அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மக்கள் நீதி மய்யம் புகார் மனு அளித்துள்ளது.

அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் அக்கட்சியின் தலைவர் கமல். அப்போது, “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே.” இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு நாடு முழுவதும் இருந்து கமலுக்கு கண்டனங்கள் குவிந்தன. அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமல் இப்படி பேசியதற்கு அவரது நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அமைச்சரின் இந்த பேச்சும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பொது அமைதிக்குப் பாதகம் ஏற்படுத்தும் வகையில் பிரசாரக் கூட்டங்களில் பேசி வருவதாகவும், இதனால் அவர் பிரசாரத்தில் ஈடுபடத் தடை விதிக்கவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இதை அவசர மனுவாக விசாரிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் நிஷாபானு, தண்டபாணி ஆகியோர் இதுதொடர்பான வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, தேர்தல் ஆணையத்தை அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளதை சுட்டிக்காட்டினர். தேர்தல் பிரச்சாரத்திற்குத் தடை விதிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து தேர்தல் ஆணையமே முடிவு எடுக்கவேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக, புதுக்கோட்டை கறம்பக்குடி காவல் நிலையத்தில் இந்து முன்னணி நகரத் தலைவர் கருப்பையா கமல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளார். கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என்று வன்முறையை தூண்டும் வகையில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.