1)
நான் உன் கதைப் புத்தகமல்ல.
நீ
எனக்குள்
விருப்பப்படும்போதெல்லாம்
நுழைந்துகொண்டும்
வெளியேறிக்கொண்டும் இருக்க முடியாது.
நான்
ஒரு இருதய நோயாளியின்
இதயத்தில்
வைக்கப்பட்ட கருவி போல்
உன்னுடன் இருப்பேன்.
என்னை நீக்கினால்
உனது இருப்பு அழியும்.
2)
நீ எல்லாவற்றையும்
ஒரு கதை போலவும்
விளையாட்டைப் போலவும்
பார்க்கிறாய்.
சதுரங்க விளையாட்டு
தூக்கம் வரா இரவுகளில்
நீ விளையாடும்
கணினி விளையாட்டு.
3)
உண்மைதான்
சதுரங்கத்திலும்
கணினி விளையாட்டிலும்
ஏன் ஒரு கதையிலும்
நாவலிலும்
முதல் நகர்த்தல்கள்
அடுத்த நகர்த்தல்களைத் தீர்மானிக்கின்றன.
பிறருடைய நகர்த்தல்கள் மட்டுமல்ல
என்னுடைய நகர்த்தல்களே
என்னைத் தடை செய்ததுமுண்டு.
ஒரு சிரிப்பை
ஒரு கைகுலுக்கலை
ஒரு தாடை இறுக்கலை
நட்பை
வெறுப்பை
காதலைத் தொடங்கிவிட்டால்
அது களத்தில்
சில கட்டங்களைத் திறந்துகொடுக்கிறது
சில இடங்களை
அடைத்துவிடுகிறது.
என் வழியை மறிக்கிற விஷயங்களை
நானே பெரும்பாலும் செய்திருக்கிறேன்.
4)
நாம் பெரும்பாலும்
பள்ளி ஆண்டுவிழாக்களில்
நடனமாடச் சொல்லி
மேடைக்குத் தள்ளப்படும்
குழந்தைகள் போல் இருக்கிறோம்.
5)
மோசமாக அல்லது தயக்கத்துடன்
ஆடப்படும் அந்த நடனத்தின்
மிகச் சரியான அசைவுகளை
பார்வையாளர் பகுதியிலிருந்து
தன்னிச்சையாக ஆடிக்காட்டும்
மேடை கிடைக்காத
நடனத்தில் உண்மையிலேயே
ஆர்வம் உள்ள
ஒரு குழந்தை போல் இருக்கிறோம்.
6)
யோசிக்கும்போது
நாம் எல்லாவற்றையும் வீணடித்திருக்கிறோம்
என்று தெரிகிறது.
நன்றாக வந்திருக்கக்கூடிய
ஒரு நடனத்தை.
பாடலை
காதலை.
7)
இது ஒரு அகங்காரம் என்றே
எனக்குத் தோன்றுகிறது.
மேடை கிடைத்தால்
அந்தச் சிறுமி
நன்றாக ஆடியிருப்பாள்
என்று என்ன நிச்சயம்?
ஒரு நல்ல நடனம்
நல்ல பாடல்
வேறு பல விஷயங்களினாலும் ஆனது.
ஒரு மோசமான பாடலில்
அன்றைக்கு வராமலோ
தாமதமாகவோ வந்துவிட்ட
ஒரு பார்வையாளரின் பங்கும்
இருக்கலாம்.
8)
இது ஒரு தப்பித்தல் வாதம்.
நமது காதல்
உலர்ந்து போவதற்கு
நீ
பொறுப்பேற்க மறுப்பது.
இவ்வுலகம்
பொறுப்பேற்க மறுப்பவர்களால்
நிரம்பியிருக்கிறது.
நீ
ஒரு ஆபீஸ் ஃபைலைப்போல்
என்னைத் தள்ளிவிட முடியாது.
காற்றே பார்வையாளராய் இருந்து
உன்னதப் பாடல்களை
இயற்றியவர்கள் பற்றிக் கேட்டிருக்கிறேன்.
9)
அவர்கள் காற்றில் தொலைந்துபோய்விட்டார்கள்.
10)
எனக்கு ஆபீஸுக்கு நேரமாகிவிட்டது.
உனக்கும்.
11)
இன்று
ஆபீஸில்
நான் அவமானப்படுத்தப்பட்டேன்.
வீட்டுக்கு வந்து
உன்னுடைய பழைய சாட்களை
எடுத்துப் படித்துக்கொண்டிருந்தேன்.
12)
இடாலோ கால்வினோ
சொன்னதுதான்.
இசையை உணர
இரைச்சலும் தேவை.
boganath@gmaill.com