கர்நாடக மாநில சட்டமன்றம் இருநாட்கள் விடுமுறைக்கு இன்று மீண்டும் கூடுகிறது. ஆளும் மஜத – காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை குறைந்த நிலையில், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

ஆனால் உடனடியாக வாக்கெடுப்பு நடத்தாமல், ஆளும் தரப்பினர் இரு நாட்களாக காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் இன்று கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் இன்று மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த குமாரசாமி அரசுக்கு உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் நாகேஷ், சங்கர் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்துவிட்டனர். மேலும் நாளை பார்க்கலாம் என்றும் பதில் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்ப்பதற்காக, குமாரசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என சமூகவலைத்தளங்களில் புரளிகள் கிளம்பியது.

இதைத் தொடர்ந்து கர்நாடக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், குமாரசாமி உடல்நலமில்லாமல் இருப்பதாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வெளியான தகவல் புரளி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசைக் கவிழ்க்க முயற்சிப்பவர்களே இத்தகைய புரளியை பரப்பிவிடுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.