நாணுத்துறவுரைத்தல்
பிரிவுக்காலத்தில் காதல் படுத்தும்பாட்டை காதலர் வெட்கத்தைத் துறந்து விரித்து அரற்றும் அதிகாரமிது.
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி (1131)
தலைவியின் காமம் பெறாமல் துயரம் மிக்க தலைவனுக்கு மடலேறுதலைத் தவிர வேறொரு துணையில்லை.
தலைவன் பனங்கருக்குக் குதிரையேறி, தலையில் எருக்கம்பூ சூடி, மார்பில் எலும்பு மாலையணிந்து தலைவியின் வீதி வழியே வருதலை “மடலேறுதல்’ என்பர்.
மாவென மடலும் ஊர்ப: பூவெனக்
குவிமுகிழ் எருக்கம் கண்ணியும் சூடுப;
மறுகின் ஆர்க்கவும் படுப;
ரிதும் ஆகுப காமங்காழ்க் கொளினே
என்கிறது குறுந்தொகை.
தலைவனுக்கு காதல் முற்றிவிட்டது. அதனால் ‘ரிதும் ஆகுப’ அதாவது எதுவும் செய்வான்.
மடலேறுதல், விரும்பாத தலைவியை வற்புறுத்தும் வழியல்ல. அவள் ஏற்கனவே காதலில்தான் இருக்கிறாள். பனங்கருக்கின் கூர்நுனி குத்திக்கிழித்ததில் பெருக்கெடுத்து வரும் குருதியின் மூலம் தன் காதலின் திடம் காட்டி அவளது பெற்றோரைத் திருமணத்திற்குச் சம்மதிக்க வைக்கும் முயற்சி என்று சொல்லலாம். தயவுசெய்து நீங்கள் நம்ப வேண்டும் இன்றும் ரத்தத்தில் எழுதப்படும் கடிதங்கள் புழக்கத்தில் உள்ளன. அவை மடலேறுதலின் தொல்நினைவுகளா என்ன?
மடலேறுதல் பெருந்திணையின்கீழ் வருகிறது. அதாவது பொருந்தாக் காமம். இது பொருந்தாக் காமம் ஆவது அதனுடைய மிதமிஞ்சிய தன்மையால்தான். அதாவது நடுத்தெருவில் நடப்பதால்தான். காதலின் அந்தரங்கத்து அழகைக் குலைத்து விடுவதால்தான். மற்றபடி மடலேறுதல் பழிக்கத்தக்கதல்ல என்பது மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களின் ஆய்வு முடிவு. காதல் காதில் கிசுகிசுக்கப்படும் கிளுகிளுப்பு மாறாக அடித்தொண்டையில் உரக்கக் கத்தும் நாராசமல்ல என்பது நம் முன்னோர் துணிபு.
‘உழந்து’ என்றாலும் வருத்தமே. இங்கு அது அதீத வருத்தத்தைக் குறித்து நிற்கிறது.
ஏமம் – காவல் , வலி – வலிமையான துணை
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து. (1132)
பிரிவின் வெம்மை தாளாமல் நாணத்தை நீக்கி விட்டு நான் மடலேறத் துணிந்தேன்.
தலைவனுக்கு காமம் முற்றி விட்டது. இனியும் தலைவியைப் பெறவில்லையெனில் அவன் உயிர் உடலில் தங்காது. எனவே ‘உடலும் உயிரும்’ என்று அய்யன் எழுதுவதாகச் சொல்கிறார் அழகர்.
‘நாணினை நீக்கி நிறுத்து’ என்கிற சொற்றொடர் நாணத்தை விலக்கி வைப்பதல்ல. மாறாக அதைத் தூரஓட்டுவதின் பொருளில் தொனிக்கக் காண்கிறோம்.
நோனா – தாங்க இயலாத
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல். (1133)
நாணமும் ஆண்மையும் கொண்டவனாகவே இருந்தேன் முன்பு. இன்றோ மடல்குதிரையைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்னிடம்.
