அலரறிவுறுத்தல்

காதலரிடையேயான நெருக்கத்தை ஊரார் பழித்துப் பேசுதல் ‘அலர் தூற்றுதல்’ எனப்படும். ‘அம்பல்’, ‘அலர்’, ‘கௌவை’ ஆகியவை இதைக் குறிக்கும் சொற்கள். அம்பல் என்பது மெதுவாக வாயிற்குள் முணுமுணுப்பதென்றும், அலர் என்பது வெளிப்படையாகத் தூற்றுதல் என்றும் சொல்லப்படுவதுண்டு. ஊர்க்கதை பேசும் இன்பம் பொதுவான மனிதப்பண்புதான் என்றாலும் அகத்திணை இலக்கியங்களில் அது பெண்களுக்கானதாகவே சுட்டப்பட்டிருக்கிறது. ‘அலர்வாய்ப் பெண்டிர்’, ‘தீவாய்ப் பெண்டிர்’, ‘நிறையப் பெண்டிர்’ என்பதாகக் குறிப்பிடப்படுகிறார்கள் அவர்கள். அலர் தூற்றும் பெண்களின் அபிநயத்தை வரைந்து காட்டுகிறார் உலோச்சனார் எனும் புலவர்.

“சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி

மூக்கின் உச்சி சுட்டுவிரல் சேர்த்தி

மறுகிற் பெண்டிர் அம்பல் தூற்ற…” என்கிறது பாடல்.

தன்கதை அவலமானது. மறக்க விரும்புவது. நினைக்கக் கசப்பது. ஊர்க்கதையோ எவ்வளவு அவலமென்றாலும் சுவாரஸ்யமானது. தொட்டு நக்கச் சுவையானது.

ஊரார் அலர் தூற்றலும், காதலர் அதை எதிர்கொள்ளும் விதமும் சொல்லும் அதிகாரம் இது. முதல் ஐந்து பாடல்கள் தலைவன் கூற்று. மற்ற ஐந்து தலைவி கூற்று.

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்

                பலரறியார் பாக்கியத் தால். (1141)

எம்மை வருத்த வேண்டி ஊரார் அலர் தூற்றுகிறார்கள். எம் உயிரோ அவ்வலரையே பற்றிக்கொண்டு வாழ்ந்து வருகிறது. இந்த வினோதத்தை நல்லவேளையாக இவ்வூர் அறிந்திருக்கவில்லை.

‘அலரெழ ஆருயிர் போகும்’ என்பது ஊரார் கணக்கு. அதையே பற்றிக் கொண்டு உயிர்தரித்திருப்பது காதலின் சிறப்பு. அலருள் உள்ளதென்ன? அவனும், அவளும்தானே? அவர்தம் நினைவுகள்தானே? அந்த நினைவின் இனிப்பில் பழி மறந்து மகிழ்கிறது காதல்.

‘அதனைப் பலரறியார் பாக்கியத்தால்’ என்கிற வரி நமது அன்றாடத்தின் பேச்சு வழக்காகத் தொனிக்கிறது. அன்றாடத்துள் கலந்து நிற்கும் வரி இயல்பாகவே நெஞ்சுக்குள் தங்கிவிடுகிறது.

    மலரன்ன கண்ணாள் அருமை அறியாது

                அலரெமக்கு ஈந்ததிவ் வூர். (1142)

அலர்தூறும் இந்த ஊர் எனக்கு நன்மையே செய்கிறது. அது அடைய அரிதான தலைவியை நான் அடைந்து மகிழ உதவுகிறது.

அலரால் காதல் வீட்டில் வெளிப்பட்டுவிடும். அலருக்கு அஞ்சி வீட்டார் நமக்கு மணமுடித்து வைப்பர் என்கிறான் தலைவன். இப்படியாக அஞ்சியஞ்சி அரிதாக சந்தித்துக் கொண்டிருந்த காதலரை அலர் நிரந்தரமாகப் பிணைத்து விடுகிறது.

அருமை – அரிது, கடினம்

மலரன்ன கண்ணாள் – மலர் போன்ற கண்களை உடையவள்

      உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்

                பெறாஅது பெற்றன்ன நீர்த்து (1143)

ஊர் முழுக்க அறியுமாறு இந்த அலர் மிகுந்துவிடக் கூடாதா என்ன? அது தலைவியைப் பெறாதபோதும் பெற்றது போன்ற இன்பத்தைத் தரவல்லது.

