ஆக்கிரமிப்பு நிலை
நிலையின்மை இல்லாமல் காஷ்மீரில் வாழ்வதென்பது, வசந்த காலத்தில் மலராத மரங்களைப் போலாகும். மரணங்கள் இல்லாத நாட்கள் ஆச்சரியமளிப்பவை. ஆகவே, எதால், எப்பொழுது, யாரால் கீழே தள்ளப்படுவோம் என்று தெரியாமலேயே மலையுச்சியின் விளிம்பில் வாழப் பழகிவிட்டோம்.
ஆகஸ்ட் 5ஆம் தேதி முதலே வதந்திகள் உலா வந்தன. காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகளைத் தரும் சட்டப்பிரிவு 370ம் வெளி மாநிலத்தவர் காஷ்மீரில் நிலம் வாங்க தடை விதிக்கும் பிரிவு 35கி’வும் ரத்து செய்யப்படும் என்று ஒரு செய்தி உலாவியது. தீவிரவாததுக்கு எதிராக ஒரு பெரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிலர் எச்சரித்தனர். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எந்நேரமும் போர் மூளலாம் என்று பல முறை செய்தி வந்தது. இன்னும் சிலர் காஷ்மீர், ஜம்மு, லடாக், காஷ்மீர் என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படும் என்று சொன்னார்கள்.
பொதுவாக முதலில் வரும் வதந்தி உண்மையாகிவிடுகிறது. அரசும் ஊடகங்களும் நடக்கவிருப்பதைப் பெருமுயற்சி எடுத்து மறைத்தன. இந்துக்கள் செல்லும் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டது, முதல் அச்ச அலையை உண்டாக்கியது. பின்பு பெரும் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் என்ற ஆதாரமற்ற செய்தியைக் காட்டி காஷ்மீரிகள் அல்லாத மாணவர்களும், சுற்றுலா பயணிகளும் வெளியேற்றப்பட்டனர். ஏற்கனவே உலகிலேயே மிகத் தீவிர ராணுவக் கட்டுப்பட்டில் இருக்கும் பிரதேசமான காஷ்மீருக்கு கூடுதலாக 35000 ராணுவத்தினர் அனுப்பப்பட்டனர். காஷ்மீரிகளுக்கு அப்போதே தெரிந்துவிட்டது, மிக மோசமாக ஏதோ நடக்கப்போகிறதென்று.
உடனடியாக, காஷ்மீரிகள், ஏதோ சடங்கு செய்வது போல அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வைக்கத் தொடங்கிவிட்டனர். உறவினர்களை, வேண்டியவர்களை அழைத்துப் பேசிவிட்டு நாம் பேசுவது இதுவே கடைசி முறையாக இருக்கலாம் என்று நினைவுறுத்தினர். பெட்ரோல் நிலையங்களிலும், ஏ.டி.எம்.களிலும் வரிசைகள் நீண்டன.
மாநில அரசு ஒரு செய்தியும் வெளியிடாத நிலையில், மக்கள் மிக மோசமான எதிர்பார்ப்புடனிருந்தனர். பலர் இந்தியாவில் 2016இல் நடந்ததைப்போல போல பண மதிப்பிழப்பு அறிவிக்கப்படும், அதனால் ஏடிஎம்மில் குறைந்த அளவு பணம் எடுங்கள் என்று ஒருவருக்கொருவர் எச்சரித்துக்கொண்டோம். எல்லோரும் தொடர்ந்து போனில் பேசிக்கொண்டிருந்த்தார்கள். யாரோ ஒருவர் பைக்கில் கைநிறைய மளிகை சாமான்களுடன், தோளுக்கும், காதுக்கும் இடையே செல்போனை இடுக்கி “போர் அறிவித்துவிட்டார்கள், வேலை செய்தது போதும், நிறுத்து” என்று பேசியபடியே போவதைப் பார்த்தேன். உள்ளூர் ரொட்டிக்கடையில் “எப்படி இருந்தாலும் நம்மீது குண்டு வீசப்போகிறார்கள், இதெல்லாம் வாங்கி வச்சு என்ன பயன்?”என்று யாரோ சொல்வதைக் கேட்டேன். பெண்கள் பலர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் முன் ஸ்ரீநகர் குழந்தைகள் மருத்துவமனையில் டாக்டரிடம் நேரம் வாங்க பெரும் முயற்சி எடுத்தனர். அடுத்த வாரம் பிரசவிக்க இருக்கும் ஒரு நண்பரின் சகோதரியை எப்படியாவது மருத்துவமனக்கு அருகே உள்ள ஒரு உறவினரின் வீட்டில் சேர்க்கவே அந்த நண்பர், ஆகஸ்ட்4, ஞாயிற்றுக்கிழமை பெரும்பகுதியைச் செலவழித்தார்.
