ஸ்ரீதர் இயக்கிய ஒரு பழைய கருப்பு வெள்ளை தமிழ் திரைப்படத்தில் அப்போதைய பிரபல நகைச்சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலு (இவரை ‘டணால்’தங்கவேலு என்றும் அழைப்பர்) வேலைவெட்டி எதுவுமில்லாமல் மனைவியிடம் தன்னை ‘எழுத்தாளர்’ என்று பீலாவிட்டு ஏமாற்றிக்கொண்டு திரிவார். அவருடைய பில்டப்புகளைப் பார்த்து அவளும் நம்பிவிடுவாள். ‘எழுத்தாளர் மனைவின்னு சொல்லிக்கிறதுலதான் எனக்குப் பெருமை’ என்பாள். பிறகொரு நாள் தங்கவேலு மனைவியிடம் வகையாக மாட்டிக்கொள்வாரே தவிர, சிறிது காலம் அவளிடம் அவருடைய ‘எழுத்தாளர் பில்டப்’ செல்லுபடியாகும். அப்படியெல்லாம் ஒரு மனைவி, நம்ம எழுத்தாளர் தஞ்சை கிறுக்கனுக்கு வாய்க்கவில்லை. வாய்த்திருந்தால் ஒருவேளை கிறுக்கன் நிறைய விருதுகள் வாங்கிக் குவித்திருப்பான். இரண்டாயிரம் பக்கங்களுக்கு ஒரு நாவல் எழுதியிருப்பான். சில பல ஆசிய, ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பான். ஆறு மாதங்களே வெளிவந்தாலும் ஒரு இதழ் நடத்தி, ‘தடம் பதித்த இதழாளர்’ வரிசையில் தன்னை இணைத்துக்கொண்டிருப்பான். சமூக அக்கறையின் மிகுதியில் அறிக்கைகள் தயார் செய்து, சில நாளிதழ்களுக்கு அனுப்பி வைத்திருப்பான். சில மாத இதழ்களுக்கு நேர்காணல் அளித்திருப்பான். ‘எழுத்தாளன் என்பவன் காலத்தின் கண்ணாடி’ என எண்ணி இறுமாந்திருப்பான். ஏதாவதொரு அரசியல் கட்சியில் சேர்ந்துகொள்ள இந்நேரம் தூதுவிட்டிருப்பான். இவை எல்லாம் வாய்க்காமல் போனதுக்குக் காரணம், தனக்கு ‘தக்க துணை’ வாய்க்காததே என்னும் ஆழ்ந்த வருத்தம் தஞ்சை கிறுக்கனுக்கு எப்பவுமே உண்டு.

தஞ்சை கிறுக்கனின் இயற்பெயர் சிவலிங்கம். தன்னுடைய பெயருக்கு அர்த்தம் தெரிந்துகொண்ட பத்து வயதிலிருந்தே இந்தப் பெயரிலிருந்து விடுபட வேண்டுமெனும் எண்ணம் இருந்தது அவனுக்கு. பத்து வயதில் அவனென்ன கெஜட்டிலா பெயர் மாற்றிவிட முடியும்? அப்படி எல்லாம் ஒரு விஷயம் இருப்பதும் அந்த வயதில் அவனுக்குத் தெரியாது. சிலுவை சுமப்பதுபோல சிவலிங்கம் என்னும் பெயரைச் சுமந்து தனது பதினேழு வயதுவரை உழன்றான். பிறகு லிங்கத்தை வெட்டிவிட்டு ‘சிவன்’ என்று பெயரைச் சுருக்கிக் கொள்ளலாமா என்று ஆலோசித்தான். இந்த இடத்தில வாசகர்களாகிய உங்களுக்கு ‘லிங்கம்’ தோன்றிய குறுவரலாறைக் கூறுவது என் கடமையாகிறது.

சிவனும் அவரது இல்லாள் துர்க்கையும் ஒருநாள் நன்றாகச் சரக்கடித்துவிட்டு சரச சல்லாபங்களில் ஈடுபட்டிருந்தனர். சிவ பூஜையில் கரடி புகுந்ததுபோல அந்த நேரம் பார்த்து விஷ்ணுவும் சில கடவுளர்களும் அங்கே வந்துவிட்டனர். சிவனும் துர்க்கையும் மெய்மறந்து கிடந்ததால் வந்தவர்களைக் கவனிக்க அவகாசமில்லை. விஷ்ணு தலைமையில் வந்த எல்லாக் கடவுளர்களும் சிவனையும் துர்க்கையையும் சபித்துவிட்டுச் சென்றனர். விஷயம் அவர்களுக்குப் பிறகுதான் விளங்கியது. சிவனும் துர்க்கையும் தங்களின் செயலுக்காக வெட்கப்பட்டனர். கிடந்த கோலத்துடன் அவர்கள் மரித்தனர். ‘நாணத்தால் நான் இறந்தேன். ஆனால் எனக்குப் புதுவாழ்வும் வடிவமும் கிடைத்துவிட்டது. இனி நான் லிங்கமாக வணங்கப்படுவேன்’ என்று பிரகடனம் செய்தார் சிவபெருமான். அன்று முதல் லிங்க வழிபாடு தொடங்கியது.

சிவலிங்கம் தனது பதினெட்டாவது வயதில் தீவிர இலக்கியத்தில் குதித்தபோது, அவனுடைய குரு புண்டரீகன் ‘தஞ்சைக் கிறுக்கன்’ என்று அவனுக்குப் பெயர் மாற்றி ஞானஸ்னானம் செய்வித்தார். அவரைச் சுற்றி சில கிறுக்கர்கள் இருந்தனர். ஆனாலும் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத பேரு, பெத்த பேரு சிவலிங்கத்துக்குக் கிடைத்தது.

