Buy WISDOM Custom 3D Wallpaper Hand Painted Blackboard Mural Pizza Shop KTV Cafe Restaurant TV Backdrop Pizza Wallpaper mur Online at Low Prices in India - Amazon.in”இப்ப எதுக்குடா இவ்ளோ அவசரமா இந்த வெய்யில்ல வரச்சொன்ன?”

நல்லவேளையாக மதிய நேரமாக அழைத்திருந்தான். மதியப்பொழுது என்பதால் அந்த காஃபி ஷாப்பில்  எங்களைத்தவிர யாருமே இல்லை. எதிரே கடல். அந்த வெய்யிலில்  பாலைவனம் போல் காட்சியளித்தது வியாபித்திருந்த மணல்.

நண்பனின் தம்பி. ஆனால் நண்பனை விட அதிக நெருக்கமாகப் பழகுபவன். அவன் காதலி, காதலியின் நட்புவட்டம் என நான்கைந்து பேர்.

வெளிநாட்டிற்குப் போகிறான். அதற்கான பார்ட்டிதான் இந்த மதிய உணவு.பீட்சா வைபவங்கள்.

“அட, இருண்ணே சொல்றேன்”

என மும்முரமாக மெனு கார்டைப் பார்த்து எல்லோருக்கும் தேவையானவற்றைச் சொல்லி, சிரித்து அனுப்பிவிட்டு, சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த அவன் காதலியையும் அவள் தோழியையும் காட்டினான்.

“வாங்க”

அவர்கள் இருக்கும் டேபிளில் போய் அமர்ந்தோம்.

அது கடலை நோக்கிப் போடப்பட்ட மேசை.

எவ்வளவு  மகிழ்ச்சியான சூழலாக இருந்தாலும் ஏதோ ஒரு பிரச்சனை என்பதை மனம் மிகச்சரியாக கணித்துவிடுமல்லவா, சரியாகவே உள்ளுணர்வு வேலை பார்த்திருந்தது.

ஒருவருக்கொருவர் கண்கள் பார்ப்பதைத் தவிர்த்து, கடல்,மணல் மற்றும் வெய்யில் என மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

நான், பீட்சாவின் வாசம் காற்றில் மிதப்பதை ரசித்துக்கொண்டிருந்தேன்.

மெளனத்தை உடைக்கும் விதமாக நானே,

“ஏண்டா, அப்ராட் போற பார்ட்டியா இல்ல ப்ரேக் அப் பார்ட்டியா ?”

“நல்லா கேளுங்க சார்” என அந்தத் தோழி துள்ளிக்கொண்டு பதில் அளித்தாள்..

Vegetarian Pizza On Wooden Table Restaurant Stock Photo 1153567591 | Shutterstockநண்பனின் காதலி, ரம்யாவும் நல்லப் பழக்கம்தான். அவளுடைய தோழி என அமர்ந்திருக்கும் இந்தப் பெண் புதிதாக இருந்தாள். ஆனால் மிக நீண்ட நாட்கள் பழகியவள் போல் பேசினாள்.

“இப்ப எதுக்கு சார் விட்டுட்டுப் போகணும், இத்தன வருசமா லவ் பண்ணிட்டு, எல்லாம் கரெக்ட்டா செட் ஆகி, கல்யாணம் பண்ணவேண்டிய ஸ்டேஜ்ல இப்பிடி திடீர்னு ஏன் தனியா விட்டுட்டுப் போகணும்?”

சிரித்தான்.

அவனுக்குப் பதிலாக நான் மாட்டிக்கொண்டு விட்டேன் என்பது போல் இருந்தது அவனுடைய சிரிப்பு.

”சிரிக்காதடா, நீ ரம்யாவக் கழட்டி விட்டுட்டு அங்க வெள்ளக்காரிய கரெக்ட் பண்ணிருவ, இல்ல ஆன் சைட் வர்ற நம்மூர் பொண்ண கரெக்ட் பண்ணிருவ, ஜாலியா இருந்துட்டு வருவ”

அவன் கையெடுத்துக் கும்பிட்டு “ஒன்ன மாதிரி ஒரு ஃப்ரெண்டு ஒவ்வொருத்திக்கும் இருக்கணும், நாட்ல எவனும் லவ்வே பண்ண முடியாதும்மா”

சிரித்தான்.

