நீண்ட காலத்திற்குப் பிறகு பார்க்கிறேன் செந்திலை. பார்த்தமாத்திரத்தில் “நெசமாவாச் சொல்ற” என்று சொன்னதும் சிரித்துவிட்டான். 

“இன்னுமாடா மறக்கல? இருவது வருசம் ஆகிருச்சேடா”

“மறக்குறமாதிரியாடா கேட்ட, அஞ்சு நிமிசத்துக்குள்ள ஆயிரம் தடவ, ச்சை, நசநசனு”

அலைபேசியின் திரையைக் காட்டியதும் செல்லமாகக் கோவித்தும் கொண்டான். நெசமாவா செந்தில் என அவன்ப்பெயரைப் பதிந்திருந்தேன்.

அப்போது அவன் படுத்திய பாடு அப்படி.

 “நெசமாவாச் சொல்ற? நீ பாத்தியா? ஹேமா தானா அது”

முதல் இரண்டு முறைதான் பதில் வேண்டிக் கேட்டிருந்தான். அடுத்தடுத்த பத்து முறைகளிலும் கண்கள் விரிய ஆர்வம் மின்ன, பதிலுக்கு காத்திராமல் அவன் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக்த்தான் முணுமுணுத்தான் செந்தில்.

கண்ணாளனே பாடலைப் பார்த்துக்கொண்டே, நாயக்கர் மஹாலைப் பார்த்து வெகு ஆண்டுகள் ஆகிவிட்டன என சொன்ன நொடியில்,சட்டென எழுந்து, வா போவோம் என வண்டியைக் கிளம்பிவிட்டோம்.

தெற்குவாசலில் இருந்து கீழவாசலுக்குப் போய்க்கொண்டிருக்கும்போதே மஹாலின் அந்தத் தூண்கள் மனதில் நிழல் போல் வரத்துவங்கிவிட்டன. மதுரைக்கு சுற்றுலா என்ற பெயரில் வரும் அத்தனை மக்களும், வெளியூர்க்காரர்களும், மதுரையில் வசிப்பவர்களை விட அதிகமுறை மஹாலையும் தூண்களையும் பார்த்திருப்பார்கள்.

“இங்குதானே இருக்கிறது” என நினைக்கும் உள்ளூர்க்காரர்கள் அதிகம் மெனக்கிடுவது இல்லை. இதோ, நாங்களே நாளில் இரண்டு முறை கீழவாசலைக் கடந்தாலும், நாயக்கர் மஹாலுக்குள் நுழைந்ததே இல்லை. 

இந்த ‘இங்குதானே’ எனும் சொல், ஜெயகாந்தன், விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியம் மறைந்த பொழுது, ”பார்க்க போகலாம் என்று நினைத்தேன், இங்கு தானே இருக்கப்போகிறார் என்று நினைத்தது எவ்வளவு பெரிய தவறாகிவிட்டது” என்று சொல்லி இருப்பார். ஆம், இங்குதானே, நம்மவர்தானே என நாம் நினைத்துக் கடக்கும் பொழுது காலம் நம்மருகில் நின்று நகைத்துக்கொண்டிருக்கலாம் தானே !

சரி அதை விடுங்கள்.

செந்திலின் இந்த “நெசமாச் சொல்ற” எனும் உணர்ச்சி மிகு சொற்களுக்கும், என்ன செய்வதென்றே தெரியாமல், மஹாலுக்கு உள்ளேயும் போகவிடாமல், அங்கு இருந்த கரும்புச்சாறு மிஷின் முன் நின்று “இந்தா” என வாங்கிக் கொடுத்தான், லேசில் எதையும் வாங்கித் தராதவன். 

வெய்யிலுக்கு குளுமையாக இருந்தது நாயக்கர் மஹாலின் முகப்பும் நிழலும். கரும்புச்சாறு இன்னும் குளுமையைக் கூட்டியது மனதிற்கு. ரசித்துப் பருகிக்கொண்டிருந்தேன்.