புண்டரீகன் என்றால் நீங்கள் ஏதும் தப்பர்த்தம் கொண்டுவிடப் போகிறீர்கள். புண்டரீகத்துக்கு தாமரை மலர் என்னும் பொருள் உண்டு. கற்றோர் அறிவர். என்னதான் பொருள் விளக்கினாலும், சமூகம் அவருடைய பெயருக்கு விரசமாகவே அர்த்தம் கற்பித்துக்கொண்டது. முதல் மூன்றெழுத்தில் செல்லமாக அவரை ‘புண்ட’ என அழைத்த சிலர் அதே வினாடி தவறுணர்ந்து நாக்கைக் கடித்துக்கொண்டனர். அவருடைய தகுதிக்கும் அது இழுக்காகப்பட்டது. எனவே அவர் தனது சிஷ்யர்களுடன் தீவிரமாக ஆலோசித்து ‘பு.ரீகன்’ எனத் தன் பெயரைச் சுருக்கிக்கொண்டார் (பவர் பாண்டி ப.பாண்டி என்றானது போல). நிறையப் பேர் அவரை ‘ரீகன்’ என்று நாகரீகமாக அழைக்கத் தொடங்கினர். தன் பெயர் ‘அமெரிக்கை’யாக இருக்கவும் அகமகிழ்ந்த அவர் சூட்டோடு சூடாக நானூறு நாற்பது பக்க நோட்டுகளை வாங்கி தன்னைச் சுற்றி அடுக்கி வைத்துக்கொண்டு, நீண்ட நாட்களாக அசைப்போட்டுக் கொண்டிருந்த வரலாற்றுப் புதினத்தை எழுதத் தொடங்கினார்.

தஞ்சைக் கிறுக்கன் தன் குருவிடம் தனது பெயரின் தொடக்கத்திலுள்ள ‘க்’ எனும் ஒற்றை நீக்கிக்கொள்ளலாமா அதாவது ‘தஞ்சைக் கிறுக்கன்’ என்பதை ‘தஞ்சை கிறுக்கன்’ ஆக்கிக்கொள்ளலாமா குருவே, என்று பணிவாக அனுமதி கேட்டான். குரு பு.ரீகன், சிஷ்யனின் ஜனரஞ்சக புத்தியை ரசித்தார். தனது முறுக்கு மீசையை சில மணித்துளிகள் மேலேற்றி விட்டுக்கொண்டு, (அது அவரது மானரிஸம். ஒரு நாளைக்கு சில நூறு தடவை அவ்வாறு செய்வார்) தீவிரமாக யோசிப்பது போன்ற பாவனைக்குப் பிறகு, சிஷ்யனின் தலையில் கைவைத்து, ஆசீர்வாதத்துடன் அனுமதி வழங்கினார்.

தஞ்சை வீதிகளில் சிவலிங்கம் நடமாடிய வேளைகளில் அவனுடைய நண்பர்களிற் சிலர் உற்சாக மிகுதியில் ‘கிறுக்கன்’, ‘கிறுக்கன்’ என்றழைக்கவும் எல்லோரின் பார்வையும் அவன்மேல் படத்தொடங்கியது. தஞ்சை கிறுக்கன் என்னும் பெயரில் அவன் முதலில் வாசகர் கடிதங்களை எழுதத் தொடங்கினான். சரமாரியாக வாசகர் கடிதங்களை எழுதித் தள்ளுவது, எழுதுபவர் பெயரைப் பத்திரிகை வாசிப்பவர் மனதில் பதிய வைப்பதற்கான சிறந்த உத்தி என்று அவனுக்குச் சொல்லப்பட்டிருந்தது. அவன் அந்த உத்தியை செவ்வனே பயன்படுத்தினான்.

பத்து தேதிக்குமேல் தஞ்சை கிறுக்கனின் வாசகர் கடிதம் வராது போனால், பத்திரிகை ஆசிரியர்கள் பதற்றமடைந்தனர். அவனுக்கு போனுக்குமேல் போன்போட்டு ‘இந்த இதழ் உங்களுக்குத் திருப்தி அளிக்கவில்லையோ?’ என்று கேட்டனர். ஆனால் பதினைந்து தேதிக்குள் நுணுக்கி நுணுக்கி எழுதப்பட்ட அவனுடைய அஞ்சலட்டை அவர்களின் கைக்கு கிடைத்துவிடும். ‘தஞ்சை கிறுக்கன்’ என்னும் பெயர் வணிக இலக்கியத்தில் இவ்வாறாக உருவாயிற்று.

வாசகர் கடிதங்களுக்குப் பிறகு, தஞ்சை கிறுக்கன் ‘ஜோக்குகள்’ எழுதத் தொடங்கினான். யோக்யா, ஆவி, சங்கமம், அமுதம், நாய், நிஷா, அச்சாரம் போன்ற இதழ்கள் அவனுடைய ஜோக்குகளை விரும்பிக் கேட்டு வாங்கிப் பிரசுரித்தன. ஆயிரக்கணக்கில் அவற்றுக்கு சன்மானம் வழங்கின. இதனால் கிறுக்கனின் வங்கிக்கணக்கில் இருப்பு கணிசமான அளவு உயர்ந்தது. ‘இலக்கியத்தரமான ஜோக்குகள்’ என அவற்றை ஒரு ‘அக்மார்க்’ விமர்சகர் மதிப்பிட்டு, கட்டுரை எழுதினார். இதனால் உசுப்பேற்றப்பட்ட கிறுக்கன், பிரபலமான இலக்கியக் கதைகளைக் காப்பியடித்து ஜோக்குகள் எழுதத் தொடங்கினான்.

