோரும் படலத்தில் தலைநகரை மாற்றிவிட வேண்டாம் என்ற கோரிக்கையும் புதைந்திருப்பதுதான் அந்த முரண்பாடு.
லோக மாதேவி ராஜேந்திரனையும் ராஜராஜனையும் போன்றோ, மற்ற பெண் கதாபாத்திரங்களைப் போன்றோ இல்லாமல் தன் இயல்பில் தற்கால, வாரிசு குறைபாடுடைய பெண்களின் அகவெளியை பிரதிபலிக்கும் பிம்பமாகவே பார்க்கிறேன். இப்பாத்திரப் படைப்பு நாவலின் அடிக்கல் எனக் கொண்டு நாவலை வாசித்தால் மேற்சொன்ன கட்டுமானங்கள் உறுதிப்படும். தேசநலன், மக்கள் விருப்பம் என்றெல்லாம் சிந்தித்த காலகட்டத்தில் லோக மாதேவி தன்னுடைய நலன், அதிகாரம் என்று சிந்தித்ததின் விளைவே மதுராந்தகனின் இடர் என நம்பியதை இந்நாவல் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்நாவல் மூன்று நோக்கங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. ஒன்று, ராஜராஜனின் கனவுக் கட்டடம். இரண்டு, மதுராந்தக தேவனின் அகமன வெளிப் பயணம். மூன்று, சோழ ஆட்சிக் காலத்தின் குடிகளின் வாழ்வியல் முறைமை. இம்மூன்றையும் மதுராந்தக தேவன் என்ற புள்ளியில் கட்டினால் ராஜ்ஜியக் கட்டுமானம், மைய பிம்பக் கட்டுமானம், சோழ ஆட்சி முறைமை என்பன விளங்கும். இப்பார்வையின் வழி ராஜராஜனின் மறைவுக்குப் பின் ராஜேந்திரனின் எழுச்சி, வெற்றி, வீரம், செல்வம் என்பனவெல்லாம் விவரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. ராஜேந்திரன் என அழைக்கப்பட்ட மதுராந்தக தேவனின் அகவெளியை ஆசிரியர் தேடிப்போவது வரலாற்றின் எழுதப்படாத பக்கங்களை, எழுதிப் பார்ப்பதற்காகத்தான் என எனக்குத் தோன்றுகிறது.
தமிழ்நாட்டில் இன்றும் நம்பப்படும் சித்தர் வாழ்வு முறையை ஒத்த கதாபாத்திரமாக சதுரத்தடிகளை ஆசிரியர் உருவாக்கி இருப்பது இக்கதைக்குப் பெரிதும் துணை நிற்கிறது. புனைவை, ஒரு மாய யதார்த்தவாதப் போக்கிற்கு இட்டுச் செல்கிறது. அதேசமயம், கால இயந்திரத்தில் ஏற்றி முன்னும் பின்னுமாக நகர்த்தவும் செய்கிறது. வேறு பல கதாபாத்திரங்களும் முறையே கருவூர் தேவர், சர்வசிவ பண்டிதர், ஓங்கார சிவன், திருவிசலூரான் போன்றவர்களின் பங்களிப்பு பொருத்தமான இடங்களில் சேர்த்தும் வெட்டியும் அழகாகக் கையாண்டிருக்கிறார். மாபெரும் சோழ சாம்ராஜ்ஜியத்தின் அடிநாதமாக இருந்த சைவ சமயக் கோட்பாட்டின் எழுச்சியை ஆதாரத்தோடு எழுதிச் சென்றிருக்கும் இந்நாவல் வரலாற்று நாவல்களில் குறிப்பிடப்படும் இடத்தில் இருக்கிறது. இந்த அனுமானம் எங்கிருந்து கிளைத்தது என்று தேடினால், மிகக் குறைவான நாவல்களே வரலாற்று ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. அவற்றுள் கங்காபுரம் மிக முக்கியமாக கவனிக்கப்படத்தக்க இடத்தில் இருப்பதை மறுக்க முடியவில்லை. தமிழில் ஏராளமான கதைகள் வரப்பெற்றாலும் இக்கதை குழப்பமான அரசியல் சூழல் நிலவும் தற்காலத்திற்குத் தேவையான ஒன்றாக இருக்கிறது. உலக மயமாக்கல், இணையத்தின் புரட்சி, கருத்துச் சுதந்திரத்திற்கு எதிர்நிலை, இடைக்கால அரசின் ஸ்திரத்தன்மையின்மை போன்ற குழப்பங்களுக்கு நடுவே இந்நாவல் முக்கியத்துவம் பெறுகிறது.
