ஹர்த்திக் பாண்டியாவின் சர்ச்சையைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே?

கிரிக்கெட்டுக்கு சம்பந்தமில்லாத ஒரு பிரச்சினைக்காகக் கடும் விமர்சனத்துக்கு உள்ளான அவர், பெண்ணிய அரசியலின் ஈகோ மோதல்களில் மாட்டிக் கொண்டு அணியில் இருந்து தற்காலிகமாய் தடை செய்யப்பட்டு, அவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் கூட ஆட முடியாமல் போகும் என எதிர்பார்க்கப்பட்டு, பின்னர் நீதிமன்றப் பிரதிநிதியின் அறிவுறுத்தலின்படி இப்போது தடையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியம் எனும் மிகப்பெரிய அமைப்பு சமூக வலைதளப் போராளிகள், ஒழுக்கவாதிகள் மற்றும் பெண்ணியவாதிகளின் எழுச்சியின் முன் நடுக்கம் கொண்டு தடுமாறிய முதல் வரலாற்றுத் தருணம் இது. இந்தப் பரபரப்பும், குழப்பமும், நெருக்கடியும், ஒரு அமைப்பையே ஆட்டுவித்த நடுக்கமும் ஏற்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலைகள் என்ன, அரசியல் சரித்தன்மைகளை ஓட்டிப் போலியாய் மட்டுமே பொதுவெளியில் உரையாடும் ஒரு நிலையில் நாம் இன்று மாட்டிக் கொண்டிருக்கிறோமா எனும் கேள்விகளைச் சற்றே கேட்டுப் பார்ப்போம்.

சரி, இதுவரை நடந்தது என்ன?

கரன் ஜோஹரின் Coffee with Karan நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்த்திக் பாண்டியாவும் ராகுலும் பங்கேற்கிறார்கள். அந்நிகழ்ச்சியின் மரபுப்படி தனிப்பட்ட விவகாரங்கள், பாலியல் கேலி, கிண்டல்கள் விவாதிக்கப்படுகின்றன. எவ்வளவு வெளிப்படையாய் பேசுகிறார்களோ அவ்வளவுக்கு கரன் ஜோஹர் அவர்களைப் பாராட்டுவார்; கூடுதலாய் தூண்டி விடுவார். அந்த மாதிரி நிகழ்ச்சியில் நீங்கள் பட்டும்படாமல் பேசி வரவே முடியாது. ஆக, ஒரு கிரிக்கெட் பிரபலம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதே அடியைக் காசு கொடுத்து வாங்குவதுதான். ஹர்த்திக்கும் ராகுலும் அப்படித்தான் மாட்டிக் கொள்கிறார்கள்.

பார்ட்டியில் பல பெண்களை சந்திப்பது, அவர்களுடன் உறவு கொள்வது, ஒரு பெண்ணை அவளது உடலழகை மட்டும் கொண்டு மதிப்பிடுவது, தனது உடலுறவு அனுபவத்தை தான் தனது குடும்பத்துடன், பெற்றோருடன் வெளிப்படையாய் பேசுவது பற்றியெல்லாம் ஹர்த்திக் வெளிப்படையாய் சொல்கிறார். ராகுல் இதையெல்லாம் மறுக்காமலோ ஏற்காமலோ “ஆமாம், நானும் ஜாலியாய் பார்ட்டி பண்ணுவதுண்டு, பெண்களுடன் போவதுண்டு” எனும் கணக்கில் நழுவிச் செல்கிறார்.

இயல்பாகவே பெரும் சர்ச்சை வெடிக்கிறது. (அந்தக் குறிப்பிட்ட அத்தியாயத்தை ஹாட்ஸ்டாரில் இருந்தே தூக்கி விட்டார்கள்.) ஒரு பக்கம் கலாச்சாரக் காவலர்களும் இன்னொரு பக்கம் பெண்ணியப் போராளிகளும் வானுக்கும் பூமிக்குமாய் குதிக்கிறார்கள். இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே குழம்பிப் போய் இருக்கிறது. அதன் நிர்வாகம் முழுக்க அதன் கையில் இல்லை. நீதிமன்றம் நிறுவிய நிர்வாகிகள் குழு ஒன்று வாரியத்தை இப்போது ஒற்றைக்கால் கொக்கைப் போல கவனிக்கிறது; நிர்வாகிக்கிறது. இந்த நிர்வாகிகள் குழுவைச் சேர்ந்த வினோத் ராய் ஹர்த்திக்கையும் ராகுலையும் கடுமையாய் கண்டித்து அவர்களைத் தண்டிக்க வேண்டுமென ஊடகங்களுக்குச் சொல்கிறார். அதற்கு ஏற்ப இரு கிரிக்கெட் வீரர்களும் தற்காலிகமாய் அணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற, அடுத்து நியூசிலாந்தில் நடந்து வரும் ஆட்டங்களில் இவர்கள் இனி கலந்து கொள்ள முடியாது எனும் நிலை ஏற்பட்டது. இது (ஹர்த்திக்கை பொறுத்தமட்டில்) அணிக்கு ஒரு பெரும் இழப்பு என பல முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்தனர் (இப்போது தற்காலிகத் தடை நீக்கப்பட்டுள்ளது).

ஆனால் இதில் இப்போது வேறொரு சிக்கலும் தோன்றுகிறது.