கடவுளிடம் ‘சித்த வைத்திய தீபிகை’ இதழுக்கு ஆயுள் சந்தா கேட்ட கந்தசாமிப் பிள்ளையை ராமசாமி ஆக்கி, ஜோக் எழுதினான். ஜோக் எழுதப்பட்ட பேப்பருக்கு மேல் ‘இலக்கியத் தரமான ஜோக்’ என்று ‘அக்மார்க்’ முத்திரை குத்தினான். ஒரு இதழ் அதைப் பிரசுரம் செய்தது. காப்பி அடிக்கிறவனை எல்லாம் கண்டுபிடித்து, வார்த்தைகளாலேயே கழுவிலேற்றும் ஒரு விமர்சகர், தஞ்சை கிறுக்கனின் தகிடுதத்தங்களை அம்பலப்படுத்தி ஒரு நாளிதழில் கட்டுரை எழுத, எதேச்சையாக அதைப் படித்துவிட்ட கிறுக்கன், தன் குருநாதர் பு.ரீகனிடம் பேப்பரைக்காட்டி புலம்பினான். அதைப் படித்துப் பார்த்த பு.ரீகன் ‘இவனுவ எல்லாம் எழுதுனாக்க உனக்குத்தான் பெருமை. காய்ச்ச மரம்தான் கல்லடி படும். இப்படில்லாம் எழுதறவனால ஒரு ஜோக் எழுத முடியுமா? நீ பாட்டுக்கு உன் வேலையப் பாரு’ன்னார் இயல்பு மாறாமல். இதனால் ‘எதிர்வினை’ எழுதும் திட்டத்தைக் கைவிட்டு, தீவிரமாகக் கதைகளைப் படித்து, எது எதையெல்லாம் திருட முடியும் என்று அடிக்கோடுகளிட ஆரம்பித்தான் கிறுக்கன்.

தமிழ் சினிமாவில் பெரிய ரவுண்டு வந்துகொண்டிருந்த காமெடி நடிகர் ‘காவடி வேலு’வுங்கூட தஞ்சை கிறுக்கனுடைய ஜோக்குகளைத்தான் ‘எடுத்தாள்கிறார்’ என்றொரு ‘பகீர்’ செய்தியை, எவரோ ஒருவர் எங்கேயோ கொளுத்திப்போட, தஞ்சாவூர் பற்றி எரியத் தொடங்கியது. இந்த ஏற்பாடு செய்தவர் புண்டரீகன்தான் என்கிற விஷயம், புண்டரீகனுக்கும் தஞ்சை கிறுக்கனுக்கும் மட்டுமே தெரியும். குருவுக்குத்தான் தன்மேல் எவ்வளவு கரிசனம் என்று மெய்சிலிர்த்துப்போன கிறுக்கன், அந்த நிமிஷமே; குரு இறந்தபிறகு தஞ்சாவூரின் பிரதான சாலையில் அவருக்கு முழு உருவ வெண்கலச் சிலை வைப்பதென்றும், ஆண்டுதோறும் ஒரு படைப்பாளிக்கு அவர் பெயரால் ‘புண்டரீகன் விருதளிப்பதென்றும்’ உறுதியேற்றான்.

ஜோக்குகள் எழுதிக் கொண்டிருக்கும்போதே கிறுக்கனுக்கு கவிதையின்மீது காதல் பிறந்தது. தன்னுடைய பத்தாம் வயதிலிருந்து ரகசியமாக எழுதி வைத்திருந்த கவிதைகளை எல்லாம் மெனக்கெட்டு தொகுத்துப் பார்த்தபோது, எண்ணிக்கையில் அவை இரண்டாயிரத்தைத் தொட்டிருந்தன. இத்தனைப் பெரிய இலக்கிய பாரத்தை எப்படிச் சுமப்பதாம் என்று திணறிப்போன கிறுக்கன், இந்த அதிர்ச்சியைத் தன் வாசகர்களின்மேல் வலுக்கட்டாயமாகத் திணிக்கக் கூடாதென்று முடிவுசெய்து அவற்றை மூட்டை கட்டி, புது ஆற்று வெள்ளத்தில் விட்டான். ‘சுழித்துக்கொண்டோடிய நீரில் ஒரு இலக்கியப் பொக்கிஷம் மிதந்து செல்கிறது’ என்று முனங்கிய கிறுக்கன், விரைவில் தான் எழுதவிருக்கின்ற சுயசரிதத்தில் இந்தக் கண்ணீர் அத்தியாயத்தை எப்படி எழுதுவோம் என்று அப்போதே கற்பனை செய்தான். கழிவிரக்கத்தில் உழன்றவன், திலகர் திடலில் ஒரு மூலையில் அமர்ந்து ஒரு முசுவு அழுது தீர்த்தான். அவன் ஆற்றில்விட்ட இலக்கிய மூட்டை, அடுத்தடுத்த ஏழாவது படித்துறையிலிருந்தவாறு நீராடிக்கொண்டிருந்த மகேஸ்வரியின் கையில் கிடைக்கும் என்றோ, கவிதையின்பால் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட மகேஸ்வரி அவற்றை இயற்றிய பாவலனைத் தேடி கரை வழியே மயிருலர்த்தியவாறே தஞ்சை வந்தடைவாள் என்றோ கிறுக்கன் ஒருபோதும் நினைக்கவில்லை.

குட்டிப்போட்ட பூனையைப்போல சிவகங்கை பூங்காவிற்குள் அங்குமிங்கும் நிலைகொள்ளாது தவித்த தனது சிஷ்யனைக் கண்ட புண்டரீகனுக்கு ‘சமீபமாக இவன் போக்கே சரியில்லையே.. நமக்கு முந்தி ஏதும் வரலாற்று நாவல் எழுதித் தொலைத்து விடுவானோ..’ங்கிற அச்சம் கவ்விக்கொள்ள ‘என்ன கிறுக்கா… மனம் ஓரிடத்தில் நில்லாமல் அலைபாய்கிறதுபோல?’ என்று கேட்டு வைத்தார். ‘ஆம் குருவே… இல்லில் இல்லாள் வதைக்கிறாள். கஞ்சி காய்ச்சக்கூட ஒரு பொட்டு அரிசி இல்லை. உனக்கு இலக்கியம் ஒரு கேடா எனக்கேட்டு எனைச் சிதைக்கிறாள்…’ கிறுக்கன் இலக்கிய நயமாகப் பேசி சமாளிக்கப் பார்த்தான். வாஸ்தவத்தில் அவனுடைய வீட்டின் நிலையும் அதுதான். ஆனால் கிறுக்கனின் அப்போதைய மனநிலை புது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பொட்டலத்தின் மீதிருந்ததைப் புண்டரீகன் எங்கனமறிவார்?

