“கலையும் அரசியலும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்”-
எம்.ஜி.ஆர்.(எம்.ஜி.ஆர் பொன்மொழிகள்தொகுப்பு: கலைச்செல்வன்)
நவீனத்துவம் என்பது மேற்கத்திய சமூகங்களின் தொழிற்புரட்சியை ஒட்டி உருவான ஒன்று. அதுவரையிலான மனித வாழ்வு செவ்வியல் என்று அழைக்கப்படுகிற தங்களது மரபான அல்லது பழமையான வாழ்வைவிட்டுப் புதியதொரு தொழிற்சமூகத்தின் உற்பத்தி முறைக்கேற்ப தகவமைத்துக்கொள்ளப்பட்டது. தொழில் வளர்ச்சி அடையாத ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் காலனிய எஜமானர்களான மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் ஆட்சிகள் வழியாக நவீனத்துவம் அறிமுகம் ஆகிறது. குறிப்பாக இந்தியச் சமூகத்தில் ஆங்கிலேயக் கல்வியின் அறிமுகத்தின் மூலம் நவீனத்துவம் பரவத் துவங்குகிறது. குறிப்பாக, ஆங்கிலக் கல்வி கற்ற ஒரு மேட்டுக்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்களால் இந்திய சமூகத்தில் அது நடைமுறைக்குக் கொண்டுவரப்படுகிறது. அதை ஒட்டி அரசியல், கலை இலக்கியம் மற்றும் பண்பாடு என்ற மூன்று தளங்களில் அதன் உருவாக்கம் நிகழ்கிறது.
அரசியலில் தேசியம் என்ற கருத்துருவம் சார்ந்த சிந்தனைகளாக மலர்கிறது. கலை இலக்கியத்தில் நவீனத்துவம் என்பதாகக் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், நவீன ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு புதிய வடிவங்கள் அறிமுகமாகின்றன. பண்பாட்டுத் தளத்தில் வெகுமக்கள் சார்ந்ததாக வெளிப்பட்ட ஒரு வடிவமே சினிமா என்கிற புதிய வடிவம். அரசியல் என்பதில் தேசியத் தலைவர்கள், நம்மை நாமே ஆள்வது, நாம் ஒரு தேசியத்தின் குடிமக்கள் என்ற விழுமியங்கள் உருவாகின. கலை இலக்கியத்தில் நவீனத்துவம் படித்த உயர்சாதி மேட்டிமை வர்க்கத்தின் வெளிப்பாடுகளாக அமைந்தது. வெகுமக்களின் ஆசைகளை, ஏக்கங்களை, அவர்களது தன்னிச்சையான பங்கேற்பை உருவாக்கியது சினிமா என்கிற நவீனத்துவ வடிவமே. அது இந்திய மக்களின் ஒரு உணர்வுப் புலமாக மாறியது.
காலனிய இந்தியாவில் சினிமா தொடக்கம் முதலே அரசியலுடன் இணைந்தே வெளிப்பட்டது. நேரடியாக அரசியல் பிரச்சாரமாக இயங்கியது என்பதைவிட அது பார்வையாளர்களாக மாற்றிய வெகுசனத்தின் உடற்கட்டமைவுகளை உருவாக்கியதே கவனிக்க வேண்டிய ஒன்று. ஒருபுறம் அரசியல் பிரச்சாரமாக வெளிப்பட்டது என்றால் மற்றொருபுறம் வெகுமக்களின் பண்பாட்டை வடிவமைத்ததில் பெரும் பங்கு வகித்தது. இந்தியா முழுவதிற்குமான நடை உடை பாவனைகள், உணவுப் பழக்கங்கள், வழிபாடுகள், நம்பிக்கைகள் என அனைத்துத் தளத்திலும் வலுவானதொரு பாதிப்பை உருவாக்கியது. இந்திய வெகுசனத்தைக் கட்டமைத்ததில் அரசியலைவிட சினிமாவிற்கே அதிக பங்கு உண்டு. கலை இலக்கியங்கள் மேட்டிமை சார்ந்த உயர்குடி, உயர்சாதிகளின் பண்பாடு சார்ந்து அமைந்ததால், சினிமா வெகுமக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக மாறியது. இதை உணர்ந்த வெகுமக்கள் அரசியலில் சினிமா ஒரு தவிர்க்க இயலாத காரணியாக மாறியது. வட இந்தியாவில் மதங்கள், நம்பிக்கைகளுக்கு உள்ள வகிபாகத்தை தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு மற்றும் ஆந்திர மக்களிடம் சினிமா வகிக்கத் துவங்கியது.
