ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் காஷ்மீரைச் சார்ந்த ஆதில் தார் மனித வெடிகுண்டாக மாறி துணை ராணுவப் படையான சிஆர்பிஎஃப் படைவீரர்கள் செல்லும் கான்வாய் மீது தாக்குதல் நடத்தியதில் 44 பேர் மரணமடைந்தார்கள். இன்னும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த கொடூரத் தாக்குதலின் காரணமாக நாடெங்கும் மக்களுக்கு எழுந்த கோபத்தினைத் தன் தேர்தல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்த ஆளும் பாஜக அரசு முழு முயற்சி எடுக்கிறது என்றால் மிகை இல்லை.
நாடெங்கும் உள்ள எல்லா பகுதிகளில் இருந்தும் ராணுவத்தில் சேருபவர்களைக் கொண்டவை துணை ராணுவப் படைகள். சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப், ஐடிபிபி, சிஐஎஸ்எஃப் போன்ற துணை ராணுவப் படைகளில் மாநில வாரியாக, சாதிவாரியாக, மதவாரியாக ராணுவத்தில் இருப்பதைப் போல யூனிட்கள் இருக்காது. இவைகளின் பணி ராணுவப் படைகளின் பணியில் இருந்து மாறுபட்டது. நேரடியாகப் போரில், தீவிரவாதிகளைத் தேடி வேட்டையாடும் பணிகளில் இவர்களுக்கான பங்கு வெகு குறைவு.
அரசு நிறுவனங்கள், விமான நிலையங்கள், நாட்டின் எல்லைப் பாதுகாப்பு, தேர்தல் நடக்க தேர்தல் ஊழியர்களுக்கு, வாக்குச் சாவடிகளுக்குப் பாதுகாப்பு, நாட்டின் எந்தப் பகுதியிலும் உள்ள உள்நாட்டு கலவரச் சூழலை அடக்க மாநிலக் காவல்துறையோடு சேர்ந்து பணியாற்றுவது, உள்நாட்டுக் கலவரங்களை அடக்குவது, போராட்டங்கள் வன்முறையாக மாறாமல் தடுப்பது, ஊடுருவல்களை, எல்லையில் நடக்கும் ஆயுத, பொருள், ஆள் கடத்தலைத் தடுப்பது போன்றவை இவை முன் உள்ள பணிகள்.
பிஎஸ்எஃப் துணை ராணுவப் படையின் பணிகள் எல்லை சார்ந்தவை. மேற்குறிப்பிடப்பட்ட பணிகளில் எல்லை சார்ந்த பணிகள் இவர்களுடையது. ஐடிபிபி எனும் இந்தோ டிபெட்டன் பார்டர் போலீஸ் பணிகளும் இதனைப் போன்ற ஒன்றுதான். சிஐஎஸ்எஃப் எனும் சென்ட்ரல் இண்டஸ்ட்ரியல் செக்யூரிட்டி போர்ஸ் பணிகளில் விமான நிலையங்களைப் பாதுகாப்பது, பாதுகாப்பு சார்ந்த அரசு நிறுவனங்களைப் பாதுகாக்கும் பணிகள் வரும்.
துணை ராணுவப் படைகள் உள்துறை அமைச்சகத்தின்கீழ் வரும். இவை ராணுவ அமைச்சகத்தின்கீழ் வராது. கூகிள் மற்றும் தொழில்நுட்பம் வளர்ச்சி அடையாத காலகட்டத்தில் ராணுவத்தினரின் எண்ணிக்கை கூட்டப்பட்டால் அதற்குப் போட்டியாக மற்ற நாடுகளும் ராணுவ செலவினங்களை, ராணுவ வீரர்களை அதிகரிக்கும் என்பதால் மாநிலக் காவல்துறையினரைப் போன்ற போர்வையில் துணை ராணுவப் படைகள் உருவாக்கப்பட்டன. துணை ராணுவப் படையினரை மத்திய காவல்துறை படையினர் என்று சொன்னாலும் தவறு கிடையாது.
இதில் தெளிவான பணிகள் என்ற வரையறை இல்லாமல் பல்வேறு பணிகளுக்கும், நாட்டின் எந்த மூலைக்கும் தூக்கி எறியப்பட்டு, செல்லும் பகுதியைப் பற்றிய எந்தவித முன்னேற்பாடுகளும், அபாயங்களும், எதிர்கொள்ளும் வழிகளும் இல்லாத பணி செய்யும் சூழலைக் கொண்டது சிஆர்பிஎஃப் பணி.
