சமூக ஊடகங்களில் ஒரு புகைப்படம் அவ்வப்போது தென்படும். ஒரு பெண் இருகைகளையும் ஏந்தி, ஒரு தெய்வத்தின் முன் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் அது. அவ்வளவு எளிதில் கடந்திட முடியாத வண்ணம், வாழ்வின் மொத்த வலியையும் பொதித்து தெய்வத்தின் முன் கையேந்தி நிற்கும் அப்பெண்ணின் சித்திரம் பல நினைவுகளைக் கொண்டு வரும்.
எங்களுடைய ஊரில், அய்யனார் கோயிலுக்கு பக்கவாட்டில் கம்மாய் இருக்கும். நெடுஞ்சாலையை இணைக்கும் ஊரின் சாலை, கோயிலுக்கு எதிரே, பொட்டல் வெளி. அது எங்களின் கிரிக்கெட் மைதானம்.
காலையில் ஆடப் போகும்பொழுது, மக்கள் நடமாட்டும் இருக்கும் என்பதால், அய்யனாருக்கு எதிரே இருக்கும் சாலை வழியாக நாங்கள் போவது இயல்பாக நிகழும். ஆனால் ஆட்டம் முடிந்து மதியம் அந்த சலனமற்ற வெய்யில் பொழுதில் மைதானத்தில் இருந்து விலகிய நொடியில் நேர் எதிரே தெரியும் அந்த உயரமான, கம்பீரமான குதிரையும் அதற்கு மேல் உக்கிரமாக வீற்றிருக்கும் அய்யனாரும் சட்டென ஒரு பயத்தை கொண்டு வந்துவிடும்.
அப்படி ஒரு கிரிக்கெட் ஆட்ட நாளின் மதியத்தில் அய்யனார் முன் நின்றிருந்தார் சேதுக்கரசி அக்கா.
மேலே சொன்ன புகைப்படத்தைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அன்று சேதுக்கரசி அக்கா நின்ற கோலம் தான் மனதில் நிழலாடும்.
எப்போதும் சைக்கிளை வேகமாக அழுத்தி அய்யனாரைக் கடக்கும் நான் அன்று அந்த மதியத்தில் இப்படி மொட்டை வெய்யிலில் அய்யனார் முன் இரு கைகளையும் ஏந்தி எதுசும் சொல்லாமல் நின்று கொண்டிருந்த சேதுக்கரசியைப் பார்த்தப் பிறகும் கடக்க மனமில்லாமல் சைக்கிளை கம்மாய்க் கரை புளியமரத்தில் சாய்த்துவிட்டு, போய் நின்றேன்.
கண்களை மூடி, திறந்து என முணுமுணுத்துக்கொண்டிருந்தார். ஆனால் ஏந்திய கரங்கள் மட்டும் காற்றில் அப்படியே நின்றிருந்தன.
நான் எதிரே நிற்பதைக் கூட பார்த்ததாய் தெரியவில்லை.
காத்திருந்தேன்.
சற்று நேரத்திற்குப் பிறகு தன் நிலைக்கு வந்தவர் என்னைப் பார்த்ததும் சட்டென அதிர்ந்து வியந்து, சகஜ நிலைக்குத் திரும்ப எத்தனித்தார்.
“என்னாக்கா பண்ற இந்த வெய்யில்ல இங்கனக்குள்ள?”
அவ்வளவுதான். ஒரு சிறிய விரிசலுக்குக் காத்திருந்த மதகின் மடைநீர் போல பொலபொலவென நீர் உகுத்துக்கொண்டே பேசத் தொடங்கிவிட்டார்.
