சமீபத்தில் இந்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை இந்தியப் பொருளாதாரம் திக்குத் தெரியாத காட்டில் அதலபாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதை மீண்டும் உறுதி செய்தது. இந்தியர்களுக்கு மிக மோசமான நாட்கள் வரவிருக்கின்றன என்பதை உணர்த்தும் அறிக்கை அது. தொழில்துறையிலும் விவாசயத்துறையிலும் ஏற்பட்டிருக்கும் கடும்வீழ்ச்சியும் அதன் விளைவாக நிகழ்ந்திருக்கும் வேலை வாய்ப்பின்மைகளும் வேலை இழப்புகளும் வரலாறு காணாத பெரும் நெருக்கடியாக உருமாறியிருக்கின்றன. மக்களின் வருமானம் பெருமளவு வீழ்ச்சியடைந்திருப்பதால் மக்களின் வாங்கும் சக்தியும் வீழ்ச்சியடைந்து சந்தையில் பெரும் தேக்கம் நிகழ்ந்திருக்கிறது. இதன் விளைவாக உற்பத்திக் குறைவும் ஆட்குறைப்பும் எல்லாத் துறைகளிலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. சிறுகுறு தொழில் முனைவோர் மட்டுமல்ல; பெரும் முதலாளிகள்கூட கடும் வீழ்ச்சியையும் அபாயத்தையும் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி என்ற அடுக்கடுக்கான தாக்குதல்களால் இந்தியப் பொருளாதாரம் தரைமட்டமாக்கப்பட்டுவிட்டது. தொழில் வீழ்ச்சியின் காரணமாக அரசிற்கு வரவேண்டிய வரி வருவாயிலும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க சில மாதங்களுக்கு முன்பு நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்டும் விதமாக ரிசர்வ் வங்கியின் கையை முறுக்கி அதன் இருப்பிலிருந்த பணத்திலிருந்து 1,76,000 கோடி பிடுங்கினார்கள். இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் எல்ஐசியின் பங்குகளை விற்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏர் இந்தியாவை முற்றாகக் கைவிடுவது, ரயில்வே துறையைத் தனியார்மயமாக்குவது என இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களுக்கான அடுக்கடுக்கான சேல்ஸ் ஆஃபர்கள் வெளியிடப்பட்டுள்ளன. எல்ஐசி போன்ற மிக லாபகரமான ஒரு பொதுத்துறை நிறுவனத்தையே தனியாருக்குத் தாரைவார்க்கத் துணிந்த இவர்கள், இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. 92 ஆயிரம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஒரே நாளில் விருப்பு ஓய்வில் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை பிஎஸ்என்எல்தான் குக்கிராமங்களுக்குக்கூட அலைபேசி சேவையைக் கொண்டுசென்று பெரும் புரட்சியைச் செய்தது. ஆனால் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை வாழவைப்பதற்காக பிஎஸ்என்எல் திட்டமிட்ட வகையில் தொடர்ந்து நலிவடைய வைக்கப்பட்டது. அதற்கு சிறந்த உதாரணம், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 4ஜி சேவை அனுமதிக்கப்பட்ட போதும் பிஎஸ்என்எல் 3ஜியோடு தடுத்து நிறுத்தப்பட்டது. இப்போது கடும் ஆட்குறைப்பால் பிஎஸ்என்எல்லின் ஈமச் சடங்கு நடக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அந்த சடங்கின் மீது ஜியோ போன்ற நிறுவனங்களுக்கு ஏகபோக உரிமை கிட்டலாம்.
