இனி நிகழவேப்போவதில்லை என்பது மூளைக்குத் தெரிந்தாலும் இந்த மனதிடம் எப்படி எடுத்துச் சொல்லி புரியவைப்பது என்று தெரியவில்லை

என்று ஒரு வரி ஏதோ ஒரு சிறுகதையில் முன்பு எழுதி இருப்பேன். சிலவற்றை அறிவுப்பூர்வமாக அணுக எவ்வளவு முயற்சி செய்தாலும் மனம் ஏற்பதில்லை. அப்படி எல்லாம் இல்லை என்பதற்கு எத்தனைக் காரணங்களை அடுக்க முடியுமோ அத்தனை சாதகங்களையும் நிகழ்தகவாக்கிக் கொண்டு, அதை நோக்கியே நம்மைக் கொண்டு செலுத்தும் வல்லமை மனதிற்கு உண்டு.

The Difference Between Legal Separation and Divorce | Florida Law Blogசிலவற்றை’ என்று எழுதி இருக்கிறேன் அல்லவா? அது ஒரு வாக்கிய அமைப்பிற்காகத்தான். பெரும்பாலும் இவை காதல் அல்லது நட்புகளுடனான உறவுமுறை சார்ந்த குழப்பங்களில் தான் நிகழும். இனி பேசவேப் போவதில்லை என்று முறித்துக் கொண்டு போய்விட்டவர்களோடு மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தால் அப்போது என்னவெல்லாம் பேசவேண்டும் என்ற ஒத்திகையை பெரும்பாலும் எல்லோருமே நடத்தி இருப்போம்.

பதின்பருவங்களில் நடந்த நிகழ்வு ஒன்று நினைவிற்கு வருகிறது. பேனாவில் மைய்யை நிரப்பி சல்ல் சல்லென சட்டையில் இழுத்து அடிப்பது.  உருளைக்கிழங்கை பாதியாக வெட்டி அதில் AF என்ற அச்சை செதுக்கி அதில் வண்டி மைய்யைத் தடவி நண்பர்களின் சட்டையில் அச்சு வைப்பது, நடந்து போகும்பொழுது பாம்பு பாம்பு என அலறி நண்பர்களை அச்சுறித்தி சிரிப்பது என அந்த ஏப்ரல் முதல் தேதியை முட்டாள்கள் தினமாகக் கொண்டாடிய பருவம் அது.

அப்போதெல்லாம் கோடை விடுமுறை எனில் தெருவில் சிலர் வீடுகளிலாவது ஊரில் இருந்து சொந்தக்காரர்கள் வருவார்கள். சர்வ நிச்சயமாக ஒரு பெண்., அவளைக் கவரும் பொருட்டு தலைகீழ் குரங்குச்சேட்டைகள் செய்யும் தெருவின் திடீர்க்கதாநாயகர்கள் என வெய்யில் வெட்டியாகப் போய்விடாமல் கடக்கும் மாதங்கள். அப்படி மூர்த்தியண்ணன் வீட்டிற்கு வந்திருந்த சொந்தங்களில் இரண்டு பெண்கள், ஒரு சிறுவன். அந்த சிறுவனுக்கு தெருவில் ஏககிராக்கி ஆனது தனிக்கதை.

Premium Photo | Group of kids playing with puzzleஅந்த வீட்டின் திண்ணையில் கேரம்போர்டு மற்றும் ட்ரேட் எனும் சமாச்சாரம் ஒன்று ஓடும். கையில் பலவித  வண்ண டோக்கன்கள், ஒவ்வொன்றிற்கும் ஒரு மதிப்பு, வங்கி என புரியாத விளையாட்டு. பெண்கள் கொஞ்சம் நன்றாகப் படிக்கும் மாணவிகள் எனில் முடிந்தது கதை. Scrabble எனும் ஆங்கிலச் சொற்களை அடுக்கும் விளையாட்டு என்றதும் மெதுவாக அங்கிருந்து நழுவும் படலம் ஆரம்பமாகும்.