சிஷ்யனின் பதில் கேட்டு மென்முறுவல் ஒன்றை உதிர்த்த குருநாதர், தனது அடத்தியான ஜடையை அவிழ்த்து ஒரு தடவை சிலுப்பிக் கொண்டு, மீசையை முறுக்கி மேலேற்றிக் கொண்டார். ‘நான்கூட நீ நிலைகொள்ளாமல் தவித்ததை வைத்து ஏதும் வரலாற்று நாவல் எழுத அடிபோடுகிறாயோ என எண்ணிக்கொண்டேன்..’ மெலிதாக சிஷ்யனிடம் போட்டுப் பார்த்தார். அவனோ ‘நாவல்’ என்கிற வார்த்தையைக் கேட்டதும் நெருப்பிலே பாதம் பதித்தவனைப் போன்று அலறினான். ‘குருவே.. என்ன அப்படிக் கேட்டுவிட்டீர்கள். நாவல் என்கிற வார்த்தையை உச்சரிக்கவே என் நா கூசுகிறது. இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த கெட்டவார்த்தையல்லவா அது? நான்கு வரி ஜோக்குகளால் நாசூக்கு இலக்கியம் செய்யும் நானா வேலை மெனக்கெட்டு நானூறு பக்கங்களுக்கு நாவல் எழுதுவேன்? பிழைக்கத் தெரியாத நாவிதன் தன் பெண்டாட்டி தலையைச் சிரைத்த கதையல்லவா நாவல் எழுதுவது… அப்படி ஓர் நிலை வந்தால் தூக்கில் தொங்குவேனே தவிர்த்து, நாவல் எழுதமாட்டேன்…’ என்று உணர்ச்சிவயப்பட்டான். புண்டரீகனுக்கு இதைக் கேட்டதும் நிம்மதியாக இருந்தது.

தஞ்சாவூர் பெரிய கோவிலைக் கட்டி முடிக்கின்ற தறுவாயில், ராஜராஜன் முப்பத்தியேழு நாட்கள் உறக்கம் வராமல் பஞ்சணையில் புரண்டுகொண்டிருந்தான் என்கிற தகவலை அடிப்படையாகக் கொண்டு, புண்டரீகன் ஒரு மாபெரும் வரலாற்றுப் புதினத்தை எழுத ஆரம்பித்து, இப்போதுதான் முன்னூறு பக்கங்களைத் தாண்டியிருக்கிறார்; பகீரத முயற்சி.

ராஜராஜன் முப்பத்தேழு நாட்கள் உறக்கம் பிடிக்காமல் தவித்தான் என்பதைக் கண்டறிந்த வரலாற்று ஆய்வாளர்களால் ஏன் அவனுக்கு உறங்குவதற்கான ‘ஸ்லீப்பிங் டோஸ்’ தரப்படவில்லை என்பதைக் கண்டறிய இயலவில்லை? அரண்மனை வைத்தியர்கள் இந்த விஷயத்தில் மௌனம் காத்ததன் பின்னணி என்ன? தூக்கம் பிடிக்காத முப்பத்தேழு நாட்களில் ராஜராஜனின் மனவோட்டங்கள் என்ன? இதைத்தான் புண்டரீகன் புனைவும் நிஜமும் கலந்து புதினமாக எழுதிக்கொண்டிருந்தார். இந்தக் காலம் ‘நாவல்களின் காலம்’ என்பதைவிடவும் ‘வரலாற்று நாவல்களின் காலம்’ என்னும் ரகசியத்தைப் புரிந்திருந்த பு.ரீகன், தனது சீடர்களிலேயே புத்திசாலியான கிறுக்கன், நாவல்களின் பக்கம் திசை திரும்பிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். எனவே நாவல்களின்மீதான அவனது ஒவ்வாமையை மேலும் மேலும் ஊதிப்பெருக்குவதில் கவனமாக இருந்தார். ஜோக்குகள் எழுதத் துப்பில்லாதவர்கள் நாவல் என்னும் பெயரில் எது எதையோ நீட்டி முழக்குகிறார்கள். சுருங்கச் சொல்லும் கலை இலக்கியத்தரமான ஜோக்குகள் எழுதுவதுதான்; எனவே சிஷ்யா… நீ உன் பாதையில் தீவிரமாக நடைபோடு’ என்று அவனுடைய நெருப்பில் பெட்ரோல் ஊற்றினார். அவர் தன்னுடைய வரலாற்றுப் புதினத்தை எழுதிமுடிக்கப் பதினைந்து ஆண்டுகளேனும் பிடிக்கும். பதினைந்து ஆண்டுகளேனும் உழைக்காமல் ஒரு வரலாற்றுப் புதினம் எழுதிவிட முடியுமா என்ன? அந்நாவல் பிரசுரமாகும் போது இருவரில் எவருடைய வரலாறாவது முடிந்திருக்கும் என்பது அவருடைய தீர்க்க தரிசனம். தன்னுடைய சிஷ்யனின் மனம் குளிரட்டுமே என்று டால்ஸ்டாய் தஸ்தாயெவ்ஸ்கி, சாண்டில்யன், கல்கி என தலகாணி சைசுக்கு நாவல் எழுதியவர்களை எல்லாம் கடுமையாக வசைபாடினார் பு.ரீகன்.

சிவகங்கைப் பூங்காவில் தொள்ளாயிரத்துப் பதிமூன்று ஆண்டு பழமையானதொரு விருட்சத்தின் கீழேதான் புண்டரீகனும் அவருடைய சீடர்களும் ஒன்று கூடி பத்தாண்டு காலமாக இலக்கியப் பயிர் வளர்த்தார்கள். காரணம், அந்த இடத்தில்தான் பூங்காவுக்குப் பொழுதுபோக்க வருவோரின் தொந்தரவுகள் இருக்காது. முக்கியமாகக் குழந்தைகள், அவர்களுடைய ஆர்பாட்டம்.

