தமிழ்ச் சிறுகதை, தொடக்கத்தில் நாவலுடன் ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்தது. காலப்போக்கில் சிறுகதை வடிவம், செறிவடைந்து வளர்ச்சி அடைந்தது. இன்று தமிழில் வெளியாகும் நவீனச் சிறுகதை, உலகத்துச் சிறுகதைகளுடன் ஒப்பிடுமளவு உச்சநிலையை எட்டியுள்ளது. மொழியின் பிரயோகத்திற்கேற்பச் சிறுகதையை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கதையை எழுதுவதிலும் வாசிப்பதிலும் மதிப்பிடுவதிலும் கோட்பாடுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஐம்பதுகளில் எழுதத்தொடங்கிய பல சிறுகதை ஆசிரியர்கள், அன்றைய சூழலில் சிறப்பானவர்களாக கருதப்பட்டதில் இன்று பெரிய மாற்றம். முன்னர் சிகரமாகக் கருதப்பட்ட படைப்பாளரின் சிறுகதைகள் இன்று மறுவாசிப்பில் ஆட்டங் காணுகின்றன; பீடங்கள் நொறுங்குகின்றன. சமூக அக்கறையும் வரலாற்றுப் பார்வையும் மிக்க வாசகன், படைப்பாளரைப் பற்றி ஒற்றைவரி அபிப்பிராயத்தை உதிர்த்துவிட்டு ஒதுங்கிட இயலாது. படைப்பின் பின்னர் பொதிந்திருக்கிற நுண்ணரசியலை அன்றைய சூழ்நிலைக்கேற்பப் பொருத்தி ஆராய்கையில் படைப்பின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்ச் சிறுகதைகள், வாசகருக்கு லயிப்பை ஏற்படுத்தும்வகையில் உற்சாகமான கதைசொல்லலை முதன்மைப்படுத்தின. சிறுகதைகளின் வழியே மனிதர்களின் அன்பு, அவலம், துக்கம், மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகள் வெளிப்பட்டன. எதிரே அமர்ந்திருக்கும் வாசகரை முன்னிலைப்படுத்திக் கதை சொல்லும் போக்கு காரணமாகக் கதைகளில் ஒருவிதமான எளிமை கூடியிருந்தது. நாட்டு விடுதலைக்குப் பின்னர் புதிதாகக் கல்வி கற்ற இளைய தலைமுறையினரின் வாசிப்பு மனோபாவம், புதிய பத்திரிகைகளின் தேவைகள் காரணமாகச் சிறுகதைகள் பல்கிப் பெருகின. இத்தகைய சூழலில் தி. ஜானகிராமனின் எழுத்துக்கள் வாசகரிடம் எவ்விதமான வரவேற்புப் பெற்றிருந்தன என்று கண்டறிவது அவசியம். தி.ஜா. பெரும்பாலும் வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதியுள்ளார். தி.ஜா.வின் யதார்த்தச் சிறுகதைகள், பிரசுரமான காலகட்டத்தில் வாசகர்களுக்கு ஈர்ப்பை ஏற்படுத்தக்கூடியனவாக விளங்கின. இன்று தமிழில் கதை சொல்லும் முறை முழுக்க மாறிவிட்டது. இலத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, மொழியின் அதிகபட்ச சாத்தியங்களைக் கண்டறிவதுடன், புனைவின் புதிர் வழியே மனித இருப்பினைக் கண்டறிந்திடப் படைப்பாளர்கள் முயலுகின்றனர். இந்நிலையில் தேர்ந்த சிறுகதை ஆசிரியராக அறியப்பட்ட தி.ஜா.வின் சிறுகதைகள் மறுவாசிப்பிற்குள்ளாக்கப்பட வேண்டிய தேவையேற்பட்டுள்ளது. அவர் படைப்புகளின் வழியே முன்னிறுத்தும் மதிப்பீடுகளை விமர்சிப்பதன் மூலம் அவருடைய சிறுகதைகளின் சமகாலத் தன்மையைக் கண்டறிந்திட முடியும். பிராமணர் சாதியைச் சார்ந்த பெண்கள் குறித்து தி.ஜா. எழுதிய கதைகள் பிரசுரமானபோது உயர்சாதியினர் வாசிப்பில் லஹரியை அடைந்தனர். தி.ஜா. என்றாலே புதிய வகைப்பட்ட பெண்கள் பற்றிய மாறுபட்ட புனைவுகளைக் கட்டமைத்தவர் என்ற மதிப்பீடு ஏற்புடையதுதானா? பெண்ணியம் தனித்துவமான கோட்பாடாக வளர்ச்சியடைந்த சூழலில், பெண்ணியத் திறனாய்வு நோக்கில் தி.ஜா.வின் கதைகளை அணுகலாம்.