உணவு, உடை, கலாச்சாரம் போன்றவற்றை விரிவாக அலசும் கங்காபுரம் சமகாலத்தின் பதிவாகவே படித்து முடித்தபின் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கங்காபுரம் சாதியப் படிநிலைகளைத் தீவிரமாக அலசி, ஓங்கார சிவன் வழியாகப் புரட்சி பேசுகிறது. பக் எண் 248; “தாங்கள் ஏதோ நீதி வழங்குவதாகச் சொன்னீர்களே? அதைச் சரியாக வழங்கப் பாருங்கள். ஒரு வாரம் உங்களுக்கு அவகாசம் அல்லது செப்புப் பட்டயம் உடைத்தெறியப்படும். கால்நடைகளுக்கு என்னென்ன காயங்களோ, அந்தக் காயங்கள் அதைச் செய்தவர்களுக்கும். இதில் எந்த மாற்றமுமில்லை.” சிவனின் குரலில் ரௌத்ரம் தாண்டவமாடியது என இன்றும் பொருந்தக் கூடிய சமூக கேடுகளை கங்காபுரம் விவாதிக்கிறது.
பூமணியின் ‘பிறகு’ நாவல் 1976இல் வெளிவந்தது. இந்நாவலை தமிழின் தலித் இலக்கிய வகைமையின் முன்னோடி எனச் சொல்லலாம். வட்டாரம் சார்ந்த ஓர் இனக்குழுவின்(பள்ளர்) உட்குழுப் பிரிவை ‘அஞ்ஞாடி’ நாவல் வழியாக அவர் பிரித்துக் கையாண்டிருப்பார். அசோகமித்திரன் எழுதிய நாவல்கள் நகர்ப்புறம் சார்ந்த வகைமையில் சொல்லலாம். சோஷலிச யதார்த்தவாதம் அல்லது முற்போக்கு இடதுசாரி இலக்கியப் போக்கு என்பதை டி.செல்வராஜின் ‘தோல்’ நாவலும் தொ.மு.சி. ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்’ நாவலையும் கொண்டு புரிந்து கொள்ளலாம். தமிழில் ஜெயமோகனின் நாவல்கள் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் அளவிட முடியாதது. ஈழ எழுத்தாளர்கள் சொல்லுவதுபோல சிலப்பதிகாரமே தமிழின் முதல் உரைநடை என்ற வாதமும் பரிசீலிக்க வேண்டியதுதான். கோட்பாடுகளுக்கு ஒன்று என்ற கணக்கில் எம்.ஜி.சுரேஷ் எழுதிய நாவல்கள், பின்நவீனத்துவப் போக்கிற்கு கோணங்கி, பா.வெங்கடேசன் என உதாரணங்களை அடுக்கலாம். ஜெயமோகன் வகைமை என்பது ஜெயமோகன் வகைமைதான். கோட்பாடும் காலமும் வடிவமும் விமர்சகனின் வசதிக்காகத்தானே அன்றி, வாசகனுக்கானது அல்ல. படைப்பின் சுதந்திரம் படைப்பாளனிடம் முழுமையாக சரணாகதி அடைந்த எழுத்தின் வகைமை படைப்பாளனைக் கொண்டே அழைக்கப்படுகிறது. அப்படித்தான் ஜெயமோகன் வகைமை என வகை பிரிக்கப்படுகிறது. இதுபோல கங்காபுரம் நாவலின் பல அத்தியாயங்கள் பல்வேறு இனக் குழுக்களின் ஆதி அரசியலைப் பேசிச் செல்வதால், அதன் காலமும் வடிவமும் முன்னும் பின்னும் நகர்த்தப்பட்டு பெரும் சக்கரமென சுழன்று தற்காலப் பாதையில் ஓடுகிறது.
