புணர்ச்சி மகிழ்தல்
புணர்ச்சியை எண்ணி மகிழ்தலும் அதன் பெருமை பேசுதலுமான அதிகாரம் இது.
கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள. (1101)
கண்ணால் கண்டும், செவியால் கேட்டும், நாவால் உண்டும், மூக்கால் முகர்ந்தும், மெய் கொண்டு தழுவுவதுமாக ஐம்புலன்களையும் இன்பத்துள் ஆழ்த்தும் வல்லமை அவளிடத்து உண்டு.
கண்டாலே காமம் இனிக்கும் என்று முன்பே சொல்லிவிட்டவர் இங்கு செவி, வாய், மூக்கு, மெய் என மொத்த உடலையும் இனிக்கச் செய்வது காமம் என்கிறார்.
கூந்தலேறிய பின்புதான் மல்லிகை மணக்கவே துவங்குகிறதென்பது நக்கீரச்சிறுவன் அறியாதது.
ஒண்தொடி கண்ணே உள- அழகிய வளையல்கள் அணிந்தவளிடம் உள்ளது
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து. (1102)
பிற நோய்களுக்கெல்லாம் மருந்துகள் என்பவை அதற்கு எதிரானவையே. அவள் அளித்த நோயிற்கோ அவளே மருந்து.
“பிணிக்கு மருந்து பிற” என்பதில் சிக்கலில்லை. “மன்” எனும் ஒட்டு கொஞ்சம் குழப்புகிறதா? அது செய்யுளில் ஓசையை நிரப்பும் பொருட்டு வருவது. தனித்துப் பொருள் தராது. தனித்துப் பொருள் தராது என்று சொல்லும் போதிலும் சில பொருள்களைக் குறிப்பால் உணர்த்தவே செய்கிறது. இங்கு “மன் “என்பது “பிற” என்பதைக் கொஞ்சம் அழுத்துகிறது. அப்படி அழுத்துவதன் மூலம் அதை இழித்துரைக்கிறது என்று கொள்ளலாம். அதாவது பிறவற்றால் காதல் நோய்க்குத் தீர்வில்லை அல்லவா?
அணியிழை – அழகிய ஆபரணங்களை அணிந்தவள், இழை – ஆபரணம்
அதிகாரத்தைப் பொறுத்தே 1091-ம் குறளிலிருந்து இப்பாடல் வேறுபட்டு நிற்கிறது. அதில் தலைவன் மருந்தை வேண்டி நிற்பவன். இவன் உண்டு மகிழ்ந்தவன் அவ்வளவே.
ஒரே கவிதையை இரண்டு முறை எழுதி வைக்கும் இயல்பு வள்ளுவரிடமும் தென்படவே செய்கிறது. சமயங்களில் ஒரு பிரமாதமான கவிதைக்குப் பிறகு அதைப் போன்றே ஒரு சுமாரான கவிதையை செய்து வைத்திருக்கிறார். உதாரணத்திற்கு “நிறைஅழிதல்” அதிகாரத்தில் வரும் 5 வது மற்றும் 6 வது பாடல்களைச் சொல்லலாம். அதிகாரத்திற்குப் பத்துப் பாடல்கள் எழுதியாக வேண்டுமல்லவா?அந்தக் கட்டாயத்தால் கூட இது நேர்ந்திருக்கலாம்.
இப்படிச் சொல்வது வள்ளுவரை இகழ்வதாகாது. இத்தனை பாடல்களைப் புதிதுபுதிதாக எழுதியவருக்கு இன்னொரு புதுப்பாடல் எழுதத் தெரியாதா மடையா என்று நீங்கள் என்னை ஏசலாம். ஆனால் படைப்பு மனம் எப்போதும் ஒரே கொதிநிலையில் இருப்பதில்லை என்பதையே இங்கு சொல்ல விரும்புகிறேன். திருக்குறள் ஒரு விதத்தில் திட்டமிடப்பட்ட படைப்பு. அதுவும் நீண்ட காலத்திட்டம். திட்டமிட்ட படைப்புச் செயல்பாட்டில் தொடர்ச்சியாக இயங்க நேரும் படைப்பு மனத்தால் சதா காலமும் ஒன்று போலவே பீறிட்டுப் பெருக முடிவதில்லை என்று சொல்லலாமா? ஆனால் அய்யன் மகாகவிதான், அதிலொன்றும் சந்தேகமில்லை.
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு. (1103)
தான் விரும்பும் காதலியின் மென்தோளில் சாய்ந்துறங்கும் உறக்கத்தைக் காட்டிலும் இன்பமுடையதா என்ன அந்தத் திருமாலின் உலகு?
அவள் தோளிலேயே சொர்க்கம் கிட்டுகையில் அவன் ஐம்புலன் அடக்கித் தவம் இயற்ற வேண்டுமா என்ன?
