Tired Face Photos, Download The BEST Free Tired Face Stock Photos & HD  Images“ தலைவரு வெளிநாட்டுல இருந்து வந்த பூரிப்பு மொகத்துல தெரியும்னு பாத்தா, இப்பிடி சோகமா  வாடிப்போய் இருக்கே, என்ன ஆச்சு”

அவ்வளவுதான். இந்தக்கேள்விக்காகவே காத்திருந்தது போல் ஆரம்பித்தாள்.

“எங்க? வர்றவரைக்கும்தான். வந்துட்டாருனா அய்யோ மறுபடியும் போய்ருவாரே, இன்னும் இத்தனை நாள்தான் இருக்கேன்ற நெனப்புலயே பாதி ஆவி போய்ருது.”

“அட”

“ஆமா, ஆனா போய்த்தான ஆகணும் பாவம்.. ஒரு குடும்பத்தக் காப்பாத்தவே நாக்கு தள்ளும், இதுல அக்கா, தம்பி, வீடுனு எல்லாருக்கும் செஞ்ச கடன எல்லாம் எல்லாம் கட்டிட்டு அப்பறம்தான் நாங்க நிம்மதியா இருக்க முடியும்.”

”சரி விடு, கொஞ்ச நாள் தான” எனும் ஆறுதலுக்கு சட்டென வந்தது பதில்

“அய்ய, நான் என்னயப்பத்தி கவலப்படல, பாவம் நான் இல்லாம அவரு தனியா அங்க எப்பிடி சங்கடப்பட்டுக்கிட்டு இருக்காறோன்னுதான். நல்லா சாப்புட்டு பழகிட்டு அங்க தனியா எப்பிடி கஷ்டப்படுறாருன்ற நெனப்புதான் பாதி நேரம்”

குடும்பத்திற்காகப் பொருளீட்டும் பொருட்டு வெளியில் இருக்கும் துணையை நினைத்து இப்படி வருத்தப் படுவது ஒருபக்கம் எனில், தனியாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருப்பவர்களின் வருத்தமும் , தான் இல்லாமல் எப்படி தன் துணை பிரிவால் வருந்துகிறாரோ எனும் வருத்தம் தான் தன் தனிமையைவிடவும் அதிகம் நோய்மையைத் தருவதாக கூறுவர்.

விரும்பி ஏற்கும் தனிமை சொர்கத்தை விட மேலானது. தள்ளப்படும் தனிமை நரகத்தை விட மோசமானது. 

சில அங்கலாய்ப்புகளுக்குப் பெரிதாக ஆறுதல்கள் ஏதும் இருப்பதில்லை. கேட்டுக்கொள்வது மட்டுமே ஒரே ஆறுதல். அதிலும் தனக்கு பிரிவுத்துயர் எனும் வருத்தம் வருவதை சற்றுத் தள்ளி வைத்துவிட்டு, தான் இல்லாமல் அங்கு எபப்டி எல்லாம் கடினமான பொழுதுகளைக் கழிக்கிறார் நம் துணை எனும் வருத்தம் மனதை அரிக்கத் துவங்கினால், அது தரும் பதைப்பும் துக்கமும் அடர்த்தியானவை.

ஒரு பாடல் நினைவிற்கு வருகிறது.  அந்ததப்பாடல் வரிகளை எப்போது கடந்தாலும், பையுள் என்ற சொல்லும், குறிப்பாக எடுத்தாளப்பட்ட அந்த உவமை, சொற்கள் எல்லாம் சேர்ந்து ஏதேதோ நினைவுகளைக் கிளறிவிடும். மிக மென்மையான பறவை, வெளவால் எனும்போதே, அந்த நொதுநொதுவென்ற பஞ்சுபோன்ற உடலமைப்புக் கொண்ட வெளவால்கள் ஓர் அறைமுழுக்க தொங்கிக்கொண்டிருந்த அந்தப் பாழடைந்த வீட்டின் நினைப்பும், அந்த இருள் சூழலும் நினைவிற்குள் வந்துவிடும். போலவே, அந்த ஊதுலை எனும் கருவி. 

19 of the Cutest Bat Speciesகொல்லன் பட்டறையில் பயன்படுத்தப்படும் ஊது உலை. தோலால் செய்யப்பட்டு, காலால் மிதித்து உலை கொதிக்கச் செய்யும் கருவி. எப்படியாகப்பட்ட கொல்லன் பட்டறை எனில், சுத்துப்பட்டில் இருக்கும் ஏழு ஊருக்கும் அந்த ஒரு பட்டறை தான். எனில், ஓய்வே இல்லாமல் சதா மிதிபட்டு, உலையைக் கொதிக்கவைத்துக்கொண்டே இருக்கும் கருவி. அப்படி அது மிதிபடும்போது, தோல் சுருங்கி விரிவது, இதயத்துடிப்பு போன்று காட்சியளிக்கும் எனும் கற்பனை என்னை தூங்கவே விடாது.

போலவே இந்தப்பாடலில் வெளவாலின் சிறகைக் குறிப்பிட்டது. மென்மையான வெளவாலின் உடலுக்கு, அவ்வளவு கடினமான பெரிய சிறகு. பறக்கும்போது அதன் சிறகசைப்பை யோசித்தால், கொல்லன் ஊது உலை தோல் சுருங்கி விரியும் காட்சி போலத்தான் இருக்கும், எனக்கு. 

