விஜய் நிகழ்வு என்பதை ஒரு அரசியல் சிக்கலாக அணுகக்கூடாது. அது ஒரு பண்பாட்டுச் சிக்கல். அல்லது ஒரு சமூக நோய்க்குறி என்பதை உணராமல் அவரை முன்வைத்துப் பல வாத பிரதிவாதங்கள் 23-04-2026 தேர்தலுக்கு முன்னும் பின்னும் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. ஒருபுறம் விஜயை ஆதரிக்கும்படி பல எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள் வெளிப்படையாக அறிவிக்கிறார்கள். சிலர் இலக்கியவாதிகள் அரசியல் பேசக்கூடாது என்று அவர்களது அரசியலை முன்வைக்கிறார்கள். மற்றொருபுறம் விஜய் ரசிகர்களை, அவருக்கு வாக்களித்தவர்களை ‘தற்குறிகள்’ என்று கூறக்கூடாது என்பதற்கான பொது மனிதநேய வேடமிட்டு ‘மாற்றம்’ விரும்பும் நம் குழந்தைகளை 1 கோடிக்கு மேல் (முடிவுகள் வரவில்லை அதற்குள் இப்படி) வாக்களித்த மக்களைக் கூறுவது பாசிசமாகாதா? எப்படி நீங்கள் அவர்களை ‘தற்குறி’ என்று கூறலாம் என்பதாக வாதத்தை முன்வைக்கிறார்கள். அதில் ஒரு பெண்ணியவாதி விஜய்யின் களவு மற்றும் காதல் குறித்து எழுப்பப்படும் கேள்விகள் ‘டிரான்ஸ்கிரவ்’ இலக்கியமாகத் தோணுவதாக எழுதியுள்ளார்.
இவர்கள் தங்களது இந்த முடிவிற்கு வர ஒவ்வொருவரும் ஒரு உதாரணம் காட்டுகிறார்கள். அவரவர் சந்தித்த நபர்களே தமிழக மனநிலை என்ற பொதுமைப்படுத்துதலே இத்தகைய கருத்து வெளிப்பாடுகளின் அடிப்படை. இப்படியான பொதுமைப்படுத்துதல் என்பது ஒரு அதிகார அல்லது காலனியம் உருவாக்கிய மனநிலையில் வருவது. இந்தியாவில் எங்கோ நிகழும் ஒரு நிகழ்வை வைத்து, பெரும்பான்மை இந்து மக்கள் இப்படித்தான் என்ற செய்தியைப் பரப்பும் பெரும்பான்மைவாதமே இவர்களது கோட்பாட்டு அடிப்படை. இவர்கள் ஜனநாயகம் என்பது பெரும் பான்மை நலனுக்கானது என்ற ரீதியில் புரிந்து கொண்டுள்ளனர். உண்மையில் ஜனநாயகத்தின் அடிப்படையே சிறுபான்மைகளைப் பாதுகாப்புடன் சுதந்திரத்துடன் வாழ அனுமதிப்பதுதான். ஜனநாயகம் என்பதே பெரும்பான்மைவாதம் என்றும் அது சிறுபான்மையினர் பெரும்பான்மை தயவில்தான் வாழவேண்டும் என்ற ஆண்டான்-அடிமை மனோபாவமாக மாற்றியது கடந்த 60 ஆண்டுக் கால பா.ஜ.கவின் திட்டமே. அதை அத்வானி ‘மைனாரிட்டி அப்பீஸ்மெண்ட்’ என்று துவக்கி வைத்தார். ஒருவேளை விஜய் அனைத்து மக்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அதனால் மட்டுமே அவர் புனிதராகி விடமாட்டார். காரணம் அனைத்து மக்களும் ஒருவித கவர்ச்சிப் பண்பாட்டு ஆதிக்கத்தில் உள்ளனர் என்பது தான். கேள்வி இதுதான். விஜய்யின் வருகை ஏற்படுத்தும் திரைக் கவர்ச்சிப் பண்பாடு சரியா, தவறா? அந்த உரையாடலுக்குள் இவர்கள் யாரும் வருவதில்லை. விஜய் ஒரு புரட்சிகர ஜனநாயக மாற்றத்தைக் கொண்டு வருவார் என்றால் அதைக் குறித்துப் பேசலாமே. அவர் என்ன மாற்றத்தை முன்வைக்கிறார்? நபர்களை மாற்றுவதையா? சமூக முன்னேற்றத்திற்கான மாற்றத்தையா? இதுகுறித்து இந்த மகானுபாவர்கள் விவாதிப்பதில்லை. அதுகுறித்து அவருக்கு முட்டுக்கதைகள் உருவாக்கும் எந்த அறிவுஜீவியும் இலக்கியவாதிகளும் பேசுவதில்லை. ஆக, இவர்களின் நோக்கம் ஒன்றுதான். அது விஜய் மீதான அக்கறைகூட அல்ல. திராவிட தி.