மொழி ஏற்கும் வேடம்தான் கவிதை என்று சொல்லலாமா? அப்படியானால் மொழியின் சுயம் கவிதை இல்லையா? தன் சொந்த வேடத்தை ஏற்று நடிக்கும் நடிகனின் மனவரைபடம் கவிதை என்று கொள்ளலாம் அல்லவா. காலம் திரும்பத் திரும்ப நிகழ்த்துகிற அனுபவங்களுக்கு மத்தியில் அரிதானவற்றின் தொகை கவிதையாக மாற்றம் கொள்கிறது. எல்லோரும் அறிந்த பிறகான ரகசியத்தின் முன்காலப் புதிர்த் தன்மைபோலக் கவிதையை உடைத்துப் பார்த்தால் அது நொதித்து வேறொன்றாக மாறுவதும் கல்லென்று உறைவதும் அதன் இருவேறு திசைகளாக விரிந்தேகுகின்றன.

கவிதை என்பது காகிதத்தோடு முற்றுப் பெறுவதில்லை. அது ஒரு செயல்பாடு. முற்றிலுமாகப் புனைவு என்று எதையுமே அறுதியிட முடியுமா என்ன? எல்லாவற்றின் உள்ளேயும் அதனதன் அரசியல் ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது. அரசியல் என்பது நேரடியாக அணுகுவது மாத்திரம் அல்ல. எழுதுபவன் சூசகமாகவும் பூடகமாகவும் தான் மாத்திரம் கற்றறிந்த வித்தையைப் பிரயோகிக்கிறாற் போலக் கூடத் தன் கவிதையைக் கட்டமைக்கலாம். ஆனால் அதனை இன்னொருவன் அறிவதற்கு ஆகாது என்று தன் கவிதையைப் பூட்ட முடியுமா..? எல்லாப் புதிர்களையும் விடுவிக்கிற மனங்கள் வந்தே தீரும். இது நியதி. எதையும் ஆழப் புதைத்தாலும் அள்ளி எறிந்தாலும் கலை என்பது தன்னைக் கொள்கிற கலயங்களை மேலெழுதிய வண்ணம் மாறி உயிர்த்தபடி காலம் கடக்கும் நிறமிலி என்பதை மறுக்கவியலாதே. மௌனித்திருத்தல் என்பதும் தவிர்த்தல் என்பதுவும் கூட அரசியல்தான். பேச்சுக்கலை போல எடுத்தாளப்படவேண்டும் என்றோ அல்லது உரைநடை போல விளக்கி விரித்துச் சொல்லப்படவேண்டும் எனவோ கவிதையை நிர்ப்பந்தித்தல் சாத்தியமில்லை. கவிதை தனதான அரசியலைத் தன்னுள் கொண்டிருக்கும்.. கிட்டாவைரத்தைக் கண்டடைவதற்கான எட்டாவது மலையேற்றம் போலவோ நாகமணித் தேடல் கொண்டு வனம்விட்டு வனம் அலைகிற செல்வசஞ்சாரம் போலவோ அவரவர் பலிதம் அவரவர் ஞானம்.

43 ஆவது சென்னைப் புத்தகக் கண்காட்சி நிறைவுற்றிருக்கிறது. திடீரென்று கவிதைகளுக்கென்று பிரத்யேகக் கடை ஒன்று இருந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. மரபுக் கவிதை புதுக்கவிதை எதிர்க்கவிதை வட்டக் கவிதை சித்திரக்கவி சீட்டுக்கவி தொடங்கிக் கவிதையற்ற கவிதை வரைக்கும் எல்லாவற்றிலும் ஒரு பிரதியைப் பார்ஸல் செய்து திரும்பினால் கனஜோராகத்தான் இருக்கும். ஃப்ராங்பர்ட் லண்டன் தொடங்கி நம்மூர் டெல்லி வரைக்கும் பல கண்காட்சிகளைப் பற்றிய பெருமிதவசனங்கள் காதில் விழுந்தன. அவ்விடங்கள் எதிலேனும் இருக்கக் கூடும் கவிதைக் கடை.