அன்றைக்கு பதினோராவது ஆண்டு துவக்கம். விசேஷமான நாள். ஆளுக்கொரு ஜோக் சொல்லி கூட்டத்தைத் துவக்கினார்கள். ‘இந்த நாளில் ஏதேனுமொரு அதிசயம் நிகழ வேண்டுமே’ என்று தன் திருவாய் மலர்ந்தார் குரு. பிறகு வழக்கம்போல தனது மீசையைத் திருகி மேலேற்றத் தொடங்கினார். சீடர்களுக்கோ பரபரப்பு தொற்றிக்கொண்டது. குரு வாக்கு பலிதமாகுமென்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இப்படித்தான் கடந்த ஆண்டும் குருநாதர் சொல்லி வாயை மூடுவதற்குள், பத்து நூற்றாண்டுகள் நிலையாக நின்றிருந்த ஒரு பெரிய விருட்சம் வேரோடு பெயர்ந்து பேரோசையுடன் தரையில் வீழ்ந்தது. அமர்ந்திருந்த இடத்தைவிட்டு அரை அடி நகர்ந்திருந்தால் கூட அவர்களனைவரும் நசுங்கிச் செத்திருப்பார்கள். அது இலக்கிய உலகுக்குப் பேரிழப்பாக இருந்திருக்கும். இன்றும் அதே மாதிரி மரம் ஏதும் விழப்போகிறதோ எனும் அச்சத்தில் எல்லோரும் அண்ணாந்து பார்த்திருக்க, கையில் சிலம்புடன் பாண்டியன் அவையில் தோன்றிய கண்ணகிபோல, கவிதைப்பொதியுடன் அவர்களின் எதிரே மகேஸ்வரி நின்றாலும் நின்றாள் நெடுமரம்போல் நின்றாள். நல்ல உயரம், மாநிறம், விரிந்த கண்கள், நீலிமாதிரி நெடுங்கூந்தல்; அதில் ஈரஞ்சொட்டியபடி இருந்தது. ‘என் பெயர் மகேஸ்வரி. கைக்கு அகப்பட்ட கவிதைகள் ஈராயிரத்துடனும், ஈரத்துடனும் வந்தேன். இக்கூட்டத்தில் காவிரிநாடன் என்பார் யாரோ?’ தேனினுமினிய குரல். தஞ்சை கிறுக்கனுக்கு மெய்சிலிர்த்தது. மற்றவர் திருதிருவென விழித்தனர்.

ஏதேனும் சொல்லி சமாளிக்கவேண்டும்; இல்லையேல் அது தன் குருஸ்தானத்திற்கு அழகில்லை எனக்கருதிய புண்டரீகன் ‘காவிரிநாடன் யாரெனப் பொத்தாம் பொதுவாகக் கேட்டால்? இங்கிருப்போர் அனைவரும் காவிரிநாடன்களே…’ என்றார் சாமர்த்தியமாக. குருவின் ஹாஷ்யத்துக்கு கிறுக்கனைத் தவிர்த்துப் பிற சீடர்கள் சிரித்தனர். ‘ஈராயிரம் கவிதைகள்… இயற்றியவர் காவிரிநாடன். யாரென்று கேட்டு, இந்த தஞ்சை நகரத்தையே வலம் வந்துவிட்டேன். எல்லோரும் ஒருமித்த குரலில் பூங்காவுக்குப் போ… பூங்காவுக்குப் போ… என்றனர். வந்தேன்…’ என்றாள். ‘இளைப்பாறிக்கொள் மகேஷ்…’ உரிமையுடன் அவளை அமர்த்திய புண்டரீகன், தேனும் திணை மாவும் தருவதுபோல திரிகடுகம் தேநீரும் மேரி பிஸ்கோத்துகள் இரண்டும் தந்து உபசரித்தார். அவருடைய கண்கள் பசித்திருந்தன. ஏனோ அவருக்கு அந்நேரத்தில் அஸ்வகந்தா லேகியம் தின்னத் தோன்றியது.

அஸ்வகந்தா லேகியத்தை புண்டரீகனே சொந்தமாக தயாரித்துக் கொள்வார். துணைக்கு இரண்டு சீடர்களை நிறுத்திக்கொள்வார். அஸ்வகந்தாவைத் தமிழில் அமுக்குறான் கிழங்கு லேகியம் என்று சற்றே ஆபாசமாகக் குறிப்பிடுவார்கள். கீழவாசல் நாட்டுமருந்துக் கடையில் வாங்கிவந்த அமுக்கராங் கிழங்கை நன்றாகக் கழுவி மண் சட்டியிலிட்டு, இரண்டு மூன்று செவ்விள நீரை வெட்டி ஊற்றி பத்துப்பனிரெண்டு மணி நேரம் ஊறவைத்து நிழலில் உலர்த்தி, உப்பு நீர் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைத்து ஒரு மணி நேரம் வெயிலில் காயவைத்து உரலில் இட்டு மாவுபோல இடித்துக்கொள்வார். அதை சுத்தமான வெள்ளைத் துணியில் கொட்டி அரை லிட்டர் பசும்பால் ஊற்றிய மண்சட்டியில் வைத்து அவித்து எடுத்து, மறுபடியும் நிழலில் உலர்த்தி உரலில் இட்டு இடித்துப் பொடியாக்கி இருமடங்கு தேன் சேர்த்துக் கிளறி வெயிலில் வைத்து கண்ணாடி ஜாடியில் ஊற்றி வைத்துக்கொண்டு, காலையும் இரவு உணவுக்குப் பிறகும் பாலுடன் சேர்த்து அருந்துவார்.

