உன் பெயர்

இந்த இரவில் காலி அறையில் மாட்டிய கடிகாரம்.

File:Clock tower clock in night.JPG - Wikimedia Commonsசுகுமாரன். எழுதிய இந்த வரிகளை எப்போது நினைத்துக்கொண்டாலும் அப்படியே முழுவதுமாக நினைவை ஆக்கிரமித்துக்கொண்டுவிடும், இந்த வரிகளும் அது தரும் படிமமும்.

எட்டே சொற்கள். எவ்வளவு பெரிய கற்பனைக்குள் நம்மை இட்டுச் செல்லவல்ல சொற்கள். அலங்கார நகை செய்யும் முனைப்பு, ஒரு சிற்பியின் வேலைப்பாட்டு இறுதி நொடிகளின் அழகியல் என பார்த்துப் பார்த்து நெய்த செய்நேர்த்தி, இந்தச் சொற்கள்.

எல்லா இரவுகளும் அல்ல, வேலைப்பளு, உண்டமயக்கம் என இரவுகள் உறங்கச் செய்துவிடுகின்றன பெரும்பாலும். ஆனால் ஏதேனும் ஓர் இரவில், மறுநாளின் நிகழ்விற்காக காத்திருக்க்கூடிய இரவில் தான் ஏதேனும் ஒன்றின் நினைவு அசைத்துப்பார்க்கும். ஆக, இந்த, எனும் சொல். அடுத்து, நாளில் அல்ல, இரவில். காரணம் புரியும். காலி அறையில் மாட்டிய கடிகாரம். என்னவொரு நுட்பம் ! பொருட்கள் நிறைந்த அறையில் கடிகார முட்களின் சத்தம் ஒருபோதும் பொருட்படுத்தப்படுவதில்லை. காலி அறையில் அந்த நொடிமுள் சத்தம் பன்மடங்கிப் பெருகி எதிரொலுக்கும். குறிப்பாக இரவில். காதலரின் பெயர், அப்படியான ஒன்று எனும் படிமம். இதன் இன்னொரு கோணம், அவ்வளவு கவனமாகக் கேட்க வைக்கும் குவிமனம்.

Smiling Man Making A Phone Call While Drinking Coffee Stock Photo - Download Image Now - iStockரவி என்று ஒரு நண்பன் இருந்தான். அவன் காதல்வயப்பட்டிருந்த காலம் அது. ஏழெட்டு நண்பர்கள் இருந்த அறை. எந்நேரமும் அவ்வளவு சத்தமாக இருக்கும். பாட்டு ஒருபக்கம், சீட்டு ஒருபக்கம். அதுபோக பேசுபவர்கள் எல்லாமே சத்தமாகத்தான் பேசுவார்கள். ஒருவித கஜகஜப்பு, ஊரில் ரைஸ் மில் ஓடிக்கொண்டிருக்குமே, முதல் பத்து நிமிடங்களுக்குப் பிறகு காதுகள் அந்த ஓசைக்குப் பழகி இயல்பாகுமல்லவா, அப்படித்தான் அந்த அறையில் இருந்த எங்களின் செவிகள்.

அவ்வளவு களேபரங்கள், கேரம்போர்டு சண்டைகள், சாப்பாடு போதவில்லை என்ற வாக்குவாதங்கள் எல்லாம் நடந்துகொண்டிருக்க, ரவி மட்டும் அதே அறையில் ஏதேனும் ஒரு சுவரில் சாய்ந்துகொண்டு போனில் பேசிகொண்டிருப்பான். இந்த புறவுலக சத்தங்கள் அவனை ஒரு சதம் கூட பாதிக்கவில்லை என்பதுபோல் சன்னமாக சிரித்து பலவித முகபாவங்களைக் காட்டிப் பேசிக்கொண்டிருப்பான். அவன் பேசுவது அவனுக்கே கேட்காதவாரு பேசப்பழகி இருந்தான்.  பேச்சு என்றால் விடிய விடிய. ஒருபொழுதும் எங்களால் அவன் பேச்சு தடைபட்டதில்லை.

வேறு ஏதோ அலுவல் சம்பந்தப்பட்ட அழைப்பில், நான்கு நொடிகள் பேசுவதற்குள் மூன்று முறை எங்களை நோக்கி கத்தாதீர்கள் ஒன்றும் கேட்கவில்லை என்றான். பேசி முடித்ததும் மொத்தப் பேரும் அவன் மீது பாய்ந்து கேட்க, அவனுக்கே பதில் தெரியவில்லை.

யோசித்துப்பார்த்தால், அந்தக் கவனம், அந்தப் பிடித்தம், ஒன்றின் மீதான அதீதமான பற்று, காதல் இன்னபிற என்ன பெயர்கள் வைத்துக்கொண்டாலும் விடை, ஆர்வமும் ஆரம்பக்கால அதீத காதலும் தான் அந்த கவனித்திற்கான காரணி எனப் புரியலாம். ஏனேனில் அதே ரவி, பிரிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும்பொழுது, பேசுவது கேட்கவில்லை, சிக்னல் கிடைக்கவில்லை, இங்கு ஒரே சத்தமாக இருக்கிறது என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பதையும் பார்த்தோம்.