தி.ஜா.வின் முதல் சிறுகதை 1937-ஆம் ஆண்டு ஆனந்த விகடன் இதழில் வெளியானது. அதனைத் தொடர்ந்து கலைமகள், கலாமோகினி, சிவாஜி, தேனி, கல்கி, சுதேசமித்திரன், காதல், மணிக்கொடி, தினமணிகதிர் போன்ற இதழ்களில் எழுதியுள்ளார். 1980ஆம் ஆண்டு வரை அவர் எழுதியுள்ள 120 சிறுகதைகளில், கணையாழி இதழில் ஐந்து சிறுகதைகளும் மணிக்கொடி இதழில் மூன்று சிறுகதைகளும் வெளியாகியுள்ளன. பிற கதைகள் வெகுஜனப் பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. தி.ஜா.வைப் பொறுத்தவரையில் வெகுஜன வாசகர்களின் வாசிப்பினுக்காகச் சிறுகதைகள் எழுதியவர் என்று உறுதியாகச் சொல்லவியலும். அவர் தனது சிறுகதைகள் யாரைச் சென்று அடையக்கூடியன என்பது குறித்துத் துல்லியமாக அறிந்திருந்தார். வெகுஜன ஊடகத்தில் எழுதியதற்காக அவருடைய சிறுகதைகளை மலினமானவை என்று ஒதுக்குவதற்கில்லை. அவர் எழுபதுகளில் சிறந்த சிறுகதை ஆசிரியராகச் சிறுபத்திரிகை வட்டாரத்தில் அறியப்பட்டார்.
தி. ஜா.வின் சிறுகதைகள் இருபெரும் தொகுப்புகளாக ஐந்திணை பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளன. தி. ஜானகிராமன் படைப்புகள் தொகுதி-2 நூலில் இடம் பெற்றுள்ள 45 சிறுகதைகள் மட்டும் இக்கட்டுரை எழுதுவதற்கு மூலமாகக் கொள்ளப்பட்டுள்ளன. இத்தொகுப்பில் சிறுகதைகள் தொகுக்கப்பட்ட முறையியல் பற்றிய குறிப்பு எதுவுமில்லை. சிறுகதைகள் வெளியான காலவரிசை பற்றிய பதிவுகளும் இடம் பெறவில்லை. எனவே வகைமாதிரியாக இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் ஆய்விற்குட்படுத்தப்பட்டுள்ளன.