ஜம்முவிலிருந்த்து வந்த நண்பர்கள் சிலர், ஸ்ரீநகருக்குள் டாங்கிகள் வருவதைப் பார்த்ததாகவும், போர் மூளப்போவது நிச்சயம் என்றும் சொன்னார்கள். எங்கு பார்த்தாலும் அணியணியாக ராணுவ அதிகாரிகள். காஷ்மீரின் வடக்குப்பகுதியில் இருக்கும் எங்கள் ஊரில் சுமார் 2,200 பேர் இருப்பார்கள், ஊரினுள் வந்த ராணுவத்தினரை பார்த்துவிட்டு என் மாமா சொன்னது, “ஊருக்குள் வந்த ராணுவத்தினரை சமமாகப் பிரித்து வீடுகளில் தங்க வைத்தால் ஒரு வீட்டுக்கு மூவர் வீதம் இருப்பார்கள். அத்தனை ராணுவத்தினர் இருக்கிறார்கள்” என்று. கடல் மட்டத்திலிருந்து 7,500 அடி உயரத்தில் டோடா மாவட்டத்தில் இருக்கும் ஒரு தோழி, அவர்கள் கிராமத்திலும் அதே போன்று ராணுவத்தினர் வந்திருப்பதாகச் சொன்னாள். யாருக்கும் ஒன்றும் புரியாத நிலையில், பல மோசமான விளைவுகளுக்குள் ஊசலாடிக்கொண்டிருந்த மக்கள் பின்பு இது எப்பவும் நடப்பதுதானே என்று எண்ணத் தொடங்கினர்.
ஆகஸ்ட்4,11 மணியளவில், எங்களூரில் ஒரு பொட்டல் காட்டில் குவிந்த, துணை ராணுவத்தினர், முழங்கால் பூட்ஸ், முகத்தை மூடிய தலைக்கவசம் அணிந்து, பார்வைக்கு ஒருவருக்கொருவர் வித்தியாசமே இல்லாமல் பார்ப்பவர் மனதில் திகிலூட்டினர்.
அரசாங்கமோ காஷ்மீரின் அரசியல் சட்ட நிலையில் எந்தவித மாற்றத்தையும் மாற்றும் எண்ணம் இல்லை என்று சொன்னது மட்டுமில்லாமல், பள்ளத்தாக்கில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் என்று உளவுச்செய்தி வந்திருப்பதாக ஒரு கதையாடலை நிகழ்த்திக்கொண்டிருந்தது. ஆகஸ்ட் 3ஆம் தேதி இரவு வரை அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்யும் திட்டம் ஏதுமில்லை என்று தில்லி அரசால் நிறுவப்பட்ட கவர்னர் சத்திய பால் மாலிக் சொல்லிக்கொண்டிருந்தார்.
ஆகஸ்ட் 4ஆம் தேதி, ஒன்றன் பின் ஒன்றாகத் தகவல் தொடர்பு சாதனங்கள் முடக்கப்பட்டன. வலைதளம், அலைபேசி, தொலைபேசி, அகல அலைவரிசை (BROAD BRAND), கேபிள் எதுவும் வேலை செய்யவில்லை. அதன் பின், எல்லா வதந்திகளும் உண்மையாயின.
உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைக்காட்சியில் நிகழ்த்திய உரையொன்றில் “அரசிலமைப்பு சட்டம் 370ஐ ரத்து செய்ததன் மூலமாக, ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒரு உண்மையான அங்கமாகிவிட்டது. காஷ்மீர் பூமியில் ஒரு சொர்க்கம், அது மாறாது, அப்படியே இருக்கும். ஐந்து வருடங்கள் கொடுங்கள் எங்களுக்கு, நாட்டிலேயே மிக வளர்ச்சியடைந்த மாநிலமாக காஷ்மீரை மாற்றிக் காண்பிக்கிறோம்.காஷ்மீர் இளைஞர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். மோடி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வையுங்கள். எதிர்மறையாக ஒன்றும் நடந்துவிடாது. எதிர் கட்சியினர் அனைவரும் காலங்காலமாகப் பொய் பேசி வருகின்றார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்காதீர்கள்” என்று சொன்னார்.