கங்காபுரம் நேர்க்கோட்டு கதை சொல்லல் முறையைப் பின்பற்றி வரலாற்றின் தகவல் ஆதார பிம்பங்களின் வழியே தனக்கான காலத்தைத் தீர்மானித்து குறிப்பாக செம்பியன் மாதேவி இறந்து ஒன்பது ஆண்டுகளில் துவங்கி மதுராந்தக தேவர் என்கிற ராஜேந்திரன் இறந்த ஆண்டோடு முடிவு பெறுகிறது. இடையே ராஜராஜனின் மரணமும் புதிய ஊர் அமைப்பிற்கான சிந்தனையின் துவக்கமும் இந்நாவலை மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கின்றன. இப்பகுதிகளை இணைக்கும் ஒற்றைக் கண்ணியாய் வீரமா தேவியும் ராஜேந்திரனும் செயல்படுகிறார்கள். துணைக்கு காலத்தை முன்னும் பின்னும் நகர்த்த சதுரத்தடிகள் பயன்பட்டிருக்கிறார். கங்காபுரத்தின் நாயகனாக நாம் ஊர் அமைப்பை பிரதானமாக்கினால் சோழர் ஆட்சியாண்டுகளில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த சாவாமூவா ஆடுகளில் இருந்து துவங்கி சக்கிலியர், ஈழவர் போன்ற சாதியப் படிநிலைகளுக்கு ஏற்ப நிலம் பிரித்துக் கொடுக்கப்படும் முறைமை வரை சான்றோடு அறிந்து கொள்ள முடியும். ராஜராஜனை மைய பிம்பக் கட்டமைப்பாகக் கொண்டு ராஜேந்திர சோழனை வெளிவட்டமாகவும் கருவூர் தேவர், வீர மாதேவி, சர்வசிவ பண்டிதர், குந்தவை ஆகியோரை நான்கு திசைகளாகக் கொண்டு, எட்டுக் கதாபாத்திரங்களாக, எண்திசைப் பாதுகாவலர்களாக உருப்பெற வைக்கும் யுக்தி, வரலாற்று நாவல் உலகில் புதுமையானது. வாசகரிடையே நேரடியாக ராஜ்ஜிய சூழ்ச்சியை எழுதிச் சொல்லாமல் உள்மடிப்புகளில் அமிழ்த்தி வைக்கப்பட்டிருக்கும் பாங்கு வாசகனை இன்னொரு முறை படிக்கத் தூண்டுவதற்கான யுக்தியாகவே நான் பார்க்கிறேன். கங்காபுரத்தின் பல்வேறு தகவல்கள், கல்வெட்டு ஆதாரங்கள், செப்புப் பட்டயங்கள் காட்சி வழி ஆதாரங்களோடு நேரடியாகத் தொடர்புடையவை. அவைகளை ஆசிரியர் நட்சத்திரக் குறியிட்டு கீழே விளக்கம் அளித்திருப்பது ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறது. புனைவிலக்கியங்கள் ஆதாரங்களை சொல்லவேண்டிய அவசியம் இல்லை, எனினும் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களில் இருந்து புனைவைக் கட்டமைத்திருப்பதின் வடிவம், கங்காபுரத்தின் சிறப்புகளில் ஒன்று எனச் சொல்லலாம். அ.வெண்ணிலா தமிழில் கவிதைகளை எழுதிப் பழகியவர். உரைநடைக்குப் புதியவர் அல்ல என்பதை புனைவில் நிரூபித்திருக்கிறார். ஆசிரியரும் அவர்தன் வாழ்வியலும் அறிந்த வாசகனுக்குப் புனைவில் வீர மாதேவி கதாபாத்திரத்திற்கு வெண்ணிலாவின் பெயரை சூட்டிப் பார்ப்பதில் ஆர்வம் ஏற்படும் என்பதை மறுக்க முடியாது. அவ்வாறு இக்கதையின் களம், இக்கதையின் காலம், இக்கதையின் வடிவம், தனக்கான புதிய பாதையைத் தீர்மானித்து, இதுவரை மையக் கட்டமைவாக இருந்து வந்த அனைத்து வரலாற்று நாவல் பிம்பங்களில் இருந்தும் வெளியேறி, புதிதான ஒன்றை அல்லது ஒரு போக்கை உருவாக்க முயலலாம் என்று கருதுகிறேன்.
ஒவ்வொரு மொழிக்கும் வலிமை சேர்க்க ஒவ்வொரு காலகட்டத்தின் சூழல் உதவி செய்கிறது. தற்காத்தல், புனரமைத்தல், மீட்டுருவாக்கல், புதுப்பித்துக் கொள்ளுதல் போன்றவைகளின் வழியே மொழி வளம் பெறுகிறது. போலவே மொழியின் வளமைக்கு படைப்பாளர்களும் வளமை சேர்க்கிறார்கள். இக்காலத்தைத் தெளிவாக என்னால் பகுத்தாய்ந்து பார்க்க முடியாவிட்டாலும் வரும் காலத்தில் இக்காலப் படைப்புகளின் வகைமைகள் மேம்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்படலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அது கங்காபுரம் வாசிப்பில் எனக்குக் கிடைத்தது.
கங்காபுரம் (நாவல்)
அ.வெண்ணிலா
அகநி வெளியீடு,
3, பாடசாலை தெரு,
அம்மையப்பட்டு,
வந்தவாசி – 604408
பக்கம் : 520
விலை : ரூ.450