ராணுவ அமைச்சகத்தின்கீழ் வரும் ரானுவத்தினரோடு ஒப்பிட்டுப் பார்த்தால் துணை ராணுவப் படையினர் சந்திக்கும் இன்னல்கள் விளங்கும். கடந்த பத்து ஆண்டுகளில் ராணுவ, துணை ராணுவப் படைகளில் மிக அதிகமான உயிர் இழப்புகளை, கொடூரத் தாக்குதல்களில் பல வீரர்களை ஒரே நாளில் பலி கொடுத்த படைகளில் முதல் இடம் சிஆர்பிஎஃப்புக்கு உண்டு. ராணுவ அமைச்சகத்தின்கீழ் ராணுவம், கடற்படை, விமானப்படை வரும். இதில் கடற்படை மற்றும் விமானப்படை மீதான தீவிரவாத, எதிரி நாடுகளின் தாக்குதல் என்பது வெகு அரிது. அவை தெளிவான பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இயங்குபவை. அவற்றின் மீதான தீவிரவாத தாக்குதல்களை நடத்த மிக மிக கடுமையான பயிற்சி பெற்ற, அதிக எண்ணிக்கையிலான, மிக அதிக பொருட்செலவிலான ஆயுதங்கள் மற்றும் உள்நாட்டில் இருக்கும் தீவிரவாதத்துக்கு ஆதரவான குழுக்களின் உதவி பெருமளவு தேவை. அப்படியே தாக்கினாலும் அதனை எளிதில் முறியடித்து விடக் கூடிய வாய்ப்புகள்தான் அதிகம்.
கடற்படை, விமானப்படையிலும் வீரர்கள் நாடெங்கும் இருந்து மாநிலம், மொழி, சாதி, மதம் கடந்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பணிபுரிவார்கள். ராணுவ மொழியில் சொல்வதாக இருந்தால் துணை ராணுவப் படைகள், கடற்படை, விமானப்படைகளின் அடிப்படை யூனிட் அனைத்தும் mixed.
ராணுவத்தை காலாட்படை @infantry, குதிரைப்படை @armoured, ஆர்டிலெரி@ பீரங்கிப் படை, என்ஜினீயர் ரெஜிமென்ட், இவற்றிற்கு உதவ தொழில் நுட்ப மற்றும் தொலைத்தொடர்பு @ signal கார்ப்ஸ் மருத்துவ கார்ப்ஸ், சேவை @service கார்ப்ஸ், கல்வி @educational கார்ப்ஸ், போர் தளவாடங்கள் @ordinance கார்ப்ஸ் என பிரிக்கலாம். இதில் corps அனைத்தும் mixed. அதாவது நாட்டின் அனைத்துப் பகுதிகள், மாநிலங்களில், மதங்களில், சாதிகளில் இருந்து வீரர்கள் இருப்பார்கள். அதிகாரிகளும் mixed.
உள்துறை அமைச்சகத்தின்கீழ் வரும் துணை ராணுவப் படைகளின் தலைமைப் பொறுப்புகளுக்கு மிறிஷி அதிகாரிகள்தான் வருவார்கள். அதாவது இருபது வருடங்கள் தமிழ்நாட்டில் அல்லது ராஜஸ்தானில் டிஎஸ்பி, எஸ்பியாக, டிஐஜி ஆகப் பணியாற்றியவர் திடீர் என்று சென்று சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப்களில் தலைமைப் பொறுப்புகளில் பதவி ஏற்றுக் கொண்டு மூன்று அல்லது அதற்குக் குறைவான ஆண்டுகள் பணியாற்றி விட்டு மீண்டும் மாநில அல்லது சிபிஐ பதவிகளுக்கு வந்துவிடுவார். ராணுவம், கடற்படை, விமானப்படைகளில் வீரர்களோடு பல்லாண்டுகள் ஒன்றாகப் பணியாற்றி படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று உயர்பதவிகளுக்கு வரும் சூழல் துணை ராணுவப் படைகளில் கிடையாது.