இந்த நிர்வாகிகள் குழுவில் டயானா எதுல்ஜி எனும் முன்னாள் பெண் கிரிக்கெட் வீரரும் இருக்கிறார். இவர் ஒரு பெண்ணியப் போராளி. முன்னாள் இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணித் தலைவர். ஓய்வுக்குப் பிறகு கிரிக்கெட் நிர்வாகத்தில் ஈடுபட்டு வந்த இவர் அர்ஜுனா மற்றும் பத்மஸ்ரீ விருதுகளைப் பெற்றவர். ஆனால் இவரிடம் அறுபது எழுபதுகளில் வளர்ந்து வந்த பெண்களிடம் உள்ள ஒரு பிரச்சினை உள்ளது: “உலகமே ஆண்களால் ஆளப்படுகிறது; பெண்களுக்கு இங்கு இடமோ மரியாதையோ இல்லை; ஆண்களின் மொகரையைப் பெயர்த்தால் ஒழிய அவர்கள் நம்மை மதிக்க மாட்டார்கள். பெண்ணியம் என்றால் எதிரே வரும் ஆண்களை உதைத்து ஓட ஓட விரட்டுவது” என இத்தகைய பெண்கள் நம்புவார்கள். இந்த எதிர்மறைப் பெண்ணியம் இவர்கள் வளர்ந்து வந்த அநீதியான சூழலால் தோன்றியதுதான். ஆனால் இன்று நிலைமை வெகுவாக மாறி வருகிறது. வேலையிடங்கள், விளையாட்டு, கல்வியிடங்கள் என எங்கும் பெண்களின் ஆதிக்கம் உயர்ந்து வருகிறது. இன்றைய தலைமுறை பெண்களுக்கு தாழ்வுமனப்பான்மையும், எதிர்மறை மனப்பான்மை யும் தம் முந்தைய தலை முறை பெண்கள் அளவுக்கு இல்லை. அவர்கள் உலகமே தமக்கு எதிரானது, அனைத்து ஆண்களும் கொடூரமானவர்கள் என நம்புவதில்லை. அவர்கள் ஆண்களுடன் உரையாடவும் சேர்ந்து நட்புணர்வுடன் பணி செய்யவும் தயாராக இருக்கிறார்கள். ஆனால் டயானா துரதிர்ஷ்டவசமாக முந்தின தலைமுறையைச் சேர்ந்த “மூர்க்கமான பெண்ணியப் போராளி”. எங்காவது ஒரு பெண் கண்ணீர் மல்கினால் உடனே அதற்கு ஒரு ஆண்தான் காரணமாக இருப்பான் என முடிவு செய்து கத்தியைத் தூக்கிக் கொண்டு “வெட்டுடா அவனை” எனக் கிளம்பி விடுவார். அந்தப் பெண் சொல்வது சரிதானா, உண்மைதானா, இதை எப்படி நியாயமாகக் கையாள்வது என்றெல்லாம் யோசிக்க மாட்டார். முதலில் அடி, அடுத்துப் பேசு என்பதே டயானாவின் பாணி. நீதிமன்ற நிர்வாகக் குழுவில் இணையும் முன்பே அவர் இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு ஆணாதிக்க குழுமம் என்றே கூறி வந்தார். ஒருமுறை இங்கிலாந்தில் எம்.ஸி.ஸி.யின் லார்ட்ஸ் மைதானத்தின் பெவிலியனில் அவரை அனுமதிக்கவில்லை என்பதால் எம்.ஸி.ஸி. என்றால் ஆணாதிக்கப் பன்றிகள் என அவர் கூறினார். ஸ்ரீனிவாசன் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்தபோது அவர் டயானாவிடம் “நான் முடிவெடுப்பதென்றால் இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி என்ற ஒன்றே இருக்காது” என்றார். இதையும் டயானா பெண் வெறுப்பு என்றுதான் புரிந்து கொண்டார். ஆனால் ஸ்ரீனிவாசனின் தரப்பு வேறு. அதுவே நீண்ட காலம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தரப்பாக இருந்து வந்தது.

 

 

பெண்களின் கிரிக்கெட்டுக்கு வணிக மதிப்பில்லை என வாரியத்தினர் நம்பினர். ஏனென்றால் பெண்கள் கிரிக்கெட்டில் ரன் ரேட் மெத்தனமாய் இருந்தது. ஆண்கள் கிரிக்கெட்டில் 400 ரன்களை 50 ஓவர்களில் அடித்தால் இங்கு பெண்கள் முக்கி முக்கி 180 அடித்து மூச்சு விடுவார்கள். வேக வீச்சாளர்கள் இல்லை. பெரும்பாலும் சுழல்தான். அதுவும் மெதுவான பந்து, சுழலும் பந்தல்ல. பாய்ந்து பிடிக்கும் களத்தடுப்பு இல்லை. சிக்ஸர்கள் இல்லை. வேகமாய் ஓடி ஒற்றை, இரட்டை ஓட்டங்கள் எடுக்க மாட்டார்கள். ஆனால் இந்த நிலை ஜி20 கிரிக்கெட் கிளப்களின் வருகையுடன் மாறியது. ஐ.பி.எல். ஆஸ்திரேலிய பிக் பேஷ் போன்ற ஜி20 ஆட்டத்தொடர்களில் ஆக்ரோஷமான இளம் வீராங்கனைகள் தோன்றினார்கள். பெண்கள் கிரிக்கெட் பிரசித்தமாகத் தொடங்கியது. அவர்கள் கூடுதல் வேகமாய் வீசினார்கள்; துடிப்பாக களத்தடுப்பாடினர்கள்; அவர்கள் சிக்ஸர்கள் விளாசினார்கள். இந்திய 50 ஓவர் பெண்கள் கிரிக்கெட் அணியும் மிக நன்றாய் ஆடி வெற்றிகளைக் குவித்தது. இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணம், கார்ப்பரேட் விரிவாக்கம். அதற்குப் பெண்கள் கிரிக்கெட்டை ஒரு நல்ல பண்டமாக மாற்றத் தெரிந்தவர்களின் வணிக சாமர்த்தியம். இது ஒன்றைக் காட்டுகிறது – இத்தனை நாட்கள் பெண்கள் கிரிக்கெட் கவனமும் அக்கறையும் பெறாதது ஆண்களின் பெண் வெறுப்பினால் அல்ல; பெண்கள் கிரிக்கெட்டுக்கான ஒரு வணிகத் தேவையும் மதிப்பும் இல்லாததனால்தான்; ஆம், பெண்களுக்கு இடமளிக்காத ஒரு நிலப்பிரபுத்துவ சூழல் இங்கே இருந்ததுதான். ஆனால் அது இன்று மாறி வருகிறது. டயானா போன்றவர்கள் இந்தப் பொருளாதார நிலைமாற்றத்தை வெறுமனே விழுமியம் சார்ந்த ஒன்றாக சுருக்கிக் கொள்கிறார்கள். ஸ்ரீனிவாசன் சொன்னதைத்தான் இந்திய கிரிக்கெட் நிர்வாகிகள் தொடர்ந்து உணர்ந்தார்கள்.  யாரும் பார்க்க விரும்பாத, வணிக மதிப்பில்லாத ஒரு ஆட்டமான பெண்கள் கிரிக்கெட்டுக்கு ஏன் இவ்வளவு செலவு செய்து, உழைப்பை செலுத்தி, மனித வளத்தை வீணடிக்கிறோம் என அவர்கள் வியந்தார்கள். இது பெண் வெறுப்பல்ல. இதுவே அன்றைய நடைமுறைச் சூழல். கிரிக்கெட் இன்று அடைந்து வரும் வணிக விரிவாக்கத்தை ஸ்ரீனிவாசன் கூட அன்று ஊகித்திருக்க மாட்டார். அடுத்த கால்நூற்றாண்டுக்குள் (அல்லது அதற்கு முன்பு கூட) பெண்களின் ஐ.பி.எல் ஒரு பெரும் லாபமீட்டும் ஆட்ட வடிவமாகும். அப்போது ஸ்ரீனிவாசன் கூட ஒரு பெண்கள் அணியை வாங்கி விட விரும்புவார். அவர் ஒரு வணிகர். அப்படித்தான் அவரால் சிந்திக்க முடியும். இதைப் பெண் வெறுப்பு / ஆணாதிக்கம் என சுருக்கிப் பார்ப்பது முட்டாள்தனம்.