“எனக்கென்று தனித்த எதிரிகள் யாருமில்லை ஆனால் என் நண்பர்கள் என்னை விரும்புவதில்லை.” என்பது பிலிப் லார்க்கினுடைய பிரபல வாசகம். தனித்துவம் என்பது மற்றவர்களிடமிருந்து அல்ல தன்னிடமிருந்தே விலகுவது என்பது அவரது அவதானிப்பு. எழுத்தைப் பற்றிய அவரது கூற்றும் மிகப் பிரபலமானது. “அன்பே என்னால் எழுதமுடியாது.இதெல்லாம் ஒரு கற்பனை. ஒருவிதமான சுற்றிவரும் ஆவேசம். அவ்வளவுதான்.”

பிலிப் லார்க்கினுக்கு கனவெல்லாம் ஒரு நூலகர் ஆகவேண்டும் என்பதுதான். பி.ஏ. பட்டதாரியாக முதல் தரத்தில் தேர்வான பிறகு தன் கனவிலிருந்து சற்றும் விலகாத லார்க்கின் தன் வாழ்நாளெல்லாம் பல நூலகங்களில் பணிபுரிந்தார். 1946 ஆமாண்டு யிமிலிலி மற்றும் 1947இல் கி நிமிஸிலி மிழி கீமிழிஜிணிஸி எனத் தனது இரண்டு நாவல்களை வெளியிட்டார்.ஜாஸ் இசை குறித்த தொடர் ஆய்வுக்கட்டுரைகளுக்காகவும் போற்றப்படுகிற லார்க்கின், போர்களுக்குப் பிந்தைய பிரிட்டனின் ஆகச்சிறந்த கவிஞர்களில் ஒருவரெனக் கருதப்படுகிறார்.பிரிட்டானிய அரசாங்கத்தின் அதிகார்வப்பூர்வ கவிஞராகப் பணியமர்த்தப்படுவதற்குக் கிடைத்த புகழ்மிகு வாய்ப்பை பல முறை மறுத்தார் லார்க்கின்.

லார்க்கின் எழுதியவற்றுள் ஜிலீமீ லிமீss ஞிமீநீமீவீஸ்மீபீ (1955), ஜிலீமீ கீலீவீtsuஸீ கீமீபீபீவீஸீரீs (1964) ணீஸீபீ பிவீரீலீ கீவீஸீபீஷீஷ்s (1974)ஆகியன முக்கியத்துவம் வாய்ந்தவை.எளிய நிகழ்வுகளை அபாரமான கவிதாகணங்களாக மாற்றும் அவரது லாவகம் பற்றிக் கொள்ள வேண்டியது. தேர்ந்த ஆட்டக்காரன் தன்னை நோக்கிச் சுழற்றி அனுப்பப் படுகிற சுழல்பந்தினைப் பிசகின்றி வான் நோக்கி உயர்த்தி அடிக்கிறாற்போலத் தன் கவிதையினூடாக உலகளாவிய தன்மை மிகுந்த வாழ்க்கைப்பாடுகளை விவரித்து வைப்பதன் மூலமாக அவற்றின் இருளிடை நிசப்தங்களையும் உபமொழிகளாக்கி சொல்ல வந்ததைப் பாந்தம் குன்றாமல் பேசிச் செல்வது பிலிப் லார்க்கினின் பாணி. கீழ்க்காணும் மதியங்கள் நல்லதோர் சாட்சியக்கவிதை.

 

மதியங்கள்

பிலிப் லார்க்கின்

தமிழில்: நிசி

நிறமிழக்கிறது கோடை

 

புதிய கேளிக்கை மைதானத்தின்

எல்லை மரங்களிலிருந்து

இலைகள் ஒன்றிரண்டாக விழுகின்றன.

