உள்ளாட்சி தேர்தலுக்காகத் தமிழகம் முழுவதும் 92 ஆயிரத்து 771 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருக்கிறது. இதன்காரணமாக உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்தக்கோரி திமுக சார்பிலும், மேலும் சிலரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்த வரும் அக்டோபர் 31ஆம் தேதிவரை அவகாசம் கோரியிருந்தது தமிழக மாநில தேர்தல் ஆணையம்.

இதற்கிடையில், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான மாநில மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பணிகள் நிறைவடைந்ததும் அக்டோபர் மாதத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனத் தகவல்கள் வெளியானது.

இதற்காக வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் தற்போது இறுதி வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்டுள்ளன. அதன்படி, தமிழகம் முழுவதும் மொத்தமாக 92 ஆயிரத்து 771 வாக்குச்சாவடிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

இதில், சென்னை உள்ளிட்ட 15 மாநகராட்சிகளில் 12 ஆயிரத்து 679 வாக்குச்சாவடிகளும் 121 நகராட்சிகளில் 7 ஆயிரத்து 386 வாக்குச்சாவடிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. 528 பேரூராட்சிகளில் 9 ஆயிரத்து 288 வாக்குச்சாவடிகளும், 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளில் 63 ஆயிரத்து 418 வாக்குச்சாவடிகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன.