நண்பன், தமிழாசிரியர். ஊரில் இருந்து, தன் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக இரண்டு நாட்கள் கருத்தரங்கிற்காக சென்னை வருகிறான். அவனை அழைத்து வர கோயம்பேடுபேருந்து நிலையத்தில் காத்திருந்தேன். அவனுக்குச் சென்னை தெரியாது அல்லது முதன்முறை வருகிறான். ஏற்கனவே ஒரு முறை வந்து போன இன்னொரு நண்பன் சென்னையின் சாலை அபாயங்கள் மற்றும் பிரம்மாண்டகள் பற்றி மிகத் தெளிவாக அவனிடம் சொல்லி இருந்த படியால், என்னை கட்டாயம் வரச்சொல்லி இருந்தான். நான் சென்னை வந்த அன்று இப்படி என்னை அழைத்துப்போக வந்திருக்காவிட்டால் இந்த சென்னை எனும் பெருநகரின் பிரம்மாண்டத்தைப் பார்த்த அச்சத்தில் என்ன ஆகி இருப்பேன் என்று தெரியும் அல்லது தெரியாது என்பதால் அதிகாலைப் பனி, தூக்கம் எதையும் பொருட்படுத்தாமல் சென்றிருந்தேன்,நட்பிற்காக.

அதிகாலை என்பது வேறு ஓர் உலகம். டீ மாஸ்டர்கள் மருதமலை மாமணியையோ,ஷேச ஷைன சிகாமணியையோ, கந்தனுக்கு அரோகராவோ எஃப் எம்மின் பக்தியில் பாலைக் கரைத்துக்கொண்டிருக்கும் காட்சியில் துவங்கி, தினசரிகளை பிரித்து ஏரியாவாரியாக பறக்கும் சைக்கிள்,பைக்குகள், பச்சைப் பசேல் காய்கறிகள் மீன்பாடி வண்டிகளில் வந்து இறக்குவது என ஒரு அமைதியான பரபரப்புச் சூழ்ந்திருக்கும். ஆம். அவ்வளவு அமைதி, அவ்வளவு பரபரப்பு இரண்டும் காணக்கிடைத்தது.

வண்டி வருவதில் தாமதம் என்பது நான் இரண்டு முறை மணிபார்த்துக் கொண்டதில் உணர்ந்தேன். இதுபோன்ற தாமதத் தருணங்களில் தேநீரைத் தவிர உற்ற துணை வேறில்லை என்பதால் ஒரு டீ குடிக்கலாம் என்று தோன்றும் முன் டீயைக் கையில் வாங்கிவிட்டேன். ஆவி பறப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது தான் அவர்களைக் கவனித்தேன்.

ஒல்லியான தேகம் என்று சொல்லிவிடமுடியாத அளவிற்கு உடம்பு அந்தப் பையனுக்கு. டீக்கடை வெளிச்சத்தில் அவன் அரும்பு மீசையும் முகமும் இன்னமும் அவன் சிறுவனா இளைஞனா என்ற கேள்வியைத் தொக்கி நிறுத்தியது. அவன் அருகில் இருந்த பெண்ணும் அது போலத்தான். சிறுமி என்று சொல்லிவிடமுடியாத தேக அமைப்பு. ஆனாலும் சிறு ப்ராயம். லேசான நடுக்கமும் ஏதோ ஒரு பரபரப்பும் கண்களில் மிரட்சியுமாய் நின்று கொண்டிருந்தார்கள். மருள்மான்விழிகள் எனும் பதம் அவர்களின் கண்களுக்கு கச்சிதமான உவமையாக இருக்கும்.

என் பார்வை, அவனுக்கு சங்கடமோ பயமோ ஏற்படுத்தி இருக்கவேண்டும். அனிச்சையாக நொடிக்கு ஒரு முறை என்னைப் பார்த்தவாறு இருந்தான். கொஞ்சம் சின்னதாய் ஒரு முதுகுப்பை. அதை முதுகில் சரியாக மாட்டி இருந்தான். ஜிப்பை புடைத்துக்கொண்டு துணிகள் இருந்ததால் ஜிப்பில் இடைவெளி இருந்தது. அந்தப் பெண்ணின் கையில் ஒரு மஞ்சள் பையில் லெட்சுமிஜுவல்லர்ஸ்,பழனி என்று போட்டிருந்தது. இன்னொரு கட்டைப்பையில் கைப்பிடி இல்லாமல் துணியைக் கொண்டு கட்டி ஒருமாதிரி தேற்றிப் பிடித்திருந்தாள்.

பச்சாதாபம் அல்லது இவர்கள் ஓடி வந்திருப்பார்களோ என்பதைஉறுதிபடுத்தும் ஆர்வமோ, அல்லது இன்னும் பேருந்து வர நேரம் இருக்கிறது எனும் ஏதோ ஒன்றின் காரணமாக அவனிடம் பேசத்தொடங்கினேன்.

“எந்த ஊர்ப்பா தம்பி?”

அவன் பதில் சொல்லவில்லை. என்றாலும் என்னைப் பார்த்தான். அவனிடம் தான் கேட்கிறேன் என்பதை உறுதிபடுத்த நினைத்தானோ என்னவோ. மீண்டும் கேட்டேன்.

“உன்னத்தான்ப்பா.. இந்த நேரத்துல இங்க நிக்கிறியே..எங்க போகணும்”

கொஞ்சம் தைரியம் வந்தவனாய் எனக்கு அருகில் வந்தவன்..மெதுவாகப் பதில் சொன்னான்.

“நாங்க பழனில இருந்து வர்றோம்.”

“இது யாரு..அக்காவா?”

“இல்லண்ணா..என்னோட லவ்வர்ஸ்”

‘லவ்வர்ஸ்’ என்ற அவன் சொற்பிரயோகம் அவனின் வெகுளித் தன்மையைக் காட்டுவதாகவே உணர்ந்தேன். அவன் தொடர்ந்தான்.

அவங்க மாமாவுக்கு எங்க விசயம் தெரிஞ்சு ஒரே பிரச்சன பண்ணிட்டாரு. இந்தப் புள்ள பயந்து போச்சுண்ணா. அதான் எதுனாலும் பார்த்துக்குவோம்..வா போய்ரலாம்னுட்டு ஓடி வந்துட்டோம். கூட்டியாந்துட்டேன்ண்ணா.

உறுதி படுத்தி விட்டதால், இப்பொழுது தீர்க்கமாக அவளைப் பார்த்தேன். ஏதே ஒரு வேகத்தில் ஓடி வந்திருக்கிறாள். இப்பொழுது பயமும் அதைத் தாண்டி அவன் மீதான ஒரு நம்பிக்கையும் குழப்பமாகத் தெரிந்தாள்.

“இங்க யாராச்சும் இருக்காங்களாப்பா உனக்கு?”

“ஒ..ரு ஃப்ரெண்ட் இருக்காண்ணா, வர்ரேன்னு சொன்னான்..ஆளக்காணோம்”

அவன் திக்கித் திணறி சொல்வதில் உண்மை இல்லை என்பது போலத் தோன்றியது.

“தம்பி, இந்த ஊரு நீ நினைக்கிற மாதிரி இல்ல. யாரும் தெரிஞ்சவங்க இல்லேன்னா அவ்வளவுதான்ப்பா, தங்குறதுல்லாம் ரொம்ப கஷ்டமாப் போகும். அதுவும் இவ்வளவு சின்னப் பசங்களாஇருக்கீங்க..”

“சார்..பயமுறுத்தாதீங்க சார்..”

“அண்ணேன்னே கூப்புடுப்பா, நீ பழனின்னா நான் மதுர அவ்ளோதான். நிஜமாத்தான் சொல்றேன். எப்போ கிளம்புனீங்க?”

“நேத்து நைட்டு சார் சாரி..அண்ணா”

“ஒழுங்கா ஊருக்கு பஸ் ஏறுங்க..வீட்டுக்குப் போங்க..வேற எங்கயும்போய்ராதீங்க..கொஞ்ச நாள் போகட்டும். சரியா..”

சற்று நேரம் சென்னை குறித்தும் அவன் வயது குறித்தும் அந்தப் பெண் எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்கள் குறித்தும் விளக்கினேன்.

“சரிண்ணா..இங்கயே பஸ் வருமா.பழனிக்கு?”

அவனுக்கு வழியைச் சொல்லி அனுப்பவும், என் நண்பன் வந்த பேருந்து வரவும் சரியாக இருந்தது.

நண்பனோடு வீட்டிற்க்கு வந்து அலுவலகம் கிளம்பும் வரை, அந்த இருவரும் மறுபடியும் ஊருக்கே போய் இருப்பார்களா இல்லை சொல் பேச்சுக் கேட்காமல் வேறு எங்கும் போய் இருப்பார்களா என்றும், கூடாவே என்ன அவதிப்படுகிறார்களோ என்ற எண்ணமும் மனதின் ஓரத்தில் ஓடிக்கொண்டே இருந்தது. போனவராத்தில் ஒருநாளின் இரவில், யாரோ தேடி வந்தாங்க, வீட்ல ஆஸ்பத்திரில சேர்த்துருக்கோம், கொஞ்சம் பணம் குறையுது அப்பாக்கிட்ட சொன்னா தருவாருன்னு வந்தேன்னு ஒருத்தர் வந்தாருப்பா, நைட் தான் அப்பா வருவாருன்னு சொன்னதுக்கு ரொம்ப நேரமா தள்ளி நின்னுட்டு இருந்துட்டு போய்ட்டாரு என்ற மகனை குழப்பமாகப் பார்க்க, மனைவி, அதெல்லாம் எல்லார் வீட்லயும் போய் இப்பிடித்தான் சொல்லி காசு வாங்கிட்டுப் போயிருக்காங்க என்றதும் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தாலும் இன்று வரை ஒருவேளை உண்மையிலேயே உதவி தேவைப்பட்டிருக்குமோ என்று தோன்றும். ஏனேனில் அதன் பிறகு அவர் வரவே இல்லையே. இப்படி யார் எவர் என்று தெரியாவிட்டாலும் சில காட்சிகளும் நிகழ்வுகளும் மனதை அரித்துக் கொண்டே இருக்கின்றன. இது குறித்து ஊரில் இருந்து வந்த நண்பனிடம் சொன்னபொழுது, தமிழ் ஆசிரியரான அவன் என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே, இதெல்லாம் இன்றைக்கு நேற்றாக நடப்பதில்லை, காலங்காலமாக இருந்துவரும் உணர்வு என்று சொல்லி ஒரு பாடலைச் சொன்னான்.அந்தப் பாடலின் விளக்கம் தெரிந்த பின் மிக ஆச்சர்யமாய் இருந்தது. பாடலை முதலில் சொன்னால் சரிவரப்புரிமடாமல் போகும் சொற்கள் இந்த விளக்கத்தோடும் மேற்சொன்ன நிகழ்வுகளோடும் ஒப்பிடிப்பார்த்தால், எளிதாகப் புரிந்தது