மாநிலங்களுக்கான நிதி பங்கீட்டை நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்து குறைத்தும் ஜிஎஸ்டி வரி வருவாயில் மாநிலங்களின் பங்கை முழுமையாகத் தராமலும் பெரும் துரோகம் இழைத்துவரும் மத்திய அரசு பெரும் நிறுவனங்களின் வராக் கடன்களைப் பெருமளவு கண்ணை மூடிக்கொண்டு தள்ளுபடி செய்துவருகிறது. வரிச் சலுகைகளும் வாரிவழங்கப்படுகின்றன. ஆனால் மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களையோ நலவாழ்வு திட்டங்களையோ செயல்படுத்தவேண்டிய மாநில அரசுகள், நிதிப் பற்றாக்குறையால் தத்தளித்துக்கொண்டிருக்கின்றன. மக்களிடம் ஏற்பட்டிருக்கும் கடும் வருமான இழப்பால் வங்கிகளின் சேமிப்புகள் குறைந்து வங்கிகள் திவால் நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. ஆனால் அரசோ, வங்கிகள் திவாலானால் நஷ்ட ஈடாக ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும் என்பதிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று அறிவித்திருக்கிறது. அதாவது நீங்கள் வங்கியில் ஐம்பது லட்சம் வைத்திருந்தாலும் வங்கி திவாலானால் உங்களுக்கு ஐந்து லட்சம்தான் கிடைக்கும். இப்படி எல்லா விதமான நிச்சயமற்ற நிலைகளுக்கும் மத்திய அரசு இந்தியர்களை ஆட்படுத்திக்கொண்டிருக்கிறது. தான் சொல்கிற பொய்கள் அம்பலமாவதைப் பற்றியோ தான் ஏற்கனவே சொன்ன பொய்யைத் திரும்பத்திரும்பச் சொல்கிறோம் என்பதைப் பற்றியோ எந்தக் கூச்சமும் இந்த அரசுக்குக் கிடையாது. உதாரணமாக, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்ற பொய்யைக் கடந்த ஐந்து வருடங்களாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதற்காக ஒரு துரும்பைக்கூட இவர்கள் கிள்ளிப் போடவில்லை. அதைப்பற்றி எந்தக் கூச்சமும் இல்லாமல் மீண்டும் அதே பொய் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் சொல்லப்படுகிறது. அடுக்கடுக்கான வாக்குறுதிகள், அலங்கார வார்த்தைகள், வெற்றுகோஷங்கள் ஆனால் எதையும் செயல்படுத்த எந்தச் செயல் திட்டமும் கிடையாது. அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் என்ன நிலையில் இருக்கின்றனவோ, அதே நிலைதான் மத்திய அரசு தற்போது அறிவித்திருக்கும் எந்தத் திட்டத்திற்கும்.
இப்படி இந்த நாட்டையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் பெரும் பொருளாதார மந்தநிலை குறித்துத்தான் இந்த நாடு, விவாதித்துக்கொண்டிருக்க வேண்டும். இந்த மந்தநிலையைப் போக்குவதற்கு எந்தத் திராணியும் அற்ற அரசிற்கு எதிராகக் கிளர்ச்சிகள் வெடித்திருக்க வேண்டும். ஆனால் இப்போது நடப்பது என்ன? இந்தியா போராடிக்கொண்டுதான் இருக்கிறது. அது பொருளாதாரப் பேரழிவிற்கு எதிராக அல்ல. மாறாக, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து இன்று இந்தியர்கள் அலைஅலையாக தெருவிற்கு வந்துகொண்டிருக்கிறார்கள். நாடெங்கும் இஸ்லாமியர்கள் தங்கள் வாழ்வுரிமை மற்றும் குடியுரிமை தொடர்பான எதிர்கால அச்சத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த அச்சத்தின் மூலமாக இந்த தேசத்தை இந்துக்கள், முஸ்லிம்கள் என இரண்டாகப் பிளப்பதற்கு பாஜக பெரும் சதி திட்டத்துடன் இறங்கியிருக்கிறது. ஆனால் இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இந்துக்கள்-முஸ்லிம்கள் பாகுபாடின்றி இந்தியா கைகோத்து நிற்கிறது.