மீ டூ இயக்கத்தின் ஒரு பகுதியாக ஒரு அடையாளம் வெளிப்படுத்தாத பெண், இந்திய கிரிக்கெட் வாரிய சி.இ.ஓ.வான ஜோஹ்ரி மீது குற்றம் சுமத்தினார். ஜோஹ்ரி தான் முன்பு (2016இல்) வேலை செய்த நிறுவனத்தில் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்பதே குற்றச்சாட்டு. இதைத் தொடர்ந்து நிர்வாகிகளின் குழு ஜோஹ்ரிமீது சட்டபூர்வமான விசாரணை நடத்துவதற்கு முடிவெடுத்து அதற்கு ஒரு முன்னாள் நீதிபதி, பெண்ணிவாதி மற்றும் தில்லிப் பெண்கள் நலவாரியத்தின் தலைவரையும் உள்ளடக்கிய ஒரு குழுவிடம் விசாரணை நடத்தக் கோரியது. இந்த வழக்குக்கும் இப்போது ஹர்த்திக் மற்றும் ராகுல் மீதான நடக்கப் போகும் விசாரணைக்கும் இரு விதங்களில் தொடர்புண்டு.

ஜோஹ்ரி இந்திய வாரியத்தில் பணி செய்யும்போது குற்றம் செய்திருந்தால் அவருக்கு எதிராய் விசாரிப்பது நியாயம். ஆனால் அவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு வேறு ஒரு நிறுவனத்தில் செய்ததாய் நம்பப்படும் குற்றத்துக்கு இப்போது அதற்கு சம்பந்தமில்லாத ஒரு நிறுவனம் விசாரிப்பது நியாயமா? அதில் லாஜிக் உண்டா? நீங்கள் கி எனும் நிறுவனத்தில் பத்து வருடங்களுக்கு முன்பு பணி செய்தபோது சமர்ப்பித்த ஒரு செலவுக் கணக்கில் ஆயிரம் ரூபாய் குறைகிறது. நீங்கள் அந்த ஆயிரம் ரூபாயைத் திருடி விட்டதாக இப்போது டிவிட்டரில் ஒருவர் எழுதுகிறார். எந்தத் தேவைக்காக அந்த செலவு செய்யப்பட்டது, கணக்கில் வந்த தப்பு என்ன, அந்தக் குற்றச்சாட்டு உண்மையா என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. அதற்கான ஆவணங்கள் இல்லை. ஆனாலும் இந்த ட்வீட்டை உங்களது இப்போதைய நிர்வாகம் சீரியசாக எடுத்துக் கொண்டு உங்களை விசாரிக்கிறது; விசாரணைக் காலம் முடியும் வரை உங்களைத் தற்காலிகமாய் வேலை நீக்கம் செய்கிறது. இது எப்படியான ஒரு நெருக்கடியாய், கொடுமையாய், வதையாய் உங்களுக்கு இருக்கும், யோசியுங்கள்! ஒன்று, நீங்கள் பண்ணின குற்றத்துக்காக உங்களை விசாரிக்கும் பொறுப்பு தற்போதைய நிர்வாகத்துக்கு இல்லை. இரண்டு, குற்றம் சாட்டியவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை. மூன்று, உங்களுக்கு எதிரான ஆவணமோ நிரூபணமோ இல்லை. இவ்வளவுக்குப் பிறகும் உங்களுக்கு எதிராய் உங்கள் தற்போதைய நிர்வாகம் விசாரணை நடத்துகிறதென்றால் அவர்களின் நோக்கம் உங்கள் குற்றமின்மையை நிரூபிக்க உதவுவதோ உங்களை விசாரித்து அறிவதோ அல்ல – உங்களை ஒடுக்குவதே. உங்கள் மீது கூடுதலாய் அதிகாரப் பிரயோகம் செய்வதே. இதையே, ஊடகங்களும் மீ டூ இயக்கவாதிகளும் இந்திய வாரியத்தின் இப்போதைய நிர்வாகக் குழுவும் ஜோஹ்ரிக்கு செய்தது. இதையே, ஹர்த்திக் பாண்டியா மற்றும் ராகுலுக்கு அவர்கள் இப்போது செய்கிறார்கள்.

ஜோஹ்ரி மீது விசாரணை நடத்திய கமிஷன் அவரைக் குற்றமற்றவர் என அறிவித்தது. டயானா இவ்விசயத்தில் முறியடிக்கப்பட்டார். அவர் இதைத் தனிப்பட்ட முறையில் தன் தோல்வியாக எடுத்துக் கொண்டு காயப்படுகிறார். ஆகையால், மூவர் நிர்வாகக் குழுவின் தலைவர் வினோத் ராய் தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட இரு வீரர்களையும் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளின் குழு ஒன்று விசாரிக்கும் என்றார். ஆனால் இதை டயானா ஏற்கவில்லை. ஏனென்றால் விசாரிக்கும் குழுவில் ஜோஹ்ரி இருக்கிறார். ஜோஹ்ரி ஏற்கனவே பாலியல் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதால் அவர் அக்குழுவில் இடம்பெறக் கூடாது என்கிறார் டயானா. ஆனால் அக்குற்றச்சாட்டில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு விட்டார் என்பதை டயானா ஏற்க மறுக்கிறார். இது பிடிவாதம் அல்ல, ஒருவித மோசமான ஒழுக்கவெறி மனநிலை. காயம்பட்ட அகங்காரத்தின் சீற்றம். ஜோஹ்ரி இடம்பெற மாட்டார் என்றால் நானும் இதில் இருந்து விலகுகிறேன் எனக் கூறி உள்ளார் வினோத். மேலும், டயானா இந்த வழக்கை வேண்டுமென்றே நீட்டிப்பதாகவும், அவர் இரு வீரர்களுக்கும் உடனடியாய் தண்டனை அளித்து அவர்களை மன்னித்து மீண்டும் அணியில் இணைப்பதை விரும்பாததாகவும் வினோத் குற்றம் சாட்டுகிறார். மத்திய அமைச்சரான பாபுல் சுப்ரியோ இதைப் பற்றிப் பேசுகையில் டயானாவின் நோக்கம் இரு வீரர்களையும் நிரந்தரமாய் தடை செய்வதே அன்றி நியாயமாய் தண்டிப்பது அல்ல என்று கூறியிருக்கிறார். டயானாவும் இதை மறுக்கவில்லை. ஜோஹ்ரியைத் தண்டிக்க முடியாத வெறுப்பில் இருக்கும் டயானா பதிலுக்கு ஹர்த்திக்கையும் ராகுலையும் பலியிடத் துடித்தார் என்பது வெளிப்படை. பெண்களுடன் உடலுறவு கொள்ள விரும்புகிறேன் என வெளிப்படையாய் சொன்னதற்காக இரு வீரர்களை கிரிக்கெட்டில் இருந்து நிரந்தரமாய் தடை செய்வது என்னவிதமான நீதி சொல்லுங்கள்?

