குப்பென்று வீசிய முகப்பவுடர் வாசம் தன் பக்கத்தில் அதே இருக்கையின் ஒரு பகுதியில் உட்கார்ந்திருப்பவளிடமிருந்து ஊடாடியதை உணர்ந்தான் அவன். காலி இருக்கையில் யாரோ பெண் உட்கார்கிறார் என்பது கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது. யார் என்று கூர்ந்து பார்ப்பது நாகரீகமாக இருக்காது என்று முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பி வெளிக்காட்சியைப் பார்த்தான். குமரன் நினைவு மண்டபத்தைக் கடந்து பேருந்து அண்ணாவையும் பெரியாரையும் ஒருங்கே காட்டியபடி நகர்ந்தது. அதீத பவுடர் வாசமும் இன்னொரு உடம்பு வெகு அருகிலிருப்பதும் உடம்பைக் கிளர்ச்சி கொள்ளச்செய்தது அவனுக்கு.

பாலம் ஏறும்போது பேருந்து திரும்பியதில் அவளின் உடம்பு அவனுடன் நெருங்கி வந்தபோது கிளர்ச்சியாக இருந்தது. அந்த முகத்தைக் கூர்ந்து கவனித்தான். முகச்சவரம் செய்யப்பட்டு பவுடர் இடும்போது தன் முகம் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது. இன்னும் கூர்ந்து கவனிப்பதை அவளும் பார்த்தாள்.
அது திருநங்கையாக இருந்தது. அவன் உடம்பின் கிளர்ச்சி சற்றே அடங்குவதாக இருந்தது. ஆனால் அந்த உடம்பின் நெருக்கமும் உடம்பு வாசனையும் அவனுக்குப் பிடித்திருந்தது. நெருக்கமாக்கிக் கொண்டான்.

நெருப்பரிச்சல் பகுதியில் திருநங்கைகள் அதிகம் இருப்பதைக் கவனித்திருக்கிறான். பிச்சையெடுக்கிறபோது அவர்களின் அதட்டல் மிகையாக இருந்திருக்கிறது, பிச்சை கிடைக்காதபோது உடம்பின் பாகங்களைக் காட்டியும் உடலை பகிரங்கப்படுத்தியும் செய்யும் சேஷ்டைகளோ பிரதிபலிப்புகளோ அவனை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. பிச்சை கேட்டுக் கொடுக்காத ஒருவனைத் தொடர் வண்டிப்பெட்டியிலிருந்து தள்ளிக் கொன்ற சம்பவம் சமீபத்தில் அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.

பெரிய கட்டிடங்கள் மின்விளக்குகளைப் பொருத்திக்கொண்டு தங்களை அழகாக்கிக் கொண்டிருந்தன. பேருந்தின் வேக இயக்கத்தில் அவள் வெகு நெருக்கமாகத் தன் உடம்பைப் பொருத்திக் கொள்வது தெரிந்தது. அவனுக்கும் இசைவாக இருப்பது போல் இருந்தான். பயணம் ரொம்பதூரம் தொடர வேண்டும் என நினைத்தான்.
பேருந்தில் இருக்கையை திருநங்கையொருத்தி பகிர்ந்து கொள்வது இதுதான் முதல் தடவை. அவனின் இருக்கையருகில் நின்றுகொண்டு கிளர்ச்சியூட்டியவர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். வீதிகளில் நடக்கும்போதும் அவர்களைப் பின்தொடர்கிற அனுபவமும் அவனுக்கு வாய்த்திருக்கிறது. அவர்களின் வெகு விரைசலாக நடையைக் காணும்போது இரட்டை சக்கர வாகனம் வாங்க இயலாதது உறுத்தியிருக்கிறது. இன்னும் நிலைமை சீர்படவில்லை. ஜி.எஸ்.டி. என்று வந்த பின் பனியன் தொழில் சீர்குலைந்துவிட்டது இனியும் இரட்டைச்சக்கர வாகனம் வாங்குவது சாத்தியமில்லை என்பதாய் நினைத்தான். 3999, 4999 ரூபாய் ஆரம்பத்தில் கட்டிவிட்டால் போதும், ஓர் இரட்டைச்சக்கர வண்டியை எடுத்து விடலாம். பிறகு மாதக்கட்டணமும் வட்டியும்தான் அவனைப் பெரிதாய் உறுத்தியது. இரட்டைச்சக்கர வண்டியை வாங்கும் யோசனையைத் தள்ளிவைத்துக்கொண்டே வந்தான்.