சிஷ்யப்பிள்ளைகளுக்கு குருநாதர் ஏன் இதை இத்தனை மெனக்கெட்டு தயாரித்துச் சாப்பிடுகிறார் என்று கேள்வி எழும். சிஷ்யர்களிடம் எதையும் வெளிப்படையாகப் பேசும் இயல்புள்ள புண்டரீகன், அமுக்கரான் கிழங்கு விசயத்தில் மட்டும் கமுக்கமாக வாயே திறவாமலிருந்தார். வாசகர் கடிதங்களும், துணுக்குத் தோரணங்களும் ஜோக்குகளும் எழுதித் தங்கள் ஞானத்தை விசாலப்படுத்தி வைத்துள்ள அவரின் சிஷ்யர்களுக்கா தெரியாது அமுக்கரான் கிழங்கின் ‘ரகசியம்’?

‘நான்தான் காவிரிநாடன்’ என்றான் தஞ்சை கிறுக்கன். பு.ரீகனும் மற்ற சிஷ்யர்களும் அதிர்ந்து போய் அவனைப் பார்த்தனர். பிறகு பார்வையில் சந்தேகம் இழையோடுவதை அறிந்துகொண்ட கிறுக்கன், தன்னை அவர்களுக்கு உணர்த்தும் பொருட்டு தனது இரண்டாயிரம் கவிதைகளையும் மனப்பாடமாக ஒப்பித்து, ‘மண்ணில் இந்த காதலன்றி’ பாடிய எஸ்.பி.பி. போல மூச்சுவாங்கினான். ‘நீதானா அந்தக் குயில்’ என்பதுபோல மகேஸ்வரி அவனைப் பார்த்தாள். பிறகென்ன, செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே.

தஞ்சை கிறுக்கனும் மகேஸ்வரியும் அதன் பிறகு ஆளுக்கொரு ஜோல்னா பையைத் தோளில் தொங்கவிட்டபடி பெரிய கோவிலுக்குள் போவதும் வருவதும், அரண்மனை, சரஸ்வதி மகால், தமிழ் பல்கலைக்கழகம், கரந்தை தமிழ்ச் சங்கம் என அலைந்து திரிவதும், இலக்கியக் கூட்டங்களில் இணையராய் கலந்துகொள்வதுமாக இருந்து, புண்டரீகனுக்கு மூலச்சூட்டை அதிகப்படுத்தினர். பு.ரீகன் அஸ்வகந்தா லேகியம் உண்டதால் ஏற்பட்ட அரிப்பைத் தணித்துக்கொள்ள வடிகால் தேடி நாயைப்போல உழன்றார் நடுநிசிகளில்.

திருமதி கிறுக்கனிடம் யார் வத்தி வைத்தார்களோ, வீட்டில் கிறுக்கன்மீதான அவளுடைய கெடுபிடிகள் அதிகமாயிற்று. சாயங்காலம் காபி தரும்போது, ‘நீங்க இலக்கியம் பண்ணி கிளிச்சதெல்லாம் போதும். சிங்கப்பூர்ல இருக்குற எந்தம்பி உங்களுக்கு விசா எடுதுட்டானாம். இன்னும் ஒரு வாரத்துல பொட்டியைக் கட்டுற வேலையைப் பாருங்க’ என்று குண்டைத் தூக்கிப் போட்டாள். கிறுக்கன் அதிர்ச்சியுற்றான். இப்போதுதான் மகேஸ்வரியின் வருகைக்குப் பிறகு, அவனுடைய இலக்கியச்சேவை களைகட்டியிருந்தது. அதற்குள் ஏழ்ரயா?

‘யாரைக் கேட்டு விசா எடுத்தியாம்?’ கிறுக்கன் சீறினான். ‘யாரைக் கேக்கணும்?’ பதிலுக்கு திருமதியும் சீறினாள்.

‘இல்ல… என்ன ஒரு வார்த்த கேட்டிருக்கலாம்ல…’

‘எதுக்கு கேக்கணும்? இப்படியே இலக்கியம் பண்றேன் இலக்கியம் பண்றேன்னு ஊரச்சுத்தீட்டு வந்தா ஆரு சோத்துக்கு படி அளப்பாங்கலாம்?’

‘என்ன.. என்ன இவளே.. இதெல்லாம் போய் ஒரு பிரச்சனைன்னு பேசிக்கிட்டு..’

‘என்ன இதெல்லாம் ஒரு பிரச்சனையாவா? இதுதாம் பிரச்சனையே. மரியாதைக்கி சிங்கப்பூர் போற.. இல்லன்னா நடக்குற கதையே வேற..’

‘ஏய்.. என்ன.. மரியாதை எல்லாங் கொறையிது?’

‘டேய்.. சம்பாதிக்க துப்பில்லாத நாயி, உனக்கென்னடா மரியாத வேண்டிக்கெடக்கு…’

கிறுக்கன் நிலை குலைந்து போனான். தாக்குதல் தாறுமாறா இருக்கே. காபி குடுக்கிற வரைக்கும் சுமாராகவேனும் மரியாதை இருந்ததே. இப்போ அதல பாதாளதுக்கு எறங்கிருச்சேனு நினைத்தவன், ‘சரி.. சரி.. இப்ப என்ன சிங்கப்பூர் போகணும்.. அவ்வளவுதானே. போறேன்.. போறேன்னேன்… போதுமா? அதுக்கு எதுக்குப் பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசிக்கிட்டு…’ன்னு பம்மினான்.

‘யாருடா அவ மகேசு?’ திருமதி திடீரென பத்ரகாளியானாள்.

‘மகேசா?’

‘ஆமாடா..’

‘மகேசு… மகேசு… வந்து என் பிரண்டு… ஓரத்தநாட்டுக்காரன்…’

‘இல்ல.. எவளோ ஒரு பொட்டச்சி. எச்சக்கல.. குச்சிக்காரி மவ.. அவள பாக்கணும் நானு’

‘அய்யோ… மகேசுங்குறது பொம்பளயில்ல… ஆம்பள..’