எனக்கோ, ரம்யாவிற்கோ சிரிப்பு வரவில்லை. அந்தத்தோழிக்கோ கடுங்கோபம் என்பதுபோல் முகத்தை வைத்திருந்தாள்.

அவனுக்கு ஒரு அழைப்பு வர எடுத்துக்கொண்டு வெளியே போனான்.

அவன் இருக்கும்வரை வாயைத் திறந்திருக்காத ரம்யா பேச ஆரம்பித்தாள்.

“எத்தன தடவ சொல்றது, லூசுமாதிரி பேசாதனு”

ஆனால் தோழி சமாதானம் ஆகவில்லை, என்னிடமே பேசினாள்.

“நீங்களே சொல்லுங்க சார், கல்யாணம் பண்ணி கூட்டிட்டுப் போகவேண்டியதுதான, இவளுக்குப் புரியமாட்டேங்குது, இத்தனைக்கும் ரெண்டு மாசம் முன்னாடி எங்க ரூம் மேட் ஒருத்திக்கு”

என நிறுத்தி ரம்யாவைப் பார்த்து “நம்ம சுமி மேட்டர்”  என சொல்லிவிட்டு என்னைப் பார்த்துத் தொடர்ந்தாள்.

“அவ்ளோ க்ளோசா பழகிட்டு, எல்லாம் பண்ணிட்டு வெளிநாடுகூட இல்ல, இங்க இருக்குற பெங்ளூருக்குத்தான் போனான், அப்பிடியே மறந்துட்டுப் போய்ட்டான்”

சட்டென ரம்யாவிடம் இருந்து பதில் வந்தது “இவன் அப்பிடி போகமாட்டான், அவனால முடியாது”

சூழல் புரிந்தது.காலங்காலமாக இருக்கும் அதே நம்பிக்கை, நம்பிக்கை தகர்ப்பு சமாச்சாரம்தான். ஆனால் பொதுவாக, தோழிகள், மற்றவர்கள் நம்பிக்கைத்தருவார்கள், ரம்யாதான் நியாயப்படி மூக்கைச் சிந்தி, அவன் போய்விட்டால் என்னாவது என யோசிக்க வேண்டும். இங்கேத் தலைகீழாக இருக்கிறதே எனத் தோன்றியது. அதைவிட ஆச்சர்யம் ரம்யாவின் குரலில் இருந்த தீர்க்கம்.

ரம்யா, முன்னே வைக்கப்பட்டிருந்த பீட்சாவைக் காட்டிக்கொண்டே ஆரம்பித்தாள்.

“இதோ, அவன் எந்த ஒலகத்துக்குப் போனாலும் இந்த பீட்சாவத் திங்காம இருக்கமாட்டான்ல, இப்பிடி இழுக்கும்போது வர்ற இந்த சீஸப் பாக்கும்போது அவனுக்கு என் நெனப்பு ஒடனே வந்துரும்”

குரலில் இன்னும் தீர்க்கம் கூடியது.

“ஒங்களுக்கு ஒரு ரோஜாப் பூவப்பாத்தா என்ன தோணும்?”

கையை விரித்தேன். அதற்கு இரண்டு பொருட்கள். 1. நீயோ சொல்லும்மா ரோஜாவப்பாத்தா ரோஜா தான நினைவுக்கு வரும் 2. காலம்போன காலத்துல இனி ரோஜாவப்பார்த்தா என்ன பாக்காட்டி என்ன.

புரிந்திருக்கும் போல அவளுக்கு.

“ஆனா எனக்கோ அவனுக்கோ குருவியோட தல தான் நினைவுக்கு வரும் தெரியுமா? ஒரு நாள் ஹாஸ்டல் ரூம்ல ஒரு குருவி இங்கயும் அங்கயும் பறந்து டக்குனு ஃபேன்ல கட் ஆகி தலை மட்டும் துண்டா வந்து கால் பக்கத்துல விழுந்தது. ரத்தத்தோட அதப்பாக்க பாக்க ரோஜா மொக்குமாதிரியே இருக்குன்னு சொல்லிட்டே இருந்தேன் இவண்ட்ட.. இப்பவர ரோஜாவப்பார்த்தா குருவித்தலைதான்”

இனி எனக்கும் அப்படித்தான் தோன்றும் எனபது போல் இருந்தது அந்தக் காட்சி.