ஆனால், வரும்வழியில் செந்திலிடம் நான் எதேச்சையாகச் சொன்ன ஒரு சொல், அவனை அப்படியே வேறு ஒரு மனநிலைக்குள் தள்ளும் என நான் எதிர்பார்த்திருக்கவில்லை. 

”நெசமாவா சொல்ற மாப்ள”

“டேய் என்னடா பெரிய நசையாகிப் போச்சு ஒங்கூட எழவு”

“இல்லடா இல்லடா போனவாரம் இப்பிடித்தான வேணும்னே அய்யப்பன் ஓட்டினான் அதாண்டா”

எனக்கும் பாவமாகத்தான் இருந்தது. 

ஹேமா எங்களோடு படித்தவள். சேர்ந்துதான் சுற்றுவோம். ஆனால் செந்தில் திடீரென காதல் கீதல் என்றதும் பயந்து அல்லது கோவித்துக்கொண்டு திட்டிவிட்டுப் போய்விட்டாள். இனி முகத்தில் முழிக்காதே என்று ஒரு பேச்சிற்குச் சொல்கிறாள் என்றுதான் நாங்களும் நினைத்தோம். உண்மையாகவே மொத்தமாக்த் தவிர்த்து, கல்லூரி முடியும் முன்பே வேறு ஊருக்கு மாற்றிக்கொண்டு போய்விட்டாள்.

காதலைச் சொல்வது அவ்வளவு பெரிய பாவம் ஒன்றும் இல்லையே எனும் இந்த வாக்கியத்தை எத்தனை எத்தனை விதமாகக் கேட்க முடியுமோ அத்தனை அத்தனை விதமாகக் கேட்டுக்கொண்டிருந்தான் செந்தில். 

இப்போது வேலைக்கு சேர்ந்தே இரண்டு மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. ஓடை போல் ஓடிக்கொண்டிருந்தவன் வாழ்வில் கல்லெறிந்து விட்டேன். 

“ஹேமா வந்துருக்குடா, அதுவும் எங்க ஏரியாவுலயே குடி வர்றாங்க போல, அவங்கப்பனப் பார்த்தேன்.”

Page 16 | Surprised Guy Images - Free Download on Freepikஅவ்வளவுதான். வண்டியைச் சரேல் என்று நிறுத்தி திரும்பிப் பார்த்தேன்.  “வெய்யில்டா, ஓட்டு” என்றதற்கு மெதுவாக உருட்டிக்கொண்டே நெசமாவா என முணுமுணுத்தவன், அதன்பிறகு இந்த நெசமாவா என்பதையே தேசிய கீதம் போல் உச்சரிக்கத் துவங்கிவிட்டான்.

ஒவ்வொருமுறையும் அவன் கண்கள் மினுங்கின. அவனால் ஒருநிலையில் இருக்க முடியவில்லை. இருப்புக்கொள்ளவில்லை. 

“நீயே பேசுனயா இல்ல வேற யாரும் பேசுனாய்ங்களாடா அவங்கப்பாக்கிட்ட?” 

நானேதான் என்பதை கறும்புச்சாறு பருகல் தடைபடாதவாறு தலையாட்டினேன்.

“அப்ப கண்டிப்பா வந்துருவாய்ங்கல்ல ஏரியாவுக்கு”

என்ன நினைத்தானோ தெரியவில்லை, 

”பேண்ட் பிட்டு செம்மயா இருக்கும்டா இங்க” என ஜவுளிக்கடல்,கடை என பலகைகள் நிறைந்த ஹாஜிமூசாவுக்குள் அழைத்துக்கொண்டு போய் நான்கைந்து எடுத்தான். எல்லாம் எனக்குத்தான் என்பதும் அதைவிட முக்கியமாய் “என்ன வேணாலும்  கேளு மாப்ள, நீ வேலைக்குப் போகுற வர நாந்தான் இனிமே” எனும் உணர்வழுத்த நிலை, அவன் அவனாக இல்லை என்பதும் அதைவிட முக்கியமாக அத்தனை ஆண்டுகளாக அவன் ஹேமா மீது வைத்திருந்த காதலின் அடர்த்தியும் புரிந்தது.