அந்த வருட ஏப்ரல் ஒன்றாம் தேதி, மிக நெருங்கிய நண்பன், அங்கு அமர்ந்து எல்லோரையும் பயமுறுத்தி, மை அடித்து விளையாட, ஒருவன்மீது மட்டும் ஏன் அடிக்கவில்லை அவன் நண்பனா அல்லது அவனிடம் உனக்கு பயமா என அப்பெண்கள் அவனிடம் கேட்க, உடனே வெகுண்டெழுந்து நாயகனாக மாறி, என்னைத் தேடிவந்து சட்டையை நாறடித்துவிட்டு எதிர்வீட்டில் அமர்ந்திருந்த அவர்களை நோக்கித் தன் வெற்றியை அறிவித்தான். அப்பெண்களும் சிரித்தார்கள்.

அவனிடம் பேசுவதை அன்றோடு நிறுத்தி ஆண்டுகள் ஐந்தாறு ஆகிவிட்ட பிறகும், ஒவ்வொரு முறை அவன் பேசவரும்போதும் நான் அவனுக்குச் சொன்னது, மை அடிக்கமாட்டாய் என்ற நம்பிக்கையில்தானே அருகில் வந்தேன். நம்பிக்கை மீது நீ அடித்ததுதான் காரணம்.

Premium Photo | Rural indian child playing cricketஆனால், எங்கேனும் கிரிக்கெட் ஆட போகவேண்டி வந்தால் ஒரே சைக்கிளில் பயணம் செய்வோம். வழக்கமாக தேநீர் அருந்தும் கடையில் அனிச்சையாக நிறுத்தி அருந்துவோம். எல்லாமே ஒரு சொல் கூட பேசிக்கொள்ளாமல் நிகழும்.

ஏதோ ஒரு நம்பிக்கை. ஏதேனும் ஒரு காரணத்தினால் விலகி விட்டாலும் அடியாழத்தில் இவன் நமக்கு துரோகம் இழைக்கமாட்டான் எனும் நம்பிக்கை. அப்படி அல்ல என மூளை மன்றாடினாலும் மனம் ஏற்பதில்லை. சுதாரித்து செயல்படுவதில்லை. நட்பின் ஆழங்களை மனங்கள்தான் அறியும்.

போலவேதான் பிரிந்துபோய்விட்ட ஓர் உறவின் நினைப்பு. இனி ஒருபோதும் மீண்டும் அப்படியான ஒரு நிலையில் இருக்கப்போவதில்லை, அதே அன்போடு இருப்பதற்கான சாத்தியங்கள் அத்தனையும் அடைபட்டுப் போயிவிட்டதை மூளை மிகத்துல்லியமாக தெரிந்து வைத்திருந்தாலும், மழை பொழியும் இரவில், ஒரு பயணப்பொழுதில், ஒரு குழந்தை சிரித்துக்கொண்டே செல்லும் வாகனத்தின் பின் செல்கையில், கடற்கரையில் நிலா தென்படுகையில், மின்சாரம் துண்டிக்கப்பட்ட இரவில் நீளும் நிழல்மரங்களைப் பார்க்க நேர்கையில், பிடித்த பாடல் ஒன்று காற்றில் அலைந்து பாவும் நொடியில் என ஏதேனும் ஒரு பொழுதில் சட்டென அத்தனை நினைவுகளும் வேகமாக சுழன்று சுழன்று நிற்கையில் வீழ்படிவாக படர்ந்துவிடும், நினைவின் அடர்த்தி, ஞாபகங்களின் வலி.

 

ஆறுகள் நதிகள்

அதன் பாதையில்

எதிர் திரும்பாதென

தெரிந்தும்

பிரிவோர்க்கு 

வழிவிட்டு

நிற்கிறோம்

 

உண்மைதானே. இப்படி மூளைக்குத் தெரிந்து, மனம் நம்ப மறுக்கும் பிரிவுகள் காலங்காலமாக நடந்தேறிகொண்டேதான் இருக்கின்றன.