ராணுவத்தின் காலாட்படையில் சாதிவாரி ரெஜிமெண்ட்கள் வெள்ளையர் காலம் முதல் இன்றுவரை உண்டு. ஜாட் ரெஜிமென்ட், டோக்ரா ரெஜிமென்ட், ராஜ்புட் ரெஜிமென்ட், ராஜ்புதானா ரைபிள்ஸ், மராத்தா ரெஜிமென்ட், மஹார் ரெஜிமென்ட், கிறேனடியர்ஸ், ஜம்மு-காஷ்மீர் லைட் இனபாண்ட்ரி, பஞ்சாபி ரெஜிமென்ட், சீக் ரெஜிமென்ட், சீக் எல்ஐ ரெஜிமென்ட் என அடுக்கிக் கொண்டே போகலாம். சீக்கியர்களுக்கான சீக் எல்ஐ ரெஜிமென்ட் என்பது பட்டியல் இனத்தின் கீழ்வரும் சீக்கியர்களுக்கானது.
வேறு நாட்டைச் சார்ந்த ராணுவ வீரர்கள் பல்லாயிரம் பேர் இருக்கும் ராணுவம் இந்திய ராணுவம். கோர்கா ரெஜிமென்டில் பணிபுரியும் கோர்க்கா இன மக்களில் பெரும்பாலானோர் நேபாள நாட்டைச் சார்ந்தவர்கள். கோர்கா ரெஜிமென்ட் என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும் அதனுள்ளே தெளிவான சாதி சார்ந்த வெவ்வேறு ரெஜிமெண்ட்கள் அன்றும் இன்றும் உண்டு.
இரு சாதிகள் சேர்ந்திருக்கும் ரெஜிமென்ட் என்றாலும் அதில் உள்ள கம்பெனிகள் சாதிவாரியாகத் தான் இருக்கும். எடுத்துக்காட்டாக ராஜ்புட் ரெஜிமென்டில் மூன்று கம்பெனிகள் ராஜபுத்திரர்கள், ஒரு கம்பெனி குஜ்ஜார்கள். சில குமாரி, ஜாட் ரெஜிமெண்ட்களில் ஒரு கம்பெனி அகிர் எனும் யாதவர்கள் தனி கம்பெனியாக இருப்பார்கள். ரீக்ஷீமீஸீணீபீவீமீக்ஷீs ரெஜிமென்டில் இஸ்லாமியர் தனி கம்பெனி. ஜவான்களில் உயர்பதவியான சுபேதார், மேஜர் சுழற்சி முறையில் ஒவ்வொரு சாதி கம்பெனிக்கும் கிடைக்கும்.
ஒரே சாதி யூனிட் pure ரெஜிமென்ட் என்று அழைக்கப்படும். மெட்ராஸ் ரெஜிமென்ட் இதற்கு விதிவிலக்கு, தென்னிந்திய மாநிலங்களில் இருந்து அனைத்து சாதியினரும் இதில் வீரர்களாகப் பணியில் இருப்பார்கள். ஜம்மு-காஷ்மீர் லைட் infantry ரெஜிமென்டிலும் இதே போல இஸ்லாமியர்கள், இந்துக்கள், சீக்கியர்கள் உண்டு. அதில் இரு ரெஜிமெண்ட்களில் இஸ்லாமியர்கள் கிடையாது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருந்து இந்திய ராணுவத்தில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை குஜராத் மாநிலத்தில் இருந்து ராணுவத்தில் பணிபுரிபவர்களை விட சில மடங்கு அதிகம்.
சிஆர்பிஎஃப் போல நாடெங்கும் உள்ள வீரர்களை கொண்ட காலாட்படை ராணுவ யூனிட் எதுவும் கிடையாது.
எந்த துறையாக இருந்தாலும் அவர்களுக்கு உள்ளே மற்றும் மற்ற துறைகளோடு இருக்கும் யார் பெரியவன், யார் முக்கியம் எனும் போட்டி ராணுவத்துக்கும் துணை ராணுவப் படைகளுக்கும் இடையே அதிகம்.