அதன்பிறகு என்னுடைய அக்காவின் மூலம் பேசி, ஒருவழியாக காதல் கீதல் எல்லாம் இல்லாமல் நேரடியாக திருமணம் நடந்தேறியது எல்லாம் தனிக்கதை.

ஆனால் இன்றுவரை அந்த “நெசமாவா” எனும் அவனுடைய அந்த வியப்பும் மகிழ்ச்சியும் மறக்கவே முடியாத ஒன்று. 

மருத நிலத்தின் தலைவி ஒருத்தி இப்படித்தான், இவனைப்போல் அவ்வளவு உணர்வு நெகிழ்ச்சியில், தன் தலைவன் அவளை நோக்கி வரும் செய்தியைச் சொன்ன பாணனிடம், மேற்சொன்ன நசையாக, உண்மையாகவா, நீ பார்த்தாயா அல்லது கேட்டாயா எனக் கேட்டு, அவனை பெரும் செல்வச் செழிப்புடன் வாழ்க என மனதார வாழ்த்தும் பாடல், செந்தில் எனக்கு கரும்புச்சாறு, பேண்ட் பிட்டுகளோடு முடித்துக் கொண்டான். தலைவியோ, பாணா, நீ சொல்வது உண்மையா, அப்படி எனில், வெண்மையான தந்தங்களை உடைய யானை ஆற்றில் மூழ்கித் திளைக்கும் தங்க நகரமான பாடலிபுத்திர நகர் உனக்குக் கிடைக்கட்டும்”

என வாழ்வாங்கு வாழ்த்துகிறாள், உணர்ச்சிவசத்தில். 

சொற்தேர்வுகள், சொல்லாட்சியும் மிக்க அற்புதப் பாடல் இது. இதில் வரும் நசை மேற்சொன்ன பொருளில் அல்லாமல் விருப்பம் என்ற பொருளில் இடம்பெறுவது ஒரு நகைமுரண்.

 

பாடல் :

 

Waiting for his LOVE, hug, wait, life, love, sad, happy, kiss, HD wallpaper | Peakpxநீகண் டனையோ கண்டார்க்கேட் டனையோ?

ஒன்று தெளிய நசையினம் மொழிமோ

வெண்கோட்டு யானை சோணை படியும்

பொன்மலி பாடலி பெறீஇயர்

யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே.

 

-படுமரத்து மோசிகீரனார்

குறுந்தொகை பாடல் : 75.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 16: தெறூஉம் தெய்வம் - நர்சிம்
 2. மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 15: அளியள் - நர்சிம்
 3. மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 14 : முலையிடைப் பள்ளம் பெருங்குளம் ஆனதே - நர்சிம்
 4. மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 13 : உன் சும்மா அழகையே கண்ணால் தாண்டுதல் அரிய காரியம். - நர்சிம்
 5. மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 12. பையுள் மாலையில் எமியமும் தமியரும். – நர்சிம்
 6. மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 10: அறத்தொடு நிற்றல் - நர்சிம்
 7. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 9 : செங்காற் பல்லியும் உகிர்நுதி ஓசையும். - நர்சிம்
 8. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 8 : ளாக்கம்மா கையைத் தட்டு - நர்சிம்
 9. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 6 : நீயலேன் – நர்சிம்
 10. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 5 : பூ உதிரும் ஓசை - நர்சிம்
 11. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 4 : பூவிடைப்படினும் யாண்டு கழிந்தன்ன – நர்சிம்
 12. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 3 : ரோஜா மொக்கும் குருவித்தலையும். - நர்சிம்
 13. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 2 : உயிரை வாங்கும் Possessiveness - நர்சிம்
 14. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 1 : வில்லோன் காலன கழலே - நர்சிம்