தி. ஜா. எதையும் சுவாரசியமாகக் கதை சொல்லும் மரபு வழிப்பட்ட கதைசொல்லி கிராமத்துச் சாவடியில் விட்டேத்தியாக அமர்ந்துகொண்டு, காலப் பிரக்ஞையில்லாமல் “இப்படித்தான் மேலத்தெரு ராமசாமி…” என்று ஆரம்பிக்கும் கதைசொல்லிக்கும், தி.ஜா.வுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. அவருக்குக் கதைதான் முக்கியம். கதையின் வடிவம், மொழியின் வழியே வெளிப்படும் கதையின் வீச்சு, சோதனை முயற்சி போன்றவற்றில் பெரிதும் நம்பிக்கை இல்லை. ஒருவிதமான விட்டேத்தியான மனோபாவம், தி.ஜாவின் கதை சொல்லலில் பொதிந்துள்ளது. எல்லாக் கதைகளும் வாசித்து முடிந்தவுடன் நிறைவடைந்து போகின்றன. அவை வாசிப்பவருக்கு அசை போடுவதற்கான வாய்ப்பினைத் தருவதில்லை. கதைசொல்லலின் மூலம் கிடைத்திடும் சுவாரசியமும் மகிழ்ச்சியும்தான் வாசிப்பின் வழியாகக் கிடைத்திடும் அனுபவங்கள். தி.ஜா.வினை முன்வைத்துப் பொதுவாகச் சொல்லப்படும் விமர்சனம்: அவர் பெண்களின் ஒழுக்கக்கேட்டினுக்கு வக்காலத்து வாங்குகிறார்; பெண்களின் வக்கிர மனநிலை, சோரம்போதலைக் கதைகளில் நியாயப்படுத்துகிறார். பல்வேறு கதைகளில் பெண்களை முதன்மையாக வைத்து உளவியல்ரீதியில் கதைகளை எழுதியுள்ள தி.ஜா.வின் பெண் பற்றிய பிம்பங்களைத் தொகுத்து ஆராய்வதன்மூலம் புதிய முடிவுகளைக் கண்டறிய முடியும். பெண் பற்றிய தி.ஜா.வின் சொந்த மதிப்பீடுகள் என்பதைவிட, குறிப்பிட்ட கதைகளில் செயற்பட்ட பெண் மனம் பற்றிய புனைவுகள் என்பதனையும் கருத்தில்கொள்ள வேண்டும்.
பெண் என்ற பிம்பத்தைக் கட்டமைத்து, அவள் குறித்து எப்பொழுதும் பதற்றத்துடன் இருக்கிற ஆண்களின் மனம் புனைகிற புனைவுகளுக்கு அளவேது? காலங்காலமாகப் பெண் எப்படி இருக்க வேண்டுமெனப் படைப்புகள் மூலம் சித்திரிக்கிற நிலை, ஆண் மேலாதிக்கச் சமூகம் உருவாக்கிட முயலுகிற கதையாடல்களின் வெளிப்பாடுதான். மரபான இந்துப் பெண், மரபின் தளையில் இருந்து விலகிட முயலுகிற பெண் என்ற இருவேறு கதையாடல்களும் கவனத்திற்குரியன. ஆணின் மனவோட்டம் சார்ந்து நினைவுகளில் வெளிப்படுகிற பெண்ணுடல், குடும்பம் என்ற அலகினைச் சிதிலமாகாமல் பாதுகாக்கிறது. இயற்கையாகவே மறு உற்பத்தியில் ஈடுபடும் ஆற்றல் மிக்க பெண்ணின் பாலியல் வேட்கையின் வீச்சு, எப்பொழுதும் ஆண்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. பெண்ணுக்கான ஒழுக்கங்களை வரையறுத்துப் போதிக்கப்படுகிற சூழலில் மதங்கள், கண்காணிப்பு அரசியல் மூலம் பெண்ணுடல்களை ஒடுக்கிட முயலுகின்றன. இன்னொருபுறம் புனைகதைகள், பெண் என்ற தன்னிலையைச் சமூகம் கட்டமைத்திடும் ஒடுக்குமுறைகளை இயல்பானதாக ஏற்றுக்கொள்ளும் பணியை நுட்பமாகச் செய்கின்றன. தி.ஜா.வின் பெரும்பாலான பெண் கதைமாந்தர்கள் பாரம்பரியம், பண்பாடு என்ற பெயரில் நிலவுகிற சமூகக் கண்காணிப்பில் இணங்கிப் போகின்றனர்.