முன்னாள் வீரரும் விமர்சகருமான ஆகாஷ் சோப்ரா தனது வீடியோ பதிவொன்றில் இதை சொல்கிறார்: ‘‘ஆம், ஹர்த்திக் செய்தது தவறே. ஆனால் அது ஒரு கிரிக்கெட் குற்றமல்ல. கிரிக்கெட் களத்தில் ஒரு வீரர் செய்யும் தவறுக்கு மட்டுமே ஒரு வாரியம் அவரைத் தண்டிக்க வேண்டும்; தனிப்பட்ட வாழ்வில் அவர் செய்யும் ஒழுக்க குற்றங்களுக்கு அவரைத் தண்டிக்க வேண்டியது அவர் சம்பந்தப்பட்ட உறவினர்களோ நண்பர்களோ தாம்.”

தினேஷ் கார்த்திக்கின் முதல் மனைவியுடன் முரளி விஜய்க்குத் தகாத உறவு இருந்தது. இதன் விளைவாக கார்த்திக்கும் அவரது மனைவியும் பிரிந்தார்கள். இது பெரிய அளவில் மீடியா கவனம் பெற்று சர்ச்சை ஆகவில்லை. ஒருவேளை இது சர்ச்சையாகி, விஜய்யும் கார்த்திக்கும் வெளிப்படையாக மோதும் நிலை ஏற்பட்டிருந்தால், கலாச்சாரக் காவலர்களும் பெண்ணியவாதிகளும் கோதாவில் குதித்து ஆளுக்கு ஒரு பக்கம் எடுத்து கார்த்திக்கை ஆதரித்தும் கார்த்திக்கின் மனைவியை எதிர்த்தும் மறுத்தும் விமர்சித்தும் பேசியிருந்தால் அங்கு இந்திய கிரிக்கெட் வாரியம் என்ன பண்ணி இருக்க வேண்டும்? நியாயமாக, இதில் வாரியம் தலையிடவே கூடாது. ஆனால், ஒருவேளை ஒரு டிவி நிகழ்ச்சியில் இருவரில் ஒருவர் இப்பிரச்சினையைப் பேசி அது சர்ச்சை ஆகியிருந்தால் நிச்சயமாய் வாரியம் தலையிட்டு இருவரையும் தண்டித்திருக்கும்! ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், ஹர்த்திக்கும் ராகுலும் செய்தது தவறா அல்லது அதை ஒரு பொது நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியது தவறா என்பதில் பலருக்கும் – இதை விசாரிப்பவர்கள், விமர்சிப்பவர்கள் உள்ளிட்டு – குழப்பம் உள்ளது. அவர்கள் தண்டிக்கப்படுவது அவர்களின் நடத்தைக்காகவா, கருத்துக்காகவா அல்லது கருத்தை ஊடகத்தில் சொன்னமைக்காகவா? ஜோஹ்ரிக்கு எதிராக ஏன் விசாரணை நடத்தினார்கள்? அவர் செய்த நிர்வாகத் தவறுக்காகவா? அவர் பணம் களவாடினார் என்பதற்காகவா? இல்லையே! அவரது முந்தைய நிறுவனத்தில் ஏற்பட்ட ஒரு குற்றத்துக்கும் (அது உண்மையெனும் பட்சத்தில்) கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்? இந்திய கிரிக்கெட் வாரியம் என்பது நீதிமன்றமா? இல்லைதானே? நாளை ஜோஹ்ரி ஒரு வரதட்சணை வழக்கில் மாட்டிக் கொண்டு அது சர்ச்சையை ஏற்படுத்தினாலும் அதை வாரியம் விசாரிக்குமா?

ஹர்த்திக் மற்றும் ராகுலின் குற்றம்தான் என்ன? அத்தோடு முன்பு நடந்த விசாரணையில் ஜோஹ்ரியின் குற்றம்தான் என்ன? தன் நிர்வாக வளையத்துக்குள் வராத ஒரு பிரச்சினையில் வாரியம் ஏன் தலையிடுகிறது?

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகக் குழு ஹர்த்திக் மற்றும் ராகுலுக்கு ஒரு காரணம் கேட்கும் குறிப்பாணை (ஷோ காஸ் நோட்டீஸ்) அனுப்பியது. அதில் என்ன சொல்லி இருக்கிறார்கள் எனப் பார்த்தால் ஒரு தெளிவு கிடைக்கும். “நீங்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அரசியலமைப்பு 41 (6) இன் படி ஒழுக்கக்கேடு மற்றும் தவறான நடத்தை ஆகிய குற்றங்களை இழைத்திருக்கிறீர்கள். இது குறித்த உங்கள் விளக்கத்தை வாரியம் கோருகிறது. இதன் அடிப்படையில் உங்கள் மீது விசாரணை நடத்தப்படும். அதுவரை நீங்கள் தற்காலிக நீக்கம் செய்யப்படுகிறீர்கள்.” டெலிகிராப் பத்திரிகை கிரிக்கெட் வாரியத்தின் இந்த குறிப்பாணையைப் பற்றிப் பேசும்போது வாரிய அரசியலமைப்பில் “தவறான நடத்தை” சரியாக விளக்கப்படவில்லை என்கிறது. ஆனால் கிரிக்கெட் வீரர்கள் வாரியத்துடன் செய்து கொண்டுள்ள உடன்படிக்கையில் நடத்தை விதிகளைக் குறிப்பிடும் போது “தவறான நடத்தையை” இவ்வாறு விளக்குகிறார்கள்: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பிம்பத்தைக் களங்கப்படுத்தும் விதம் ஒரு வீரர் எத்தகையை நடவடிக்கையில் ஈடுபட்டாலும் அது தவறான நடத்தை ஆகும். இதன்படி நீங்கள் ஒரு வீரராக அணித்தேர்வை விமர்சித்தாலோ வாரியத்தின் நடவடிக்கை பற்றி ஊடகத்தில் விவாதித்தாலும் கூட அது தவறான நடத்தையே.

ஆக, ஹர்த்திக் மற்றும் ராகுலின் குற்றம் என்பது வாரியத்தின் பிம்பத்தைக் களங்கப்படுத்தியதே அன்றி பெண்களைப் பற்றி இழிவாகப் பேசியதோ “நினைத்ததோ” அல்ல. சமீபத்தில் மனோஜ் திவாரி தேர்வாளர்களை விமர்சித்தார். சில வருடங்களுக்கு முன்பு கவுதம் கம்பீர் தோனியின் தலைமையை விமர்சித்தார். தற்போது இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவராக உள்ள ஹர்மன் ப்ரீத் கவுர் போலியான கல்விச் சான்றிதழை வாரியத்துக்கு சமர்ப்பித்தார். இது ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையானது. இவை வாரியத்தின் பிம்பத்தைக் களங்கப்படுத்திய செயல்களே. ஆனால் மூவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. காரணம் கேட்கும் குறிப்பாணையும் அனுப்பப்படவில்லை.