இன்றைய அரசியல் வாசிப்புகளால் ‘ஆண்மை’ என்கிற சொல்லில் கொஞ்சம் அழுக்கேறி விட்டது. ஆனால் இக்குறளில் ஆண்மை என்கிற சொல்லிற்கு அழகர் சொல்லும் பொருள் குறிப்பிடத்தகுந்தது. அதை ஆண் இனத்தின் பெருமையைப் பீற்றும் சொல்லாகச் சுருக்காமல் மொத்த மனித இனத்திற்குமான சொல்லாக மாற்றி விடுகிறார். அழகர் சொல்கிறார்… ஆண்மை என்பது ‘ஒன்றற்கும் தளராது நிற்றல்’.
பண்டு – முன்பு
காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புனை (1134)
என் துயரத்தைக் கடக்க என்னிடம் ஒரு தெப்பம் இருந்தது. அது நாணத்தாலும், ஆண்மையாலும் ஆனது. ஆனால் என்ன பயன், அதைக் காமப் பெருவெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டதே?
புனலில் எதிர்நிற்பதே சிரமம். கடும்புனலில் என் செய்வான் தலைவன்?
சிற்றோடைக்கே சிதைந்து விடும் நெஞ்சம் சில தலைவர்க்கு. ‘ஹார்மோன் பெருக்கம்’ என்று ஆறுதல் சொல்கிறது அறிவியல்.
புனல் – வெள்ளம், புனை- தெப்பம்
உய்க்கும் – கொண்டு சேர்க்கும். இங்கு அடித்துப் போகும்
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர். (1135)
மாலையில் மிகுந்தெழும் துயரத்தையும் அதனிமித்தம் மடலேறுதலையும் அவளே எனக்குத் தந்தாள்.
தொடலைக் குறுந்தொடி – மாலை போல் தோன்றும் சின்னச் சின்ன வளையல்களை அணிந்தவள்.
காதலின் துயரம் நாள் முழுக்கவே உண்டு. எனினும் மாலையில் அது மிகுந்தெழும் என்று சொல்லப்படுவதுண்டு. காமத்தை ‘மாலை மலரும் நோய்’ என்று பாடுகிறார் அய்யன். மாலை மங்க மங்க காமம் கூடி விடுகிறது. மாலையை நொந்து பாடும் சங்கப்பாடல்கள் பல உள்ளன. ‘நார் இல் மாலை’ என்கிறாள் ஒரு குறுந்தொகைத் தலைவி. அதாவது “அன்பில்லாத மாலையாம்”. அன்பில்லாத மாலை என்பது பிரிவுப் பொழுதில் மட்டும்தான். கூடல் பொழுதிலோ விடியவே கூடாது என்று விரும்புகிறாள் தலைவி. விடியச் செய்யும் கோழியைப் பிடித்து பூனைக்குத் தந்துவிடுவேன் என்று மிரட்டுகிறாள். ‘அம்மை! பொழுது புலர்கையில் நாங்கள் கூவுகிறோமேயொழிய, நாங்கள் கூவிப் பொழுது புலர்வதில்லை’ என்று தலைவியிடம் மண்டியிட்டு மன்றாடுகிறது கோழி இனம்.
உழத்தல் – வருந்துதல்
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண் (1136)
பேதைத்தலைவியின் பிரிவுத்துயரில் துயில மாட்டாது விழித்துக் கிடப்பேன். எனவே இரவு முழுக்க மடலூர்தலையே எண்ணிக் கொண்டிருப்பேன்.
மடலூர்தலிலிருந்து பின்வாங்கும் பேச்சிற்கே இடமில்லை என்று தலைவன் உறுதிபடச் சொன்னது இது.
கண் படல் ஒல்லா – கண் தூக்கத்தில் படாமல்
உள்ளுதல் – நினைத்தல்
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில் (1137)
கடல் போன்ற காமத்தில் வருந்தித் தவித்தும் மடலேற நினையாத பெண்ணின் அடக்கத்திற்கு எதுவுமே இணையில்லை.
ஆணிற்கு மடலேறி வர ஒரு வீதியிருக்கிறது. பெண்ணினம் சகலத்தையும் நெஞ்சிற்குள்ளேயே நிகழ்த்த வேண்டியுள்ளது. அது ஆழங்காண முடியாத இருட்குகை. அபயாகரமானதும் கூட. அதனால்தான் பெண்கள் பேசத் துவங்கும்போது நம் கலாச்சாரம் அவசரமாக சிறுநீர் முட்டுவதாகச் சொல்லிவிட்டு கழிப்பறைக்கு ஓடி விடுகிறது. ஆற்றாமையை குமட்டியெடுக்க ஆணிற்கு டாஸ்மாக் இருக்கிறது. பெண் என்னென்ன செய்து ஆற்றிக்கொள்கிறாள் என்பது அவள் மட்டுமே அறிந்தது.
