காமத்துப்பால் களவியல், கற்பியல் என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. களவியல் காதற் பருவத்தின் சுகானுபவங்களைப் பாடுவதாகவும், கற்பியல் மணம் புரிந்த பின்னர் நிகழும் பிரிவின் மாளாத் துயரத்தைப் பாடுவதாகவும் சொல்லலாம். ஒரு வாசகர் இந்தப் பகுப்புகளையெல்லாம் விட்டுவிட்டு இப்பாடல்களை எங்கும் எப்படியும் வைத்து வாசிக்கலாம். அது அவர் வாசிப்பு. அவர் வசதி .அவர் இன்பம். களவியலின் முதல் அதிகாரம் “தகை அணங்கு உறுத்தல்’’
தகை அணங்கு உறுத்தல்
(அணங்காகி வருத்துதல்)
முதற்சந்திப்பில் காதலியைக் காணும் காதலன் அவள் அழகில் தாக்குண்டு வருந்துதல்
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு – 1081
அணங்கோ ? மயிலோ ? அன்றி பெண்ணே தானோ ? அறியாது மயங்கி வருந்தும் என் நெஞ்சம்.
மயில் சரி.. அதென்ன ஆய்மயில் ? படைத்தோன் விசேடமாக ஆய்ந்து படைத்த மயில் என்கிறார் பரிமேலழகர். கனங்குழை மாதர் என்பதை நீண்ட காதணிகளை அணிந்த மாது என்று சொல்லலாம்.
இன்றுவரை பெரும்பாலான காதல்காவியங்களின் முதல் காட்சி இதுதானே ? இந்த “ஸ்தம்பித்தல்” தானே? “சத்தியமா இவள மாதிரி ஒரு பொண்ண இதுக்கு முன்னால பார்த்ததில்ல நண்பா’’ என்று தானே காதலன் தன் ஒவ்வொரு காதலின்போதும் அரற்றுகிறான்.
“கொல்’’ என்றால் கொல்லுதல் அல்ல. இங்கு இது ஒரு அசைச்சொல். அதாவது தனித்துப் பொருள் தராது. செய்யுள் இலக்கணத்தை நிரப்பும் பொருட்டு வருவது. இச்சொல்லைப் பழந்தமிழ் பாடல்களில் நிறையக் காணலாம். நாஞ்சில் நாடன் தன் கம்பனின் “அம்பறாத்தூணி” நூலில் இது குறித்து தெளிவாக எழுதியுள்ளார்.
மாலுதல் – மயங்குதல்
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து – 1082
நானவளை நோக்க, அவளென்னைத் திரும்ப நோக்கிய நோக்கோ அணங்கு படையோடு வந்து வருத்துவது போன்று உள்ளது.
அணங்கு தனியே வருத்துவதே தாளமுடியாத வேதனை. படையும் திரட்டி வந்தால்.. அணங்குப் படையின் பிரத்யேக ஆயுதம் என்ன ? கண் அன்றி வேறென்ன? அதைக் கண்டால் தானே குமரர் மாமலையை கடுகாக்கிச் சிதைப்பர்.
தானை – படை
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு – 1083
கூற்றென்று கூறப்படுவதை இதற்கு முன் அறிந்தவனில்லை. இதோ இப்போது காண்கிறேன் அவளது சொக்கும் விழியழகில்.
அழிவின் இன்பத்தை நல்கும் கூற்று இது. இங்கு எருமைக்கும், தாம்புக்கும் பயந்து ஓடியொளிவதில்லை நாம். மாறாக, இருகரம் விரித்து ஏங்கி நிற்கிறோம்.
இளம் வாசகர் ஒருவர் இந்தப் பாடலில் கண் என்கிற சொல் எங்குள்ளது என்று தேடிச் சலிக்கக் கூடாது. அந்தச் சொல் முந்தைய பாடலில் உள்ளது. இப்படியாக ஒரு அதிகாரத்திற்குள் சொற்கள் பரிமாறிக்கொள்ளப்படுவது இயல்பு.
கூற்று எமன்- பண்டு முன்பு – அமர் போர்
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக் கமர்த்தன கண் – 1084
அவளோ ஒரு பேதையைப் போல் தெரிகிறாள். ஆனால் அவள் கண்ணோ கண்டாரின் உயிரையெல்லாம் உண்டு செரித்து விடுகிறது.
தன்னைக் காணும் எவருடைய உயிரையும் உண்டு விடும் கொடியவையாய் இருப்பதால் இந்தப் பேதைப் பெண்ணிற்கு இவளது கண்கள் பொருத்தமுடையவையாய் இல்லை.
“உண்கண்’’ என்கிற சொற்சேர்க்கையை சங்கப் பாடல்களில் அதிகம் காணமுடிகிறது. அதன் பொருள் “மை உண்ட கண்’’ என்பது. அய்யன் “உண்கண் ” என்பதை உயிருண்ணும் கண் என்றெழுதி உயரப் பறக்க விட்டு விடுகிறார்.