குமார் நகர் நூலகத்தின் முன் இருந்த குழித்தடத்தால் பேருந்து தடைபட்டது போல் நின்றது வெகு நேரம். போக்குவரத்து சிக்னலின் விளக்குகள் வெவ்வேறு நிறத்தைக்காட்டிக் கொண்டிருந்தன. அவன் அந்த நூலகத்திற்கு அவ்வப்போது வந்து போவான். பத்திரிகை பகுதியில் எதையாவது புரட்டிக்கொண்டிருப்பான். புத்தகம் எடுக்க நாலைந்து முறை விண்ணப்பங்கள் வாங்கி விட்டான். ரேசன் கடை அட்டை, கெசட்டட் அலுவலர் கையொப்பம் என்று விண்ணப்பத்தில் கேட்டபோது சாத்தியமில்லை என்று தள்ளியே போயிற்று. ஆதார் அட்டை போதுமா என கேட்க நினைத்தான். அதுவும் நழுவிப் போய் விட்டது. புதுப்புத்தக வாசனை போல் பக்கத்திலிருப்பவளிடமிருந்து வந்த வாசம் அவனுக்குப் பிடித்திருந்தது.

அவன் அறை நண்பர்கள் மாறிக்கொண்டே இருந்தார்கள். ஏதாவது பனியன் கம்பெனிக்கு மாறிக்கொண்டே இருந்தார்கள். வேலை குறைவு. ஒரு ஆள செட் பண்ணிட்டேன் தொரத்தணும். அதுக்குப் புது கம்பனி பக்கம், அங்கே கூலி குறைவு, ஒப்பந்தக்கூலியெல்லா சும்மா பேருக்கு என்று ஏதாவது காரணங்கள் அவர்கள் வேறு அறை பார்ப்பதற்கென்று அவர்களுக்கிருந்தன. அவர்கள் எல்லோரும் கைபேசியில் திரைப்படங்கள், ஆபாசப் படங்களை பார்க்கிறவர்களாக இருந்தார்கள் அல்லது வாட்ஸப்பில் உலவிக்கொண்டிருந்தார்கள்; முகநூலில் ஒன்றுக்கும் மேற்பட முகவரிகளைக் கொண்டிருந்தார்கள். சிலது ஆண், பெண் குறிகளை அடையாளப்படுத்திய முகவரிகள்.

அவன் பழைய மாத நாவல் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தபோது ஒருமுறை “பழைய பஞ்சாங்கமா இருக்கியே” என்று கிண்டலடித்தார்கள்.
“இதெல்லாம் இதிலெ கெடைக்காததா” என்று கைபேசியைக் காட்டினார்கள். எப்போதும் அவனின் அறை நண்பர்களாக இருப்பவர்களும் அதே போலத்தான். அப்படித்தான் வாய்த்திருந்தார்கள்.

உணவகங்களில் சாப்பிட்டு அலுத்துவிடும்போதும் உடம்பு சரியில்லாமல் போகும் போதும் சமைத்துச் சாப்பிட ஆசை வந்திருக்கிறது அவனுக்கு. அம்மாவும் பலதரம் சமைத்துப் பழகச் சொல்லியிருக்கிறாள், அம்மா பருப்புப்பொடி, ரசப்பொடி என்று வகை வகையாய் தயாரித்துத் தர தயாராகவும் இருந்தார்கள். கூட இருப்பவர்கள் எவ்வித ஒத்துழைப்பும் இல்லாததால் அதுவும் சாத்யமில்லாமல் இருந்தது. நூலகம் அருகிலிருந்த செட்டிநாடு மெஸ்ஸிலிருந்து வந்த மெலிதான வாசம் அவனுக்குப் பிடித்திருந்தது.

பேருந்து நகர ஆரம்பித்து போக்குவரத்துச் சிக்னலின் அடையாளத்தால் நின்ற போது திருநங்கை எழுவதைப் பார்த்துவிட்டு பாலச்சந்திரனும் எழுந்தான். பின் பக்கம் இருந்த கூட்டம் விலகாமல் இடித்துக் கொண்டு செல்ல வழி விட்டது. நூலகத்தின் இடது பக்கமிருந்த வீதியில் அவள் நடக்கத் துவங்கியது கண்ணில் பட்டது.
பெரிய நகரத்தில்தான் இப்படித் திருநங்கைகள் பேருந்து இருக்கையைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பது ஞாபகம் வந்தது. ஊரும் பெரிய நகரமாகிவிட்டது. இன்னும் சில ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணியை எட்டப் போகிற நகரம் பெரிய நகரமல்லவா. இப்போது முதலாளியையும் தொழிலாளி ஆக்குகிற மோச வித்தையைச் செய்யும் பெரிய நகரமல்லவா என்ற நினைப்பு வந்தது.