‘டேய்.. இதெல்லாம் எவளாச்சும் கேணக்கிறுக்கி இருப்பா, அவகிட்ட போய் சொல்லு.. இலக்கியம் பண்றேன்.. இலக்கியம் பன்றேன்னுட்டு ஊர் மேயிறியாடா கம்னேட்டி… உன்னே காயடிச்சு விட்றனா இல்லையா பாரு…’

நிலைமை எசகுபிசகாய் ஆகிப்போனதை உணர்ந்த கிறுக்கன், சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு திருமதி சற்றும் எதிர்பாராத தருணத்தில் நெடுஞ்சாண்கிடையாக அவளுடைய கால்களில் விழுந்துவிட்டான். இந்த அதிரடிச் செயல் மூலமாக அவள் மனதை அசைத்துவிட முடியுமென நம்பினான். அவள் அதற்கெல்லாம் மசிகிறவளாகத் தெரியவில்லை. காலை உதறிவிட்டு வேறு பக்கமாக நகர்ந்துகொண்டாள். ‘ஒரு கணவனாக செய்யக் கூடாத காரியத்தையும் செய்தாயிற்று. இந்த உத்தியுங்கூட பலிக்கவில்லையானால் வேறென்னதான் செய்வதாம்’ என்று சிந்தித்தான்.

‘மனைவியைப் படுக்கையறையில் மட்டும் ஏதாவது ஒரு வகையில் திருப்திப்படுத்திவிட்டால், நீ என்ன செய்தாலும் கேள்வி இருக்காது…’ குரு புண்டரீகன் சொல்லித்தந்த பாடம். ஆனால் கொஞ்சகாலமாகவே கிறுக்கனுக்குத் தன் திருமதியிடம் கிளர்ச்சி கொள்ளவே முடியவில்லை. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆறேழு தடவை முயற்சியில் தோற்றுத்தோற்று எழுந்து விட்டிருந்தான். அதுவே திருமதிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கும். குரு மட்டும் தாந்தின்னியாக அமுக்குரான் கிழங்கை வைத்து அமுக்குகிறார். ஒரு நாள் ஒரு பொழுதேனும், ‘கிறுக்கா நீ ஒரு கரண்டி எடுத்துக்க’ன்னு சொன்னதில்லை. ‘மேன்ஃபோர்ஸ் வயாக்ரா’ வகையறாக்களை வாங்கி உபயோகிக்கலாம்தான். கிட்னி சட்னியாகிவிடும் என ஒரு நண்பன் எச்சரித்துத் தொலைத்திருந்தான். ‘தாம்பத்ய வாழ்க்கையில் அதிருப்தி இருந்தால்தான் ஒரு பெண் கணவன் மேல் எரிந்து விழவும், ஏடாகூடமாகப் பேசவும் செய்வாள்’ என இன்னொரு நண்பன் சொன்னான். எல்லாம் சரிதான். கிறுக்கனுக்கு மகேஸ்வரி மீதுள்ள மோகம், மனைவி மேல் வராமல் போவதன் மர்மம் மட்டும் விளங்கவே இல்லை.

கிளர்ச்சி என்பது சொல்லிக்கொண்டு வருவதல்ல. எப்போது வேண்டுமானாலும் அது நிகழலாம். சின்ன உந்துதல் போதும். அதற்காகக் காத்திருக்க வேண்டும். எதிர்பாராத தருணத்திலும் அது நிகழலாம். குரு புண்டரீகன் சொன்னார்; ‘ஒரு தடவை சாலையில் கையேந்தித் திரிந்த, அழுக்குப் பிண்டமாகத் தோன்றிய பிச்சைக்காரியைப் பார்த்து சபலப்பட்டேன்’ என்று. மற்றொரு சந்தர்ப்பத்தில் ‘நாட்டின் உயர் பொறுப்பிலிருக்கும் பெண்மணியைப் புணர்வதுபோல கனவு கண்டேன்’ என்றிருக்கிறார். ‘என்னுடைய நண்பர் ஒருவரின் மனைவி ரொம்ப பொஸஸ்ஸிவ். எந்த அளவுக்கு என்றால்; நண்பர் தவிர்க்கவியலாமல் கர மைதுனம் செய்தாகவேண்டிய சூழல் ஏற்பட்டால்கூட அவர் அவளை மட்டுமே நினைத்து அதை நிறைவேற்றிக் கொள்ளவேண்டும் என்கிற அளவுக்கு’ இதையும் குருதான் கிறுக்கனுக்குச் சொன்னார்.

தன்னுடைய திருமதியின் வேட்கை குறித்து கிறுக்கன் அறிவான். அவளுக்கு கட்டாயம் தேவையிருந்தால், மல்லாந்து உறங்கும் கிறுக்கனின் மேல் வெட்கமின்றிப் படர்ந்து இயங்கியும்கூட நிறைவேற்றிக் கொள்வாள். தேவையில்லை எனில், எத்தனை முறை என்னென்ன விதமாக மீட்டினாலும் மரக்கட்டை போலவே கிடப்பாள். திறக்காத கதவைத் தட்டித்தட்டிப் பார்ப்பது மடமை என்று கிறுக்கனுக்குத் தாமதமாகவே புரியும். இந்த முறை கிறுக்கன் கிளர்ச்சியுற்றது எப்படி என்று சொன்னால், உங்களுக்குக் கோபம் கூட வரலாம். எனினும் சொல்லித்தான் தீர வேண்டும். திருமதி அசந்தர்ப்பமாக நெற்றிப்போட்டில்லாமல் நின்றிருந்த கோலம்தான்; அந்த அமங்கலித்தனமான முகக்களைதான் கிறுக்கனைப் பித்தேற்றிவிட்டது (இந்த இடத்தை உப்புச்சப்பில்லாமல் ஆக்கியதற்காக வாசகர்கள் மன்னித்தருள வேண்டும். சற்றே யோசித்தால் இந்த மன்னிப்பு தேவையற்றது எனக் கருதவும் வாய்ப்பிருக்கிறது).