இந்தியச் சமூகத்தில் சினிமா ஏற்படுத்திய விளைவுகள்:
1. இந்திய உடல்களை தோற்றத்தில் நவீன உடல்களாக மாற்றியது
2. இந்திய செவ்வியல்கால உடலசைவுகள், சைகைகள், குறியீடுகளை மாற்றியது
3. கல்வி கற்க வாய்ப்பற்ற உடல்களுக்கான கல்விக்கூடமாக அமைந்தது
4. பல்வேறு நவீனக் கருத்தாக்கங்களை அறிமுகப்படுத்தியது
5. தினமும் ஒன்றுகூடுவதற்கான சூழலை திருவிழா மனநிலையைத் தரும் ஒரு வெளியை உருவாக்கியது
6. சாதியாக, குழுக்களாக அமைந்த குறுகிய வெளிகளில் இருந்து மக்களை வெளியேற்றி ஒரு தற்காலிகப் பொதுவெளியை உருவாக்கியது
7. ஒருவர் மற்றவரை அறிவதற்கான பழகுவதற்கான ஓர் அரங்காக அமைந்தது
8. ஓய்வு நேரங்களை விற்பனைப் பொருளாக மாற்றியது
9. பாலியல் உள்ளிட்ட நுட்பமான உடலின் செயல்களை வடிவமைத்தது, திசைவழிப்படுத்தியது
10. புதிய ரசனைகளை, அதற்கானதொரு வெகுமக்கள் அழகியலைக் கட்டமைத்தது
11. சமூகத்தை மறு ஒப்பனை (refashioning) அல்லது மறு வடிவமைப்பு செய்தது
12. அரசியல் அதிகாரத்திற்கு வருவதற்கான பரந்துபட்ட அளவில் முகத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு ஊடகமாக உள்ளது.
“காங்கிரஸ் கூட்டத்தைக் கவர திரைப்படத்தைப் பயன்படுத்தியது. கே.பி. சுந்தராம்பாள் தொடர்ந்து காங்கிரஸ் மேடைகளில் எஸ். சத்யமூர்த்தி என்ற காங்கிரஸ் தலைவருடன் தோன்றினார்” என்பதைக் குறிப்பிடுகிறார் ராபர்ட் எல். ஹார்ட்கெரேவ் என்கிற ஆய்வாளர். அதனால்தான் எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், சிரஞ்சீவி, பவன் கல்யாண், அமிதாப் பச்சன், ஜெயலலிதா, ஹேமாமாலினி, குஷ்பு,
கமல்ஹாசன், கங்கனா ரணாவத், மனோஜ் திவாரி, சன்னி தியோல், ஸ்மிர்தி இரானி, சுரேஷ்கோபி, வினோத் கண்ணா, சத்ருகன் சின்ஹா, ராஜ் பாப்பர், கோவிந்தா என பல மாநிலங்களிலும் சினிமாவிலிருந்து அரசியலுக்குப் பலரும் வந்தனர். அல்லது அரசியல் கட்சிகள் அவர்களைத் தங்கள் கட்சியின் பிரபலத்திற்காக வருவித்தன. காரணம். தங்கள் கட்சியை மக்களிடம் கொண்டு செல்ல வெகுசனத்திற்குப் பரிச்சயமான, பழகிய, ஏற்கப்பட்ட ஒரு முகம் தேவை என்பதால்தான். முகம் என்பது இப்படி வெகுமக்களிடம் இயக்கம் கொள்கிறது என்பதை உயிர்மையில் வெளிவந்த முந்தைய கட்டுரை விரிவாக விவாதிக்கிறது.