மு.க எதிர்ப்பு என்பதே. இது பெரியார் காலந்தொடங்கி நடந்துவரும் ஒன்று. இவர்கள் விஜய் குறித்துப் பேசாமல் விஜய்க்குப் பின்னுள்ள மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள். ஒருபக்கம் திராவிட அரசியல்தான் இதற்குக் காரணம் என்கிறார்கள். அதில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை எளிமையாக விட்டுவிடுகிறார்கள். அப்படி என்றால் அவர்கள் திராவிட அரசின் தொடர்ச்சி இல்லையா? ஏன் விஜயேகூட திராவிட அரசியல்தான் பேசுகிறார். அதிலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைத் தனது வழிகாட்டியாகக் கொள்கிறார். அவர்கள் வசனத்தையே பின்பற்றுகிறார் “தீய சக்தி” என்று. திரைக்கவர்ச்சி அரசியல் 1972இல் எம்.ஜி.ஆரில் துவங்கியது, ஜெயலலிதாவில் வளர்ந்து, விஜயகாந்தில் முதிர்ந்து, சீமான் வழியாக விஜய்வரை வந்துள்ளது. உண்மையான அக்கறை உள்ளவர்கள் இவை அனைத்தையும்தான் பேச வேண்டும். திராவிடம் வளர்த்தது மோசமான கவர்ச்சி அரசியல் என்றால் அதைத் தகர்ப்பதற்கான ஒரு வாய்ப்பாக ஏன் விஜய்யை இவர்கள் பார்ப்பதில்லை.
மாறாக, திராவிடத்திற்கான மாற்றாக இவர்கள் அவரை முன்வைக்கிறார்கள். இந்த முரண் அவர்களிடம் இருப்பது அவர்கள் அறியாமல் அல்ல. இதைப் பிழைப்புவாதம் என்றுகூடப் பார்க்க வேண்டியதில்லை. அவர்களை ஆட்டிப்படைக்கும் பார்ப்பனிய சனாதனக் கருத்தியலாகவே பார்க்கவேண்டி உள்ளது. அதாவது, கருத்தியல் அவர்கள் விரும்பும் யதார்த்தத்தைக் காட்டுகிறது. உண்மையான யதார்த்தத்தை மார்க்ஸ் கூறியதைப்போல தலைகீழாகக் காட்டுகிறது என்பதுதான். மேற்சொன்ன கருத்துகள் அனைத்தும் வெவ்வேறு தளங்களில் வருவதாகக் தோன்றினாலும் இவை சந்திக் கும் புள்ளிகள் ஒன்றுதான். அது திராவிட எதிர்ப்பு, பெரியாரிய எதிர்ப்பு, தமிழ் என்ற அறிவார்ந்த தனித்தன்மை வாய்ந்த சமூகத்தினை இழிவுபடுத்துவதில் உருவாகும் காழ்ப்பு. இதற்குப் பின்னிருப்பது பெரியாரால் முன்வைக்கப்பட்ட பார்ப்பனிய அதாவது ஆரிய எதிர்ப்பு திராவிட அரசியலே. இது தமிழகத்தில் உருவான அரசியல் நவீனத்துவம். திராவிட இயக்கம் இதனை இலக்கியத் தளத்தில் விரிவு படுத்தாமல் சினிமா என்ற நவீன ஊடகத்தை மட்டுமே பிரச்சாரத்திற்காக எடுத்துக்கொண்டது. இதனை ஏற்காத பார்ப்பன இலக்கியவாதிகள் ஒரு அரிதான இலக்கிய நவீனத்துவத்தை இங்கு