காதல்மனம் அலருக்கு அஞ்சினாலும் அதன் அடியாழத்தில் அலர்மீதான ஏக்கமும் இருப்பதாகவே சந்தேகிக்கத் தோன்றுகிறது. கல்லூரிக் கழிப்பறைகளில் காதலர் படங்களைக் கிறுக்கி வைப்பது வில்லனுடைய வேலையாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. ஒளிந்திருந்து துப்பறிந்தால் அது நாயகனின் கைவண்ணமாக இருக்கும் ‘திடீர் திருப்பத்தை’ காணமுடியும். காதலால் அடங்கி இருக்க இயலாது. அடிப்படையில் அது வெளிப்பட்டுக் கொண்டிருக்கவே விரும்புகிறது.

உறுதல் – தோன்றுதல், மிகுதல் நீர்த்து – தண்மையானது, இனிமையானது

    கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்

                தவ்வென்னும் தன்மை இழந்து. (1144)

அலரால்தான் பற்றிச் செழிக்கிறது எம் காதல். அலரின்றேல் வாடிச் சுருங்கிவிடும்.

தூற்றத் தூற்ற கெடுவதற்குப் பதிலாக வளர்வதென்பது காதலின் இயல்பு. அலர் காதலை மேலும் பலமிக்கதாக்குகிறது. அது எதிரி போல் தோன்றும் நண்பன். வெல்ல வேண்டும் என்கிற வேட்கையையும் அதன் வழியே சக்தியையும் அளிப்பதால் ஒருவிதத்தில் எதிரியே நண்பன்.

கவ்வுதல் – பற்றுதல் தவ்வுதல் – குறைதல், கெடுதல், சுருங்குதல்

களித்தொறும் கள்உண்டல் வேட்டற்றால் காமம்

                வெளிப்படுந் தோறும் இனிது. (1145)

கள்ளுண்ட களிப்பில் மேலும் மேலும் அதையே விரும்பி உண்பது போல, காமம் ஒவ்வொரு முறை வெளிப்படுந்தோறும் இனிக்கும்.

சின்ன இன்பத்தோடு வீடு திரும்ப யாராவது விரும்புவார்களா அய்யனே? இன்பத்திற்குப் பிறகு இன்பம், இன்பம், இன்பம் என்று அடுக்கிப் பார்க்கவே மனித மனம் விழைகிறது. அதனால்தானே 5ஆவது பெக், 6ஆவது பெக் என்று நீண்டு கொண்டே போகிறது. முகநூல் ஸ்டேட்டஸ்கள், இன்பாக்ஸ் இன்பங்கள், சங்கீதங்களில் நீந்துவது, குரங்காகிக் குதிப்பது, போர்னோவில் திளைப்பது, பார் பாயை இம்சிப்பது, பக்கத்து டேபிளோடு கைகலப்பது என்று அதிவேகத்தில் போய் ஏதேனும் ஒரு புளியமரத்தில் முட்டிமோதி நிற்கிறது இன்பம்.

வேட்டம் – வேட்கை, விருப்பம்

   கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்

                திங்களைப் பாம்புகொண் டற்று. (1146)

தலைவனைக் கண்டு நான் காதல் கொண்டதென்னவோ ஒரு நாள்தான். ஆனால் நிலவைப் பாம்பு பிடித்த கதையின் விந்தை ஊர் முழுக்கப் பரவியது போல அலராகி விட்டதெம் காதல்.

ஒருநாள் எனில் ஒரே நாள் என்று கொள்ள வேண்டியதில்லை. ‘தலைவி தன் நெஞ்சத்து நிறைவின்மையால் பெற்றும் பெறாதவள் போல் இப்படி புலம்புவதாக’ தன் குறுந்தொகை உரையில் குறிப்படுகிறார் உ.வே. சா. தலைவனின் தேரை நான் பார்க்கிறேனோ இல்லையோ எனக்கு முன் ஊர் பார்த்துவிடுகிறது என நோகிறாள் ஒரு சங்கத்தலைவி.

        ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்

                நீராக நீளும்இந் நோய் (1147)

ஊரின் தூற்றலையே எருவாகக் கொண்டு அன்னையின் திட்டுகளையே நீராகக் கொண்டு நாளும் வளர்கிறது எம் காதல் நோய்.

‘அலரில் தோன்றும் காமத்து மிகுதி’ என்கிறது தொல்காப்பியம். அது இப்போது சடசடக்கும் தீயாகி விட்டது. குறுக்கே எது வந்தாலும் எரித்து முன் செல்லும் தினவு பூண்டுவிட்டது.

‘தடைக்கற்களைப் படிக்கற்களாக்கி…’ என்கிற இன்றைய அலங்காரம் இக்கவிதையைப் படிக்கையில் நினைவில் எழுகிறது.

       நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்

                காமம் நுதுப்பேம் எனல். (1148)

நெய்யை ஊற்றித் தீயை அணைப்பது போன்ற மடமை, அலரை ஊற்றிக் காதலை அணைப்போம் என்பது.

பொதுவாக மனிதனுக்கு எதில் எது எரியும்? எதில் எது அடங்கும்? என்பதில் அவ்வளவு தெளிவில்லை. அதுவும் காதல் போன்ற வினோத நோய்களின் முன் அவனது எந்த மருந்தும் வேலை செய்வதில்லை.

நுதுத்தல் – அவித்தல், அழித்தல்.

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்

                பலர்நாண நீத்தக் கடை. (1149)

இது பிரிவுக்காலத்தில் தூற்றும் ஊருக்குத் தலைவியின் பதில்…

ஊர் அலருக்கு நான் ஏன் நாண வேண்டும்? ஊர் மொத்தமும் நாணும்படி ‘அஞ்சாதே… விரைந்து வருவேன்’ என்று எம் தலைவன் உறுதி சொல்லியிருக்கையில்.

‘சுறாக்கள் திரியும் பெரிய கடல் கூட சமயங்களில் தூங்கிவிடும். ஆனால் அலர்ப்பெண்டிரோ அதனினும் துஞ்சார்…’ என்று புலம்புகிறாள் ஒரு சங்கத்தலைவி. சுறாவின் பிளவுண்ட வாயிலும் கொடியது ஊர்வாய்.

‘ஓம்புதல்’ என்கிற சொல் பழந்தமிழ்க்கவிதைகளில் ஒரே சமயத்தில் ‘காத்தல்’ என்றும்  ‘விலக்கல்’ என்றும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ நாம் நன்கறிந்த ஒன்று.

நீத்தல் – பிரிதல் ஓம்புதல் – தவிர்த்தல், விலக்குதல்.

      தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்

                கௌவை எடுக்குமிவ் வூர். (1150)

நான் விரும்பியபடியே இந்த ஊர் முழுதும் எம் காதல் அலராகிவிட்டது. இனிக் காதலர் விரும்பும்போது யாம் மணமுடித்துக் கொள்வோம்.

‘அன்றைய அலர்’ நன்றே என்கிற செய்தி இப்பாடலில் தெளிவாக உள்ளது. அது காதலைத் திருமணத்தில் சென்று சேர்க்கிறது. அடுத்தடுத்த அதிகாரங்களில் மணவாழ்வின் காதல் காட்சிகளைக் காணப்போகிறோம். அதாவது ‘கற்பியல்’ துவங்குகிறது.

அலரின் நவீன வடிவே நாசமாய்ப் போன அந்த ‘நாலுபேர்’. ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்விலும் அந்த ‘நாலுபேரின் நாக்கு’ கூடவோ, குறையவோ வினையாற்றவே செய்கிறது. அந்த நான்கு நாக்கிற்கு எவன் செவிடோ அவனே பாக்கியவான்.

இன்று நாம் மனமதிர அறிய நேரும் ‘சாதி ஆணவக்கொலைகளில்’ ஊர்வாய்க்கு குறிப்பிடத்தக்க பங்கிருக்கிறது. அலருக்கு அஞ்சிய சங்கத்து அன்னை தன் மகளை ‘சிறுகோலால் அலைந்தாள்’. இன்றைய அன்னையோ பெற்ற மகளை வெட்டிப் புதைக்கவும் சம்மதித்து விடுகிறாள்