புத்தாண்டு

 

ஒரு நொடியில் பிறந்துவிட்டது

புத்தாண்டு

அடுத்த புத்தாண்டு வருவதற்குள்

ஒரு யுகம் போலாகிவிடும்

 

சிரிக்கும் இரவு

 

புத்தாண்டு இரவில்

இடைவேளையின்றி கேட்கிறது

வெடியோசை

எங்கள் தலைகளை

எவ்வளவு மண்ணில் அழுத்தினீர்களோ

அவ்வளவுக்கும் சேர்த்து

இந்த இரவு வெடித்துக்கொண்டே இருப்போம்

எவ்வளவு அழவைத்தீர்களோ

அவ்வளவுக்கும் சேர்த்து

இந்த இரவு முழுக்க சிரிப்போம்

 

வாழுதலின் கோப்பையில்

 

இந்தப் புத்தாண்டில்

என் மதுக்கிண்ணங்கள் காலியாக இருக்கின்றன

உயிர் வாழுதலின் கோப்பையில்

கடவுள் என்னை நிரப்புகிறார்

உவர்த்த ஒயினாக

 

புத்தாண்டு முத்தங்கள்

 

இந்தப் புத்தாண்டு இரவில்

மனத்தடையின்றி முத்தமிடலாம்

அதற்கான தண்டனைகளை

நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம்

 

சாட்சியம்

 

புத்தாண்டு பிறந்ததற்கு

எனக்கு சாட்சியம் வேண்டும்

புதிதாய் பூத்த ஒரு மலரையேனும் காட்டுங்கள்

 

காலத்தின் நதியில்

 

புத்தாண்டு பிறந்துவிட்டதை

என் நாய்க்கு

எப்படித் தெரிவிப்பதென்று தெரியவில்லை

அது காலத்தின் நதியில்

இடையறாது நீந்திக்கொண்டிருக்கிறது

 

புத்தாண்டு ஆயத்தங்கள்

 

சென்ற ஆண்டின் காயங்கள் எதுவும்

இந்த ஆண்டில் கூடாதென்றுதான்

புத்தாண்டின் முதல் நாளில்

எவர் கண்ணிலும் பட்டுவிடாமல்

ஒரு பழைய மரப்பெட்டியில்

ஒளிந்துகொண்டிருந்தேன்

 

சென்ற ஆண்டின்

வாள் முனைகள் எதுவும்

இந்த ஆண்டில் கீறிவிடக்கூடாதென்றுதான்

புத்தாண்டு மழையில்

என்னையும் ஒரு மழைத்துளியாகக்கொண்டு

மறைந்து கொண்டிருந்தேன்

 

புத்தாண்டின் முதல் நாள் முடிய

இன்னும் கொஞ்ச நேரம்தானே இருக்கிறது என

கொஞ்சம் கவனக்குறைவாக இருந்துவிட்டேன்

என் அன்பின் இதயத்தை

கொஞ்சம் திறந்துகாட்டிவிட்டேன்

என் நியாயத்தின் குரலைக்

கொஞ்சம் உயர்த்திவிட்டேன்

மரக்கடையாக கிடந்தது அலுத்து

மரமாக கொஞ்சம் துளிர்த்துவிட்டேன்

 

என் விரல் நுனிகளில் பிசுபிசுக்கிறது

அதே குருதிப் பெருக்கு

என் நாக்கில் கரிக்கிறது

அதே கண்ணீரின் உப்பு

 

இதை ஒரு புது வருஷமென்று

அவசரப்பட்டு நம்பிவிட்டேன்

பழையதெல்லாம் கொஞ்சம்

புதிதாகி இருக்குமென

நானும் ஒரு புதுச்சட்டை அணிந்துகொண்டுவிட்டேன்

 

இந்த வாழ்க்கை அவ்வளவு கருணையுடையதாகுமெனில்

அதற்குப் பின்

அது இந்த வாழ்க்கையே அல்ல

 

 

 

 

 

 

 

 

 

 

அவர்கள் வருகிறார்கள்

 

அவர்கள் உன் வீடு நோக்கித்தான் வருகிறார்கள்

அவர்கள் என் வீடு நோக்கித்தான் வருகிறார்கள்

அவர்கள் நம் வீடு நோக்கித்தான்

வந்துகொண்டிருக்கிறார்கள்

 