தாமரைக்கண்ணான் உலகு என்பதை ‘செங்கண்மால்உலகு’ என்றுதான் அழகர் சொல்கிறார். ஆனால் வள்ளுவர் குறிப்பிட்ட மதம் சார்ந்த கடவுள்களை முன்னிறுத்திப் பேசுவதில்லை என்பதால் ‘தாமரைக்கண்ணான்’ என்பதை ‘தாமரைக்கு அண்ணான்’ என்று பிரித்து அது நிலவுலகைக் குறிப்பதே என்று சொல்லும் ஓர் ஆய்வுக்கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. எழுதியவர் பொன். சரவணன். அண்ணார் எனில் பகைவர். நிலவு தோன்றும் மாலை வேளையில் தாமரை வாடிவிடும் அல்லவா? எனவே தாமரைக்கு நிலவு பகை. கதிரவன் தோழன்.
வீழ்வார் ‘வீழ்தல்’ என்பதற்கு விரும்புதல் என்றும் விழுதல் என்றும் பொருள் சொல்கின்றன அகராதிகள். இரண்டும் ஒன்றுதானே என்று சொல்லிச் சிரிக்கிறது காதல்.
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள். (1104)
விலகிப்போனால் சுடுகிற, நெருங்கிச் சென்றால் குளிர்கிற அதிசயத் தீ அவள்.
தீ யாண்டு பெற்றாள் இவள் – இப்படியான தீயை எங்கிருந்து பெற்றாள் இவள்.
குளிர்ச்சிதான் என்றாலும் ஐஸ்கட்டியின் குளிர்ச்சியல்ல. அதனுள்ளே மின்சக்தியொன்று ஓயாமல் ஓடுகிறது. காமத்தின் குளிர்ச்சி என்பது தீக்குள் இருக்கும் குளிர்.
பற்றியெரிகிற குளிர் அவள்.
தெறுதல் – சுடுதல்
வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள். (1105)
விரும்பும் பொழுது விரும்பிய பொருட்கள் அளிக்கும் சகல இன்பங்களையும் தானே அளிக்கவல்லது அவள் தோள்.
நீர் வேட்கையில் அவள் நீர். ஊண் வேட்கையில் அவள் ஊண். நிழல் வேட்கையில் அவள் நிழல். நித்திரை வேண்டினால் அதையும் அருள்வாள். இப்படியாக எல்லா இன்பங்களும் மொய்த்துக் கிடக்கின்றன அவள் தோளில்.
தோட்டார் கதுப்பினாள் தோள் – மலரணிந்த கூந்தலையுடையவளின் தோள்
வேட்டம்- விருப்பம், தோடு – பூவிதழ்
உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்
கமிழ்தின் இயன்றன தோள். (1106)
எளிது : உறுதோறும் உயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.
கூடற்பொழுதில் அவள் என்னைத் தீண்டும் போதெல்லாம் வாடிக்கிடக்கும் என் உயிர் தளிர்த்துச் செழித்துவிடுகிறது. எனில், அமிழ்தால் ஆனதோ அவள் தோள்!
இந்த அமுதைப் பெற மலையை மத்தாக்கி, பாம்பைக் கயிறாக்கி பாற்கடலைக் கடைய வேண்டியதில்லை. தலைவனுக்கு தலைவியே அமுது. இதழமுதம் போல இது தோளமுதம்! தழுவும்போது அமுதாகி இனிக்கும் அதுவேதான் பிரிவுக் காலத்தில் நஞ்சாகிக் கொல்கிறது.
உறுதல் – சேர்தல்
தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு. (1107)
தம் இல்லத்தில் மகிழ்ந்திருந்து தனது உரிமைப் பொருளைப் பிறர்க்கும் அளித்து தானும் உண்டு மகிழும் இன்பத்திற்கு இணையானது அவளைத் தழுவிப் பெறும் அந்த இன்பம்.
மேற்சொன்ன உரைதான் பெரும்பாலும் சொல்லப்பட்டிருக்கிறது. “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்” என்பதுதான் வள்ளுவ நெறி. ஆனால் சில உரைவேறுபாடுகளும் உண்டு.
‘தனது முயற்சியின் பலனாய்ப் பெற்ற, தனக்குச் சொந்தமான பொருளைத் தம் இல்லத்தில் இனிதிருந்து நிம்மதியாய் அனுபவிக்கும் இன்பத்திற்கு நிகரானது அவளைத் தழுவி அடையும் இன்பம்’ என்கிற அர்த்தத்தில் பேசுகிறது ஒரு உரை. அதாவது “பகுத்துண்டலை” விட்டுவிடுகிறது.
