வாசமென்னும் சொல்லாடல்கள்

வாசம் என்பது மூக்கினால் உணரப்படும் ஒருவித உணர்ச்சி. நறுமணங்கள் நல்ல வாசம்; விரும்பக்கூடியது. துர்மணங்கள் மூக்கைப் பொத்திக்கொள்ளச் செய்பவை. விரும்பாதவை; விரும்பத்தகாதவை. இது ஒருவிதப் பொருண்மை. வாசத்திற்கு இன்னொரு பொருள் உண்டு. வாசம் என்பது வாழ்தல்; வாழ்க்கை.

வாழ்க்கை என்பது மனைவி மக்களோடு உண்டும் களித்தும் உறங்கியும் வாழ்தல். காதலித்தும் காதலிக்கப்பட்டும் காமம் துய்த்தும் பிணங்கிக் குடும்பமாக வாழ்வதல். அதன் வெளி வீடு. வீட்டிற்குள் உற்றார் உறவினர்களை அனுமதித்துச் சடங்குகள், விழாக்கள், கொண்டாட்டமென  வீட்டிலிருந்து வாழ்தலின் பரிமாணங்களைக் குடும்ப வெளியிலிருந்து புறவெளிக்குள் நீட்டித்து வாழ்தல்.

கூடிக் களித்திருத்தலுக்காகவும். சுற்றம்சூழ வாழ்தலுக்காகவும், சொத்துபத்துகள் தேடி அவை தரும் அதிகாரத்தோடு வாழ்தல். அவை இல்லாத நிலையில் துயரமும் வன்மமுங்கொண்டு வாழ்தல் அதன் மாறுதல். அந்த வாழ்க்கையைக் குடும்ப உறுப்பினர்கள் அறியச் செய்வதும், அறியாமல் மறைப்பதும் நடக்கும். அதிகாரம் மனிதர்களை முதலிடத்தை நோக்கி நகரும்படி சொல்கிறது. நகரும்போது எதிர்கொள்ளும் ஒவ்வொருவரையும் தனது பாதையில் உடன் வருபவர்களாக, -நண்பர்களாக ஆக்கிக் கொள்கிறது. தடை போட நினைப்பவர்களை எதிரிகளாக ஆக்கிக்கொண்டு எதிரே வராமல் தடுக்கும் உத்திகளைத் தேடுகிறது. துயரமும் வன்மமும் மனிதர்களைத் தன்னை இப்படியாக்கியவர்களையும் சூழலையும் பழிவாங்கும் உத்திகளைக் கைக்கொள்கிறது. மேலும்மேலும் துயரத்தையும் வன்மத்தையும் வளர்த்துக் கொள்கிறது. அல்லது தோல்வியில் துவண்டு வாழ்க்கையைத் தொலைக்கிறது இல்லாமல் ஆக்கிக்கொள்கிறது. இப்படியான நகர்வுகளையே வாழ்க்கையின் போராட்டம் என்று அறிந்து வைத்திருக்கிறோம்.

அனைவருக்கும் இத்தகைய வாழிட வெளிகளை உறுதிசெய்யவே குடும்பம் தொடங்கிப் பல்வேறு அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. அறங்கள் வலியுறுத்தப்படுகின்றன. சட்டங்கள் இயற்றப்படுகின்றன. இவையெல்லாம் நடக்கும் வெளிகள் வாழிட வெளிகள். இவற்றைக் கைவிட்டுவிட்டு, இன்னொரு வெளிக்குச் செல்வது வனவாசம். வனவாசம் வனத்தில் போய்த் தவவாழ்க்கை -துறவு வாழ்க்கை வாழ்வது. துறவாக இல்லாமல்- வனத்தில் உறையாமல் வாழும் இன்னொரு வாழ்க்கை அஞ்ஞாத வாசம். தன்னை அறிந்த மனிதர்களிடமிருந்து தப்பித்து, அறியாத மனிதர்களுக்கிடையில் வாழ்வது. அதில் நினைத்தது கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் எதுவுமில்லை. கிடைப்பதை ஏற்றுக்கொண்டு வாழவேண்டும்.

இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களும்- இராமாயணமும் பாரதமும் வாழ்தலின் பரிமாணங்களைச் சொல்லும் காட்சிகளைக் கொண்டிருக்கின்றன. போரில் தேரோட்டியாக இருந்து உதவியதற்காகத் தனது நன்றியாகக் கேட்டதைத் தருவேன் என்று சொன்ன தசரதனாகிய தனது கணவனிடம் அந்த நேரத்தில் கேட்டுப் பெறாமல், தக்கசமயத்தில் பெற்றுக் கொள்கிறேன் என்று சொல்லியிருந்த கைகேயி, மூத்தாளின் மகன் ராமன் பட்டமேற்கவிருந்த நேரத்தில் அதைத் தடுக்கும்விதமாகப்  பதினான்காண்டுகள் கானகத்தில் வாழவேண்டும் என்று வரம்பெற்று ஆரண்யத்திற்குள் அனுப்பினாள். அந்த வரம் ராமனின் அதிகார வாழ்க்கையைப் பறிக்கிறது. அதிகாரம் பறிக்கப்பட்ட பாண்டவர்கள் போனது பன்னிரண்டு ஆண்டு வனவாசம்.   நாடு, நகரம் மட்டுமல்லாமல் தன்னையும் தம்பிகளையும் மனைவி திரௌபதியையும்  சூதாட்டப்பொருளாக வைத்து ஆடிய ஆட்டத்தில் தோற்ற தர்மனுக்கும் அவனது தம்பியருக்கும்   பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம் மட்டுமல்ல. கூடுதலாகத் தரப்பட்டது  ஓராண்டு அஞ்ஞாத வாசம்.

வனவாசம் தண்டனை. அஞ்ஞாத வாசம் சவால். வாசம், வனவாசம் என்பதைத் தாண்டி அஞ்ஞாத வாசம் என்பது வாழ்தலின் இன்னொரு தளம்; பரிமாணம். தங்களின் இருப்பை மறைத்து இன்னொருவராக மாறுவது ஒருவிதத்தில்  தொலைந்து போதலே.  ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் அவராகவே வாழ்தலும் இன்னொருவராக வாழ்தலும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. இரண்டில் எது உண்மை? இரண்டுமே உண்மையா? இரண்டுமே பொய்யா? இரண்டில் எதை மனம் விரும்புகிறது. மேல்மனம் விரும்புவது அவராக வாழ்வதை. அடிமனம் விரும்புவது இன்னொருவராக இருப்பதை. ஆழ்மனமோ இருந்து கொண்டே இல்லாமல் இருப்பதைப் பற்றி நினைக்கிறது.

நாடகப் பிரதியாக்கங்கள்

வியாசர் எழுதிய மகாபாரதத்தின் விராடபர்வம் அஞ்ஞாத வாசத்தை விவரிப்பது. 12 ஆண்டுகள் வனவாசம் முடித்து ஓராண்டு மறைந்து வாழ்வதற்கான இடமாகப் பாண்டவர்கள் தேர்ந்தெடுத்த நாடு மத்சயநாடு. அதன் அரசன் விராடராசனின் அரண்மனையில் ஒவ்வொருவரும் வேறொரு உருவம் தாங்கி வாழ்கின்றனர். தர்மன் கங்கன் என்னும் சொக்கட்டான் ஆடும் வயசாளியாகி அரசனோடு பொழுதுபோக்கினான். வீமன், வல்லபன் என்னும் சமையல்காரனாகி மடப்பள்ளியில் வேலைசெய்கிறான். அர்ச்சுனன் பிருகந்நளை என்னும் திருநங்கையாகி, அரண்மனைப் பெண்களுக்கு நடனம் பயிற்றுவித்தான்.  நகுலன் குதிரைகளைப் பாதுகாத்தான். சகாதேவன் பசுமாடுகளைப் பராமரிக்கிறவனாக ஆனான்.திரௌபதை சைரந்திரி என்ற பெயரில் அரசியின் பணிப்பெண்ணாகி இருக்கிறாள். அக்காலகட்டத்தில் ராணி சுதேஷ்ணையின் தம்பி கீசகன், அவள் மீது காமம் கூடிய நிலையில் படுக்கைக்கு அழைக்கிறான். இக்கட்டான நிலையில் ஆயிரம் யானைகள் பலம் கொண்ட கீசகனை அரண்மனைக்கு வெளியே இருக்கும் நந்தவனத்திற்கு வரவைத்து மடப்பள்ளியில் இருக்கும் வல்லபனாகிய வீமனை வைத்துக்  கொல்கிறாள். சொந்த மனைவிகள் இருக்க அந்நியப் பெண்ணை ஆள நினைக்கும் கீசகனை வதம் செய்யும் கீசக வதம்; மரபான தெருக்கூத்து முறையில் நடிக்கப்படும் கதை. வடமாவட்டத் தெருக்கூத்துக் குழுவினர் நடத்தும் மரபான கூத்துப் பிரதிக்குள் நவீன நாடகத்தின் சில கூறுகளை இணைத்து நாடகமாக்கியவர் ந.முத்துசாமி.