பழுத்த மரத்தைத் தேடி வெளவால் போகும் மாலை வேலை என்பது மிகுந்த துன்பம் தரக்கூடியது என்கிறாள்.

உண்மையில், பரபரப்பான பகல் வேளைகளில் வேலை நிமித்தம் பொழுது ஓடிவிடும், அந்தி மங்கும் மாலைகள், குறிப்பாக சூரியன் மறையும் கீழ்வானத்தைப் பார்க்க நேர்ந்தால், பிரிவின் நிமித்தங்கள் மெல்ல தலைக்காட்டத் துவங்கும். பிடித்தமானவர்களுக்குப் பிடித்தமான உணவை நாம் தனியாக உண்ண நேர்கையில் அது தொண்டையை விட்டு இறங்க சற்று நேரம் எடுப்பது போலத்தான் இந்த அந்தி மாலையில் பிரிந்திருப்பவர் நினைப்பு வந்துவிட்டால், அதிலிருந்து இறங்கி வர சற்று நேரம் பிடிக்கும்.

அதனால்தான் பையுள் மாலை என்கிறாள் தலைவி. பையுள் என்றால் துன்பம். துன்பமிகு மாலை.

இந்தப்பாடலில் பின்வரும் இந்த இரண்டு சொற்களை பாடலாசிரியர்கள் எப்படி விட்டு வைத்தார்கள் என நினைப்பதுண்டு. குறிப்பாக, கவிஞர் தாமரை எப்படி விட்டுவைத்தார்  என்பது வியப்பாக இருக்கிறது.

ஆம், எமியம், தமியர். இந்த இரண்டு சொற்கள்.

எமியம் என்றால் தனியாக இருக்கும் யாம், நான் எனும் பொருள், தலைவித் தன்னை எமியம் என சொல்லி, தன்னைப் பிரிந்து தனிமையில் எங்கோ இருக்கும் தலைவனை தமியர் என்கிறாள். அற்புதமான சொல்லாட்சியல்லவா. !

வலிமையான சிறகையுடைய வெளவ்வால் பறவை பழுத்த மரத்தை அடையும் துன்பமிகு மாலைவேலையில் தனிமையில் இருக்க, அங்கு எங்கோ பொருள்தேடப்போனத் தலைவனும் தனிமையில் இன்பமாகவா இருக்கப்போகிறார், அவரும் வருந்திக்கொண்டுதான் இருப்பார். ஏழு ஊர் மக்களுக்கான கொல்லன்பட்டறையில் மிதிபடும் தோல் துருத்தி, உலைக் கருவிபோல் என் நெஞ்சு இடைவிடாது அவர் வருந்துவாரே என்ற நினைப்பில் எல்லை இல்லாமல் வருந்திக்கொண்டே இருக்கிறது

என்கிறாள்.

உவமைக் காட்சிகளும் சொல்லாட்சியும், வரிகளும்  இடைவிடாது சுருங்கி விரியும் அந்த  துருத்தியும் உங்கள் மனதைவிட்டு அகல சிலகாலம் பிடிக்கலாம். 

 

பாடல்

Feeling Lonely? You're Not Alone | Psychology Todayதாஅவல் அஞ்ச்சிறை நொப்பறை வாவல் 

பழுமரம் படரும் பையுள் மாலை

எமியம் ஆக ஈங்குத் துறந்தோர்

தமியர் ஆக இனியர் கொல்லோ?

ஏழூர்ப் பொதுவினைக்கு ஓரூர் யாத்த

உலைவாங்கு மிதிதோல் போலத்

தலைவரம்பு அறியாது வருதும்என் நெஞ்சே !

 

-கச்சிப்பேட்டு நன்னாகையார்.

குறுந்தொகை :172

*

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 16: தெறூஉம் தெய்வம் - நர்சிம்
  2. மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 15: அளியள் - நர்சிம்
  3. மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 14 : முலையிடைப் பள்ளம் பெருங்குளம் ஆனதே - நர்சிம்
  4. மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 13 : உன் சும்மா அழகையே கண்ணால் தாண்டுதல் அரிய காரியம். - நர்சிம்
  5. மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 11. “நெசமாவா சொல்ற?” - நர்சிம்
  6. மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 10: அறத்தொடு நிற்றல் - நர்சிம்
  7. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 9 : செங்காற் பல்லியும் உகிர்நுதி ஓசையும். - நர்சிம்
  8. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 8 : ளாக்கம்மா கையைத் தட்டு - நர்சிம்
  9. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 6 : நீயலேன் – நர்சிம்
  10. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 5 : பூ உதிரும் ஓசை - நர்சிம்
  11. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 4 : பூவிடைப்படினும் யாண்டு கழிந்தன்ன – நர்சிம்
  12. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 3 : ரோஜா மொக்கும் குருவித்தலையும். - நர்சிம்
  13. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 2 : உயிரை வாங்கும் Possessiveness - நர்சிம்
  14. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 1 : வில்லோன் காலன கழலே - நர்சிம்