ஒருவழியாக கிறுக்கன் சிவகங்கை பூங்காவில் நடைபெறும் இலக்கிய வேள்விக்கு வந்து சேர்ந்தபோது, கதை தடம் புரண்டிருந்தது. குரு புண்டரீகன் மகேஸ்வரிக்கு ‘வருமுலையாரித்தி’ எனப் புனைபெயர் சூட்டி அழகு பார்க்கத் தொடங்கியிருந்தார். அவர் அவளுக்கு அப்பெயர் சூட்டிய வேளை; சிஷ்யர்கள் விளக்கம் கேட்டனர். ‘வருமுலை என்றால் இளமுலை, சிறுமுலை, குருமுலை’ என்றவர் ‘வருமுலையாரித்தியை சாதாரணப் பெயரென்று எண்ணிவிடாதீர்கள். அது ஓர் சங்கப் பெண்பாற் புலவரின் பெயர்’ என எச்சரித்தார். சிஷ்யர்கள் அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ‘பொருத்தமான பெயர்தான் குருவே’ என்று ஆமோதித்தனர். மகேஸ்வரி சலனமே இல்லாமல் அமர்ந்திருந்தாள்.

‘வாங்க கிறுக்கன்… ரொம்ப நாளாச்சு உங்க ஜோக் கேட்டு அல்லது கவிதையா?’ மகேஸ்வரியைக் கடைக்கண்ணால் பார்த்தபடி புண்டரீகன் கிறுக்கனை வரவேற்றார். ‘எதுவுமில்லை குருவே’ சோர்வாக அமர்ந்தான் கிறுக்கன். ‘ஓய்வறியாப் படைப்பாளி உனக்கே சலிப்பா?’ ‘என்ன செய்ய குருவே.. உங்களைப்போல் பிரம்மச்சாரியாக இருந்திருந்தால் பிரச்சனையே இல்லை’.

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்லங்குற மாதிரி மகேஸ்வரியைக் காதலுடன் பார்த்தான் கிறுக்கன். அவள் அதை சற்றும் பொருட்படுத்தாமல் முகத்தை விருட்டென்று திருப்பிக்கொண்டாள். கிறுக்கனுக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது. ‘எத்தனை எரிமலைகளை, காட்டாறுகளைக் கடந்து உன்னைக் காணவந்தேன். ஏனிந்தப் பாராமுகம்?’

அரைமணிக்கு முன்னர்தான் மகேஸ்வரியை போனில் அழைத்து, கிறுக்கனின் மனைவி ‘கிழி கிழி’யென்று கிழித்திருந்தாள் (இந்த இடத்தில் ‘கிழி கிழி’க்கு கலா மாஸ்டரின் உச்சரிப்பை அப்படியே பயன்படுத்துவது அதிகப் பலன் தரும்). ‘கூட்டத்துக்கு வந்தியா… தீய மூடிட்டுப் போனியான்னு இருக்கணும். எம் புருஷம் பக்கம் பார்வைய விட்டீன்னா கண்ண நோண்டி எடுத்துருவேன்டி க….லி…’

கிறுக்கனைத் தவிர்த்து எல்லோரிடமும் கலகலப்பாகவே பேசிக்கொண்டிருந்தாள் மகேஸ்வரி. சோகச் சுழலில் சிக்கித் தவித்தான் தஞ்சை கிறுக்கன். அவனுக்கு குருவின் மீதுதான் சந்தேகம். தான் இல்லாத இடைவெளியை அழகாகப் பயன்படுத்தி மகேஷைக் கவர்ந்து கொண்டான் அமுக்கராங் கிழவன். மேலும் ‘வருமுலையாரித்தி’ என்றெல்லாம் அவளுக்குப் பெயர் சூட்டியது ரொம்ப அதிகம். வருமுலை என்று எப்படிக் கண்டாராம்? யாரைக் கேட்டு இந்தப் பெயரைத் தேர்ந்தாராம்? இது விசயத்தில் தன்னைக் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்று எண்ணினான்.

அன்றைய கூட்டம் அதிக சுவாரசியமின்றி முடிந்தது. கூட்டம் முடிந்த பிறகேனும் தன்னைக் கண்டுகொள்வாள் என்றிருந்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவள் கிறுக்கனைத் தவிர எல்லோரிடமும் விடைபெற்றாள்.

‘இது நான் எழுதிய கவிதை. வாய்ப்பிருந்தால் படித்துப் பார்த்து அபிப்ராயம் சொல்லுங்கள்’ என்று ஒரு ஆர்வக்கோளாறு மிக்க மாணவனைப் போல மகேஸ்வரியிடம் தாளை நீட்டி, அசட்டுத்தனமாகப் புன்னகைத்த குரு புண்டரீகனைக் காணச் சகிக்கவில்லை கிறுக்கனுக்கு. ‘எல்லா குருமார்களும் ஏன் இத்தனை அல்பத்தனமாக நடந்துக்குறானுவ?’ன்னு நினைத்தான்.

‘ஓ… கண்டிப்பாக ரீகன்.. இன்றிரவே பேசுவேன். இப்போ எனக்கு விடைகொடுங்கள்..’ என்றாள் மகேஸ்வரி. ‘வாங்க மகேஸ், இலக்கியம் பண்ணுவோம்’ என்று விடைகொடுத்தார் புண்டரீகன். ‘இங்க என்னாங்கடா நடக்குது?’ ஓங்கிக் கூச்சலிட்டான் கிறுக்கன். ‘இலக்கியத்தைத் தவிர ஒன்றுமில்லை.’ சேர்ந்திசைத்தவாறு சிஷ்யர்கள் கலைந்தனர். அப்போது மற்றொரு நெடுமரம் புண்டரீகனுக்கு நேராகச் சரியத்தொடங்கியதைக் கவனித்த தஞ்சை கிறுக்கன் ‘சாகட்டும் தாய்லி’ என்று முழங்கியபடி கண்டுகொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்தான்.