‘பசி ஆறிற்று’ கதையில் வரும் அகிலாண்டம், ‘வேறு வழியில்லை’ கதையில் வரும் ஞானம் ஆகிய இருவரும் தங்கள் கணவர்கள் மீது அதிருப்தியும் வெறுப்பும் கொள்கின்றனர். அகிலாண்டத்தின் கணவரான கோயில் குருக்கள் காது கோளாதவர். இது அவளுக்கு எரிச்சலைத் தருகிறது. அவரது கட்டை குட்டையான தோற்றமும் வெறுக்கத்தக்கதாக இருக்கிறது. அவள் திருமணத்திற்கு முன்பே எதிர்வீட்டுப் பையனை விரும்பினாள். அது நிறைவேறாதநிலையில் குருக்களுடன் வாழ நேரிடுகிறது. இந்நிலையில் அவள் அடுத்த வீட்டுப் பையன் ராஜம், ருக்மணி மாமியின் தம்பி ஆகியோரின் மீது காதல் வயப்படுகிறாள். ஞானமும், அடுத்த வீட்டுப் பையன் மீது காதல்கொண்டு, அதற்காகக் கணவனுடன் அன்பாக இருப்பதுபோல நடிக்கிறாள். இறுதியில் உண்மையாகவே கணவனுடன் நெருக்கமாகி, அவனது அன்பில் மனம் மாறுகிறாள்; அகிலாண்டமும் தனது கணவரின் கள்ளங்கபடமற்ற எளிமையில் மயங்கி அவனை நேசிக்கத் தொடங்குகிறாள். இவ்விரு பெண்களும் உடல்ரீதியில் பிற ஆடவர்களுடன் உடலுறவு கொண்டிருப்பதாகச் சித்திரிக்கப்படவில்லை என்பது கவனத்திற்குரியது. பெண்கள், மனரீதியில் சலனப்படுவது கதையாக்கப்பட்டுள்ளது. இரு பெண்களும், தங்கள் கணவர்களை வெறுப்பதற்கான காரணங்கள், கதைகளில் துல்லியமாக விவரிக்கப்பட்டுள்ளன. பிற ஆண்கள்மீது குடும்பப் பெண்ணுக்கு ஏற்படுகிற பாலியல் ஈர்ப்பும், மனச்சலனமும் உருவாவதற்குத் தர்க்க அடிப்படையில் நியாயம் கற்பிக்கப்பட்டுள்ளது. பெண் உடல்ரீதியில் அத்துமீறாமல், சுத்தமாக இருப்பதாகப் படைக்கப்பட்டிருப்பதன் மூலம், குடும்ப நிறுவனத்தின் மேன்மையும் மரபுவழிப்பட்ட பெண் பற்றிய கருத்தும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. மனரீதியில் பெண்ணின் தனிப்பட்ட பாலியல் விழைவைப் பொருட்படுத்தாமல், கணவனின் விருப்பு வெறுப்பினுக்காக வாழ்கிற பெண்ணுடல் என்ற கதையாடல், கேள்விக்குரியது. குடும்பப் பின்புலத்தில் ஆணை மையமாக வைத்துத் தன்னுடைய வேட்கையை ஒதுக்கி வைத்துவிட்டு, கணவன் என்ற ஆணுக்காக வாழ்தல் மனைவி என்ற சிறந்த பெண்ணின் இலக்கணம் என்ற மனு தர்மம் போதிப்பதை, நவீன மொழியில் தி.ஜா. கதைகளாக்கியுள்ளார்.
குடும்பத்தில் அடங்கியொடுங்கி வாழ்தலே பெண்ணின் இலக்கணம் என்று ஆணின் மொழியில் கட்டமைக்கப்பட்ட சொல்லாடலை தி.ஜா. நுட்பமாகக் கதைகளில் பதிவாக்கியுள்ளார். இன்னொருவகையில் சொன்னால், மரபு வழிப்பட்ட வைதீக சநாதனப் பெண் பிம்பம், கதைகளில் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. கணவனைவிட்டு வேறு ஆணைப்பற்றி மனரீதியில் நினைக்கிற பெண் மன்னிக்க இயலாத குற்றவாளி என்பது ஒழுக்கவாதிகளின் கருத்து. ஆனால் நடப்பில் குடும்ப நிறுவனத்தில் புற அழுத்தம் காரணமாக வேறு வழியில்லாமல் பிரிந்து வாழ்கிற பெண்களைப் புரிந்துகொள்ள மரபான ஒழுக்க அளவுகோல்கள் மட்டும் போதாது. ‘தவம்” கதையில் தாசியான செல்லூர் சொர்ணாம்பாவுடன் உறவு கொள்வதற்காக, சொந்த மக்கள், மனைவியைத் துறந்துவிட்டுச் சிங்கப்பூர் சென்று பத்தாண்டுகள் கடுமையாக உழைத்து, பணம் புரட்டிக்கொண்டு மீண்டும் தமிழகம் திரும்பும் கோவிந்த வன்னியுடன் ஞானத்தையும் அகிலாண்டத்தையும் ஒப்பிட்டால் தி.ஜா.சித்திரிக்க விரும்புகிற பெண் யார் என்பது புலப்படும். தாசிகள் என்று பெண்களைத் தனியாக ஒதுக்கி வைத்துக்கொண்டு அலைந்து திரியும் ஆண்களின் தேவடியாத்தனத்தை அங்கீகரிக்கும் சமூக மனோபாவத்தில், சூழலின் அழுத்தம் காரணமாகச் சலனமடையும் பெண்கள்கூட கேவலமாகத் தோன்றுவது சமூக முரண்பாடாகும். பாலியலைப் பொறுத்தவரையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறு அளவுகோல்களுடன் அணுகுகிற நிலை, தி.ஜா.வின் கதைகளில் வெளிப்பட்டுள்ளது.