அமர்த்தல் – மாறுபடுதல்
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து – 1085
கூற்றமோ? பிணையோ? அன்றி கண்ணேதானோ? அவள் நோக்கத்தில் இம்மூன்றும் உள்ளது.
எமனைப் போல் கொடியதாகவும் உள்ளது. மருளும் பெண்மானின் கண்களில் உதிக்கும் அழகாகவும் உள்ளது அவள் பார்வை. எது அமுதோ அது நஞ்சாகவும் இருக்கிறது
பிணை பெண்மான் – மடவரல் இளம்பெண்
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுக்கஞர்
செய்யல மன்இவள் கண் – 1086
இந்தப் புருவங்கள் வளைந்து அவள் கண்களை மறைத்து விட்டால் போதும் எனக்கு நடுக்கமோ, துன்பமோ நேராது.
கொடிய புருவங்கள் மேலும் வளைந்து அடர்ந்து அவளது கண்களை மறைத்துவிடுமாயின் மிக்க நல்லது. பிறகு அந்தக் கண்களால் என்னைத் துன்புறுத்த இயலாதல்லவா ?
அவ்வளவு உறுதியாக முகத்தை திருப்பிக் கொள்வது அந்தக் கண்களைக் காணவே கூடாது என்றுதான். எல்லாம் இரண்டு நிமிடத்துக்குத்தான்….அதற்குள் காதலின் நூறு கைகள் ஒன்று கூடி அவன் தலையை அவள் திசைக்குத் திருப்பிவிடும்.
கோடுதல் வளைதல் – அஞர் துன்பம்,
கடாஅக் களிற்றின் மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில் – 1087
இவளின் மதர்த்த முலைமேல் அணியப் பெற்ற துகிலானது மதக்களிற்றின் மத்தகத்தில் விளங்கும் முகப்படாம் போன்றது
முலை இங்கு மதங்கொண்ட யானையின் மத்தகத்திற்கு உவமையாகி தலைவனின் நெஞ்சை முட்டிச் சிதைக்கிறது. அவன் அய்யோ அய்யோ என்று இன்பத்தில் அலறுகிறான்.
காமத்துப்பாலில் இந்த ஒரு பாடலில் மட்டும்தான் “முலை’’ என்கிற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. “அல்குல்’’ இல்லவே இல்லை. சங்கப் பாடல்களிலிருந்து விலகி நிற்கும் தன்மையாக இதைப் பார்க்க முடியும்.
கடாஅக் களிறு மதம் கொண்ட யானை – படாஅ பெரிய
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும்என் பீடு – 1088
எனக்கெதிரே போர்க்களம் புக அஞ்சி ஒடுங்கி ஒளிவர் எம் பகைவர். அப்படியான என் அத்தனை பலமும் இவளின் நெற்றி ஒளிக்கே உடைந்து நொறுங்கி விட்டது.
இப்படி நொறுங்கிய பீடுகளைச் சேர்த்துக் குழைத்தால் உறுதியாக இன்னொரு 14 லோகங்களைச் சமைத்து விடலாம்.
நண்ணாரும் என்பதற்கு போர்க்களம் வராமலே செவி வழிச்செய்திகளுக்கே அஞ்சி நடுங்குவர் என்று கொள்ளலாம். “ஓ” என்கிற வியப்பு இவன் வலிமைகளின் பெருமையும், அவள் நுதலின் சிறுமையையும் தோன்ற நிற்கிறது என்கிறார் அழகர்.
ஞாட்பு போர்க்களம் – உட்கும் அஞ்சும்
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து – 1089
பிணையின் மருளழகும், பளிரீடும் நாணமும் ஏற்கனவே அவளிடத்து ஆபரணங்களாக ஜொலித்துக்கொண்டிருக்கையில் எவன் அவன் மேலும் புனைந்து விட்டது ?
அவளுக்கு ஆபரணங்கள் ஏதும் வேண்டியதில்லை. அவள் தானே மின்னுபவள் என்றது.
“ஏதில தந்து’’ என்பதை பொருந்தாத அணிகள் என்றும் கொள்ளலாம்.
ஏதிலர் பகைவர் – பொருந்தாதவர்
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம் போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று – 1090
உண்டால் அல்லது களிப்பூட்ட மாட்டாது மது. கண்டாலே களிப்பூட்டவல்லது காமம்.
ஆம் அய்யனே… ஆண்ட்ராய்டுகளின் வழியே வேறென்ன நாங்கள் புத்துலகா சமைத்துக் கொண்டிருக்கிறோம் ?
அடுதல் என்றால் சுடுதல். சாலமன் பாப்பையா தன் உரையில் “ அடுநறா” என்பதை “காய்ச்சப்பட்ட கள்” என்கிறார். ஆனால் கள்ளை நாங்கள் காய்ச்சுவதில்லை என்கிறார் ஒரு விவசாயி. எனில் காய்ச்சப்படும் மதுவகை ஏதும் வள்ளுவர் காலத்தில் இருந்ததா? இந்தச் சந்தேகத்தை வரலாற்று ஆசிரியர்களிடம் ஒப்படைத்து விட்டு நாம் அடுத்த அதிகாரத்திற்குச் செல்லலாம்.