வெற்று மதியங்களில்

ஊஞ்சல்களின் அருகேயும் மணல்திட்டிலும்

இளம் தாயினர்

தங்கள் குழந்தைகளை விளையாட விடுகின்றனர்

 

வியாபாரங்களில் தேர்ந்த கணவன் மார்கள்

பின்னே சற்று இடைவெளிக்கு அப்பால்

நின்று கொண்டிருக்கிறார்கள்

சலவைக்கான துணிக்குவியலுடன்,

பெயர்கள் பொறிக்கப்பட்ட திருமண ஆல்பம்

தொலைக்காட்சிக்கருகே கிடக்கிறது

ஊடலாடுகின்ற இடத்தை தென்றல்காற்று சிதைக்கிறது

எனினும் அது இன்னமும் ஊடலாடுகிற இடமாகவே இருக்கிறது

(ஆனால் காதலர்களெல்லாரும் பள்ளிக்கூடங்களில் இருக்கின்றனர்)

குழந்தைகள் பழுக்காத கருங்காலிக் கொட்டைகளை

வீடு திரும்புகையில் எடுத்துச் செல்லும் எதிர்பார்ப்புடன்

தேடிக்கொண்டிருக்கிறார்கள்

அவர்கள் அழகு கனிந்திருக்கிறது

ஏதோவொன்று வாழ்வின்

ஓரத்திற்கு அவர்களைத்

தள்ளுகிறது

வெளிநாடுகளுக்குச் செல்வதையோ நெடிய பிரயாணங்களையோ பிற நாட்டுக் கலாச்சாரம் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை அணுகுவதையோ விரும்பாதவராகப் பல வினோத குணங்களைத் தன்னகத்தே கொண்டிருந்த லார்க்கின் தன்னை முழுமையான இங்கிலாந்துவாசி ஆங்கிலேயனாக எப்போதும் உணர விரும்பினார்.தனது கவிதாபாணியை மரபுசார்ந்ததாகக் கொண்டிருந்தாலும் கவிதைகளுக்கான பேசுபொருட்களை நவீன வாழ்விலிருந்து கையாள்பவராகவே லார்க்கின் திகழ்ந்தார்.இந்த முரண் ஏற்படுத்திக் கொடுத்த நயம் அவரது கவிதைகளெங்கும் தொனித்தது.பிலிப் லார்க்கின் ஆங்கிலக் கவிதாவெளியில் நுட்பமான சலனங்களுக்குரிய ஒரு பெயர்.

 

பாறையைத் தழுவும் நதியின் பாடல்

சுசீலா மூர்த்தி

 

கவிந்துகிடக்கும் எல்லா மௌனங்களும் இரவின் வார்த்தைகளை உரத்துப்பேச…

நீரருந்தும் சிட்டுக்குருவியைப் போல் தலையை சிலுப்பிக்கொணடு

திரும்பிப் பார்க்கிறேன்…

குசுனிக்குள்ளிருந்து வந்து

சுற்றிலும் நோட்டமிட்டபடி ஒருத்தி

பவளமல்லியைப் பறித்துக்கொண்டு செல்ல

ஒளிந்துகொள்ள இடம் தேடியது நிலவு…

திராட்சைரசம் குடிக்கலாம் வாவென அழைத்தேன்….