திருநங்கை பார்வையில் படும்படி இல்லாமல் தன் முன்னால் இருந்தகூட்டம் நகர்ந்து கொண்டிருந்தது. பிச்சம்பாளையத்திற்குப் பேருந்து டிக்கட் எடுத்திருந்தான். திருநங்கையைப் பின்தொடர குமார் நகரிலேயே இறங்கிவிட்டான், நெரிசலில் தன்னைப் பொருத்திக் கொள்ள முடியாதவன் போல் பின்வாங்கினான். இப்போது திருநங்கையையும் தவற விட்டுவிட்டான்,

இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று அவன் அறை நண்பன் கோவிந்திடம் கேட்டிருக்கிறான். “இந்த ஊர்லே எவ்வளவு வேலைக பனியன் தொழில்லே கெடக்குது. இந்தத் திருநங்கையெல்லா அதெல்லாம் செய்யலாமில்லையா. எங்கெங்கெல்லாமிருந்து தொழிலாளிக சத்திஸ்கர், ஒடிசா, பீகார் பெங்கால்லிருந்தெல்லா இங்க வந்து குவியறாங்க. இவங்களுக்கென்ன கேடு. பிச்சையெடுக்கறாளுக.”

“பிச்சையெடுக்கறானுகங்கறதையும் சேர்த்துக்க…”

“ஆமாம். இந்தத் திருநங்கைகளும் எங்கிருந்தெல்லாமோ இங்க வந்து குவியறாங்க. அவங்களுக்குப் புடிச்சது பிசையெடுக்கறதும் செக்ஸும்தான். அதெ வுட மாட்டாங்க. சிரமப்பட்டு பிச்சையெடுத்தாலும் ஒரு தொழிலுக்குன்னு போக மாட்டாங்க. அவங்க ருசி அதிலெ. அவங்களெ நானும் ருசி பாக்கணும்.”
நெரிசலில் மிதிபட்டது போல் பலர் கடந்து சென்றார்கள். பருத்த சதைகளைக் கொண்ட மனிதன் ஒருவன் அவனைத் தள்ளிவிட்டு சிக்னலைக் கடக்க முற்பட்டதில் அவன் சற்றே பின்தங்கிவிட்டான். வியர்வை நாற்றம் இன்னும் கொஞ்சம் தள்ளிபோகச் செய்தது. காலுக்குப் பக்கத்தில் ஓடிக்கொண்டிருந்த சாக்கடையிலிருந்து அந்த வாசம் வந்திருக்கலாமா என்ற சந்தேகம் வந்தது. தலையை ரேவதி மருத்துவமனை வீதியில் திருப்பியபோது முழு முதுகும் தெரிய போய்க்கொண்டிருந்தவள் ஒரு திருநங்கையாகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. முந்தின திருநங்கையைப்போலவே பரந்த முதுகு. ஆனால் ஜாக்கெட்டின் நிறம் வேறானதாக இருந்ததை நிச்சயப்படுத்திக் கொண்டான். வேறொரு திருநங்கைதான். இவ்வளவு பெண்கள் நடமாடும்போது ஒரு திருநங்கை அவனின் கண்களில் பட்டுவிட்டது அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது. அவனின் நடை விரசலானது.

அந்தத் திருநங்கைக்கு இணையாக நடக்க ஆரம்பித்ததும் முகப்பூச்சின் வாசத்தை உள்ளிழுத்துக்கொண்டான். அவளின் முகத்தில் இரண்டு, மூன்றடுக்காய் பவுடர் அடர்த்தியாக இருந்தது. அவளிடமிருந்த ஏதோவகையான செண்ட் வாசனை அவன் மூக்கைத் துளைத்தது.

அவள் குறுக்குச் சந்தொன்றில் சற்று தூரம் நடந்தவள் திரும்பி நின்றாள். “என்ன வர்றியா” ஒரு வகைபடபடப்பு உடம்பை ஆக்கிரமித்துக் கொள்ள அவனும் “உம்…” என்றான். கோவிந்த் சொன்ன ருசி பார்க்கிற ஆசை அவனுள் வந்துவிட்டது.

“செரி… பின்னால வா” அவனும் உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டான்.

“பசிக்குது… சாப்புட்டர்லாமா.”