இதே போன்ற ஒரு பெரிய சர்ச்சை வேகவீச்சாளர் முகமது ஷமிக்கு எதிராக வெடித்தது. அவரது மனைவி ஜஹான் ஊடகங்கள் முன் தோன்றி கணவரின் பாலியல் நடத்தை குறித்துக் குற்றம் சாட்டினார். ஷமி பல பெண்களுடன் காதல் அரட்டைகளில் ஈடுபட்டுள்ளதாய் கூறினார். இதை அடுத்து அவர் ஷமி, அவரது பெற்றோர், சகோதரர் ஆகியோர் தன்னைத் தாக்கியதாய், தன்னைக் கொலை மிரட்டல் செய்வதாய் எதிராய் வழக்குகள் பல தொடுத்தார். ஆனால் வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை. உடனே ஜஹான் மற்றொரு குற்றச்சாட்டை வைத்தார். ஒரு பாகிஸ்தானியப் பெண்ணுடன் ஷமிக்கு உறவு உண்டென்றும் அப்பெண் வழியாக இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு சூதாட்ட முகவர் ஷமிக்கு நிறைய பணம் அளித்ததாகவும் அதைக் கொண்டு ஷமி பல ஆட்டங்களை fix செய்ததாய் சொன்னார் ஜஹான். இப்போது கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்து ஷமியைத் தற்காலிக நீக்கம் செய்தது. அவரது ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கியது. ஜஹான் எதிர்பார்த்தது இப்போது நடந்தது. இதை அடுத்து வாரியம் நியமித்த ஒரு குழு ஷமியை விசாரித்து அவர் குற்றமற்றவர் என நிரூபித்தது. இங்கு இரண்டு விசயங்களைக் கவனிக்க வேண்டும். ஒன்று, ஹர்த்திக், ராகுல், ஜோஹ்ரி வழக்குகளில் போல பாலியல் காரணத்துக்காக ஷமிக்கு எதிராய் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஏனென்றால் வாரியத்துக்கு வீரர்களின் பாலியல் விவகாரங்களில் மூக்கை நுழைப்பதில் அக்கறை இல்லை. ஆனால் ஹர்த்திக் உள்ளிட்டோர் விசயத்தில் எந்த “குற்றமும்” நடக்கவில்லை என்றாலும், ஊடகங்கள் வழியாகக் கடும் நெருக்கடிக்கு வாரியம் தள்ளப்பட்டது. ஹர்த்திக் உள்ளிட்டோரைத் தண்டித்தது வாரியம் அல்ல, (மறைமுகமாய்) நமது பாலியல் ஒழுக்கப் போராளிகள்தாம் என்பதை இது காட்டுகிறது. இதே கலாச்சாரக் காவலர்கள் ஷமி விசயத்தில் ஏன் களமிறங்கவில்லை என்பது சுவாரஸ்யமான கேள்வி. ஷமி ஒரு இஸ்லாமியர் என்பதால் அவர் “இந்திய” பாரம்பரியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, ஆகையால் அவரைக் கண்டிக்க வேண்டியதில்லை என நினைத்தார்களா? அவரை ஒரு “வெளியாளாக”, மற்றமையாகப் பார்த்தார்களா? ஒருவேளை ஷமிக்கு நடந்தது தோனிக்கு நடந்திருந்தால் நம் கலாச்சாரக் காவலர்கள் “பொங்கி” எழுந்திருப்பார்களா? சுலபத்தில் நாம் விடை காண முடியாத ஒரு குழப்பமான சிக்கலான கேள்வி இது.

இரண்டாவதாக, இதே சூதாட்டக் குற்றச்சாட்டை ஷமியின் மனைவி முன்வைக்காமல் வேறு ஒருவர் வைத்திருந்தால் வாரியத்தின் எதிர்வினை வேறாக இருந்திருக்கும் என்பது. ஒரு உதாரணத்துக்கு அல் ஹஸீரா சேனல் முன்வைத்த சூதாட்டக் குற்றச்சாட்டைப் பார்ப்போம். முனாவர் எனும் சூதாட்ட முகவரும் அவரது உதவியாளர்களும் 2012இல் நடந்த ஜி20 உலகக்கோப்பை ஆட்டங்களின்போது இந்தியாவின் தற்போதைய அணித்தலைவர் கோலி மற்றும் துணைத் தலைவர் ரோஹித் ஷர்மா பக்கத்தில் நிற்கும் புகைப்படங்கள் தம்வசம் உள்ளதாய் ஒரு சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டை அல் ஜசீரா சமீபத்தில் வைத்தது. அக்குற்றச்சாட்டைப் பார்க்கையில் தம்மிடம் ஆதாரம் உள்ளதாய் அல் ஜசீரா கூறுவதாகவே புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் இதைக் கண்டுகொள்ளவே இல்லை. மட்டுமல்ல, ஆதாரங்களையும் கோரவில்லை. ஊடகங்களும் பொருட்படுத்தவில்லை. ஆனால் இதையே கோலியின் முன்னாள் தோழியோ காதலியோ அல்லது கோலியுடன் நெருக்கம் உள்ளதாய் கோரும் ஏதாவது ஒரு பெண்ணோ முன்வைத்திருந்தால் நிலைமையே வேறு. மிகப்பெரும் சர்ச்சையாக மாறி இருக்கும். கோலியை நீக்க வேண்டும் எனும் கோரிக்கை எழுந்திருக்கும்.

இவை ஒன்றைக் காட்டுகிறது: எந்தக் குற்றச்சாட்டிலும் ஒரு பெண் நுழையும்போது தான் நமது சமூக வலைத்தளப் போராளிகள், கிரிக்கெட் வாரிய நிர்வாகக் குழுவினர் கச்சை கட்டிக் களமிறங்குவார்கள்; தடை, அணியில் இருந்து நீக்கம் ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஒரு வீரர் வாரியத்தை விமர்சித்தாலோ வாரியத்தின் அரசியலமைப்பு 41 (6)ஐ மீறினால் கூட வாரியம் பொருட்படுத்தாது என்பதை இதுவரையிலான நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. ‘‘ஒழுக்கக்கேடு”, ‘‘தவறான நடத்தை” ஆகிய சொற்களின் பொருளும் இவ்வாறே புரிந்து கொள்ளப்படும்.

