உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கான வழிமுறைகளை அரசிதழில் வெளியிட்டது தமிழக தேர்தல் ஆணையம்.

தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிக்காலம் 2016 அக்டோபர் 24ஆம் தேதியுடன் பதவிக்காலம் முடிவடைந்தது. இதைதொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், பழங்குடியின மக்களுக்கு உரிய ஒதுக்கீடு வழங்கவில்லை என திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிப்பு விதிகளுக்கு உட்பட்டு பிறப்பிக்கப்படவில்லை எனக் கூறி தேர்தலை ரத்து செய்தனர். அத்துடன் 2016 டிசம்பருக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்துமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதைதொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மனுக்கள், மேல் முறையீடு, தேர்தல் ஆணையம் விளக்கம் என கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவி இடங்கள் காலியாக இருக்கின்றன. மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகள் காலியாக இருப்பதால், கடந்த மூன்று ஆண்டுகளாக தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகள் இயங்கி வருகின்றன.

சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கில் பதிலளித்த மாநிலத் தேர்தல் ஆணையம், உள்ளாட்சித் தேர்தலை நடத்த வாக்களார் பட்டியல் சரிசெய்யும் பணி நடப்பதாகக் கூறி மூன்று மாத அவகாசம் தருமாறு தமிழக அரசு கோரியுள்ளது எனத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கான வழிமுறைகளை அரசிதழில் வெளியிட்டது தேர்தல் ஆணையம். மாவட்ட தேர்தல் அதிகாரியை நியமித்தல், வாக்குச்சாவடிகள் அமைத்தல், வாக்காளர் பட்டியல் இறுதி செய்தல் உள்ளிட்ட பணிகள் குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாவட்டம், ஊராட்சி, ஒன்றியம் வாரியாக வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான அனைத்து தயார் நிலைகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.