“ஓ…” திருநங்கையுடன் உணவு விடுதியில் உட்கார்ந்து சாப்பிட முடியுமா. யாராவது கேள்வி கேட்பார்களா. தெரிந்தவர்கள் கண்களில் பட்டால் பதில் சொல்ல திணறவேண்டியிருக்கும். மலேசியா கொத்துப் புரோட்டா குமார் நகரில் கிடைக்கும் ஒரு கடை ஞாபகம் வந்தது. அவனுக்கு முட்டைப் பரோட்டா எப்போதும் பிடிக்கும். நாக்கில் எச்சில் ஊறியது… முட்டைப்பரோட்டாவா, இல்லை திருநங்கையின் நெருக்கமா. ஊறும் எச்சிலுக்குக் காரணம் என்பது ஞாபகம் வந்தது.

“வேண்டாம். வேலையை முடிச்சிட்டு அப்புறம் சாப்புட்டுக்கறன். அதுவரைக்கும் பசியெ ஒதுக்கிர வேண்டியதுதா…”

திருநங்கையுடன் நடமாடுவதை எந்த மனிதரும் பார்த்துவிடக்கூடாது. தனக்குத் தெரிந்தவர்களாய் இருந்து விடக்கூடாது. அவனின் இஷ்டதெய்வமான வடவள்ளி பெருமாளை நினைத்துக் கொண்டான். அப்படித் தெரிந்தவர்கள் இருந்தாலும் என்னவாகிவிடப்போகிறது. உள்ளூர்காரர்கள் என்றால் ஜுஜுபிதான். உறவினர்கள் யாரும் தென்பட்டு விடக்கூடாது. இவ்வளவு தூரத்தில் உறவினர்கள் யார் வரப்போகிறார்கள். கண்ணில் பட்டாலும் என்ன.

விரைசலானது அவனின் நடையும் திருநங்கையின் நடையுடன் சேர்த்து. வாகனங்களின் இரைச்சல் நிறைந்திருந்தது.

அந்தக் கட்டிடத்தின் உள்பகுதி இருட்டைக் காண்பித்துக் கொண்டிருந்தது. அவள் சற்று உள்ளே சென்றதும் அவள் இருட்டுக்குள் மறைந்துவிட்டது தெரிந்தது. சற்றே சிதிலமடைந்த கதவு மூடிக்கொண்டிருந்தது.

“சீக்கிரம் வா…”

“தெரிஞ்ச எடமா”

“முந்தியே வந்த எடந்தா. பழைய பனியன் கம்பெனி. நம்ம வசந்த மாளிகை இப்போ.”

அவன் வசிக்கும் பகுதியின் பிரதான சாலையில் ஒரு பனியன் கம்பனி மூடப்பட்டுக்கிடந்து பிறகு டாஸ்மாக் பாராக மாறிவிட்டது ஞாபகம் வந்தது. இதுபோல் நிறைய பனியன் கம்பெனிகள் ஜி.எஸ்.டி. மாயத்தால் மூடப்பட்டு கிடந்தன.

விரைத்துக் கொண்டிருந்த தன் குறி இன்னொரு குறியோடு மோதுவதாக இருந்தது. திருநங்கையின் கையா. அவளின் கீழ்ப்புற சேலை முழுவதும் உயர்ந்திருந்தது. இன்னொரு ஆண் குறிதான். அவன் ஓரடி பின்னால் நகர்ந்தான்.

“ஒன்பதுதா நான். பயப்படாதே.”

“இல்லே… இதென்ன…”

“என்ன பண்ணி திருப்தி பண்றது…”

“இல்லே… இதென்ன…”

“அதிருக்கட்டும். வாய்லே வெச்சி அவுட் பண்ணட்டுமா. கை போடட்டுமா… பயப்படாதே.”

“இல்லே… இதென்ன…”

“ஒன்பதுதா நான். பயப்படாதேன்னு சொன்னேனில்லியா…”

“இல்லே… இதென்ன… நீ ஆம்பளையா. பொம்பள வேஷம் போட்டிருக்கியா?”

“ஒன்பதுதா நான். பயப்படாதே. ஆண் குறியெ அறுக்காமெ காலம் தள்ளிட்டிருக்கன். எங்கள்லே இது மாதிரியும் சில பேர் இருக்கம்.”

அவன் விலகுவதைப்பார்த்து அவனைப்பிடிக்க வலது கைய நீட்டினாள். அவன் அவசரமாக பேண்டில் கைவிட்டு முன்பே பர்சிலிருந்து எடுத்து மேலோட்டமாகச் செருகியிருந்த பணத்தை எடுத்து நீட்டினான்.

“போறன்…”

“வேண்டா…”

“பசிக்குதுன்னு சொன்னே.”

“பசிக்குதுதா…. ஆனா வேண்டா… தொழில் பண்ணாமெ பிச்சையெடுக்கறது எனக்குப் புடிக்காது.”