அரசியலமைப்பு சட்டத்திலுள்ள காஷ்மீர் தொடர்பான பிரிவுகள் ரத்து செய்யப்பட்ட செய்தியைத் தொலைக்காட்சியில் கேட்டபோது கூர்மையான ஒரு கத்தியைக்கொண்டு அறுத்தால் அசையமுடியாமல், அலற முடியாமல் ஆனால் வலியை மட்டுமே உணர்வது போலிருந்தது. நெடுங்காலம் உளவியல் ரணமாகி, மனச் சோர்வடைந்த காஷ்மீர் மக்களுக்கு இப்போது எதற்காக இவர்கள் இவ்வளவு முனைகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது. இறுதியில் அவர்களுக்கு வேண்டியது நிலப்பரப்பு – ஒரு கோடி மக்களின் வாழ்வியலை மறுத்துவிட்டு ‘வளர்ச்சி’யைத் தருவது. நம்பிக்கை துரோகத்தையே, சலுகையாக ஜோடித்துவிட்டு என்னுடைய ஆசைகளையும், போராட்டங்களையும் செல்லாக்காசாக்கி, கொஞ்சநஞ்சமிருந்த நம்பிக்கையையும் ஒழித்தாகிவிட்டது.
எங்கள் ஒளிமயமான எதிர்காலத்தைப் பாராளுமன்றம் விவாதித்ததைப் பார்த்தோம்: எங்களுக்கு என்ன தேவையென்பதை, ‘விடுதலை’ பெற்ற நாங்கள் எப்படி இனிமேல் மகிழ்ச்சியில் திளைக்கப்போகிறோம் என்பதைக் கேட்டோம். பாராளுமன்றத்தின் மேல் சபையில் அறுதிப்பெரும்பான்மையினர் காஷ்மீரின் பாதுகாப்புக்கும், சுயநிர்ணயத்துக்கான கடைசி உரிமையை ஒழிக்க வாக்களித்தனர். லோக் சபாவிலோ 5:1 என்ற எண்ணிக்கையில் இந்தியாவின் பிரதிநிதிகள் அரசாங்கத்திக்கு சார்பாக வாக்களித்தார்கள். நாட்டிற்காக சேவை செய்த மனிதனின் பெருமையான புன்சிரிப்பில்லை அங்கு. அங்கிருந்தது, ஒரு இனத்தினை, மக்களை அவமதித்த கொடுங்கோலர்களின் எக்காளம்.
நிதர்சன மறுப்பு நிலை
2014 பொதுத்தேர்தலுக்குப் பின், தில்லியில் உள்ள, ‘வளரும் சமூகங்கள் ஆராய்ச்சி மையம்’ (CSDS) காஷ்மீர் எவ்வாறு நிர்வகிக்கப்பட வேண்டும் என்பது பற்றி மக்களின் எண்ணங்களை அனுமானிக்க ஒரு ஆய்வை நடத்தியது. அதில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி “காஷ்மீர் பிரச்னைக்கு சிறந்த தீர்வு என்ன” என்பது. பதிலளித்த பாதிப் பேர் இதற்குப் பதிலே சொல்லவில்லை, பதிலளித்தவர்களில் பெரும்பாலானோர் இன்னும் அதிக உரிமைகள் அளிக்கப்பட வேண்டுமென்றும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டுமென்றும் என்று பதிலளித்தார்கள். 0.2 சதவிதித்தனர் மட்டுமே பிரிவு 370 ரத்து செய்யப்பட வேண்டும் என்று சொன்னவர்கள்.
இப்பிரகடனத்தை தொடர்ந்து தங்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல், பூட்டி வைத்துக்கோண்டு கடுமையான மன அழுத்தத்தில் இருக்கும் இந்த நேரத்தில், படகு எந்த திசையில் செல்லும் என்று கணிப்பது கடினம். 370 ரத்துக்குப்பின் நான் சந்தித்த மாணவர் ஒருவர் என்னிடம் சொன்னது, “இத்தனை வருட ஆக்ரமிப்புக்குப் பிறகு, வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? நம்மீது மலர் சொரிவார்களென்றா? இது நடந்துதானாகும்”
“ஒரு விதத்தில், இந்த சட்டப் பிரிவுகளை ரத்து செய்தது காஷ்மீரின் உண்மை நிலைமையை விளக்கவும். ஜனநாயகமென்ற போலிப் போர்வையை விலக்கவும் உதவும்” என்று நான் பேசிய மற்றொரு காஷ்மீரி என்னிடம் சொன்னார். ஏ.ஃ.பி நிருபரிடம் பேசிய ஒருவர் “நீங்கள் எவ்வளவு இந்தியக் கொடிகளை வேண்டுமானாலும் ஏற்றலாம், ஆனால் என்னை இந்தியனாக்க முடியாது” என்று சொன்னார். இத்தகைய எதிர்ப்புகளைத்தான், இந்த குரல்களைத்தான் தில்லி அரசாங்கம் ஒடுக்க தன்னாலான எல்லா முயற்சிகளையும் செய்கிறது.