அரசியல் தலைவர்களைவிட சினிமா பிரபலங்கள் மக்கள் வீழ்ந்துவிடக்கூடிய கவர்ச்சியைக் கொண்டிருக்கிறது. காரணம் சினிமா உருவாக்கிய திரையாக்க பிம்பங்களே. இவை மக்களிடம் வாழ்விற்கும் சினிமாவிற்குமான வேறுபாட்டை நீக்கி, திரைப்பிம்பங்களுடன் உணர்ச்சிகரமான ஒன்றிப்பை உருவாக்கி
விடுகிறது. திரைப்பிம்ப உடல்களுக்குள் தங்களைத் திணித்துக்கொண்டு அடையாளம் காணும் ஒரு சுகத்தைத் தருவதாக உள்ளது. இத்திரைப்பிம்பங்களின் அரசியலில் கட்சிகளின் கவர்ச்சி அரசியலுக்காகப் பயன்பட்டவர்கள் ஒருவகை என்றால், நேரடியாக அரசியலில் இறங்கிப் புதிய கட்சியை உருவாக்கி அதனால் அதிகாரத்தைப் பெற்றவர்கள், பெறத் துடிப்பவர்கள் மற்றொருவகை. அவ்வகையில் இந்தியாவில் முதலில் திரைப்பிம்பத்தை வைத்து அதிகாரத்தைப் பெற்றவர் எம்.ஜி.ஆர் என்கிற மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன். உண்மையில் தனது சினிமாத் தொழில் துவங்கிய குறிப்பிட்ட சில வருடங்களுக்குப் பின் இவரை ஒரு நாயகனாக மாற்றியது அன்று தமிழகத்தில் முகிழ்த்துவந்த புதிய அரசியல் போக்கான திராவிட, பகுத்தறிவு, சமத்துவ, சமூகநீதி அரசியல். அதனைத் திரையில் கொண்டு செலுத்தித் திரைப்படத்தை ஒரு வலுவான பிரச்சார எந்திரமாக மாற்றியவர்கள் அறிஞர் அண்ணா என்று அறியப்படும் சி.என். அண்ணாதுரை மற்றும் கலைஞர் என்று அழைக்கப்பட்ட மு. கருணாநிதி ஆகியோர்.
1947இல் அண்ணாவின் திரைக்கதை வசனத்தில் என்.எஸ்.கிருஷ்ணனை நாயகனாகக் கொண்டு வெளிவந்த ‘நல்ல தம்பி’ திரைப்படம் துவங்கி 6 திரைப்படங்களுக்கு அண்ணா திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். அதன்பின் கருணாநிதியின் திரைப்பிரவேசத்தில் பல திரைப்படங்கள் உருவாயின. குறிப்பாக 1949இல் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சி துவங்கப்பட்டதுடன் அதில் பல திரைத்துறை சார்ந்தவர்கள் இணைந்தனர். திரைக்கதை ஆசிரியரான மு. கருணாநிதி, அன்றைய பிரபல நாயக நடிகரான கே. ஆர். ராமசாமி, எஸ்.எஸ். ராஜேந்திரன், சிவாஜி கணேசன் ஆகியோர். ஆனால், தொடர்ந்து தி.மு.கவின் இலட்சிய நடிகராக இருந்தவர் எஸ்.எஸ். இராஜேந்திரன்தான். அவர் எம்.ஜி.ஆர், சிவாஜி என்கிற இருமை முரணில் ஒதுக்கப்பட்டார். குறிப்பிட்ட காலம்வரை சிவாஜிதான் தி.மு.கவின் பிரச்சார நாகனாக உருவாக்கப்பட்டார். ஒரு கட்டத்தில் அவர் காங்கிரஸ் ஆதரவாளராக மாறியபின், மாற்றாக ஒரு நாயகனை உருவாக்க கருணாநிதி அவர்களால் கண்டெடுக்கப்பட்டவரே எம்.ஜி.ஆர். தொடக்கக் கால எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் குறித்து அறிய இக்கருத்து முக்கியமானது. 1946 நவம்பர் ‘கிராம ஊழியன்’ என்ற இதழில் துருவன் (வல்லிக்கண்ணன்) என்பவர் ‘ராஜகுமாரி’ திரைப்படம் குறித்து எழுதினார் “எம்.ஜி.