(ராஜேஷ் வைரபாண்டியனின் ‘வேனிற்காலத்தின் கற்பனைச் சிறுமி’யை முன்வைத்து)
ஓராயிரம் கதைகளும் / எண்ணிலடங்கா கவிதைகளும் / அடங்கியிருக்கும் புத்தகத்தை நேற்று இரவு /பனிரெண்டு நாற்பதுக்கு திறந்து பார்த்தேன் / கதைகளின் பக்கங்கள் எங்கிலும் வெவ்வேறு உலகங்கள் / மிக அமைதியாக / சுழன்றபடி இருந்தன / அலையற்ற பச்சை நீல நிறக் கடல்களும் / அதன் மேல் பறந்து கொண்டிருந்த பட்சிகளும் / நகர்ந்து செல்லும் விருட்சங்களும் / பக்கங்கள் அனைத்திலும் நிறைந்திருந்தன / மஞ்சள் பூக்களை உடலெங்கும் சூடியிருந்த / மலைகள் நிசப்தமாய் இசைத்துக் கொண்டிருந்தன / இல்லாத பக்கத்தின் நிறைவு வரியின் / கடைசி எழுத்தின் பின்னாலிருந்து / இறகொன்றைக் கண்டெடுத்தேன் / கனமற்ற அந்த இறகில்தான் ஒளிந்திருக்கிறது / அந்த கனத்தபுத்தக உடலைக் கொண்ட / என் ஜீவன்”
என் ஜீவன் என்று அடையாளப்படுத்துகிற இவ்வரிகளில் தொடர வைக்கிறது ஒரு உயிர்த்தவம்.. உயிர்ப்பிறப்பு தொகுப்பு முழுமைக்குமான அடையாள துயரமும்,மகிழ்ச்சியுமென என் வாசிப்பின் முற்றத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறாள் ராஜேஷ் வைரபாண்டியனின் செல்லமான, வேனிற்காலத்தின் கற்பனைச் சிறுமி.
சிறுமிகள் எப்போதும் புதிய மலர்களைப் பரிசளித்தபடியே இருப்பவர்கள், அவர்களைப் புரிந்து கொள்ள அவர்களாவதைத் தவிர வேறு வழியில்லை.
ஏன் ஒரு பொழுது கவிதைகளால் நிறைந்திருக்க வேண்டும்? தன்னை விரும்புகிறவர்களின் உலகில் எளிதில் நுழைய ஆயிரமாயிரம் வழிகள் இருக்கும் போது, கலையென்னும் கதவைத் திறந்து கொண்டு, கவிதையெனும் சுடுகின்ற பூங்கொத்தை நீட்டியபடி, அன்பிற்கான எதிர்பார்ப்பாக காலத்தைத் தொலைக்க வேண்டும்? நெரிசலான பயணத்தில் அவசரமான ஓர் அலைபேசி அழைப்புக்கு அடிபணிகையில் அரசின் நவீன கட்டணக் கழிப்பிடம் தேடி அலைகையில், விவஸ்தையற்றதாக ஏதோ ஒரு வரி தன்னை, ஆகச் சிறந்த வரிசையில் கொண்டாடுமாறும், அதற்குக் கவிதையென பெயர் சூட்டிக்கொள்ளுமாறும் ஏன் அடம்பிடிக்க வேண்டும்?
சாதாரணச் சூழல்கள் கழுத்தை நெரித்து உயிரோடு விளையாடும் போதுகூட இறக்கி வைக்கிற சுமைதாங்கியென கவிதையின் ஒரு வரியாக கவிதை போன்று ஒரு வரியாக சில எழுத்துகளும், சொற்களும் ஒன்றிணைந்து உதவிக்கு வருகிறபோது, நான் கவிஞன், எனக்குச் சொற்களின் மாய மந்திரம் தெரியுமென ஒரு மனம் குதூகலிக்கிறதே!
ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் விதிக்கப்பட்ட உறவுகளையும் கடந்து ஏதோ ஒரு போதாமை அவனைத் தள்ளாட வைக்கிறது. அவனை நிலைகுலையச் செய்கிறது. தன் சொல் கேட்கும் ஓர் அடிமையை வைத்துக்கொண்டுதான் மனம் சுதந்திரத்திற்கான ஒரு குரலை எழுப்புகிறது. தனக்கான மனிதர்களாக யாரெல்லாம் வாய்த்திருக்கிறார்களோ, அவர்களிடமெல்லாம் எதையோ எதிர்பார்த்து, ஏமாந்து, எங்கோ தேடத்துவங்குகிறார்கள்.
சொற்களால் போதையேற்றும் காலத்தைக் கைகளில் வைத்துக்கொண்டு, தனக்கான மனிதர்களைத் தேடித்தேடி மனம் அலைகிறது.
ஒவ்வொருவரின் கற்பனைக்குள்ளும் ஒரு காதலி, காதலன், மனைவி, கணவன், குழந்தைகள், முதலாளி, தொழிலாளியென்று எதார்த்தம் கடந்து தான் விரும்பியதை தாங்களே உருவாக்கிக் கொள்கிறார்கள்.
கவிதையாலோ, தற்செயலாக ஏற்றிவைக்கிற தீபமாக அல்லாமல்,நெருப்பின் நிரந்தர அடையாளங்களோடும், பருவகாலம் முடியும் தறுவாயில் எஞ்சியிருக்கும் பனியின் குளிர்ச்சியையும் கொண்டிருக்கிற பெரும் போதை வஸ்துவான கவிதையை ஒருவன் சிறு குளிகைகளாக்கி தனக்கு விருப்பம் ஏற்படும்போதெல்லாம் விழுங்கிக் கொள்கிறான். யார் யாரின் கவிதை வரிகளுக்குள்ளும் தன்னை பொருத்திப் பார்த்துவிட்டு, அது சரியில்லை, இது சரியில்லையென்று நிறமிழந்ததென கூழாங்கற்களை ஆற்றின் கரையோரம் எறிந்துவிடத் தயாராகிறார்கள்.
தனக்குத்தானே உருவாக்கிக்கொண்ட உலகில் சிறுமிகளின் வழியே எதையோ தேடுகிறார். நிஜத்தில் அவள் யாரோ ஒருவரின் பசப்புகளில் மயங்கிச் சரிகிற சராசரி அல்ல, தன்னை வீழ்த்தக் காத்திருக்கும் கரத்தின் மடியில் தானே வலியச் சென்று அகப்பட்டுக் கொள்கிற விபரமற்றவள் அல்ல, இன்னும் பல அல்லவற்றைகளைக் கொண்டிருக்கிறவள்தான்.
இவள் கற்பனைச் சிறுமி, பெரும்பொழுதுகளுக்குள்ளோ, சிறு பொழுதுகளுக்குள்ளோ வாழ்ந்துவிடவேண்டும் என்கிற கட்டாயத்திற்குட்பட்டவளாக அல்ல, தன் விருப்பம் போல் சுற்றித்திரிகிற சுதந்திரச் சிறுமியாக தனக்குத் தானே உருவாக்கிக் கொள்கிற இந்த வேனிற்கால சிறுமியை அவர் மட்டும்தான் அறிந்திருக்கக்கூடும்.
“அனலுருவினள்” என்று தன் சிறுமியொருத்தியை அறிமுகப்படுத்தும் போதே அவள் அனல்+உருவினள் என்பதா, அனலுருவில் இருப்பவளா என்கிற கவிதை வினா நமக்குள் உருக்கொண்டு விடுகிறது, இவள் மாயச்சிறுமி, கதறுகின்ற நாய்க்குட்டியைத் தரதரவென்று இழுத்துச்செல்கிறவள்,அவளறிவாளா? அது அவளின் நிழலின் உருவைக் கொண்டிருக்கிறதென? யாரெல்லாம் காலத்தின் புதை ஆழத்தில் பயணிக்கத் தயாராகிறார்களோ அவர்களுக்குத் தெரியும் அனலுருவினளாக அடையாளம் காணும் சிறுமி, உங்களின் நீண்ட கரத்தை அறுத்தெரியவும் கூடும்.