அறிமுகப் படுத்தினார்கள். அதுதான் தமிழில் பார்ப்பன மேட்டிமையாக உருவான சிறுபத்திரிக்கை இலக்கிய இயக்கம். அதுவரை தேசியம் என்ற பெயரில் அரசியலில் கோலோச்சிய பார்ப்பன மேலாண்மை பெரியாரால் வெளியேற்றப்பட்டதால் தங்களுக்கான பதுங்கு குழிகளாக அவர்கள் கண்டு பிடித்ததே நவீன இலக்கியம். திராவிடம் மற்றும் அதன் அரசியல் வெறுப்பில் இலக்கியமே அரசியல் பேசக்கூடாது என்ற தூய்மைவாதத்தை முன்வைத்தனர். இந்த இலக்கியத் தூய்மைவாதம் இன்றுவரை தமிழில் ஒரு இலக்கிய பீடமாக உள்ளது. அது ஒரு இலக்கியத்தைத் தீர்மானிக்கும் அளவுகோலாகவும் உள்ளது என்பது இதன் மற்றொரு பரிமாணம். இதற்கான சப்பைக்கட்டே சமஸ்கிருத ரசாக் கோட்பாடு உருவாக்கிய ரசனைவாத அழகியல். இலக்கியம் வெறும் உணர்வு சார்ந்த ஒன்றாக தொடர்ந்து கூறப்படுகிறது.
பெரியார் அதனால்தான் இலக்கியத்தை மறுத்து அதனை அறிவார்ந்த தளத்தில் உருவாக்க வேண்டும் என்றார். அடிப்படையில் பெரியார் ஓர் அறிவுவாதி என்பதால்.ஆனால் மேற்சொன்ன அனைவரும் இந்த திராவிட எதிர்ப்பு என்ற புள்ளியில் கால் ஊன்றி அதிலேயே வளர்ந்து இன்று ஒரு உச்ச நிலையை அடைந்துவிட்டனர். இவர்கள் இப்படிப் பேசுவது புதிதல்ல. முதலில் எம்.ஜி.ஆர் வந்தபோது பேசினார்கள். அதன்பின், விஜயகாந்த் வந்தபோது பேசினார்கள். அப்புறம் சீமான் வந்தபோது பேசினார்கள். தற்போது விஜய்க்குப் பேசுகிறார்கள். இவர்கள்தான் தூய்மை வாதமும் பேசுவார்கள். மற்றொருபுறம் தமிழ்ச் சமூகம் திரைக்கவர்ச்சியில் மூழ்கிவிட்ட கேடுகெட்ட சமூகம் என்பார்கள். இவர்களைப் பொறுத்தவரை விஜய் போன்றவர்களின் வருகையால் இன்னும் இந்தச் சமூகம் சீரழிவதைப் பார்த்து ரசிப்பதே. அதனால்தான் பண்பாட்டில் இப்படி முதிர்ச்சியற்ற உணர்ச்சிப் போக்குகளால் அடையும் பண்பாட்டுக் கறைகளை ஆதரிக்கிறார்கள். இதன்பின் இருப்பது பார்ப்பனியமும் அதன் சிந்னையால் பார்ப்பனராகப் பிழைக்க எண்ணும் நவபார்ப்பனியமும்தான். அறிவு எங்களுக்கானது என்றும் உணர்ச்சி உங்களுக்கானது என்றும் கூறுவது. அதுதான் இலக்கியத்தை உணர்வுத் தளத்தில் வைத்து மட்டுமே பேசும் ரசனைக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொள்கிறார்கள். இவர்களைப் புரிந்துகொள்ள எனது அனுபவக் கதை ஒன்றைக் கூற விரும்புகிறேன். அதாவது விஜயகாந்த் வந்தபோது அடுத்த தமிழகத்தின் மாற்று அரசியல் அவர்தான் என்று என்னுடன் பழகிய மூன்று நெருங்கிய நண்பர்கள் கூறினார்கள். அவர்களில் இருவர் பார்ப்பனர். மற்றவர் உருது பேசும் முஸ்லிம். அன்றே அவர்களிடம் நான் கடுமையாக வாதிட்டேன். இத்தனைக்கும் இந்த மூன்று நண்பர்களும் அவர்களுக்குள் பகைவர்கள். ஒருவர் கருத்தை ஒருவர் ஏற்பதில்லை. வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகள், இலக்கியக் கோட்பாடுகளையும் கொண்டவர்கள். மூவரும் வெவ்வேறு