ராமச்சந்திரன் என்னும் உபநடிகரை ‘புரோமோஷன்’ கொடுத்துக் கதாநாயகனாக்கியிருக்கின்றனர். இவரது தோற்றம் பரவாயில்லை என்றாலும் நடிப்பு போதாது. முகபாவம் திருப்தியளிக்கவில்லை. காதல் காட்சிகளில்கூட மனுஷனுக்கு சுதாரிப்பு இல்லையென்றால்… ஏதோ கொஞ்சம் (அட்டை) கத்திச் சண்டை மட்டும் போடத்தெரிந்திருக்கிறது.” எம்.ஜி.ஆர் வரலாற்றை வாசித்தால் தனது பிம்ப உருவாக்கத்தில் அவர் தீவிர கவனம் செலுத்தியதை அறியமுடிகிறது. பராசக்தி, வேலைக்காரி போன்ற சமூக சீர்திருத்த திராவிடக் கருத்தியலைப்பேசிய திரைப்படங்கள், பின்னாளில் எம்.ஜி.ஆரால் நாயக வழிபாட்டுப் படங்களாகக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்படுகிறது. திராவிட அரசியலுக்கு மாறாக கருத்தியல் அற்ற நீர்த்த வெகுமக்களிய அரசியலைப் பேசும் ஒரு கனவுநாயகனாக மாறுகிறார். அதுவே அவரது அரசியல் முதலீடாக மாறுகிறது. அவரது பல ஆண்டுக்கால கடின உழைப்பு அதன் பின்னிருப்பதை யாரும் மறுக்கமுடியாது.
இதைக் கூறக் காரணம், இன்று எம்.ஜி.ஆருடன் தன்னை ஒப்பிட்டுக்கொண்டு அரசியலில் களம் இறங்கும் விஜய் என்ற நடிகரின் திடீர் அரசியல் பின்னணியைப் புரிந்துகொள்ளவே. எம்.ஜி.ஆர், தி.மு.க அரசியலில் சுமார் 1954 முதல் 1972 வரை அனைத்துப் பணிகளிலும் இறங்கிக் களத்தில் செயல்பட்டவர். தி.மு.கவின் ஒரு பிரச்சாரகராகத் தொடர்ந்து பணியாற்றியுள்ளார். அவரது ரசிகர் மன்றங்கள் தி.மு.க கருத்தியலால் ஈர்க்கப்பட்ட பல இளைஞர்களால் உருவானதே. அவர் தி.மு.கவால் ‘எம்.எல்.சி’யாக ஆக்கப்பட்டார். எம்.ஜி.ஆர் படங்களின் தொடர் தோல்வியால் சரிந்துவிட்ட அவரது நாயக பிம்பம், எம்.ஆர். ராதா அவர்களின் துப்பாக்கிச் சூட்டால் மீண்டும் தூக்கி நிறுத்தப்பட்டார் என்பதை ஹார்ட்கிரேவ் சுட்டிக்காட்டுகிறார். அச்சமயத்தில் எம்.ஜி.ஆர் தேர்தலில் நின்று ‘எம்.எல்.ஏ’ ஆனார். அந்நிகழ்வு நடைபெறாமல் இருந்திருந்தால் எம்.ஜி.ஆர் மற்றொரு சிவாஜியாக அன்றே அரசியல் களத்தில் அகற்றப்பட்டிருக்கக் கூடும். அந்நிகழ்வு எம்.ஜி.ஆருக்குப் பெரும் அரசியல் ஆதரவை உருவாக்கியது. அதன்பின் தி.மு.கவின் பொருளாளர் ஆகிறார். தொடர்ந்து தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து தி.மு.கவிற்கு ஆதரவு திரட்டினார். எம்.ஜி.ஆர் திடீரென அரசியலில் விஜய் போன்று ‘இன்ஸ்டென்ட் தலைவராக’ முளைத்தவர் அல்ல. தொடர்ந்து தனது திரைப் பிம்பத்துடன், திரைக்கு வெளியே பல பணிகளைச் செய்து தன்னை மக்கள் மனம் கவர்ந்த ஒரு நாயகனாக வைத்துக்கொண்டார். 6,000 ரிக்ஷாக்காரர்களுக்கு அவர் மழைக் கோட்டுகள் வாங்கித் தந்தது, பலருக்கும் உதவி செய்வதன்மூலம் வள்ளல் என்று பெயர் பெற்றது இப்படி தனது ஒவ்வொரு நடவடிக்கையையும் அவர் தனது எதிர்கால அரசியலுக்கான ஒரு முதலீடாக மாற்றினார். அவரது திரைப்பிம்பக் கவர்ச்சியில் பதிலீடான ரசிகர்களை தனது அரசியல் முதலீடாக மாற்றினார்.