கவிதை புதிய சொற்களைத் தேடியபடியே இருக்கிறது. அடிபட்டவனின் கேவலில், மகிழ்ச்சியின் உச்சநிலை அறிவிப்பில், அடுத்தடுத்த தலைமுறைக்கு தான் கையளிக்க வேண்டிய கடமையாக கவிதை புதிய சொற்களை படைப்பூக்கச் சக்தியாக உருவாக்கியபடியே இருக்கிறது.
ஒரு கவிதையின் துவக்கச் சொற்கள், பழகிய சொற்களாகிவிடுகிறபோது, விழிகளும் கவிதையை சுவைக்கும் மனநாவும் எளிதில் அடுத்தடுத்த வரிகளாகத் தாவித் தாவி, அந்தக் கவிதையின் இறுதியொன்றிற்குள் பயணத்தை முடித்துக்கொள்ளும். ராஜேஷ் வைரபாண்டியனின் கவிதைகள் எளிதில் அடுத்தடுத்து சென்றுவிட முடியாதபடி, மிக மெதுவாகப் பயணித்து, வழியெங்கும் காண்கிற, உணர்கிற, ஐம்புலன் ஆட்சியாக அறிந்தே, கவிதையின் இறுதி வரிக்கு வர வைக்கிறது. அதற்குப் பல்வேறு கவிதைகள் சாட்சியங்களாக இருக்கின்றன. இவை எனக்கொரு சாட்சியமாகவும், உங்களுக்கொரு பிறழ் சாட்சியங்களாகவும் மாறும் அபாயமற்று ஒரு உணர்வின் அடையாளமாகப் பயணிக்கிறது. எடுத்துக்காட்டாக (உட்)பக்கம், கவிதையைக் கூறிவிட இயலும்.
வாழ்வியலின் பாதையில் சூடாக இருக்கிற பல்வேறு துயரங்களில் பசியொன்றுதான் மனிதனை விரட்டிக்கொண்டே இருக்கிறது. பசியின் தத்துப்பிள்ளைகள்தான் வேறு வேறு எதிர்பார்ப்புப் பசிகள்.
இரவென்னும் இலகுப்பூ என்கிற கவிதையில் இப்படிச் சொல்கிறது உண்மை
“இரவு இவ்வளவையும் தருகிறது ஆனாலும் / சோற்றுப் பருக்கைகளால் / நிறைந்திருக்கும் பகலுக்குள்தான் / வாழ்வென்னும் செடி நடப்பட்டிருக்கிறது / என்பவர்களின் கூர்நகங்களால் கிழிபட்டபடியே இருக்கிறது / இரவென்னும் இலகுப்பூ.”
இரவு இலகுவானதுதான். ஒவ்வொருவரும் அவரவரின் நகங்களால் அதைக் காயப்படுத்துகிறோம்.
கவிதை இவ்வளவு அழகியலையும், கொண்டாட்டத்தையுமா தன் வசம் வைத்திருக்கிறது என்று வினாவை எழுப்புகிற அளவு கவிதைக்குள் அழகியலை மீட்டெடுக்கிறார் கவிஞர். ஒரு நீளமான முத்தம் சப்தமின்றி உறங்குகிறது. கவிதையை அப்படியாக நமக்கும் முத்தமாக்குகிறார்.