இந்தச் சூழலில்தான் குடியுரிமை திருத்தச் சட்டம் மசோதாவிற்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கும் மாணவர்கள் மேல் இதுவரை இந்துத்துவ பயங்கரவாதிகளால் மூன்று துப்பாக்கிச்சூடுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே இந்துத்துவ சமூக விரோதிகள் ஜேஎன்யூ கல்லூரி வளாகத்தில் முகமூடி அணிந்துவந்து கொடூரமான தாக்குத்தல்களை நிகழ்த்தினார்கள். இப்போது ஆயுதம் தாங்கி சுட ஆரம்பித்திருக்கிறார்கள். டெல்லி தேர்தலையொட்டி நடந்துகொண்டிருக்கும் பிரச்சாரத்தில் தேச விரோதிகளைக் கொல்லுங்கள் என்று பாஜக அமைச்சர்கள் வெளிப்படையாகப் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள். டெல்லியில் தொடர்ந்து போராட்டக்காரர்களின்மீது நடக்கும் துப்பாக்கிச் சூடு ஒரு உள்நாட்டு யுத்தத்திற்கான துவக்கப்புள்ளி. ஏற்கனவே மாட்டுக்கறி சாப்பிடுவர்களைத் தாக்கினார்கள். பிறகு ஜெய் ஸ்ரீராம் சொல்லாதவர்களைத் தாக்கினார்கள். இப்போது தங்கள் மரபார்ந்த ஆயுதங்களைத் தாண்டித் துப்பாக்கிகளுடன் தெருவிற்கு வருகிறார்கள். மிக வெளிப்படையாக இந்துத்துவ கோஷங்களுடன் சுடுகிறார்கள். ஆனால் ஒரு நாளைக்கு மூச்சுக்கு முந்நூறுதரம் இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்ற பதத்தைப் பயன்படுத்தும் ஊடங்கங்கள் இவர்களை இந்துத்துவ பயங்கரவாதிகள் என சொல்ல மறுக்கின்றன. இந்தத் தாக்குதல்கள் இதோடு நிற்கப் போவதில்லை. ஏற்கனவே நரேந்திர தபுல்கர், கோவிந்த் பன்சாரி, கல்புர்கி, கௌரி லங்கேஷ் முதலான முற்போக்கு சிந்தனையாளர்கள் ஆயுதம் தாங்கிய இந்துத்துவ பயங்கரவாதிகளால் பச்சை ரத்தப் படுகொலை செய்யப்பட்டனர். இப்போது துப்பாக்கிகளுடன் வெளிப்படையாக வன்முறையாளர்கள் மக்களைக் குறிவைக்கின்றனர். இவற்றிற்கெல்லாம் படிப்படியாக ஒரு தொடர்ச்சியும் நீட்சியும் இருப்பதை நாம் பார்க்கலாம். ஒரு சாமானிய சராசரி இந்துவின் மனதில் இந்துத்துவ வெறியையும் பகையையும் படிப்படியாக வளர்த்து அதன்வழியாகத் தாங்கள் எதிர்காலத்தில் செய்யப்போகும் கொடூரமான குற்றங்களுக்கு மக்களை உடந்தையாக்குவதுதான் அவர்களின் திட்டம். ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்ய ஜெர்மானியர்களை ஹிட்லர் அப்படித்தான் உடந்தையாக்கினார். தேசம், தேசபக்தி, தேச விரோதிகள் என்ற சொல்லாடல்களைத் தங்கள் மதவாத ஒற்றை அரசியலுக்கான கருவிகளாக அவர்கள் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
வட இந்தியாவில் மிக நேரடியாக இந்த மதவாத வன்முறை குரலை முன்வைத்துக்கொண்டிருக்கும் பாஜகவும் அதன் துணை அமைப்புகளும் தமிழ்நாட்டில் தங்களது ஏஜெண்ட்டுகளின் மூலமாக அந்தக் குரலை எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழகத்தை ஆளுகின்ற அதிமுக அரசும் சில நடிகர்களும் இந்தப் பணியில் மும்முரமாக இறங்கியிருக்கிறார்கள். ரஜினி முதல் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வரை இந்த இந்துத்துவ பரப்புரைப் பணியில் உக்கிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். ரஜினி துக்ளக் விழாவில் 1971ஆம் ஆண்டு பெரியார் நடத்திய ஊர்வலத்தில் ராமர் சிலை அவமதிக்கப்பட்டதாக தனக்கு எழுதிக்கொடுத்த ஒரு கட்டுக்கதையைப் பேசுகிறார். அது ஊடகங்களில் பரப்பரப்பான விவாதமாகிறது. அது தொடர்பாக நடந்த வழக்குகள் பற்றியோ தான் வெளியிட்ட பொய் செய்திக்காக துக்ளக் இதழ் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டது பற்றியோ ரஜினிக்கு எந்தக் கவலையும் இல்லை. ரஜினி மூலமாக இந்துத்துவ சக்திகள் திராவிட இயக்கங்கள் இந்துத்துகளின் உணர்வுகளுக்கு எதிரானவை என்கிற ஒரு பிம்பத்தை உருவாக்க விரும்புகின்றன. அதற்கு ரஜினி ஒரு கருவியாக்கப்படுகிறார். ஊடகங்கள் தங்களுக்கு இடப்பட்ட ஆணையின்படி அந்தப் பரப்புரையை விரிவாக எடுத்துச் செல்கின்றன. ரஜினி திடீரென எப்போதோ முடிந்துபோன ஒரு பழைய விவகாரத்தைப் பேசுவதன் நோக்கம் இதுதான். மேலே குறிப்பிட்டதுபோல அப்பாவி இந்து மக்கள் மனதில் கட்டுக்கதைகள் மூலம் முற்போக்கு இயக்கங்களுக்கு எதிராகவும் திராவிட இயக்கங்களுக்கு எதிராகவும் நஞ்சை விளைப்பது, அதன் மூலமாக எதிர்காலத்தில் தங்களுக்கு ஒரு இந்துத்துவா வாக்குவங்கியை உருவாக்குவது.