“எனது வாழ்க்கையை அரசியலுக்காக நான் தியாகம் செய்துகொண்டேன்” என்று எம்.ஜி.ஆர் கூறிய வசனத்தை டப்பிங் செய்யும் விஜய் எம்.ஜி.ஆர் போல தனது திரைப்பிம்பத்திற்கு வெளியே என்ன செய்துள்ளார் என்ற கேள்வி உள்ளது. அவரது ரசிகர்களுக்கோ, அவரைக் காணவந்து இறந்துபோனவர்களுக்கோ இதுவரை ஒரு ஆறுதலைக்கூடச் சொன்னதில்லை. அவரைப் பார்க்க வந்து தனது அலட்சியமான தலைக்கனமான தாமத வருகையால் கரூரில் மரணித்தவர்களுக்குகூட அவர் எதுவும் தன்னிச்சையாகச் செய்யவோ, நேரில் போய் ஆறுதல் கூறவோ தயாரில்லை. மாறாக, தி.மு.க அரசாங்கம் 10 லட்சம் உதவித் தொகை அறிவித்தபின் தனது பங்கிற்கு 20 லட்சம் அறிவித்தார். அதைக்கூட மரணித்தவர்கள்மீதான எந்த மரியாதையும் இன்றி அவர்களை வரவழைத்து வாங்கச் செய்தார். அவரைக் காணச் சென்று இறந்த தஞ்சாவூர் மாணவர் ஒருவர் இறப்பிற்குக்கூட எதுவும் செய்யவில்லை. அது குறித்து ஒரு ஆறுதல் அறிக்கைகூட விடவில்லை. அதிலும் தி.மு.க அமைச்சர்தான் அம்மாணவனுக்கு சிகிச்சை உள்ளிட்ட உதவிகளைச் செய்தார். இதுதான் இவர் எம்.ஜி.ஆராக மாற முனையும் லட்சணம்.
மேலும், எம்.ஜி.ஆர் தன்னை ஒரு ஏழைகளின் காவலனாக தொடர்ந்து திரைப்படங்களில் பதிவு செய்து வந்தார். ஒரு கிராம தேவதையின் அதாவது வீரயுக நாயகனின் இடத்தைத் தனது கவர்ச்சி மற்றும் திரைப்படங்கள் வழியாக உருவாக்கினார். ஆனால் விஜய் உருவாக்கியிருக்கும் ரசிகர்கள் எந்தவித கட்டுப்பாடுமற்ற ஒருவகை ‘ஜோம்பிகளை’ப்போல நடந்துகொள்கின்றனர். ஒரு உருவகமாகக் கூறினால், எம்.ஜி.ஆர் ஏழை மக்களின் இரட்சகராக தனது பிம்பத்தை உருவாக்கினார். ஆனால், விஜய் ஒரு மேய்ப்பராகவே வெளிப்படுகிறார். ஆனாலும் அம்மந்தை அவருக்குக் கட்டுப்படுவதாக இல்லை. தனது கட்டுப்பாடற்ற ரசிகர்கள் என்ற மந்தைகளை மேய்ப்பவராக வெளிப்படுகிறார். அவரது ரசிகர்களின் உடல், உயிர், பொருள் ஆகிய எதன்மீதும் அவருக்கு எந்த அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை. தன்னைக் காணுபவர்கள் தங்களை பலியிட்டாவது காணட்டும் என்ற போக்கிலேயே உள்ளது அவரது ஆராவாரங்களும், தன் ரசிகர்களைத் தனது கட்டுக்குள் வைத்துக்கொள்ளாத தன்மையும். அடிப்படையில் இது மந்தை – மேய்ப்பர் என்ற அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள ஒன்றாக உள்ளது. அவரது ரசிகர்கள் அவரை மீட்பராகக் கண்டாலும், யதார்த்தத்தில் ஒரு மேய்ப்பராக இருப்பதற்குக்கூட தகுதியற்றவராகவே உள்ளார். தன்னை ஒரு அபூர்வப் பொருளாக, காணமுடியாத ஒன்றாக வைத்துக்கொள்வதிலேயே அவரது முழுக் கவனமும் உள்ளது.