ஒவ்வொருமுறையும்

அதுதான் அவர்கள் கடைசி இலக்கு

என்று நம்புகிறீர்கள்

இல்லை

அவர்கள் ஒவ்வொரு அரணாகத்

தகர்த்துக்கொண்டு வருகிறார்கள்

கைபர் கணவாயின் வழியாக

முதல் ஊருடுவல் நிகழ்ந்தது

பிறகு அவர்கள் ஒருபோதும்

வீடு திரும்பவே இல்லை

 

அவர்கள் முதலில்

தேசத்தின் எல்லைகளை ரத்த ஆறுகளால் வரையறுத்தார்கள்

பிறகு வழிபாட்டிடங்களை இடித்தார்கள்

பிறகு கர்ப்பத்திலிருக்கும் சிசுவை

வாளால் கீறி எடுத்தார்கள்

பிறகு ஓவியக்கூடங்களில் ஓவியங்களை எரித்து

ஓவியனை நாடு கடத்தினார்கள்

பிறகு கலவரத்தில் ‘மற்றவர்களின்’ கடைகளை உடைத்து

பொருள்களைத் திருடினார்கள்

பிறகு ‘மற்ற’ பெண்களின் ஆடைகளைப் பலவந்தமாகக் களைந்தார்கள்

பிறகு சிந்தனையாளர்களைத் துப்பாக்கியால்

தெருவில் வைத்து சுட்டார்கள்

பிறகு நீதிக்குப் போராடுகிறவர்களை

தேசவிரோதிகள் என சிறைக்கு அனுப்பினார்கள்

பிறகு மாட்டு மாமிசம் உண்பவர்களின்

மாமிசத்தை உண்டார்கள்

இப்போது கல்விக்கூடங்களில்

முகமூடியணிந்து ஆயுதங்களுடன் நுழைகிறார்கள்

 

ரத்தம் சிந்தும் புகைப்படங்கள்

பரவலாகக் காணக்கிடைக்கின்றன

நாசிகளின் புதிய குழந்தைகள்

கடைவாயில் கோரைப் பற்களுடன்

சிரிக்கும் புகைப்படங்களும் கிடைக்கின்றன

அவர்களுக்கான எதிர்ப்பின் காணொளிகளும்கூட

கிடைக்கின்றன

கோபத்தின் முகங்கள்

அனல் போல் தகிக்கின்றன

 

அவர்கள் இலக்கு கடைசியாக

உங்கள் வீடுகளுக்குள் நுழைவது

உங்கள் வீட்டை எடுத்துக்கொள்வது

உங்களை வரலாற்றின் விஷவாயுக்கூடங்களுக்கு

அனுப்புவது

உங்கள் குழந்தைகளை

உங்களிடமிருந்து பிரித்து அகதிகளாக்குவது

நீங்கள் என்றால் யார்?

அவர்களோடு இல்லாத எல்லோரும்தான்

அப்போது மதமோ இனமோ

ஒரு பொருட்டில்லை என்றாகிவிட்டிருக்கும்

நீதியின் பக்கம் நிற்கும்

எல்லோர் கரங்களையும்

பின்புறமாகப் பிணைத்து

தெருவில் நடத்திச் செல்வார்கள்

அல்லது நீங்கள் காணாமல் போனவர்களின்

புகைப்படங்களில் ஒரு படமாகிவிடுவீர்கள்

 

நம்புங்கள்

நான் உங்களை அச்சுறுத்தவில்லை

அஞ்சுவதால் எதுவும் மாறப்போவதில்லை

 

அவர்கள் எங்கெல்லாம் வர முடியாது என

நம்புகிறீர்களோ

அங்கெல்லாம் வருகிறார்கள்

எதெல்லாம் உங்கள் பாதுகாப்பென்று நினைக்கிறீர்களோ

அது எல்லாவற்றையும் உடைக்கிறார்கள்

முகமூடி அணிந்து தடியுடன் நிற்கும் ஒருவர்

ஆணா பெண்ணா என்று குழப்பமாக இருக்கிறது

தலை முடியும் உடலின் நளினமும்

அது பெண்ணாக இருக்கக்கூடும் என்ற

சாத்தியத்தை அளிக்கிறது

ஆனால் ஒரு பெண் அதைச் செய்யமாட்டாள் என

என் இந்திய மனம் நம்ப விரும்புகிறது

இந்த தேசம் குறித்த எல்லா நம்பிக்கைகளும்

இப்படித்தான் உடைகின்றன

அவர்கள் தெருமுனைக்கு வந்துவிட்டார்கள்

தெருவிளக்கின் வெளிச்சத்தில்

பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என

படித்துப்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்

 