ராணுவ, துணை ராணுவப் படைகள் தீவிரவாத தாக்குதல் வாய்ப்புள்ள பகுதிகள் என்று கருதப்படும் பகுதிகளில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு செல்வதற்கான பாதுகாப்பு பணிகள் மிக கவனமான திட்டமிடலுக்குப் பின்பே நிகழும். அதில் பின்பற்றப்பட வேண்டிய விதிகள், வழிமுறைகள் தெளிவானவை. தாக்குதல்களைத் தடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
தீவிரவாத தாக்குதலுக்கு வாய்ப்புள்ள பகுதி களான ஜம்மு-காஷ்மீர், நாகாலாந்து, மணிப்பூர் போன்றவற்றில் ராணுவ, துணை ராணுவ வீரர்களும், ராணுவ வாகனங்களும் விருப்பப்படி செல்ல வாய்ப்போ, வழியோ கிடையவே கிடையாது. காயமடைந்த, நோய்வாய்ப்பட்ட வீரரை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய தவிர்க்க இயலாத சூழலில் கூட ஹெலிகாப்டர்தான் முதல் சாய்ஸ். ஹெலிகாப்டர் வருவதற்கான வானிலை இல்லாவிட்டால் புல்லட் ப்ரூப் வண்டிகளில் மட்டுமே நோயாளியைப் பாதுகாப்பாக அனுப்ப வேண்டும்.
விடுமுறைக்கு செல்லும் ராணுவ, துணைராணுவ வீரர்கள், விடுமுறையில் இருந்து திரும்பும் வீரர்கள் பாதுகாப்பாக கான்வாய் மூலம் ட்ரான்சிட் கேம்ப் சென்று அங்கு அடுத்த கான்வாய் வரை தங்கி இருப்பார்கள் ஒவ்வொரு ட்ரான்சிட் கேம்ப் ஆக கான்வாய் என்றழைக்கப்படும் ராணுவ வாகனங்களின் தொடர் வண்டியோட்டத்தின் மூலம் பணி செய்ய வேண்டிய இடத்துக்கு அல்லது விடுமுறையில் ஊருக்குச் செல்ல வேண்டிய ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள ட்ரான்சிட் கேம்ப் செல்வார்கள். பாதுகாப்பு காரணமான இந்த நடவடிக்கைகளினால் விடுமுறைக்கு செல்ல, விடுமுறையில் இருந்து திரும்பிய பிறகு பணி செய்யும் இடத்தை சென்றடைய வாரக்கணக்கில் ஆகும்.
கான்வாய் நாட்களில் வழியெங்கும் பாதுகாப்பு தர அங்குள்ள ராணுவ யூனிட்களுக்கு உத்தரவு தரப்படும். சங்வி பாதுகாப்பு பணி ராணுவத்தினரின் முக்கியமான அடிப்படை பணிகளில் ஒன்று. கான்வாய் நாட்களில் நள்ளிரவே ராணுவ வீரர்கள் சாலையின் வழியெங்கும் இருப்பார்கள். மோப்ப நாய்கள் துணையோடு பயிற்சி பெற்ற வீரர்கள் சாலைகளில் வெடிகுண்டு இருக்கிறதா என்ற பரிசோதனை ஒரு இடம் விடாமல் நடக்கும். நம் ஊர்களில் முதல்வர், பிரதமர் சாலைகளில் செல்லும் போது நடைபெறும் கெடுபிடிகளைப் போல பல மடங்கு அதிகமான கெடுபிடி இருக்கும்.
வேறு வாகனங்கள் கான்வாய் செல்லும் பாதையில் கான்வாய் கடக்கும் நேரத்துக்கு சில மணித்துளிகள் முன்பாக மற்றும் பின்பாக அனுமதிக்கப்படாது. கான்வாயில் செல்லும் வீரர்கள் அனைவரும் ஆயுதம் தரித்து முழு சீருடையில் இருப்பார்கள். கான்வாய் மீதான தாக்குதல் வந்தால் தடுக்க சக்தி வாய்ந்த ஆயுதங்களோடு கான்வாய் கமாண்டர் எனும் அதிகாரி கான்வாயை நடத்தி செல்வார். வழியில் வாகனங்கள் பழுதடைந்தால் சரி செய்ய, டோ செய்து இழுத்து செல்லும் வாகனங்களும், ஏதாவது காயம் ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க மருத்துவ கோர்ப்ஸ் சார்ந்த ராணுவ வீரர்களும், ஆம்புலன்ஸ் வண்டியும் கான்வாயில் கண்டிப்பாக உண்டு.