கண்களில் புலுனிகள் பறக்க

இறங்கிவந்து கால்மடக்கி

உட்கார்ந்து கொண்டது…

மர்மமான நிறத்தில் படிந்திருந்த இருளைத் துளைத்துவந்த ஓசை

பாறையைத் தழுவும் நதியின் பாடல்தான் என்றது……

கிரிஞ்சமரத்தின் முகைகளை உதிர்த்துச் செல்லும் காற்று

கூந்தல் கலைப்பது பிடித்திருப்பதாகச் சொல்லிவிட்டு…

பெய்யத் தொடங்கும் வரைதான்

மேகங்களால் இரகசியங்களைத் தக்க வைத்தருக்க முடியும் என்று சிரித்தது…

மனிதக் கட்டுமானங்களை மீறி

பால்வீதி முடியும் இடத்தில் சந்திப்போமா எனறேன்…

நான் கல்லெறிந்து விளையாடும் குளங்களை மீட்டுக்கொடு வருகிறேன் என்று

கடந்துவிட்ட அதன் கண்களில் வலி நிரம்பியிருக்க

குவளையில் திராட்சைரசம் அப்படியே இருக்கிறது

காட்சிகளைக் கலைத்தும் அடுக்கியும் பார்ப்பதான சாத்தியங்களை முன்பின்னாய்ச் சிதறி விளையாடுவது மேற்புற நோக்கில் மொழியின் கேளிக்கை. உள்ளார்ந்து அவதானிக்கையில் அதன் செயல்முறை கோருகிற இருள் மேதமை ஆச்சர்யப் படுத்தும் சாத்தியமற்றவைகளைச் சாத்தியம் செய்து பார்க்கிற ஆட்டத்தின் பலாபலன்களைப் பலிதத்துக்குப் பிந்தைய ஆருடங்களைப் பகிர்ந்து செல்கிற வினோதம் கவிதை. சுசீலா மூர்த்தி தனக்கென்று சொற்களை எடுத்து அடுக்குகையில் படர்க்கையிலிருந்து மெல்ல உருக்கொண்டு புள்ளிகளின் வழியே உயிர்பெறக் கூடிய கோலச்சித்திரமென்று வியப்பளிக்கிறது கவிதை. மொத்தமாய்த் தன் கவிதை எதை விளைவிக்க வேண்டும் என்கிற கணித முகாந்திரங்கள் ஏதுமில்லாது தருணங்களை அதனதன் போக்கில் கொண்டும் கைவிட்டுமாய்த் தன் கண்களால் கடக்கப் பார்க்கும் எதார்த்தமான மொழி கைவரப் பெற்றிருக்கிறார் சுசீலா. ஆரம்ப நிலை உத்தம அறிதல் என்பனவெல்லாம் கவிதைகளைப் பொறுத்தவரை யாராலும் அறுதியிட்டுத் தரவியலுகிற மதிப்பெண் பட்டியல் ஏற்ற இறக்கங்கள் போல் எளிதானதல்ல. ஆழ்ந்து திரும்புகையில் ஒவ்வொரு வாழ்வும் வெவ்வேறு நதியின் பிடியுள் அலசி மீள்கிற மீமொழிகளாக மாற்றம் கொள்வது மறுக்க முடியாத சத்தியம். பெருங்காட்டு நேசம் என்ற தலைப்பில் தன் முதல் தொகுப்பை வெளியிட்டிருக்கும் சுசீலா மூர்த்தி இன்னும் இருளையும் ஒளியையும் ஊடுபாவுகளாக்கிப் பல கவிதைகளை எழுதுவார் என்பது திண்ணம்.

நாமக்கல்லைச் சேர்ந்த தனசக்தியின் மூன்றாவது கவிதைத் தொகுதி பிங்க் நிறக் கடல். இவரது முதற்தொகுதி வாளிப்பற்ற உடல்காரி 2018 ஆமாண்டும் பியூலா 2019 ஆமாண்டும் வெளியாகின.மிக நுட்பமான கவிதை உலகத்தைக் கட்டமைக்க விரும்பும் தனசக்தி ஆரவாரம் கிஞ்சித்தும் அற்ற சொற்களைக் கொண்டு தன் கவிதைகளை நாடுபவர். சின்னஞ்சிறிய தருணங்களின் தோற்றுவாயில் நின்றுகொண்டு ஒன்றை வேறொன்றாக்கும் மந்திரவாதக் கணமாக அதனை மாற்றக் கூடிய கவிதைகளை எழுதுகிறார். அபாரமான கவிதைகள். எந்தவிதமான பூச்சுக்களும் அற்றவைகளாக ஒரு ரகசியத்தின் மறைவினைப் போல் திகழ்பவை என்பதை இன்னொரு முறை நிறுவும் இந்தக் கவிதை தனசக்தியின் மொழிவல்லமையைப் பறைசாற்றுகிறது.