கொரோனா ஏற்கனவே இந்தியாவிற்கு வந்துவிட்டது

 

கொரோனா வைரஸ் அபாயம்

வதந்திகளைப்போல

எளிதில் காற்றில் பரவக்கூடியது

 

கொரோனா தொற்றாமல் இருக்க

வன்முறையாளர்களைப்போல

நாம் முகங்களைத் திரையிட்டு

மூடிக்கொள்ள வேண்டும்

 

கொரோனாவிடமிருந்து தப்பிக்க

காஷ்மீரிகளைப்போல

வீட்டிற்குள்ளேயே இருங்கள்

ஊரடங்கு அமலில் இருக்கிறது

 

கொரோனா பாம்புகளிடமிருந்து

பரவுகிறது

நாம் அவற்றை வாக்களித்து

தேர்ந்தெடுக்கிறோம்

 

கொரோனா

ஏற்கனவே இந்தியாவிற்கு வந்துவிட்டது

அதற்கு தேசபக்தி என

இன்னொரு பெயர் உண்டு

 

இயல்புக்குத் திரும்புதல்

 

பரோல் விடுப்பில்

நீண்ட வருடங்களுக்குப்பின்

வீட்டிற்கு வந்த கைதி

சிறை திரும்பி

அம்மாவுக்குக் கடிதம் எழுதுகிறான்:

“அம்மா

இயல்பு வாழ்க்கைக்குத்

திரும்பிவிட்டேன்”

 

கண்ணீரின் உப்புக்கலந்த

பனிக்காலம்

அடர்ந்து நீண்டு செல்கிறது

 

 

 

 

 

 

 

 

 

 

காந்தியின் மரணமும் ஆன்மீகப் பணிகளும்

 

காந்தியைச் சுட்டவர்கள்தான்

23 பேரை உயிரோடு கொளுத்தினார்கள்

மாண்புமிகு நீதியரசர்கள்

அவர்களை அன்பின் சேவைக்கு

அனுப்பி வைக்கிறார்கள்

தண்டனை என்பது கருணையின் வடிவம் என்பதை

இப்போது நிரூபிக்காவிட்டால்

எப்போது நிரூபிக்க முடியும்?

அவர்களுக்கு அரசு பூங்காக்களில்

மலர்களை சுத்தப்படுத்தும் பணி தரப்படலாம்

ட்ராஃபிக்கில் ஆம்புலன்சிற்கு வழிவிடும்

வேலை தரப்படலாம்

 

காந்தியை சுட்டவர்கள்

அன்று ஒருவர் அல்லது சிலர்

இன்று அவர்கள் நூறு ஆயிரம் இலட்சமாய்

பெருகிவிட்டார்கள்

அவர்கள் பொறுப்பு மிக்க

பதவிகளில் இருக்கிறார்கள்

தொலைக்காட்சியில் உரத்துப்பேசுபவர்களாக

இருக்கிறார்கள்

நம் பாடத்திட்டங்களை எழுதுபவர்களாக இருக்கிறார்கள்

சட்டங்களை இயற்றுபவர்களாக இருக்கிறார்கள்

 

காந்தியைச் சுட்டவர்களுக்கு

நான் ஆன்மீகப் பணி ஒன்றைத் தரவேண்டும்

வரலாற்றின் சுவர்களுக்கு வெள்ளையடிக்கும் பணி

மாற்று நம்பிக்கைகொண்ட

அன்னியர்களை அடையாளம் காணும் பணி

அகற்றப்படவேண்டியவர்களைக்

கணக்கெடுக்கும் பணி

 

காந்தியின் ரத்தக் கறைகளைத்

துடைக்கும் பணிக்கு மட்டும்

இன்னும் யாருமே கிட்டவில்லை

அது ஒரு நதியாக

தேசமெங்கும் பெருகிக்கொண்டிருக்கிறது

பூட்ஸ் கால்கள் அந்தக் குருதிப்பெருக்கின்மேல்

வேகமாகச் செல்கின்றன