‘மறதிக்கு’ கதையில் ஜனகம், கணவனால் ஓடும் ரயிலில் தவறுதலாகக் கார்டு பெட்டியில் ஏற்றிவிடப்படுகிறாள். அப்பொழுது தடுமாற்றமடைந்த ஜனகம், கார்டுடன் உடலுறவு கொள்கிறாள். ஏதோவொரு மனநிலையில் தன்னிலையிலிருந்து புரண்ட ஜனகம், பின்னர் குற்றமனப்பான்மைக்கு உள்ளாகி, நடந்த சம்பவத்தைக் கணவனான தாத்தாச்சாரியிடம் தெரிவிக்கிறாள். யாரும் அறியாமல் நிகழ்ந்திட்ட பாலுறவை அவள் மறைத்திருந்தால், அது வெளியே தெரிய வாய்ப்பில்லை. ஆனால் அவளுக்குள் பொதிந்துள்ள மரபு வழிப்பட்ட பெண் மனம், நடந்த தவறினைக் கணவனிடம் தெரிவிக்கத் தூண்டுகிறது. இதனால் கணவனின் புறக்கணிப்பினுக்கு ஆளாகி, மனவருத்தத்தில் தோய்ந்து, நோய் வாய்ப்பட்டுச் செத்துப் போகிறாள். நடப்பு வாழ்க்கையில் எல்லாம் சரியென்று நம்பிக்கொண்டிருக்கும் சூழலில் திடீரென ஏற்படும் அசாதாரண நிகழ்வு, எல்லாவற்றையும் நொறுக்கிச் சிதைக்கிறது. இதனால் அல்லல்படுவது பெண்தான்; அதற்காக அவள் தர வேண்டிய விலை ரொம்ப அதிகம். மனைவியை ஒதுக்கிய தாத்தாச்சாரி தபால் தருவதற்காக முப்பதாண்டுகளுக்கும் மேலாக அலைந்து கொண்டிருக்கிறார் என்ற தகவல் வாழ்வின் விசித்திரம் அன்றி வேறு என்ன?
குடும்ப நிர்ப்பந்தம் காரணமாக, வயதானவருக்கு இரண்டாம் தாரமாக வாழ நேர்ந்திட்ட மங்களம், தொடர்ந்து ஒன்பது குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதுடன், குழந்தை பெறுதல் என்பது தற்செயல் அல்ல என்பதுடன், இன்று கணவர் உயிரோடு இருந்திருந்தால் இன்னும் சில குழந்தைகள் பெற்றுக்கொண்டிருப்பேன் என்கிறாள். பொதுவாக வயதானவரைத் திருமணம் செய்துகொள்ளும் இளம்பெண்களின் பாலியல் உறவு திருப்திகரமாக அமையாது என்பதை மங்களம் நாசூக்காக மறுக்கிறாள். குரூபி, கிழவன், விகாரமானவன் எனக் கணவன் இருப்பினும் மனைவி அதனைப் பொறுத்துக்கொண்டு ‘அன்பு’ செலுத்துதலே பிரதானம் என்பது கதையில் சொல்லப்பட்டுள்ளது. சூழலுக்கெதிராக மனதில் தோன்றும் விருப்புவெறுப்பைப் புறந்தள்ளிவிட்டுக் ’கல்லானலும் கணவன்’ எனப் பெண்ணுக்குச் சொல்லப்படும் போதனையை விமர்சனமின்றி ஏற்றுக்கொள்வதுதான் பெண்ணின் இயல்பு என்ற தி.ஜா.வின் கதையாடல் கேள்விக்குரியது. ஆணுக்கான பெண்ணுடல்களைத் தயாரிப்பதுடன் குடும்பத்தில் பெண்ணைத் தொடர்ந்து ஒடுக்குவதும் ஆண் மேலாதிக்கத்தின் வெளிப்பாடு.