1930களுக்குப் பிறகு ஒழுக்க காரணங்களுக்காக ஒரு வீரர் அணியில் இருந்து திரும்ப அழைக்கப்படுவது ஹர்த்திக் மற்றும் ராகுல் விசயத்தில்தான் நடந்துள்ளது என்கிறார்கள். ஏன், கடந்த ஐம்பதாண்டுகளில் எந்தக் கிரிக்கெட் வீரரும் பெண்களிடம் நெருக்கம் பாராட்டவில்லையா? பார்ட்டிக்குச் சென்றதில்லையா? இச்சையை வெளிப்படுத்திய தில்லையா? உண்மை என்னவென்றால் இன்று ஆண்-பெண் உறவு மிகவும் சிக்கலாகி உள்ளது. இணையம் வழியாக ஆண்-பெண் தொடர்புறுத்தல் இன்று நூறு மடங்கு அதிகமாகி உள்ளது. இது நம் வலதுசாரி கலாச்சாரக் காவலர்களை அச்சுறுத்துகிறது (அவர்களே இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்த தவறுவதில்லை என்றாலும் கூட). பிரபலங்கள் மீது பாலியல் சர்ச்சைகள் எழும்போது அவர்கள் இந்தியாவின் மானத்தைக் காக்கும் பொருட்டுக் கொந்தளிக்கிறார்கள். நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெருக்கடி கொடுக்கிறார்கள். இதன் மூலம் ஆண்-பெண் ஒழுக்கத்தை தற்காலிகமாய் வலியுறுத்த முயல்கிறார்கள்.

அடுத்து, இன்று பெண்கள் எல்லா தளங்களிலும் தமது அதிகாரத்தை செலுத்த, வலியுறுத்த முயன்று வருகிறார்கள். பண்பாட்டுத் தளங்களில், ஆண்-பெண் உறவு குறித்த எந்த வெளிப்படையான விவாதங்கள் நடந்தாலும் அவற்றைப் பெண்களுக்கு எதிரான ஆபாசமாய் சித்தரித்துப் போராடுவதை இந்தப் பெண் போராளிகளில் சிலர் தொடர்ந்து செய்து வருகிறார்கள். ஒரு பெண் பாலியல் ரீதியாய் சித்தரிக்கப்படுவது, பெண்மீதான இச்சையை ஒரு படைப்பு சித்தரிப்பது நேரடியாய் பாலியல் குற்றங்களுக்கு காரணமாவதில்லை. மாறாக, பெண்ணுடல் மீது அதிகாரத்தைப் பிரயோகிப்பதற்கு பலாத்காரம் பயன்படும் போது பெண் துய்ப்புக் கதையாடல்கள் அதற்குத் துணைக்கருவியாகின்றன. ஆனால் துணைக்கருவியே பலாத்காரக் காரணம் அல்ல. பலாத்காரக் குற்றங்கள் நடப்புலகில் உள்ள ஆண்-பெண் பொருளாதார அரசியல் சமநிலையின்மையின் காரணமாகவே அதிகம் நடக்கின்றன. சமூக, பொருளாதார மாற்றங்களே கலாச்சாரத்தை மாற்றுமே அன்றி நேர்மாறாக அல்ல. இதைப் பல சமயங்களில் நாம் புரிந்து கொள்வதில்லை. உதாரணமாய், சினிமாவில் பெண்கள் அதிகமாய் முடிவெடுக்கும் இடத்தில் இருந்தால் அங்கு பெண்கள் சுரண்டப்படுவது குறைவாகும். ஏனென்றால், ஏற்கனவே அதிகாரத்தில் கீழே உள்ளவர்களையே சுரண்ட முடியும். அப்படி சுரண்ட பாலியல் ஒரு வழிமுறை மட்டுமே. பாலியலுக்காக சுரண்டல் அல்ல, சுரண்டலுக்காகவே பாலியல். இந்த நடப்பியல் பிரச்சினையை நம்மால் சுலபத்தில் சரி செய்ய முடியாது என்பதால் நாம் பாலியல் பண்பாட்டு சித்தரிப்புகளைத் தாக்குவதில் அதிக நேரத்தை செலுத்துகிறோம்.

2003இல் ஷங்கரின் பாய்ஸ் படத்துக்கு எதிராய் தோன்றிய சர்ச்சைக்கும் இன்றைய ஹர்த்திக், ராகுல் சர்ச்சைக்கும் பெரிய வேறுபாடில்லை. ஷங்கரும் ஹர்த்திக் மற்றும் ராகுலும் வெளிப்படையாகப் பாலியல் பற்றிப் பேசினார்கள். செக்ஸில் எப்போதுமே உடல்தான் பிரதானம். ஒரு பெண்ணை அவளது சுபாவத்துக்காக, ஆளுமைக்காக ஒரு பெண் இச்சிப்பதில்லை. அது இயல்பல்ல. பெண்கள் ஒரு ஆணைப் பற்றி அரட்டையடிப்பதை ஒட்டுக் கேட்பவர்கள் அவர்களும் ஆணின் நல்லியல்பைப் பற்றி அதிகம் பேசுவதில்லை; அவர்களும் ஒரு ஆண் “ஹாட்டாக” இருப்பதாய் சொல்லும்போது அவனது நல்ல மனத்தைப் பற்றிப் பேசுவதில்லை என அறிவார்கள். ஒரு பெண்ணுடலை அடைய வேண்டும் எனும் ஒரு ஆணின் அடிப்படையான இச்சையை நம் தமிழ் சினிமா என்றும் வெளிப்படையாகப் பேசினதில்லை. நமது ஹீரோ ஒரு பெண்ணை “உளப்பூர்வமாக” நேசிப்பான். அவளை முத்தமிடும் ஆசை கூட அவனுக்கு இராது. அவளை ஆடையின்றி பார்க்க ஏங்க மாட்டான். அந்த ஆசையை சில்க் ஸ்மிதா பாணியிலான குலுக்கு நடனக் காட்சிகள் அரங்கேற்றிட, ஹீரோவின் காதல் தூய்மையாகவே தக்க வைக்கப்படும். இந்த போலி பிம்பத்தை உடைத்தது ஷங்கரின் “பாய்ஸ்”. ஆனால் அதன் வெளிப்படையான பாலியல் உரையாடல்களை நம் கலாச்சாரக் காவலர்களும் பெண்ணியவாதிகளும் கடுமையாய் எதிர்த்தனர். அவர்கள் “உளப்பூர்வ” காதலின் பாசாங்கையே விரும்பினர். ஷங்கர் அன்று பேசியதையே இன்று ஹர்த்திக்கும் செய்கிறார். செக்ஸே தனக்கு முக்கியம், பெண்ணை “உளப்பூர்வமாய்” நேசிப்பதல்ல என்கிறார். ஒரு நடன / மது விருந்தில் ஒரு பெண்ணைப் பார்க்கையில் அவளது பெயரோ முகமோ அல்ல, அவளது உடல்மொழி வெளிப்படுத்தும் இச்சையும் பாலியல் நோக்கமுமே தனக்கு முக்கியம் என்கிறார். இதில் என்ன தவறு? காதலித்த பின்பே செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என யார் இந்தக் காலத்தில் சொல்ல முடியும்?