ஒரு நீளமான முத்தம் சப்தமின்றி உறங்குகிறது
***
ஏழு கோடைகள் கழிந்தபின் / மெல்ல கண்கள் திறந்தது அச்சிறுமழை / நீண்டதொரு உறக்கத்திலிருந்து எழுந்து / சோம்பல் முறித்தபடி தானுறங்கிய வீட்டை கண்கள் சுழல / பார்த்துக்கொண்டிருந்தது. /
பின்,
தன்னுடலின் நலிந்த வனப்பையும் /உடலினுள்ளே படர்ந்திருக்கும் சருகுமுத்தங்களையும் / சற்றுநேரம் கண்டது. / மழையின் இதயம் படபடவென்று துடிக்கத்துவங்கியதும் / அத்துடிப்பினூடே சன்னமாய் ஒலிக்கும் / பாடலொன்றும் அதன் செவிகளில் விழுந்து சிதறியது. / கண்கள் மூடியபடி / மீண்டும் உறங்கத்துவங்கிய மழை / கரைந்து கரைந்து அவ்விடம் விட்டு அகன்றது. / கோடைகள் பல கழிந்தபின்னும் / நம் தோள்மீது வந்து அமரத்தான் செய்கின்றன / சிறுமழைகள். / சப்தமின்றி நினைவுப்பரணில் உறங்கும் முத்தம்போல.”
கவிதைக்குள் கவிதை பயணிக்கும் மாறுபட்ட கோணங்களை ஒரு கவிதையில் முன் வைக்கிறார்.
“சிதறிக்கிடக்கும் பன்னீர்ப்பூக்களை தன் / மிகச்சிறிய கைகளால் பொறுக்கி எடுக்கிறாள் / ஒவ்வொரு பூவுக்கும் ஒவ்வொரு / முத்தம் தந்து தன் கூடைக்குள் வைத்துக்கொள்கிறாள்”
இது ஒரு காட்சி,
இந்த வரிகளுக்குப் பின் மறுகாட்சி உருவாகிறது.
“சற்றுத் தொலைவிலிருந்து / இக்காட்சியைக் காண்கிறவன் / ஓடிச்சென்று பூவாகி வீழ்கிறான்”
-இது இரண்டாவது காட்சி.
பிறகு என்ன நடக்கப்போகிறது? கவிஞன் ஏன் ஓடிச்சென்று பூவாகி, பிறகு அவசரமாக கீழே விழ வேண்டும்? கவிஞரின் பல கவிதைகளில் சிறுமி பயணிக்கிறாள் அதனால் கவிஞர், சிறுமியின் கைகளுக்குள் பூவாகிவிடத் தவிக்கிறார்.
காட்சி விரிகிறது.
“அவளது பிஞ்சு விரல்கள் தொட்டவுடன் / பூவிலிருந்து பேரன்பாக உருக்கொள்கிறான்”
கவிஞனே பேரன்பாக மாறியபின் கவிதை மேலும் மெருகேறத் துவங்குகிறது அவன் ஆசை தீர்ந்ததா?
இப்போது காட்சி சிறுமியையும், கவிஞரையும் கடந்து மரத்தின் பக்கம் நகர்கிறது, அது இருவருக்காகவும் என்ன செய்கிறது?
“பன்னீர் மரம் பூக்களை உதிர்த்துக்கொண்டே / மலர்கிறது”
இருவருக்கும் மரம் தன்னையே உருமாற்றிக்கொண்டு பூக்களை உருவாக்குகிற கச்சாப்பொருள் என்ற நிலையிலிருந்து மாறி, தானே
மலர்ந்து கொள்கிறது.
காட்சி இப்போது சிறுமியின் பக்கம் நகர்கிறது.
“மிகச்சிறியவள் மிகச்சிறிய தன் மடியில் / கூடையிலிருந்து பூக்களை விடுவிக்கிறாள்”
கூடையில் பூக்களைச் சேகரித்த சிறுமி, பூக்களின் மீது தீராக் காதல் கொண்டவள். நேரிடையாக பூக்களைப் பறிக்கவில்லை.விலை கொடுத்து வாங்கவில்லை. உதிர்ந்த பூக்களைத்தான் பொறுக்குகிறாள்.. துயரமடைந்தவர்களின்,உதிர்க்கப்பட்டவர்களின் மடியாக சிறுமி இருக்கிறாள். அந்தப் பூக்களைத்தானே வைத்துக்கொள்ளவில்லை. பூக்களை யாருக்காவது ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் அந்தப் பூக்களையெல்லாம் விடுவித்து விடுகிறாள்.