காசநோயினால் பாதிப்பிற்குள்ளான கணவனைப் புறக்கணித்து ஒதுங்கும் மனைவியின் செயலைச் சித்திரிக்கிற ‘அத்துவின் முடிவு’ கதையை முற்றிலும் சரி அல்லது தவறு என்று சொல்லிவிட இயலாது. நோயினால் சாகக் கிடக்கும் சக மனுஷன் என்ற உணர்வினைவிடத் தன்னலம் அவளைப் பயமுறுத்துகிறது. இறுதியில் அத்து இறக்கிறான். இதுவரையில் அவன் ஈட்டிய அளப்பரிய சொத்துக்கள் கடனில் மூழ்கிட, மனைவி தெருவில் நிற்கிறாள். அத்து முன்னர் சொன்னதைப் போல் இக்கதையில் ஒருவகையான அறம் வெளிப்பட்டுள்ளதா? யோசிக்க வேண்டியுள்ளது. தீயவர் தீமையே இறுதியில் அடைவர் என்ற பொதுப்புத்தியைக் கதை விவரிக்க முயலுகிறது. குடும்ப உறவின் உன்னதம் குறித்த கதையாடல் எப்பொழுதும் பெண்ணை நோக்கி முன்னிறுத்தப்படுவதில், தி.ஜா.வின் ஆதிக்க அரசியல் வெளிப்பட்டுள்ளது. ‘வேண்டாம் பூசாரி’ கதையில் சாவை எதிர்நோக்கியுள்ள 82 வயதான பாட்டி, அவளது இளமையில் எல்லோருக்கும் நல்லவற்றையே செய்திருப்பினும், இன்று மிகவும் துயரமடைகிறாள். அவளுடைய மருமகள்கள், மகள், மகன்கள், பாசத்துடன் இல்லை. வாழ்க்கை என்னும் பேராற்றில் எல்லாம் சகஜம், நல்லவர்களும் கொடுமைக்கு ஆளாகி விடலாம், எல்லாம் கலிகாலம் என்ற குரலைக் கேட்க முடிகிறது. சமூக அறத்தைப் போதிப்பதில் பெண்ணுக்கெனத் தனியாகக் கதைக்கிற புனைகதைகளின் பின்னர் நுண்ணரசியல் பொதிந்திருக்கிறது.
‘சிவப்பு ரிக்ஷா’ கதையில் வரும் இளம்பெண், பிறருடைய அக்கிரமச் செயலுக்கு எதிராகத் துணிந்து போராடுகிறாள். எனினும் இறுதியில் சூழலின் நெருக்கடி காரணமாகப் பணிகிறாள். தியாகையர் கீர்த்தனையைத் தியாகையர் பாடியதைவிடத் தாசி பாடியது மேல் என்று போலியாகப் புகழ்ந்திட்ட பாடகரைத் திட்டி வீட்டைவிட்டு வெளியேற்றும் தாசிப்பெண் கூட லட்சியப் படைப்பாகச் சுருங்குகிறார்.