இணையதளம் அரசாங்கத்தால் முடக்கப்படுவதைக் கண்கானிக்கும் Internetshutdown.in, என்ற வலைத்தளம் காஷ்மீரில் 2012 முதல் 178 முறை இணையதளம் முடக்கப்பட்டது என்று சொல்கிறது. இதில் 2018–2019 இடையேயான நாட்களில் இனையதளம் முடக்கப்பட்டது 118 முறை. ஒரு ஜனநாயகத்தில் பேச்சுரிமையைத் தடை செய்யவும், மக்கள் கூடுவதைத் தடுக்கவும் இது செய்யப்படுகிறது என்பது ஒரு புறமிருக்க, சாதாரண காஷ்மீரிகளை பொறுத்த வரை மிகக் கொடுமையானது. இந்த முடக்கங்கள், மாநிலத்துக்கு வெளியே இருக்கும் குடும்பத்தாரையும், நண்பர்களையும் தொடர்பு கொள்ள முடியாமல் போவதேயாகும்
இக்கட்டுரையை நான் எழுதும்போதே, ஸ்ரீநகரில் பல பெற்றோர் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தங்கள் குழந்தைகளுடன் பேச, தங்கள் தொலைபேசி எண்ணை பதிவு செய்ய வரிசையில் காத்திருக்கின்றனர். பல இடங்களில் உறவினர்களை தொடர்புகொள்ள ராணுவ முகாம்களுக்கு செல்லுமாறு மக்கள் அனுப்பப்பட்டனர். ஒரிரு நிமிடங்களுக்கு மேல் யாரும் பேச அனுமதிக்கப்படுவதில்லை, ஊரில் உள்ள காலி வீட்டை ராணுவத்தினர் ஆக்கரிக்காமல் இருக்க என்ன வழி என்று திகைத்து நிற்கின்றனர் பலர். காலி செய்யப்பட்ட கல்லூரி விடுதிகளை ராணுவத்தினர் கையகப்படுத்திவிட்டதாக ஒரு செய்தி உலவுகிறது. ஆனால் ஒன்று தெளிவு, இவை வதந்திகளோ அல்லது செய்திகளோ சமீபத்திய காஷ்மீர் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தெரியும் எல்லாமே நடக்க சாத்தியம்தானென்று.
ஒரு கணப்பொழுதில் எங்கள் அரசியல் நிலைமையை, அவமதிக்கத்தக்க வகையிலே, ஒழித்துக்கட்டியது ஒரு புறம் இருக்க, முள்கம்பிகள் சுருள் சுருளாகத் தங்கள் சொந்தநாட்டில் எங்கும் நகர முடியாமல் கடும் அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள் காஷ்மீர் மக்கள். நடமாட்டம் மிகக் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், மக்கள் மருத்துவமனைக்குச் செல்லவும், தொலைபேசி சேவை இல்லாமல் ஆம்புலன்ஸை அழைக்க முடியாமலும், என்ன செய்வதென்று தெரியாமலும் விழிக்கின்றனர்.
ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல், காஷ்மீர் அரசியல் வரலாற்றின் இந்தப் புதிய சகாப்தத்தைப் பற்றி செய்திகள் வெளியிடும். இந்திய ஊடகங்கள், அரசாங்கத்துக்கு சார்பாகவே செயல்படுகின்றன. இன்றும், காலியான தெருக்களைக் காட்டி, ஏதோ மக்கள் எல்லோரும் தாங்களே முன்வந்து தங்கள் சுதந்திரத்தை விட்டுக் கொடுத்தது போல், காஷ்மீர் அமைதியுடன் இருப்பதாகக் காட்டுகின்றனர்.
ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க, ஊரடங்கு உத்தரவின்போது பயணிக்க, அனுமதிச் சீட்டு வழங்காமல் செய்தி இருட்டடிப்பு செய்ய உள்ளூர் நிர்வாகத்திற்கு ஆணையிடப்பட்டிருப்பதாக டெக்கான் ஹெரால்ட் நிருபர் ஒருவர் சொன்னார். இரண்டுநாள் ஊரடங்குக்குப் பிறகு, இணையதளம் முடக்கப்பட நிலையில், சில செய்தியாளர்கள் தங்கள் கட்டுரைகளை விமானப் பயணிகளிடம் யு.எஸ்.இ.யில் ஏற்றி அனுப்பினர். இன்னும் சிலர் தில்லிக்குப் பறந்து சென்று செய்திகளை வெளியிட்டனர். மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், காஷ்மீரிகள் பால்கார்காரர்கள், ரொட்டிக் கடைகள் மளிகைக் கடைகள், மற்றும் தொழுகைக்குச் செல்லும் வழியில் சந்திப்பவர் வழியாக மட்டுமே செய்திகள் கசிகின்றன.
விடுதலை வேண்டுவோருக்கு நேரெதிர் மூலையில், நெடுந்தொலைவில் இருக்கும் வெகுஜன அரசியல்வாதிகள் – இரு முன்னாள் முதல்மந்திரிகள் உட்பட- ஒரு காலத்தில் விசாரணை கூடங்களாகவும், சித்திரவதை அறைகளாகவும் செயல்பட்ட விடுதிகளில், வி.ஐ.பி சிறைச்சாலைகளில், விருந்தினர் மாளிகைகளில் சிறை வைக்கப்பட்டனர். இதே விடுதிகளில், அறைகளில், காஷ்மீரிகளின் காதை பிளக்கும் அலறல் எதிரொலித்து வெகு காலம் ஆகவில்லை. இந்த அரசியல் தலைவர்களே அன்று அதற்கு அனுமதி தந்து கையொப்பமிட்டவர்கள்.
விமான நிலையத்தில் சந்தித்த கீழ்மட்ட அரசியல்வாதி ஒருவர் “என்னையும் கைது செய்யாமலிருக்க முகத்தை மறைக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். எல்லாமே முடிந்துவிட்டது. இனி காஷ்மீர் இல்லை,” என்று என்னிடம் சொன்னார். பல காலம் அரசைத் தன் கையில் வைத்திருந்த, ஃபரூக் அப்துல்லா, மோடியும், கவர்னர் மாலிக்கும் பொய்யுரைத்ததைப் பற்றி வெளிப்படையாகத் தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். “என் மாநிலம் எரிக்கப்படும் போது, என் மக்கள் மின்சாரம் வைத்து சித்திரவதை செய்யப்படும்போது, வீடுகளில் தண்டிக்கப்படும் போது நான் வீட்டுக்குள் சும்மா இருப்பேனென்று நினைத்தீர்களா? இது நான் நம்பும் இந்தியா அன்று” என்று செய்தி வெளியிட்டார். இந்த அதிர்ச்சி வெளிப்பாடும், நம்பிக்கை துரோக கூப்பாடும் தங்கள் அரசியல் வாழ்வைக் காப்பாற்றிக்கொள்ள போடும் கூச்சலாயிருக்கலாம். இந்திய ஜனநாயகத்திக்குள் காஷ்மீர் ஒரு மாநிலமாக இயங்க வேண்டுவோருக்கும், விடுதலை வேண்டுவோருக்கும் இடையேயான கோடு இப்போது இல்லை என்பது தெளிவாகிவிட்டது. அரசியல்வாதிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே ஒரு வித்தியாசம். சாதாரண காஷ்மீரிகளூக்கு இது எதுவுமே ஆச்சரியம் அளிப்பதாயில்லை!
மறதி நிலை
இந்திய அரசின் இத்தகைய மிருகத்தனமான எதிர்வினைக்கு மறக்கடிக்கப்பட்ட ஒரு நெடும் வரலாறு உண்டு. 1947இல் பாகிஸ்தானின் கொரில்லாப் படைகள் ஊடுருவும் முன் பிரிவினையே பெரும்பாலும் காஷ்மீரிகளின் எண்ணப்போக்காக இருந்தது. ஒரு இஸ்லாமிய பெரும்பான்மை சமஸ்தானத்திற்கு அரசராக இருந்த அப்போதைய இந்து அரசர் ஹரி சிங், பேச்சுவார்த்தைக்குப் பிறகு அக்டோபர் 1947இல், பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு இவை மூன்றில் மட்டும் இந்திய அரசு சட்டமியற்ற மட்டிட்ட அதிகாரங்களை அளித்து, இந்தியாவுடன் இணைந்தார்.