கான்வாய் ஒவ்வொரு பகுதியை வந்தடைவதற்கு முன் பகுதி க்ளியர் ஆக இருக்கிறதா என்று அங்கு கான்வாய்க்காக பாதுகாப்பு பணியிலுள்ள யூனிட் அதிகாரி கான்வாய் கமாண்டருக்கு தகவல்களை அனுப்ப வேண்டும். கான்வாய் செல்லும் சாலையில் வெடிகுண்டு வைத்து வண்டிகள் கடக்கும் போது அதனை வெடிக்கச் செய்வதன் மூலம் ராணுவ வீரர்களைக் கொலை செய்யும் நிகழ்வுகள் சில ஆண்டுகளுக்கு முன் வரை நடந்து வந்தன. கடந்த பத்தாண்டுகளில் அவை அரிது.
சாலைகளுக்கு பாதுகாப்பு தர ராணுவ யூனிட் இல்லாத சட்டிஸ்கர் மாநிலம் போல ஜம்மு- காஷ்மீரை எடுத்துக்கொள்ள முடியாது. இங்கு பல லட்சம் ராணுவ, துணை ராணுவ வீரர்கள் பணியில் இருக்கிறார்கள். காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பது படையினர் அறியாத, இல்லாத பகுதி என்ற ஒன்றே இருக்க முடியாது. இது போன்ற சூழலில் துணை ராணுவப் படையினர் வந்த கான்வாய் வண்டிகளின் ஒன்றின் மீது மனித வெடிகுண்டாக மாறி காரில் நூற்றுக்கணக்கான கிலோ வெடிகுண்டு பொருட்களோடு ஆதில் தார் எனும் காஷ்மீரைச் சார்ந்த 21 வயது இளைஞன் வந்து மோதி 44 பேர் மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.
இந்த நிகழ்வை வைத்து, பல்வேறு மாநிலங்களை சார்ந்த துணை ராணுவப் படை வீரர்களின் மரணத்தை வைத்து போர் வெறி, இஸ்லாமியர் மீதான வெறுப்புனர்வைத் தூண்டும் நிகழ்வுகள், ஜம்முவில் மற்றும் இந்துத்துவ, சங்பரிவாரங்கள் வலுவாக உள்ள மாநிலங்களில் காஷ்மீரி மக்கள் மீதான தாக்குதல்கள் நடைபெறுவது வேதனையைத் தருகிறது.
ஜம்மு-காஷ்மீர் பிரச்சினையை பற்றிய நடுநிலை யான வரலாற்றுப் பார்வை என்பது இல்லாத சூழலே பல்வேறு மாநில மக்களின் காஷ்மீரி மக்களின் மீதான அர்த்தமற்ற கோபத்துக்குக் காரணம் என்றால் மிகையாகாது
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் மூன்று தனித்துவமான பகுதிகளை உள்ளடக்கிய மாநிலம். ஜம்மு பகுதியில் இஸ்லாமியர், இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள். காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் பெரும்பான்மையாக இஸ்லாமியர்களும் காஷ்மீரப் பண்டிட்களும் வாழ்ந்து வந்தார்கள். லே, லடாக் பகுதிகளில் இஸ்லாமியர்களும் புத்த மதத்தை சார்ந்த பழங்குடிகளும் வசித்து வருகிறார்கள்.
1800 ஆம் நூற்றாண்டில் சீக்கிய மன்னர்களின் ஆட்சியின்கீழ் ஜம்மு-காஷ்மீர் இருந்தது. ஆங்கில சீக்கியப் போரில் சீக்கிய அரசு தோற்ற பிறகு ஜம்மு-காஷ்மீர் பகுதி ஆங்கிலேயர் கீழ் வந்தது. அதனை ஆங்கில சீக்கியப் போரின் போது ஆங்கிலேயர் வெற்றி பெற உதவிய டோக்ரா ராஜவம்சத்தை சார்ந்த குலாப் சிங் அவர்களுக்கு ஆங்கில ஆட்சியாளர்கள் விற்பனை செய்தனர்.
விடுதலை, மக்கள் ஆட்சி, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்கள் என எதுவும் மக்களிடம் சென்று சேராத காலகட்டம் அது. ஜம்மு-காஷ்மீர்வாழ் மக்களில் பெரும்பான்மையானோர் இஸ்லாமியர்களாக இருந்தாலும் ஆட்சி, அதிகாரம் இந்து டோக்ரா ராஜாக்களிடம்தான் இருந்தது. ஆங்கிலேயே அரசுக்கு எதிரான போராட்டங்களின் போதும் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் எந்தவித தாக்கமும் கிடையாது. காஷ்மீரைத் தாயகமாகக் கொண்ட ஜவஹர்லால் நேரு அவர்களின் குடும்பத்தினர் காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைமையாக இருந்ததைத் தவிர்த்து, காங்கிரஸ் கட்சிக்கோ, ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்திலோ காஷ்மீர்வாழ் பெரும்பான்மை மக்களின் பங்களிப்பு வெகு குறைவு.