இதன் தொடர்ச்சியாக, அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்னும் மூர்க்கமான இடத்திற்குச் செல்கிறார். திருச்சியில் நடந்த ஒரு பாஜக பிரமுகரின் படுகொலை தனிப்பட்ட விவகாரத்தால் நடந்தது என தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையின் திருச்சி மாநகர காவல்துறை ஆணையரே திட்டவட்டமாகத் தெரிவித்த பிறகு அது மத வெறுப்பிற்காக இஸ்லாமிய பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்றும் இந்த நிலை நீடித்தால் இங்கு இந்து தீவிரவாதம் வளர்வதைத் தடுக்க முடியாது என்றும் பேசுகிறார். மிக வெளிப்படையாக மதவாத மோதல்களை ஊக்குவிக்கும் விதமாகவும் இந்துத்துவ பயங்கரவாதத்தை ஆதரிக்கும் விதமாகவும் தனது மதவாத முகத்தை ராஜேந்திர பாலாஜி வெளிப்படையாகக் காட்டுகிறார். பாரபட்சமின்றி நடப்பேன் என இந்திய அரசியல் சாசனத்தின்மீது அவர் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு எதிராக அவரது இந்தப் பேச்சுக்கான அவர் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கான எல்லா சட்டப்பூர்வ காரணங்களும் இருக்கின்றன. ஆனால் பாஜகவின் நிழல் அரசாகவும் யோகி ஆதித்யாநாத்தின் சிஷ்யரைப் போலவும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியின் அரசு அதை எப்படிச் செய்யும்? மத்திய அரசின் மோசமான கொள்கைகள் அனைத்திற்கும் தமிழகத்தை ஒரு பரிசோதனை கூடமாக்கி நீட்டிலிருந்து தொடங்கி ஐந்தாம் வகுப்பு பொதுத் தேர்வுவரை மோடிக்கும் அமித்ஷாவிற்கும் மண்டியிட்டு நிற்பவர்கள், உண்மையில் ராஜேந்திர பாலாஜி போன்றவர்களை ஒருபோதும் கட்டுப்படுத்த மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் இன்றைய அதிமுகவின் உண்மையான கொள்கைப் பரப்பு செயலாளர் ராஜேந்திர பாலாஜிதான்.
தொடங்கிய இடத்திற்கே வருவோம். பொருளாதார நெருக்கடி ஒவ்வொரு குடிமகனையும் ஒவ்வொரு குடும்பத்தையும் நோக்கி பசிகொண்ட ஒரு டினோசரைப்போல நெருங்கி வந்துகொண்டிருக்கிறது. ஆனால் இந்தப் பேரழிவில் இருந்து மக்களைத் திசை திருப்ப தொடர்ந்து மதவாத நெருப்பு மூட்டப்படுகிறது. உண்மையான பிரச்சினைகளிலிருந்து மடைமாற்ற போலியான பிரச்சினைகள் திட்டமிட்டு திணிக்கப்படுகின்றன.
பிணம் தின்னும் ஒரு அரசை எதிர்கொள்வதற்கு நமக்கு இரண்டு கைகள் போதாது.