இந்த ஒப்பந்தப்படி, மற்ற மாநிலங்களிலிருந்து வேறுபட்ட ஒரு தனி அந்தஸ்து ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டது. அதன்படி என்று அமைதி திரும்புகிறதோ அன்று காஷ்மீர் மக்களின் எண்ணம் கேட்கப்படும், “காஷ்மீர் மக்களை ராணுவம் கொண்டு வெல்ல வேண்டுமென்று நாங்கள் எண்ணவில்லை… கட்டாயக் கல்யாணம், கட்டாயச் சேர்க்கை வேண்டாம் எங்களுக்கு என்று, 1951, ஆகஸ்ட் 7 அன்று ஜவகர்லால் நேரு பாராளுமன்றத்தில் சொன்னார். மேலும் சில மாதங்கள் கழித்து 1952 ஜனவரி 2ஆம் தேதி, அம்ரித் பஜார் பத்திரிகையிடம் பேசுகையில், “காஷ்மீர் இந்தியாவுக்கோ, பாகிஸ்தானுக்கோ சொந்தமானது அல்ல, காஷ்மீர் மக்களுக்குச் சொந்தமானது, காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தபோது, பிளெபிசைட்டின் முடிவுப்படி நடப்போம் என்று காஷ்மீரக தலைவர்களிடம் உறுதியளித்துள்ளோம் பிரச்சனையை ஐநா சபைக்கு எடுத்து சென்று, அமைதியான ஒரு தீர்வு காண்பதாக உறுதியளித்திருக்கிறோம்” என்று சொன்னார்.
காஷ்மீரிகள் கவலைப்படுவது 370 ரத்து செய்யப்பட்டதற்காக அல்ல. ஏனென்றால் இந்தியாவுடன் பிணைத்த கயிறு அதுதான். 370 ரத்தைப் பற்றிய அவர்களது கவலை, காஷ்மீரிய மானுடவியலாலர் அத்தர் கியா சொல்வதுபோல, “இந்தியாவின் மக்கள்தொகை பயங்கரவாதமும், கலாச்சார அழிப்பும்தான்.” மேலும் அவர் சொன்னது எதிர்காலத்தில் காஷ்மீரிகள் “இந்திய குடியமர்வு”க்கு எதிராக “காஷ்மீரின் நிலவியல் இறையான்மையை” காக்க வேண்டும் என்பதே. இந்தியாவின் ஒரே இஸ்லாமிய பெரும்பான்மை மாநிலம் காஷ்மீர் மட்டும்தான். இந்திய அரசாங்கம் இந்துக்கள் அல்லாத பழங்குடியினரை சட்டீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் எவ்வாறு நடத்துகிறார்கள் என்பது காஷ்மீர் மக்கள் கண்ட பிறகு அவர்கள் அதைவிட மோசமாக நடத்தப்படுவார்கள் என்று அச்சப் படுவதற்கு எல்லா காரணங்களும் உள்ளன.
கடந்தகாலத்தில் காஷ்மீர் மக்கள் பல வெளி உலகத்து அரசியல் நிபுணர்களின் விவாதங்களைக் கேட்டிருக்கிறார்கள்: காஷ்மீரிகள் வேண்டுவது KFCயும், MALLகளும்தான், இல்லை வேலையின்மைதான் பயங்கரவாதத்துக்கு காரணம். வேலையில்லா இளைஞர்களை பாகிஸ்தானும், மத தீவிரவாதமும் தவறான பாதையில் இட்டுச் செல்கின்றன. இம்முறை, அரசாங்கத்தின் நிலைப்பாடு “பொருளாதார முன்னேற்றம்தான்.” எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு என்று கூறி, மீண்டும் பல ஆண்டுகளாக சுய நிர்ணயத்துக்காகப் போராடிய காஷ்மீரிகளின் அபிலாஷைகளை முற்றிலும் நிராகரித்துவிட்டது.