விஜய் இன்றைய இளந்தலைமுறையின் இருண்ட பகுதிகளை அல்லது எதிர்மறையான பொது ஒழுங்கற்ற, அறமற்ற பகுதியின் ஒரு மாதிரியாக இருக்கிறார். எந்தவித பொறுப்பற்ற ஒரு உதிரிக் கூட்டத்தின் அடையாளமாக மாறியுள்ளார். அவரது திரைப்படங்களில் அவர் கட்டமைத்தது அத்தகையதொரு பிம்பத்தையே. ஆரம்பக்கால படங்களில் அவர் ஒரு ‘மிட்நைட் மசாலா ஹீரோவாகவே’ அறிமுகமானார். உங்கள் திரைப்படத்தில் உங்களுக்குப் பிடித்த காட்சி எது என்ற கேள்விக்கு ஒரு நேர்காணலில் ‘மாமியாருக்கு சோப்புபோடும் காட்சி’ என்று கூறியவர். பாலியல் சீண்டல்கள், இரட்டை அர்த்த வசனங்கள், பெண்களை அடிமைகளாக சித்திரிக்கும் காட்சிகள், ஆணாதிக்க வசனங்கள் என அமைந்திருந்தது அவரது திரைப்படங்கள். பிறகுதான் அவரது படங்கள் ஒரு ரொமாண்டிக் காதலன் என்ற வடிவத்தை வெளிப்படுத்தத் துவங்கியது. குறிப்பாக கில்லி திரைப்படம் அவரை ஒரு பெண் காப்பாளராகவும், ‘ஆக்ஷன்’ ஹீரோவாகவும் சித்திரிக்கத் துவங்கியது. அவரது திரைப்படங்கள் உருவாக்கிய பிம்பத்தை அறிய அவரது தொடர் அரசியல் கூட்டங்களில் நிகழும் தாறுமாறான கட்டுப்பாடற்ற நிகழ்வுகளே சான்றுகள்.
‘பூமர்ஸ்’ என்று விஜய் ரசிகர்களால் அழைக்கப்படும் வயதான 55ஐ நெருங்கிவிட்ட விஜய், எப்படி இளந்தலைமுறையான ‘ஜென்-சி’களின் மாதிரியாக முடிகிறது. சமீபத்தில் நிகழ்ந்த நேபாள் ‘ஜென்-சி’க்களின் கலகத்தில் அவர்களது தலைவராக ஒரு ‘பாப் சிங்கர்’ தெரிவு செய்யப்பட்டு நேபாளத்தின் அதிபராக மாறியுள்ளார். விஜய்யின் கனவும் அதே. ஆனால், தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் விஜய்யின் ‘செல்பி பிள்ளைகள்’ மிகக் குறைவானவர்களே. அவர்களும் முந்தைய வயதான (பெற்றோர்) தலைமுறையினரால் வெறுக்கப்படுபவர்களாகவே உள்ளனர். தனது பிள்ளை இப்படி பொறுப்பற்று ஊதாரியாக இருப்பதை எந்தப் பெற்றோர் விரும்புவார். இது தமிழ்ப் பண்பாட்டில் நிகழ்ந்துள்ள ஒரு பெரும் சீரழிவுப் போக்கு. இந்த ஆபத்தான போக்கைக் கண்டு திகைத்துப்போய் உள்ளனர் தமிழ்நாட்டின் பொது மக்கள்.