தற்காலிக பாலுறவுகளே இன்றைய நடைமுறை. உடல்ரீதியாய் ஈர்க்கப்படும்போது செக்ஸை நாடுவதும் அதனோடு உணர்வுரீதியாய் ஒரு பிணைப்பு ஏற்படும்போது காதலை நாடுவதுமே இன்றைய தலைமுறையினர் செய்வது. இதன்  ஆதாயம் என்னவென்றால் முந்தைய தலைமுறையினரைப் போல இவர்கள் காதலையும் காமத்தையும் குழப்பிக் கொள்ள மாட்டார்கள். எளிய உடல் ஈர்ப்புக்காக ஐ லவ் யூ சொல்லி ஒரு தேவையற்ற உறவில் போய் மாட்டிக் கொள்ள மாட்டார்கள். சமீபத்தில் “பியார் பிரேமா காதல்” இதையே நாயகியின் தரப்பாக முன்வைத்தது. இன்றைய ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் இப்படியே சிந்திக்கிறார்கள். கடந்த வருடம் நான் பதின்வயதான இன்றைய தலைமுறையினருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். சில பெண்கள் மற்றும் ஒரு பையன் அந்தக் குழுவில் இருந்தார்கள். அந்தப் பையன் தான் சீக்கிரம் போக வேண்டும் என்றான். ஏன் என்றார்கள் அப்பெண்கள். ஒரு பையனைப் பார்க்க வேண்டும் என்ற அவன் அந்த பையனின் தோற்றத்தைப் பற்றிப் போகிற போக்கில் சொன்னான். அப்பெண்கள் அதைப் பிடித்துக் கொண்டு இருவரையும் சேர்த்து மிக ஆபாசமாய் பேசிக் கொண்டு போனார்கள். அந்த சீண்டல் பேச்சில் அவர்களுக்கு அப்பையன்மீதான இச்சை வெளிப்பட்டது. அவனது பாலுறுப்பை மறைமுகமாய் குறிப்பிட்டு அதற்கு ஆபத்து வரக்கூடாது என்றார்கள்; அவன் சந்திக்கப் போகும் ஆணுடன் ஓரின உறவு ஏற்பட்டு விடக் கூடாதே எனும் சின்ன பயம் அவர்களிடம் இருந்தது. இத்தகைய ஒரு வெளிப்படையான பேச்சை என் தலைமுறைப் பெண்கள் என் கல்லூரிப் பருவத்தில் நிச்சயமாய் பேசியிருக்க மாட்டார்கள். அவர்கள் பாலியல் பற்றிப் பட்டும் படாமல் பேசி நாணிக்கோணி சிரித்திருப்பார்கள். ஆனால் ஆணுடல் பற்றி இவ்வளவு வெளிப்படையாய் பேசியிருக்க மாட்டார்கள். இன்றைய பதின்வயதுப் பெண்களுக்கோ நான் அருகில் இருப்பது ஒரு பொருட்டே அல்ல.  ஏனென்றால் பாலியல் சாகசம் இன்று அவர்களின் அன்றாட கதையாடல்களின் பகுதியாகி இயல்பாகி விட்டது. அவர்களுக்கு இது ஆபாசமே அல்ல. ஆண்கள் இப்படித் தான் சிந்திப்பார்கள் என்றும் அவர்களுக்குத் தெரியும்; தாம் இப்படி சிந்திப்பதில் தவறில்லை என்றும் தெரியும்.

சுமந்த் சி ராமன் தன் பேட்டியில் “ஹர்த்திக் பேசுவதை கோடிக்கணக்கான இளைஞர்கள் கேட்கிறார்களே, அவர்கள் மனம் கெட்டு விடாதா? / கிரிக்கெட் வீரர்களை வழிபடும் எத்தனையோ இளம் பெண்கள் அவமானப்பட மாட்டார்களா?” எனக் கேட்கிறார். இன்றைய இளைஞர்கள் / இளைஞிகளைப் பற்றி அவருக்குத் தெரியாது என்பதையே இது காட்டுகிறது. ஹர்த்திக்கை நாடி வரும் இளம்பெண்களைப் பற்றி நாம் ஏன் இங்கு யோசிக்கக் கூடாது? எது அவர்களை ஈர்க்கிறது? ஹர்த்திக்கின் மனமா? குணமா? அவரது பிம்பமும் அதன் கலாச்சார அதிகாரமும் அவரது தோற்றமும்தானே? ஹர்த்திக் ஒரு பெண்ணின் உடல் பிம்பத்தைக் கொண்டு அவளை மதிப்பிடுகிறார் என்றால் அப்பெண் அவரது ஊடக பிம்பம், புகழ் மற்றும் பணத்தைக் கொண்டு அவரை மதிப்பிடுகிறார். இரண்டுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? ஒரு டான்ஸ் கிளப்பின் காவலாளியிடம் இப்பெண்கள் பேசி போன் நம்பரைக் கொடுப்பார்களா? பிரபலமான மற்றும் பணம் படைத்த ஒருவரிடம் தானே செல்கிறார்கள். பெண்களும் ஆண்களைப் போன்றே பிம்பத்தைத் தாண்டி மனத்தை நாடுவதில்லை என்பதே உண்மை. அதுவே எதார்த்தம். அப்பெண்கள் அதை இங்கு வெளிப்படையாய் சொல்லப் போவதில்லை என்பதே அவர்களுக்கும் ஆண்களுக்குமான வித்தியாசம். இப்பெண்கள் ஹர்த்திக்கின் கருத்துக்களால் காயப்படும் வாய்ப்பு குறைவு. ஏனென்றால் அவர்களே அதை நன்கு அறிவார்கள். ஹர்த்திக்கின் கருத்துக்கள் இன்றைய பதின் வயதினரை விட மூத்த வயதினரையே அதிகம் கலவரப்படுத்தி உள்ளது. அவர்கள் பார்க்க விரும்பாத, கேட்க விரும்பாத ஒரு உண்மையை ஹர்த்திக் அம்பலப்படுத்தி விட்டார்.

ஹர்த்திக் பாண்டியாவும் ராகுலும் காமத்தையும் காதலையும் ஆரோக்கியமாக சரியாகப் புரிந்து கொண்டிருப்பதாகவே நான் நம்புகிறேன். உடலை மையப்படுத்தி சமூக அதிகாரத்தை வலியுறுத்தும் நிலப்பிரபுத்துவ மனநிலை கொண்டோரால் மட்டுமே இதை ஏற்க முடியாது போகிறது.