“தம் இல்லில் இருந்து தமதை உண்பதை” ஒரு முக்கியமான இன்பமாகவே தமிழ்மரபு முன் வைக்கிறது. “தம் இல் தமது உண்டன்ன சினைதொறும் தீம் பழம் தூங்கும் பலவின்” என்கிறது ஒரு குறுந்தொகைப் பாடல்.
ஒரு திரைப்படத்தில் திருடித்திரியும் நாயகனை நல்வழிப்படுத்த நாயகி சொல்லும் அறிவுரை…
“உழச்சு சம்பாதிரிக்கற அந்த ஒத்த ரூபாய்ல அப்படி என்னதான் சொகம் இருக்குன்னு பாத்துருவோம்யா.”
நாமக்கல் கவிஞர் வேறொரு உரை சொல்கிறார். ‘மிரட்சியூட்டும்’ உரை அது.
அம்மா – அம் எனில் அழகு. அழகிய மாமை நிறத்தை உடையவள் என்று பொருள். மேலும் இது புணர்ச்சி இன்பத்தை வியக்கும் ஒரு வியப்புச் சொல்லாகவும் கொள்ளப்படுகிறது.
வீழும் இருவர் கினிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு. (1108)
காற்று கூட இடையில் நுழைய முடியா வண்ணம் இறுக அணைத்துக் கிடப்பதுவே காதலர் இருவர்க்கும் இனிது.
“காற்றால் இடையறுக்கப்படாத முயக்கம்” என்கிறார் அழகர்.
ஆசையே இன்பத்துக்காரணம்; அதுவே துன்பத்துக்காரணமும்.
வீழ்தல் – விரும்புதல், வளி – காற்று, முயங்குதல்- தழுவுதல்
ஊடல், உணர்தல், புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன். (1109)
ஊடுதலும், ஊடலின் அளவறிந்து அதை நீங்குதலும், பிறகு புணர்தலும் இவை காமத்தின் பயன்கள்.
புணர்ச்சியை அல்ல ஊடலையே முதலில் முன்வைக்கிறார். ஊடல் ஓர் இன்பம். அதைக் காதலர் அறிவர். உணர்தலும் முக்கியம். ஊடலை, அதன் இன்பத்தை எந்தத் தருணத்தில் முடித்துக் கொள்ள வேண்டும் என்கிற உணர்வும் காதல் வாழ்வில் மிக முக்கியம். அளவுக்கு மிஞ்சினால் ஊடலும் நஞ்சு. வழக்கமான புணர்ச்சியைக் காட்டிலும் ஊடலுக்குப் பின்னான புணர்ச்சியில் களியாட்டம் மிகுதியென்று களித்தோர் கூறக் கேட்டிருக்கிறேன். அப்போது நிஜமாலுமே இருவருக்குமிடையே காற்று கூட நுழைய இயலாது முந்தைய பாடலில் சொல்லியபடி.
அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு. (1110)
கற்குந்தோறும் கற்பவனின் அறியாமை வெளிப்படுவது போன்று அவளைச் சேரும்தோறும் சேரவே முடியாத ஏதோ ஒன்று அவளிடம் எஞ்சி விடுகிறது.
“கல்லாதது உலகளவு” என்பது போல அவளிடம் அறியா முடியா இன்பங்கள் ஏராளம் கொட்டிக் கிடக்கின்றன. அதாவது காணக்காணத் தீராதவள். எப்போதும் புதியவள்.
சேயிழை – சிவந்த அணிகலன்களை அணிந்தவள், செறிதல்- சேருதல், புணர்தல்.
எல்லா உரைகளிலும் ஒருவிதப் போதாமை உண்டு. அந்தப் போதாமையிலிருந்துதான் அய்யன் எழுந்து விரிந்து நிற்கிறார். மற்ற உரைகளைக் காட்டிலும் என்னால் சுவையாக உரை செய்து விட முடியும் என்கிற ஆசையிலும், நம்பிக்கையிலும்தான் நான் உட்பட எல்லா உரையாசிரியர்களும் கிளம்பி வருகிறோம். ஆனால் கவிதையின் ஆன்மாவை அதே லயத்தோடு சென்று தொடுவது அவ்வளவு எளிதானதல்ல. மொழிபெயர்ப்பின் எல்லாச் சிக்கல்களையும் கொண்டது உரையாக்கம்.
எல்லா உரைகளுக்கும் பொதுவான இந்தப் போதாமையைத் தவிர கலைஞர் உரையில் தனித்துக் குறை சொல்ல அதிகமில்லை. காலத்தையும் கருத்தில் கொண்டு சில இடங்களைத் துல்லியமாகவே எழுதிக் காட்டியிருக்கிறார். ஆனால் இந்தக் குறளின் உரையில், பாடலில் இல்லாத “மாம்பழ மேனி” எதையோ நினைத்து ஏங்குகிறார்.