1990களில் காஷ்மீரில் வளர்ந்த எல்லோருக்கும் தெரியும், அமைதி, இயல்பு நிலைமை, வளர்ச்சி போன்ற வெத்து வார்த்தைகளை நன்கு அறிவர். ஆதாரங்களைப் பற்றியும், தேதிகளைப் பற்றியும், எங்களுக்கு அளிக்கப்பட்ட அநீதி பற்றியும் பேசுவது எவ்வளவு அயர்ச்சியாகவும், பயனற்றதாகவும் இருக்குமென்பதை நாங்கள் நன்கறிவோம். இந்திய அரசிலமைப்பு மீறல்களையோ அல்லது மீண்டும் மீண்டும் மீறப்படும் சர்வதேச ஒப்பந்தங்களைப் பற்றியோ பேசி ஒரு பயனுமில்லை. “நமது அறிவு பூர்வமான போர் தோல்வியடைந்துவிட்டது. ஒருவருக்கும் நம்மைப் பற்றிய அக்கறையில்லை, யாரும் நாம் சொல்வதை கேட்பதில்லை. ஒரு எதிரொலி அறையினுள்ளே நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்” என்று பத்திரிகை நிருபர் ஒருவர் என்னிடம் சொன்னார்.
காஷ்மீரிகள்மீதான வெறுப்பே இந்தியாவின் பெரும்பன்மை கதையாடலாக இருக்கிறது இஸ்லாமிய தீவிரவாத்துடனும், காஷ்மீரில் பாகிஸ்தானின் இடையூடுகளுடனும் இணைத்து, காரணமாகக் காட்டி காஷ்மீரிகளின் அபிலாஷைகளை, அரசாங்கத்தின், ராணுவத்தின் அத்துமீறல்களை நியாயப்படுத்துகிறது.
1987தேர்தலை இந்திய அரசாங்கம் முற்றிலுமாக கையகப்படுத்தி, காஷ்மீர் மக்களுக்கு புது தில்லியின் ஜனநாயக பசப்பின் மேல் கொஞ்சநஞ்சமிருந்த நம்பிக்கையையும் காலி செய்தது. இதன் விளைவாக காஷ்மீரின் நிலை முற்றிலும் மாறியது. இத்தேர்தலுக்குப் பின் தேர்தல் முறையை நம்பி இதில் தீவிரமாக செயல்பட்ட பல தலைவர்கள் கைது செய்யப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார்கள். ஆனால் 1989இல்தான் அமைதியான முறையிலே பாகிஸ்தான் பின்பலத்தோடு இளைஞர்கள் பலர் ஆயுதமேந்த நடந்துகொண்டிருந்த போராட்டம் வன்முறையாக மாறியது. ஆயுதப் போராட்டம் தீவிரமடைய தீவிரமடைய அரசு இரும்புக்கை கொண்டு அதை ஒடுக்க யத்தனித்தது. பாகிஸ்தானை தளமாகக்கொண்டு இயங்கிய போராட்டம் 2008க்குப் பிறகு வலுவிழக்க இது மீண்டும் மாறியது. பொது மக்களுக்கும் ராணுவத்துக்கும் இடையேயான போராட்டமாக மாறியது. அதன்பின் காஷ்மீரின் கதை நம்பிக்கைத் துரோகம், செயல்படுத்தப்படாத வாக்குறுதிகள், சாவு ஊர்வலங்கள் என்று நீள்கிறது.
நிலமும், நிஜ நிலையும்
காஷ்மீருடன் காஷ்மீரிகளுக்கு உள்ள பிணைப்பை, நாங்கள் ஏன் எங்கள் நிலத்துடன் இப்படி பிணைந்திருக்கிறோம் என்று விளக்குவது கடினம். காஷ்மீருக்கு வெளியே இருந்து பிரிவு 370 ரத்தை ஆதரிப்பவர்கள், எப்படி இப்போது காஷ்மீரில் நிலம் வாங்கலாம் என்று குதூகலிக்கிறார்கள். இன்னும் சிலருக்கு இது காஷ்மீர் நிலத்தை அடைய மட்டுமல்ல, காஷ்மீர் பெண்களுக்கும் வழி வகுத்துவிட்டதாக நினைக்கிறார்கள். ட்விட்டரில் பாஜக ஆதரவாளர்கள் பலர் எப்படி சிவந்த காஷ்மீர் பெண்களைத் திருமணம் செய்ய இனி தடையில்லை (அரசியல் சட்டப் பிரிவு 35கA’யின்படி காஷ்மீரிகள் இந்த்தியர்களை திருமணம் செய்தால் அவர்களுடைய தாயின் சொத்தில் உரிமை கொண்டாட முடியாது) என்று கொண்டாடினார்கள். தில்லியில் படிக்கும் இரண்டு காஷ்மீர் பெண்கள் தெருவில் ஆண்கள் அவர்களைப் பார்த்து “இப்போது உங்களையும் சேர்த்தே அழைத்துச் செல்கிறோம்” என்று கிண்டல் செய்ததாகச் சொன்னார்கள்.