“என்னடா சொல்றது. என்னத்தச் சொல்ல, என் வாய் இருக்கே வாய், எப்பப்பாரு என்னத்தயாவது சொல்லிக்கிட்டே கெடக்காதனு எங்க ஆத்தா சொல்லும் கேட்கலயே நானு”
சைக்கிளை உருட்டிக்கொண்டே அவளுக்குச் செவிமடுத்தேன். அதுபோன்ற நொடிகளில் சொற்களைக் கேட்டுக்கொள்வதே ஆறுதல். சி.மோகன் ஒரு கவிதையில் குறிப்பிட்டிருப்பார். ஆறுதல் சொல்லத் தெரியாவிட்டால் பரவாயில்லை, உங்கள் ஓட்டை உடைசல் சொற்களை வைத்துக்கொண்டு சற்று சும்மாயிருங்கள்” என. அப்போது அந்தக் கவிதை எல்லாம் படித்தவன் அல்லன் என்றாலும் அமைதியாகக் கேட்டுக்கொண்டே சைக்கிளை உருட்டினேன்.
அய்யனாருக்கு பக்கவாட்டு கம்மாய்க்கரை மர நிழலில் சஞ்சீவியின் லாடம் அடிக்கும் இடத்தைக் கடந்து, நின்றாள்.
“இந்தா இங்கனக்குள்ளதான், என்ன என்னமோ சொல்லுச்சு எங்க மாமென். அம்புட்டு ஆசையா சொல்லுச்சு. எனக்கு மனசெல்லாம் அப்பிடியே ரெங்கிச்சு றெக்கைகட்டி. ஆனா இந்த வாய் இருக்கே”
உடைந்து அழுதாள்.
“யக்கா இப்ப ஆச்சு, அதான் வெளிநாட்ல இருந்து கரெக்ட்டா பணத்த அனுப்புறாப்ள இல்ல”
சொல்லும்போதே ஒரு வேளை அங்கு ஏதாவது பெண், ஏடாகூடம் என அப்போதைய என் வயதிற்குண்டான அலைபாய்தல்கள், இப்போதும் அப்படித்தான் எண்ணத் தோன்றும் என்பது தனி.
“அதெல்லாம் மாத்த தொவங்கும்போதே டான் டான்னு அனுப்பிருது, வெள்ளிக்கெழமையானா நம்ம உரக்கடைக்கு வரச்சொல்லி போன்ல பேசிருது. அந்தாளு அங்கன கெடந்து எனக்காண்டியும் பிள்ளைக்காண்டியும் அல்லாடுது”
மூக்கைச் சிந்தினார். முகத்தை முந்தானையால் துடைத்துக்கொண்டார். அழுது முடித்த பெண்களின் முகத்தில் ஒரு தீர்க்கம் பரவும். தெளிவாக இருந்தது முகம்.
நிமிர்ந்து அய்யனாரைப் பார்த்துக்கொண்டே சொன்னார்.
“அன்னிக்கி ராத்திரி, அந்தாளு இங்கன வச்சு கட்டிக்கிறேன்னு சொல்லிச்சுல்ல, அப்ப நான் பாட்டுக்கு சிரிச்சுக்கிட்டே, “அதையும் இதையும் சொல்லி எம்மனசக் கெடுத்துட்ட, என்னய விட்டுப் போனேண்டு வைய்யி, நான்லாம் ஒண்ணும் பண்ணமாட்டேன்..ஆனா அந்தா நம்மளயே பார்த்துக்கிட்டு ஒக்காந்துருக்காரு பாரு நம்மூரு அய்யனாரு. அவரு என்ன பண்ணுவாருண்டு ஒனக்குத் தெரியும்ல்ல, போன்வாரம் கூட சஞ்சீவி அப்பென் குத்துப்பெட்டு செத்தான்ல்ல” அப்டீன்னு சொல்லிட்டேன்”
எனக்குப் புரிந்தது.
எங்கே தான் சொன்ன சொற்கள் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம்.
“அய்ய, அதான் எல்லாம் சரியாத்தான் இருக்காரு, நீயே என்னத்தயாச்சும் யோசிச்சுக்கிட்டு லூசுகணக்கா”
என சைக்கிளை நகர்த்தினேன்.
ஒருமுறை அய்யனாரை மீண்டும் பார்த்து பெருமூச்சுவிட்டு என்னோடு நடந்தார்.
“நாங்க நல்லா இருக்கணும்னு அங்க எங்கயோ போயி வெய்யில்ல கெடந்து அல்லாடுறாரு. ஆனா இந்த முட்டாக் கடவுள் அவரு என்னய விட்டுப் போய்ட்டாரோனு என்னத்தயாச்சும் பண்ணிறக்கூடாதுல்ல. அதான் நாஞ் சொன்னது வேற நீ எம்மனுஷன காப்பாத்துய்யா அப்டீன்னு அப்பப வந்து இப்பிடி நிக்கிறது, மனசே கேட்கலடா”
நான் அவருக்குத் தெரியாமல் மெதுவாக ஒரு முறை அய்யனாரைத் திரும்பிப் பார்த்தேன். எப்போதும் உக்கிரமாக இருக்கும் முகம் ஏனோ இப்போது சாந்தமாக இருப்பதுபோல இருந்தது.
முதல் வாக்கியத்தில் சொன்ன அந்தப் புகைப்படம் இப்படி ஊர்,அய்யனார், சேதுக்கரசியக்கா என அனைத்து நினைவுகளையும் கொண்டுவந்து இந்த குறுந்தொகைப் பாடலில் வந்து நிற்கும்.
ஒரு சங்கத் தலைவி, இதேபோலத்தான், புலம்புவதாக அமைந்த பாடல் இது.
ஊர் நடுவே இருக்கும் மரத்தடியில் மிக உக்கிரமாக அமர்ந்திருக்கும் கடவுள், கொடியவர்களை அழித்துவிடக்கூடியவர் என்பது ஊராருக்குத் தெரியும். ஆனால் என் தலைவர் கொடியவர் கிடையாது. இதே இடத்தில் உன்னைப் பிரியமாட்டேன் என்று சொன்னவர்தான். ஆனால் எனக்காத்தான் பிரிந்திருக்கிறார். நான் இப்படி உடல் இளைத்து,பசலை பீடித்து மெலிந்த தோளோடு இருப்பதற்கு அவர் ஒருநாளும் காரணம் அல்ல, என் மனம் தான் பிரிவை நினைத்து வாடுகிறது. அவர் எனக்காத்தான் பிரிந்து போயிருக்கிறார். கொடியவர் அல்ல, அதனால் தண்டித்துவிடாதே” எனக் கடவுளிடம் மன்றாடுகிறாள்
பாடல் :
மன்ற மரா அத்த பேஎமுதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉம் என்ப யாவதும்
பசைஇப் பசந்தன்று நுதலே
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் தோளே.
-கபிலர்
குறுந்தொகை -87.
*மரா அம் =கடம்பமரம் ; பேஎம்=பயம்,அச்சம் ; தெறூஉம்=தண்டிக்கும்/அழிக்கும்.
.
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 15: அளியள் - நர்சிம்
- மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 14 : முலையிடைப் பள்ளம் பெருங்குளம் ஆனதே - நர்சிம்
- மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 13 : உன் சும்மா அழகையே கண்ணால் தாண்டுதல் அரிய காரியம். - நர்சிம்
- மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 12. பையுள் மாலையில் எமியமும் தமியரும். – நர்சிம்
- மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 11. “நெசமாவா சொல்ற?” - நர்சிம்
- மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 10: அறத்தொடு நிற்றல் - நர்சிம்
- மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 9 : செங்காற் பல்லியும் உகிர்நுதி ஓசையும். - நர்சிம்
- மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 8 : ளாக்கம்மா கையைத் தட்டு - நர்சிம்
- மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 6 : நீயலேன் – நர்சிம்
- மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 5 : பூ உதிரும் ஓசை - நர்சிம்
- மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 4 : பூவிடைப்படினும் யாண்டு கழிந்தன்ன – நர்சிம்
- மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 3 : ரோஜா மொக்கும் குருவித்தலையும். - நர்சிம்
- மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 2 : உயிரை வாங்கும் Possessiveness - நர்சிம்
- மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 1 : வில்லோன் காலன கழலே - நர்சிம்