மகாபாரதக் கதைகளை கூத்துப் பிரதிகளாக்கும் கூத்து வாத்தியார்கள்- கூத்துப் பிரதியாக்குபவர்கள் முக்கிய நிகழ்வுகளை மட்டும் எடுத்துக்கொண்டு முன்வைப்பு, அடவுகள், பாடல்கள், நீதிசொல்லுதல் என மாற்றிக் கொள்வார்கள். புரிசைக் கண்ணப்பத் தம்பிரானின் பிரதியை நான் பார்த்திருக்கிறேன். அந்தப்பிரதிக்கு மாறாக ந.முத்துசாமியின் நாடகப்பிரதி நவீனமொழியில் புதிய கேள்விகளோடு நிகழ்த்துப்பிரதியாகியிருக்கிறது. அஞ்ஞாத வாசம் என்னும் சொல்லுக்குள் இருக்கும் இன்னொருவராக மாறுதல் என்பது நடிப்பின் ஆதாரங்களைப் போலச் செய்தல், இன்னொன்றாக மாற்றுதல், பாத்திரங்களுக்குள் நுழைந்து திரும்புதல் என்னும் கருத்தியல் மற்றும் செயல்தள நிகழ்வுகளாக்கிப் பார்வையாளர்களோடு தொடர்புகொள்கிறது. அஞ்ஞாதவாசம் என்னும் என்னும் நினைப்பு, ஒரு நடி, பாத்திரமாக மாறுவதுதான் என்பதாகக் கொண்டு இயங்கியுள்ளது. பொதுவாக ஒரு நாளிரவு என்ற அளவில் பாத்திரமேற்கும் நடி தனது கால எல்லையை ஓராண்டாக நீட்டித்து நடத்தி முடித்ததே கீசக வதம்.  கீசக வதம் கூத்தில் இருக்கும் விதூசகன் என்னும் கட்டியக்காரனும் சேர்ந்து விராடராசனிடம் சென்று ஓராண்டு நாடகத்தை நடத்துகிறோம் என்று ஒப்பந்தம் செய்துகொண்டு நடத்திய நாடகம் அது என்பதாகப் பிரதியை உருவாக்கியிருக்கிறார்.

நாடகமாக வாழ்க்கையை நடத்தும் பாண்டவர்களுக்கு கீசகன் ரூபத்தில் தடை வருகிறது. அத்தடையைத் தகர்க்கும்பொருட்டுப் பாத்திரத்தை விலக்கிவிட்டு வீமனாகவே வந்து அவனை வதம் செய்துவிட்டுத் திரும்பவும் வல்லபனாக ஆகிவிடுகிறான். மொத்தத்தில் நடந்தது நாடகமா? உண்மை நிகழ்வா? என்ற அபத்தக் கேள்வியோடு முடிகிறது நாடகம். கட்டியங்காரன் பாத்திரத்தின் மூலம் நினைவூட்டும் சமகால விமரிசனம், ராஜாக்களின் பேச்சைக் கைவிட்டுவிட்டுச் சாதாரணர்களின் பேச்சுக்கு மாறுவதன் மூலம் பஞ்சபாண்டவர்கள் வேறு பாத்திரங்களை – அஞ்ஞாத வாசத்திற்கான பாத்திரங்களாக மாறுகிறார்கள் என்பது முன்வைக்கப்படுகிறது. உரையாடலுக்கான மொழிமாற்றம் பாத்திரமாற்றத்தை உண்டாக்கும் என்பதும்கூட அரங்கியலின் அடிப்படைக்கூறுகளில் ஒன்றுதான்.