“இதோ, இந்த ஷேப்..இதப்பாத்த ஒடனே என்ன என்னல்லாம் நாங்க பேசிருக்கோம்னு எங்களுக்குத்தான தெரியும்” என பீட்சாவின் முக்கோணவடிவைக் காட்டிச் சிரித்தாள்.

அவள் கன்னங்கள் சிவந்தன. உதடுகள் தடுமாறின.

“இவ்வளவு ஏன், இதோ இந்த பெப்பர் பாட்டில்” என எடுத்து உள்ளங்கையில் வைத்து அழுத்திக்கொண்டு

“இத வச்சு நாங்க எவ்ளோ பேசி இருப்போம்”

சட்டென அவள் கண்களில் ஒருவித கனிவு.

எதிரே கடற்கரையில் இரண்டு பேர் நடந்து போய்க்கொண்டிருக்க,

“அதோ, அந்த மாதிரி யாராவது ஜோடியாப் போறதப் பார்த்தா அவனுக்கு என் நெனப்புத்தன வரும், வேற யார் நெனப்பும் வராது”

சிரித்து ஆமோதித்தேன்.

“எங்க வேணாலும் அவன் போகட்டும் யார்க்கிட்ட வேணாலும் அவன் பேசட்டும், ஆனா கிட்டத்தட்ட எல்லா திங்ஸ்லையும், ஏன் எக்ஸ்கியூஸ்மினு யாராவது சொன்னாக்கூட அவனுக்கு என் நெனப்புத்தான் வரும், அவ்ளோ பெரிய கதை இருக்கு அதுக்குப் பின்னாடி”

பேசிக்கொண்டே ஆத்திரத்தை போக்கும் விதமாக மொத்த பெட்டியையும் தீர்த்துவிட்டாள். நடு நடுவே பெப்பர் மிளகுத்தூள் என ஜமாய்த்துக்கொண்டிருந்தாள். ட்விட்டரில் இப்படித்தான் எந்த உணர்வு அதீதமாக இருந்தாலும் உடனே செய்யவேண்டியது சோறு தின்பது என்பார்கள்.

உதட்டின் ஓரம் இருக்கும் சீஸை நாகரீகமாகத் துடைத்துக்கொண்டே தன் தோழியிடம் “இப்பவாது புரியும்னு நினைக்கிறேன், இன்னொன்னு சொல்லவா, அவன் போனதும் ரெண்டே நாள்ல என்ன வரச் சொல்லுவான், இல்லாட்டி முடியலன்னு வந்துருவான், நான் போகவேணாம்னு சொன்னா அவன் கேப்பான், ஆனா எனக்கு ஒரு கில்ட்டி ஃபீல் இருந்துட்டே இருக்கும்”

மிகத் தெளிவான சிந்தனையோடும், மிக இயல்பாகவும் இருக்கிறார்கள் இப்போதைய தலைமுறைப் பெண்கள் எனத் தோன்றியது.

போன் பேசிவிட்டு சிரித்துக்கொண்டே வந்தவன், “இங்கயே இன்னொரு செம ஆஃபர், கொஞ்சம் கம்மிதான், ஆனா ஒங்கூடயே இருக்கலாம்”

என்று சொல்லிக்கொண்டே அமர்ந்தான்.

நானும் அந்தத் தோழியும் சிரித்துக்கொண்டே “செம்ம, அப்பறம் என்ன” என கையைக் கொடுத்தோம்.

ரம்யா ஒன்றுமே சொல்லாமல் அவனுக்கு வைக்கப்பட்டிருந்த பீட்சாப் பெட்டியைத் தன்பக்கமாக இழுத்துக்கொண்டே என்னைப் பார்த்து கண்களால் எப்படி என்பதுபோல் கேட்டு புருவம் உயர்த்தினாள். புருவங்கள் சிரித்தன.