உழந்து – வருந்தி
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும். (1138)
சென்ற பாடல் வரையும் தலைவன் கூற்று. இனி தலைவி தன் வருத்தம் சொல்கிறாள்…
காமத்திற்கு என் மனவுறுதியைக் கண்டு அச்சமுமில்லை, பாவம் என்று இரக்கமுமில்லை. மறைவில் ஒளிந்திருக்கும் அது இப்போதெல்லாம் பொதுவில் வெளிப்படத் துவங்கி விட்டது.
‘நிறையரியர்’ என்பதற்குப் பல உரைகளும் ‘நிறை இல்லாதவர்’ என்றே பொருள் சொல்கின்றன. அழகர் ‘நிறை நிரம்பியவர்’ என்கிறார். எனக்கு அழகர் உரையே பிடித்திருக்கிறது. காமத்தின் முன் ஒரு உயிர் பலவிதமாகப் போராடும் காட்சி இதில்தான் விரிகிறது. இக்கவிதை முதலில் மிரட்டிப் பார்க்கிறது. பிறகு தேம்பி அழுகிறது. அச்சுறுத்தலும், அடிபணிதலும் அடுத்தடுத்து அமைந்து இக்கவிதையை பொலியச் செய்து விடுகின்றன.
நிறை – மனவுறுதி, பலம், கற்பு
அளித்தல் – அருள்செய்தல், காத்தல்
மன்று – மன்றம், பொதுவெளி
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு (1139)
இதுவரையும் ஒளிந்திருந்ததால் என் காமத்தை யாரும் அறிந்திருக்கவில்லை. இப்போதோ அது வீதிகளில் வெளிப்பட்டுத் திரிகிறது.
‘மருண்டு மறுகும்’ என்பதற்கு ‘மயங்கித் திரியும்’ என்பதாகச் சொல்கின்றன பல உரைகள். என்ன மயக்கம் என்று யாரும் பொருள் விரிக்கவில்லை. முதன் முதலில் வெளிப்படும் தயக்கமும் நாணமுமாக இருக்கக் கூடும்.
‘மருண்டு மறுகும்’ என்பதற்கு ‘அம்பலும் அலருமாயிற்று’ என்று உரை சொல்கிறார் அழகர். ‘அலர்’ நாம் அறிந்ததுதான். ‘அம்பல்’ என்பதை அலரின் குழந்தைப் பருவம் என்று சொல்லலாம். அம்பல் என்பது ஒரு சிறு கூட்டம் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொள்வது. பிறகு அது ஊர் முழுக்கப் பரவி அலராகி விடுகிறது.
மறுகு- வீதி, மருகுதல் – மயங்குதல்
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு. (1140)
என் கண் முன்பாகவே கேலிச்சிரிப்பு சிரிப்பர் சில அறிவிலிகள். அவர்களோ நான் பட்ட துயரத்தை ஒருநாளும் பட்டதில்லை.
‘பட்டாத்தான்’ தெரியும் என்பது நமது பேச்சு வழக்கு. ‘காமம் தாங்குமதி என்போர் தாம் அஃது அறியலர்’ என்கிறது குறுந்தொகை. அதாவது காமம் என்றால் என்னவென்று அறியாதவர்கள்தான் அதைத் தாங்கிக் கொள்ள முடியாதா என்ன? என்று முட்டாள்தனமாகக் கேட்பர் என்கிறது.
பட்டால் உணர்ந்து கொள்ள முடியும் என்கிறார் அய்யன். மேலும் உச்சத்தில் எழுந்து ‘ரிதின் நோயைத் தன் நோய் போல் போற்ற வேண்டும்’ என்கிறார். அய்யனே! மனுஷப் பொறப்புக்கு அவ்வளவு மேன்மை கூடுவதில்லை. இவர்கள் ‘ரிதின் நோயை’ நோண்டாமல் இருந்தாலே போதும்.