ஆங்கிலேயே அரசு இந்தியாவை விட்டு வெளியேற முடிவெடுத்த பிறகு, ராஜாக்களின்மீதான நிர்பந்தங்கள் அதிகரித்தன. இந்தியா, பாகிஸ்தானில் ஏதாவது ஒரு பக்கம் தான் சேர முடியும் என்ற அழுத்தங்களும் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது. ஆங்கிலேயே அரசுக்கு எதிரான போராட்டத்தோடு துளியும் தொடர்பில்லாத நாகா இன மக்களோ, காஷ்மீரிகளோ கூட இரண்டில் ஏதாவது ஒன்றைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிர்பந்தம் காலனி ஆதிக்கத்துக்கு குறைவில்லாத ஒன்று என்றால் மிகையில்லை
ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களில் பெரும்பான்மை யானோர் புதிதாக உருவாகும் தேசங்களான இந்தியா, பாகிஸ்தான் இரண்டும் வேண்டாம் என்ற நிலையில் இருந்ததைத் தான் அன்று அவர்களின் பெரும் ஆதரவு பெற்ற தலைவர்களின் கருத்துக்கள், எழுத்துக்கள் வெளிப்படுத்துகின்றன. ஜம்மு-காஷ்மீரை ஆண்ட இந்து டோக்ரா மஹாராஜா இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தக் காலகட்டத்தில் எடுத்தார்.
காஷ்மீரைப் பிரிக்க வேண்டிய சூழல் வரும் என்ற பேச்சுக்கள் எழுந்த போது, ஜம்மு உட்பட எந்தப் பகுதியிலும் இந்துக்கள் பெரும்பான்மை கிடையாதே என்ற கேள்விக்கு அது மாறக் கூடும் என்று சூசகமாக பதில் அளித்தார். மகாராஜாவின் படைகளில் இருந்த இஸ்லாமிய வீரர்களின் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜம்முவில் நிராயுதபாணியாக இருந்த இஸ்லாமியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டு பல்லாயிரம் இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பல ஆயிரம் பேர் அகதிகளாக உயிர் பிழைக்க ஜம்முவை விட்டு வெளியேறினர். மிக குறுகிய காலத்துக்குள் இஸ்லாமியர் பெரும்பான்மையாக இருந்த ஜம்மு பகுதி இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதியாக மாற்றம் பெற்றது.
பாகிஸ்தான் ராணுவம் இந்த சூழலில் பழங்குடிகளின் போர்வையில் காஷ்மீரைக் கைப்பற்ற பாகிஸ்தான் ராணுவ வீரர்களை அனுப்பியது. இந்தியா, பாகிஸ்தான் இரண்டும் வேண்டாம் என்ற நிலையில் இருந்த தலைவர்களும் பொதுமக்களும் செய்வதறியாமல் இருந்த சூழலில் இந்து மஹாராஜா ஹரிசிங் இந்தியாவோடு இணைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இந்திய ராணுவம் காஷ்மீரில் நுழைந்து பழங்குடிகள் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்திடம் இருந்து காஷ்மீரை இந்தியாவோடு இணைக்க வழி செய்தார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே ஆன முதல் போர் காஷ்மீர மகாராஜா இந்தியாவோடு இணைய கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் காரணமாக நிகழ்ந்தது. இந்தப் போரின் காலகட்டத்தில் இருந்து இன்றுவரை காஷ்மீர் துண்டாடப்பட்டு ஒரு பகுதி ஆஜாதி காஷ்மீர் என்று பாகிஸ்தான் அரசாலும், பாகிஸ்தான் பிடித்து வைத்துள்ள காஷ்மீர் என்று இந்திய அரசாலும் அழைக்கப்படும் பகுதி இயங்கி வருகிறது.
வட கொரியா, தென் கொரியா, மேற்கு ஜெர்மனி, கிழக்கு ஜெர்மனி பிரிவினைகளைப் போன்ற பிரிவினை இது. இரு பகுதி மக்களில் பெரும்பான்மை மக்களுக்கு சிறிதும் விருப்பமில்லாத பிரிவினை இந்தக் கட்டாயப் பிரிவினை.