நாகரிகமற்ற இந்த தற்பெருமையும், பெரும் உத்வேகத்துடன் பெண் உடலை வணிகமயமாக்கும் சொல்லாடலும் ஒருபுறமிருக்க, எங்கள் தலைவிதி குறித்த உரையாடல்கள் அனைத்தும் எப்படி இந்தியா காஷ்மீரிகளை வைக்க வேண்டிய இடத்தில் வைத்துவிட்டது என்று நினைவூட்டவே நிகழ்த்தப்படுகின்றன. இந்திப்படம் போன்ற எழில்மிகு காஷ்மீரில் வாழ்வது சுலபம், ராணுவக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் உங்கள் ஒவ்வொரு நகர்வையும் ஆயுதமேந்திய ராணுவத்தினர் கண்காணிக்கும் ஒரு நிலப்பரப்பில் வாழ்வதென்பது முற்றிலும் வேறு.
சமீப காலம் வரை இந்த பிராந்தியத்தை ஆக்ரமித்த சினம் இன்னும் தெருக்களில் தெரியவில்லை, ஆனால் உள்ளே கனன்றுகொண்டிருக்கிறது. ஒரு நிலையில் எரிதழல் நிறைந்து கொழுந்துவிட்டெரிந்த காஷ்மீரில் இன்று நினைவுகளின் சாம்பல் மட்டுமே மிஞ்சியிருப்பதைப்போல் தோன்றலாம். கனன்று கொண்டிருக்கும் உணர்ச்சி கங்குகள் தோல்வியை ஒப்புக்கொண்டதாக இல்லை. மக்களின் புதிய வியூகமா என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லும். தேர்தல், அமைதியான போராட்டம், சட்ட பூர்வமான மனுக்கள், கல்லெறிதல், தீவிரவாதம் என்று காஷ்மீர் மக்கள் எல்லா வகைகளிலும் தங்கள் உரிமைக்காக முயன்று பார்த்துவிட்டார்கள். இப்போதைக்கு எல்லாமே தோல்வியில் முடிந்து, காஷ்மீரிகள் கையறு நிலையில் உள்ளனர். தலைமை என்று ஒன்றில்லை என்பது மட்டுமில்லாமல், நமக்கு எப்போதுமே நியாயம் கிடைக்கப்போவதில்லை என்ற மன நிலையிலேயே இருக்கிறார்கள். ஆனால் நெடுங்காலம் அதிலுள்ள மக்களே ஆச்சர்யப்படும் வகையிலே ஒடுக்கப்பட்ட காஷ்மீர் எப்போதுமே மீண்டிருக்கிறது.
திரும்புவேனா என்று தெரியாமல் விமான நிலையத்துக்கு புறப்படும் நான், குழந்தையை விட்டுவிட்டு செல்லும் தாயைப்போல உணர்கிறேன். இல்லையேல், ஒரு குழந்தையைப் போல, என் நிலத்திலிருந்து மட்டுமல்ல என் மக்களிடமிருந்தும் பிரிக்கப்படுவதை உணர்கிறேன். இம்முறை நான் செல்லும் இடம் சென்றவுடன், வந்து சேர்ந்துவிட்டேன் என்று அழைத்துச்சொல்ல யாருமில்லை. சிலந்தி கூட்டுக்குள்ளே பயணிப்பது போல சினார் இலைகள் சிக்கியிருக்கும் முள் கம்பி தடைகளைத் தாண்டி வந்துவிட்டேன். “விடுதலை வேண்டும் எங்களுக்கு”, ‘இந்தியா திரும்பிச்செல்’ என்று சுவர்களில் கோஷங்கள் கூச்சலிடுகின்றன. அவை பெரும்பாலும் கருப்பு பெயின்ட் கொண்டு அழிக்கப்பட்டுள்ளன, ஆனால் காஷ்மீரிகளுக்குத் தெரியும் சுவர்சித்திரம் என்னவென்று.
Thanks : (nplàvonemag.com, Aug 17, 2019)