கர்நாடக அரசியலில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவிவருகிறது. காங். மற்றும் சுயேச்சைகள் உட்பட 116 உறுப்பினர்களின் ஆதரவோடு (117-1*=116 *அவைத்தலைவர் நீங்கலாக) ஆட்சியமைத்தது மதசார்பற்ற ஜனதாதளம். 14 பேர் முன்னரே பதவிலகல் கடிதம் கொடுத்துள்ள இந்நிலையில் நேற்று இரு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவி விலகல் கடித்தை அளித்துள்ளனர். இதனால் ஆளும் தரப்பிற்கு தற்போது 100 உறுப்பினர்களின் ஆதரவே இருக்கிறது. ஆனால் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

தங்கள் பதவி விலகலை ஏற்காததையடுத்து அதிருப்தி உறுப்பினர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதனை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, “இன்று மாலை 6 மணிக்குள் அதிருப்தி உறுப்பினர்கள் அவைத்தலைவர் முன் ஆஜராக வேண்டும்” என உத்தவை பிறப்பித்துள்ளது. மேலும் அவைத்தலைவர் நாளை காலை தனது முடிவை நீதிமன்ற அமர்வின் முன் சமர்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த காங். தலைவர் சிவகுமார், அதிருப்தி உறுப்பினர்கள் மீண்டும் தங்களுடன் இணைவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் காங். கூட்டணி ஆளும் கர்நாடகா, கோவா என இரு மாநிலங்களிலும் அரசியல் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதால் நாடாளுமன்றத்தில் காந்தி சிலையின் முன் “ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்” என்ற பதாகைகளோடு காங். எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். சோனியா காந்தி, ராகுல் காந்தி, அனந்த் சர்மா உள்ளிட்ட காங். கட்சியின் முக்கியத் தலைவர்கள் அங்கு போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.