இந்தப் பாடல் அப்படியான ஓர் அற்புதச் சொல்லாடகள் கொண்ட பாடல்.

பொருள் ஈட்டும் பொருட்டு பிரிந்து போன தலைவன் திரும்பி வருவது குறித்து ஐய்யமே என நினைக்கும் அல்லது வரமாட்டான் என்று சொல்லும் தோழியிடம் அதெல்லாம் இல்லை, நிச்சயமாக வருவான் தன் தலைவன் என தலைவி உறுதியாகக் கூறுவதாக அமைந்த பாடல். ஆனால், பாடலில் இருக்கும் உள்ளுறை உவமத்தைப் பாருங்கள், சங்க இலக்கியத்தின் மேன்மைகளில் ஒன்று அது. மேற்சொன்ன நதி எப்படி திரும்பாது என்று தெரிந்தே.. போல அந்த யானை மீது படரும் கொடி.

அதாவது, நல்ல பெரிய கருங்கல் என நினைத்து, உறங்கிக்கொண்டிருக்கும் யானையின் மீது கொடிகள் படர்ந்து இருக்கும் வளமான நாட்டின் சொந்தக்காரன், என் தலைவன், என் தோளை அணைத்துக் கூடும் பொழுது, (நற்றோள் மணத்தல், எவ்வளவு அற்புதமான வரி) “என் நெஞ்சத்தில் இருப்பாய் எப்போதும். நீயன்றி நான் ஏது” எனச் சொல்லி, வந்துவிடுகிறேன் என சூளுரைத்துச் சென்றிருக்கிறான். வந்துவிடுவான் தோழி  என்கிறாள்.

கண்களை மூடி ஒரு நிமிடம் இந்தக் காட்சியைக் கற்பனை செய்துபாருங்கள்.

தூங்கிக்கொண்டிருக்கும் அந்த யானை எழுந்து நிற்கிறது. அது கருங்கல் என நினைத்து அதன்மீது படர்ந்த கொடி, பட் பட்டென அறுந்து தெறிக்கிறது..

இதை உள்ளுறை உவமம் என்பார்கள். நம்பிக்கை தவறானது என்றாலும் நம்பி நிற்கிறாள்.

இந்தப்பாடலின் சொல்லாட்சிகள் ஓர் அற்புதம்.

நீயலென்’  எனும் சொல் சுழன்று கொண்டே இருக்கிறது காலையில் இருந்து. நீங்க மாட்டேன் எனும் பொருள் இந்த நீயலன் எனும் சொல்லிற்கு. போலவே துஞ்சு களிறு எனும் சொல்லாடல். தூங்கும் ஆண் யானை.

பாடல்.

 

To Those Who Are Waiting For Love | Thought Catalogதுறுக லயலது மாணை மாக்கொடி

துஞ்சுகளி றிவருங் குன்ற நாடன்

நெஞ்சுகள னாக நீயலென் யானென

நற்றோள் மணந்த ஞான்றை மற்றவன்

தாவா வஞ்சின முரைத்தது

நோயோ தோழி நின்வயி னானே.

 

பரணர்

குறுந்தொகை 36

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 7 : நனைந்த யானையின் வசீகரம் - நர்சிம்
  2. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 5 : பூ உதிரும் ஓசை - நர்சிம்
  3. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 4 : பூவிடைப்படினும் யாண்டு கழிந்தன்ன – நர்சிம்
  4. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 3 : ரோஜா மொக்கும் குருவித்தலையும். - நர்சிம்
  5. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 2 : உயிரை வாங்கும் Possessiveness - நர்சிம்
  6. மூவாத உயர்தமிழ்ச் சங்கத்தில் 1 : வில்லோன் காலன கழலே - நர்சிம்