சமகால நிகழ்வுகளின் மீது இதுபோன்ற கேள்விகளை எழுப்பும்போது அபத்த நாடகப்பிரதி உருவாக்கும் கேள்விகளின் எல்லைகள் விரிவாகிக் கொண்டே போகக்கூடியவை. அதனைப் புராண இதிகாசக் கதைகளுக்குள் நிகழ்த்தும்போது அப்பாத்திரங்களின் பழைய இருப்பை உறுதிசெய்து நீட்டிப்பதாகவே முடியும். அவற்றை நிகழ்காலத்திற்குக் கொண்டுவந்து நிறுத்தி மறுதலிக்கவோ, நிராகரிக்கவோ உதவுமா என்பது சிந்திக்கவேண்டிய கேள்வி. ந.முத்துசாமியின் நாற்காலிக்காரர், இங்கிலாந்து, நற்றுணையப்பன் போன்ற நாடகங்களை வாசித்தவர்களும் – மேடையில் பார்த்தவர்களுக்கும் இந்தக் கேள்வியைச் சிந்திக்கமுடியும். இந்தியாவில் எந்த வடிவத்தில் நிகழ்த்தப்பட்டாலும் இவ்விரு இதிகாசங்களின் கதைப் பின்னல்களும் பாத்திர உருவாக்கலும் அவற்றை மேலும்மேலும் தக்கவைப்பதற்கேற்ப உதவுகின்றன. தொடர்ச்சியாக ராமன் என்னும் பிம்பமும் பஞ்ச பாண்டவர்களின் நியாயங்களும் சத்திரிய தர்மத்தின் இருப்பைக் கேள்விக்குட்படுத்தாத நோக்கம் கொண்டவை என்பதிலிருந்து இதனை நோக்கும்போது இந்த விவாதத்தைப் புரிந்துகொள்ளமுடியும்.

மாற்று நாடக அரங்கின் சார்பில் ந.முத்துசாமியின் பிரதியை இயக்கிய கருணாபிரசாத் கூத்துப்பட்டறையில் நடிப்புப்பயிற்சிகளையும் அரங்கியல் நுட்பங்களையும் கற்றவர். தனது குருவுக்குச் செலுத்தும் அஞ்சலியாக நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார். தொடர்ச்சியாக நாடகங்களை மேடையேற்றுவதையும் பிரதிகளை அச்சிடுவதையும் செய்துவருகிறார். அவரது செயல்கள் நவீன நாடகச் செயல்பாடுகளின் அறுபடாத கிளையாக நீள்கிறது. மேடையிலும் பின்னரங்கிலும் செயல்பட்டவர்களின் ஈடுபாடு பழைய கூத்துப்பட்டறையில் வெளிப்பட்ட ஈடுபாட்டை நினைவூட்டுவனவாக இருந்தன. அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

குறிப்பு:

ந.முத்துசாமியின் கீசகவதம் நாடகத்தை அவரது முதலாமாண்டு நினைவு அஞ்சலியாகக் கருணாபிரசாத் சென்னை பெசண்ட நகர் ஸ்பேசஸ் அரங்கில் மேடையேற்றினார்(24-.10-.2019). மேடையேற்றத்துக்கு முன்னர் நவீன நாடகங்களுக்கு ஒளியமைப்புச் செய்பவரும் கூத்துப்பட்டறையைத் தொடங்கி நடத்திய ந.முத்துசாமியின் நண்பருமான செ.ரவீந்திரன் எழுதிய ந.முத்துசாமியின் படைப்புலகம் என்ற நூலும் வெளியிடப்பெற்றது.