ஷியா இஸ்லாமியர்கள் மற்றும் புத்த மதத்தைப் பின்பற்றும் பழங்குடியினர் பெரும்பான்மையாக வசிக்கும் லே, லடாக் பகுதிகள் இந்த நிகழ்வுகளோடு தொடர்பே இல்லாமல் இருந்தன. 1940 களில் இருந்து காஷ்மீர்வாழ் மக்கள் சந்தித்து வரும் இன்னல்களுக்கு, படுகொலைகளுக்கு இணையாக வேறு ஒரு பகுதியைக் காண்பது அரிது. நாகா பழங்குடிகள் இதே போல பல இன்னல்கள், ஒடுக்குமுறைகளை சந்தித்தாலும் தேவகௌடா அவர்கள் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன் முன்வைத்த போர்நிறுத்த ஒப்பந்தம் மூலம் பல்வேறு மாற்றங்களைப் பெற்று வருகிறார்கள்.
காஷ்மீர்வாழ் சிறுபான்மை இந்துக்களான காஷ்மீர் பண்டிட்கள் மீதான கொடூரத் தாக்குதல்களும் அவர்கள் அகதிகளாக காஷ்மீரை விட்டு வெளியேறி யதும் காஷ்மீர்வாழ் மக்களில் இன்னலை, கடும் துயரை சந்திக்காதவர்கள் யாருமே இல்லை என்பதை வெளிக்காட்டுகிறது. வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு காஷ்மீர் கவர்னராக ஜக்மோகன் அவர்களை நியமித்தது. மாநில ஆட்சி கலைக்கப்பட்டு, கவர்னர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டம் அது. காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என்ற கோரிக்கையோடு எழுந்த கட்சிகள் மாநிலத் தேர்தலில் மக்களின் பெருத்த ஆதரவு இருந்தும் மத்திய அரசின் சூழ்ச்சியினால் தோற்கடிக்கப்பட்டதால் எழுந்த கோபம் பெரும்பான்மை மக்களிடம் ஆழ ஊடுருவி இருந்த காலகட்டம் அது.
நூற்றாண்டுகளாக காஷ்மீர் பண்டிட்களோடு ஒன்றாக வாழ்ந்து வந்த மக்கள், காஷ்மீர மக்கள் இந்துக்களாக மாற விருப்பம் தெரிவித்த போது, காஷ்மீர மகாராஜா ரன்பீர் சிங் (1857-1885) அதனை நிறைவேற்ற முயற்சிகள் எடுத்தார். அதனை நிறைவேற்றக் கூடாது, அப்படி செய்தால் கூட்டாகத் தற்கொலை செய்து கொள்வோம், ப்ரம்ம ஹத்தி தோஷம் மகாராஜாவைத் தாக்கும் என்று மகாராஜா அரண்மனை அருகில் உள்ள நதியில் நின்று போராடி காஷ்மீர் பண்டிட்கள் அதனை நிறுத்தினர் என்ற வரலாற்று நிகழ்வு மதம், சாதி சார்ந்த பல கேள்விகளுக்கு விடை அளிக்கக் கூடும்.
உலகிலேயே மிக மிக ராணுவமயமாக்கப்பட்ட பகுதி காஷ்மீர்தான். காஷ்மீர மக்கள் அதனால் பல்லாண்டுகளாக அடைந்து வரும் இன்னலைகளை எளிதில் உணர முடியாது. உண்மை நிலை இப்படி இருக்க காஷ்மீர மக்களை, அங்கிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குப் படிக்க வரும் மக்களை விரட்ட, அவர்களை புல்வாமா கொடூரத் தாக்குதலுக்குப் பொறுப்பாளி ஆக்க, அவர்கள்மீதான தாக்குதல்களை நியாயப்படுத்த முயற்சிப்பவர்களை நாம் அடையாளம் கண்டு அவர்களின் சூழ்ச்சிகள் பலிக்காமல், காஷ்மீரைச் சார்ந்த அனைத்துப் பிரிவு மக்களும் அமைதியாக வாழ, அவர்களின் அடிப்படை உரிமைகள் முழுவதுமாகக் கிடைக்கும் சூழல் வர முயற்சிக்க வேண்டும்.