இன்றைய ஊடகச் சூழல் எப்படியான ஒழுக்க அதிகாரத்தை நிறுவனங்களுக்குக் கொடுக்கின்றன, இந்த அதிகாரத்தின் பின்புலத்தில் எப்படிப் பொதுமக்களின் அதிகாரமும் தனிமனிதர்களுக்கு எதிராய் செயல்படுகிறது என்பதை இப்போது கேட்க வேண்டும்.

இன்றைய சமூக வலைத்தளப் புரட்சி / போராட்டச் சூழலில் அதிகாரம் புதுவிதமாக நம்மை வந்தடைகிறது: முன்பு நேரடியாக நிறுவனங்கள் வழி நம்மை அதிகாரம் வந்து ஒடுக்கியது. இப்போது கண்ணுக்குப் புலனாகாத பல வழிகளில் அதிகாரம் கலாச்சார ஒழுக்கமாகத் தோன்றி வந்து ஒடுக்குகிறது. இந்தக் கலாச்சார ஒழுக்கம் பெண்ணியமாக, சமூக வலைத்தளப் போராட்டமாக, கொந்தளிப்பாக, வலதுசாரிகளின் இந்து பண்பாட்டு (சுமந்த் சி ராமன் ஹர்த்திக்கை விமர்சிக்கும் போது) முன்னெடுப்பாக இன்று திரண்டு வருகிறது. இந்தப் பன்முக ஒழுக்க அதிகாரம் ஒன்றோடு மற்றொன்று முரண்பட்டாலும் அதன் நோக்கத்தில் ஒன்று படுகிறது – அது தன் அதிகாரத்தை, தன் முடிவெடுக்கும் வலிமையை நிறுவனங்கள்மீது வலியுறுத்த விரும்புகிறது. இதனால்தான் முந்தைய நிறுவனத்தில் செய்த (அல்லது செய்ததாய் நம்பப்படுகிற) குற்றத்துக்காக சம்பந்தமில்லாத ஒரு நிறுவனம் விசாரணை செய்யும் நிலை இன்று தோன்றுகிறது. இதனால்தான் கிரிக்கெட்டை நிர்வாகிக்க வேண்டிய ஒரு நிறுவனம் ஒரு வீரரின் கருத்து வெளிப்பாட்டை நுணுகி ஆராய்ந்து அதற்காக அவரைத் தற்காலிக நீக்கம் செய்து தண்டிக்க  வேண்டி வருகிறது.

பெண் அதிகாரமும் வலதுசாரி அதிகாரமும் கும்பல் அதிகாரமாய் மாறி கோர முகம் காட்டும், ஊடகங்கள் வழியே கட்டப்பஞ்சாயத்து செய்யும் இந்தக் காலத்தில் பாசாங்கே, இரட்டை நிலையே நம் அனைவரின் ஆயுதமாக இருக்க முடியும்; முகமூடிகளே இனி நம்மைப் பாதுகாக்கும். இந்த விவகாரம் குறித்த பேட்டியொன்றில் பாஸ்கி சொல்வது போல, இனி நாம் சிகரெட் பிடிக்கும் முன் “புகைபிடிப்பது உடல்நலத்துக்குக் கேடு” எனும் எச்சரிக்கையைக் கழுத்தில் அட்டையொன்றில் எழுதித் தொங்க விட வேண்டும். அப்படி செய்தால் நீங்கள் பொதுவிடத்தில் புகைபிடித்தால் கூட பாராட்டுவார்கள். இன்று நீங்கள் ஒரு பெண்ணை செக்சுவலாக அணுகி உறவு கொண்டு விட்டு, வெளியே அதைப் பற்றிப் பேசும்போது “பெண்களின் நல்ல சுபாவமும் பண்பும் ஆளுமையும் மட்டுமே என்னை ஈர்க்கிறது, நான் ஒரு பெண்ணின் கண்ணை நோக்கி உரையாடும் பண்பாளன்” என புருடா விட வேண்டும். ஹர்த்திக் மற்றும் ராகுலின் கருத்துக்கள் எந்த விதத்திலும் ஏற்க முடியாதவை, அவை கண்டிக்கத்தக்கவை என விராத் கோலி இச்சம்பவம் பற்றி கருத்து தெரிவித்தார். ஆனால் இதே கோலி இந்திய அணிக்கு ஆடத் துவங்கிய புதிதில் (சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு) அளித்த டிவி பேட்டி ஒன்றில், டேட்டிங் ஆப் மூலம் சந்திக்க நேர்ந்த ஒரு இளம்பெண்ணுடனான தனது அனுபவம் ஒன்றைப் பற்றிப் பேசுகிறார். “அந்தப் பெண்ணை நேரில் பார்த்த உடனே நான் திரும்ப ஓடி வந்து விட்டேன்.” பேட்டி எடுப்பவர் கேட்கிறார், “ஏன் மிஸ்டர் கோலி?” கோலி மறைக்காமல் சொல்கிறார், “அவள் முகம் ரொம்ப அசிங்கமாக இருந்தது.” இதையே கோலி இன்று சொல்லி இருந்தால் என்ன ஆகி இருக்கும்? பூஜை போட்டு பூசணிக்காய் உடைத்து சூலம் ஏற்றியிருப்பார்கள். ஹர்த்திக் சர்ச்சையை ஒட்டி இந்தப் பல வருடங்களுக்கு முந்தைய குறும்பேட்டி சமீபத்தில் டிரெண்டிங் ஆனது. ஆனால் இன்றைய கோலியோ இப்படி நிச்சயம் பேச மாட்டார். அவர் இதையே இப்படி மாற்றி சொல்வார், “அப்பெண்ணை சந்தித்து உரையாடிய பின் அவருடன் என்னால் மனதளவில் உடன்பட முடியாது என உணர்ந்து கொண்டேன். அதனால்தான் நான் டேட்டிங்கைத் தொடர முடியாது எனக் கூறி வந்து விட்டேன்.” இப்படி “பொய்” பேசும் சாமர்த்தியத்தை கோலி இன்று பெற்று விட்டார். இன்று உலகமே ஒரு கண்காணிப்புக் கோபுரம். ஆகையால், இன்று பொய்யும் புரட்டும் பெரும்பாலும் தேவைக்காக மட்டும் சொல்லப்படுவதில்லை; போலித்தனம் இன்று ஒரு பாதுகாப்பு அரணாக, அரசியல் சொல்லாடலாக மாறி விட்டது. பாசாங்கைப் பயிலாதவர்களுக்கு இன்று விசாரணைக் கமிஷன்தான்!

ஹர்த்திக்கின் பெற்றோர் செய்த பெரிய தவறு தம் பிள்ளைக்குப் பொய்யைக் கற்பிக்காததுதான். ஆனால் இத்தகைய சர்ச்சைகள் அவருக்குப் பாடம் புகட்டி விடும். அப்படிப் பாடம் கற்று, “முதிர்ந்த” பின்தான் ஹர்த்திக் உண்மையில் ஆபத்தானவராக இருப்பார்!