வாழிடங்களைச் சேர்ந்தவர்கள். நன்கு படித்தவர்கள். சிறந்த தர்க்கத்துடன் பேசும் ஆற்றல்கொண்ட படிப்பாளிகள். ஆனால், இவர்கள் ஏன் இப்படியான ஒருமித்த முடிவிற்கு வருகிறார்கள்? ஊடகங்கள் அன்று விஜய காந்தை ஊதிப் பெருக்கின. பல பத்திரிகைகள் தொடர்ந்து அட்டைப்படம் போட்டு அவரைக் குறித்து எழுதிக்கொண்டிருந்தன. சிலபல ஆண்டுகள் கழித்து விஜயகாந்தின் சரிவு துவங்கியது.
அதன்பின் சீமான் தமிழக அரசியலுக்குள் நுழைகிறார். மறுபடியும் அதே ஊடகங்கள், பத்திரிக்கைகள் சீமானுக்காக ஊதத் துவங்கின. அதே நண்பர்கள் அதே பாணியில் சீமான்தான் அடுத்த மாற்று என்று கூறினார்கள். அன்றும் அவர்களிடம் வாதிட்டேன். உலகக் கோட்பாடுகள் எல்லாம் பேசும் அவர்கள் இதில் ஏன் பொதுப்புத்தியைத் தாண்டுவதில்லை என்பது எனக்கு வியப்பாக இருந்தது. சிலபல காலங்கள் கழித்து அரசியலுக்குள் நேரடியாக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை இறக்கப்படுகிறார். அதே காலகட்டத்தில் இந்த நண்பர்கள் பார்ப்பன எதிர்ப்பு அரசியலைக் கையில் எடுத்தவுடன் என்னோடான நட்பை முறித்துவிட்டார்கள். வழக்கம் போல் சமூக ஊடக நட்புநீக்கம் வழியாகவும், நேர்ப்பேச்சிலும். அதன்பின் தொடர்புகள் இல்லை. ஒருவேளை அப்பொழுது அண்ணாமலையை மாற்று என்று வெளிப்படையாகக் கூறாமல் அவரது ஊடகங்கள் உருவாக்கிய பிம்பங்களை வைத்து எனது சிந்தனைக்குள் ஊடுறுவ முயன்றிருக்கலாம்.
தற்போது அதே நண்பர்கள் விஜய்யைக் குறித்தும் இப்படித்தான் பேசுவார்கள். அவர்கள் அவரை ஒரு மாற்று என்றுகூட வாக்களித்திருக்கலாம். விஜய்க்கு உருவாக்கப்படும் பிம்பத்திற்கான தங்கள் அறிவார்ந்த உள்ளீடுகளை வழங்க முயன்றிருக்கலாம். இப்படி தொடர்ந்து இவர்கள் திராவிட இயக்கத்திற்கான மாற்றைத் தேடிக்கொண்டே இருப்பதும். அது ஒரு நீர்க்குமிழியாக உருவாக்கம் பெறுவதும், பிறகு உடைவதும் என்பது ஒரு வழக்கமாக மாறியுள்ளது. இத்தகைய மாற்றுகளைக் கண்டுபிடிக்கும்போதெல்லாம் அவர்களிடம் தர்க்க அறிவு வேலை செய்வதில்லை. காரணம், அவர்கள் அதை ஒரு வழக்கமாக அல்லது பழக்கமாக மாற்றிக்கொண்டு விட்டார்கள். உண்மையில் தமிழ்ச் சமூகத்திற்கு ஒரு மாற்று தேவைதான். மாற்றம் என்பதே மாறாதது என்றுமார்க்சியம் கூறுவது சமூக முன்னேற்றம் என்கிற மாற்றம். ஒருவருக்கு பதிலாக மற்றொருவர் வருவது அல்ல. அது மாற்றம் என்பது அடிப்படையில் மாற்றுவது. அது நிச்சயமாக வெறும் அரசியலில் மட்டும் நிகழ்ந்து விடாது. அது எழுத்து, இலக்கியம், பேச்சு, ஊடகம், சினிமா எனப் பண்பாட்டுத் தளங்களில் துவங்கி அதிலிருந்துதான் அரசியலுக்கு வரமுடியும். அதற்கு சமூக மாற்றம் குறித்த அறிவு அவசியம்.