ஏற்கனவே கல்கி உருவாக்கியிருந்த புனைவுகளில் மூழ்கி, அவற்றில் தங்களுடைய உணர்ச்சிகளை முதலீடு செய்திருந்த தமிழகத்து வாசகர்கள், தி.ஜா. கதைகள் பிரசுரமானபோது, கதைமாந்தர்களுடன் வாழ்கிறவர்களாக மாறி, அரை மயக்கத்தில் இருந்தனர். வெறுமனே கதை என்பதற்கு அப்பால் கதைமாந்தர்கள், வாசகர்களின் நினைவில் கலந்தனர். மிகவும் விரும்பிய ஒருவருடன் உடலுறவு கொள்வது போலவோ அல்லது அவரின் இறப்பை நினைத்து வருந்துவதாகவோ கற்பனை செய்து உடலளவில் கதைமாந்தர்களுடன் அடையாளப்படுத்துதல் நிகழ்ந்தது. கடவுள் அல்லது விதி என்ற பெயரில் இரக்கமற்ற மனித வாழ்வின் சட்டகங்கள் மாற்ற முடியாதவை என்பதைக் கதைகளின் வழியாக அறிந்திடும் வாசகன், தனது சொந்த வாழ்க்கையைக் கதைகளில் தேடுகிறான். தனிமனித அகம் என்பது விதிகளால் கட்டமைக்கப்பட்ட நிலையில், இருப்பு அர்த்தம் இழக்கிறது. தி.ஜா.வின் கதைமாந்தர்களுடைய இயக்கத்துடனும் மனவோட்டத்துடனும் இயைந்து பயணிக்கிற வாசகர்கள், சுயமழிந்த நிலையில், மரபான வாழ்க்கையை அப்படியே ஏற்றுக்கொள்கின்றனர்.
தி.ஜா. சிறுகதைகளின் வழியே சித்திரிக்கும் பெண்கள் மரபு வழிப்பட்டவர்கள் என்பதற்கு மேல் கூடுதலாகச் சொல்ல ஏதுமில்லை. பிராமணர்களின் குடும்ப வாழ்க்கையில் சற்று விழிப்படைந்த பெண்களைப் பாரம்பரியம் என்ற பெயரில் அடக்கியொடுக்கிடும் பணியை தி.ஜா.வின் கதைகள் நுட்பமாகச் செய்கின்றன. இன்னும் சொன்னால் மோசமாகிச் சீரழிந்துகொண்டிருக்கும் வாழ்க்கையில் ஏதாவது ஒன்றினைப் பற்றிச் சமாதானம்கொள்ளும் நிலையினையே பெண்களுக்கு தி.ஜா. கதைகளின் வழியாகப் பரிந்துரைக்கிறார். குறிப்பாகப் பெண்ணுடலின் தூய்மை குறித்த கதையாடல்கள் தி.ஜா. கட்டமைக்க விரும்பிய பெண் பற்றிய மதிப்பீடுகளில் முக்கியமானவை.
இறுதியாகச் சில சொற்கள்: தி.ஜானகிராமனின் சமகாலத்திய எழுத்தாளர்களில் பலர் கதைகளின் வழியாகப் பல்வேறு விஷயங்களைப் பதிவாக்கிட முயன்ற காலகட்டத்தில், அவர் பெண்களை முன்வைத்துத் தனக்கெனப் புதிய கதையாடலை உருவாக்கினர். அவருடைய பெரும்பாலான கதைகளின் விவரிப்பில் ஒருவிதமான நகைச்சுவை அடியோட்டமாக இருக்கிறது. அவருக்கு எல்லாமே கேலிதான். தி.ஜா.வின் பெரும்பாலான கதைகள் குடும்பம், மனிதர்கள், உறவுகள், ஏமாற்றம், கொண்டாட்டம், சிக்கல் என்று ஒரே வட்டத்திற்குள் சுழல்கின்றன. அன்றைய காலத்தில் நிலவிய உயர்சாதியினரின் மனோபாவத்தை முதன்மைப்படுத்தி எழுதப்பட்டுள்ள தி.ஜா.வின் பெரும்பாலான கதைகள், ஒருவகையில் வெகுஜன வாசகரின் ரசனைக்குத் தீனிபோடும் வகையில் அமைந்திருந்தன. மாறி வரும் நவீன வாழ்க்கைச் சூழலில் தி.ஜா.வின் சிறுகதைகள் விவரிக்கிற மரபான பெண்ணுக்கும், எப்பொழுதும் ஸ்மார்ட் அலைபேசியில் மூழ்கி, மின்னணு உலகில் பயணிக்கிற இளம்பெண்ணுக்கும் எந்தவகையில் தொடர்பு இருக்க முடியும்?