காட்சி இறுதிநிலையை எட்டுகிறது. ஓடிச்சென்று பூவாக மாறியவனின் நிலை என்ன? சிறுமியின் தந்தையாகிவிட்டானா?
“பூக்களோடு கலந்து விழுந்தவன் / அம்மா என்று கதறி அழத்துவங்குகிறான்”
ஒரு கவிதையின் வழியாகப் பயணிக்கிற மரம், பூக்கள், சிறுமி, கவிஞன் அல்லது தேடுதலாளன் இவர்கள் வழியாக உணர்த்தப்படுகிற தாய்மையின் உச்சமே இந்தக் காட்சி வடிவம். “அம்மா” என்று கதறி அழத்துவங்குகிற தேடுதலாளன் அல்லது கவிஞனின் கரங்களைப் பற்றி ஆறுதல் சொல்ல மனம் தவிக்கிறது. இந்தப் பணியை வேறுவேறு கவிதைகள்,வேறு வேறு தளங்களில் செய்து முடித்துவிடுகின்றன. பேரன்பில் மலர்ந்திருக்கும் பறவைப்பூ என்கிற கவிதை கவிஞனுக்கு ஒரு பிரபஞ்சத்தையே பரிசாக்கி விடுகிறது.
கவிதை கொண்டாடப்பட ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. கவிதைக்குள் வாசகன் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறபோது, தனது அழகியல் பசிக்கான சிறு கவளத்தையாவது கரங்களில் இடுகிற போது, தன் பசியே தீர்ந்ததுபோல ஓய்வுக்காகத் தயாராகிறான். தனது வலியை, தனது இழப்பை யாரேனும் ஒரு வரியில் சுட்டிக்காட்டி, உன்னை வெளியுலகிற்கு வெளிப்படுத்த நானிருக்கிறேன் என்று கவிதையாக வருகிறபோது, போர்க்குரலின் துணைகிடைத்த மதர்ப்பில் தனது போராட்டத்தை சற்றே சூடாக்குகிறான்.
கவிஞர் ராஜேஷ் வைரபாண்டியனின் கவிதைத் தொகுப்பிற்குள் புதிய சொற்றொடர்களின் கட்டமைப்பு, புதிய சொற்களின் உருவாக்கம் போன்றவை மொழியை உருவாக்குகிற அடுத்தகட்ட நகர்விற்கு அவரை இழுத்துச் செல்கின்றன.
ஒரு கவிதையில் சமூகத்தைப் பார்க்கும் பார்வையில் நாம் எளிதில் செய்தியென கடந்து போகிற ஒன்றை இப்படி வடிவமைக்கிறார்.
“விபத்தொன்றில் / வீசி எறியப்பட்ட சிறுவனின் / சட்டையை அவசரமாக கழற்றிவிட யத்தனித்ததில் / நிறைய பட்டன்கள் தெறித்து ஓடியது”
சிறுவர்களோடும், சிறுமிகளோடும் ஞானம் பெற வைக்கிறார் கவிஞர். கருணையுள்ள கவிதை நம்மை ஒருபோதும் கைவிடுவதில்லை.
ஒரு கோப்பை தேநீராக கவிதையைப் பருகுவோம்
ஒரு கவளம் சோறாக கவிதையைச் சுவைப்போம்.
வேனிற் காலத்தின் கற்பனைச் சிறுமி
ஆசிரியர்:ராஜேஷ் வைரபாண்டியன்
உயிர்மை பதிப்பகம் பக்கம்: 80; விலை:80;
புதிய எண்.79, ப.எண்.39 மேற்கு போயஸ் சாலை
(இளங்கோ சாலை – அண்ணா அறிவாலயம் பின்புறம்)
தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
PH: 044 – 48586727, 90032 18208.