புறவயமான அத்தனையும் நிகழ்ந்து கொண்டு இருக்கும்பொழுது அகத்தின், அடியாழத்தில் ஏதேனும் ஒன்றின் நினைவு கனன்று கொண்டேதானே இருக்கிறது. ஓரு காயமோ, ஒரு சிரிப்போ, அழுது முடித்து இறுகி அணைத்துப் பிரிந்த நொடியோ, இன்னதுதான் என்ற எக்காரணமும் இன்றி, வந்த சுவடெயில்லாமல் மறைந்துபோன ஒருவரோ என ஏதேனும் ஒன்றின் நினைப்பு.

இந்த அகமன நிசப்தத்தைத் துல்லியமான விவரணைகளோடு பல சங்கப்பாடல்கள் கையாண்டிருக்கின்றன.

இந்தப் பாடல் அப்படியான ஒன்று. ஆழ்மனதின் அமைதியும், ஒருவருடைய நினைப்பும் ஆக்கிரமிக்கும்பொழுது, இலை உதிர்ந்து விழும் ஓசை கூட கேட்கிறதாம்.

வருகிறேன் என்று சொல்லிவிட்டு வராத தலைவனிடம், நீ வந்திருந்தால் நிச்சயம் எங்களுக்கு அந்த ஓசை கேட்டிருக்கும், ஏனெனில், ஊரே தூங்கிக்கொண்டிருந்த அந்த இரவில், வீட்டிற்கு அருகில் இருந்த மரத்தில் இருந்து பூ உதிர்ந்த சத்தம் கூட எங்களுக்குக் கேட்டது என தோழி, தலைவிக்காக தலைவனிடம் சொல்வதாக அமைந்த பாடல் இது.

இந்தப்பாடலிற்கு இன்னொரு கோணமும் உரை ஆசிரியர்கள் சொல்வார்கள்., அதாவது, இரவில் விழித்திருப்போம், நீங்கள் வரலாம் என தலைவனுக்கு தோழி குறிப்பால் உணர்த்துவதாகவும் பொருள் கொள்ளலாம்.

பாடல் :

கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சலமே-Romantic oil painting lovers on night field in tall grass by light of lanterns meeting starry night at sunset with big moon - Fantasy love art Modern impressionism painting. Stock Illustration | Adobe Stock

எம் இல் அயலது ஏழில் உம்பர்,

மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி

அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த

மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே.

 

கொல்லன் அழிசி

குறுந்தொகை : 138.

ஊரே உறங்கினாலும் நானும் தலைவியும் உறங்கமாட்டோம். எங்கள் இல்லத்திற்கு அருகே இருக்கும் மரத்தில் இருந்து, மயிலின் காலடி போன்ற அமைப்பில் உள்ள இலைகள் நொச்சிப்பூக்கள் உதிரும் சத்தம் எங்களுக்குக் துல்லியமாகக் கேட்கும்படி விழித்திருப்போம்.

மணிமருள் பூவின்என்ற சொல்லாட்சி ஓர் அற்புதம். 

இத்தகைய பாடல்கள் சொல்லும் செய்தி ஒன்றுதான். காதல்வயப்பட்டவர்களுக்கு இரவின் நிசப்தம் என்பது நினைவின் பேரிரைச்சல் என்பதே.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 16: தெறூஉம் தெய்வம் - நர்சிம்
  2. மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 15: அளியள் - நர்சிம்
  3. மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 14 : முலையிடைப் பள்ளம் பெருங்குளம் ஆனதே - நர்சிம்
  4. மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 13 : உன் சும்மா அழகையே கண்ணால் தாண்டுதல் அரிய காரியம். - நர்சிம்
  5. மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 12. பையுள் மாலையில் எமியமும் தமியரும். – நர்சிம்
  6. மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 11. “நெசமாவா சொல்ற?” - நர்சிம்
  7. மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 10: அறத்தொடு நிற்றல் - நர்சிம்
  8. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 9 : செங்காற் பல்லியும் உகிர்நுதி ஓசையும். - நர்சிம்
  9. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 8 : ளாக்கம்மா கையைத் தட்டு - நர்சிம்
  10. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 6 : நீயலேன் – நர்சிம்
  11. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 4 : பூவிடைப்படினும் யாண்டு கழிந்தன்ன – நர்சிம்
  12. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 3 : ரோஜா மொக்கும் குருவித்தலையும். - நர்சிம்
  13. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 2 : உயிரை வாங்கும் Possessiveness - நர்சிம்
  14. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 1 : வில்லோன் காலன கழலே - நர்சிம்