விளக்கம் : 

கழைக் கூத்தாடிகள் மூங்கிலை நட்டு, கயிறு கட்டி,அதன் மேல் நின்று ஆடும் போது அடிக்கப்படும் பறை ஓசை போல, வாகை மரத்தின் முற்றிய (நெற்று)கிளைகள் காற்று அடிக்கும் போது அசைந்து ஒலிக்கும். அப்படியான அடர்ந்த மூங்கில் காட்டு வழியே நடந்து போய்க் கொண்டிருக்கும் இந்த இருவரில், வில் வைத்திருப்பவனின் கால்களில் கழல்கள் இருக்கின்றன. வலையணிந்த மெல்லிய அடி எடுத்து நடக்கும் அந்தப் பெண்ணின் கால்களில் சிலம்புகள் இருக்கின்றன.ஆகையால் இருவரும் திருமணமாகதவர்கள். இப்படி இந்த கொடிய காட்டின் வழிச் செல்கின்றனரே..இவர்கள் யாரோ?. யாராயிருந்தாலும் இவர்களிருவரும்மிகவும் இரக்கத்திற்குரியவர்கள்.

குறிப்பு : திருமணம் ஆனாதும் ஆணின் கழலும் பெண்ணின் காற்சிலம்பும் அகற்றப்பட்டு விடுவதாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

சிறப்புக் குறிப்பு : மூங்கில் காட்டில் காற்றின் சலசலப்பை பறையின் ஓசையோடு ஒப்பிட்டது. ஒரு வித பய உணர்வை ஏற்படுத்தும் குறிப்பு. உளவியல் சார்ந்த ஓர் அற்புதமான சங்கப் பாடல்.

பாடல்

வில்லோன் காலன கழலே. தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே. நல்லோர்
யார்கொல்? அளியர் தாமே. ஆரியர்
கயிறு ஆடு பறையின், கால்பொரக் கலங்கி
வாகை வெண்நெற்று ஒலிக்கும்
வேய்பயில் அழுவம் முன்னி யோரே.

பெரும்பதுமனார் என்ற புலவர் பாலைத்திணையில் பாடிய அற்புதப் பாடல். சூழலை உணர்ந்து பொருந்தி பாடலைப் படிக்கும் பொழுது கண்முன் காட்சிகள் விரிவதை தவிர்க்க முடியவில்லை.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 16: தெறூஉம் தெய்வம் - நர்சிம்
 2. மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 15: அளியள் - நர்சிம்
 3. மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 14 : முலையிடைப் பள்ளம் பெருங்குளம் ஆனதே - நர்சிம்
 4. மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 13 : உன் சும்மா அழகையே கண்ணால் தாண்டுதல் அரிய காரியம். - நர்சிம்
 5. மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 12. பையுள் மாலையில் எமியமும் தமியரும். – நர்சிம்
 6. மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 11. “நெசமாவா சொல்ற?” - நர்சிம்
 7. மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 10: அறத்தொடு நிற்றல் - நர்சிம்
 8. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 9 : செங்காற் பல்லியும் உகிர்நுதி ஓசையும். - நர்சிம்
 9. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 8 : ளாக்கம்மா கையைத் தட்டு - நர்சிம்
 10. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 6 : நீயலேன் – நர்சிம்
 11. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 5 : பூ உதிரும் ஓசை - நர்சிம்
 12. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 4 : பூவிடைப்படினும் யாண்டு கழிந்தன்ன – நர்சிம்
 13. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 3 : ரோஜா மொக்கும் குருவித்தலையும். - நர்சிம்
 14. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 2 : உயிரை வாங்கும் Possessiveness - நர்சிம்