விஜய்யின் அரசியல் வருகை என்பது எம்.ஜி.ஆர் மாதிரியைக் கொண்டது என்பது ஒரு ஏமாற்றுவேலை. வேண்டுமானால் சொந்த வாழ்வில் எம்.ஜி.ஆர் போன்ற ஒரு மனைவி ஒரு துணைவியை, விசிலடிச்சான் குஞ்சுகளாக ஒரு தற்குறிக் கூட்டத்தைக் கொண்டிருக்கலாம். ஆனால் எம்.ஜி.ஆருக்குக் கூடிய ஒரு மக்கள் திரள், ஒழுங்கமைக்கப்பட்ட ரசிகர் கூட்டம் விஜய்யிடம் இல்லை. ஆக, விஜய்யிடம் இருப்பது எம்.ஜி.ஆர் உருவாக்கியதைப் போன்ற மற்றொரு விபரீத பண்பாட்டுச் சீரழிவுக் கூட்டம்தான். 1972இல் எம்.ஜி.ஆர் கட்சி துவங்கியபின் தமிழ்நாட்டு அரசியல் பாதையே கருத்தியலற்ற ஒரு வெகுமக்களிய அரசியலாக மாறிவிட்டது. இது பின்னைய திராவிடத்தின் (post dravidian) ஒரு துவக்கம். இதனை பிறதொரு உயிரமை கட்டுரை விவரிக்கிறது. ஆனால், விஜய்யின் வருகை என்பது கருத்தியலற்ற சமூகத்தின் முழுக்க ஊடகங்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு பின்னைய உண்மை (post truth) என்று வர்ணிக்கப்படும் ஒரு சமூகத்தின் வெளிப்பாடு. இங்கு உண்மைகள், பொய், பிம்பம், நகல் போன்ற அனைத்தும் ஒன்றாகக் குழம்பி உண்மை எது, பொய் எது என்பதை அறியமுடியாத ஒரு சமூகம். யதார்த்தம் என்பது ஊடகங்களால் உருவாக்கப்படுவதாக உள்ளது.
இதில் விஜய் போன்றவர்கள் ஒருவித தன்மோக (narcissism) பண்பாட்டை வளர்க்கின்றனர். அடிப்படையில் விஜய்யே தன்மோகத்தின் உச்சத்தில் திளைக்கும் ஒருவராகவே காணப்படுகிறார். தன்மோகம் என்பது ஒருவகை உளவியல் சிக்கல். இன்றைய டிஜிட்டல் உலகில் அது ‘செல்பி’ என்கிற தற்பட வடிவமாக வெளிப்படுகிறது. பெரும்பாலான விஜய் ரசிகர்கள் அவரே ஒரு பாடலில் அழைக்கும் ‘செல்பி’ பிள்ளைகளாக உள்ளனர். விஜய் வருகைகளில் அதிகம் விபத்துகள் நிகழ்வது இந்த செல்பி எடுக்கும் ஆர்வத்தில் நெருக்கிடியத்துக்கொண்டு அவரது வாகனத்தைச் சூழ்வதால்தான் நடைபெறுகிறது. அடுத்து விஜய் தன்னை ஒரு அரிதான காட்சிக்கு வைக்கப்படும் பொருள்போல பாவிக்கிறார். பொதுவாகத் திரைப்பட நடிகர்களுக்குக் கூடும் ஒரு அறிவற்ற காட்சிக்கான இன்பத்தில் திளைக்கும் சமூகமாக தமிழ்ச்சமூகம் மாறி உள்ளது. ஆக, விஜய் தனது ரசிகர்கள் என்று தன்னைப் போன்ற குளோனிங்குகளை உருவாக்கிக் கொண்டுள்ளார். அதன் ஒரு வெளிப்பாடே “ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு விஜய் இருக்கிறான்” என்கிற அவரது தன்முனைப்பான அறிவிப்பின் பின்னணி.