வீட்டிற்கு வந்து வெகுநேரம் ஆகியும் ரம்யாவின் அந்த புருவ உயர்த்தலும் சிரிப்பும் தற்காலப் பெண்களின் நம்பிக்கையும் மனதில் ஓடிக்கொண்டே இருந்தன. சினிமாப்பாட்டின் நடுவரியை எங்கேனும் கேட்டு முதல் வரிகள் என்ன என யோசித்துக் கண்டுபிடிக்கும் வரை மனம் நிலைகொள்ளாமல் இருக்குமே அப்படித்தான் இதே சூழலில் ஒரு பாடல் இருக்கிறதே என தேடி எடுக்கும் வரை இருந்தது.

ஆம், பிரிவின் போது நம்மை மறந்தாலும் நாம் சார்த பொருட்களை, சேர்ந்து கேட்ட பாடலை, பார்த்தத் திரைப்படத்தை, ஏன் ஏதேனும் ஒரு சொல்லைக் கேட்ட மாத்திரத்தில் நினைவுகள் படரத்துவங்கி, பார்க்க வேண்டும் என ஆவலைத் தூண்டும் வல்லமை இருக்கும்வரை தூரதேசக் காதல்கள் நிலைபெறும்.

டிவியில் நகைக்கடை விளம்பரம். பிரபுவின் குரல் ஒலித்துக்கொண்டிருந்தது. உண்மைதான்.

 

45 Paint Class Ideas Love & Hearts | painting inspiration, canvas painting, canvas artஅந்தப் பாடல்

 

ஆம்பற் பூவின் சாம்பல் அன்ன

கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ

முன்றில் உணங்கல் மாந்தி, மன்றத்து

எருவின்நுண் தாது குடைவன ஆடி,

இல் இறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும்

புன்கண் மாலையும் புலம்பும்

இன்றுகொல் தோழி அவர்  சென்ற நாட்டே 

 

-மாமிலாடன்

குறுந்தொகை- 46.

 

ஆம்பல் பூவின் வாடிய குவிந்த மொக்குகள் போல் இருக்கும் குருவிகள், முற்றத்தில் தானியங்களைக் கொத்தும்போதும், காய்ந்த சாணத்தைக் கொத்தித் துளையிட்டு துகள்களோடு விளையாடிவிட்டு தன் கூட்டை அடைந்து குஞ்சுகளோடு இருக்கும் பறவைகளை மாலையில் பார்க்க நேரும் தலைவனுக்கு உடனே தலைவியின் நினைப்பும் பிரிவுத்துயரும் வாட்டும், வந்துவிடுவான் என தலைவி தன் தோழியிடம் நம்பிக்கையாகச் சொல்லும் பாடல்.

இப்பாடலில் பயன்படுத்தப்பட்ட அந்த குருவி குறித்த காட்சி ‘இறைச்சி’ எனப்படும். மேலே நிகழ்ந்த நிகழ்வில் ரம்யா சொன்ன அத்தனைப் பொருட்களும், காட்சிகளும்  ‘இறைச்சி’  என்றாகலாம்.

 

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 16: தெறூஉம் தெய்வம் - நர்சிம்
 2. மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 15: அளியள் - நர்சிம்
 3. மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 14 : முலையிடைப் பள்ளம் பெருங்குளம் ஆனதே - நர்சிம்
 4. மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 13 : உன் சும்மா அழகையே கண்ணால் தாண்டுதல் அரிய காரியம். - நர்சிம்
 5. மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 12. பையுள் மாலையில் எமியமும் தமியரும். – நர்சிம்
 6. மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 11. “நெசமாவா சொல்ற?” - நர்சிம்
 7. மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 10: அறத்தொடு நிற்றல் - நர்சிம்
 8. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 9 : செங்காற் பல்லியும் உகிர்நுதி ஓசையும். - நர்சிம்
 9. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 8 : ளாக்கம்மா கையைத் தட்டு - நர்சிம்
 10. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 6 : நீயலேன் – நர்சிம்
 11. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 5 : பூ உதிரும் ஓசை - நர்சிம்
 12. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 4 : பூவிடைப்படினும் யாண்டு கழிந்தன்ன – நர்சிம்
 13. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 2 : உயிரை வாங்கும் Possessiveness - நர்சிம்
 14. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 1 : வில்லோன் காலன கழலே - நர்சிம்