 

ஆதலால் நிலா காண்கிறோம்

 

தடுமாறும் மௌனத்தை

வேறென்ன செய்வது

 

அண்மையின் நடுக்கத்தை

வேறென்ன செய்வது

 

சொற்களைப் புரட்டிக் கொண்டிருக்கும்

அகவெளியை

வேறென்ன செய்வது

 

விரல்களுக்கிடையேயான

இடைவெளியில் பத்து மணல்துகள் தான் இருக்கக் கூடும்

அதைக் கடக்க வேறென்ன செய்வது

 

ஆதலால் நிலா காண்கிறோம்

 

தனசக்தி

பிங்க் நிறக் கடல்

ஜீரோ டிகிரி பதிப்பகம் விலை ரூ 80

 

எல்லார்க்கும் வாய்ப்பதான எளிய நிகழ்தல் ஒன்றை அப்படியே பார்வைக்குக் காட்சியாக்கிச் சொற்கள் வழியாகக் காணச் செய்வதுதான் இக்கவிதையின் ஆகப்பெரிய வெற்றி.

எளிமை உண்டாக்கக் கூடிய உணர்வு வெளியின் அளவற்ற நான்கு மால்கள் வியப்பளிப்பவை. மேற்காணும் கவிதையில் வேறென்ன செய்வது என்பதைக் கவனித்தால் அங்கே அந்த இரண்டு சொற்கள் நிகழ்த்தித் தருகிற மாபெரும் அனுபவம் மெச்சத் தக்கதல்லவா. காதல் உறவின் சின்னஞ்சிறிய கணங்களைப் பத்திரப்படுத்துவதற்கான ஒரே வழி அதனைப் படர்க்கையில் அள்ளி எறிவதன்றி வேறில்லையே. தனசக்தி இந்தக் கவிதையில் சுட்டுகிற விரல்களிடையே இருக்கக் கூடிய பத்து மணற்துகள்கள் உண்மையில் தயக்கத்தின் பெருமலைகள். கடக்கவேண்டிய கடல்நீளங்கள். உடைத்தெறியவேண்டிய காத்திருத்தல்கள், இன்னும் எஞ்சுகிற சாபங்கள் யாவுமே . கவிதை மட்டுமே செய்து காட்டக் கூடிய மாயங்கள். கனவின் அழியாத சித்திர நிரந்தரம் கவிதை.

“நானொரு பெருங்காடு. அடர்ந்த மரங்களின் இரவு எனினும் என் இருள் குறித்த அச்சமற்றவன் தேவதாருவின் கீழ் ரோஜாக்கள் நிறைந்திருக்கும் கரைகளைக் கண்டடைவான்.”

ஜெர்மன் தத்துவ உலகின் மறுக்க முடியாத பெயர் நீட்ஷே. சத்தியத்தால் கொல்லப்படாதிருக்க கற்பனை உதவுவதாக முழங்கினார்.இறப்பிற்குப் பின் வாழ்வதற்கான உத்தியாகவே கலையை முன் வைத்தார் நீட்ஷே. ஒரு புத்தகம் முழுவதும் சொல்லப்பட்டிருப்பதைப் பத்தே வாக்கியங்களில் சொல்வது தனது லட்சியம் என்றார். கடைப்பிடித்தலே கற்பதற்கான வழி என்பது அவரது வசீகர வாக்கியம். நான் மேலெழுகையிலெல்லாம் அகந்தை எனும் நாய் என்னைப் பின் தொடர்ந்து வருகிறது என்ற நீட்ஷே, அகங்காரம் என்பது ஒரு உன்னதமான ஆன்மாவின் சாரம் என்று பகிர்ந்தார். நீட்ஷே உலகத்தின் பல்வேறு மொழிகளிலும் பெயர்க்கப்பட்டு வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிற ஒரு பெயர். கவிதை எழுப்புகிற தனிமையைக் கடப்பதற்கான தத்துவ ஒளியை ஏற்படுத்திய சிலருள் ஒருவர்.

நீட்ஷேவை எனக்கு முதலில் தெரிய வந்ததற்குக் காரணம் சுஜாதா. பிற்காலத்தில் சுஜாதாவின் ஆளுமை குறித்த அலசலின்போது அவரது தொடர்புனைவுப் பாத்திரமான வஸந்த் மற்றும் பிற கதைகளில் தென்பட்ட வேறு சில பாத்திரங்களிடமெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் நீட்ஷே நிறுவத் தலைப்பட்ட நம்பகங்களின் தாக்கம் இருக்கிறது என்பது புலனாகியது.. ஏன், சுஜாதாவிடமும் அவை முழுமையாக உண்டே.