பொதுவாக இன்றைய தலைமுறையினர் கற்றுக்கொண்டுள்ள தனது சுகத்திற்கு இடைஞ்சலற்ற இருத்தல், தன் சுகம் மட்டுமே முதன்மை, பொறுப்பற்ற தன்மை, மற்றவர் வந்து தன்னை சந்திக்க வேண்டும் என்கிற தன் மையவாத எண்ணம், எதன்மீதும் அக்கறையற்ற தன்மை, காட்சி பிம்ப அரசியல், வாசிப்புத்திறன் குறைவு, கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற மனநிலை, எதற்கும் பொறுப்பு ஏற்காது தட்டிக் கழித்தல் உள்ளிட்ட குணங்களே தொடர்ந்து விஜய் திரைப்படங்கள் வழியாக அவர் குறித்த பிம்பமாக இந்த இளைஞர்களிடம் இறக்கப்பட்டுள்ளது. விஜய்யின் இந்தத் தன் மையவாத பாசிச மனப்போக்கு உருவாக்கிய கும்பல் மனோபாவமே அவரது ரசிகர்களின் உளப்பாங்காக உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் சமூகப் பொறுப்புடன், பண்பாட்டை மீட்டெடுக்கும் அக்கறையுடன் விமர்சிக்க வேண்டிய ஊடகங்கள் விஜய்யின் கவர்ச்சி அரசியலுக்கு இரையாகி அதற்கான இசைவை மக்களிடம் உற்பத்தி செய்வதில் குறியாக உள்ளன. இந்த நிலையிலிருந்து தமிழ்ச் சமூகத்தைக் காக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழருக்கும் உள்ளது.
தொகுப்பாக, சினிமா முதல் கட்டம் திராவிடக் கருத்தியல் சார்ந்த வசனத்தை அண்ணாதுரை, கருணாநிதி வழியாக ஒரு சொற்பொழிவு அரசியலை உருவாக்கியது. அது அதிகாரத்திற்கான ஆசை உருவாக்க பிம்பத்தைக் கட்டமைப்பதாக இருந்தது. தனது திராவிடக் கருத்தியலைச் செலாவணிக்குக் கொண்டுவந்தது. திராவிட உடல் உருவாக்கம் என்பதை நிகழ்த்தியது. இரண்டாம் கட்டம் எம்.ஜி.ஆர் வழியாக ஆசை நிறைவேற்ற பிம்பமாக மாற்றப்பட்டது. இங்கு திராவிடக் கருத்தியலைக் காலாவதி செய்வதற்கான செயல்பாடு தொடங்கியது.
கவர்ச்சி என்கிற வெகுமக்களிய அரசியல் உருவாக்கம் நிகழ்ந்தது. பின்னைய திராவிட உடல்கள் கட்டமைக்கப்பட்டது. மூன்றாம் கட்டம் விஜய் என்கிற பின்னைய உண்மைக் காலத்தின் கருத்தியலற்ற, உதிரியான, தற்குறி அரசியல் உருவாக்கம் நிகழ்கிறது. இங்கு விஜய் என்ற குளோனிங் ஆக மாறும் ஆசை பெருக்க பிம்பம் செயலுக்கு வருகிறது. இதற்கு எந்த அரசியல், சமூக, பண்பாட்டுப் பொறுப்போ விழுமியங்களோ இல்லை. எம்.ஜி.ஆர் ரசிகர்களை விசிலடிச்சான் குஞ்சுகள் என்று அன்றைய திராவிட அரசியலை முன்வைத்து தி.மு.க விமர்சித்தது. இன்று அந்த விசிலையே தனது சின்னமாக விஜய் கோரிப் பெறுகிறார். தற்போது தமிழ்ப் பண்பாட்டு வீழ்ச்சியின் ஒரு குறியீடாக இந்த விசில் உள்ளது.
பார்வை நூல்கள்:
1. Politics and the Film in Tamilnadu: The Starts and the DMK, Robert L. Hardgrave, Jr. P. 289. Asian Survey, Vol. 13, No. 3 (Mar., 1973), Published by: University of California Press
2. தமிழ் சினிமா விமர்சனங்கள்: 1931-1960, தொகுப்பு சொர்ணவேல் ஈஸ்வரன், நிழல் திருநாவுக்கரசு, 2020, நிழல் வெளியீடு, சென்னை-77)
பிம்பச் சிறை, எம்.எஸ்.எஸ் பாண்டியன், தமிழில்: பூ.கொ. சரவணன், 2016, பிரக்ஞை, சென்னை – 17
ஜமாலன்
jamalan.tamil@gmail.com