அரசியல் அதிகாரத்திற்கானது. பண்பாடு ஆதிக்கத்திற்கானது. ஆதிக்கப் பண்பாட்டில் அமர்ந்துகொண்டு அரசியல் அதிகாரத்தில் மாற்றம் வர வேண்டும் என்பது நுனி மரத்தில் அமர்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுவதைப்போல. ஆனால், இவ்வகையினர் உள்நோக்கம் ஒன்றுதான். அது திராவிட அரசியல் அதன் பண்பாட்டைத் தூக்கி எறிந்துவிட்டு ஆரியப் பண்பாட்டைக் கொண்டுவருவது. இதன் மூகமூடிதான் இந்த அரசியல். விஜய் அவர்களது ஆதிக்க ஆரியப் பண்பாட்டிற்கான ஒரு முகம். அந்த முகமே ஒரு முகமூடி தான் என்பது அவர்களுக்கு நம்மைவிட நன்றாகத் தெரியும். அடிப்படையில் இது பெரியார் மண்ணுக்கும் பார்ப்பனியக் காவி மண்ணுக்கும் நடக்கும் ஒரு பண்பாட்டுப் போர். இதில் விஜய்யின் வெற்றி என்பது இந்த ஆரியப் பண்பாட்டு உளவியல் ஆழமாக ஊடுறுவியுள்ள தன் நோய்க்குறி. இந்த நோயை அடியோடு அறத்தெறிவது சமூக ஆர்வலர்கள்மீதான தலையாயப் பணி. இதற்கு வசதியாக அதே நண்பர்களால் ‘இன்புளுயன்ஸ்’ செய்யப்படும் பல பார்ப்பனரல்லாத அறிவுஜீவிகள், இலக்கியவாதிகள் பலியாகியுள்ளனர். தி.மு.க என்ற கட்சியைத் தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டுமெனில் அதைவிடவும் சிறந்ததான சமூகநீதி, சமத்துவ அரசியலைப் பேசும், நூறு விழுக்காடு நடைமுறைப்படுத்தும் ஒரு இயக்கம் தேவை. அப்படியான இயக்கங்கள் வளராமல் தடுப்பதில் முன்னணியில் நிற்பவர்களும் இவர்கள்தான். இவர்கள் மாற்றம் என்று கூறுவது, தமிழ் நாட்டு மக்களுக்கு அவர்கள் தரவிரும்பும் ஏமாற்றம் மட்டுமல்ல, தமிழ் என்ற பண்பாட்டில் முளைத்தும் கிளைத்தும் உள்ள மக்களை ஆரியர்களின் அடிமைகளாக ஆக்குவதற்குத்தான். அதாவது பார்ப்பனிய சனாதன வருணத்தை மீ்ண்டும் மீண்டும் ஏதோ ஒரு வடிவில் கொண்டு வருவது. தமிழ்ப் பண்பாட்டின் ஆழமான விழுமியங்களை ஒழித்துக்கட்டி அதனை மேலோட்டமாக கவர்ச்சிக்கு அடிமையான ஒரு பண்பாடு என்பதாகக் காட்டுவதுதான். அதற்குத்தான் அவர்கள் விஜய் என்ற மற்றொரு திரைப்பிம்பத்தைத் தூக்கி வருகிறார்கள்.
ஜமாலன்
jamalan.tamil@gmail.com
